Tuesday, June 22, 2021

இலங்கையில் சீனா துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.06.2021) விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அம்பாந்தோட்டை பகுதியில் சீன அரசு துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்திய பெருங்கடலில் சூயஸ் கால்வாய் அருகேயுள்ள மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. இத்துறைமுகத்தை சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு 1.12 மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. இத்துறைமுகம் 4500 எண்ணெய் கப்பல்கள் உட்பட 36 ஆயிரம் கப்பல்களைக் கையாளும் வசதி உடையது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டியுள்ள 269 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தி, அதில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சீனாவுக்கு வழங்கிட இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் சீனா கடற்படைத்தளம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் அமையுமானால், அது இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். சீனா இலங்கைக் கடற்பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால் தமிழகத்திற்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இறுதிப் போரின் போது ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு சீனா இராணுவ ரீதியாக பெருமளவில் உதவியது. தற்போது தமிழகம் அருகில் சீன துறைமுகம் அமைவது தமிழகத்தின் நலனுக்கு எதிரானது.

இச்சூழலில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் பகுதியான கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மீனவர்களின் நலனைக் காக்கவும், தமிழ்நாட்டின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் உதவும்.

எனவே, இலங்கை அம்பாந்தோட்டை பகுதியில் சீன அரசு துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Friday, June 18, 2021

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.06.2021) முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து அளித்த மனு:

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடந்த 2015ஆம் ஆண்டு தாங்கள் முதலமைச்சராக இருந்த போது உருவாக்கப்பட்டது. ஆனால், அத்துறையை செயல்படுத்த உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, அத்துறைக்கான இயக்குநர் பணியிடம் உருவாக்க அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த கோப்பிற்கு இதுவரையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு இயக்குநர் உள்ளிட்ட பணியாளர்களை நியமித்து அத்துறையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்.

மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நியமிக்கப்படாததால் ஆணையத்தின் செயல்பாடுகள் முடங்கிப் போயுள்ளன. எனவே, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குப் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனே நியமிக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான சிறப்புக்கூறு திட்ட நிதிகள் முறையாக, ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்குச் செயல்படுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான பின்னடைவுப் பணியிடங்கள் (Backlog) அனைத்தையும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

தமிழகத்தில் அருந்ததிய இன மக்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள்ஒதுக்கீடு சட்டப்படி செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியிலும் அருந்ததிய இன மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

பழங்குடியின மலைக்குறவன், காட்டுநாயக்கன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய சமூகங்களைப் பட்டியலின பழங்குடியினராக அங்கீகரித்து மத்திய அரசு அரசாணை வெளியிட ஆவன செய்ய வேண்டும். வில்லியனூர் பெருமாள்புரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பழங்குடியினர் 23 குடும்பங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும்.

முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 2 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்டு அவற்றை முஸ்லிம் மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

Monday, June 14, 2021

தமிழகத்தில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்!

பல்லாண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமிழக முதல் அமைச்சருக்குக் கூட்டாக எழுதிய கடிதம்:

ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தங்களுக்கு, எங்கள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய, இந்த கூட்டு மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கிறோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு சிறைவாசிகளின் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம். தங்கள் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சிக் குழுவொன்று, குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து, எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தக் கோருகிறோம்.

75 வயதைக் கடந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் 1987ம் ஆண்டு முதல் (ஏறத்தாழ 34 ஆண்டுகளாக) சிறையில் இருந்து வருகிறார். அவரோடு ஆண்டியப்பன், பெருமாள் போன்றவர்களும் சிறையில் இருக்கிறார்கள்.

அது போல, ஹாரூன் பாஷா, யாசுதீன் உள்ளிட்ட 19 பேர், தண்டனைக் கைதிகளாக கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் உள்ளனர். கடந்த காலங்களில், மாநில அரசு வழங்கிய பொதுமன்னிப்பில் இவர்கள் முன்விடுதலை செய்யப்படவில்லை.

வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முகமது அன்சாரி, தாஜுதீன் உள்ளிட்ட 16 பேர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

கைதிகளின் வயோதிகம், உடல்நிலை, குடும்பச் சூழல், சிறையில் கைதிகளின் நடத்தை போன்றவைகளை கணக்கில் கொண்டு இவர்கள் அனைவரையும் முன்விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு முழு உரிமை உள்ளது.

அறிவுரைக் கழகங்கள் பரிந்துரையின் அடிப்படையில் கைதிகள் முன்விடுதலை செய்யப்படுவதில் சுணக்கம் இருக்கிறது என்று கருதுகிறோம். சிறைவாசிகளை விடுவிப்பதில் இருக்கும் பாகுபாடு மற்றும் அது தொடர்பான விதிகள், பல சிறைவாசிகளின் விடுதலைக்கு தடையாக இருக்கின்றன.

குற்றவியல் நீதியின் முக்கிய நோக்கம், தண்டனைப் பெற்ற குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது. ஆனால், தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்தவர்களை பல்வேறு காரணங்களுக்காக விடுவிக்க மறுப்பது சரியல்ல என்று கருதுகிறோம். ஆயுள் தண்டனை பெற்றவர்களை ஆயுள் முழுவதும் சிறையில் வைத்திருப்பது என்பது நீதிக்கு எதிரானது.

தங்கள் வாழ்வின் இளமையான காலத்தின் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர்கள், இறுதிக் காலத்திலாவது தங்கள் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஆசையாகும்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அனைவரையும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தக்காலத்தில், எந்தவித பாகுபாடும் காட்டாது, விடுதலை செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மிக்க நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

(ஒ-ம்) இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

(ஒ-ம்) கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

(ஒ-ம்) கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)-தமிழ்நாடு & புதுச்சேரி.

(ஒ-ம்) தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

(ஒ-ம்). அ.மார்க்ஸ், (மனித உரிமைகளுக்கான தேசியக் கூட்டமைப்பு-NCHRO)

(ஒ-ம்) கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு

(ஒ-ம்) அப்துல் ரஹ்மான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்

(ஒ-ம்) எஸ்.செல்வ கோமதி, நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் பவுண்டேஷன்

(ஒ-ம்) அ.மகபூப் பாஷா, சோகோ அறக்கட்டளை

(ஒ-ம்) ஹென்றி திபேன், மக்கள் கண்காணிப்பகம்

(ஒ-ம்) வி.பி.குணசேகரன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்

(ஒ-ம்) விடுதலை இராசேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம்

(ஒ-ம்) கோவை இராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

(ஒ-ம்) U.A.அன்புராஜ், முன்னாள் ஆயுள் தண்டனை சிறைவாசி

Saturday, June 12, 2021

52 நாட்களாக நீதி வேண்டி பிணவறையில் உயிரற்ற உடல்..

 திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ (வயது 27). சட்டக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர். சென்ற 11.04.2021 அன்று இவர் உட்பட நான்கு பேர் மீது களக்காடு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் இவர்களைப் பாளையம்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியுள்ளனர்.

சென்ற 22.04.2021 அன்று சிறையில் முத்துமனோ (27), சந்திரசேகர் (22), கண்ணன் (23), மாதவன் (19) ஆகியோர் மீது சிறைவாசிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் நால்வரும் படுகாயம் அடைந்தனர். அனைவரும் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முத்து மனோ திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார்.

இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலைய போலீசார் சிறைவாசிகளான ஜேக்கப் (29), மாடசாமி (25), ராம் (எ) ராமமூர்த்தி (24), மகாராஜா (28), சந்தான மாரிமுத்து (எ) கொக்கி குமார், கந்தசாமி (22) ஆகியோர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இக்கொலைக்குப் பின்னணியாக இருந்த சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அப்போழுது 6 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜெயிலர் பரசுராமன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைவாசிகள் சாதி அடிப்படையிலேயே அடைத்து வைத்துள்ளனர். சமூகத்தில் எப்படி சாதியப் பாகுபாடும், மோதல்களும் உள்ளது போல், சிறைச்சாலைகளிலும் இந்நிலையே உள்ளது. முத்து மனோ உள்ளிட்ட நால்வரை விசாரணை சிறைவாசிகள் பிளாக்கில் அடைத்து வைக்காமல், தண்டனை சிறைவாசிகள் உள்ள ‘ஏ’ பிளாக்கில் அடைத்துள்ளனர். இதில் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த குற்றவாளிகளை அடைத்து வைத்துள்ளனர். இதனால்தான், முத்து மனோ உள்ளிட்ட நால்வர் மீதான தாக்குதல் எளிதாகியுள்ளது. இத்தாக்குதலுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் சாதியமும் ஒரு காரணமாக உள்ளது. இதற்குப் பின்னால் காவல்துறையினர் சிறைத்துறையினர் என பலரின் பெரும் சதித்திட்டம் இருப்பதாகவே தெரிகிறது.

இந்நிலையில், கீழ்காணும் கேள்விகள் எழுகிறது.

1) ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியது ஏன்?

2) பாளையங்கோட்டை சிறையில் விசாரணை சிறைவாசிகள் பிளாக்கில் அடைக்காமல், தண்டனைச் சிறைவாசிகள் ‘ஏ’ பிளாக்கில் அடைத்தது ஏன்?

3) முத்து மனோ உள்ளிட்ட நால்வர் பாளையங்கோட்டை சிறைக்கு வருவது ‘ஏ’ பிளாக்கில் இருந்த சிறைவாசிகளுக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?

4) சிறையில் கல்லால் தாக்கிக் கொலை செய்யும் அளவுக்கு பெரிய கற்கள் இருந்தது எப்படி?

5) முத்து மனோ உடலில் 28 காயங்கள் உள்ளதால் கற்களால் தாக்கியதால் இறந்தாரா? அல்லது வேறு ஆயுதங்களால் தாக்கினார்களா?

இக்கொலை நடந்த நாள் முதல் வாகைக்குளம் மக்கள் நீதிக் கேட்டுப் போராடி வருகின்றனர். முத்து மனோ உடற்கூறாய்வு முடிந்து 52 நாட்கள் ஆகியும் உடலைப் பெற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து உறுதியாக போராடி வருகின்றனர். முத்து மனோவின் தந்தையார் பாவனாசம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் இக்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

இந்நிலையில், இக்கொலை வழக்கின் புலன்விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் சிறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அரசுப் பணி வழங்க வேண்டும் என்பதுதான் போராடும் வாகைக்குளம் மக்கள், சமூக இயக்கங்களின் கோரிக்கைகள்.

போராடும் மக்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசும், காவல்துறையும் உடனே நிறைவேற்ற வேண்டும்.

முத்து மனோவின் உயிரற்ற உடல் 52 நாட்களாக நீதி வேண்டி பிணவறையில் காத்துக் கிடக்கிறது.

Sunday, June 06, 2021

+2 தேர்வு முற்றிலும் ரத்து: கிராமப்புற மாணவர்களுக்கு அநீதியானது!

தமிழ்நாடு அரசின் +2 தேர்வு ரத்து என்ற அறிவிப்பு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்தானது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு (NEET, JEE) மூலம் உயர்கல்விச் சேர்க்கை நடத்தாமல் இருக்கவும் முடியாது. மத்திய பாஜக அரசு இதில் உறுதியாக இருக்கிறது. கல்வி மத்திய பட்டியலில் இருப்பதால் மாநில அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது.

நீட் நுழைவுத் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீண்ட காலம் ஆகும். அதன் பின் தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையின் மீது கொள்கை முடிவெடுத்து செயல்படுத்த இன்னும் காலதாமதம் ஏற்படும். இதுவொரு வகையில் நீட்டை தடுக்க சட்ட ரீதியாக எடுக்கும் முயற்சியாக கருதினாலும், அது உடனே நடக்கக்கூடிய சாத்தியக்கூறு இல்லை.

நுழைவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவித்தார் பிரதமர் மோடி என்ற கல்வியாளர்களின் கருத்தும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு +2 தேர்வை ரத்து செய்திருப்பது ஏற்புடையதல்ல. நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே சேர்க்கை நடக்குமானால் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் நிலைக் கவலைக்குரியதாகும். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு ஓரளவுக்குப் பயனளித்தாலும் அது போதுமானதல்ல.

மதிப்பெண் போடுவதில் நிறைய குளறுபடிகள், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. அரசிடம் மதிப்பெண் போடுவது பற்றி ஒரு தெளிவான கொள்கை இதுவரையில் இல்லை. இதில் அரசுக்குப் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் வரும். பள்ளிகளிடம் மதிப்பெண் போடும் பணியை ஒப்படைத்தால், அதில் சமநிலை இருக்க வாய்ப்பில்லை. இது மேலும் மாணவர்களின் கல்வியையும் மனநிலையையும் பாதிக்கக்கூடும்.

கல்வியாளர்கள் கூறுவது போல தேர்வு வைத்து, அதன் அடிப்படையில் உயர்கல்விச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். குறைந்த பாடத் திட்டத்துடனும், நேரம் குறைத்தும் தேர்வு நடத்தி இருக்கலாம். அதிக தேர்வு மையங்களை உருவாக்கி, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தி இருக்கலாம். விடைத்தாள் திருத்தம்கூட சற்று தாராளமாக திருத்தி இருக்கலாம்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டதற்கு 60% பேர் தேர்வு நடத்த வேண்டுமென கூறியுள்ளனர். அதேபோல், அகரம் அமைப்பு சார்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600 மாணவர்களிடம் கருத்துக் கேட்டதற்குத் தேர்வு நடத்த வேண்டுமென 67% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த 600 மாணவர்களும் அகரம் அமைப்பிடம் கல்வி நிதியுதவிக் கேட்டு விண்ணப்பித்த ஏழை, எளிய மாணவர்கள். அதோடு, இதுகுறித்து தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்வு நடத்த வேண்டுமென பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

தற்போதைய முடிவு மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள கூடாது என்று தமிழ்நாடு அரசு எடுத்த முடிவாகவே தெரிகிறது. மேலும், இம்முடிவு தனியார் பள்ளிகள் போன்ற மேல்தட்டினர் பயிலும் பள்ளிகளுக்கு உவப்பாகவும் வாய்ப்பாகவும் அமையும். நுழைவுத் தேர்வு என்ற ஒற்றை இலக்கில் மாணவர்களைத் தயார்படுத்தி உயர்கல்வியைக் கைப்பற்றும் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளின் நோக்கத்திற்கு வலுசேர்ப்பதாகும்.

ஏற்கனவே கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விநிலை மிகவும் பின்தங்கிய நிலையியே உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இம்முடிவு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் பாதகமாகவே அமையும்.

இந்தச் சூழ்நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியில் குறைந்தது 25% இடஒதுக்கீடு கோருவது சரியானதாக இருக்கும் எனப் பேராசிரியர் பிரபா.கல்விமணி கூறினார். இந்த இடஒதுக்கீடு நிதியுதவி பெரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார். இத்தேர்வு ரத்து அறிவிப்பு எப்படி கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்குத் தடையாக இருக்கும் என்பதை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கவலையுடன் விளக்கினார்.

கிராமப்புற ஏழை, எளிய, அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் காக்க நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. இதுகுறித்து அனைத்து கட்சிகளும் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஐயா தேங்காய்த்திட்டு காளியப்பன் காலமானார்!

2007-இல் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு 2600 கோடி ரூபாய் மதிப்பிலான தனியார் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தை எதிர்த்து மிகப் பெரும் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் தேங்காய்த்திட்டு மக்களின் பங்களிப்பு அளப்பரியது. ‘தேங்காய்த்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு’ உருவாக்கப்பட்டு அதற்குத் தலைவவராக காளியப்பன் இருந்தார். அழகிய அவ்வூரின் பெரிய மனிதர் அவர்.

தேங்காய்த்திட்டு புதுச்சேரி விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்த ஊர். பொதுவுடமைத் தலைவரும், நாடறிந்த தொழிற்சங்கத் தலைவருமான டி.கே.இராமானுஜம், திமுக தலைவர் சீத்தா வேதநாயகம், தமிழக்கனல் இராமகிருட்டினன் எனப் பல போராளிகள், சான்றோர்கள் வாழ்ந்த ஊர்.

செழிப்புமிக்க இவ்வூரைக் கையகப்படுத்தி துறைமுகம் கொண்டு வரவும், கேளிக்கைகளை அரங்கேற்றிட ஐந்து நட்சத்திர விடுதிகள் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. பழைய துறைமுகம் உள்ள 153 ஏக்கர் நிலத்தைக் குறைந்த வாடகைக்குத் தனியார் நிறுவனத்திற்குக் குத்தகைக்குக் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அப்போதைய முதலமைச்சர் ரங்கசாமி, துறைமுகத் துறை அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்டோர் முழுவீச்சில் களமிறங்கினர்.

சமூக இயக்கங்களை ஒருங்கிணைத்து தோழர் சி.எச்.பாலமோகனன் ஒருங்கிணைப்பில் ‘புதுச்சேரி மக்கள் பாதுகாப்புக் குழு’ உருவாக்கப்பட்டது. இதற்கு அப்போது ஆண்ட காங்கிரஸ் கட்சி தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்தன. தேங்காய்த்திட்டு மக்களைத் துடிப்புமிகு இளைஞராக இருந்த பாஸ்கரன் ஒருங்கிணைத்தார். உடன் பெருந்துணையாக லோகு.அய்யப்பன் இருந்தார். அதற்கு அனைத்து வகையிலும் பக்க பலமாக இருந்தவர் ஐயா காளியப்பன்.

துறைமுக விரிவாக்கத்தத் திட்டத்தைப் பெற்ற தனியார் நிறுவனம் பழைய துறைமுக முகப்பில் வைத்த பெயர்ப் பலகை அடித்து நொறுக்கப்பட்டது. அரசின் கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க அரங்கில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த விடாமல் தடுக்கப்பட்டது. புதுச்சேரியே குலுங்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

தேங்காய்த்திட்டு மக்கள் நடத்திய அமைச்சர் வல்சராஜ் உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் காவல்துறையின் தவறான அணுகுமுறையால் பெரும் வன்முறையில் முடிந்தது. காவல்துறையின் தடியடியால் ஏராளமான மக்களும், முன்னின்ற போராட்டக்காரர்களும் படுகாயமடைந்தனர். தேங்காய்த்திட்டு மக்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டன. இப்போராட்டத்தின் போது காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஐயா காளியப்பன், சு.பாஸ்கரன், லோகு.அய்யப்பன், கோ.சுகுமாரன் என 18 பேர் மீது இ.த.ச. 307 பிரிவின்கீழ் கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டது.

இப்போராட்டத்தின் உச்சகட்டமாக சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மேதா பட்கர் தேங்காய்த்திட்டு ஊரில் தங்கி போராடிய மக்களை வீடு வீடாக சென்று பாராட்டினார். போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு கண்டு மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார்.

இப்போராட்டத்தின் விளைவாக துறைமுக விரிவாக்கத் திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு அடிபணிந்தது. இப்போராட்டத்தில் தேங்காய்த்திட்டு மக்கள் குறிப்பாக பெண்களின் பங்கு முகாமையானது. வீரஞ்செறிந்த இப்போராட்டத்தில் துணிவுடன் பெண்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

ஐயா காளியப்பன் எங்கள் மூவரைக் கலக்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டார். எங்களைப் பார்த்து ‘செல்வத்திற்கு பாஸ்கரன், வீரத்திற்கு அய்யப்பன், அறிவுக்கு சுகுமாரன்’ என்றுகூறிப் பாராட்டுவார். விருந்தோம்பல் என்றால் ஐயா காளியப்பன் குடும்பத்தைத்தான் எடுத்துக்காட்டாக கூற முடியும். அவரது துணைவியார் அஞ்சலை (எ) அஞ்சுகம் அன்பும் அரவணைப்புடனும் எங்களைக் கவனிப்பார்.

இப்போராட்டம் எத்தனையோ மகத்தான ஆளுமைகள், கட்சியினர், இயக்கத்தினர் கலந்துகொண்டனர். அவர்களின் பெயர்களை எல்லாம் இங்குக் குறிப்பிடவில்லை. தனியே ஒரு நூல் எழுத வேண்டும். அதில் விரிவாகக் குறிப்பிடுகிறேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் தோழர் லோகு.அய்யப்பன் போராடிய மக்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் அனைவர் மீதான வழக்குகளை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

இப்போராட்டத்தின் போதுதான் ஐயா காளியப்பன் உடன் நெருங்கிப் பழகினேன். போராட்டத்தைத் திட்டமிடுவதும், அதைச் செயல்படுத்துவதும் கண்டுப் பூரிப்படைவார். இப்படியான ஒரு பெரிய மனிதரை கொரோனா விட்டு வைக்கவில்லை. ஈடு செய்ய முடியாத இழப்பு.

இறப்பிற்குச் சென்று அழுது மனதை ஆற்றுப்படுத்த முடியாத சூழல் துயரத்தைக் கூட்டுகிறது.

ஐயா காளியப்பன் இழப்பால் துயருறும் அவரது துணைவியார், பிள்ளைகள், உறவினர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.