Showing posts with label அ.மார்க்ஸ். Show all posts
Showing posts with label அ.மார்க்ஸ். Show all posts

Thursday, October 21, 2021

ஸ்ரீ பெரும்புதூரில் வழிப்பறி செய்த வடநாட்டு இளைஞன் என்கவுண்டர் கொலை – உண்மை அறியும் குழு அறிக்கை!

அக் 19, 2021,

சென்னை

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ பெரும்புதூர் அருகில் உள்ள பென்னலூரில் வசிக்கும் சுங்கச் சாவடி ஊழியர் இந்திரா (வயது 55, – க/பெ: ரெங்கநாதன்) என்பவரது 5 சவரன் நகையைப் பறித்துச் சென்ற இரு இளைஞர்களில் முர்துஷா ஷேக் (30) என்பவர் கடந்த அக் 11 அன்று தமிழக காவல்துறையால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. இது குறித்த உண்மைகளை அறிந்து அறிக்கை அளிக்கும் நோக்கில் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு சென்ற வாரம் அமைக்கப்பட்டது.

குழுவில் பங்குபெற்றோர்

அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,

செந்தில் தோழர், இளந்தமிழகம், சென்னை,

நவ்ஃபல், (NCHRO), கோவை,

வழக்குரைஞர் ஃபக்ருதீன் (NCHRO), சென்னை,

அயூப், காஞ்சிபுரம் (NCHRO),

இர்ஷாத், (NCHRO) காஞ்சிபுரம்,

காஜா மொஹிதீன், காஞ்சிபுரம்,

ஃபெரோஜ் கான், கோவை,

கி.நடராசன் (Organisation for Protection of Democratic Rights -OPDR), வழக்குரைஞர், சென்னை,

யு.சர்புதீன், சுங்குவார் சத்திரம்.

இக்குழுவினர் இது தொடர்பாகச் சந்தித்தவர்கள்:

எங்கள் குழு அக்டோபர்14 மற்றும் 16 தேதிகளில் நகையைப் பறிகொடுத்த சுங்கச்சாவடி ஊழியர் இந்திரா, மற்றும் இருங்காட்டுக் கோட்டை கிராமத்தினர், நகையைப் பறித்த வட மாநிலத்தவர் தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் அம்பேத்கர் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தில் வசிப்போர், கொள்ளையர்கள் தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் வீட்டிற்கு முன்னதாக உள்ள அஞ்சல் நிலைய ஊழியர்கள், அப்பகுதியில் பல்வேறு சிறு கடைகள் வைத்துள்ளோர், மற்றும் தொழில்கள் செய்வோர், முர்துஜா ஷேக்கால் கத்தியால் வெட்டப்பட்டவராகச் சொல்லப்படும் காவலர் மோகன்ராஜ் சிகிச்சைப் பெறுவதற்காகச் சேர்கப்பட்டிருந்த ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், வட மாநிலத்தில் இருந்து வந்து இப்பகுதியில் வாழும் ஏராளமான தொழிலாளிகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிலர் ஆகியோருடன் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்தோம்: காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்தியப் பிரியா, ஏ.டி.எஸ்.பி வினோத் சாந்தாராம், சம்பவத்திற்குப் பின் இப்பகுதியில் உள்ள வட மாநிலத்தவர் குறித்த கணக்கெடுப்புகளை மேற்பார்வை செய்யும் காவல் ஆய்வாளர் ந.முத்துச் சாமி எனப் பலரையும் சந்தித்தோம். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் ஏரி மற்றும் காட்டுப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டோம்.

நடந்தது என்ன என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஊர் மக்களும் சொல்வது:

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பணி செய்யும் இந்திரா சென்ற அக்டோபர் 10 அன்று காலை சுமார் 8 மணி அளவில் சென்னை செல்லும் பொருட்டு சுங்கச் சாவடி அருகில் உள்ள EB காலனி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது இரு வடமாநிலத்தவர் இந்திராவிடம் சென்று ஏதோ வழி கேட்பவர்கள் போலத் தங்கள் மொழியில் பேசி, அவர் அணிந்திருந்த 5 சவரன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் அறுத்துக் கொண்டு ஓடினர். இந்திரா வாய்விட்டு அலறியதைக் கேட்ட அங்கிருந்த ஒரு சிலர் அவர்களை விரட்டிப் பிடிக்க முனைந்தபோது, அவ் இருவரும் சென்னை செல்லும் திசையில் ஓடி வெங்கடேஸ்வரா கல்லூரி பக்கமாகத் திரும்பி அங்கிருந்த காட்டுப் பகுதியுள் நுழைந்து மறைந்துள்ளனர். இதற்கிடையில் இந்திரா செல்போன் மூலம் தன் மகன் மதியிடம் நடந்ததைக் கூற அவரும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கொள்ளையர்கள் சென்ற திசையில் ஓடி, இருங்காட்டுக் கோட்டை ஏரிப்பக்கம் அமைந்துள்ள அடர்ந்த காடுகள் வழியே சிறிது நேரம் அலைந்து திரிந்து ஒன்றும் துப்புத் துலங்காமல் திரும்பியுள்ளனர் .

இதற்குள் செய்தி அறிந்து அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இந்திராவின் இன்னொரு மகன் சத்தியா நடந்ததை அறிந்து, தனது நண்பர் கலைச்செல்வன் என்பவருடன் தனது வாகனத்தில் கிங்ஸ் கல்லூரியின் பின்புறமாகச் சென்று இருங்காட்டுக் கோட்டை ஏரியை அடைந்தபோது அங்கே இரு இளைஞர்கள் உடைமாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி ஓடியுள்ளனர். இதைக் கண்ட அந்த இருவரில் ஒருவர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக அவர்களை மிரட்டியுள்ளார். உடனே இவர்கள் இருவரும் தரையில் படுத்துவிட்டதாகவும், அதைக் கண்ட அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடியுள்ளனர் எனவும் அறிகிறோம்.

அவர்கள் ஓடியபின் அவர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சென்ற சத்தியாவும், கலைச்செல்வனும், ஓடியவர்கள் நின்றிருந்த இடத்தில் கைத் துப்பாக்கி ஒன்றின் ஒரு பகுதியும் சில தோட்டாக்களும் சிதறிக் கிடந்ததைக் கண்டு அவற்றை எடுத்து வந்து காவல்துறையினரிடம் தந்துள்ளனர். ஓடிச் சென்றவர்களிடம் இருந்த கைத் துப்பாக்கியின் எஞ்சிய பகுதியால் அவர்களுக்கு இனிப் பயனில்லை எனும் நிலை ஏற்பட்டது இதன் மூலம் விளங்குகிறது.

வழிப்பறி செய்தவர்கள் பிடிக்கப்பட்டது, அதில் ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது ஆகியன குறித்துக் காவல்துறையினர் சொல்வது:

சம்பவம் நடந்த ஒன்றரை மணி நேரத்திற்குள் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளர் மற்றும் அருகில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குப் பெட்டிகளைக் காத்துநின்ற காவல்துறையினர் மற்றும் ஊர்மக்கள் எனப் பெரிய அளவில் ஏரிக்கரையில் திரண்டுள்ளனர். அடர்ந்த காடு என்பதால் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மூன்று ட்ரோன்களைக் கொண்டுவந்து வழிப்பறி செய்த இருவரையும் தேடியுள்ளார். அப்படியும் ஒளிந்திருந்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் இருங்காட்டுக் கோட்டைப் பகுதியில் காவல்துறையினர் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அன்று அந்தக் காட்டுப் பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்தும் முர்துஜா ஷேக்கை என்கவுண்டர் செய்து சுட்டுக் கொன்றது குறித்தும்

ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர், எஸ். கிருஷ்ணகுமார் தனது முதல் தகவல் அறிக்கையில் ((FIR No 1255, 11-10-2021, Sriperumbuddur) கூறுவது:

”செயின் வழிப்பறிச் சம்பவம் குறித்து சி1 திருப்பெரும்புதூர் காவல் நிலைய குற்ற எண் 1254/2021 பிரிவு 397 IPC யின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்தது. அக்டோபர் 11 காலை சுமார் ஏழு மணி அளவில் காரந்தாங்கல் அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தபோது சந்தேகத்துக்குரிய நபர் (ஒருவர் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்து) அவர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டார்.

விசாரணையில் அந்த நபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நெயிம் அக்தர் எனத் தெரியவந்தது. (அவரை விசாரித்தபோது) தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தனது கூட்டாளியான மோர்துஜா ஷேக் என்பவர் மேவளூர்குப்பம் கிருஷ்ணா நதிநீர்க் கால்வாய் பக்கமாகப் படூர் கிராமத்திற்குச் செல்லும் சாலையின் அருகாமையில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மறைந்திருப்பதாக் கூறினார். இந்தத் தகவலின் அடிப்படையில் நான் special team உதவி ஆய்வாளர் தர்மலிங்கம், தலைமைக் காவலர் மோகன் ராஜ் ஆகியோர் குற்றவாளியைப் பிடிக்க மதியம் சுமார் 12 மணிக்கு படூர் காட்டுப் பகுதியைச் சென்றடைந்தோம். அங்கு ரோந்து மேற்கொண்டபோது மதியம் சுமார் 1 மணி அளவில் அடர்ந்த புதரில் இருந்து ஒரு நபர் ஓடி வந்து முன்னால் நடந்து சென்ற தலைமைக் காவலர் மோகன்ராஜின் கழுத்துப் பகுதியில் கையில் இருந்த அரிவாளால் தாக்க முற்பட்டார். அவர் அந்த வெட்டுப்படாமல் கையால் தடுத்தபோது இடது கை புஜத்தில் பலமான வெட்டுப்பட்டது. மோகன்ராஜ் நிலைகுலைந்து தடுமாறி வீழ்ந்தபோது, சந்தேகப்படும் நபர் தன் துப்பாக்கியை எடுத்துச் சுட முயன்றபோது நான் அவரை தற்காப்பிற்காக இரண்டு முறை சுட்டேன்.” இது கிருஷ்ணகுமாரின் வாக்குமூலம். ஆம்புலன்சில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு முர்துஜா ஷேக்கைக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டார் என ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தன் வாக்குமூலத்தை முடிக்கிறார்.

மொத்தத்தில் இது ஒரு வழக்கமான காவல்துறை என்கவுண்டர் படுகொலைதான் என்பது தெரிகிறது. அவரிடம் இருந்த துப்பாக்கியின் முன்பகுதி காணாமற் போனபின் அதைப் பயன்படுத்த முடியாது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. தவிரவும் அந்தத் துப்பாக்கியைக் காவல்துறையினர் பத்திரிகையாளர்களிடம் காட்டியபோது, அது முழுமையாக இல்லை என்பதையும் ”பீபிள்ச் வாட்ச்” அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக் காட்டுவது குறிப்பிசத் தக்கது. எனவே அந்த பயனற்ற பாதித் துப்பாக்கியைக் காட்டி சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மிரட்டினார், அதனால் சுட்டோம் என்பது ஏற்க இயலாத ஒன்று.

சுங்கச் சாவடி ஊழியர் இந்திராவின் சங்கிலியை அறுத்த இருவரில் மற்றொருவர் பெயர் மத்புல் ஷேக் என்றும், அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் சகோதரன் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மத்புல்ஷேக் இப்போது தீவிரமாகத் தேடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஜார்கண்டில் உள்ள அவரது பெற்றோரைத் தொடர்பு கொண்டபோது அவரை இங்கேயே அடக்கம் செய்யுமாறு அவர்கள் கூறிவிட்டதாகவும். அதன்படி அவர் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் காஞ்ஜிபுரம் டி.ஐ.ஜி. சத்தியப் பிரியா நாங்கள் அவரைச் சந்தித்தபோது கூறினார்.

இது தொடர்பாக எங்கள் குழு சந்தித்த காவல்துறையினர்:

நகையைப் பறி கொடுத்த இந்திராவைச் சந்தித்தபோது அவர் சென்ற அக்டோபர் 10 காலை சுமார் 8 மணி அளவில் தான் சென்னை செல்ல பேருந்துக்காக நின்றபோது புரியாத மொழியில் பேசிய இரு வட மாநிலத்தவர் தன்னிடம் ஏதோ கேட்பது போல வந்துத் செயினை அறுத்துக் கொண்டு ஓடியதையும், அவர் சத்தம் போட்டுக் கத்தியதையும், பின் அவர்கள் கொஞ்ச தூரம் ஓடி காட்டுப் பகுதியை நோக்கி சரிவில் இறங்கி ஓடி மறைந்ததையும் சொன்னார். பின் அவரது மகன்கள் வந்து சென்று காட்டுப் பகுதிக்குள் தேடியதையும் சொன்னார். செயினைப் பறிக்கும்போதோ, இல்லை தான் தப்பி ஓடியபோது துரத்தியவர்களை மிரட்டுவதற்காகவோ கொள்ளையர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தினார்களா என நாங்கள் கேட்டபோது தன்னிடம் நகையைப் பறித்தபோது அப்படித் துப்பாக்கியைக் காட்டி எதையும் செய்யவில்லை என இந்திரா உறுதிபடக் கூறினார். செயின் அறுப்பு சம்பவம் நடந்த இடம் மற்றும் குற்றவாளிகள் தப்பிச் சென்ற வழி முதலியவற்றையும் பார்த்தோம்.

அடுத்து நாங்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் சென்று அங்கிருந்த காவலர்களிடம் முதல் தகவல் அறிக்கை விவரங்களைக் கேட்டோம். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் போடப்பட்டுள்ளன. ஒன்று நகையைப் பறி கொடுத்த இந்திராவின் புகார். இந்த முதல் தகவல் அறிக்கை யாரும் தரவிரக்கம் செய்ய இயலாமல் இது முடக்கப்பட்டுள்ளது. மற்றது இந்த அறிக்கையில் நாங்கள் முன் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தான் முர்துஜா ஷேக்கை சுட்டுக் கொல்ல நேர்ந்தது குறித்த முதல் தகவல் அறிக்கை. இதைத் தரவிரக்கம் செய்ய முடிந்தது.

உயர் அதிகாரிகள் சற்று நேரத்தில் வருவதாகச் சொன்னதால் சிறிது நேரம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலேயே காத்திருந்துவிட்டுப் பின் அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டக் காவல் நிலையத்திற்குச் சென்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) விடுப்பில் இருந்ததால், கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) திரு வினோத் சாந்தாராமைப் பார்த்தோம். என்கவுண்டரில் கொல்லப்பட்ட மத்புல் ஷேக்கைக் கைது செய்து விசாரித்திருக்கலாம். நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனைகள் வாங்கித் தந்திருக்கலாம். என்கவுண்டர் செய்திருப்பதற்கான அவசியம் இல்லை, அந்த நபர் நகையைப் பறித்தபோது கூட இந்திராவையோ, துரத்தியவர்களையோ துப்பாக்கியைக் காட்டி மிரட்டவுமில்லை. அவரை இப்படிச் சுட்டுக் கொன்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைச் சொன்னோம். மத்புல் ஷேக்கிடம் துப்பாக்கி இருந்தது உண்மை எனவும், தேவையானால் சுட்டுக் கொல்ல வாய்ப்பிருந்ததையும் மறுக்க முடியாது எனவும் அவர் பதிலுரைத்தார். நாங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்த அன்று அப்படி ஒரு நபர் காஞ்சியில் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியதையும் குறிப்பிட்டார். ”எனினும் உங்கள் ஐயங்களை முன்வையுங்கள். நாங்கள் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்” என்றார்.

அடுத்து நாங்கள் ஐ.ஐ.ஜி. திரு சத்தியப் பிரியா அவர்களைச் சந்தித்தோம். அவர் சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தவர். அவரும் முர்துஜா ஷேக்கை என்கவுண்டர் செய்து கொன்றது தவிர்க்க இயலாத ஒன்று என்பதே தன் கருத்து எனக் குறிப்பிட்டார். முர்துஜாவிடம் கடைசிவரை மூன்று குண்டுகள் இருந்தன எனவும், அதை அவர் கைது செய்யச் சென்ற காவலர்கள் மீது பிரயோகிக்கக் கூடிய எல்லா வாய்ப்புகளும் இருந்ததை மறந்துவிடக் கூடாது எனவும் குறிப்பிட்டார். முர்துஜாவை என்கவுண்டர் செய்தது குறித்து I am convinced என்றார். முர்துஜாவால் கத்தியால் வெட்டப்பட்ட காவலர் மோகன்ராஜுக்குக் கடுமையான காயம் பட்டுள்ளதாகவும், அவருக்கு இன்னும் தீவிரமான சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது எனவும் கூறினார்.

அடுத்து முர்துஜா ஷேக்கைப் பிடிக்கச் சென்றபோது அந்த நபர் தன் கையிலிருந்த கத்தியால் வெட்டியதாகக் கூறப்படும் அந்தத் தலைமைக் காவலர் மோகன் ராஜ் சிகிச்சை பெறுவதாகச் சொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அவர் படுகாயமுற்று மருத்துவமனையில் இருப்பதாகக் காவல்துறையால் சொல்லப்பட்டாலும், நாங்கள் அவர் தங்கிச் சிகிச்சை பெறுவதாகச் சொல்லப்பட்ட மருத்துவமனை வார்டுக்குச் சென்றபோது அவர் அங்கில்லை. பக்கத்தில் இருந்தவர்கள் அவர் அன்று மதியம் வீட்டுக்குக் குளிக்கப் போனார், இன்னும் வரவில்லை எனக் கூறினார்கள். தினசரி அவர் வீட்டுக்குச் சென்று தன் தினசரிக் கடமைகளை முடித்து வருவது தெரிந்தது. பின் நாங்கள் அந்த வார்டுக்குப் பொறுப்பாக உள்ள செவிலியரைச் சென்று விசாரித்தோம். சிகிச்சை முடிந்து இன்று மோகன்ராஜ் ”டிஸ்சார்ஜ்” செய்யப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் தலைமைக் காவலர் மோகன் ராஜுக்கு அப்படி ஒன்றும் பெரிய வெட்டுக் காயம் ஏதும் இல்லை என்பது விளங்கியது. இப்படியான என்கவுண்டர் கொலைகளைச் செய்யும்போது யாராவது ஒரு காவலருக்குப் பெரும் காயம் ஏற்படும் வகையில் தாக்கிய நிலையில் தற்காப்புக்காகத்தான் தாங்கள் என்கவுண்டர் செய்தோம் எனச் சொல்வது காவல்துறையில் வழக்கமாக உள்ளது. ஆனால் அவை பெரும்பாலும் உண்மை இல்லை என்பதைப் பல முறை நாங்கள் நேரில் கண்டுள்ளோம். எங்களின் அறிக்கைகளிலும் பதிவு செய்துள்ளோம்.

காரந்தாங்கல் கிராமத்தவர்கள் கருத்து

பெங்களூரு நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதையும், அவற்றில் பெரிய அளவில் வட மாநிலங்களிலிருந்து தொழிலாளிகள் வந்து தங்கி வேலை செய்வதையும் அறிவோம். இந்தச் சம்பவம் நடந்த இறுக்கமான புதர்கள் மற்றும் ஏரிகள் அமைந்துள்ள இப்பகுதியில் ஹ்யூண்டாய் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு பணி செய்யும் வடமாநிலத்தவர்கள் பெரிய அளவில் நெடுஞ்சாலை ஓரமுள்ள காரந்தாங்கல் கிராமத்தில்தான் வசிக்கின்றனர். சிலர் குடும்பமாகவும் இருக்கின்றனர்.

அக்டோபர் 16 அன்று எங்கள் குழு இரண்டாம் முறையாக இந்தக் கள ஆய்வு தொடர்பாக அங்கு சென்றபோது இந்தக் கிராமத்தில் இருந்து அங்குள்ள பலரையும் சந்தித்தோம். செயின் பறிப்பைச் செய்தவர்கள் தங்கி இருந்ததாகச் சொல்லப்படிம் வீடு, செயின் பறிக்கப்பட்ட இடம், கொள்ளையர்கள் துரத்தப்பட்டபோது ஓடி அவர்கள் ஒதுங்கிய காட்டுப்பகுதி, ஏரி முதலான பகுதிகளையும் பார்வையிட்டோம்.

இப்பகுதி மக்களைச் சந்தித்து நாங்கள் இது குறித்து விசாரித்தபோது முதலில் எதையும் சொல்வதற்குத் தயக்கம் காட்டினர். எங்கள் குழுவில் இருந்த வழக்குரைஞர் நடராசன், சர்புதீன் முதலானோர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சற்று இலகுவாக மக்களிடம் பேசவும், கருத்துக்களைச் சேகரிக்கவும் முடிந்தது.

நாங்கள் சென்றபோது காவல்துறையினர் அங்கு தங்கியுள்ள வெளிமாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். இரு குழுக்களாகப் பிரிந்து அவர்கள் ஒவ்வொரு வீட்டாரையும் வரச்சொல்லி அவர்களின் ஆதார் அட்டை முதலானவற்றைப் பதிவு செய்து கொண்டுள்ளதைப் பார்த்தோம். காவல்துறை ஆய்வாளர் ந.முத்துச்சாமி அக்குழுவிற்குப் பொறுப்பேற்றிருந்தார். அவரைச் சந்தித்து என்கவுண்டர் தொடர்பான விவரங்களைக் கேட்டபோது, அந்த வழக்குத் தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த விவரங்களைச் சேகரிப்பது மட்டுமே தன் பணி எனவும் குறிப்பிட்டார். தாங்கள் விசாரித்துப் பதிவு செய்வோரிடம் ஆதார் அட்டை இல்லாமலிருந்தால் வேறு முக்கியமான ஆதாரங்களைப் பதிவு செய்துகொள்வதாகவும் கூறினார். அவரது ஜீப் நின்றிருந்த இடத்திற்கு அருகாமையில்தான் கொள்ளையர்கள் இருவர் தங்கி இருந்ததாகக் சொல்லப்படும் தெருவும் இருந்தது. அது குறித்தும் அவர் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.

நாங்கள் சந்தித்துப் பேசிய அத்தனை பேர்களும் அங்கு தங்கியுள்ள வடமாநிலத்தவர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்டதை இங்கே பதிவு செய்வது அவசியம். பெரும்பாலும் ஜார்கண்ட், மே வங்கம், ஒடிஷா, பிஹார் முதலான மாநிலத்தவர்களான இவர்களுக்கு எந்த அடிப்படையில் வீடுகளை வாடகைக்குத் தருகிறீர்கள் எனக் கேட்டபோது ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வீடுகளை வாடகைக்குத் தருகிறோம் என்றனர். அதில் ஒருவர் தன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் வடமாநிலத்தவரின் ஆதார் கார்டின் ஒரிஜினலையே தான் வாங்கி வைத்துள்ளதாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இப்படி இங்கு தங்கியுள்ள வடமாநிலத்தவரில் பலர் முஸ்லிம்கள் என்பதால் இங்குள்ள முஸ்லிம் ஒருவர் தன் வீட்டு மாடியில் அவர்கள் தொழ இடமளிப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க முயன்றோம். இப்போது அங்கு அப்படித் தொழுகை நடப்பதில்லை எனத் தெரிந்தது. ஊருக்குள் இருந்த ஒரு கடையின் உரிமையாளரைச் சந்தித்துப் பேசியபோது அவரும் அப்பகுதியில் வாழும் இந்த வட மாநில மக்கள் குறித்த மிகவும் நல்ல அபிப்பிராயத்தையே முன்வைத்தார். அவர்களால் இதுவரை அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றார்.

சாலைக்கு அருகில் உள்ள போஸ்ட் ஆபீசில் இருந்த பணியாளரைச் சந்தித்தபோது அவர் தபால்களை எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோதும் நின்று அங்கிருக்கும் வட மாநிலத்தவர்கள் குறித்து மிகவும் நல்ல கருத்தையே கூறினார். போஸ்ட் ஆபீசை ஒட்டியுள்ள தெருவில்தான் கொள்ளையர்கள் இருந்ததாகக் கூறப்படுவதுபற்றிக் கேட்டபோது அதுவும் அவருக்கும் தெரியவில்லை.

கொள்ளையர்கள் வசித்ததாகச் சொல்லப்படும் அந்தத் தெருவில் ஒரு முன்னாள் கவுன்சிலரைச் சந்தித்தோம். வி.சி.க வைச் சேர்ந்த அவரும் அருகில் உள்ள ஒரு வீட்டைக் காட்டி அதற்குள்தான் இருந்தார்கள் எனச் சொல்லப்படுவதாகவும், அங்கு யார் இருந்தார்கள், எத்தனை பேர்கள் இருந்தார்கள் என்றெல்லாம் தனக்கு மட்டுமல்ல, அங்கு யாருக்கும் தெரியாது எனவும் சொன்னார். அவர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீட்டுக்குச் சென்றபோது, அது ஒரு பாழடைந்த குடிசை. எங்களைப் பார்த்துவிட்டு அந்த வீட்டுக்குள் படுத்திருந்த இரு நாய்கள் வெளியே ஓடின. அங்குதான் அவர்கள் இருந்தனர் என்பது நம்ப இயலாததாகவே இருந்தது.

மொத்தத்தில் அப்பகுதி மக்களுக்கு தங்கள் மத்தியில் வசித்த இந்த வடமாநில மக்கள் குறித்து எந்தப் புகாரும் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடிந்தது.

எங்கள் குழுவின் பார்வைகளும் கோரிக்கைகளும்

காரந்தாங்கல் கிராமத்தில் எங்கள் குழு விசாரித்தபோது அக்டோபர் 11 அன்று காலை10 மணிக்கு மேல் ஒரு வட மாநிலத்தவரைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றதாகக் கூறுகின்றனர். சிலர் இரண்டு பேர்கள் எனவும் கூறினர். அன்று காலை அப்பகுதி பரபரப்பாய் இருந்ததையும் அம் மக்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். அப்படிப் பிடிக்கப்பட்டவர் நயிம் அக்தர் எனும் ஜார்கண்ட் மாநிலத்தவர் எனவும் அவரது டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டுதான் முர்துஜா ஷேக்கின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவர் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார் என்கிற கருத்து ஒன்றும் உள்ளது. அந்த நயிம் அக்தர் தற்போது ரிமாண்ட் செய்யப்பட்டுச் சிறையில் உள்ளார்.

முர்துஜா ஷேக்கும் இன்னொருவரும் வழிப்பறி செய்து நகையைப் பறித்துச் சென்றனர் என்பது குற்றச்சாட்டு. அவர்கள் கைது செய்யப்பட்டு. வழக்குத் தொடுத்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. சுமார் 300 ஆயுதம் தாங்கிய படையுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில் காவல்துறையினர் அவர்களை எளிதில் உயிருடன் பிடித்திருக்க முடியும். இப்படி முர்துஜா ஷேக்கைக் காவல்துறை கொன்றுதான் பிடிக்க வேண்டும் என்பதற்கு அங்கு அவசியம் இருக்கவில்லை. காவல்துறை சொல்லும் கதையில் எந்த நியாயமும் நம்பகத் தன்மையும் இல்லை. நகைப் பறிப்புச் சம்பவம் நரந்த்து அக்டோபர் 10. அடுத்த நாள் (அக்டோபர் 11) காலையே அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் செய்தி பரப்பப்பட்டபோதே ஏதோ நடக்கப்போகிறது என்கிற அச்சம் ஏற்பட்டது. அப்படியே நடக்கவும் செய்த்து.

முர்துஜா ஷேக்கிடம் இருந்த துப்பாக்கி முந்திய நாளில் காட்டுக்குள் தப்பி ஓடும்போது விழுந்து உடைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல்கள் முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. இந்த வழக்கு தொடர்பான இரு முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்றுதான் தரவிரக்கம் செய்யும் நிலையில் உள்ளது என்பது இங்கு நினைவுகூரத் தக்கது. இந்திராவிடமிருந்து செயின் அறுக்கப்பட்ட சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கையைத் தரவிறக்கம் செய்து பார்க்க இயலாதவாறு வைக்கப்பட்டுள்ளதன் காரணமும் விளங்கவில்லை.

மொத்தத்தில் இது ஒரு அப்பட்டமான போலி மோதல் படுகொலை. இது குறித்து வழக்கு விசாரணையை என்கவுண்டர் செய்த காவல்துறையினரிடமே கொடுத்தால் நீதி கிடைக்காது. சி.பி.சி.ஐ.டி. போன்ற வேறு புலனாய்வு முகமை ஒன்றிடம் இந்த விசாரணை ஒப்புவிக்கப்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்பட வேண்டும்.

போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

எந்தப் பிரச்சினையையும் சாதி, மதம், இனம் என்கிற ரீதியில் பார்க்கப்படும் இன்றைய சூழலில் இந்தப் பிரச்சினை அப்படியான ஒரு கோணத்தில் இதுவரை அணுகப்படாதது ஓரளவு ஆறுதலாக இருக்கிறது. இந்நிலை தொடர வேண்டும். எனினும் கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலத்தவர் என்றால் வெறுப்பாகப் பார்க்கும் ஒரு நிலை இங்கு உருவாக்கப் பட்டுள்ளள்ளது வருந்தத் தக்கது. உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டதாகச் சொல்லப்படும் இந்நாளில் எல்லோரும் பல மாநிலங்களிலும், நாடுகளிலும் சென்று படிப்பதும் பணியாற்றுவதும் இயல்பாக உள்ளது. இந்நிலையில் இப்படியாகக் கட்டமைக்கப்படும் அந்நிய வெறுப்பு மிகவும் வருந்தத் தக்க, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. காவல்துறையினரும் அந்தக் கோணத்திலிருந்து வடமாநிலத்தவரை அணுகக் கூடாது. இதே சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் இப்படிக் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து வடமாநிலத்தவரை நம் காவல்துறை சுட்டுக் கொன்றது நினைவிற்குரியது. அப்போதும் அது ஒரு என்கவுண்டர் படுகொலைதான் என்பது இவ்வாறு உண்மை அறிந்து இங்கு வெளிப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலை மாற வேண்டும்.

தமிழகத்தில் புதிய ஆட்சி உருவாகியுள்ள இந்தச் சில மாதங்களில் எதிர்க்கட்சிகளாக உள்ள பா.ஜ.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகியக் கூட்டணிக் கட்சிகள் இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதும் இந்த என்கவுண்டர் படுகொலைக்குப் பின்னணியாக உள்ளது எனவும் கூறலாம். இந்த என்கவுண்டர் நடந்த அடுத்த இரண்டு நாட்களில் தூத்துக்குடியிலும் ஒரு என்கவுண்டர் கொலை நடந்துள்ளதையும் காண்கிறோம். இப்படி அரசியல் நோக்கங்கள் குடிமக்களின் உயிர் பறிப்பிற்குக் காரணமாவது வேதனைக்குரியது. கண்டிக்கத் தக்கது.

“திருப்பெரும்புதூர் என்கவுண்டர் எதிரொலி: வீடுவீடாக அதிரடி வேட்டை; சிக்கப்போகும் வடமாநிலத்தவர்கள்!” எனும் தலைப்புச் செய்தியுடன் இரண்டு நாட்கள் முன்னர் ஜனனி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று (EMIS in India, Industry Reports, Oct 17, 2021 ) ஒன்று வெளிவந்துள்ளது. வடமாநிலத்தவர் வசிக்கும் வீடொன்றில் சோதனை நடைபெறும் படத்துடன் அது வெளியிடப்பட்டுள்ளது. அருகில் வடமாநில இளைஞர்கள் நிற்கின்றனர். இவை எல்லாம் இங்கு வந்து பணிசெய்யும் பிறமொழியினர் மீது வன்முறைகள் பெருகவே வழி வகுக்கும். சில ஆண்டுகள் முன்னர் தமிழகத்தில் இப்படி வடமாநிலத்தவர்கள் சந்தேகத்தின் பேரில் ஆங்காங்கு நம் மக்களால் தாக்கப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த 4 ஆம் தேதி ஓரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் ஊழியர் இருவர் தாக்கப்பட்டு, அதில் ஒருவர் மரணம் அடைந்ததும், இன்னொருவர் உடலில் துப்பாக்கிக் குண்டுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் இப்போது இந்த நகைப் பறிப்புடன் தொடர்புபடுத்தி ஒட்டு மொத்தமாக வடமாநிலத் தொழிலாளர் மீது வெறுப்பு பரப்பப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுதல் அவசியம். ஆனால் இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு “அந்நியர்” எதிர்ப்புக்கு வழிவகுக்கும் வகையில் சொல்லாடல்கள் பரப்பப்படுவது வருந்தத் தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. அரசும் காவல்துறையும், ஊடகங்களும் இதில் கவனமாக இருத்தல் வேண்டும்.

தொடர்பு முகவரி

அ.மார்க்ஸ், 1/33, G2, செல்ல பெருமாள் தெரு, லட்சுமிபுரம், திருவான்மியூர், சென்னை (600041). தொடர்பு : 9444120582

Saturday, May 11, 2013

அ. மார்க்ஸ் போன்றவர்கள் மார்க்சிய - லெனினிய இயக்கத்தை ஒழித்தனரா?


அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்களால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் வளர்க்கப்பட்டதாகவும், அதனால் வட மாவட்டங்களில் மார்க்சிய - லெனினிய இயக்கங்கள் இல்லாமல் போனதாகவும் சிலர் எழுதி வருகின்றனர். இணையத்தில் சில பார்ப்பன நண்பர்கள் இக்கருத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர் என்பது தனிக்கதை.

ஒரு இயக்கம் (அது சாதி அடிப்படையில் இருந்தாலும்) உருவாவதற்கு சமூக காரணிகள் அவசியம். புற, அகச் சூழல் தான் ஒரு இயக்கத்தை வளர்க்கும். மார்க்சியம் படித்து இயக்கம் கண்டதாக கூறுபவர்கள் இவ்வாறு எழுதுவது அபத்தமான ஒன்று. ஒரு சிலரால் ஆழ்ந்த தத்துவ பலம் பொருந்திய ஒரு இயக்கத்தை ஒழித்துக்கட்ட முடியுமென்றால் அந்த இயக்கம் இருந்து என்ன பயன் என்று யோசிக்க வேண்டியுள்ளது.

வன்னியர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தார்கள்.  அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எந்த கட்சியும், அமைப்பும் முன் வரவில்லை. அந்த சமயத்தில் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கம் கண்டு, 1987-ல் இடஒதுக்கீட்டிற்காக அரசை நிலைகுலைய செய்யும் அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தி, அதன் விளைவாக வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது. அதையும் தாண்டி வன்னியர்கள் ஒரு சக்தி என்பதையும் நிரூபித்து அது அவர்களின் அரசியல் அதிகாரத்திற்கும் வழிவகுத்தது. இடஒதுக்கீடு குறித்து மார்க்சிய – லெனினிய இயக்கங்களின் நிலை அன்றைக்கு பார்ப்பனிய சக்திகளின் நிலைப்பாட்டை ஒத்தே இருந்ததை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

சாதிய, தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்ற தலித்துகளின் நியாயமான வேட்கைக்கு யாரும் சரியான தீர்வைச் சொல்லவில்லை. அதற்காக முழு மூச்சில் களம் காணவில்லை. இந்த அதிருப்தி ஒருபுறமிருந்தாலும், அம்பேத்கர் நூற்றாண்டு ஏற்படுத்திய எழுச்சியும் தலித்துகளை விழிப்படைய செய்தது. இதனால், தமிழகத்தில் திருமாவளவன், கிருஷ்ணாசாமி போன்றவர்கள் தலைமையில் தலித் இயக்கம் எழுச்சி கொண்டது. தலித்துகள் குறிப்பாக அரசியல் தளத்தில் விழிப்படைந்தனர். சகல மட்டங்களும் தங்களுக்கான பங்கைக் கோரினர்.

இந்த இரு சமூகங்களும் எழுச்சி கொண்டதன் பின்னணி குறித்தோ அல்லது அதன் தேவை எழுந்த வரலாற்று காரணிகள் பற்றியோ எந்த மார்க்சிய -  லெனினிய இயக்கங்களும் உரிய முக்கியத்துவம் கொடுத்து இதுவரையில் ஆய்வு செய்யவில்லை. ஆனால், இந்த எழுச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.

1984-ல் தோழர் தமிழரசன் மீன்சுருட்டியில் சாதி ஒழிப்பு மாநாடு நடத்தி ஒரு அறிக்கையை முன் வைத்தார். அதில் சாதி ஒழிப்புக்கு முன்னுரிமைக் கொடுத்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். வர்க்கம் – சாதி குறித்து அன்றைய அளவில் ஆழமாக ஆய்வு செய்திருந்தார். அம்பேத்கர் நூல்கள் போதிய அளவில் தமிழில் கிடைக்கப் பெறாத அந்த நாட்களிலேயே அந்த அறிக்கையில் அம்பேத்கர் மேற்கோள்களைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார். இன்று அ.மார்க்ஸ், கல்யாணி மீது பாயும் மார்க்சிய – லெனினிய தோழர்கள் அந்த அறிக்கையை நிராகரித்தோடு, தோழர் தமிழரசன் போன்றவர்களை அப்போது தூற்றினர்.

ரசிய, சீன வீழ்ச்சி, அது உலக அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து மாபெரும் விவாதங்கள் நடந்தன. தமிழகத்திலும் இதுபற்றி நிறைய விவாதங்கள் நடந்தன. குறிப்பாக இன்று எளிதாக குற்றம்சுமத்தப்படும் அ.மார்க்ஸ் நிறைய எழுதினார். அவர் கருத்துக்கள் மீது சூடான விவாதங்கள் நடந்து, அவை எல்லாம் தொகுத்து நூல்களாக வெளியிடப்பட்டன. அரசைக் கைப்பற்றினால் மட்டும் போதாது சிவில் சமூகத்தின் கருத்து மிக மிக அவசியம் என்றெல்லாம் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்களைத் தாண்டி சார்த்தர், கிராம்சி, அல்தூசர் ஆகியோரின் புதிய சிந்தனைப் போக்குகள் வெளிச்சம் பெற்றன. பெரியார் மீதான புதிய வாசிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தச்சூழலில் அடையாள அரசியல் உலகமெங்கும் புத்துயர்ப்பு பெற்றது. அதன் அங்கமாக தமிழகத்திலும் இதுபோன்ற தலித், வன்னியர் அமைப்புகள் முன்னிலைப் பெற்றன.

இதுபற்றி எல்லாம் எந்த தத்துவ விவாதமின்றி மிக எளிதாக ஒரு சிலரைக் குற்றம் சுமத்தி தங்கள் பொறுப்பிலிருந்து கழன்றுக் கொள்ளும் வேலையை மார்க்சிய – லெனினிய தோழர்கள் செய்வது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். எந்த வளர்சிக்கும் பயன் தராது.

உலகைக் குலுக்கிய மார்க்சிய – லெனினியம் – மாவோவியம் இன்று நிறைய சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. இதுகுறித்து மார்க்சிய – லெனினிய தோழர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. அரபு எழுச்சி, வால் ஸ்டிரீட் போராட்டம் ஆகியவை எந்த கட்சி, அமைப்பின் தலைமையிலும், எந்த தத்துவ பின்னணி இன்றியும் நடந்ததை நாம் எப்படி விளங்கிக் கொள்ள போகிறோம். தமிழகத்திலும் மூன்று தமிழர் தூக்குத் தண்டனை, முல்லை - பெரியாறு சிக்கல் துவங்கி இன்றைய மாணவர் எழுச்சி வரை தன்னெழுச்சியாக நடந்ததே? இதன் பின்னணியில் நாங்கள் இருந்தோம் என்று சிலர் சொல்லிக் கொள்ளலாம். அனால், அந்தப் போராட்டங்கள் யார் தலைமை இன்றியும், தத்துவ பின்புலமும் இல்லாமலும்தானே நடந்தது.  உலகம் முழுவதும் ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்று இன்று தமிழகத்தில் ஆயுதப் போராட்டம் என்ற குரல்கூட ஒலிக்கவில்லையே ஏன்?

பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மீது எங்களுக்கு விமர்சனம் இல்லாமல் இல்லை. தமிழகத்தில் பாமக சாதி வெறியை கண்டித்து இயங்குவதில் அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பது உங்கள் கண்ணிற்குப்பட வில்லையா? வரலாற்றில் மார்க்சிய – லெனினிய இயக்கங்கள் கோட்டை விட்டதை மிக எளிதாக ஒரு சிலர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்கப் பார்ப்பது ஆரோக்கியமான அரசியல் இல்லை.

நிலைமை இப்படியிருக்க அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்கள் ஒரு இயக்கத்தை வளர்த்தெடுக்க முடியும், ஒரு இயக்கத்தை ஒழித்துக் கட்ட முடியும் என்பது எவ்வளவு பெரிய “ஜோக்”. "கீற்று" போன்ற இணைய தளங்கள் இதுபோன்ற ஜோக்குகளை நம்பியே இருப்பது அதைவிட ஜோக்கானது.

மார்க்சிய – லெனினிய தோழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணமிது.  

Wednesday, October 24, 2012

இந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

வளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதானது, இன்னும் சிலர் தேடப்படுவது முதலியன குறித்து முகநூல் பக்கங்களில் நடை பெறும் விவாதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கருத்துச் சுதந்திரம், அதன் எல்லை ஆகியன குறித்துக் காலங்காலமாக நடந்து வருகிற ஒரு விவாதத்தின் தொடர்ச்சியே இது. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் கற்பனை செய்து கூடப் பார்த்திராத அளவிற்குத் தொழில் நுட்ப வளர்ச்சியும் அதன் விளைவான கருத்து வெளிப்பாட்டு முறையும் பெரிய அளவு வளர்ந்துள்ள சூழலில் இன்றைய விவாதம் இன்னும் சற்று விரிந்த தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியதாக மாறியுள்ளது.

அச்சு மற்றும் இதழிய வளர்ச்சி என்பது மிகப்பெரிய ஜனநாயக மாற்றங்களில் ஒன்று என்பது யாரும் மறுக்க இயலாத ஒன்று. அதே நேரத்தில் இந்த ‘ஜனநாயக’ ஊடகங்கள் பெரு முதலாளிகளின் பிடியில் இருந்ததன் விளைவாக, இப்படி உருவான கருத்துச் சுதந்திரம் அதன் வெளிப்பாட்டிற்கு முன்னதாகவே ஒரு தணிக்கையை எதிர் கொள்ள வேண்டியதாக இருந்தது. அரசுகளின் கருத்திற்கும் பெரு முதலாளிகளின் கருத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை என்பதால் இந்தத் தணிக்கை மிகவும் சக்தி வாய்ந்ததாக செயல்பட்டு வந்தது. சமயத்தில் இத்துடன் கூடுதலாக அரசுத் தணிக்கையும் சேர்ந்து கொண்டது.

இருபத்தோராம் நூற்றாண்டின் அடையாளமாக முளைத்துள்ள சமூக வலைத் தளங்கள் இந்த முன் தணிக்கையை இன்று சாத்தியமில்லாமல் செய்துள்ளன. இந்த வலைத் தளங்களும் கூட உலகின் மிகப் பெரிய கார்பொரேட் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுபவைதான் என்ற போதிலும் இந்தப் புதிய தொழில் நுட்பம் முன்தணிக்கையைச் சாத்தியமில்லாமல் செய்துள்ளது. இது மிகப் பெரிய கருத்துச் சுதந்திர விகசிப்பிற்கு இன்று காரணமாகியுள்ளது. இதுகாறும் எழுதுவதற்குக் களம் கிடைக்காமற் போயிருந்த பலரும் தங்கள் எழுத்து முயற்சிகளை, அரசியல் வெளிப்பாடுகளை எல்லையற்ற சுதந்திரத்துடன் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய தர வர்க்கத்தின் வளர்ச்சி, இத் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மலிவாகிப் பரவலாதல் என்பதெல்லாம் இந்தக் கருத்து விசாலிப்பில் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளன. இரண்டாண்டுகட்கு முன் அரபுலகில் ஏற்பட்ட புரட்சிகளில் இந்தப் புதிய ஊடகங்கள் வகித்த பங்கைக் கண்டபின்பு அரசுகள் விழித்துக் கொண்டன. இந்த ஊடகங்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளிலும் இவற்றைக் கடும் கண்காணிப்பிற்குள் கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கின. சமூக வலைத் தளங்களைச் செயல்படுத்துகிற கார்பொரேட்டுகள் என்ன இருந்தாலும் கார்பொரேட்கள் தானே. அவை ஒரு குறிப்பிட்ட அளவு எதிர்ப்புக் காட்டியபோதும் ஒரு கட்டத்திற்குப் பின் அரசு கெடுபிடிகளுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்தன.

கூடங்குளம் போராட்டத்தை ஒட்டி இன்று இந்தச் சமூக வலைத் தளங்கள் தமிழகத்தில் கடுமையாகக் கண்காணிக்கப் படுகின்றன. புதிய நபர்கள் யாரேனும் அணு உலைகளுக்கு எதிராக ஒரு பதிவை இட்டால், உடன் அவர்கள் வீட்டிற்கு உளவுத் துறையினர் படை எடுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

சின்மயி விவகாரத்திற்குத் திரும்புவோம். இது தொடர்பான ஷோபாசக்தியின் முக நூல் பதிவு, அதில் தரப்பட்டுள்ள இணைப்புகள், ‘சவுக்கு’ இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கட்டுரை, சின்மயி வெளியிட்டுள்ள அறிக்கை, தொடர்புடைய சில ட்வீட்டர் பதிவுகள், சில தொலைக் காட்சி விவாதங்கள் ஆகியவற்றைக் காண நேரிட்டது. ஓரளவு பொறுப்புடனும் நடு நிலையுடனும் தத்தம் விவாதங்களை எல்லோரும் முன்வைத்துள்ளனர். 

சென்ற தலைமுறையைச் சேர்ந்த திரை உலக ‘செலிப்ரிட்டிகள்’ போல் பிரச்சினைக்குரிய விஷயங்களில் தலையிடுவதைக் கவனமாகத் தவிர்த்து ஒதுங்கியிராமல், இவர் வளர்ந்து வரும்போதே பல பிரச்சினைகளில் தலையிட்டுக் கருத்துச் சொல்லும் ஆர்வமிக்கவராகத் தெரிகிறது. இதுவும் கூட இந்தத் தலைமுறை உருவாகிவரும் சூழலின் விளை பொருளாக இருக்கலாம். எனினும் இவர் முன்வைக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் அவரது உயர் சாதி, உயர் மத்திய தர வர்க்கப் பின்னணியின் எல்லைகுட்பட்டதாகவே இருந்துள்ளது. மதவாதம், இட ஒதுக்கீடு முதலிய பிரச்சினைகளில் அவரது கருத்துக்கள் அடித்தள மற்றும் இடது சாரி மனநிலை உடையோரால் ஏற்க முடியாதவையாகவே இருந்துள்ளன. அந்த வகையில் மீனவர் பிரச்சினையில் அவர் நிலைபாடு என்னவாக இருந்திருக்கும் என்பதையும் நம்மால் ஊகிக்க முடிகிறது.

சவுக்கு இணையத் தளம் சரியாகவே சுட்டிக் காட்டியிருப்பதுபோல சின்மயியை ‘வென்றெடுக்கக்’ களம் இறங்கியவர்களின் நோக்கம் அரசியலாக வெளியில் தோற்றமளித்தாலும், ஒரு செலிப்ரிடி, அதுவும் பெண் செலிப்ரிடியுடனான நெருக்கம் என்பதே அவர்களின் முக்கிய லட்சியமாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் சின்மயா தன் கருத்துக்களில் பிடிவாதமாக இருந்தபோது அவர்கள், வழக்கமாக ஒரு பெண் இப்படியான சந்தர்ப்பங்களில் எப்படி எதிர் கொள்ளப் படுவாளோ, அப்படியே எதிர் கொண்டுள்ளனர். அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ட்வீட்கள் நமக்குக் காணக் கிடைக்கின்றன. சின்மயி சொன்னதாகச் சொல்லப்படும் விவாதத்திற்கு உரிய கருத்துக்களுக்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. சில இட்டுக் கட்டப்பட்டவையாக உள்ளன.

தன் தரப்புக் கருத்தை சின்மயி வெளிப்படுத்திய பின்பாவது அவர்கள் விட்டிருக்கலாம். அல்லது அவரும் அவரது தாயாரும் தொலை பேசி மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் வேண்டிக் கொண்ட போதிலாவது நிறுத்தியிருக்கலாம். அவர்கள் தமது சீண்டல்களைத் தொடர்ந்துள்ளனர். ஆக, சின்மயி தரப்பினர் காவல்துறையை நாடுவதற்கு எதிர்த் தரப்பினர் ஒரு நியாயத்தை வழங்கியுள்ளனர். காவல்துறை படு தீவிரமாகக் களம் இறங்கியதற்குப் பல காரணங்களை ஊகிக்க முடிகிறது. சின்மயியைக் குற்றம் சாட்டுபவர்கள் சொல்வதுபோல அவர் தரப்பில் செய்யப்பட்ட ‘லாபி’, அவரது செலிப்ரிடி அந்தஸ்து, சின்மயியுடன் சேர்த்து முதலமைச்சர் ஜெயலலிதாவையும் ட்வீட்டியவர்கள் அசிங்கமாக எழுதியது…

பொது வெளிக்கு வரக்கூடிய பெண்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் சமூக வலைத் தளங்களில் பங்கேற்கும் பெண்களும் சந்தித்துக் கொண்டிருப்பதை இவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்போர் உணர முடியும். பாதிக்கப்படும் சிலர் இதை வெளிப்படையாகச் சொல்லி விடுகின்றனர். பலர் இதைச் சொல்வதில்லை. வெளிப்படையான பாலியல் வக்கிரங்களோடு துன்புறுத்துவோர், தமது அரசியல் கறார்த் தன்மை அல்லது ‘புரட்சி’த் தன்மையில் ஒளிந்து கொண்டு துன்புறுத்துவோர் என இவர்களில் குறைந்தபட்சம் இரு ரகங்கள் உண்டு. இன்றைய பிரச்சினையில் சின்மயிக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளவர்கள் பெண்களுக்கு எதிரான இந்தச் சூழலைக் கவனத்தில் இருத்தத் தவறக்கூடாது. 

சின்மயிக்கு எதிராக இன்று முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று, அவர் ஆபாச நடனக் காட்சிகளுக்குப் பாட்டிசைக்கவில்லையா? அவர் ஆபாசப் பாடல் வரிகளைப் பாடவில்லையா என்பது. இது மிகவும் மோசமான ஒரு விவாதம். தாம் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டும்போது நமது ஆணாதிக்கக் கலாச்சாரம் வழக்கமாகச் சொல்லும், ”அவள் என்ன யோக்கியம்? அவள் நடத்தை தவறியவள் தானே?” என்கிற எதிர்க் குற்றச் சாட்டுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அவள் மீனவர் பிரச்சினையில் தவறாகப் பேசினாள், விளம்பரத்திற்காகப் புகார் கொடுத்தாள் என்றெல்லாம் சொல்வதும் இத்தகையதே. அவரது தவறான கருத்துக்களை எதிர்த்து நாம் கருத்துப் போராட்டம்தான் செய்திருக்க வேண்டுமே ஒழிய அதற்காக மிரட்டுவது, அசிங்கமாக எழுதுவது என்பதெல்லாம் எப்படிச் சரியாகும்?

முன்தணிக்கை சாத்தியமில்லாத இந்த ஊடகத்தில் பங்கு பெறும் நமக்கு அதிகப் பொறுப்புணர்ச்சி வேண்டும். என்ன வேண்டுமானலும் அவதூறுகளை அள்ளி வீசுவது, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கக்குவது, பெண்களாயின் அவர்களின் ஒழுக்கத்தைப் பொது வெளியில் கேள்விக்குள்ளாக்குவது, இவற்றை எப்படி நியாயப்படுத்த இயலும்?

புகார் கொடுப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரதிற்கு ஆப்பு வைக்கப் படுகிறது என்பது சின்மயி எதிர்ப்பாளர்களின் இன்னொரு விவாதம். ஒரு பெண்ணை இப்படித் தாக்கி அவளை வாய்மூட வைப்பதும். சமூக வலைத் தளத்திலிருந்து ஓடவைப்பதும் மட்டும் கருத்துச் சுதந்திரப் பறிப்பு இல்லையா? சுப்பிரமணிய சாமி ட்வீட்டரில் சோனியாகாந்தியை ‘விஷக் கன்னி’ எனச் சொல்வதை சோனியா தாங்கிக் கொள்ளவில்லையா, பொது வெளிக்கு வந்த நீயும் ஏன் சும்மா இருக்கக் கூடாது? என்பது இன்னொரு விவாதம். ஒரு முழு நேர அரசியல்வாதியைப் பார்த்து ‘விஷக் கன்னி’ அல்லது ‘அமெரிக்க அடிவருடி’ எனச் சொல்வதற்கும் வலைத் தளத்தில் எழுதத் தொடங்கியுள்ள ஒரு பெண்ணைப்பார்த்து, “நீ வேசி” எனச் சொல்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. ஒருவரது நேர்மை குறித்துப் பொய்க் குற்றச் சாட்டுகள் வைப்பது, அவரது அனுமதியின்றி அவரது படங்களை இழிவு செய்யும் நோக்குடன் வெளியிடுவது எல்லாமும் இத்தகையதே. இணையத் தளத்தில் எழுத வந்தவர்களுக்கு அற உணர்வு சார்ந்த சுய தணிக்கை தேவை. அரசியல் கறார்த் தன்மை, கொள்கை உறுதிப்பாடு முதலான எதன் பெயராலும் இந்த அற உணர்வை இழக்கலாகாது.

எள்ளளவும் இது குறித்துக் கவலைப்படாமல் எதை வேண்டுமானலும் எழுதுவது, பின் இதுபோலப் பிரச்சினையை எதிர் கொள்ள நேர்ந்தால் பம்மிப் பின் வாங்குவது என்பது வழக்கமாகிவிட்டது.

சின்மயிக்கு ஒரு வார்த்தை. பொதுக் களத்திற்கு வரும்போது பல மாதிரியானவர்களையும் சந்திக்க நேரும். இன்று இந்தப் பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டுவிட்டது. உங்களைத் துன்புறுத்தியவர்களுக்கு இதுவே போதிய தண்டனை. உங்கள் புகாரை இந்தக் கணத்தில் நீங்கள் திரும்பப் பெறுவது ஒரு நல்ல முடிவாக இருக்கும்.

இந்தப் புகாரின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையில் அவ்வளவாகத் தொடர்பில்லாத சிலரை சின்மயி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தொல்லை செய்வதாக நேற்று காலை ஒரு நண்பர் கூறினார். அது உண்மையாயின் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று இது. ஏற்கனவே பெண்கள் கொடுத்துள்ள 19 புகார்களில் ஒன்றும் நடவடிக்கை இல்லாதபோது, இதில் மட்டும் ஏன் இந்தத் தீவிரம் என்கிற கேள்விக்கே பதிலளிக்க இயலாத காவல்துறை இத்தகைய அத்துமீறல்களை, அவை உண்மையாயின் கைவிட வேண்டும்.

பார்க்க:

1. சின்மயியிடம் சில கேள்விகள்

 2. சின்மயி செய்தது சரியா? – பி.பி.சி. தமிழ்

3. ஷோபா சக்தி

4. ட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன?

5. சின்மயி - சவுக்கு

6. இணையத் தளத் தணிக்கை சரியா? சாத்தியமா? ஒரு குறிப்பு - அ.மார்க்ஸ்

Wednesday, September 19, 2012

அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம் - அ.மார்க்ஸ் கோ.சுகுமாரன்


கோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஒன்பதரை ஆண்டு காலம் கோவை சிறையில் பிணையின்றி அடைக்கப்பட்டு  இறுதியில் குற்றமற்றவர் என சென்ற ஆகஸ்ட் 1, 2007ல் விடுதலையான கேரள ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’த் தலைவர் அப்துல் நாசர் மதானி அவர்கள் மீண்டும் ஆக்ஸ்ட் 17, 2012ல் பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டது ஒரு சிலருக்கு நினைவு இருக்கக்கூடும். கடும் நோய்வாய்ப்பட்டிருக்கும் அவரைப் பிணையின்றி கர்நாடக அரசும் கடந்த மூன்றாண்டுகளாகச் சிறையில் அடைத்துள்ளது. பெங்களூரு பராப்பன அக்ரகாரத்தில் புதிதாகக் கட்டபட்டுள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் இருக்கும் அவரை இன்று (17.09.2012) சந்தித்தோம். எங்கள் இருவரைத் தவிர நகரி பாபையா, ஆர்.ரமேஷ், ஷோயப், முகம்மது காக்கின்ஜே (பெங்களூரு), ரெனி அய்லின், ‘தேஜஸ்’ நாளிதழ் ஆசிரியர் முகமது ஷெரீப் (கேரளா) ஆகியோரும் வந்திருந்தனர்.

கர்நாடகச் சிறைகளில் கைதிகளைப் பார்ப்பதற்கான சடங்குகளும், கெடுபிடிகளும் அதிகம். ஏற்கனவே இருமுறை மைசூர் சிறையில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியைச் சந்தித்த அனுபவம் எங்களுக்கு உண்டு. எல்லாச் சடங்குகளும் முடிந்து சிறையின் முதன்மை வாயிலுள் நுழையும் போது ஒரு கணம் நிறுத்தி நம் கை ஒன்றில் ஒரு முத்திரை பதிப்பார்கள். அனேகமாக வேறெந்த மாநிலச் சிறைகளிலும் இப்படி ஒரு பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த முத்திரையைக்  கைதியைப் பார்த்துவிட்டு வரும் வரையில் நாம் அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். சிறைக்குள் நுழையும் போது போடப்படும் இந்த முத்திரை நமக்கு சோழர் காலத்தில் கட்டாயமாகப் பிடித்து வரப்பட்டு தேவதாசிகள் ஆக்கப்பட்டவர்களுக்கும்,  நாசி சித்திரவதைக் கூடங்களில் யூதர்களுக்கும் இடப்பட்ட முத்திரைகளை நினைவூட்டுவது தவிர்க்க இயலாது.

மைசூர் சிறையைக் காட்டிலும் பராப்பன அக்ரகாரச் சிறையில் கெடுபிடிகள் அதிகம். சிறைகள் நவீனப்படுத்தப்பட படுத்தப்பட கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் (surveillances) அதிகமாகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி, நம்மூர் புழல் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சிறைகள் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள். பராப்பன அக்ரகாரச் சிறையில் கைதிகளைப் பார்ப்பதற்கு முன்பான சடங்குகளை முடிக்க சுமார் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். பரப்பான அக்ரகாரச் சிறையின் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் நமது பேராசிரியர் பாபையாவின் மாணவராக இருந்ததால், சற்றுக் கூடுதல் சலுகை அளிக்கப்பட்டும் கூட, எங்களுக்கும் சடங்குகளை முடிக்க மூன்று மணி நேரமானது. க்யூவில் நின்று மனுக் கொடுத்து நமது இடது பெருவிரல் ரேகை, முகம் அனைத்தையும் நுண்ணிய கேமரா ஒன்றின் முன் அமர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும், நமது தொலைபேசி எண் உட்பட முக்கிய விவரங்களையும் அத்துடன் பதிந்து ‘ப்ரின்ட் அவுட்’ ஒன்றைத் தருவார்கள். இதற்கான இடத்தில் க்யூவில் காத்திருந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதைதைக் கண்டோம். 2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி நமது நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.4 சதம். ஆனால், சிறைச்சாலைகளில் அவர்களின் பங்கு 50 சதத்திற்கும் மேல் என்பது நினைவுக்கு வந்தது. விரல் ரேகை, முகப்பதிவு கொண்ட தாள்களை சிறை வாசலில் கொடுத்து விட்டு மீண்டும் காத்திருந்தால்  வெகு நேரம் கழித்துச் சிறை அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின் நமக்கு அழைப்பு வரும். கண்காணிப்பாளர், பாபையாவின் மாணவர் என்பதால் நாங்கள் சற்று விரைவாக அழைக்கப்பட்டதோடு, கண்காணிப்பாளரின் அறையிலேயே ஒருபுறம் அமர்ந்து சற்று ஆறஅமரப் பேச முடிந்தது.

நாங்கள் உள்ளே நுழைந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் அப்துல் நாசர் மதானியைச் சக்கர நாற்காலியில் தள்ளி வந்தனர். ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன் வீசிய குண்டு வீச்சில் வலது காலை இழந்தவர் மதானி. வழக்கு நடந்துக்கொண்டிருந்த போது குண்டு வீசியவன் வந்து அவாரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளான். அவனை மன்னித்ததோடு அவன் மீதான தனது குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று வழக்கு தள்ளுபடி ஆவதற்குக் காரணமாக இருந்தவர் மதானி.

தூய வெள்ளுடையில் மலர்ந்த முகத்துடன் அருகில் நெருங்கிய மதானியைக் கண்டவுடன் அனைவரும் எழுந்து நின்றோம். துரும்பாய் இளைத்து இருந்தாலும் அவரது கண்களில் ஒளி குன்றவில்லை. ஒவ்வொருவராக அருகில் சென்று அவரது கைகளைப் பற்றி அறிமுகம் செய்துக் கொண்டோம். கண்காணிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்த பாபையா எழுந்தோடி வந்தார். மதானியின் அருகில் வந்தவுடன் அவருடைய கண்கள் கலங்கின. கன்னங்கள் துடித்தன. அப்படியே அவரை மார்புறத் தழுவிக் கொண்டார். பார்த்திருந்த அனைவருக்கும் நெஞ்சு இரும்பாய் கனத்தது. மனித உரிமைப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சிறை அனுபவித்தவர் பேராசிரியர் பாப்பையா.

மார்க்ஸ், சுகுமாரன் என்று நாங்கள் பெயர்களைச் சொன்னவுடன் மதானி உடனடியாக எங்களை நினைவுகூர்ந்தார்.  கோவைச் சிறையில் இருந்த போது சுகுமாரன் அவரைச் சந்தித்துள்ளார். கோவைச் சிறையில் இருந்த அவரை உடல் நலம் கருதி பிணையில் விடுவிக்க வேண்டுமென நாங்கள் முன்னின்று தமிழ் எழுத்தாளர்களிடம் கையொப்பம் பெற்று வெளியிட்ட அறிக்கையை மதானி இருமுறை நினைவுக்கூர்ந்தார். அறிக்கையில் கலைஞரின் மகள் கனிமொழியும் அதில் கையெழுத்திட்டிருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னார். பிரபஞ்சன், சாரு நிவேதிதா, வெளி ரங்கராஜன், சுகிர்த ராணி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.

அடுத்த ஒன்றைரை மணி நேரமும் மெல்லிய குரலில் மதானி பேசிக் கொண்டிருந்தார். மதானி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். சுற்றிலும் நாற்காலிகளை நெருக்கமாகப் போட்டு நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். தற்போது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து மிக விரிவாக சொன்னார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அவர் விரிவாக விளக்கினார். பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேர்களில் 31வது குற்றவாளியாக அவர் இணைக்கப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட முக்கியமானவர்களில் ஓரிருவரை முன்னதாகத் தனக்குத் தெரியும் என்பதைத் தவிர இந்தக் குற்றச் செயலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், இப்படியான ஒரு செயல் நடக்கப்போகிறது என்பது தனக்குத் தெரியாது என்பதையும் விரிவாக விளக்கிச் சொன்னார்.

விசாரணையில் இருக்கும் வழக்கு என்பதால் எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை. எனினும் ஒன்றை மட்டும் இங்கு சொல்லியாக வெண்டும். முக்கிய குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தடியண்டவீடு நசீர் தங்களுடைய சதி குறித்து மதானிக்குத் தெரியுமெனக் கூறியுள்ளதாதாக விசாரணையின் போது மதானியிடம் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளனர். “நசீரை ஒருமுறை என்னிடம் அழைத்து வாருங்கள். உங்கள் முன் நான் அவரைக் கேட்கிறேன்” என மதானி வற்புறுத்தியுள்ளார். தயங்கிய புலனய்வுத்துறையினர் இறுதியாக வேறொரு சிறையில் இருந்த நசீரை முகமூடியிட்டு அழைத்து வந்து நிறுத்தியுள்ளனர். புனாய்வுத்துறையினர் முன்னிலையில் மதானி கேட்ட போது தான் அப்படிச் சொல்லவில்லை என நசீர் பதிலளித்ததோடு, “உங்களை அரசியலில் இருந்து விலகச் சொல்லிப் பலமுறை எச்சரித்தேனே நான்” என்றும் கூறியுள்ளார்.

குற்றமற்ற என்னை ஏன் இப்படித் திரும்பத் திரும்பக் கொடுமைப் படுத்துகிறீர்கள் என மதானி கேட்டபோது விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒரு கணம் அமைதியாய் இருந்தபின் இப்படிச் சொல்லியுள்ளார். “இந்தப் பிறவியில் நீர் ஏதும் குற்றம் செய்யாதிருக்கலாம். போன பிறவியில் செய்திருப்பீர். அந்தப் ‘பூர்வ கர்மா’வின் பலனை இப்போது அனுபவிக்கிறீர்.”
வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டால் கோவை வெடிகுண்டு வழக்கில் அவர் எப்படிக் குற்றமற்றவர் என்று விடுதலைச் செயப்பட்டாரோ அதேபோல் இதிலும் விடுதலை செய்யப்படுவது உறுதி. ஆனால், பராப்பன அக்ரகாரச் சிறை வளாகத்தில் இருந்து செயல்படும் தனிநீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்கத் தயாராக இல்லை.  குற்றம்சட்டப்பட்ட பலரும் வெவ்வேறு சிறைகளில் இருப்பதைக் காரணம் காட்டி விசாரணையை இழுத்தடிக்கிறார்கள்.

அதேநேரத்தில் படிப்படியாக மோசமாகிக் கொண்டிருக்கும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரைப் பிணையில் விடுதலைச் செய்ய அரசும், நீதிமன்றமும் தயாராக இல்லை. கடும் இருதய நோய், முற்றிய நீரிழிவு நோய், நீரிழிவினால் ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பு, முதுகுத்தண்டுத் தேய்வு என்பவற்றோடு, எல்லாவற்றுக்கும் மேலாகப் பெங்களூருச் சிறைவாசம் இன்று அவர் கண் பார்வையைப் பறித்துள்ளது. வலது கண் பார்வை முற்றிலும் பறிபோவிட்டு, இடது கண்ணில் 20 சதப் பார்வைதான் எஞ்சியிருக்கிறது. நீரிழிவுனால் ஏற்பட்ட இந்த பார்வைக் குறைவுக்கு உரிய நேரத்தில் லேசர் சிகிச்சை அளித்திருந்தால இன்று அவர் பார்வை காப்பாற்றப்பட்டிருக்கும். துண்டாடப்பட்டு முழங்காலுக்கு மேல்  எஞ்சியிருக்கும் அவரது வலது காலின் மேல்புறம் உணர்ச்சியற்றுப் போயுள்ளது. உள்ளே கடுமையான வலி. கேரளம் சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்தால் நிச்சயம் பலனிருக்கும் என அவர் நம்புகிறார். ஆனால், கர்நாடக அரசும், நீதிமன்றமும் அனுமதி அளிக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று வேண்டிய போது பெங்களூரிலேயே ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உத்தரவு கிடைத்தது. 70 ஆயிரம் ரூபாய் அளவில் முடிய வேண்டிய சிகிச்சைக்கு அங்குள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவ மனை எட்டரை லட்ச ரூபாய் ‘பில்’ கொடுத்தது ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டுமெனவும், ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை முழு சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த வைத்தியசாலை வலியுறுத்தியும் சிறை அதிகாரிகள் ஒருமுறை கூட அவரைப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை. உள்ளூர் மருத்துவமனை ஒன்றிற்குக் கண் மருத்துவத்திற்காக அனுப்பப்பட்ட போது, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அடுத்த நாள் அவரது வலது கண் பார்வை முற்றிலும் அழிந்து போனது.

இப்படி அவரது உடல் அவயவங்களை ஒவ்வொன்றாகச் சிறை வாழ்க்கை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மிக விரிவாக அவர் சொன்னார். மிக மிகச் சுருக்கமாகவே நாங்கள் இங்குக் குறிப்பிட்டுள்ளோம். கடைசியாக அவர் சொன்னது எங்கள் எல்லோரது கண்களையும் கசிய வைத்தது.

“எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை நோன்பு நாட்களில் குனிந்து தொழவும் என்னால் முடியவில்லை. ஆனால், அல்லாஹ்வின் அருளால்  மன உறுதியை மட்டும் நான் இழக்கவில்லை. என் மனம் தளர்ந்துவிடவில்லை.  உடல் உபாதைகளையும் கூடத் தாங்கிக் கொள்கிறேன். ஆனால் கண் பார்வை இழந்ததைவிடவும் என்னால் தாள முடியாத வேதனையாக இருப்பது எனக்குள்ள மலச் சிக்கல்தான். சாப்பிட்டு இரண்டு நாளானாலும் மலம் கழிவதில்லை. திடீரென இரவு நேரங்களில் என்னை அறியமலேயே மலம் கழிந்துவிடுகிறது. அந்த நேரத்தில் என்னையும் என் படுக்கையும் என்னால் சுத்தம் செய்துக் கொள்ள முடிவதில்லை. இரவு நேரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் அதைச் செய்ய முடியாது. நகர வேண்டுமானால் எனது வலது செயற்கைக் காலைப் பொருத்திக் கொள்ள வேண்டும். தண்ணீரை எடுப்பது, கழுவுவது எதையும் தனியாகச் செய்ய முடியாது. இரவு முழுக்க அப்படியே கிடக்கவும் முடியவில்லை. இந்தக் கொடுமையைதான் என்னால் தாங்க முடியவில்லை.”  

அந்த அறையில் ஒரு கணம் இறுக்கமான அமைதி நிலவியது. நாங்கள் என்ன ஆறுதல் அவருக்குச் சொல்ல முடியும். நேரமாகிவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காகக் கண்காணிப்பாளர்  ஒருமுறை அங்கு வந்து எங்களைப் பார்த்துப் புன்முறுவலித்துச் சென்றார். நாங்கள் புறப்படத் தயாரானோம்.

“நான் ஒன்பதரை ஆண்டுக் காலம் கோவைச் சிறையிலிருந்தேன். சிறையில் இருந்தது என்பதைத் தவிர எனக்கு வேறெந்தப் பிரச்சினையும் இல்லை. அதிகாரிகள் என்னிடம் அக்கறையுடன் நடந்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் என்னிடம் அக்கறையாக நடந்துக் கொணடார்கள். சிறையில் நான் எதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. இங்கே எல்லாம் தலைக்கீழ். என்னுடைய ‘செல்’ அருகில் ஒரு பூனைக்குட்டி இருக்கிறது. அதுவொன்றுதான் இங்கே காசு கேட்பதில்லை. இங்குள்ள ஊடகங்களும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் என்னைப்பற்றி மோசமாக எழுதுகின்றன.”

மெல்லிய குரலில் எல்லாவற்றையும் எளிய ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் மதானி.  நாங்கள் எழுந்து நின்றோம். குனிந்து ஒவ்வொருவராக அவரைத் தழுவிக் கொண்டோம். நகர மன்மின்றி நகரத் தொடங்கிய போது அவர் குரல் எங்களை அழைத்தது “நீங்கள் வந்து சென்றது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் நாளை நடத்த உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லப் போகிறவை எனது சிகிசைக்கும், நான் பிணையில் விடுதலைப் பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை அந்தப் பயன் எனக்குக் கிடைக்காமலும் போகலாம். ஆனால் நீங்கள் வந்ததே எனக்குப் பெரும் பயன்தான். அல்லாஹ்வின் அருளால் நான் விடுதலையாகி வெளியே வந்தால், என்னுடைய எஞ்சிய வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செலவிடுவேன். அவர்களோடு வாழ்ந்து மடிவேன்.”

மதானியின் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’, தலித், முஸ்லிம் ஒற்றுமையை முன்னெடுத்துப் பேசுகிற ஒன்று. அவரது நிறுவனங்களின் மூலம் பெரிய அளவில் தலித்கள் பயனடைகின்றனர்.

நாங்கள் படிகளில் இறங்கிக் கீழுள்ள பேரேட்டில் கையெழுத்திட்டோம். எங்களது செல்போன்களைப் பெற்றுக் கொண்டோம். கையிலுள்ள முத்திரை அடையாளத்தைக் கத்தி பொருத்திய துப்பாக்கியுடன் இருந்த காவலரிடம் காட்டிய பின் கதவு திறந்தது..
ஏதோவொரு கொண்டாட்டத்திற்காக ஒளி அலங்காரம் செய்வதற்கென சீரியல் விளக்குகள் சிறை வாசலில் வந்து இறங்கி இருந்தன. எதற்காக இருக்கும் என நாங்கள் சற்று வியப்புடன் நோக்கிய போது ஒரு மிகப் பெரிய அலங்கரிக்கப்பட்ட ஒரு வண்ண விநாயகர் சிலையை சுமார் 10 கைதி வார்டர்கள் சுமந்து வந்து கொண்டிருந்தனர்.

ஓ! நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி அல்லவா?

Tuesday, August 07, 2012

கடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை


கடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை:

குள்ளஞ்சாவடி முகாம் நிலைமையை விளக்கும் தலைவர்
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு ஈழ அகதிகள் முகாம்கள் மற்றும் புதுச்சேரியை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முகாம் ஆக ஐந்து முகாம்களின் நிலையையும், அங்குள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் ஆய்வு செய்யும் நோக்குடன் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி
3. சத்யா சிவராமன், பத்திரிகையாளர், டெல்லி
4. இரா. பாபு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, கடலூர்
5. சு. காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

டெல்லி பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன், அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், காளிதாஸ் ஆகிய நால்வரும் மூன்று ஈழ அகதிகள் முகாம்களுக்கு  ஆகஸ்ட் 3 அன்று சென்று வந்தோம். புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புத்துப்பட்டு, குள்ளஞ்சாவடிக்கு அருகில் உள்ள அம்பலவாணன்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊர்களில் உள்ள முகாம்கள் இவை. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் 452 குடும்பங்கள் (சுமார் 1500 பேர்கள்) உள்ளன. குள்ளஞ்சாவடியில் 125 குடும்பங்கள் (414 பேர்கள்) உள்ளன. குறிஞ்சிப்பாடியில் 167 குடும்பங்கள் (530 பேர்கள்) உள்ளன.

எங்கள் அமைப்புகள் சார்பாக ஈழ அகதிகள் முகாம்களுக்கு நாங்கள் சென்று வருவது இது நான்காவது முறை. இம்முறை எங்களுடன் குழுவில் பங்கேற்ற சத்யா சிவராமன் உலக அளவில் அகதிகள் பிரச்சினையில் அக்கறை உள்ளவர். பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு இன மக்களுக்கான முகாம்களுக்கும் சென்று வந்தவர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த முகாம்கள் நான்கு. மற்ற இரண்டும் விருதாசலத்திலும் காட்டுமன்னார்குடியிலும் உள்ளன. இவை இரண்டிற்கும் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் எங்கள் குழுவைச் சேர்ந்த கடலூர் பாபு சென்று வந்தார். விருத்தாசலம் முகாமில் 65 குடும்பங்கள் (239 பேர்கள்) உள்ளன. காட்டுமன்னார்குடியில் 74 குடும்பங்கள் (246 பேர்கள்) உள்ளன.

தமிழக அளவிலுள்ள ஈழ அகதிகள் முகாம்களின் நிலைமை, இங்குள்ள மக்களின் அவல நிலை ஆகியன குறித்து எங்களின் முந்தைய அறிக்கைகளில் விரிவாகப் பேசியுள்ளோம். தி.மு.க, அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளில் ஈழ அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை முதலியன அதிகரிக்கப்பட்டதன் பின்னணியில் எங்களின் அறிக்கைகளுக்கும் ஒரு பங்குண்டு.

அகதிகள் முகாம் நிலைமைகளைத் திருத்துவதற்கான கோரிக்கைகள் குறைந்தபட்சம் மூன்று மட்டங்களில் வைக்கப்பட வேண்டும். இந்திய அளவில், தமிழக அளவில் மற்றும் மாவட்ட அளவில் இக்கோரிக்கைகள் அமைகின்றன. இவை தவிர குறிப்பான அந்த கிராம அளவிலும் கூட கோரிக்கைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக தேசிய அளவில் ஒரு அகதிகள் கொள்கையை (National Policy on Refugees) உருவாக்குதல், ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை நாம் மத்திய அரசை நோக்கி வைக்க வேண்டும். உதவித் தொகைகளை உயர்த்துதல், இடஒதுக்கீடு அளித்தல் ஆகியவற்றிற்கு நாம் மாநில அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். உதவிகளை வினியோகிப்பதில் உள்ள குறைபாடுகள் முதலானவற்றிற்கு மாவட்ட நிர்வாகத்தை அணுகவேண்டும்.

மைய அரசை நோக்கி வைக்கிற கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன. அகதி உரிமைகளை அங்கீகரிப்பதில் மைய அரசு இம்மியும் முன்னே நகரவில்லை. ஈழ அகதிகளுக்கு மாநில அளவில் அளிக்கும் உதவிகள் முதலானவற்றை முந்திய அரசும் இந்த அரசும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாநில அரசு அளிக்கும் உதவித் தொகையை ஈழ அகதிகளுக்கும் நீட்டித்து ஜெயலலிதா அரசு ஆணை வழங்கியுள்ளது. உயர் கல்வியில் இடஒதுக்கீடு குறித்தும் இப்போது ஒரு ஆணை இடப்பட்டுள்ளது. இவை வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்க முடியாது.

ஆனால் இவை யாவும் யானைப் பசிக்குச் சோளப் பொறி போடுவது போலத்தான் என்பதை எங்களின் முந்தைய அறிக்கைகளைப் படிப்போர் விளங்கிக் கொள்ளலாம். பத்தடிக்குப் பத்தடி (10’*10’) என்கிற அளவில் தார்ப்பாய்க் கூரைகளுடன் அமைத்துத் தரப்பட்ட வீடுகள் இன்று தகர அல்லது ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுடன் காட்சியளிக்கின்றன. வெயில் நேரத்தில் ஐந்து நிமிடங்கள் கூட உள்ளே யாரும் இருக்க இயலாது. ஆனால்  இவற்றில்தான் இந்த ஏதிலியர் கடந்த பல ஆண்டுகளாக வசிக்கின்றனர்.

பாதுகாப்பற்ற வீட்டில் ஈழத்தமிழ் மூதாட்டி
100 சதுர அடியில் ஒரு குடும்பம் வசிப்பது என்பது சாத்தியமில்லை என்பதால் ஒவ்வொரு குடும்பமும் சொந்தச் செலவில் தங்கள் வீட்டைச் சற்று முன்னே பின்னே இழுத்துக் கட்டியுள்ளனர். தீ விபத்து, சுனாமி, தாணே புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு கூரைகளை இவ்வீடுகள் இழந்தபோது அரசு புதிய கூரைகளை வழங்கியுள்ளது. அரசு கட்டிக் கொடுத்த 100 சதுர அடிக்கு மட்டுமே இக்கூரைகள் வழங்கப்பட்டுள்ளன. நீட்டிக் கட்டிய பகுதிகள் கூரை இல்லமலும், அல்லது கீற்றுக்கள், தார்பாலின்கள் ஆகியவற்றால் மூடப்பட்டும் கிடக்கின்றன.

ஆஃபர் (OFFER), அட்ரா (ADRA), ஜே.ஆர்.எஸ் (JRS) முதலான தொண்டு நிறுவனங்கள் சில முகம்களில் கூரை வேய்வதற்கு உதவியுள்ளன. காட்டுமன்னார்குடியில் மட்டும் தொண்டு நிறுவன உதவிகளுடன் 100 சதுர அடிக்கு கான்கிரீட் கூரை போடப்பட்டுள்ளது. குள்ளஞ்சாவடி முகாமைத் தத்து எடுத்துள்ள ஜூனியர் விகடன் இதழ் குழந்தைகளுக்கான பாலவாடியைக் கட்டிக் கொடுத்துள்ளது. மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் செலுத்தப் போகிறார்களாம். இப்படிப் பத்திரிகைகள், வங்கிகள், அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் முதலியன தமிழகத்தில் உள்ள 110 முகாம்களையும் தத்து எடுத்துக் கொண்டால் கூட ஓரளவு நிலைமை சீராகும் எனத் தோன்றியது.

பயன்படாத கழிவறைகள்
சென்ற முறை நாங்கள் சென்று வந்தபோது பார்த்ததை விட இம்முறை ஓரளவு தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கழிப்பறைகள் பல உடைந்தும் தண்ணீர் இல்லாமலும் காட்சி அளிக்கின்றன. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் உள்ள பால்வாடியில் இருக்கும் குழந்தைகள் சுற்றியுள்ள திறந்த வெளியைத்தான் கழிப்பறையாகப் பயன்படுத்துகிறார்கள். குடிநீர் வசதியும் இல்லை.

பால்வாடி அருகில் திறந்த வெளியில் சுடுகாடு
குடும்பத் தலைவருக்கு மாதம் 1000 ரூபாயும், அடுத்துள்ள பெரியவர்களுக்குத் தலா 750 ரூபாயும், பன்னிரண்டு வயதுக்கு உட்பட்டோருக்குத் தலா 400 ரூபாயும் தற்போது வழங்கப்படுகிறது. குள்ளஞ்சாவடி முகாமில் கடந்த சில மாதங்களாக இருபது தேதிக்கு மேல்தான் இந்தத் தொகை வழங்கப்படுகிறதாம். இது குறித்துப் புகார் செய்தபோது போதிய அலுவலர்கள் இல்லாததே தாமதத்திற்குக் காரணம் எனப் பதில் வந்துள்ளது. இப்படியான ஒரு தாமதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதில் ஏற்படுமா? ஏற்பட்டால் எத்தகைய எதிர்வினைகள் ஏற்படும்? ஆனால் இந்த ஏதிலியர்கள் தமது உரிமைகளுக்காக எந்தத் தீவிர எதிர்வினைகளையும் காட்ட இயலாது. அவர்களால் முடிந்தது மேலதிகாரிகளிடம் முறையிடுவது மட்டுமே. அப்படிப் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை.

நான்கு மாதங்களாக முதியோர், விதவைத் தொகை கிடைக்கவில்லை என புகார்
குள்ளஞ்சாவடி மற்றும் குறிஞ்சிப்பாடி முகாம்களில் இன்னொரு பரிதாபமான நிலையையும் கண்டோம். முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை முதலானவை கடந்த மூன்று மாதங்களாகக் கொடுக்கப்படவில்லையாம். குள்ளஞ்சாவடி முகாமில் மட்டும் சுமார் 38 பேர்கள் இப்படிப் பாதிக்கப்பட்டுள்ளனர். “போய்க் கேட்டால் கந்தோர் கந்தோராக அலைய வைக்கிறார்கள். எங்களைப் போன்ற கிழவிகளுக்குக் கடனும் யாரும் தரமாட்டாங்க. நாங்க எப்டி அய்யா சாப்பிடறது?” என்று புலம்பினார் ஒரு மூதாட்டி.

இந்த முகாம்கள் தொடங்கப்பட்டபோது போடப்பட்ட மின் இணைப்புகள் புதுப்பிக்கப்படவே இல்லை. முறையாகக் கம்பம் நட்டு மின் கம்பிகள் வழியாக மின்சாரம் வீடுகளுக்கு வினியோகிக்கப்படாமல் வெறுமனே கம்பங்கள் இல்லாமல் ஒயர்கள் மூலம் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை குறிஞ்சிப்பாடியில் பார்த்தோம். தாணே புயலுக்குப் பின் தார்பாய்களும், கூரைகளும் அகற்றப்பட்டு தகரக் கூரைகள் போடப்பட்டுள்ளன. இதில் மின் கசிவு ஏற்பட்டால் என்ன ஆகும் என்பது குறித்த கவலையை மக்கள் வெளிப்படுத்தினர்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு முகாமும் ஒரு கிராமம் அளவு மக்கள் தொகையைக் கொண்ட போதிலும் முறையான சாலை வசதிகள் எந்த முகாம்களிலும் கிடையாது. கழிவு நீர் வெளியேறும் வசதியும் கிடையாது. குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி முதலிய முகாம்கள் சரியான களிமண் தரையில் அமைந்துள்ளன. மழைக்காலத்தில் உள்ளே நடக்க இயலாது. அதேபோல பல இடங்களில் முகாம்களை ஒட்டித் தனியார் சாகுபடி நிலங்கள் அமைந்துள்ளன. இது பாதுகாப்பின்மைக்கும் பாம்பு முதலியன முகாம்களுக்குள் வருவதற்கும் காரணமாகிறது.

கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் இருந்த சுடுகாட்டுப் பிரச்சினை குறித்துச் சென்ற அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். தற்போது அது ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள அந்த முகாமில் இறக்கும் கிறிஸ்தவர்களைப் புதைக்க அங்குள்ள பாதிரியார் தங்களுக்கான கல்லறைத் தோட்டத்தில் இடம் தருகிறாராம். மற்றவர்களைப் புதைக்க குழந்தைகள் பயிலும் பால்வாடிக்கருகில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு மத்தியில் இப்படியான ஒரு சிறு இடத்தை ஒதுக்க நமது அதிகாரிகளுக்கு எப்படித்தான் மனம் வந்ததெனத் தெரியவில்லை. சிறிய இடமாகையால் குழி தோண்டும்போது பழைய உடல்களின் சிதைந்த எலும்புகளை அப்புறப்படுத்திவிட்டுத்தான் புதைக்க வேண்டியுள்ளதாம்.

முந்தைய அறிக்கைகளில் நாங்கள் குறிப்பிட்டிருந்த ஒரு முக்கிய பிரச்சினை இன்னும் தொடர்கிறது. முப்பதாண்டுகளாக முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் சில இப்போது இரண்டு குடும்பங்களாகியுள்ளன. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் மட்டும் இவ்வாறு 125 புதிய குடும்பங்கள் உருவாகியுள்ளன. இவர்களுக்கு வீடுகள் இல்லை. வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், இந்த தாலுக்காவிலேயே இடம் கிடையாது, நீங்களே ஏதாவது இடம் பார்த்துச் சொல்லுங்கள் என்கிறார்களாம். அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற பதிலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எந்த அடிப்படையில் இந்த ஏதிலியர் புதிய இடத்தைக் தேடிக் கண்டுபிடிக்க இயலும்? உரிய ஆவணங்களைக் கையில் வைத்துள்ள  வருவாய்த் துறையின் பொறுப்பு அது, நமது கிராமங்களில் இந்த ஏதிலி மக்களுக்கு அளிக்க இடமே இல்லை என்பது எத்தனை பெரிய பொய்?

இன்னொரு புதிய பிரச்சினையும் தற்போது எழுந்துள்ளது. போர் முடிந்ததனால் முகாம்களில் உள்ளவர்கள் திரும்பிப் போக ஐ.நா. அகதிகள் ஆணையம் சில உதவிகளைச் செய்கிறது. விமான டிக்கட், சிறு உதவித் தொகை முதலியவற்றைத் தருகிறார்கள். மிகச் சில குடும்பங்கள் அவ்வாறு போயுள்ளன. இந்த முகாம் வாழ்வைக் காட்டிலும் அங்கே நிலமை மோசம் என்பதால் பெரிய அளவில் யாரும் போவதில்லை. ஒரு சில குடும்பங்களில் குடும்பத் தலைவர் அல்லது யாரேனும் ஒருவர் நிலைமையைப் பார்த்து வருவதற்கோ, விட்டுச் சென்ற வீடு முதலியவற்றின் கதி என்னாயிற்று என்று பார்ப்பதற்கோ நாடு திரும்புகின்றனர். போர்ச் சூழலில் முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள் இவர்கள். திரும்பிச் செல்ல பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமானால். இங்கே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அகதிகள் அட்டையிலிருந்து அவர்களின் பெயரை நீக்குவதை ஒரு விதியாக வைத்துள்ளது இந்திய அரசு. இப்படிச் சென்றவர்கள் வேலை முடிந்த பின்போ, அல்லது அங்கு இருக்க முடியாமலோ, அல்லது இங்கே படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்ப்பதற்கோ திரும்பி வந்தால் அவர்களுக்கு மீண்டும் அகதி அட்டையில் இடம் கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் அகதி உரிமைகள், உதவித் தொகைகள் எல்லாம் ரத்தாவதை விடப் பெரிய கொடுமை என்னவெனில் அவர்களை முகாம்களில் உள்ள தம் குடும்பத்தோடு வாழ்வதற்கும் நமது ‘கியூ’ பிரிவு போலீசார் அனுமதிப்பதில்லை. குள்ளஞ்சாவடியில் உள்ள இப்படியான குடும்பங்களைச் சேர்ந்த சில பெண்கள் பரிதாபகரமாக இது குறித்து முறையிட்டனர்.

ஒரே ஒரு அம்சத்தில் மட்டுமே கொஞ்சம் முன்னேற்றத்தைக் காண முடிந்தது. ‘கியூ’ பிரிவுப் போலீசின் கண்காணிப்பும் கெடுபிடிகளும் கொஞ்சம் குறைந்துள்ளன. போர் முடிந்துள்ளது இதற்கொரு காரணம். ஆனால் அதே காரணத்தை முன்வைத்துச் செங்கல்பட்டுச் சிறப்பு முகாமை மட்டும் கலைப்பதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. முகாம்களை விட்டு வெளியே செல்லும்போது அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து விட்டுப் போனால் போதும் என்கிற நிலையே தற்போது நிலவுகிறது. ஆனாலும் பிரதமர் போன்ற முக்கிய தலைவர்கள் அருகிலுள்ள ஊர்களுக்கு வரும்போது அந்த நாட்களில் யாரும் முகாமை விட்டு வெளியே செல்ல வேண்டாமென ‘கியூ’ பிரிவுப் போலீஸ் வந்து எச்சரித்துச் செல்வது தொடர்கிறது.

வேறென்ன பிரச்சினை என்று கேட்ட பொழுது குறிஞ்சிப்பாடி முகாம் தலைவர் குணரட்ணம் சிரித்துக் கொண்டே சொன்னார்: “எங்கள் இளைஞர்களுக்குத்தான் இந்த வாழ்க்கை பெரிய பிரச்சினையாக உள்ளது. வயதானவர்கள் எப்படியோ இந்த வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆகி விட்டார்கள். குறைந்தபட்சம் குடியுரிமை கூட இல்லாமல் இங்கே வாழ்வதை இளைஞர்கள் வெறுக்கிறார்கள். வெளி நாட்டில் மூன்றாண்டுகளில் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை கொடுக்கிறார்கள். ஆஸ்திரேலியா போகலாம் என்கிற ஆசை வார்த்தைகளில் மயங்கி எங்கள் இளைஞர்கள் நிறையப் பணத்தையும் இழந்து பிடிபடவும் செய்கிறார்கள்” என்றார்.

எங்களை மிகவும் உறுத்திய விஷயம் என்னவெனில் நாங்கள் சென்று பார்த்த அத்தனை முகாம்களிலும் அவ்வளவு பேர்களும் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, இந்திய அரசு நன்றாக வைத்துள்ளது என்று சொன்னதுதான். ஆனால் ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்கவும், பார்க்கப் பார்க்கவும்தான் எத்தனை அவல வாழ்வை அவர்கள் வாழ்கிறார்க்ள் என்பது நமக்குத் தெரிகிறது. முன்னால் இருந்த தார்ப்பாய்க் கூரையை விட தற்போதுள்ள தகரக் கூரையை அவர்கள் பெரிதென நம்பும் மனநிலையில் உள்ளனர். என்ன இருந்தாலும் நாம் அகதிகள். எந்த உரிமையும் இல்லாதவர்கள். நமக்கு இதுவே அதிகம் என்பது போன்ற மன நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

ஒரு வேளை பிரச்சினை இல்லாமலிருந்து நீங்கள் உங்கள் ஊரிலேயே இருந்திருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கலாம் என நினைக்கிறீர்களா என்று கீழ்ப்புத்துப்பட்டு முகாமிலிருந்த வீரேந்திராவைக் கேட்டார் சத்யா. அதற்கான பதில் எதையும் வீரேந்திராவால் முறையாகச் சொல்ல இயலவில்லை. இப்படியான ஒரு hypothetical question-ஐ அவர் எதிர் கொள்ளத் தயாராக இல்லாததை நாங்கள் புரிந்து கொண்டோம்.

அகதி வாழ்வை அனுபவிக்கும் அவலம் நேராதிருந்தால் இவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டே நாங்கள் கீழ்ப்புத்துப்பட்டு முகாமை விட்டு நகரத் தொடங்கியபோது, ஒரு பெண் ஓடி வந்து அவசரமாக எங்களை வீட்டுக்குள் அழைத்தார். எட்டிப் பார்த்தோம். கட்டிலில் படுத்த படுக்கையாய் ‘கோமா’ நிலையில் கிடந்தார் ஒருவர். அவர் விஜயசேகரன், 43 வயது. எட்டு மாதத்திற்கு முன் ஒரு நாள் மாலையில் கடைக்குச் சென்றபோது இரு சக்கர வாகனம் ஒன்று மோதித் தலையில் அடிபட்டு வீழ்ந்துள்ளார். கோமா நிலைக்குச் சென்றுவிட்ட அவரை மருத்துவமனையிலிருந்து கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

ஆஃபர் தொண்டு நிறுவனம் ஒரு கட்டிலையும் மெத்தையையும் வாங்கித் தந்துள்ளது. அவரைக் கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ராஜேஸ்வரியும் வேலைக்குப் போவதில்லை. ஆக இப்போது வீட்டில் இருவருக்கு வேலை இல்லை. 16 வயது மகன் விஜயராஜைக் கூலி வேலைக்கு அனுப்புகிறார் ராஜேஸ்வரி. விஜயராஜ் கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் கொஞ்சக் காசு + அரசு அக்குடும்பத்துக்கு அளிக்கும் 2500 ரூபாய், இதை வைத்துக் கொண்டுதான்  ராஜேஸ்வரி, கோமாவில் கிடக்கும் கணவருக்கு வைத்தியம் செய்தாக வேண்டும், எல்லோரும் சாப்பிட்டாக வேண்டும். கண்களில் நீர் வழிய ஒரு பையிலிருந்த காகிதங்களைக் கொட்டி, உதவிக்காக அவர் யார் யாருக்கோ எழுதிய கடிதங்களை அள்ளி எங்கள் முன் காட்டினார். அகதி வாழ்வின் கொடுமை இதுதான். மோதிவிட்டுப் போனவரிடமும் நீதி கேட்க முடியாது. மருத்துவமனையில் வைத்துச் சிகிச்சை அளிக்க வேன்டும் என வற்புறுத்தவும் முடியாது.

கோரிக்கைகள்:

  1.   அரசு அளிக்கும் மாதாந்திர உதவித் தொகைகள் மற்றும் விதவைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகள் ஒவ்வொரு மாதமும் சரியான தேதிகளில் வினியோகிக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடலூர் மாவட்டத்தில் இப்பிரச்சினை அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி முகாம்களில் உள்ள இக்குறை உடனடியாகப் போக்கப்பட வேண்டும். கடலூர் மாவட்ட ஆட்சியர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 2.   அகதி முகாம்களில் அளிக்கப்படும் மாதாந்திர ரேஷன் அரிசியின் தரம் மோசமாக உள்ளது என்கிற புகாரையும் மக்கள் முன்வைத்தனர். குறிப்பாக விருதாசலம் முகாமில் இக்குறைபாடு உள்ளது. மாவட்ட நிர்வாகம் இக்குறையைப் போக்க ஆவன செய்ய வேண்டும்.

 3.   புதிதாக உருவாகியுள்ள குடும்பங்களுக்கு உடனடியாக வீடு கட்ட இடம் ஒதுக்க வேண்டும். எல்லா முகாம்களிலும் இப்பிரச்சினை உள்ளது. குறிப்பாகக் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ்ப் புத்துப்பட்டு முகாமில் இவ்வாறு 125 குடும்பங்கள் கண்டறியப்பட்டும் அவர்களுக்கு வீடு கொடுக்கப்படவில்லை. நீங்களே இடம் பார்த்துச் சொல்லுங்கள் என வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்வது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியாளர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தற்போதுள்ள முகாம்களுக்கு அருகிலேயே இவர்களுக்குப் புதிய குடியிருப்பு மனைகளையும் கட்டுமானப் பொருள்களையும் அளிக்க வேண்டும்.

 4.   பால்வாடிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பதோடு பிள்ளைகள் விளையாடுவதற்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள்  முதலானவற்றையும் அளிக்க வேண்டும்.

 5.   கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் சடலங்களைப் புதைப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள இடுகாட்டின் பரப்பு அதிகரிக்கப்படுவதோடு அந்த இடம் சுத்தமாக்கப்பட்டுச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட வேண்டும்.

 6.   குள்ளஞ்சாவடி முகாம் தனியார் கரும்புத் தோட்டம் ஒன்றை ஒட்டி அமைந்துள்ளது. காம்பவுண்ட் சுவர் ஒன்று அங்கு உடனடித் தேவையாக உள்ளது. எல்லா முகாம்களுக்கும் காம்பவுண்ட் சுவர் கட்டித் தருவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். காட்டுமன்னார்குடி முகாமுக்கென கட்டப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டியை உள்ளடக்கிக் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட வேண்டும்.

 7.   எல்லா முகாம்களிலும் உள்ள பழைய மின் இணைப்புகள் நீக்கப்பட்டு, முறையாக மின் கம்பங்கள் நட்டு மின்சார இணைப்பை வழங்க வேண்டும். மின் கசிவால் பெரிய விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இப்பணி மேற்கொள்ளப்படுதல் அவசியம்.

 8.   முகாம்களுக்குள் கான்க்ரீட் நடைபாதைகள், கழிவு நீர் வெளியேற்று வசதிகள் ஆகியவை செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாகக் குள்ளஞ்சாவடி மற்றும் குறிஞ்சிப்பாடி முகாம்களில் இது உடனடித் தேவையாக உள்ளது.

 9.   போர் முடிந்ததை ஒட்டி நாடு திரும்புபவர்களுக்கு அளிக்கப்படும் உதவிகள் மாவட்டந்தோறும் ஒரே சீராக இல்லை என்கிற குறையையும் காட்டுமன்னர்குடி முகாமில் தெரிவித்தனர். இந்தக் குறைகள் சீராக்கப்பட வேன்டும். நாடு திரும்பியவர்கள், அங்கிருக்க இயலாமல் மீண்டும் இங்கு வர நேரும்போது அவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டு மீண்டும் அவர்களுக்கு அகதி அட்டைகளை வழங்கி அவர்கள் தம் குடும்பத்துடன் வாழ வழிசெய்ய வேண்டும். குள்ளஞ்சாவடி முகாமில் அவ்வாறு திரும்பி வந்த சிலர் ‘கியூ” பிரிவு போலிசாரால் குற்றவாளிகள்போல நடத்தப்பட்டு அவர்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காவல்துறை இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை நிறுத்த வேண்டும்.

 10.  கீழ்ப்புதுப்பட்டு முகாமில் 47ம் குடியிருப்பில் வசிக்கும் விஜயசேகர் விபத்தொன்றின் விளைவாக இன்று கோமா நிலையில் உள்ளார். அவரைக் கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிய இரக்கமற்ற செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து உரிய மருத்துவ உதவி அளிக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

11.  விபத்துக்களால் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு 100 சதுர அடிக்கு மட்டுமே கூரைகள் தருவது என்கிற நிலையைக் கைவிட்டு அவர்களின் முழு வீட்டிற்கும் கூரை வேய மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும். உடைந்துபோன கழிப்பறைகள் முதலியன சீர்திருத்தப்படுதல் வேண்டும்.

நாங்கள் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல மாவட்ட அளவில் நடவடிக்கை மேற்கொண்டு சீர்திருத்தப்படக் கூடிய கோரிக்கைகளை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளோம். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் இக்குறைபாடுகளை உடனடியாக நீக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

Sunday, November 07, 2010

பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை கள ஆய்வறிக்கை வெளியீடு - வீடியோ!



அயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் 02.11.2010, மாலை 4.00 மணியளவில், சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்த நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கையை வெளியிட்டனர். இதுகுறித்து த.மு.மு.க. வெளியிட்டுள்ள வீடியோ காட்சி.

Wednesday, November 03, 2010

பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கை!

கோ.சுகுமாரன் - பேரா. அ. மார்க்ஸ்
அயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் இன்று (02.11.2010), மாலை 4.00 மணியளவில், சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்த நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கையை வெளியிட்டனர்.

படங்கள்: கோ. சுகுமாரன்.

இடைக்கால அறிக்கை:

யுகல் கிஷோர் சரண் சாஸ்திரி
சென்ற அக்டோபர் 27, 28, 29, 30, 31 ஆகிய நாட்களில் லக்னோ, பைசாபாத், அயோத்தி ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்ற நாங்கள் பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினையில் முக்கிய வழக்காடிகளான (Litigants) அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ஃபரியாப் ஜிலானி (சுன்னி வக்ப் வாரியம்), உயிருடன் உள்ள மூத்த மனுதாரான முகமது அஷிம் அன்சாரி, ராம ஜென்ம பூமி நியாசின் தலைவர்களில் ஒருவரும், அயோத்தி முன்னாள் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ் வேதாந்தி, நிர்மோகி அகாராவின் மகந்த் பாஸ்கரதாஸ், விசுவ இந்துப் பரிசத் அயோத்தி தலைமையகத்தில் உள்ள கரசேவபுரம் அலுவலகத்தின் பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாய, பிரச்சினைக்குரிய பகுதியில் இருக்கும் நிலையை (Status Quo) மேற்பார்வை இடுவதற்கென உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் காலிக் அகமது, அயோத்தியில் உள்ள சரயுகுன்ஜ் ராம் ஜானகி மந்திரின் மகந்த்தும், ‘அயோத்தியில் பன்மைக் கலாச்சாராத்திற்கான அமைப்பு’ பொறுப்பாளருமான யுகல் கிஷோர் சரண் சாஸ்திரி, பைசாபாத் நகர பத்திரிகையாளர்களான கே.கே.பாண்டே (ஈ டிவி), பன்பீர் சிங் (ஆஜ்தக் டிவி), சுமன் குப்தா, பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததா எனக் கண்டறிய அகழ்வாய்வு செய்யவதற்காக உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போது அதை மேற்பார்வை இடுவதற்காக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர் அசோக் கே. மிஸ்ரா (வரலாற்றுத் துறைத் தலைவர், ராம் மனோகர் லோகியா பல்கலைக்கழகம், பைசாபாத்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ, லிபரேஷன்) உ.பி. மாநில தலைமையகச் செயலர் அருண் குமார், அகில இந்திய முற்போக்கு மகளிர் கழகத் தேசிய துணைத் தலைவரும், ‘டெகிரி-ஏ-மிஸ்வான்’ என்கிற அமைப்பின் பொறுப்பாளருமான தாஹிரா ஹாசன் மற்றும் பல இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசி பதிவு செய்துக் கொண்டோம்.

சரயுகுன்ஜ் ராம் ஜானகி மந்திர்
 
முள்வேளியிட்டு, பாதுகாப்புடன் பாபர் மசூதி இருந்த இடம்

முள்வேளியிட்டு, பாதுகாப்புடன் பாபர் மசூதி இருந்த இடம்

அயோத்தி நகரம், கரசேவபுரம், ராமர் கோயிலுக்கான தூண்கள் முதலிய கட்டுமானங்களை உருவாக்கி வைத்திருக்கும் வி.இ.ப. அலுவலகம், பெரும் பாதுகாப்புடன் அரசு கையகப்படுத்தி, இரட்டை முள்வேளியிட்டு மத்திய போலீஸ் பாதுகாப்பில் வைத்துள்ள 71.3 ஏக்கர் நிலம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இன்று உருவாக்கி வழிபாடு நடத்தப்படும் ராம் லல்லாவின் தற்காலிக கோயில் முதலிய பிரச்சினைக்குரிய பகுதிகளை நேரடியாகச் சென்றுப் பார்த்தோம்.

சட்டத்தின் ஆட்சி, அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான ஆளுகை, சமூக ஒற்றுமை, பன்மைத்துவம் காப்பாற்றப்படுதல் ஆகிய அடிப்படையான நோக்கங்களுடன் இந்த ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். இப்பிரச்சினையில் சுமூகமான தீர்வு ஏற்படுதல், நீதி நிலை நாட்டப்படுதல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட எமது ஆய்வின் சுருக்கமான (Interim Report) முடிவுகள் பின் வருமாறு. விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும்.

சட்ட அடிப்படைகளைப் புறந்தள்ளி இந்து மத நம்பிக்கை ஒன்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பென்ச் தீர்ப்பு சட்ட வல்லுநர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் கடும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது. முரண்பாடுகள் மிகுந்த ஒரு அகழ்வாய்வை நீதிமன்றம் பெரிய அளவில் சார்ந்திருந்ததும் வரலாற்று அறிஞர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாபர் மசூதி இருந்த இடம் பிரித்துக் கொடுக்கப்பட ஆணையிடப்பட்டுள்ள மூன்று மனுதாரர்களும் (ராம் லல்லாவின் நெருங்கிய நண்பர், சுன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்துக் கொண்டிருப்பதை மூன்று தரப்பினருமே எம்மிடம் தெரிவித்தனர்.

அஷிம் அன்சாரி
இன்னொரு பக்கம் முஸ்லிம் தரப்பு மூத்த மனுதாரரான அஷிம் அன்சாரிக்கும், நிர்மோகி அகாராவின் பாஸ்கர தாசுக்கும் இடையில் நீதிமன்றத்திற்கு அப்பால் சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. ஜோதிர் மட சங்கராச்சாரியான ஸ்வருபானந்த சரசுவதிக்கும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கும் இடையில் இதே நோக்கில் பேச்சுவார்த்தை நடந்துக் கோண்டிருப்பதாக இரு நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவிற்குள்ளேயே பாபரின் பெயரில் இன்னொரு மசூதியை அனுமதிக்க மாட்டோம் என்கிறது ராம் ஜென்ம பூமி நியாஸ். அஷிம் அன்சாரி பாபர் மசூதி இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தாலும் கூட அப்படி விட்டுக் கொடுக்கும் அதிகாரம் வக்ப் வாரியம் உட்பட யாருக்குமே கிடையாது என முஸ்லிம் சட்ட வாரியத்தினர் கூறுகின்றனர்.

முகமது அஷிம் அனசரியுடன் நாங்கள்...
தீர்ப்பு முஸ்லிம்களுக்கு நீதியை மறுத்துள்ள போதிலும் அவர்கள் தரப்பில் காட்டப்படுகிற பொறுமையை அனைவரும் பாராட்டி உள்ளனர். அதே நேரத்தில் இந்த இறுக்கமான அமைதி சட்டத்தின் ஆட்சி, அரசியல் சட்ட ஆளுகை ஆகியவற்றில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்ததன் அறிகுறிதான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் பின்னணியிலேயே எங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முஸ்லிம் தரப்பினரின் கருத்துக்கள்:

ஸ்ஃபரியாப் ஜிலானி
பொதுவாக முஸ்லிம்களில் எல்லா தரப்பிலும் பெருத்த ஏமாற்றம் நிலவுவதை நாங்கள் கண்டோம். சட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழக்கைப் பரிசீலிக்கும் எனவும், அந்த அடிப்படையில் தங்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் ஸ்ஃபரியாப் ஜிலானி மற்றும் காலிக் அகமது ஆகியோர் கூறினர். இடையில் அஷிம் அன்சாரியின் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் வருமாயின் அதை ஏற்க தமக்கு தடையில்லை எனவும் காலிக் அகமது கூறினார்.



காலிக் அகமது
பேச்சுவார்த்தையில் முனோக்கி நகர்ச்சி இல்லையாயினும் அது நடந்து கொண்டிருப்பதாகவும், 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிபந்தனையின் காரணமாக அதற்கான வேலைகளுக்குத் தான் ஒப்புதல் அளித்து மனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அஷிம் அன்சரி கூறினார். முஸ்லிம்களுக்குள் இரு கருத்து கிடையாது எனவும், எப்படியும் பாபர் மசூதி இருந்த இடத்தில் மசூதி கட்டித் தர வேண்டும் என்ற ஒரே கருத்துதான் உள்ளது எனவும், இரு கருத்துக்கள் உள்ளன என்பது ஊடகங்கள் கட்டுகிற கதை என்றும் ஜிலானி கூறினார். சுன்னி வக்ப் வாரியத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அஷிம் அன்சாரி கையெழுத்திட்டுள்ளதாகவும் காலிக் அகமது கூறினார்.

வழக்கறிஞர் ஸ்ஃபரியாப் ஜிலானியுடன் நாங்கள்...
வழக்கறிஞர் காலிக் அகமதுவுடன் நாங்கள்...


தாஹிரா ஹாசன்
இப்பிரச்சினை எப்படியாவது முடிந்தால் நல்லது என ஏற்கனவே பாதிக்கப்பட்ட அயோத்தி முஸ்லிம்களிடம் கருத்துள்ளதையும் காண முடிந்தது. லக்னோவிலிருந்து முஸ்லிம் பெண்கள் மத்தியில் பணிபுரியும் தாஹிரா ஹாசன் உ.பி. முஸ்லிம்கள் பெரும்பாலோர் கடும் வறுமையிலும், சுரண்டலிலும் உழல்வதைச் சுட்டிக்காட்டினார். பீடி சுற்றுவது, எம்பிராய்டரி செய்வது ஆகிய தொழில்களில் நாளொன்றுக்கு இருபது ரூபாய் வருமானம் கூட இல்லையெனவும், இவர்களுக்கு பாபர் மசூதி எல்லாம் பிரச்சினை இல்லை எனவும் குறிப்பிட்டார். எனினும், பாபர் மசூதி இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தால், அது தவறான முன்னுதாரணமாகி விடாதா, தொடர்ந்து காசி, மதுரா இன்னும் பல இடங்களில் இந்துத்துவவாதிகள் இதுபோன்ற பிரச்சினை உருவாக்க மட்டார்களா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. உண்மைதான், உயிர் வாழும் உரிமையும், சட்டத்தின் ஆட்சி என்பதில் நம்பிக்கையும் இல்லாது போனால், பின் வாழ்வதில் அர்த்தம் என்ன என்றார் தாஹிரா. பொதுவாக முஸ்லிம்களிடம் சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவற்றில் கருத்தொருமிப்பு இருந்தது.

இன்றளவும் அயோத்தியில் உள்ள நூற்றுக்கணக்கான ராமர் கோயில்களில் வழிபாடு செய்வதற்குரிய பூ முதலிய பொருட்களை முஸ்லிம்களே கொடுத்து வருவதையும் நாங்கள் கண்டோம். தீர்ப்பு நாளன்று அச்சத்தின் காரணமாக அயோத்தி முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு, மூன்று நாட்கள் கழித்துதான் ஊர் திரும்பியுள்ளனர். வக்ப் சொத்தை வாரியமே விரும்பினாலும்கூட மாற்றி அமைக்கவோ, யாருக்கும் கையளிக்கவோ முடியாது என்பதை முஸ்லிம் தலைவர்கள் சிலர் சுட்டிக்காட்டிய போதும், பொதுவான முஸ்லிம் மனநிலை தங்களது சட்டபூர்வமான உரிமையை நிலைநாட்டுவதும், மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியையே நிர்மாணிப்பதும் என்கிற அளவிலேயே உள்ளது. தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வருமானால் மசூதிக்கு அருகாமையில் ராமர் கோயில் கட்டுவதற்கு இடம் அளிக்கும் மனநிலை அவர்களிடம் உள்ளதைக் கண்டோம்.

இந்து தரப்பினரின் கருத்து:

மகந்த் பாஸ்கரதாஸ்
இந்து தரப்பினர் என்பது பொதுவான இந்து மக்களைக் குறிப்பதல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறோம். பொதுவான இந்துக்கள் மத்தியில் சமூக ஒற்றுமை, மசூதி, கோயில் இரண்டையும் கட்டிக் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், இதை அரசியலாக்கி முன்னெடுக்க கூடியவர்கள் மிகவும் தீவிரமான கருத்துகள் உள்ளவர்களாக உள்ளது எங்களுக்கு கவலை அளித்தது. டிசம்பர் 6, 1992-ல் மசூதியுடன் கூடவே உடைக்கப்பட்ட ராம் சபுத்ராவில் அனுபவ பாத்தியதை (Possession) உள்ள நிர்மோகி அகராவின் மகந்த் பாஸ்கரதாஸ் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் மட்டுமே கட்டியாக வேண்டுமெனவும், அரசு கையகப்படுத்தியுள்ள 71.3 ஏக்கருக்கு அப்பால் வேண்டுமானால் முஸ்லிம்கள் மசூதியைக் கட்டிக் கொள்ளலாம் எனவும், அதற்கு தாமே நிலம் தருவதாகவும் கூறினார். 400 ஆண்டுக் காலம் தொழுகை நடந்த இடத்தை எந்த அடிப்படையில் அவர்களுக்கு மறுப்பது என நாங்கள் கேட்ட போது 1939 முதல் அங்கு தொழுகையே நடக்கவில்லை என்றார் பாஸ்கரதாஸ். ஆனால், 1949 டிசம்பர் 22 வரை அங்கே தொழுகை நடந்துள்ளதை உ.பி. மாநில அரசு ஏற்று உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், பாஸ்கரதாஸ் அயோத்திக்குள் முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் விசுவ இந்து பரிசத், ராம ஜென்ம பூமி நியாஸ் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விசுவ இந்து பரிசத், ராம ஜென்ம பூமி நியாஸ் ஆகியன நிர்மோகி அகாரவிற்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் கொடுக்க ஆணையிடப்படுள்ளது தவறு எனச் சொல்கிறார்களே என நாங்கள் கேட்ட போது, “மொத்த நிலமும் எங்களுக்குச் சொந்தம், வி.இ.ப. உள்ளிட்டவர்களுக்கு இதில் எந்தவித சட்ட உரிமையும் கிடையாது. இந்துக்களின் பெயரால் அரசியல் செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் அளித்தது. விசுவ இந்துப் பரிசத் முதலியன வெளியில் இருந்து வந்து இங்குப் பிரச்சினை செய்கிறார்கள். அவர்கள் மட்டும் தலையிடாவிட்டால், எப்போதோ பிரச்சினை தீர்ந்திருக்கும். தீர்ப்பைப் பொறுத்தவரையில் நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு, எல்லாவற்றையும் எங்களுக்கே தந்திருக்க வேண்டும்” என்றார்.

நிர்மோகி அகாரா மகந்த் பாஸ்கரதசுடன் நாங்கள்...

பைசாபாத் நிர்மோகி அகாரா தலைமையகம்


மகேந்திர உபாத்யாய
திகம்பர அகாராவில் மகந்த் சுரேஷ் தாஸ் ஊரில் இல்லை எனவும் வேறு யாருடனும் நாங்கள் பேச இயலாது என்றும் கூறிவிட்டனர். வி.இ.ப. காரியாலயத்தின் பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாயா யார் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் கவலை இல்லை. மிகப் பெரிய ராமர் கோயிலை மட்டுமே அங்கே கட்ட வேண்டும். வேறு எதையும் கட்ட அனுமதிக்க மட்டோம் என்றார்.

மகேந்திர உபாத்யாயாவுடன் நாங்கள்...

ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமாணங்கள்...

ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமாணங்கள்...

ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமாணங்கள்...

வேதாந்தி
ராம ஜென்ம பூமி நியாசின் முக்கிய பொறுப்பாளரான ராம் விலாஸ் வேதாந்தி வாரணாசியில் இருந்ததினால் அவருடன் தொலைபேசியில் மட்டுமே உரையாட முடிந்தது. ராம் விலாஸ் வேதாந்தி கூறியதிலிருந்து: “அயோத்தியில் மட்டுமல்ல, இந்தியாவில் பாபரின் பெயரால் எந்த மசூதியும் கட்டவிட மட்டோம். அயோத்திக்குள் மசூதி கட்ட வேண்டுமானால், அயோத்தியின் கலாச்சார எல்லையைத் தாண்டித்தான் இருக்க வேண்டும். அதாவது 12 யோஜனை நீளம், 3 யோஜனை அகலத்திற்குள் எந்த மசூதி கட்டவும் அனுமதிக்கமாட்டோம்.(1 யோஜனை = 9 கி.மீ.). வேண்டுமானால், அவர்கள் மீர்பாகியின் கல்லறைக்குப் பக்கத்தில் மசூதியைக் கட்டிக் கொள்ளட்டும். (கல்லறை அயோத்தியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சாஹின்வா கிராமத்தில் உள்ளது). அதுவும் கூட பாபரின் பெயரல் இருக்கக் கூடாது. மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது உண்மையென்றால், தாங்கள் விட்டுக் கொடுத்துவிடுவதாக முஸ்லிம்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். இப்போது நீதிமன்றம் கோயில் இருந்ததை உறுதி செய்துள்ளது. அவர்கள் விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்.”

நிர்மோகி அகாரா உங்களுக்கு இதில் உரிமை இல்லை எனக் கூறுகிறதே என நாங்கள் கேட்ட போது, 1 கோடியே 81 லட்சத்து 66 ஆயிரத்து 65 ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பிறந்தார். இந்த நிர்மோகி அகாரா 400 ஆண்டுகளுக்கு முன் உருவானது. இவர்கள் யார் ராம ஜென்ம பூமிக்கு உரிமைக் கொண்டாடுவது என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி ராம ஜென்ம பூமி எனச் சொல்லப்படுகிற இடம் ராம் ல்ல்லாவிற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தாலும் நீங்கள் அங்கு கோயில் கட்ட முடியாதே எனக் கேட்டதற்கு, “நிர்மோகி அகாரா, அஷிம் அன்சாரி இருவருக்கும் ஜென்ம பூமிக்கு வெளியே தான் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட எந்த இடம் எனத் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ராம் லல்லாவிற்கு மட்டும் தான் தெளிவாக வரையறுக்கப்பட்டு 130 x 90 அடி கொடுக்கப்பட்டுள்ளது. திருலோகி நாத் தான் ராம் லல்லாவிற்காக வழக்குத் தொடுத்தவர். அவர் இப்போது உயிரோடு இல்லை. ராம் லல்லாவின் கார்டியனாக இப்போது நியமிக்கப்பட்டுள்ள தேவகி நந்தன் அகர்வால் எங்களுக்காக வழக்காடுகிறார். நியாசும், பரிசத்தும் இதில் ஒரு வாதியாக இல்லையாயினும் திருலோகி நாத்திற்கோ அல்லது தேவகி நந்தனுக்கோ கொடுப்பது எங்களுக்குக் கொடுப்பதுதான். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.

ஒரு வேளை உச்சநீதிமன்றத் தீர்ப்பு நம்பிக்கை அடிப்படையில் இல்லாமல் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என நாங்கள் கேட்ட போது, “உச்சநீதிமன்றத்திற்கு வேறு எந்தத் தேர்வுமே கிடையாது. எங்களுக்குத்தான் கொடுத்தாக வேண்டும். ஒரு வேளை தீர்ப்பு எதிராகப் போனால், இந்த நாடு வகுப்பு வன்முறையால் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த நாட்டில் சமூக ஒற்றுமை நிலவ வேண்டும் என உச்சநீதிமன்றம் விரும்புமானால், இந்துக்களுக்கு சார்பாகவே அது தீர்ப்பளிக்க வேண்டும். மொத்த நிலத்தையும் இந்துக்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்” எனக் கூறி முடித்துக் கொண்டார்.

ராமரை வழிபட பூசைப் பொருட்கள் விற்கப்படும் கடைகள்...


சர்ச்சைகுரிய இடத்தில் ராமரை வழிபட செல்லும் பஜனைக் கோஷ்டி


இதர தரப்பினர் கருத்து:

அருண்குமார்
அரசியல் கட்சி ஒன்றின் ஊழியரான அருண் குமார் பேசும்போது அயோதிக்குள்ளேயே மசூதியை அனுமதிக்க இயலாது எனப் பேசுபவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்ட அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமென்றார். உள்ளூர் பத்திரிகையாளர் சிலரிடம் பேசிய போது, மசூதியை அரசு கையகப்படுத்தி உள்ள 71.3 ஏக்கருக்கு அப்பால் மசூதி கட்டிக் கொள்ள அஷிம் அன்சாரி பாஸ்கரதாசிடம் ஒத்துக் கொண்டுள்ளார் எனவும், அப்படி செய்வதுதான் சரியென்றும் கூறினர். ஆனால், இது அடிப்படை நீதியை மறுப்பதாகாதா, தொடர்ந்து இதேபோல் பிரச்சினைகள் பிற இடங்களில் எழுந்தால் என்ன செய்வது. 71.3 ஏக்கர் நிலத்திற்கு அப்பாலும் கூட மசூதி கட்ட கூடாது என பரிசத்தும், நியாசும் கூறுகிறதே என்று கேட்ட போது, அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தனர்.

பத்திரிகையாளர்கள் பன்பீர் சிங், கே.கே.பாண்டே...

பேராசிரியர் ஏ.கே.மிஸ்ரா...

எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஏ.கே.மிஸ்ரா, மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என ஆணித்தரமாக கூறினார். எனினும், அகழ்வாய்வுகளின் அடிப்படை நியதிகள் மீறப்பட்டுள்ளதாக சூரஜ்பன், டி.என்.ஜா முதலிய வரலாற்று அறிஞர்கள் கூறியது பற்றிக் கேட்டபோது அவர் சற்றுக் கோபமானார். “அகழ்வாய்வுத் துறையே முன்னின்று இதைச் செய்திருந்தால் நியதிகள் பின்பற்றப்பட்டிருக்கும். நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் செய்யும் போது நியதிகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை” என்றார். தோண்டிய இடத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக சுண்ணாம்பால் கட்டப்பட்ட கட்டுமானங்கள், மிருக எலும்புகள் ஆகியன கிடைத்துள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் கொள்ளவில்லை என்றும், இந்த தரவுகளை நீங்கள் ஏன் பாதுகாத்து வைக்கவில்லை எனவும் நாங்கள் கேட்ட போது, “எலும்புகளைக் பாதுகாத்து வைக்க சில முறைகள் உண்டு. ஆனால், இந்த துலுக்கப் பசங்க (Muslim Fellows) எலும்புகளை அப்படி வைக்கக் கூடாது, வெறும் பாலித்தின் உறையில் வைத்தால் போதும் என முட்டாள்தனமாக சொன்னார்கள். அதனால், அவைகள் எல்லாம் பொடித்து அழிந்துவிட்டன” என அலட்சியமாகக் கூறினார். இப்படியான மனநிலையுடன் கூடிய வரலாற்று அறிஞர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் எப்படி இருக்கும் என்பதையும், இந்த ஆய்வை நீதிமன்றம் முழுமையாக சார்ந்திருந்தது என்பதையும் நினைத்த போது எங்களுக்கு கவலையாக இருந்தது.

எமது பார்வைகளும், முடிவுகளும்:

சுமூகமான தீர்வும், சூழலும் ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவாகவே உள்ளது. பொதுமக்கள் மத்தியில் இத்தகைய கருத்து இருந்த போதும், விசுவ இந்துப் பரிசத்தும், ராம் ஜென்ம பூமி நியாசும் இதற்கு முற்றிலும் எதிராகவே உள்ளன. தீர்ப்பு எங்களுக்கு சாதமாக வராவிட்டால் இந்த நாட்டையே மத வன்முறையால் அழித்துவிடுவோம் என வேதாந்தி போன்றவர்கள் பகிரங்கமாக உச்சநீதிமன்றத்தை மிரட்டுவது இந்த நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயகத்தையும், அரசியல் சட்ட ஆளுகையையும் மிகப் பெரிய கேள்விக்குள்ளாக்குகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிராக வந்தால் ஏற்க முடியாது, இந்த நாட்டையே அழிப்போம் என ஒரு சாரார் கூறும் போது, நீதிமன்றத்திடம் பொறுப்பை கைக்கழுவி விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் நினைக்கும் போது வேதனை மட்டுமல்ல, கோபமும் ஏற்படுகிறது. லக்னோ, பைசாபாத், அயோத்தி உள்ளிட்ட அவாத் பகுதி முழுமையிலும் கடும் ஏழ்மையும், உழைப்புச் சுரண்டலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்துக்கள், முஸ்லிம்கள் இரு தரப்பிலும் எளிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரம் பீடி சுற்றினால் வெறும் 10 ரூபாய் மட்டுமே கூலி. எல்லா நகரங்களிலும் சைக்கிள் ரிக்க்ஷாக்களே அதிகமாக உள்ளன. சென்னையில் ஒரு ஆட்டோ 50 ரூபாய் கூலி கேட்கும் தொலைவை லக்னோவிலும், பைசாபாத்திலும் வெறும் 15 ரூபாய் கொடுத்து ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவில் கடக்க முடியும். இத்தகைய கடும் சுரண்டல் மத அடிப்படையிலான கருத்தியல்களால் மூடி மறைக்கப்படுகிறது. நாங்கள் சந்தித்த இடதுசாரித் தோழர் ஒருவர் பெரியார் ஈ.வே.ரா. என்றொருவர் வடநாட்டில் பிறக்காமல் போனதின் விளைவு இது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக ஒற்றுமையையும் அதே சமயத்தில் சட்டத்தின் அடிப்படையிலான நீதியையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, கீழ்க்கண்ட வழிமுறைகளே உடனடித் தேவை என நாங்கள் கருதுகிறோம்.

1) நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு எதிராக வந்தால் இந்த நாட்டையே மத வன்முறையால் அழித்துவிடுவோம் என வெளிப்படையாகப் பேசுகிற சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களைத் தனிமைப்படுத்த ஜனநாயகத்திலும், மதசார்பின்மையிலும் நம்பிக்கை உள்ள அரசியல் கட்சிகளும், அறிவுஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

2) இந்திய அளவில் முக்கியமான அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், வரலாற்று அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் முதலான  பேச்சுவார்த்தைக் குழு (Interlocutors) ஒன்றை அரசு உருவாக்கி சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்கை எடுக்க வேண்டும். பேச வர மறுப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

3) சட்டப்படியும், நிலவும் மரபுகளின்படியும் 400 ஆண்டுக் காலமாக தொழுகை நடத்தப்பட்ட மசூதியின் உள் மற்றும் வெளிப் பிரகாரங்கள் உள்ளிட்ட எல்லா நிலத்தையும் முஸ்லிம்களுக்கே அளிப்பதுதான் சரியானது. எனினும், நிலவுகிற சூழல்கள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியையே நிறுவுவது. ஏற்கனவே ராம் சபுத்ரா உள்ளிட்ட பகுதியில் ராமர் கோயில் ஒன்றை நிறுவுவது, அரசுக் கையகப்படுத்தியுள்ள மிகுதியான இடங்களில் சமூக பன்மைத்துவத்தை ஏற்கும் அருங்காட்சியகம், நூலகம், மருத்துவனை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை உருவாக்குவது என்பதே சரியாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். . இப்படியான ஒரு முடிவு ஏற்கனவே சுன்னி வக்ப் வாரிய தரப்பிலேயே கூறப்பட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.

4) பச்சை ஏமாற்றாலும், வன்முறையாலும் மசூதியை இடித்து வைக்கப்பட்ட ராமர் சிலைகளையும், தற்காலிக கோயிலையும் ஒரு புனிதத் தலமாக இன்று மாற்றப்பட்டுள்ளதும் இதற்கு அரசே துணைபோகியுள்ளதும் வருத்தமளிக்கிறது. மகாத்மா காந்தி போன்ற உண்மையான ராம பக்தர்கள் இன்று இருந்திருந்தால் இந்த நிலையைக் கண்டித்திருப்பார்கள். முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் மாதவ் கோட்போல் மேற்கூறிய இதே காரணங்களைச் சொல்லி ராம் லல்லாவை வணங்க மறுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதை அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்து மதத் தலைவர்கள் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்.

5) நீதிமன்றத்திடம் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு அரசியல் கட்சிகள் ஒதுங்கிக் கொள்ளாமல், வகுப்பு வெறியர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டுகிற பணியில் அவை ஈடுபட வேண்டுமென குறிப்பாக மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி மற்றும் அடித்தள சமூகங்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு இப் பொது வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம்.

தொடர்புக்கு:

People’s Union for Human Rights (PUHR), Tamilnadu.
Federation for People’s Rights (FPR), Puducherry.

Contact: 3/5, First Cross Street, Sasthri Nagar, Adayar, Chennai – 600 020.

Cell: 9444120582, 9894054640.

E-Mail: professormarx@gmail.com, ko.sugumaran@gmail.com