Tuesday, January 29, 2013

புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து  தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

நிகழ்ச்சி நாள்: 17-02-2013 ஞாயிறு,  காலை 9.30 மணி முதல்... (காலை 9.15 மணிக்கு பதிவு தொடங்கப்படும்).

இடம்: மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம், 66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004.

இந்த நிகழ்ச்சியில் தமிழா நிறுவனத்தின் குறுந்தகடு வெளியிடப்படும், இதனைத் தொடர்ந்து  தமிழ்க் கணினி தொடர்பாக கீழ்க்கண்டவைகள் பற்றிய  பரத்தீடு (Power point Presentation) விளக்கம் அளிக்கப்படும்.
 1. தமிழில் இயங்குதளம்: விண்டோசு மற்றும் லினக்சு (Ubuntu),
 2. தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு,
 3. கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
 4. கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற..
 5. தமிழில்  இணைய உலவிகள் ( Web Browsers)
 6. ஒருங்குகுறி பற்றிய விளக்கம்,
 7. தமிழில் தட்டச்சு மென் பொருட்கள்  நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்,
 8. தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
 9. வலைப்பதிவு செய்தல்: பிளாக், மற்றும் வேர்டு பிரசு,
 10. திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி உள்ளிட்டவைகளில் இணைப்பு அதன் பயன்பாடு,
 11. சமுக வலைத்தளங்களில் பதிவு செய்தல்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு
 12. தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள்.
 13. தமிழ் தொடர்பான பிற செய்திகள்
இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்து பங்கேற்பவர்களுக்கு தமிழ் மென்பொருட்கள்  அடங்கிய குறுந்தகடு, மற்றும் குறிபேடு, எழுதுகோல், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். காலை மற்றும் பிற்பகலில் தேநீர், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. எத்தனைபேர் வருவார்கள் திட்டமிட வசதியாக  இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்ய விரும்புகிறவர்கள் இந்த  பதிவுப் படிவத்தினை கிளிக் செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக மாணவர்களுக்கு ரூ 50/- பணி செய்பவர்களுக்கு ரூ 100/- செலுத்த வேண்டும். இந்த பயிலரங்கில் பங்கேற்க இந்த படிவத்தின் பதிவு நிபந்தனைக்கு உட்டது. 
பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் வருகை தரவேண்டும். 9.15 முதல் 9.30 வரை பதிவு நேரமாகும். பதிவு நேரத்திற்கு பின் வருபவர்களின் இடம் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
 

மேலும் விவரங்களுக்கு : இரா.சுகுமாரன் 9443105825, எல்லை.சிவக்குமார்.  9843177943 என்ற  தொலை பேசியில் தொடர்பு கொள்க.

Friday, January 25, 2013

கமல்ஹாசனின் விஸ்வரூபம் தடை: சில கருத்துக்கள்

விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. ஒரு மனித உரிமை ஆர்வலன் என்ற முறையில் எந்த கருத்தையும் தடை செய்வதன் மூலம் எதிர்கொள்ள கூடாது என்ற கருத்துடையவன். ஆனால், முஸ்லிம்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்படத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் கூறும் காரணங்களில் முக்கியமானது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என இப்படத்தில் சித்தரிப்பது.

இந்தியாவில் இந்து பாசிசம் தலைத் தூங்கத் துவங்கிய காலத்திலும், அதன் பின்னர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் முஸ்லிம் மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தின. அப்போது இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று போன முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை தேர்வு செய்தனர்.  இதற்கு சர்வதேச அரசியலும் பின்புலமாக இருந்தது. அப்போதுதான் 'முஸ்லிம் தீவிரவாதம்' என்ற சொல்லாடல் புழகத்திற்கு வந்தது. இவற்றை அரசுகள் எதிர்க்கொண்ட விதமும், அது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும்  பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.

1997 கோவை கலவரம் நடந்து 19 முஸ்லிம்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் அவ்வளவு வீச்சாக இல்லை. அப்போதுதான் தமுமுக போன்ற அமைப்புகள் முற்றிலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களை அணி திரட்டின. அதேபோல் பல அமைப்புகள் முன்னுக்கு வந்தன. இவை மிக வெளிப்படையாகவே தீவிரவாதத்தைக் கண்டித்தன. அதோடு மட்டுமல்லாது தற்போது இந்த அமைப்புகள் தேர்தல் அரசியலில் நேரடியாகவோ அல்லது ஆதரவு என்ற நிலையிலோ பங்கேற்கின்ற சூழலைக் காண முடிகிறது. தமுமுக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் அரசியலில் வெற்றியின் முதல் படியை எட்டியுள்ளது. இவை எல்லாம் முஸ்லிம் மக்கள் தீவீரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

சென்ற 2010ல் பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பு முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லப்பட்டது என்பதோடு, நடுநிலையாளர்கள், மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டோர் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அது தீர்ப்பே அல்ல கட்டப் பஞ்சாயத்து என்று சொன்னவர்களும் உண்டு. இத்தீர்ப்பை முஸ்லிம் அல்லாத சட்ட மற்றும் வரலாற்று அறிஞர்கள் என அறிவுஜீவிகள் சமூகம் முற்றிலும் நிராகரித்தது. அப்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் இந்திய ஜனநாயகம், நீதித்துறை என அனைத்தின் மீதும் நம்பிக்கை மீண்டும் அற்றுப் போனது. அப்போதும்கூட இந்திய முஸ்லிம்கள் ஒரு சின்ன வன்முறையிலும் ஈடுபடவில்லை. இன்னமும் சொல்லப்போனால், வெளிப்படையாக கருத்துக்கூட கூறாமல், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மெளனத்தின் மூலமே எதிர்க் கொண்டனர்.

இன்றைய அரசியல் சூழலை சற்று உற்று நோக்குவோம். இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஊழல், நிர்வாக சீர்கேடு, பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிபணிதல், வாரிசு அரசியல் என பல்வேறு பிரச்சனைகளில் செல்வாக்கை இழந்து வருகிறது. மாற்றாக எழ வேண்டிய பா.ஜ.க. தன் இந்துத்துவ கொள்கையால் அதன் மீதான வெறுப்பு ஒருபுறம் இருந்தாலும், ஊழல், தலைமைப் போட்டி, மக்கள் பிரச்சனைகளில் கவனம் குவிக்காமை, மோடியின் அச்சுறுத்தல்,  உட்கட்சி பூசல் என தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியுள்ளது. இச்சூழலில், காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.க. ஆட்சிக்குக் கொண்டு வர சில முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு ஊடக பின்புலமும் உள்ளது. அதனால்தான், காங்கிரஸ் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்றவற்றை அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தான் முஸ்லிம் மக்களுக்கு என்றும் துணை நிற்பதாக காட்டுவதன் மூலம் முஸ்லிம் வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ‘மாலேகான், மெக்கா மசூதி’ உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னணியில் இந்துத்துவ அமைப்புகள் உள்ளதைச் சுட்டிகாட்டி ‘இந்து தீவிரவாதம்’ பற்றிக் கூறிய கருத்துக்கள் நாடெங்கும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோரவில்லை என்றால் பாராளுமன்றத்தையே நடத்த விடமாட்டோம் என பா.ஜ.க. அறிவித்ததோடு, இந்த குற்றச்சாட்டில் தப்பித்துக் கொள்ள வழி தேடிக் கொண்டுள்ளது.

இதுபோன்ற சூழலில்தான் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் சர்ச்சைக்குள் சிக்கித் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, அதன் அடிப்படையில் முஸ்லிம் தலைவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டி, அவர்கள் சொன்ன ஆலோசனைகள் அடிப்படையில் சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. இந்தப் படிப்பினையை கமல்ஹாசன் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இத்தடையை ஆதரிக்கும் யாரும் முன்வைக்காதது ஆச்சரியமளிக்கிறது. இத்தடையை எதிர்க்கும் நடுநிலையாளர்கள் கூட கமல்ஹாசனின் முஸ்லிம் எதிர்ப்பு போக்கை ஆதரிக்காதது சற்று ஆறுதல் அளிக்கிறது.

திரைப்படங்களைத் தணிக்கைச் செய்து சான்றளிக்கும் அதிகாரம் மத்திய அரசுத்தான் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியும், பிரகாஷ் ஜா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழக அரசு இத்திரைப்படத்தைத் தடை செய்ததை மறுபரீசிலனை செய்ய வேண்டுமென தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி கூறியுள்ளார். இன்றைய இந்து நாளிதழில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் தடை தவறு என்பதற்கு வழக்கமான தன் வாதங்களை முன்வைத்தாலும், பெரும்பாலும் நீதிமன்றங்கள் வழங்கிய பல்வேறு தீர்ப்புக்களைச் சுட்டிக்காட்டி வாதிட்டுள்ளது. என்னைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் இந்து போன்ற செய்தித்தாள்களில் வரும் தகவல்களையும் கட்டுரைகளையும் உற்று நோக்குபவர்கள் என்பதும் இங்குக் குறிப்பிட வேண்டும்.

ஆனால், ‘டேம் 999’ தடை குறித்து உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய தீர்ப்பு இவ்வாதங்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டது எனலாம். ‘ஒரு மாநிலத்தின் அச்ச உணர்வுகளைத் தவிர்த்துவிட்டு தனி நபரின் உரிமைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ள முடியாது. மாநிலத்தின் அதிருப்தியைப் பார்க்காமல் நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. இந்த வழக்கு முற்றிலும் சட்டம் சார்ந்தது என்றாலும், மக்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறி தடையை நீக்க மறுத்துள்ளனர். இது ‘விஸ்வரூபம்’ தடைக்கான நியாயத்தை அளிக்கிறது. ஏனெனில், இப்படத்தைப் பார்த்த முஸ்லிம் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக இப்படத்தைத் திரையிட விட மாட்டோம் என்று கூறியுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு முஸ்லிம் தலைவர்கள் அச்சமூகத்தின் ஒட்டுமொத்த குரல் என்பதை யாரும் மறுக்கவியலாது.

சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இப்படம் தடை செய்யப்பட்டதைப் பலரும் விமர்சிக்கின்றனர். இது முற்றிலும் உண்மை என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும், அமெரிக்க திரைப்படத்தை எதிர்த்து சென்னையில் நடந்த முஸ்லிம்களின் போராட்டம் சற்றே அரசை அச்சுறுத்தி உள்ளது.  இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதால் சென்னை மாநகர காவல் ஆணையர் திரிபாதி அப்பொறுப்பில் இருந்து உடனடியாக மாற்றப்பட்டதை இங்கு இணைத்துப் பார்க்க வேண்டும். அதோடுமட்டுமல்லாது, இப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்தவுடனேயே தமிழக அரசு நேற்றைய முன்தினம் தமிழகம் எங்கும் காவல்துறையை ‘அலர்ட்’ செய்ததும், கிராம நிர்வாக அதிகாரிகளை அந்தந்த ஊர்களில் இருக்குமாறு பணித்ததும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில், இதுபோன்ற உணர்ச்சிபூர்வமானப் பிரச்சனைகள் எளிதில் போராட்டமாகப் பற்றி எரியும் வாய்ப்புள்ளதையும் புறந்தள்ள முடியாது.

மேலும், முழுவதும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படம் எடுக்க முடியாது என்றாலும், ஒரு சமூகத்திற்கு எதிராக கருத்து கூறுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிப்பது என்பது சட்டப்படி குற்றமென்றாலும், அவ்வாறான சூழலை உருவாக்குவது ஒரு கலைஞனின் நோக்கமாக இருக்கக் கூடாது. இதை சமூக அக்கறையுடைய படைப்பாளிகள் எனக்கூறிக் கொள்பவர்கள் செய்ய துணியமாட்டார்கள்.

அதையும் தாண்டி, ஜெயலலிதாவின் அரசியல் இதில் உற்று நோக்கப்பட வேண்டியது. சென்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் அதிமுகவை ஆதரித்தன. முஸ்லிம் வாக்குகள் பெரும்பான்மையாக அதிமுக கூட்டணிக்கே விழுந்தது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கப் போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளது நுட்பமான தேர்தல் அரசியல் தந்திரம். ஒருபுறம் மோடி பதவியேற்பில் கலந்துக் கொள்வதன் மூலம் இந்துத்துவ முகம், மறுபுறம் முஸ்லிம்கள் பிரச்சனைகளில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் வாயிலாக சிறுபான்மையினர் ஆதரவு எனும் மற்றொரு முகம் என அழகாகக் காய் நகர்த்துகிறார் என்றே சொல்லலாம்.

இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நான் ஏற்கனவே சொன்னது போல், எதற்கும் தடை தீர்வல்ல என்ற போதிலும், கமலஹாசனின் முந்தைய கால இந்துத்துவ அரசியல், குடியரசு தினத்திற்கு முன்நாள் வெளியிடுவதன் மூலம் இந்துத்துவத்துடன் இயைந்த தேசப்பக்தி, முஸ்லிம் மக்களுக்கு எதிராக உள்ள பொதுப்புத்தி அரசியலை அறுவடை செய்தல் என எல்லாவற்றையும் காசாக்கும் யுத்தி இம்முறை தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மிக அடிப்படையான காரணமாக அமைந்துள்ளது.

Thursday, January 24, 2013

சற்றே நிழல் சுகம் பெற ஒரு மரம்!


புதுச்சேரி நகரத்தின் மையப் பகுதியில் உள்ள நேரு வீதியில் வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. அதனுள்ளேயே அனைத்து மகளிர் காவல் நிலையமும், அருகில் போக்குவரத்துக் காவல் நிலையமும் உள்ளன. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி இது.

காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிற்படி அருகே படர்ந்து நிழல் தரும் 'சக்கரை மரம்' ஒன்று நீண்ட காலமாக இருந்தது. துயரங்கள் பல சுமந்து, விடிவு தேடி வரும் மக்களுக்கு இம்மர நிழல் சற்று இளைப்பாற உதவும். எங்களைப் போன்ற இயக்கவாதிகளைச் சொல்லத் தேவையில்லை. கூட்டம் போடவும், போராட்டம் நடத்தவும், பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கவும் பலமுறை இங்குக் கூடுவோம். அப்போது இம்மரத்தின் நிழலையும், காய்த்துக் கிடக்கும் சக்கரைப் பழத்தையும் நாங்கள் சுவைக்கத் தவறுவதில்லை. சென்ற 'தானே' புயலில் இம்மரமும் மரணத்தைத் தழுவியது. பலமுறை அங்கு நின்ற போது மரமற்ற வெறுமையும், வெயிலின் தாக்கத்தையும் உணர முடிந்தது.

அங்கு ஒரு மரம் வைக்க வேண்டுமென நண்பர்கள் அஷ்ரப், பாரதி ஆகியோர் என்னிடம் கூறினர். பாரதி தன்னிடம் மரக்கன்றை பாதுகாக்கும் வலைக் கூண்டு உள்ளதெனவும், மரக்கன்று வாங்கி வந்தால் வைத்து விடலாம் என்றும் கூறினார். சென்ற ஜனவரி 1 அன்று மரக்கன்று வைக்க முடிவு செய்தோம். விடுமுறை என்பதால் எங்கும் மரக்கன்று கிடைக்கவில்லை. ஒரு வழியாக அலைந்து தேடிக் கண்டுபிடித்து அதே சக்கரை மரக்கன்று ஒன்றை வாங்கி வந்தோம்.

மதிய வேளையில் மரம் வைக்க பள்ளத்தைத் தோண்ட துவங்கியவுடன் அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ராமராஜ் அவர்கள் எங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எப்போதும் பிரச்சனைக்காகவே வருபவர்கள் இன்று திடீரென பள்ளம் தோண்டிக் கொண்டிருகிறார்களே என்று. அங்கு மரம் ஒன்று வைக்கப் போகிறோம் என்றவுடன் எங்களைப் பாராட்டினார். அருகிலிருந்த போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் அதிகாரிகளும் அங்கு குழுமினர். காவல் கண்காணிப்பாளர் கையாலேயே மரக்கன்றை நட்டோம். வந்திருந்த அனைவரும் தண்ணீர் ஊற்றினோம். இனிப்பு பொட்டலம் ஒன்றைப் பிரிந்து எல்லோருக்கும் இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார் காவல் கண்காணிப்பாளர். எளிதாக முடிய வேண்டிய வேலை, ஒரு சிறப்பான விழா போன்று நடந்தேறியது. அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இவ்வளவு நாள் நாம் இதை யோசிக்கவில்லையே எனப் பேசியபடியே அனைவரும் கலைந்தார்கள்.

இப்போது அந்த மரம் நன்றாக துளிர் விட்டு தழைத்தோங்க துவங்கியுள்ளது. வாக்களித்தபடி தினமும் காலை, மாலை என கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்களும், மகளிர் காவல்நிலையத்தினரும் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். ஒரு சின்ன விஷயம்தான் இது. ஆனால், மனத்திற்கு எத்தனை மகிழ்ச்சியைத் தருகிறது பாருங்கள். தன் நிழலே தனக்குப் பயன்படாத போது, வெயிலில் காய்ந்து மற்றவர்களுக்கு நிழலும் தரும் மரமென்ற உயிரும் நம் சொந்த பந்தம் தான்.

Saturday, January 19, 2013

மாணவர்களுக்குத் தாராளமாக உதவ வேண்டுகோள்!


அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குப் புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாகவே செயல்படுத்தி வருகிறது. இருந்தாலும் இவை மாணவர்களுக்கு முழுமையானதாக இல்லை. இதனைக் கணக்கில் கொண்டு கிராமப்புற மாணவர்களுக்கு உதவ 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில் ஒரு கிராமப்புற பள்ளிக்கு முதலில் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிவு செய்துள்ளோம். அந்தப் பள்ளிக்குத் தேவைகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்தோம். அவை: 1.) ஒரு எல்.சி.டி. புரொஜெக்டர், 2) 150 மாணவர்களுக்கு (6, 7, 8ஆம் வகுப்பு) காலணி (சேன்டக்ஸ்) 3) 800 மாணவர்களுக்கு முழுநிளச் சுவடி.

இதற்கு முகநூல் நண்பர்களின் உதவியை பெரிதும் எதிர்ப் பார்க்கின்றோம். தங்களால் முடிந்த நிதி உதவியினை காலத்தே அளித்து உதவ வேண்டுகிறோம். நிதி அளிப்பவர்களுக்கு முறையே வரவு செலவு கணக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கென தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளோம். 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' எங்கும் நிதியுதவி பெற்று செயல்படும் அமைப்பு அல்ல என்பதும், முழுக்க முழுக்க மக்களின் உதவிகளை மட்டுமே நம்பி செயல்படுகிற அமைப்பு என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.

நிதி உதவி அளிக்க விரும்புவோர் தொடர்புக் கொள்ள:

கோ. சுகுமாரன், செயலாளர்,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

பேச: 98940 54640
மின்னஞ்சல்: sugumaran.ko@gmail.com