Monday, November 23, 2015

மழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்

கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து வந்தேன். மழைக்கு இதுவரையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். பல இடங்களில் வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல், மண் குவியலுக்குள் வாழ்ந்த குடும்பங்களின் வாழ்க்கைச் சுவடுகள் மூழ்கிப் போயிருந்த துயரத்தைக் காண முடிந்தது. நெய்வேலி அருகேயுள்ள பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 10 பேர் பலியாகி உள்ளனர். நாங்கள் சென்ற போது லட்சுமி என்ற பெண்ணின் உடல் கிடைத்தது. ஓடைக் கரையோரம் வீடுகளில் குடியிருந்ததால் வெள்ளம் மிக எளிதாக இவர்களை அள்ளிச் சென்றுள்ளது. இடிந்த வீட்டின் முன்பு தாய் தன் பிள்ளைகளின் சான்றிதழ்களைக் காய வைத்த காட்சி மனதை வாட்டியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீரை வெளியேற்றியதாலும் கடும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்து மண் மேடாக காட்சியளிக்கின்றன. அந்நிலங்களைத் திருத்தி மீண்டும் விவசாயம் செய்ய நீண்ட காலமாகும். சொந்த நாட்டிலேயே மக்கள் பள்ளிக்கூடங்களில் அகதிகளாக உள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சியினர், சில தொண்டு நிறுவனத்தினர் சற்று ஆறுதல் தரும்படி நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். தமிழக அரசும் இயன்றளவு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இவை அனைத்தும் அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவாது. நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்த முந்திரிக்காட்டு மக்கள் வரிசையாக நின்று, தட்டு ஏந்தி உணவு வாங்கிச் சென்று உண்ட காட்சி துயரத்தின் உச்சம். நாம் மழையை சபிக்க முடியாது. அது இயற்கையின் வரம். ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் ஆளுகின்ற, ஆண்ட அரசுகளை நினைத்தால் கடும் கோபம் வருகிறது. எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமலும், நீர் ஓட வேண்டிய வாய்க்கால், ஓடை, இயற்கைத் நீர்த்தேக்கங்களான குட்டை, குளம், ஏரி ஆகியற்றை இல்லாமல் செய்ததும் என அரசின் திட்டமிட்ட இயற்கை அழிப்பே இந்த பேரிடருக்குக் காரணம். இதை வைத்துக் கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அரங்கேற்றும் அரசியல் ஆபாசத்தின் உச்சம் எனலாம். இந்நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த தாக்குதல் குறித்த அந்நாட்டு கட்சிகள், ஊடகங்களின் அனுகுமுறையை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு நாகரீகமாக அதை எதிர்க் கொண்டார்கள். தமிழகம் இன்னும் சீரழியும் நிலை வருமோ என அஞ்சுகிறேன்.

புகைப்படம்: இயக்குநர் தங்கர்பச்சான்


Monday, January 26, 2015

தங்கர்பச்சான் தாய் இறப்பு: ஒரு கிராமத்தின் சாவு அது!

என் அன்பு நண்பர் இயக்குநர், ஒளிஓவியர் தங்கரபச்சானின் தாயார் இலட்சுமி அம்மாள் இறப்புக்குச் சென்று வந்தோம், நான், ஜெகன்நாதன், பிரேம்ராஜ், கடலூர் பாபு ஆகியோர் சென்றிருந்தோம். கடலூர் மாவட்டம், பண்ரூட்டி அருகே நடுவீரப்பட்டு என்ற ஊருக்குப் பக்கத்து ஊர் பத்திரக்கோட்டை கிராமம். மிகவும் பின்தங்கிய பகுதி, பண்ரூட்டி இராமச்சந்திரன் அமைச்சராக இருந்த போது இப்பகுதிகளுக்குச சாலைப் போட்டு, பேருந்து இயக்கியுள்ளார். 'அழகி' திரைப்படம் வெளியான போது தங்கர்பச்சான் பாராட்டு விழாவிற்குச் சென்ற போது அவரது தாயரை பார்த்தேன். ஒரு நல்ல கிராமத்து அழகிய பாட்டி அவர். அதன்பின் அந்த ஊருக்குச் செல்ல வாய்ப்பில்லாமல் போனது. தற்போது அவரது உயிரற்ற உடலைக் காணச் செல்ல வேண்டியதாகிவிட்டது. உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு வந்து, தங்கர்பச்சான் இருக்கைக்கு அருகில் அமர்ந்தோம். என்னை அவரது அண்ணன்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு நெருக்கமானவர்களிடம் என்னைப் பற்றிக் கூறிய வண்ணம் இருந்தார். அவர் என் மீது வைத்திருக்கும் அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு அது. அவர்களது மிகப்பெரிய பூர்வ வீடு இடிக்கப்பட்டு பக்கத்தில் புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வூரில் இவர்களைப் பெரியவீட்டுக்காரர்கள் என்று அழைப்பார்கள். ஒரு சிறிய கூரை வீட்டில் அவரது தாயார் இறுதிக் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்துள்ளார். 'பூர்வீக வீடு இடிக்கப்பட்டது அம்மாவுக்கு மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கு. எட்டு பிள்ளைகளும் இங்குதான் பிறந்தோம். ஐந்து நாட்களாக அம்மாவுடன் இருந்தேன். அவர் மூச்சுவிடும் வரை இருந்தேன். அவர் இல்லாமல் தனித்து விடப்பட்டது போல் உணர்றேன். என்ன சொல்றதுன்னு தெரியல' என்று தன் தாங்க முடியாத சோகத்தைப் பகிர்ந்துக் கொண்டார். அப்போது தாரை, தப்பட்டை, மேளம் முழங்கிட, பட்டாசு வெடிச்சத்தம், அதிர்வேட்டு கேட்டிட ஆண்களும், பெண்களுமாக ஒரு பெரும் கூட்டம் தலையில் அரிசி சிப்பம், கையில் ஆளுயர பூ மாலைகள், சீர் வரிசைகள் சகிதமாக வந்தது. வந்தவர்கள் உடலுக்கு மாலைகளை அணிவித்து துக்கத்தைப் பகிர்ந்துக் கொண்டனர். வந்த பெண்கள் அங்கிருந்த பெண்களோடு அமர்ந்து கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து அழுது தீர்த்தனர். கிராமத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் காட்சி இது.'அம்மாவின் சொந்த ஊரான சிலம்பநாதன்பேட்டை உறவுக்கார ஜனங்க. இதுபோல 184 ஊரில இருந்து உறவுக்காரக் குடும்பங்கள் வரனும். சாவு எடுக்க சாயந்தரம் 6 மணிக்கு மேலாகும்' என்றார் தங்கர்பச்சான். மக்கள் வரிசை வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினர். தங்கர்பச்சானுக்கு வேண்டிய முக்கிய பிரமுகர்களும் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். ஒருபுறம் பட்டாசு, வேட்டு என கலைக்கட்டியது சாவு. 'இரவு வந்த மச்சான் ஒருத்தன் பட்டாசு வெடிக்காதேன்னு சொன்னதற்கு கோவிச்சுக்கிட்டுப் போயிட்டான், பேசி சமாதானப்படுத்தி கூட்டிக்கிட்டு வர வேண்டியதா போச்சு' என்றார் தங்கர்பச்சான். 91 வயது வரை வாழ்ந்த தாயின் சாவிற்கு செம்மண் படிந்த, தலைக்காய்ந்த சாதாரண மக்கள் முதல் பல தரப்பினரும் வந்து துக்கத்தில் பங்கேற்றது நெகிழ்ச்சியாக இருந்தது. அழுதவர்கள் உண்மையாக அழுதார்கள். கிராமமே திரண்டு சாவு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு உயிரோட்டமான சாவின் இறுதி நிகழ்வைக் காண முடிந்தது. முன்னொரு காலத்தில் முந்திரிக்காட்டு தீவிர அரசியல் அரசையும், காவல்துறையையும் கலங்கடித்தது தனித்த வரலாறு. ஒரு வீரஞ்செரிந்த வரலாற்றுக்குச் சொந்தமான முந்திரிக்காட்டு எளிய மக்களின் வாழ்வைக் கண்டுவந்த திருப்தியோடு ஊர் திரும்பினேன்.