Friday, May 28, 2021

கச்சநத்தம் மூவர் படுகொலை: நினைவஞ்சலி..

28.05.2018 அன்று சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவரை அகமுடையோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.

கச்சநத்தத்தில் உள்ள கறுப்பசாமி கோயில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினருடையது. 25.05.2018 அன்று நடந்த இக்கோயில் திருவிழா ஒட்டி ‘காலாஞ்சி’ அளிப்பது குறித்து அகமுடையோர், தேவேந்திரகுல வேளாளர் சமூகங்களுகிடையே முன்பகை இருந்து வந்துள்ளது. அதாவது கச்சநத்தம் ஊரைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவருக்குக் கோயிலில் இருந்து பூ, தேங்காய், பழம் கொண்டு சென்று அவரது வீட்டிற்கே அளிக்கும் முதல் மரியாதை செய்யவில்லை என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த முதல் மரியாதையைத்தான் ‘காலாஞ்சி’ என்று அழைக்கின்றனர். ‘காலாஞ்சி’ பற்றி திருமூலநாயினார் இயற்றிய “பத்தாம்திருமுறையென்னும் திருமந்திரம் மூவாயிரம்” நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்பகையால், 26.05.2018 அன்று மேற்சொன்ன சந்திரகுமார் அவரது மகன் சுமன் ஆகியோர் தங்களுக்கு முதல் மரியாதை அளிக்காதது குறித்து தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அருவாளை எடுத்துவந்து வெட்ட முயன்றுள்ளனர். அப்போது ஊர்காரர்கள் தடுத்ததால் பிரச்சனை அத்தோடு முடிந்தது.

இதுகுறித்து தேவேந்திரகுல வேளாளர் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அன்று இரவு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சண்முகநாதன், தேவேந்திரன் ஆகியோரிடம் மேற்சொன்ன சந்திரகுமார் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ‘எங்களுக்கு மரியாதை செய்யாமல் கறி விருந்து சாப்பிடுகிறீர்களா’ எனச் சாதியைக் குறிப்பிட்டுத் திட்டியுள்ளார். அப்போது அவ்வழியே வந்த திருப்பாச்சேத்தி போலீசார் சந்திரகுமாரை காவல்நிலையம் அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்துள்ளனர்.

மறுநாள் 27.05.2018 அன்று, கோயிலில் உச்சகால பூசை முடிந்தவுடன் தேவேந்திரகுல வேளாளர்கள் கூட்டம் போட்டு, சந்திரகுமாரை போலீசார் பிடித்துச் சென்றதால் பெரிய பிரச்சனை வரும் என்று கருதி பழையனூர் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். போலீசாரும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

மறுநாள் 28.05.2018 அன்று இரவு சுமார் 9 மணியளவில், ஏற்கனவே முதல் மரியாதை தரவில்லை என்ற முன்பகையோடு இருந்தவர்கள் கத்தி, அருவாள் போன்ற ஆயுதங்களோடு கச்சநத்தம் தேவேந்திரகுல வேளாளர் பகுதிக்குள் நுழைந்து மேற்சொன்ன சண்முகநாதன் உள்ளிட்டவர்களை வெட்டிச் சாய்த்தனர். இதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகரன் ஆகியோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். போலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படுகொலை சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.

இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த பழையனூர் காவல்நிலையப் போலீசார் 3 பெண்கள் உட்பட 33 பேர் மற்றும் 4 சிறார்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கச்சநத்தம் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் செல்வாக்கு இருந்ததால், பாதிக்கப்பட்ட மக்களை மூத்த தோழர் இரா.நல்லக்கண்ணு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். முற்போக்குச் சிந்தனையுடைய இயக்கங்களைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இவ்வழக்கில் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி பாதிக்கப்பட்டோர் தேர்வின்படி மூத்த வழக்கறிஞர் சின்னராசு அரசு சிறப்பு வழக்கறிஞராக (Special Public Prosecutor) நியமிக்கப்பட்டார். அவருக்குத் துணையாக மனித உரிமை ஆர்வலரும், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அயராது போராடி வருபவருமான தோழர் வழக்கறிஞர் பகத்சிங் உடன் இருந்து பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கப் பாடுபட்டு வருகிறார்.

2019 நவம்பர் மாதம் தொடக்கத்தில் மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வருவது குறித்து கூறினார். விசாரணையின் முதல் நாள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும், நீங்களும் வாருங்கள் என்று கூறினார். நானும் சரியென்று கூறினேன். வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற இருந்தது.

சென்ற 06.11.2019 அன்று வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், சோகோ பாட்சா, அழகுமணி ஆகியோர் மதுரையில் இருந்து வந்தனர். நானும் சிவகங்கை சென்றேன். சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த உடனேயே ஒரு மூத்த வழக்கறிஞர் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்குக் கைக் கொடுத்து “You are a legend sir” என்று கூறிச் சென்றார். அவர் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகும் மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.

வழக்கு விசாரணை நடைபெற இருந்த நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சின்னராசு, வழக்கறிஞர் பகத்சிங்குடன் வந்தார். 24 ஆண்டுகள் கழித்து அந்த மீசையின் கம்பீரம் குறையாத வழக்கறிஞர் சின்னராசு அவர்களைக் கண்டேன். கொடைக்கானல் தொலைக்காட்சி வெடிகுண்டு வழக்கில் தோழர் பொழிலன் உள்ளிட்ட சிலருக்கு வழக்கறிஞர் அவர். 1997-இல் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பு நாளன்று அவரைப் பார்த்த பின்னர், அப்போதுதான் பார்த்தேன்.

வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தோம். சாட்சிகள் நடந்த கொடூரமான மூன்று படுகொலைச் சம்பவங்களை வாக்குமூலமாக அளித்தனர். மதுரையின் அனைத்து மூத்த வழக்கறிஞர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராயினர். நாங்கள் நீதிமன்றத்தில் இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பின்னர், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றப் பொறுப்பு அப்போது மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி ப.உ.செம்மல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இவ்வழக்கின் விசாரணையை நாள்தோறும் நடத்தினார். வழக்கு இறுதிக் கட்ட விசாரணை நிலைக்கு எட்டிய நிலையில் நீதிபதி ப.உ.செம்மல் கடலூர் மாவட்ட நிரந்திர மக்கள் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். வழக்கு விசாரணை அவர் விட்டுச் சென்ற நிலையிலேயே இன்றும் உள்ளது.

உடற்கூறாய்வு அறிக்கையின்படி இறந்துப் போன ஒவ்வொருவர் உடலிலும் 50க்கும் மேற்பட்ட ஆழமான காயங்கள். அவ்வளவுக் கொடூரமான படுகொலைகள்.

இன்று கச்சநத்தம் சாதிய படுகொலையில் உயிரிழந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோரின் நினைவு நாள். இப்பதிவை எழுதும் இந்நேரத்தில்தான் அந்த மூவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

என் நெஞ்சார்ந்த நினைவஞ்சலி..

Thursday, May 27, 2021

மூத்த ஓவியர் தேசிய விருதாளர் பெ.மாணிக்கம் காலமானார்!

புதுச்சேரியின் மூத்த ஓவியரும், தேசிய விருது பெற்றவருமான ஓவியர் பெ.மாணிக்கம் இன்று காலமானார்.

புதுச்சேரி பால்பவனில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஓவியக் கலையைப் பயிற்றுவித்தார்.

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் சில ஆண்டுகள் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி தற்கால ஓவியக் கலைத்தளத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1942-இல் பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் பிறந்தார். 1960களில் சென்னை ஓவியக் கல்லூரியில், புகழ்பெற்ற கே.சி.எஸ்.பணிக்கரின் கீழ் மாணவராகப் பயிற்சிப் பெற்றார்.

ஓவியரும் நடிகருமான சிவக்குமார், ஓவியர் ஆதிமூலம், சிற்பி தட்சிணாமூர்த்தி ஆகியோருடன் இணைந்து ஓவியக் கலையின் பல்வேறு பரிணாமங்களைப் பயிற்சியாக பெற்றறிந்தார். ஆறு ஆண்டுகள் சென்னையில் ஓவியப் பட்டயம் பெற்றபின், புதுச்சேரி அரசின் பால்பவனில் ஓவிய ஆசிரியராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

இந்திய அளவில் பல்வேறு ஓவியக் கண்காட்சிகள், கலை முகாம்களில் பங்கேற்று தனது ஓவியத்திறனைக் கூர்மைப்படுத்திக்கொண்டார். பாரம்பரியக் கலைகளான தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை, ஆடல் கலைகள் உள்ளிட்ட தொண்மைக் கலைகளை நவீன ஓவியங்களாக்கி தனித்தன்மையோடு விளங்கினார்.

டெல்லி லலித்கலா அகாடமியின் புதுச்சேரி பிரதிநிதியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியபோது, புதுச்சேரியைச் சேர்ந்த பல ஆசிரியர்கள், இளம் கலைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு ஓவிய முகாம்களிலும், கலைக் கண்காட்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார்.

ஓவியம் தவிர இலக்கியம், இசை, நாடகம் போன்ற துறைகளிலும் அதீத ஈடுபாடு கொண்டவர். பல ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் உள்ளிட்ட பலரோடு தொடர்பிலும், புதுச்சேரி கலைத்தளத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றினார். இவரது கலைத்திறனைப் பாராட்டி புதுச்சேரி அரசு கலைமாமணி விருதும், டெல்லி லலித்கலா அகாடமியின் தேசிய விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

‘ஓவியக்கலை நுட்பங்கள்’ எனும் நூலும், எண்ணற்ற கட்டுரைகளும், பாரதியார் பல்கலைக்கூடத்தில் 2002ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஓவியப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை சிறு நூலாகவும் எழுதியுள்ளார்.

அவருடைய துணைவியாரின் இறப்புக்குப் பிறகு தூத்துக்குடியில் மகள் வீட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வந்தார். இந்நிலையில், இன்று 26.05.2021 காலை காலமானார்.

ஓவியர் பெ.மாணிக்கம் அவர்களின் இழப்பு புதுச்சேரிக்குப் பேரிழப்பு என்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஓவியர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, May 10, 2021

நீதிநாயகம் டி.கே.பாசு காலமானார்: ஆழ்ந்த அஞ்சலியும் இரங்கலும்..

சென்ற 08.05.2021 அன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டி.கே.பாசு காலமானார். மனித உரிமையில் ஆர்வமுள்ளவர்கள் இவரது பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது.

காவல் மரணங்களைத் தடுக்க உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின் மனுதாரர் இவர். D.K.Basu Vs State of West Bengal (AIR 1997 SC 610). புகழ்ப் பெற்ற இவ்வழக்கு “டி.கே.பாசு வழக்கு” என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

கடந்த 26.08.1986 அன்று, மேற்குவங்க சட்ட உதவிகள் அரசு சாரா அமைப்பின் செயல் தலைவர் என்ற முறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை டி.கே.பாசு எழுதுகிறார். அதில் கொல்கத்தாவில் அதிக அளவில் காவல் மரணங்கள் நிகழ்வது குறித்து ‘தி டெலிகிராப்’ இதழ் வெளியிட்ட செய்திகளைக் குறிப்பிட்டு, இக்கடிதத்தையே ரிட் மனுவாக (பொதுநல வழக்கு) ஏற்று விசாரிக்க வேண்டுமெனக் கோருகிறார்.

மேலும், காவல் மரண வழக்குகள் முறையாக நடத்தப்படுவதில்லை, இவ்வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், இக்குற்றங்கள் “செழிக்கின்றன” எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதோடு காவல் மரணங்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து “custodial jurisprudence” உருவாக்கவும் கோரியிருந்தார்.

கடந்த 09.02.1987 அன்று இக்கடிதத்தை ரிட் மனுவாக ஏற்று உச்சநீதிமன்ற அபோதைய தலைமை நீதிபதி பி.என்.பகவதி அவர்கள் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதேபோல், கடந்த 29.07.1987 அன்று அலிகார் வழக்கறிஞர் அசோக்குமார் ஜொகிரி பில்கானா என்ற ஊரில் காவல் நிலையத்தில் மரணமடைந்த மகேஷ் பிகாரி என்பவர் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதனையும் மேற்சொன்ன டி.கே.பாசு வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் கடந்த 14.08.1987 அன்று கீழ்க்காணும் உத்தரவைப் பிறப்பிக்கிறது:

“ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. தற்போது இக்குற்றச்சாட்டுகளான காவல் மரணங்கள், அதாவது செய்தித்தாள்கள் குறிப்பிடுவது போல லாக்-அப் மரணங்களின் அலைவரிசையும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அணுகுவதற்கு தற்போது போதிய கட்டுமானங்கள் (machinery) இல்லை. இக்கேள்வி பல்வேறு மாநிலங்கள் உள்ளடக்கிய அகில இந்திய அளவிலானது என்பதால், இதில் பல்வேறு மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் என்ன சொல்ல விரும்புகின்றனர் என்பதையும் பார்ப்போம். அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும், அதேபோல், இந்திய சட்ட ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி, இதுகுறித்து உரிய ஆலோசனைகளை இன்றைய நாளில் இருந்து இரண்டு மாதத்திற்குள் அளிக்க வேண்டுவோம்.”

இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கம், ஒரிசா, அசாம், இமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, தமிழ்நாடு, மேகாலயா, மகாராஷ்ட்ரா, மணிப்பூர், யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகியவைத் தங்களது கருத்துக்களை உறுதிமொழிப் பத்திரமாக தாக்கல் செய்தன. இந்திய சட்ட ஆணையமும் தனது ஆலோசனைகளைத் தாக்கல் செய்தன. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.எம்.சிங்கி நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக (Amicus Curiae) நியமிக்கப்பட்டார்.

இவ்வழக்கில், கடந்த 18.12.1997 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங், ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இருநீதிபதிகள் அமர்வு வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நீதிநாயகம் ஏ.எஸ்.ஆனந்த் எழுதினார். அத்தீர்ப்பில், ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய 10 கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைகளைக் காவல்நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், இக்கட்டளைகளைப் பின்பற்றாத காவல் அதிகாரிகள் மீது அந்தந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து தண்டனைப் பெற்றுத் தரவும் உத்தரவிடப்பட்டது.

உச்சநீதிமன்றக் கட்டளைகளில் முகாமையானவை:

1) கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2) கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

3) கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4) கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5) தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்.

6) கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7) கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைச் செய்ய வேண்டும்.

8) கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

பின்னாளில் இந்தக் கட்டளைகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலேயே சேர்க்கப்பட்டன.

இந்தத் தீர்ப்பினால் காவல் மரணங்கள் முற்றிலும் ஒழியவில்லை என்றாலும், பெருமளவில் குறைந்தன. இதற்கு வித்திட்டவர்தான் “டி.கே.பாசு வழக்குப் புகழ்” நீதிநாயகம் டி.கே.பாசு அவர்கள். நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சிறைவாசியின் கடித்தத்தையே வழக்காக ஏற்று சிறைவாசிகளுக்கு உரிமைகள் வழங்கி தீர்ப்பு வழங்கினார். அதே போல ஒரு நீதிபதியின் கடிதத்தை வழக்காக ஏற்றவர் உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி நீதிநாயகம் பி.என்.பகவதி.

நீதிநாயகம் டி.கே.பாசு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கொல்கத்தா மற்றும் தேசிய சட்ட உதவிகள் அமைப்பின் தலைவராக இருந்தவர். 2006-இல் இலங்கையில் ஆசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நீதிமன்றத்தின் பார்வையாளராக இருந்து செயல்பட்டவர். ‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்’ நிதியுதவியுடன் நடந்த இந்திய அளவிலான கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான பயிற்சித் திட்டத்தின் ஆலோசகராகவும் இருந்தார். ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைப்பின் நிறுவுநர். அனைத்துலக அளவில் பல்வேறு கருத்தரங்களில் கலந்துகொண்டு சட்டத்தின் பல்வேறு அணுகுமுறைகள் குறித்து உரையாற்றிய சட்ட வல்லநர்.

2004-இல் தில்லியில் பொடா சட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கான ‘பொது விசாரணை’ நடைபெற்றது. இதில் நீதிபதியாக (Jury) கலந்துகொள்ள வந்தார் டி.கே.பாசு. அவரை ‘தோழமை’ தேவநேயன், கோ.சுகுமாரன் ஆகிய இருவரும் விமான நிலையத்தில் வரவேற்று தங்குடத்திற்கு அனுப்பி வைத்தோம். அமைதியான குணமுடையவராக இருந்தார்.

ஒரு ஆளுமை நிறைந்த சட்ட வல்லுநரை இழந்துள்ளோம். என் ஆழ்ந்த அஞ்சலியும் இரங்கலும்.. 

Sunday, May 09, 2021

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமனம்: வாழ்த்துகள்!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக (Advocate General) மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

1995-இல் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு எதிராக குற்றப் புகார் ஒன்றைத் தயாரித்தற்காக ரவுடிகளால் தாக்கப்பட்டார்.

2002-இல் திமுகவின் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் தமிழக அரசின் அரசு வழக்கறிஞராக (State Public Prosecutor) பணியாற்றி உள்ளார்.

கற்றுத் தேர்ந்த திறமையான வழக்கறிஞர். மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்களின் ஜீனியர். பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி உள்ளார். நீதித்துறை அகாடமியில் (Judicial Academy) புதுதாக பணியில் சேரும் நீதிபதிகளுக்குச் சட்ட வகுப்புகள் எடுக்கும் நிபுணர்களில் ஒருவர். மேலும், அனைத்துலக அளவிலும் பல்வேறு கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றி உள்ளார்.

2000-இல் இவருடன் நேரடியாக பழக்கம் ஏற்பட்டது. சந்தன வீரப்பன் கன்னட நடிகர் இராஜ்குமாரை கடத்தி வைத்திக் கொண்டு வைத்த கோரிக்கைகள் பல. அதில் மைசூர் நடுவண் சிறையில் ஒன்பதரை ஆண்டுகளுக்கும் மேலாக தடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த 12 பெண்கள் உட்பட 124 தமிழர்களின் விடுதலைக் கோரிக்கை முக்கியமானது. வீரப்பனுக்கு உதவியதாக போடப்பட்ட பொய் வழக்கில் விசாரணை இன்றி சிறையில் வாடினர்.

வீரப்பன் கோரிக்கையை ஏற்று 124 தடா சிறைவாசிகளைப் பிணையில் விடுதலை செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து வீரப்பனால் கொல்லப்பட்ட அதிரடிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தடா சிறைவாசிகள் 124 பேர், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த சிறைவாசிகள் 5 பேர் என யாரையும் விடுதலை செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிக்கலான இச்சூழலில் மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்களிடத்தில் அய்யா பழ.நெடுமாறன் உடன் சென்று விவாதித்தோம். வழக்கு விசாரணையை நடத்தி அனைவரையும் விடுதலை செய்ய யாரும் தடை செய்ய முடியாது எனக் கூறினார். அதோடு, தனி நீதிமன்றம் அமைத்து விரைந்து வழக்கை முடிக்கலாம் (Speedy trial) எனக் கூறி உச்சநீதிமன்றத்தின் 8 தீர்ப்புகளை நகலெடுத்துக் கொடுத்தார்.

இந்த முடிவோடு பழ.நெடுமாறன், கல்யாணி, கோ.சுகுமாரன் ஆகிய நாங்கள் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களைக் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். முன்னதாக எத்தனை மாதத்தில் மைசூர் தடா வழக்கை முடிக்கக் கேட்கலாம் என பழ.நெடுமாறன் அய்யா கேட்ட போது ஒரு மாதத்தில் முடிக்கக் கேட்போம் என்று சொன்னேன். அதேபோல், முதலமைச்சரிடம் கேட்டோம். அவர் சரியென ஒப்புக் கொண்டார். ‘நான் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களிடம் பேசுகிறேன். நீங்களும் அவரிடம் சொல்லுங்கள்’ என்றார். அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக முதலமைச்சர். பின்னர், நான் பெங்களூர் சென்று முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களைச் சந்த்திதேன். அவரும் இம்முடிவுக்கு ஒப்புக் கொண்டார்.

இதுபோன்று வீரப்பன் வைத்த கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வுக் கண்டு, அதை இரு மாநில முதலமைச்சர்களிடம் எடுத்துக் கூறி உறுதிமொழிப் பெற்றோம். வீரப்பனிடம் இத்தீர்வுகளை எடுத்துக்கூறி, அவற்றை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று உறுதியளித்தோம். இதனை ஏற்றுதான் வீரப்பன் கன்னட நடிகர் இராஜ்குமாரை விடுவித்தார்.

ஏற்கனவே தடா வழக்குகளைத் தமிழ்நாடு பழங்குடிகள் மக்கள் சங்கம், மக்கள் கண்காணிப்பகம், சோகோ அறக்கட்டளை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர்கள் நடத்தி வந்தனர். எங்களது கோரிக்கையை ஏற்று கர்நாடக அரசு தடா வழக்கை விரைந்து முடிக்க அமர்வு நீதிபதி கிருஷ்ணப்பா (இவருக்கு Conviction Krishnappa என்ற அடைமொழி உண்டு) தலைமையில் தனி நீதிமன்றம் ஒன்றை (Special Court) மைசூரில் அமைத்தது. அதாவது இவர் தண்டனை அளிக்கும் மனநிலையுள்ள நீதிபதி.

மேற்சொன்ன அமைப்புகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் (ஆந்திரா), வேணுகோபால் (மைசூர்), வின்சென்ட் (மதுரை) உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வழக்கை நடத்தினர். பழ.நெடுமாறன் கூடுதலாக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இவ்வழக்கில் ஆஜராகி நடத்தினால் நல்லது என்று முடிவெடுத்தார். அதன் அடிப்படையில், இவ்வழக்கில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார்.

சென்னையில் இருந்து மைசூருக்கு அழைத்துச் சென்று வரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் சென்னையில் அதிகாலை சதாப்தி அதிவிரைவு தொடர் வண்டியில் புறப்படுவோம். சென்னை – மைசூர் 7 மணிநேரம் பயணம். மூத்த வழக்கறிஞர் என்று பாராமல் அவரிடம் வழக்குக் குறித்து கேள்விகள் கேட்பேன். அவர் நிதானமாக எல்லாவற்றுக்கும் பதில் சொல்வார்.

தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இரண்டே மாதத்தில் வழக்கு முடிந்தது. தடா வழக்கில் இருந்து 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 4 பேருக்கு வாழ்நாள் சிறை. மீதமுள்ளவர்களுக்குக் குறைந்த ஆண்டுகள் தண்டனை. அவர்கள் ஒன்பதரை ஆண்டுகள் சிறையில் கழித்ததால் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் இருந்ததும், தடா சிறைவாசிகள் விடுதலையாகி எங்களுக்கு நன்றி சொன்னதும் மறக்க முடியாத தருணம்.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள் மிகுந்த துயரத்துடன் சிறையில் வாடிய அப்பாவி தமிழர்களின் விடுதலைக்கு வித்திட்டது.

இந்நினைவுகளுடன் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.