Friday, October 29, 2010

ரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ரீட்டா மேரி
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறினார். ஈரோடு பேருந்து நிலையத்தில் அழுது கொண்டு நின்றிருந்த அவரை ஆத்தூரைச் சேர்ந்த விபச்சாரம் நடத்தி வரும் கவிதா, ஆனந்தன் என்பவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பிறகு அவர்கள் ரீட்டா மேரியிடம், உன்னை பாதுகாப்பான மகளிர் விடுதியில் சேர்த்து விடுகிறோம் என்று கூறினார்கள். இதை உண்மை என்று நம்பி அவர்களுடன் ரீட்டா மேரி புறப்பட்டுச் சென்றார். ஈரோட்டில் இருந்து பேருந்தில் ரீட்டா மேரியை அவர்கள் திண்டிவனத்துக்கு கடத்திச் சென்றனர்.

திண்டிவனத்தில் சாந்தி, ஈஸ்வரி என்ற இரண்டு பெண்கள் விபசார விடுதி நடத்தி வந்தனர். அவர்களிடம் ரீட்டா மேரியை 12 ஆயிரம் ரூபாய்க்கு கவிதாவும் ஆனந்தனும் விற்று விட்டனர். சாந்தி, ஈஸ்வரிக்கு துணையாக ஆனந்தராஜ் என்பவர் இருந்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ரீட்டா மேரியை ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள்.

அங்கு ரீட்டா மேரியை சந்தித்த செஞ்சியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களுக்கு அவரது உண்மை நிலை அறிந்து இரக்கம் ஏற்பட்டது. அவர்கள் ரீட்டா மேரியை விபசார கும்பலிடம் இருந்து பிரித்து தப்ப வைத்தனர். இதை அறிந்ததும் அந்த நான்கு இளைஞர்கள் மீது சாந்திக்கும் ஈஸ்வரிக்கும் கடும் கோபம் ஏற்பட்டது. திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அந்த நான்கு இளைஞர்கள் மீது சாந்தி, ஈஸ்வரி இருவரும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்து அவர்கள் மீது சாராயம் காய்ச்சியதாக வழக்குப் பதிவு செய்தனர். அதுபோல ரீட்டா மேரி மீது சட்ட விரோதமாக லாட்ஜில் தங்கி இருந்து விபசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ரீட்டா மேரியை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர். பிறகு செஞ்சியில் உள்ள கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அப்போது அவரை சிறைக் காவலர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பலர் மாறி, மாறி பாலியல் வன்கொடுமை செய்ததால், ரீட்டா மேரியின் மனநலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திண்டிவனம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். அவரது நிலையைக் கண்ட பெண் நீதிபதி சந்தேகப்பட்டு, ரீட்டா மேரிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

மருத்துவ பரிசோதனையில் ரீட்டா மேரி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரீட்டா மேரியை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்கள் மீதும், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.  

இதனைத் தொடர்ந்து செஞ்சி கிளை சிறைக் காவலர்கள் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி, சேகர், முருகேசன் ஆகியோர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரீட்டா மேரியை விபசாரத்தில் தள்ளிய கவிதா, ஈஸ்வரி, சாந்தி, ஆனந்தன், ஆனந்தராஜ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ரீட்டா மேரியின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இச்சம்பவம் பற்றி அப்போது ஐ.ஜி.யாக இருந்த திலகவதி விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய  இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்பேரில் ஐ.ஜி. திலகவதி விசாரணை மேற்கொண்டு, ரீட்டா மேரி மீது பாலியல் கொடுமை நடந்ததை உறுதி செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் பேரில் உயர்நீதிமன்றம் ரீட்டா மேரி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

2006-ம் ஆண்டு ஜூன் மாதம் திண்டிவனம் விரைவு நீதிமன்ற நீதிபதி தயாளன் ரீட்டா மேரி வழக்கில் தீர்ப்பு வழங்கினார். சிறை காவலர்கள் 6 பேரில் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற இரு சிறைக் காவலர்களான சேகர், முருகேசன் விடுவிக்கப்பட்டனர்.

விபச்சார கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரில் சாந்தி, ஈஸ்வரி இருவரும் ரீட்டா மேரியை கடும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளக்கியது உறுதிப் படுத்தப்பட்டது. அவர்கள் இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அவர்களுக்கு துணைப் புரிந்த ஆனந்தராஜ், ஆனந்தன், கவிதா மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட போது அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே சிறையில் 4 ஆண்டுகளை கழித்திருந்தனர். இதனால் அவர்கள் மூவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவில் நாங்கள் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள். எனவே எங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

 அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சரவணன் ‘ரீட்டா மேரியை 4 சிறைக் காவலர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு ரீட்டா மேரி அடைக்கப்பட்டிருந்த பக்கத்து அறை கைதி சாட்சியாக உள்ளார். ரீட்டா மேரியிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் பற்றி அவர் தெளிவாக கூறி உள்ளார். எனவே, நான்கு சிறைக் காவலர்களுக்கும் திண்டிவனம் விரைவு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறை தண்டனை சரியானது தான். அதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கில் நீதிபதி சுதந்திரம் இன்று (29.10.2010) தீர்ப்பளித்தார். அப்போது 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களில் லாசர் மீது மட்டும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரை விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

சிறைக் காவலர்கள் ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய மூவருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு ரீட்டா மேரிக்கு நீதிக் கிடைக்கப் போராடிய அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும்.

Tuesday, October 26, 2010

பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ.சுகுமாரன் அயோத்தி பயணம்!

அ.மார்க்ஸ்
கோ.சுகுமாரன்
அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேராசிரியர் அ. மார்க்ஸ்,மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், ஆகியோர் அயோத்தி பயணம் செல்கின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 60 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் பிரச்சனைக்குரிய இடத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும், பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டிருந்தது.

இத்தீர்ப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. மேலும், கடந்த 16-ம் தேதியன்று லக்னோவில் கூடிய இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அயோத்தி நிலப் பிரச்சனைக் குறித்து நீதிமன்றத்திற்கு செல்லாமல் வெளியே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என இந்து, முஸ்லிம் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து நேரில் சென்று ஆய்வுச் செய்ய மனித உரிமைக்கான மக்கள் கழகத் (Peoples Union for Human Rights - PUHR) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (26.10.2010) அயோத்தி பயணம் செல்கின்றனர். வரும் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் அயோத்தியில் தங்கியிருந்து, இந்து, முஸ்லிம் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், அரசியல் நோக்கர்கள், அறிவுஜீவிகள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துக் கேட்க உள்ளனர். மேலும், பிரச்சனைக்குரிய இடங்களைப் நேரில் பார்வையிடுகின்றனர்.

பின்னர் தமிழகம் திரும்பியவுடன் கண்டறிந்த உண்மைகளை அறிக்கையாக தயாரித்து சென்னையில் பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட உள்ளனர். அயோத்தி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் மனித உரிமை ஆர்வலர்கள் மேற்கொள்ளும் இப்பயணம் முக்கியத்துவம் உடையது.

Sunday, October 24, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. (3)

இந்திய தலைமை நீதிபதியின் ஊழல் பற்றிப் பார்த்தோம். ஊழல் செய்யும் நீதிபதிகளை எதிர்த்துப் போராட முடியாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருந்து வருகிறது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் இயல்பான அச்சம். இரண்டு நீதிபதிகளை விமர்சித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக கருதப்பட்டு, தண்டனைக் கிடைக்கும் என்ற பயம். ஆனால், நீதிபதிகளின் ஊழல்களை ஆதாரத்தோடு விமர்சித்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஊழல் நீதிபதியான பி.டி.தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையில் நடந்த போராட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்னர் அந்த நீதிபதியின் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பற்றி பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிப்படுத்தாத நாளே இல்லை என்று சொல்லலாம். அதேபோல் தலித் மக்களின் உரிமைகளுக்காக அயராது போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் 90-களில் இருந்து ஊழல் மற்றும் சாதியத்தோடு பணியாற்றிய, பணியாற்றும் நீதிபதிகள் குறித்து மிக வெளிப்படையாக துண்டறிக்கைப் போட்டு விநியோகித்தும், சுவரொட்டி அச்சிட்டு ஒட்டியும், கூட்டங்கள் நடத்தியும் செய்த பிரச்சார நடவடிக்கைகள் போதிய பயன் அளித்தன என்றே சொல்ல வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும், ஊழல் செய்யும் கீழ்நீதிமன்ற நீதிபதிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்கறை காட்டுகின்றனர். ஆனால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அது அவ்வளவு எளிதானதல்ல என்பதை கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.

ஊழல் செய்வது என்பது ஊழல் தடுப்புச் சட்டப்படி கைது செய்யப்படக் கூடிய (Cognizable Offence) குற்றமாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி (Criminal Procedure Code) கைது செய்யப்படக் கூடிய குற்றம் அனைத்திற்கும் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவுச் செய்யப்பட வேண்டும். ஆனால், நீதிபதிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.வீராசாமி 1974-ல் லஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ. போலீசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். அவர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், குற்றவியல் சட்டத்திற்குப் புறம்பாக 1991-ல் உச்சநீதிமன்றம் ‘எந்த நீதிபதி மீதும் இந்திய தலைமை நீதிபதியின் அனுமதியின்றி முதல் தகவல் அறிக்கை பதியக் கூடாது’ என்று தீர்ப்பு வழங்கி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. இந்த தீர்ப்புக்குப் பின்னர் இதுநாள்வரையில் எந்தவொரு நீதிபதி மீதும் வழக்குப் பதிய எந்த தலைமை நீதிபதியும் அனுமதி அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடியவில்லை.

1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொண்டார். அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் 1993-ல் ஒரு வழக்கில் 34 லட்ச ரூபாய் பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டும் அவரை மேற்குவங்க ‘லாபி’ காப்பாற்றி வருவதாக செய்திகள் வருகின்றன. அவரை பணியிலிருந்து ராஜினாமா செய்யவும் அல்லது விருப்ப ஓய்வில் செல்லவும் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியும் அவர் அதனை மதிக்கக்கூட தயாராக இல்லை. அவர் மீது பாராளுமன்றத்தில் 58 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நிலுவையில் உள்ளது. பாராளுமன்றத்தில் நடவடிக்கையை எதிர்கொள்ளும் இரண்டாவது நீதிபதி சவுமித்ரா சென்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி பி.டி.தினகரன் 540 ஏக்கர் அளவுள்ள புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் அபகரித்த குற்றச்சாட்டு குறித்தும், அனுமதியின்றி அடுக்குமாடி வணிக வளாகம் கட்டியது உள்ளிட்ட ஏராளமான சட்டவிரோத நடவடிகைகள் பற்றியும் 75 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த 12 குற்றச்சாட்டுகள் பற்றி பாராளுமன்ற குழு விசாரித்து வருகிறது. அவர் மீது ஆதாரங்கள் பல இருந்தும் அவரை பணிநீக்கம் செய்ய முடியவில்லை. அவருக்கு நீதித்துறை வழங்கியிருக்கும் மிகப் பெரிய தண்டனை, அவரை சிக்கிம் மாநிலத்திற்கு மாற்றல் செய்துள்ளதுதான். இன்றைக்கு தலித் நீதிபதி என்று கூறி பி.டி.தினகரன் செய்த ஊழல்களையும், நில அபகரிப்புகளையும் நியாயப்படுத்தி வரும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

இந்திய அரசியல் சட்ட மறுஆய்வுக் குழு, 2003 மார்ச் 31-ல் அரசுக்கு அளித்த அறிகையில் நீதிபதிகள் பணிநீக்கம் செய்வது பற்றிய 7-வது அத்தியாயத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. மேலும், நீதிபதிகள் தவறு செய்வதைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. அதாவது இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டு அதன் அறிகையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அந்த அறிகையின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைக்காக எழு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மீது உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஊழல் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது. மேலும், ஊழல் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் அவர்களை வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்வதை கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

இந்திய அரசியல் சட்ட அவையில் ஊழல் நீதிபதிகள் மீதான நடவடிக்கை குறித்து அதிகம் விவாதம் நடந்ததாக தெரியவில்லை. ஏன்னென்றால் நீதிபதிகள் இந்தளவு ஊழல் செய்வார்கள் என்று அரசியல் சட்ட அவை உறுப்பினர்கள் கருதவில்லை போலும். அதனால்தான் பாராளுமன்ற குற்றச்சாட்டு மூலம் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் போன்ற சிக்கலான, சாத்தியமற்ற நடைமுறையை கொண்டு வந்தனர் அரசியல் சட்ட அவையினர்.

நீதிபதிகள் மீது பாராளுமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும் முறையில் பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து. பாராளுமன்றத்தில் 100 உறுப்பினர்கள் கையெழுத்திட்டால்தான் ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்படுகிறது. மேலும், ஒரு சில ஊழல் நீதிபதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காக பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் முறையை எளிதாக்கினால், அது நீதித்துறை மீது அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்தும் நிலையை ஏற்படுத்திவிடும் என சில நேர்மையான நீதிபதிகள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நீண்ட போராட்டத்திற்குப் பின் ‘நீதிபதிகள் தரம் மற்றும் பொறுப்பாதல் மோசோதா’ பரிசீலிக்கப்பட்டு சென்ற அக்டோபர் 5-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட மசோதாவில் ஒரு சில அம்சங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதிலுள்ள பெரும்பாலான பிரிவுகள் நீதிபதிகளின் ஊழல்களைத் தடுக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கவில்லை என சட்டவல்லுநர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனைப் பிறகுப் பார்ப்போம்.

அடுத்த இதழில் முடியும்...


நன்றி: மக்கள் உரிமை.

Friday, October 22, 2010

கல்வி உதவித் தொகை கேட்டுப் போராடிய பாராமெடிக்கல் மாணவர்கள் 415 பேர் கைது!

போராட்டத்தில் பாராமெடிக்கல் மாணவர்கள்..
புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற பாராமெடிக்கல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் 415 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராமெடிக்கல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து, கடந்த 18.10.2010 அன்று காலை 11 மணியளவில், மாணவர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அப்போது பெரியக்கடை போலீசார் முற்றுகையிட முயன்ற 115 மாணவிகள் உள்பட 415 மாணவர்களை கைது செய்தனர்.

முன்னதாக காமராஜர் சிலை அருகில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஜென்மராக்கினி மாதா ஆலயம் அருகில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சாமிநாதன் தலைமைத் தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் முன்னிலை வகித்தார். விடுதலை வேங்கைகள் அமைப்பின் பொருளாளர் மோகன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் அஷ்ரப், மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் வை.பாலா,பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத் தலைவர் நாராயணசாமி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கத்தின் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thursday, October 21, 2010

ஊழல் அதிகாரி அரிகரன் பணி நீக்கம் : புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு!

ஊழல் அரிகரன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்  21.10.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பாரதியார் பல்கலைக்கூடத்தின் முன்னாள் முதல்வரும், லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியுமான அரிகரனை பணிநீக்கம் செய்துள்ள புதுச்சேரி அரசின் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1996 முதல் 1999 வரை அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வராக இருந்த போது பல்வேறு ஊழல், முறைகேடுகள், கையாடல், நிர்வாக குளறுபடிகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென பல்வேறு கட்சி மற்றும் ஆதரவோடு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால், அப்போதைய அரசு அவரை பாரதியார் பல்கலைக்கூடத்தில் இருந்து லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியாக நியமித்தது.

இது குறித்து அரசு அப்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக இருந்த தேவநீதிதாஸ் மற்றும் கலெக்டர் ராகேஷ் சந்திரா ஆகியோர் தலைமையில் இரண்டு விசாரணைக் குழுக்களை அமைத்தது. இந்த விசாரணைக் குழூக்கள் முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அதிகாரி தேவநீதிதாஸ் தலைமையிலான விசாரணைக் குழு முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட 10 குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன. அதாவது, அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதல்வராக இருந்த போது அங்கு விரிவுரையாளராக பணியாற்றிய தனக்கு நெருக்கமான அன்னபூர்ணா என்பவருக்கு விதிமுறைகளை மீறி மருத்துவ செலவுக்காக ரூபாய் 20 ஆயிரத்து 727 வழங்கியது. விதிமுறைகளுக்கு மாறாக தினக் கூலி ஊழியரை காசாளராக நியமித்து பெரும் நிதி கையாடல் செய்தது. பாரதியார் பல்கலைக்கூட கட்டிடங்களுக்கு புதிதாக கூறை அமைத்ததிலும், பழைய கூறைகளை மாற்றியதிலும் அரசு முன் அனுமதியின்றி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு ஆகிய மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்டு கடந்த 14.10.2010 அன்று கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சரும், பாரதியார் பாரதியார் பல்கலைக்கூடத்தின் சேர்மனுமான மாண்புமிகு ஷாஜகான் அவர்கள் ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அரிகரன் வெளிநாட்டில் உள்ளதால் பணிநீக்க உத்தரவினை லாஸ்பேட்டை வாசன் நகரில் உள்ள அவரது வீட்டில் ஒட்டியும், பத்திரிகை மூலம் அறிவிக்கையாக வெளியிட்டும் உள்ளனர். காலம் கடந்த முடிவானாலும் அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது ஊழல் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் என நம்புகிறோம்.

மேலும், அரிகரன் கடந்த 2007, 2008 ஆண்டுகளில் அரசின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குப் பலமுறை சென்று வந்துள்ளார். அரசு ஊழியர்களின் நடத்தை விதிப்படி ஒரு அரசு ஊழியர் வெளிநாடு செல்ல அரசின் முன் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து அரசு நியமித்த ஏ.எப்.டி. பஞ்சாலையின் இணை நிர்வாக இயக்குநர் எஸ்.டி.சுந்தரேசன் முன்பு நடந்த விசாரணையில் அரிகரன் விதிகளை மீறி வெளிநாடு சென்றது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் அடிப்படையில் அரசு உடனடியாக அரிகரன் மீது கிரிமினல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரிகரன் லலித் கலா அகாடமியின் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற டிசம்பர் 1999 முதல் டிசம்பர் 2009 வரையில் எந்தவித பணியும் செய்யாமல் 30 லட்சத்து 58 ஆயிரத்து 280 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இதனால், மக்கள் வரிப் பணம் பெருமளவில் வீணாக செலவிடப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு அவருக்கு அளித்த சம்பளத் தொகையை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்ய மக்கள் உரிமைக் கூட்டமைப்பு நடத்திய பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் பங்கேற்று ஆதரவுத் தந்த பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்களுக்கு இந்நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday, October 14, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. பகுதி (2)

1950-க்கு முன்னர் நீதித்துறையில் ஊழல் இருந்ததில்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். அப்போதெல்லாம் நீதித்துறையில் ஊழல் என்பதைப் பெரும் குற்றமாக கருதினார்கள். சிறிய தவறு நேர்ந்தாலும் நீதிபதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காலமது. 1949-ல் ‘பெடரல் நீதிமன்றங்கள்’ (Federal Courts) இருந்த போது அலகாபாத் நீதிபதியாக இருந்த சிவபிரசாத் சின்கா நீதித்துறையின் வரம்புக்கு அப்பாற்பட்டு இரண்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஊழல் செய்ததாக ஆதாரங்கள் நிறைய இருந்தும் நீதிபதிகள் ராமசாமி முதல் பி.டி.தினகரன் வரை யாரையும் பதவி நீக்கம் செய்ய முடியவில்லை. இதற்கு பாராளுமன்ற நடைமுறையில் உள்ள குறைபாடு ஒரு பெரும் காரணமாக இருக்கிறது.

பிரசாந்த் பூஷன் டெகல்காவிற்கு அளித்த பேட்டியில் ‘கடைசியாக இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல்வாதிகள்’ என்று கூறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருவது குறித்துப் பார்த்தோம். இவ்வழக்கில், அவரது தந்தையார் சாந்தி பூஷன் தன்னையும் இணைத்துக் கொள்ள உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்திய தலைமை நீதிபதிகளாக இருந்த ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்,கனியா, எல்.எம்.சர்மா, எம்.என்.வெங்கடசல்லயா, ஏ.எம்.அகமதி, ஜெ.எஸ்.வர்மா, எம்.எம்.பூஞ்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி.பருச்சா, பி.என்.கிரிபால், ஜி.பி.பட்நாயக், ராஜேந்திர பாபு, ஆர்.சி.லகோதி, வி.என்.கரே, ஒய்.கே.சபர்வால் ஆகிய 16 நீதிபதிகளில், 8 நீதிபதிகள் நிச்சயமாக ஊழல்வாதிகள், 2 நீதிபதிகள் ஊழல்வாதிகளா அல்லது ஊழலற்றவர்களா என்பதைக் கூற முடியவில்லை, 6 நீதிபதிகள் உறுதியாக நேர்மையானவர்கள் என்று கூறியதோடு அல்லாமல், இதில் யார் யார் எந்தப் பட்டியலில் வருகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு அதனை ‘சீலிட்ட உறையில்’ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் சாந்தி பூஷன்.

பிரசாந்த் பூஷன் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்திய தலைமை நீதிபதி கப்பாடியா மீது கூறும் குற்றச்சாட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நீதிபதி கப்பாடியா பணம் பெற்றுக் கொண்டு ஊழல் செய்தவராக கூறப்படாவிட்டாலும், அவர் தனக்கு வேண்டப்பட்ட கம்பெனிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார் என்பதும் ஊழலின் ஒரு பகுதி என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

பிரபலமான ‘ஸ்டெர்லைட் ஆலை’ தனது சுத்திகரிப்புத் திட்டம் ஒன்றை ஒரிசா மாநிலத்திலுள்ள லஞ்சிகார்க் என்னும் ஊரிலுள்ள வனப் பகுதியில் தொடங்க ‘வேதாந்தா அலுமினா லிட்’ என்ற தன்னுடைய துணை நிறுவனத்திற்கு மாற்றியது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், பழங்குடியின மக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தனக்கு கீழுள்ள நிபுணர் குழு (Centrally Empowered Committee - CEC) ஒன்றை 12.05.2005-ல் அமைத்தது. இக்குழு விரிவான விசாரணை மேற்கொண்டு தனது அறிக்கையை செப்டம்பர் 2005-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில் ‘வேதாந்தா தனது சுத்திகரிப்பு திட்டத்தோடு, சுரங்கத் திட்டத்தையும் தொடங்குவதை மறைத்து சுற்றுச்சூழல் அனுமதியை முறைகேடாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்காக நியம்கிரி மலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலைக்காக 58.93 ஹெக்டர் வன நிலமும், சுரங்கத்திற்காக 672.018 ஹெக்டர் வன நிலமும் தேவைப்படுகிறது. இதனால், வன நிலங்களும், காடுகளும், விலங்குகளும், நீர் நிலைகளும், அரிய வகை உயிரினங்களும் அழிந்துப் போகும். காட்டையே நம்பியிருக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிந்துப் போகும். மேலும், இத்திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அனுமதி அளித்ததன் மூலம் அளவற்ற உதவி செய்துள்ளது. பெரும் நிதி முதலீடு உடைய இத்திட்டம் குறித்து சுற்றுச்சூழல், வனம் ஆகிய கோணங்களில் தொடக்கத்திலேயே எதிர்ப்பு வந்ததால், இந்த இடத்தில் இந்த திட்டத்தைத் தொடங்குவதைக் கைவிட வேண்டும். மேலும், மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பப் பெற வேண்டும். அதுவரையில் அங்கு எந்தப் பணியும் நடக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று தெளிவாக கூறியிருந்தது.

இந்த வழக்கு 26.10.2007-ல் உச்சநீதிமன்றத்தில் வனம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அறிக்கைப் பற்றி எதுவும் விவாதிக்காமலும், இத்திட்டத்திற்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய பழங்குடியினர் சார்பில் தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீது வாதிட அவர்களது வழக்கறிஞ்ர் சஞ்சய் பாரிக்கை அனுமதிக்காமலும் நேரிடையாக சுரங்கம் அமைப்பது தொடர்பான வரைமுறைகள் குறித்து விவாதம் நடந்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேதாந்தா, ஒரிசா அரசு, மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை மற்றும் நீதிமன்றம் அமைத்த நடுநிலை விரிவுரையாளரான (Amicus Curiae) ஜீனியர் வழக்கறிஞர் உதய லலித் ஆகியோரின் வாதங்களை மட்டுமே நீதிபதிகள் செவிமடுத்தனர்.

இவ்வழக்கில் 23.11.2007 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நீதிபதி கப்பாடியா எழுதியிருந்தார். அதில் ’வேதாந்தா அலுமினியா லிட்’ கீழுள்ள ஸ்டெர்லைட் ஆலை இத்திட்டத்தை தொடங்க விண்ணப்பிக்கலாம்’ எனக் கூறியிருந்தார். மேலும், நிபுணர் குழு சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை ஆட்சேபித்தும், அதற்கு ஆதராவாக பல்வேறு காரணங்களையும் கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டிய நீதிபதி கப்படியா, ‘இன்னொரு பக்கம் லஞ்சிகார்க் பகுதியிலுள்ள பழங்குடியினர் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஒழுங்கான வீடுகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. பள்ளிக்கூடங்கள் இல்லை. அங்கு மக்கள் மிகவும் வறுமை நிலையில் வாழ்கின்றனர் எனபதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. இந்திய பொருளாதாரம் அண்மைக் காலமாக வளர்ந்து வருகிறது. இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இந்த இரண்டு எல்லைகளையும் கணக்கில் கொண்டு இந்த நீதிமன்றம் சுற்றுச் சூழல் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும், வளர்ச்சி (Sustainable Growth) கொள்கைகளையும் மனத்தில் கொண்டுள்ளது’ எனக் கூறி அனுமதி வழங்கியுள்ளார்.

வேதாந்தா தொழிலாளர் சட்டங்களையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்காததால் நார்வே நாட்டினால் கறுப்புப் பட்டியலில் (Black Listed) வைக்கப்பட்டுள்ள நிறுவனமாகும். கறுப்புப் பட்டியலில் உள்ளதால் வேதாந்தாவிற்கு அனுமதி அளிக்க மறுத்த நீதிமன்றம் அதன் கீழுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தான் அமைத்த நிபுணர் குழு அறிக்கையை உச்சநீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியின மக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களையும் நீதிமன்றம் பரிசீலிக்க தவறியது.

மேலும், இது தொடர்பாக அதே நீதிபதிகள் மற்றொரு உத்தரவை 8.8.2008-ல் பிறப்பித்தனர். அதில், இத்திட்டத்திற்காக நியம்கிரி மலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலைக்காக 58.93 ஹெக்டர் வன நிலத்தினையும், சுரங்கத்திற்காக 672.018 ஹெக்டர் வன நிலத்தினையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தனர். சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை வழங்கிய அனுமதியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பு வழங்கியது ஆச்சரியத்தை அளிக்கிறது.

இதனிடையே, நீதிபதி கப்பாடியா ஸ்டெர்லைட் ஆலையில் பங்குதாரராக இருந்தார் என்பது குறித்து பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார். ஆனால், இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் தவிர யாரும் இந்த வழக்கிலிருந்து நீதிபதி கப்பாடியா விலகிக் கொள்ள வேண்டுமென கோரவில்லை. இந்தியாவிலும் சரி, சர்வ தேச அளவிலும் சரி ஒரு நீதிபதி வழக்கில் தொடர்புடையவர்களோடு சிறிய அளவில் தொடர்பு இருந்தாலும் அந்த வழக்கிலிருந்து சம்பந்தப்பட்ட நீதிபதி விலகிக் கொள்வதே நெறியாகும். ஆனால், நிதிபதி கப்படியா அவ்வாறு செய்யாமல் வழக்கை நடத்தியதோடு அந்த நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது “ஊழல்” இல்லாமல் வேறு என்ன?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்றைப் பதம் பார்த்தால் போதும் என்பது போல தற்போதைய இந்திய தலைமை நீதிபதியின் நிலையே இதுவென்றால் மற்ற நீதிபதிகளின் நிலைக் குறித்து இங்குக் கூறத் தேவையில்லை.

நீதித்துறையில் அளவற்ற ஊழல் புரியும் நீதிபதிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? நீதிபதிகள் மக்களுக்குப் பொறுப்பாகுதல் குறித்து தற்போது மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள சட்டம் இவற்றைக் கட்டுப்படுத்துமா? என்பது பற்றி பிறகுப் பார்ப்போம்.


தொடரும்...

நன்றி: மக்கள் உரிமை.

வி.ஆர்.கிருஷ்ணய்யர் - மனித உரிமை ஆர்வலர்கள் சந்திப்பு!

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் - கோ.சுகுமாரன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 14.10.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யரை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் கேரளா மாநிலம் கொச்சினில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர் உலக அளவில் புகழ் பெற்ற நீதிபதியாவார். உச்சநீதிமன்றத்தில் அவர் நீதிபதியாக இருந்த போது வழங்கிய தீர்ப்புகள் அடித்தள மக்கள் நலன் நோக்கிலும், மனித உரிமையை உயர்த்திப் பிடிப்பதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் சட்டத்தை மறுஉருவாக்கம் செய்தும், மேலும் செழுமைப்படுத்தியும் அவர் வழங்கிய தீர்ப்புகள் இன்றும் சாதனையாக போற்றப்படுகிறது. அவரது ஈடு இணையற்ற பணியைப் பாராட்டி கொச்சினில் உள்ள சட்டப் படிப்புக்கான தேசிய பல்கலைக்கழகம் (National University of Advanced Studies – NUALS) நேற்றைய தினம் (13.10.2010) அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு இப்பட்டத்தினை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் வழங்கியுள்ளார்.

மதுரையிலுள்ள சோக்கோ அறக்கட்டளையின் தலைவர் மகபூப் பாட்சா, உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், வழக்கறிஞர்கள் ஜின்னா, லெனின், வெங்கடேஷ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் நேற்றைய தினம் கொச்சினில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம்.

வரும் நவம்பர் 1-ம் தேதியன்று 96-வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவர் சோர்வின்றி தொய்வில்லாமல் செயலாற்றுவது ஊக்கமளிப்பதாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழியில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இளைஞர்கள் சீரழிந்து வரும் வேளையில், சட்டப்படியான வழிமுறையில் நிறைய சாதிக்க இடமுண்டு என்ற நம்பிக்கையை அவருடனான சந்திப்பு தந்தது.

குறிப்பு: இந்த சந்திப்பு பற்றி இன்னும் விரிவாக எழுத உள்ளேன். 

Saturday, October 09, 2010

'மரணக்குழி' காஷ்மீருக்கு முற்றுப்புள்ளி எப்போது? - ஜீனியர் விகடனில் கோ.சுகுமாரன் பேட்டி


கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. (1)

‘மை லாட்’ என அழைப்பதன் மூலம் கடவுளுக்குச் சமமாக கருதப்பட்ட நீதிபதிகள் ஊழல் நிறைந்தவர்களாக இருப்பது நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்து வருகிறது. நீதிபதிகளின் ஊழல் குறித்து வெளிப்படையாக பேசுவதையே நீதிபதிகள் குற்றம் என எண்ணுவது நீதிபதிகளின் நேர்மையை கேள்விக்குள்ளாகுகிறது.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரன் புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் சட்டத்திற்குப் புறம்பாக அபகரித்து வைத்திருந்ததற்காகவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் பெரும் ஊழலில் ஈடுபட்டதற்காகவும் இருவரையும் பணிநீக்கம் செய்வதற்கான நாடாளுமன்றத்தின் முன் குற்றச்சாட்டும் (Impeachment), அதன்மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது. அதேபோல், காசியாபாத்தில் நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை கைடால் செய்ததும், சட்டீஸ்கரில் ஒரு நீதிபதி வீட்டின் முன்பு பையில் பல லட்சம் ரூபாய் பணம் கிடந்ததும் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. 

நீதித்துறையின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நடந்து வரும் “நீதிமன்ற அவமதிப்பு” வழக்கு ஒட்டுமொத்த நீதித்துறையின் நீதி வழங்கும் முறையையே காலியாக்கி விடும் போல் உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர் கொண்டிருக்கும் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் 26 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞர். மேலும், 1991 முதல் நீதித்துறையில் நிலவும் ஊழலுக்கு எதிராகவும், நீதிமன்ற பொறுப்புரிமைக்காகவும் (Judicial Accountability) போராடி வருபவர். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷனின் மகன் என்பதை அறிவோம்.

பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு ஏன்? கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ல் வெளிவந்த ‘டெகல்கா’ இதழில் ‘கடைசியாக இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல்வாதிகள். இதை எங்களால் நிரூபிக்க முடியாது. பூஞ்சி, ஆனந்த், சபர்வால் ஆகியோருக்கு எதிராக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே அவர்களை நீக்க கோரினோம்’ என பேட்டி அளித்தது தான் காரணம்.

மேலும் அவர் ‘ஊழல் நீதிபதிகளை நீக்க பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் குற்றச்சாட்டு (Impeachment) நடைமுறை சத்தியமற்றது. அதற்கு 100 எம்.பி.க்களின் கையெழுத்து தேவைப்படுகிறது. ஆனால், இவற்றை பெற முடிவதில்லை. ஏனென்றால், பல எம்.பி.க்களின் தனிப்பட்ட அல்லது அவர்களது கட்சி சார்ந்த வழக்குகள் இந்த நீதிபதிகளின் முன்பு நிலுவையில் உள்ளன. நீதிபதி பல்லாவிற்கு எதிராக பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பா.ஜ.க. கையெழுத்திட மறுத்துவிட்டது. அந்த நீதிபதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானியை விடுதலை செய்தவர். அந்த நீதிபதி நொய்டாவில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தினை வெறும் 4 லட்சம் ரூபாய்க்கு பெரும் நில வணிகர் ஒருவரிடம் வாங்கியது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. அந்த நில வணிகர் சம்பந்தப்பட்ட வழக்குகள் பல அந்த நிதிபதியின் கீழுள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன.

அடுத்து ரிலையன்ஸ் பவர் தொடர்பானது. அதாவது அவரது மகன் ரிலையன்ஸ் பவரின் வழக்கறிஞராக இருந்தார். நீதிபதி பல்லா லக்னோவில் நீதிபதியாக இருந்த போது இதுகுறித்து ஒரு தனி நீதிமன்றத்தை (Special Bench) அமைத்தார். அவர் ஒரு நீதிபதி வீட்டில் இரவு 11 மணி வரை நடந்த வழக்கு விசாரணையில் அமர்ந்துக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக தடை உத்தரவு கொடுத்தார். நாங்கள் நீதிபதி பல்லா மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நீதிபதி சபர்வாலிடம் கேட்டோம், அவர் மறுத்துவிட்டார்.

அதேபோல், வீஜேந்தர் ஜெயின் தன் பேத்தியை தன் வீட்டில் திருமணம் செய்துக் கொடுத்த ஒருவரது வழக்கை நடத்தி அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கினார். இதுபற்றி மிக குறிப்பான புகார்கள் கொடுத்தும் இந்திய தலைமை நீதிபதி இதுகுறித்து உள்விசாரணை நடத்தவில்லை. அந்த நீதிபதிகள் அனைவரும் தலைமை நீதிபதியானார்கள். பல்லா இன்னமும் ராஜஸ்தானின் தலைமை நீதிபதியாக உள்ளார். வீஜேந்தர் ஜெயின் பஞ்சாப் மற்றும் அரியானா தலைமை நீதிபதியானார்.

நீதிபதி கப்பாடியா ஒரிசாவிலுள்ள நியம்கிரி சுரங்க குத்தகை வழக்கை தீர்மானித்தார். வேதாந்தா நார்வே அரசால் கருப்புக் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு குத்தகை கொடுக்க முடியாது என்று கூறினார். பின்னர், வேதாந்தாவின் கீழுள்ள வெளிப்படையான பட்டியலில் (Publicly Listed) உள்ள ஸ்டெர்லைட் கம்பெனிக்கு அந்த குத்தகையைக் கொடுத்தார். அது வெளிப்படையான பட்டியலில் உள்ளது ஏன் தெரியுமா, அதில் எனக்கு பங்கு உள்ளது என  நீதிபதி கப்பாடியா கூறினார். அதனால் தான் அதற்கு ஆதரவாக அவர் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதிகள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டு வழக்கு நடத்துவதற்கு எதிராக சட்டம் உள்ளது. ஆனால், அவர்கள் அதனை சுலபமாக தாண்டிவிடுகின்றனர். நீங்கள் இதற்கு எதிராக புகார் செய்ய முடியாது, ஏனென்றல் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்’ என நீதித்துறையில் நிலவும் எல்லையற்ற ஊழல் பற்றி மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் அந்த பேட்டியில் பிராசாந்த் பூஷன் கூறியிருந்தார். நீதிபதி கப்பாடியா தற்போது இந்தியாவின் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. 

டெகல்காவிற்கு அளித்த இந்த பேட்டியால் பிரசாந்த் பூஷன் தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இதற்காக ஒருவேளை அவர் தண்டிக்கப்படலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தனக்கு எதிராக ஒரு “பண்டோரா பாக்சை” திறந்துவிட்டது. இந்த வழக்கில், பிராசந்த் பூஷன் மற்றும் மகனைக் காப்பாற்ற அவரது தந்தையார் சாந்தி பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் ஆதாரத்தோடு கூறப்பட்டுள்ள நீதிபதிகளின் ஊழல்கள் “நீதித்துறையைக் கறைபடிய” செய்துள்ளது. அவற்றைப் பிறகுப் பார்ப்போம்.

தொடரும்...

நன்றி: மக்கள் உரிமை 

Saturday, October 02, 2010

மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்த கருத்தரங்கம்!


வீரபாண்டியன்...


ஆரூண்...


பேராசிரியர் ஜவாகிருல்லா...



கோ. சுகுமாரன்...


அருணன்...


சுதர்சன நாச்சியப்பன்...



தேவநேயன்...


பங்கேற்றோர்...
----------------------------------------------------------------------------------------------------

‘மதச்சார்பற்றோர் மாமன்றம், தமிழ்நாடு’ மற்றும் ‘பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையம் (IDCR)’, லயோலா கல்லூரி ஆகியவை சார்பில் சென்னையில், 18.09.2010 அன்று மாலை 5.30 முதல் 8.30 மணி வரையில், லயோலா கல்லூரி, லாரன்ஸ் அரங்கில் “இந்தியாவும் மதச்சார்பின்மையும்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம் மதச்சார்பின்மை குறித்து ஆழமான விவாதத்தைத் தூண்டும் விதமாக அமைந்தது.

‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ மதச்சார்பின்மையை வலியுறுத்தியும், மதவெறி சக்திகளை அம்பலப்படுத்தியும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் 11.12.2008-ல் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும், குஜராத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறையைக் கட்டவிழுத்து ஆயிரக்கணக்கான சிறுபானமையினர் பலியாக்கிய மத வெறியர்களுக்கு எதிராகப் போராடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்க சமரசமின்றி பாடுபட்டு வருபவருமான திஸ்தா செட்டில்வாட் அவர்களை அழைத்து வந்து சென்னையில் மிகப் பெரிய கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. மதச்சார்பின்மையை வலியுறுத்துவது எளிதான செயல் இல்லை என்பதை நாம் அறிவோம். இந்த சவால் நிறைந்த பணியை ‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ சமரசமின்றி செய்து வருகிறது. அரசியல் விமர்சகரும், சமூக செயல்பாட்டாளருமான வீரபாண்டியன் இந்த அமைப்பிற்கு நிறுவனராக இருந்து செயலாற்றி வருகிறார்.

“இந்தியாவும் மதச்சார்பின்மையும்” கருத்தரங்கத்திற்கு வரவேற்புரையும், இணைப்புரையும் வழங்கிய மதச்சார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவனர் வீரபண்டியன் ‘நான் பெரும்பாலும் இதுபோன்ற மதச்சார்பற்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்களிடையே நிறைய பேசியிருக்கிறேன். மதத்தின் பெயரால் வன்முறை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அமைப்பின் லோகோவாக நாங்கள் மகாத்மா காந்தியை வைத்திருக்கிறோம். காரணம் அவர் மதச்சார்பின்மைக்காக தன் உயிரை கொடுத்தவர். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை அவருக்குத்தான் கிடைத்தது. அவரை தான் ‘முகமது காந்தி’ என்று முஸ்லிம்கள் அழைத்தார்கள். அந்த அளவுக்கு அவர் மதச்சார்பின்மைக்காக உழைத்திருக்கிறார். மதச்சார்பின்மைக்காகப் போராடும் ஒரு அமைப்பு அவரை லோகோவாக வைத்திருப்பதற்கு முழுப் பொறுத்தமானவர் அவர். மனிதநேயத்தை விரும்புகிறவர்கள் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மதத்தின் பெயரால் வேறுபாடுகளை உருவாக்கி அரசியல் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள கூடாது என்பதோடு அவற்றை நாம் நிராகரிக்க வேண்டும்’ என்று அழுத்தமாகப் பேசினார். பேச்சாளர்களைப் பேச அழைத்த போது இடையிடையே அவர்களைப் பற்றிய குறிப்புகளை வழங்கியது பார்வையாளர்களைக் கவர்ந்த்து.

கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநரும், லயோலா கல்லூரி செயலர் – தாளாளருமான முனைவர் ஜோ.ஆரூண், ‘உலகப் பார்வையில் இந்திய மதச்சார்பின்மை’ என்ற தலைப்பில் பேசினார். அவர் ‘மதச்சார்பற்றோர் மாமன்றம் போன்ற அமைப்புகளோடு சேர்ந்துப் பணியாற்றுவது சரியெனப்பட்டதால் தான் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கும் இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம். மனிதர்களைப் பிரித்து மோதல் ஏற்படுத்துவதில் மனித நேயம் தோல்வி அடைகிறது. உலக நாடுகளில் மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பது. இந்தியவைப் பொறுத்தவரையில் அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதுதான் மதச்சார்பின்மையாக உள்ளது. இந்த கொள்கையில் நாம் உறுதியாக இருப்போமானால் நமக்குள் எந்தவித பிரச்சனையும் எழாது’ என்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாகிருல்லா தலைமைத் தாங்கிப் பேசியதாவது ‘மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராது இருப்பது என்பதோடு, எல்லா மதத்தையும் சமமாக பாவிப்பதாகும். இந்தியாவை ஆட்சி புரிந்த முந்தைய மன்னர்கள் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்கட்டாக இருந்தனர். மகாராஷ்டிராவில் இன்றைக்கு சிவசேனை போன்ற மத சக்திகள் தங்கள் அடையாளமாக முன்னிறுத்தும் சிவாஜி மதவெறியர் அன்று. அவரது ஆட்சிக் காலாத்தில் அவரது படையில் நிறைய முஸ்லிம்கள் உயர் பதவியில் அமர்த்தப்பட்டனர். அவர் தான் சார்ந்த மதத்தைத் தாண்டி முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல் கட்டிக் கொடுத்துள்ளார். அவரை இன்று மதத்தின் குறியீடாக வைத்து மகாராஷ்டிராவில் அரசியல் நடந்து வருகிறது. அதேபோல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர் அவுரங்கசிப் தன் ஆட்சிக் காலத்தில் தன் ஆட்சிப்பரப்பில் கோயில்கள் கட்டிக் கொடுத்துள்ளார். எந்த மதத்தின் மீதும் அவர் வெறுப்பை உமிழ்ந்ததில்லை. இப்படி நம்முடைய முன்னோர்கள் மதச்சார்பின்மையை உறுதியாக பின்பற்றி வாழ்ந்துள்ளனர். என்ன விலைக் கொடுத்தாவது மதச்சார்பின்மையை நாம் கடைப்பிடித்திட வேண்டும். மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம்’ என்றார்.

‘குஜராத் – என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் பேசிய புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், ‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்கள் தான் செய்தனர் எனக் கூறி, 3000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையின முஸ்லிம்களைக் கொலை செய்துள்ளனர் இந்து மதவெறியர்கள். பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். கோடிக்கணக்கான மதிப்புடைய உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளனர். கோத்ரா ரயில் எரிப்பு முஸ்லிம்கள் செய்ததல்ல. கரசேவர்கள் ரயில் நிலையத்தில் இருந்த ஒரு முஸ்லிம் இளம் பெண்ணைத் தூக்கிச் சென்றதுதான் அனைத்திற்கும் காரணம். இதனை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் ஈமெயில் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளனர். அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர். ரயில் எரிப்பு குறித்த தடய அறிவியல் துறை அறிக்கை ரயில் பெட்டி உள்ளிருந்து எரிக்கப்பட்டதாக கூறுகிறது. தற்போது ஒரு என்கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் மோடி நள்ளிரவு வரை விசாரிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலையீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலகான் குண்டு வெடிப்பில் கைது செய்யபாட்டுள்ள மதவெறியர்களுக்கு ஆதராவாக பேசும் மத்திய அரசு, ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து பேச முடியாது எனக் கூறுவது இரட்டை அளவுகோல் ஆகும்’ என்றார்.

‘காவிமயமும் கோட்சேக்களும்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அருணன் ‘காந்தியைக் கொன்ற கோட்சே உள்ளிடவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. காந்தி கொலை வழக்கில் தங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், சாவர்கருக்கும் தொடர்பில்லை என்று கூறியவர்கள், தீர்ப்பு சொல்லப்பட்ட நேரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சாவர்க்கர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். “காவி புனிதமானது தான்” ஆனால், அந்த காவியை அணிந்தவர்கள் புனிதமானவர்களாக இல்லை. சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு அலைந்துக் கொண்டிருக்கிறார். தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களுடைய அலுவலகத்திற்கே குண்டு வைத்துக் கொண்டு, அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் எனத் திட்டமிட்டனர். நல்ல வேளையாக அது கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைக்கு காவித் தீவிராவாதம் என்றவுடன் பதறுகிறார்கள். முஸ்லிம் தீவிரவாதம் எனக் கூறி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்தியவர்கள், கலங்கப்படுத்தியவர்கள் இப்போது இந்த வார்த்தையைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். இந்த கருத்தரங்கம் நடக்கும் இந்த நேரம் மிகவும் முக்கியமானது. பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பாக நடந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் நேரம். மதச்சார்பின்மை பற்றி நாம் மத நம்பிக்கை உள்ளவர்களிடத்திலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்றார்.

‘இந்திய மதச்சார்பின்மையும், நமது கடமையும்’ என்ற தலைப்பில் நிறைவுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ‘நமது இந்திய அரசியல் சாசனம் எந்த மதத்தையும் கடைபிடிக்க, அதனை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி அழைக்க உரிமை வழங்கியுள்ளது. கங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் சமமாக கருதுகிறது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் மத, சாதி, இன அடையாளம் எதையும் பார்க்காத பொதுவான கட்சியாகும். இதனால் இந்த கட்சி இன்றைக்கும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய கட்சியாக திகழ்கிறது. எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி இந்திய அரசியல் சட்டத்தில் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை சேர்த்தார். எமர்ஜென்சி காலத்தில் நடந்த நல்லதுகளில் இதுவும் ஒன்று. சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் அரணாக இருக்கும், இருக்கிறது. நீதிபதி ராஜேந்திர சச்சார், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் கமிஷன்கள் அமைத்து சிறுபான்மை மக்களின் நிலைக் குறித்து அறிந்து அவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ராஷ்ட்ரிய சுயம் சேவக் போன்ற அமைப்புகளை நாம் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு இடம் கொடுக்க கூடாது’ என்றார்.

நிறைவாக நன்றி கூறிய தோழமை இயக்குநர் தேவநேயன் ‘அனைவருக்கும் நன்றி கூறியதோடு, இந்த கருத்தரங்கில் அறிவுஜீவிகளை அழைப்பதைவிட களத்தில் இருந்து போராடுபவர்களை அழைத்துள்ளோம். அதுதான் இந்த கருத்தரங்கின் சிறப்பு’ என்றார்.