Showing posts with label மதவெறி எதிர்ப்பு. Show all posts
Showing posts with label மதவெறி எதிர்ப்பு. Show all posts

Friday, September 17, 2010

சென்னையில் "இந்தியாவும் மதசார்பின்மையும் - கருத்தரங்கம்"


மதசார்பற்றோர் மாமன்றம் மற்றும் பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையம் இணைந்து 18.09.2010 சனியன்று, மாலை 4.30 மணியளவில், சென்னை லயோலா கல்லூரியிலுள்ள லாரன்ஸ் சுந்தரம் அரங்கில் "இந்தியாவும் மரசார்பின்மையும் - கருத்தரங்கம்" நடைபெற உள்ளது.

மதசார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவுநர் வீரபாண்டியன் வரவேற்புரையும், இணைப்புரையும் ஆற்றுகிறார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமைத் தாங்குகிறார்.

'உலகப் பார்வையில் இந்திய மதசார்பின்மை' என்ற தலைப்பில் பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மைய செயல் இயக்குநரும், லயோலா கல்லூரி செயலர் - தாளாளருமான  முனைவர் ஜோ.ஆருண் தொடக்கவுரை ஆற்றுகிறார்.

'குஜராத் - என்ன நடக்கிறது' என்ற தலைப்பில் புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன், 'காவிமயமும் கோட்சேக்களும்' என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் அருணன், 'இந்திய மதசார்பின்மையும், நமது கடமையும்' என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

தோழமையின் இயக்குநர் தேவநேயன் நன்றியுரை ஆற்றுகிறார்.

Wednesday, December 24, 2008

அ.மார்க்ஸ் எழுதிய "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளிவந்துவிட்டது!



பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளிவந்துள்ளது. பக்கம்: 136. விலை: ரூ. 65/-

ஒரிசா, கர்நாடகா கிறிஸ்தவர்கள் மீது மதவெறி சக்திகள் நடத்திய தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழு அறிக்கைகள், நேரடியாக சென்று பார்த்த அனுபவங்கள், இந்திய கிறிஸ்துவம் அதை இந்துத்துவம் அதை எதிர்கொண்ட வரலாறு, மதமாற்ற தடைச் சட்டம் பற்றிய அலசல் என விரிவான ஆய்வு நூலாக அமைந்துள்ளது.

மதவாததிற்கு எதிராக சமரசமின்றி எழுதியும், போராடியும் வரும் அ.மார்க்ஸ் இந்நூலை எழுதியுள்ளார்.

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை "புலம்" மிகச் சிறப்பாக தயாரித்து வடிவமைத்துக் கொடுத்துள்ளது. மேலும், "புலம்" மதவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக இந்நூலை பரவலாக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது.

நூல் பெற விரும்புவோர் கீழ்காணும்
முகவரியில் தொடர்புக் கொள்ளவும்:

புலம்,
72, மதுர நாயக்கன் தெரு,
சின்ன மேட்டுக் குப்பம்,
மதுரவாயில்,
சென்னை - 600 095.
பேசி: 97907 52332, 98406 03499.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com.

கோ.சுகுமாரன்,
179-அ, மாடி, மகாத்மா காந்தி வீதி,
புதுச்சேரி -605 001.
பேச: 98940 54640.
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com

Wednesday, October 15, 2008

ஒரிசா – கருநாடக கிறித்துவர்கள் மீது தாக்குதல் – உண்மை அறியும் குழு அறிக்கைகள்! (ஆங்கில வடிவம்)


ஒரிசாவில் விசுவ இந்துப் பரிசத்தைச் சேர்ந்த லட்சுமணானந்தா மாவோயிஸ்ட் இயக்கத்தினரால் கொலைச் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, கிறித்துவர்கள் மீது இந்து மத வெறி அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளன. தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. கன்னியஸ்திரிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கிறித்துவர்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அகதிகளாக முகாம்களில் ஆயிரக் கணக்கானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருநாடகத்தில் இந்துமத வெறி ‘பஜ்ரங்தள்’ அமைப்பினர் மங்களூர், உடுப்பி, சிக்மங்களூர் ஆகிய மாவட்டங்களில் 17 தேவாலயங்கள், வழிப்பாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியாகப் போராட்டம் நடத்திய கிறித்துவர்கள், பாதிரியார்கள், கன்னியஸ்திரிகள் மீது கருநாடகப் போலீஸ் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து ஆந்திராவின் மனித உரிமை அமைப்புத் தலைவர் டாக்டர் கே.பாலகோபால் தலைமையில் இந்திய அளவிலான “உண்மை அறியும் குழு” ஒரிசா, கருநாடகம் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இடைக்கால அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது. விரிவான அறிக்கை விரைவில் புத்தக வடிவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியா முழுவதும் கிறித்துவர்கள் பாதுகாப்பு இல்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்துப் பரிசத், பஜ்ரங்தள், சிவசேனை, இராம சேனை...என பல்வேறு பெயர்களில் இந்து மதவெறி அமைப்புகள் சிறுபான்மை மக்கள் மீது கருத்து ரீதியாகவும், நேரடியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பா.ஜ.க. வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துப் பேசி வருகிறது.

உண்மை அறியும் குழு அறிக்கைகள் தரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளன. மனித உரிமையில் அக்கறை உடையவர்கள் யாராலும் இந்த காவிமயமான வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கில வடிவில் உள்ள இந்த அறிக்கைகள் “மக்கள் உரிமைக் கூட்டமைப்பு” இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் மற்றும் கூடுதல் தகவல்கள் அடங்கிய சிறு வெளியீடு “மக்கள் உரிமைக் கூட்டமைப்பு” சார்பில் விரைவில் கொண்டு வரப்படும்.

அறிக்கையைப் படிக்க கீழேயுள்ள தொடர்பைச் சொடுக்கவும்:

ஒரிசாவில் கிறித்துவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

கருநாடகத்தில் கிறித்துவர்கள் மீது தாக்குதல்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

Wednesday, November 14, 2007

தென்காசி இன்னொரு கோவை அகக்கூடாது...உண்மை அறியும் குழு அறிக்கை!

தொகுப்பு: பேராசிரியர் அ. மார்க்ஸ்

தென்காசியில் சமீபகாலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், கொலைகள் சார்பாக ஆய்வு செய்ய மனித உரிமை இயக்கங்கள் பலவும் இணைந்த உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. புதுவை கோ.சுகுமாரன் தவிர இளம் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த் (சென்னை), சீனி சுல்தான் (சென்னை), மனோகரன் (சென்னை), தமயந்தி (சேலம்), செங்கொடி (சென்னை), பொற்கொடி (மதுரை) ஆகியோர் தவிர, கோவை வெடிகுண்டு வழக்கில் வாதிட அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அப்துர் ரஹ்மான் அகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.

சென்ற செப்டம்பர் 7ஆம் தேதியன்று தென்காசி சென்றிருந்த இக்குழு இருதரப்பிலும் பலரையும் சந்தித்துப் பேசியது. கொலையுண்ட நாகூர் மீரானின் மனைவி பிர்தவ்ஸ் (18), பஷீரின் மனைவி மும்தாஜ் (19), கொலையுண்ட குமார் பாண்டியன், செந்தில் முதலானோரின் சகோதரர்கள் சீனிவாசன், மகாதேவன் ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேசினோம். தென்காசி நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களையும் சந்தித்தோம். முன்னதாக வழக்கறிஞர் தமயந்தியும் அவரது உதவியாளர்களும் சேலம் சிறையில் நீதிமன்றக் காவல் உள்ளவர்களைச் சந்தித்துத் தகவல்களை சேகரித்திருந்தனர்.

தென்காசி முழுவதும் போலீஸ் கெடுபிடி இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. கூடியவரை ஒவ்வொரு தெருவிலும் இரு காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. காவல்துறை ஒரளவு முன்எச்சரிக்கையுடன் இருப்பது தெரிந்தது.

1982-ல் நடைபெற்ற மதமாற்றத்தின் மூலம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மீனாட்சிபுரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் தென்காசி. அன்று முதல் இந்துத்துவ சக்திகளின் கவனம் பெற்ற ஊராகவும் இது உள்ளது. இந்த அறிக்கையை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட எல்.கே.அத்வானி திருநெல்வேலிக்கு வருகை புரிந்துள்ளார்.

பொதிகை மலை அடிவாரத்தில் குற்றால அருவிக்குச் சில கல் தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இவ்வூரில் நெடுங்காலமாக இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மக்கள் தொகையில் சுமார் 40 சதம் பேர் முஸ்லீம்கள். இங்குள்ள 13 ஜும்மா மசூதிகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 3,000 பேர் என கொண்டாலும் தென்காசியிலுள்ள மொத்த முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 40,000 இருக்கலாம். பெரும்பாலும் சிறு, நடுத்தர வியாபாரிகளாக உள்ளனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரே பெரு வணிகர்களாகவும், சிறு தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

1967-ல் நடைபெற்ற மொகரம் ஊர்வலம் ஒன்றின்போது முதன்முதலில் சிறு கலவரம் ஒன்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதிலிருந்து தென்காசியில் அந்த ஊர்வலம் நடப்பதில்லை.1974-ல் நகர் நடுவில் கடைத்தெருவில் கோயிலருகில் உள்ள பொதுத் திடல் ஒன்றில் திடீரென ஒரு பிள்ளையார் சிலை நிறுவப்பட்டுள்ளது. சில நாட்களில் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த கீற்றுப் பந்தல் ஒன்று கொளுத்தப்பட்டிருக்கிறது. சிலையை வைத்தவர்களே அதைக் கொளுத்தியதாகவும் ஒரு தரப்பினர் கூறினர். இந்தச் சந்தர்ப்பத்திலும் கலவரம் மூண்டுள்ளது. பின்னர் சிலை அகற்றப்பட்டுள்ளது. தற்போது கொலையுண்ட இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவருக்கு இச்சம்பவம் ஒன்றில் தொடர்பு இருந்துள்ளது. ஊர்வலத்தில் வந்தவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டைத் தாக்க முயன்றதாகவும், தமது தந்தை அதைத் தடுக்க முனைந்தபோது கலவரம் மூண்டதாகவும் சொர்ணத் தேவரின் பிள்ளைகள் குறிப்பிட்டனர். அனால் அவரே ஊர்வலத்தைத் தடுத்து கலவரம் புரிந்ததாக மற்றவர்கள் கூறினர்.

இதுதவிர கடைத்தெருவில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிராக அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்று தொடர்பாகவும் பிரச்சினை ஒன்று இருந்து வந்துள்ளது. காசி விசுவநாதர் ஆலயத்திலிருந்து சுமார் 200 அடிகள் தள்ளி அமைந்துள்ள இந்த "பஜார் பள்ளிக்கும் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடைகளுக்கு மத்தியில் உள்ளடங்கிய கூரையும், ஒடும் வேய்ந்த அந்தச் சிறு கட்டடம் சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கடைத்தெருவில் வணிகம் புரியும் முஸ்லீம்கள் மற்றும் அருகிலுள்ள ஊர்களிருந்து பொருட்கள் வாங்க வருவோர் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை செய்வதற்கான ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. மினாராக்கள், அலங்காரங்கள் ஏதுவுமின்றி சிறிய அளவில் இப்பள்ளியைச் சீர்திருத்த சில அண்டுகள் முன்பு முஸ்லீம்கள் முனைந்துள்ள போது இந்து முன்னணி சார்பில் குமார் பாண்டியன் அதை எதிர்த்துள்ளார். கூரையை மாற்றி கான்க்ரீட் தளம் அமைக்க மட்டுமே முனைந்த முஸ்லீம்கள் மாவட்ட அட்சியர் நிரஞ்சன் மார்டினிடம் அதற்கான அனுமதியைப் பெற்றிருந்த போதிலும் இந்து முன்னணியின் ஆட்சேபனையால் இன்றுவரை அப்பணி நடைபெறவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் (1992) இந்தியாவெங்கிலும் முஸ்லீம்கள் டிசம்பர் 6-ஐ துக்க தினமாக நினைவு கூர்வதை நாம் அறிவோம். இங்கும் அந்த வழக்கம் இருந்துள்ளது. சென்ற ஆண்டில் இதுதொடர்பாக முஸ்லீம்கள் தட்டிகள் வைத்தபோது அப்போதிருந்த காவல்துறை அய்வாளர் சக்ரவர்த்தி அதை நீக்குமாறும் தட்டிகளுக்கு ஏதும் அபத்து வந்தால் தான் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளார். அடுத்தநாள் தட்டிகள் எரிக்கப்பட்டுள்ளன. தவிரவும் குமார் பாண்டியனும் இந்து முன்னணியினரும் டிசம்பர் 6 அன்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர். முஸ்லீம்களுக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டு ஆத்திரம் மூட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்ற டிசம்பர் 17, 2006-ல் குமார் பாண்டியன் கொல்லப்- படுகிறார். இதுதொடர்பாக அனீபா, முருகேசன் (எ) அப்துல்லா, சுலைமான் என்கிற சிறுவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். அரசு துரித நடவடிக்கைகள் எடுத்தபோதும் கலவரமும் இருந்தது. ஒரளவு அமைதி திரும்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான் மீது கொலைவெறித் தாக்குதல் ஒன்று மார்ச் 2-ம் தேதி (2007) நடைபெற்றது. கடும் தாக்குதலின் போதும் அவர் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். செந்தில், சுரேந்திரன், கபிலன் என மூவர் கைது செய்யப்பட்டனர். இருதரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் சிறுவர் சுலைமான் தவிர மற்றவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போடப்பட்டு பின் நீதிமன்றத்தில் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பிணையில் வந்தனர்.

அனீபா, அப்துல்லா இருவரும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினமும் மும்முறை கையெழுத்திட வேண்டும். கபிலன், சுரேந்திரன், செந்தில் மூவரும் அருகிலுள்ள உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பின் விளைவுகளைத் தடுக்க தொலைத் தூரங்களில் தங்கிக் கையெழுத்திடச் சொல்வதே வழக்கம். ஆனால் இங்கோ ஒரே ஊரில் அருகருகே கையெழுத்திடச் செய்ததோடன்றி இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து நிபந்தனையை மாற்றிக்கொள்ள ஆணை பெற்றும் தென்காசி குற்றவியல் நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை.

கையெழுத்திட வரும் இருதரப்பினரும் பாதுகாப்பு கருதி ஆயுதங்களுடன் வருவது என்கிற நிலையில் செந்தில் முதலானோருக்கு நிபந்தனை ஜாமீன் ரத்தாகிறது. சென்ற அகஸ்டு 13 அன்று கையெழுத்திட வந்த முஸ்லீம்களைச் சோதனை செய்து, வீடியோ படம் எடுத்து இனி துணை ஆட்கள் வரக் கூடாது , ஆயுதங்கள் எதுவும் கொண்டு வரக் கூடாது எனக் காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த நாள் அவர்கள் கையெழுத்திட வரும்போது வேண்டுமென்றே அவர்கள் தாமதிக்கப்பட்டு, பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக பரவலாக முஸ்லீம்கள் தரப்பில் குற்றம்- சாட்டப்பட்டது. அனீபாவும் மற்றவர்களும் திரும்பி வரும்போது அம்பாசிடர் கார் ஒன்றில் வந்த குமார் பாண்டியனின் சகோதரர்கள் நாட்டு வெடிகுண்டு உட்பட பயங்கர அயுதங்களால் தாக்கியுள்ளனர். அனீபா தரப்பினரும் திருப்பித் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திலும், சிகிச்சைக்குக் கொண்டு செல்லும்போதும், மருத்துவமனையில் மொத்தம் அறு பேர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொலையுண்டவர்களில் சேகர், சுரேஷ், செந்தில் அகிய மூவரும் குமார் பாண்டியனின் சகோதரர்கள். ஆக ஒரே குடும்பத்தில் நால்வர் கொல்லப்- பட்டுள்ளது பரிதாபமானது. கொல்லப்பட்ட இதரர்கள்: பஷீர், அசன் கனி, நாகூர் மீரான்.

உடனடியாக காவல்துறையினர் விரைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இம்முறை கலவரம் ஏதும் நடக்கவில்லை. இதற்கு முன் நடைபெற்ற கலவரங்கள் அனைத்திலும் முஸ்லீம்கள் தரப்பில் கடும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. அவர்களது கடைகளும் சூறையாடப்பட்டுள்ளன. கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையும், வெளியிட்ட அறிக்கையையும் நடுநிலையாளர்கள் பாராட்டுகின்றனர். "தாக்க வந்தவர்களே தாக்கப்பட்டார்கள்'' எனவும், இது குமார் பாண்டியன் குடும்பத்திற்கும் அனீபாவிற்குமுள்ள தனிப்பட்ட தகராறு, மதப் பிரச்சினை அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆம். இந்து முஸ்லீம் என்கிற பிரச்சினை நீண்ட நாட்களாக குமைந்து கொண்டிருந்த போதும், அதற்குப் பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்த போதும் குமார் பாண்டியன் கொலைக்கும் இவைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. குமார் பாண்டியனும் அவரைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனீபாவும் மிக நெருங்கிய நண்பர்களாகவும், ஒன்றாக கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஏ.டி.ஜி.பி. சொன்னது போல, எதோ தனிப்பட்ட பகையே இதற்குக் காரணம் என்பதை எங்களால் அனுமானிக்க முடிந்தது. இருந்தபோதிலும் இது ஏதோ பள்ளிவாசல் தொடர்பான தகராறு என்பது போலப் பிற காவல்துறை அதிகாரிகளால் சொல்லப்பட்டதும், ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டதும் தவறானது. இந்து முன்னணியின் நோக்கத்திற்கே இது பயன்படக் கூடியது.

அதேபோல முன் குறிப்பிட்ட காவல் துறை ஆய்வாளர் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இரு தரப்பைச் சேர்ந்தவர்களுமே இதைக் குறிப்பிட்டனர். குமார் பாண்டியன் கொலையை ஒட்டி உடனடியாக அவர் மாற்றப்- பட்டுள்ளார். எனவே காவல்துறைக்கே அவரது செயற்பாடுகளில் பிரச்சினை இருந்தது விளங்குகிறது. கையெழுத்திட வரும்போதுள்ள ஆபத்தான சூழலைப் பற்றி முஸ்லீம் தரப்பில் எழுத்து மூலமாகவே புகார் அளிக்கப்பட்டும் தற்போதுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததும், நிபந்தனையை மாற்றுவதற்கு இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்காததும் ஆறு பேர் கொலையுண்டதற்கு காரணமாக இருந்துள்ளது. நடவடிக்கை எடுக்காததோடு புகார் கொடுத்தவர்களையே அதிகாரிகள் திட்டியுள்ளனர். கொலை நடந்த நாளன்று காவல் நிலையத்தில் அனீபாவும் மற்றவர்களும் வேண்டுமென்றே காக்க வைத்து அனுப்பப்பட்டதாக முஸ்லீம்கள் தரப்பில் பரவலாக கருதப்படுகிறது. காவல்துறை இந்த ஐயத்தைப் போக்க உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் குழு கருதுகிறது.

தற்போதுள்ள துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஓர் இளைஞர். பொதுவாக இளம் அதிகாரிகள் ஊழலற்றவர்களாகவும், நடுநிலையாளர்- களாகவும் இருப்பது வழக்கம். நாங்கள் அவருடன் பேசியபோது எங்களுக்கும் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. எனினும் தேவையில்லாமல் அப்பாவி முஸ்லீம்கள் பலர் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதும், குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்படுவதும் நிகழ்கிறது. நாங்கள் சென்றிருந்த அன்று கூட ஊனமுற்ற ஒருவர் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருந்தார். ஆறு பேர் கொலை வழக்கில் முஸ்லீம்கள் மீது மட்டும் சதி செய்ததாக (120பி) குற்றம்சாட்டப்பட்டுள்ளதே இது எப்படி என எங்கள் குழுவிலிருந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் வினவியபோது, "இதுவே இறுதி அல்ல, விசாரணையின் போது மற்றவர்கள் மீதும் புதிய பிரிவுகள் தேவை எனில் சேர்க்கப்படலாம்'' என்றார் துணைக் கண்காணிப்பாளர்.

இந்த பதில் எங்களுக்குத் திருப்திகரமாகவோ, ஏற்கக் கூடியதாகவோ இல்லை. அப்பாவிகள் வழக்கில் சிக்க வைக்கப்படுவது பற்றிக் கேட்டபோது, "இது சாதாரணப் பிரச்சினையல்ல. இதெல்லாம் தவிர்க்க இயலாது. நீதிமன்றம் இருக்கிறது தானே. அதில் தங்கள் குற்றமின்மையை நிறுவி அவர்கள் வெளியே வந்து கொள்ளட்டும்'' என அவர் கூறியதையும் எங்களால் ஏற்க இயலவில்லை.

ஒன்பதரை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானி இன்று குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஒன்பதாண்டு காலம் அவரும் அவரது குடும்பமும் சந்தித்த துயர்களை யார் ஈடுகட்ட இயலும்?

"பயங்கரவாதம்' எனச் சொல்லி குடிமக்களின் வாழ்வுரிமைகளைப் பறிப்பதை எப்படி அனுமதிப்பது? அதிகாரிகள் மத்தியக் குடிமக்களின் சட்ட உரிமைகள் குறித்த உணர்வூட்டப்படுதல் அவசியம்.

முஸ்லீம்களுக்கெதிரான இப்படியான ஒரு அணுகு முறை ஒரு காலத்தில் கோட்டைமேட்டில் கடைப்பிடிக்கப்பட்டதன் விளைவை அடுத்த சில ஆண்டுகளில் கோவையில் சந்திக்கவில்லையா? தென்காசியும் கோவை அக வேண்டுமா? அரசும் காவல்துறையும் மிகவும் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.

சிறப்புக் காவல்படையை தென்காசியில் நிறுத்துவதற்கு ஒரு முயற்சி இருந்ததாகவும் சிலர் கூறினர். இது தேவையில்லை. அத்துமீறல்களுக்கே இது வழிவகுக்கும். சிறப்புப் படை இல்லாமலேயே அங்கு அமைதியை நிலைநாட்ட இயலும்.

இரு தரப்பிலும் தவறுகள் இருந்த போதிலும், இதை ஒரு மதப் பிரச்சினையாக மாற்ற முயல்வதும், மதவெறியைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவதும் இந்து முன்னணித் தரப்பிலிருந்துதான். முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் தற்காப்பு நிலையிலேயே உள்ளனர். முஸ்லீம் அமைப்புகள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதில்லை.

மதவெறியைத் தூண்டும் பேச்சுக்கள் தடை செய்யப்படுவதோடு இருதரப்பு சார்ந்த மத ஊர்வலங்களும் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசும் காவல்துறையும் தவிர அரசியல் கட்சிகளும் கவனம் எடுத்து மக்கள் பிளவுறுதலைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும். முஸ்லீம்களின் பஜார் பள்ளி வாசல் திருத்தப்படுதல் என்பது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கை. அரசும் அரசியல் கட்சிகளும் முயற்சித்து இரு தரப்பினரையும் கூட்டிப் பேசி பள்ளிக் கட்டிடத்தை கான்கிரீட்டாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். வெட்டுக் காயங்களுடன் சிறையில் இருப்போருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தென்காசி சரக காவல் நிலையங்களிலும், ரெவின்யூ அலுவலகங்களிலும் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கினர் எல்லா மட்டங்களிலும் முஸ்லீம்களாக அமைதல் வேண்டும். முஸ்லீம்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இதை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து நின்ற பாஜக இத்தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாகத் தெரிகிறது. நாகர்கோயிலுக்கு அடுத்தபடியாக தென்காசியை இந்துத்துவக் கோட்டையாக மாற்றும் நோக்கில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. இன்று கொலையுண்டுள்ள இரு தரப்பினரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் - இளைஞர்கள். இவர்களில் சிலரின் மனைவியர் 20 வயதுக்கும் குறைந்தவர்கள். சிலர் கர்ப்பிணிகள்.

தென்காசி இன்னொரு கோவை ஆகக் கூடாது.

நன்றி: மக்கள் உரிமை

Tuesday, October 23, 2007

கரண் தாப்பரிடம் இருந்து தப்பியோடிய மோடி: சீழ்ப் பிடித்து நாறும் இந்துத்துவ முகம்


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, 19-10-2007 அன்று, சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சியில் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில், கரண் தாப்பருக்கு நேர்காணல் அளித்தார். நேர்காணல் தொடங்கி நான்கரை நிமிடத்திற்குள் பதிலளிக்க முடியாமல் வெளியேறினார். குஜராத்தில் முசுலீம் மக்களுக்கு எதிராக மிகப் பெரும் இனப் படுகொலையை நடத்திய நரேந்திர மோடி, இது குறித்த கரண் தாப்பரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறியது, அவரது இந்துத்துவ பாசிச கொடூர முகத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்திக் காட்டியது. மேலும் அவர் கரண் தாப்பர் பேச விரும்புவதை எல்லாம் நான் பேச விரும்பவில்லை என்று அவேசமாக கூறிவிட்டு வெளியேறினார். தி இந்து பத்திரிகை 22-10-2007 அன்று வெளியிட்டுள்ள அவரது நேர்காணல்:

திரு.நரேந்திர மோடி, உங்களைப் பற்றியதிலிருந்து தொடங்குவோம். இந்த ஆறு ஆண்டுகளும் நீங்கள் குஜராத்தின் முதல்வராக இருக்கிறீர்கள். இராஜீவ் காந்தி பவுண்டேசன் குஜராத் மாநிலத்தை சிறந்த நிர்வகிகப்படும் மாநிலமாக அறிவித்துள்ளது. இந்தியா டூடே இரண்டு சந்தர்ப்பங்களில் உங்களைச் சிறந்த முதல்வராக அறிவித்தது. இதற்கெல்லாம் அப்பால் மக்கள் உங்களை மாபெரும் கொலைக்காரர் என்று அழைக்கின்றனர். மேலும் முசுலீம்களுக்கு எதிரான மனிநிலை உடையவர் என்றும் கூறுகின்றனர். இதனால், உங்களுடைய பிம்பம் பாதிக்கவில்லையா?

நான் நினைக்கிறேன் அவர்கள் மக்கள் என்று சொல்வது சரியானதல்ல. ஒன்று அல்லது இரண்டு பேர் தான் இதுபோன்ற பதங்களைப் பயன்படுத்துகின்றனர். நான் சொல்கிறேன் கடவுள் அவர்களை அசிர்வதிப்பார்.

இது, ஒன்று அல்லது இரண்டு பேர்களின் சதி என்று சொல்கிறீர்களா?

நான் அப்படி சொல்லவில்லை.

அனால், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் தான் என்று சொல்கிறீர்களா?

என்னிடம் இந்த தகவல்தான் இருக்கிறது. மக்களின் குரலும் இதுதான்.

நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். செப்டம்பர் 2003-இல் உச்சநீதிமன்றம் குஜராத் அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறியதே? ஏப்ரல் 2004-இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார், ஆதரவற்ற குழந்தைகளும் பெண்களும் எரிக்கப்பட்ட போது, நீங்கள் ஒரு நவீன நீரோ போல் இருந்தீர்களே என்று. உச்சநீதிமன்றம் உங்களோடு பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டதுபோல் தெரிகிறதே?

நான் ஒரு சிறிய வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பைப் படித்துப் பாருங்கள். அதில் எழுத்துமூலம் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா? நான் இதுபற்றி தெரிந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நீங்கள்சொல்வது சரி. எழுத்துமூலம் எதுவுமில்லை. அது உச்சநீதிமன்றத்தின் பார்வையாயிற்றே?

அது தீர்ப்பில் இருக்குமானால் நான் மகிழ்ச்சியாக உங்களுக்கு பதில் அளிப்பேன்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, நீதிமன்றத்தில் விமர்சித்ததுப் பற்றி கவலைப்பட தேவையில்லையா?

என் சிறிய வேண்டுகோள். தயவு செய்து தீர்ப்பைப் படித்துப் பாருங்கள். நீங்கள் குறிப்பிடும் சொற்றோடரைக் கைவிடுங்கள், மக்களுக்கு அதுபற்றி தெரிந்துக் கொள்ளட்டும்.

ஆகஸ்ட் 2004-இல் உச்சநீதிமன்றம் ஏறக்குறைய 4600-இல், 2100 வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது ஏறக்குறைய 40 சதவீதம். அவர்கள் அப்படி செய்ததற்குக் காரணம் குஜராத்தில் நீதி வழங்கப்படவில்லை என்று நம்பியதால் தானே?

எனக்கு மகிழ்ச்சிதான். இறுதியாக நீதிமன்ற சட்டம் தீர்ப்பை எடுத்துக் கொள்ளட்டும்.

ஆனால், இதற்காகத்தான் உங்களை இந்தியா டூடே சிறந்த முதல்வராக அறிவித்தது, இராஜீவ் காந்தி பவுண்டேசன் சிறந்த நிர்வகிக்கப்படும் மாநிலமாக அறிவித்தது, கோடிக் கணகாணவர்கள் மோடி முசுலீம் மக்களுக்கு எதிரான மனநிலை உடையவர் என்று கூறியது. இதனால்தான் நான் கேட்கிறேன், உங்களுடைய பிம்பத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதா?

உண்மையிலேயே என் பிம்பத்திற்காக நான் ஒரு நிமிடம்கூட செலவிட்டது கிடையாது. நான் எப்போதும் என் வேலையில் பிசியாக இருப்பதற்கு இதுவேகூட காரணம். நான் குஜராத்திற்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன். அர்ப்பணித்துக் கொண்டவன். நான் என் பிம்பம் பற்றி சிந்தித்ததே கிடையாது. என் பிம்பத்திற்காக நான் ஒரு நிமிடம்கூட செலவிட்டது கிடையாது. குழப்பங்கள் இருக்கலாம்.

நான் சொல்கிறேன், பிரச்சனை என்னவென்று. 2002-இல் குஜராத் படுகொலைகள் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆனபின்பும், கோத்ரா பேய் உங்களைச் சுற்றி சுற்றி வருகிறது. நீங்கள் ஏன் அந்தப் பேயைத் தணிக்க முயற்சிக்கவில்லை?

இதை கரண் தாப்பர் போன்ற பத்திரிகையாளர்களுக்கு விட்டுவிடுகிறேன். அவர்கள் அனுபவிக்கட்டும்.

நான் ஏதாவது ஆலோசனைக் கூறலாமா?

எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.

நடந்த கொலைகளுக்காக வருந்துவதாக நீங்கள் ஏன் சொல்லக் கூடாது? முசுலீம்களைப் பாதுகாக்க அரசு கூடுதலாக ஏதாவது செய்திருக்கலாம் என்று சொல்லலாமே?

நான் என்ன சொல்ல வேண்டுமென்பதை அந்த நேரத்திலேயே சொல்லிவிட்டேன். நீங்கள் என்னுடைய அறிக்கைகளில் தேடிப் பார்க்கலாம்.

திரும்பவும் சொல்லவும்...

2007-இல் நான் அதைப் பற்றிப் பேச தேவையில்லை, அதாவது நீங்கள் பேச விரும்புவதை எல்லாம்.

அனால், அதைப் பற்றி திரும்பச் சொல்லாமல், குஜராத்தின் நலனுக்கு எதிராக உள்ள பிம்பத்தைத் தொடர்ந்து நீட்டிக்க அனுமதிப்பது பற்றி நீங்கள் மக்களுக்குச் சொல்லியாக வேண்டும். அதை மாற்ற வேண்டியது உங்கள் கையில்...

மோடி ஒலிவாங்கியை (மைக்கை) நிறுத்திவிடுகிறார்.

எனக்கு ஓய்வு தேவை. எனக்கு கொஞ்சம் தண்ணீர் தேவை.

தண்ணீர்...

நட்பு தொடர வேண்டும். அவ்வளவுதான். நான் மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் இங்கு வந்தீர்கள். அதற்கு உங்களுக்கு என் நன்றி, மகிழ்ச்சி. நான் இந்த நேர்காணலை தொடர முடியாது. சரியா? இதெல்லாம் உங்களுடைய கருத்து, நீங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறீர்கள், தொடர்ந்து செய்கிறீர்கள். மூன்றுநான்கு கேள்விகள், நான் ரசித்தேன்.

இல்லை, கரண்.

மோடி சாப்...

கரண் நான் நட்புறவைக் தொடர விரும்புகிறேன். நீங்கள் அதை நோக்கி முயற்சி செய்யுங்கள்.

அய்யா, எந்த தவறு செய்வதைப் பற்றியும் நான் பேசவில்லை. நான் சொல்கிறேன், ஏன் நீங்கள் உங்கள் பிம்பத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது.

அதற்கு இது நேரமல்ல. அதற்கு நீங்கள் என்னை 2002-இல் சந்தித்திருக்க வேண்டும், 2003-இல் சந்தித்திருக்க வேண்டும். நான் அதை எல்லாம் செய்திருப்பேன்.

Sunday, September 30, 2007

இந்து மதவெறி பிடித்த வேதாந்தி உருவ பொம்மை எரிப்பு - 150 பேர் கைது - படங்கள்









புதுச்சேரியில், 28-09-2007 அன்று, பெரியார் தி.க. முன்முயற்சியில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து, இராமர் பாலம் என்ற பெயரில் தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான பார்ப்பன, இந்து மதவெறி சக்திகளுக்கு எதிராக சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முடிவில் இந்து மத வெறிபிடித்த வேதாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

உத்திரபிரதேசம் விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த ராம் விலாஸ் வேதாந்தி, தமிழக முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் துண்டிக்க வேண்டுமென "பட்வா" கட்டளை பிறபித்தார். இதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைக் கண்டித்தும், மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் பெரியார் தி.க. தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், புரட்சியாளர் அம்பேத்க்ர் தொண்டர் படை, செந்தமிழர் இயக்கம், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை, செம்படுகை நன்னீரகம், சமூக நீதிப் போராட்டக் குழு, வெள்ளையணுக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து இப்போராட்டத்தை நடத்தின.

ஊர்வலத்திற்கு பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் பா.சக்திவேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகரி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.மஞ்சினி, வெள்ளையணுக்கள் இயக்கம் சார்பில் பாவல், செம்படுகை நன்னீரகம் செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் தி.க. அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன், துணைத் தலைவர் இரா.வீராசாமி, இளைஞர் அணித் தலைவர் சா.சார்லசு, செயலாளர் செ.சுரேசு, செய்தி தொடர்பாளர் ம.இளங்கோ உட்பட ஏராளமான தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வேதாந்தியை கடுமையான சட்டத்தில் கைது செய், இந்துமத-பார்ப்பன அமைப்புகளான பா.ஜ.க., இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், சிவசேனா போன்ற அமைப்புகளைத் தடை செய் என்று முழக்கமிட்டனர்.

ஊர்வலத்தைத் தடுத்த காவல்துறையினரோடு மோதல் ஏற்பட்டது. காவல்துறை தடுத்தையும் தாண்டி ஊர்வலத்தினர் முன்னேறி வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Tuesday, June 05, 2007

குஜராத் மோடி அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு - உச்சநீதிமன்றம்



குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 81 குடியிருப்பு முகாம்களில் மிகப் பரிதாபமான நிலையில் இருந்து வருகின்றனர் எனும் உண்மையை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த மக்களுக்கு வாழ்வுரிமையோ, உணவோகூடச் சரிவர இல்லாமல் அவதிப்படுகின்றனர் எனக் குழு அவ்வறிக்கையில் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டாக்டர் என்.சி. சக்சேனா தன் அறிக் கையில் பின்வரும் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகள் எதையும் மாநில அரசு அமைத்துத் தரவில்லை. மொத்தம் உள்ள 81 குடியிருப்புகளில் அய்ந்தில் மட்டுமே பள்ளிகள் உள்ளன. இவற்றிலும் நான்கில் மட்டுமே மதிய உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நான்கு மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து வழங்குகின்றன. கருவுற்ற தாய்மார்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் தரப்படும் உதவியை ஒரே ஒரு நிலையம் மட்டுமே அளிக்கிறது.

வழக்கு விசாரணை

இந்த அறிக்கையைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் டி.கே. ஜெயின் ஆகியோர் கோடை விடுமுறைக்குப் பின் இது தொடர்பான விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் மிகவும் சிரமப்படும் நிலைபற்றிய சங்கடம் தரும் தகவல்கள் கிடைத்துள்ளன. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி குஜராத் அரசு எவ்வித நடவடிக்கையும் நிறைவேற்றவில்லை.

குஜராத் அரசு ஒப்புதல்

குழு அனுப்பிய கடிதத்துக்குப் பதில் எழுதிய நரேந்திர மோடி அரசு, 2002 கலவரத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணக் குடியிருப்புகள் அரசால் செய்து கொடுக்கப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. ``கலவரத்தில் வெடித்த வன்முறை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிட்டது. அவர்களுக்கு ஏற்கெனவே வேலை தந்து உதவியவர்கள் தற்போது வேலை தரத் தயாரில்லை. எனவே, அவர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்’’ என்று குழு தெளிவாகவே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குஜராத் அரசு உச்சநீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களைத் தந்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்டோருக்குத் தரவேண்டிய உணவு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு தரவேயில்லை என்பதை சான்றுகள் மெய்ப்பிக்கின்றன எனக் குழு தெரிவித்திருக்கிறது.

ஆய்வு வெளிப்படுத்தும் அவலங்கள்

குழுவின் உறுப்பினர்கள் முழு அளவில் ஆய்வு செய்துள்ளனர். 81 குடியிருப்புகளில் மூன்றில் மட்டுமே நியாய விலைக் கடைகள் உள்ளன. 4 ஆயிரத்து 545 குடும்பங்களில் 725 குடும்பங்களுக்கு மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கான குடும்ப அட்டைகள் தரப்பட்டுள்ளன. இவர்கள் மீதான பொருளாதார புறக்கணிப்பு மிகவும் கடுமையாக நிலவுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு

பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் குடியிருப்புகளில் நிலவும் மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், குஜராத் மோடி அரசின் தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை தரப்படவேண்டும் என்று குழுவின் தலைவர் டாக்டர் சக்சேனா தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் மற்றுள்ள உயர் அலுவலர்கள் நீதிமன்றக் குழு அதிகாரிகளுக்குத் தவறான, பொய்ப் புள்ளி விவரங்களை அளித்துள்ளனர்.

குடியிருப்புகளில் வசிக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் ’அந்தியோதயா’ அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்; இவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துவிட்டனர்; பொருளாதாரப் புறக்கணிப்பால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்; தங்கள் வீடுகளுக்குச் செல்ல பயப்படுகின்றனர்; தொடக்கப்பள்ளிகளும், மதிய உணவுக் கூடங்களும் 81 குடியிருப்புகளிலும் தொடங்கப்படவேண்டும்; குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்ட உதவிகள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கோத்ரா சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்து மதவெறி சக்திகள் சிறுபான்மை இசுலாமிய மக்கள் மீது நடத்திய தாக்குதல் மிகக் கொடூரமானது. பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இசுலாமியப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
குஜராத்தில் நடத்தப்பட்ட இந்து மதவெறியின் கோர தாண்டவம் ஆர்.எஸ்.எஸ்., பஜரங்தள், சங்பரிவார், பா.ஜ.க. போன்ற மதவெறிக் கட்சி, அமைப்புகளின் ரத்தம்படிந்த இன்னொரு பக்கத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.

இதுநாள்வரையில், இந்து பாசிச நரேந்திர மோடி அரசு, பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம்கூட வழங்கவி்ல்லை. நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நீதி அமைப்புகளும் தேவையான முயற்சிகளை மெற்கொள்ளவில்லை.

தற்போது உச்சநீதிமன்றம் அமைத்த குழு தனது அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமியர்களுக்கு குஜராத் அரசு எதையும் செய்யவில்லை எனபதைத் தெளிவாக கூறியுள்ளது.

சிதறிக்கிடக்கும்
சிறுபான்மை இசுலாமிய மக்களின்
சாம்பலின் துகல்களின் ஊடே..

மரண ஓலங்கள்,
வழிந்தோடும் ரத்த ஆறுகள்,
சிதறிக் கிடக்கும் சதைகள்,
மண்டை ஓடுகள்,
பிய்த்து எறியப்பட்ட பிஞ்சுகள்,
சிதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள்..

நாறிக் கொண்டிருக்கிறது
நரேந்திர மோடியின்
இந்து மதவெறி.

நீதிக்காக காத்துக் கிடக்கிறது
குரலற்றவர்களின் குரல்...