Showing posts with label படுகொலை. Show all posts
Showing posts with label படுகொலை. Show all posts

Friday, May 28, 2021

கச்சநத்தம் மூவர் படுகொலை: நினைவஞ்சலி..

28.05.2018 அன்று சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவரை அகமுடையோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.

கச்சநத்தத்தில் உள்ள கறுப்பசாமி கோயில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினருடையது. 25.05.2018 அன்று நடந்த இக்கோயில் திருவிழா ஒட்டி ‘காலாஞ்சி’ அளிப்பது குறித்து அகமுடையோர், தேவேந்திரகுல வேளாளர் சமூகங்களுகிடையே முன்பகை இருந்து வந்துள்ளது. அதாவது கச்சநத்தம் ஊரைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவருக்குக் கோயிலில் இருந்து பூ, தேங்காய், பழம் கொண்டு சென்று அவரது வீட்டிற்கே அளிக்கும் முதல் மரியாதை செய்யவில்லை என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த முதல் மரியாதையைத்தான் ‘காலாஞ்சி’ என்று அழைக்கின்றனர். ‘காலாஞ்சி’ பற்றி திருமூலநாயினார் இயற்றிய “பத்தாம்திருமுறையென்னும் திருமந்திரம் மூவாயிரம்” நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்பகையால், 26.05.2018 அன்று மேற்சொன்ன சந்திரகுமார் அவரது மகன் சுமன் ஆகியோர் தங்களுக்கு முதல் மரியாதை அளிக்காதது குறித்து தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அருவாளை எடுத்துவந்து வெட்ட முயன்றுள்ளனர். அப்போது ஊர்காரர்கள் தடுத்ததால் பிரச்சனை அத்தோடு முடிந்தது.

இதுகுறித்து தேவேந்திரகுல வேளாளர் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அன்று இரவு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சண்முகநாதன், தேவேந்திரன் ஆகியோரிடம் மேற்சொன்ன சந்திரகுமார் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ‘எங்களுக்கு மரியாதை செய்யாமல் கறி விருந்து சாப்பிடுகிறீர்களா’ எனச் சாதியைக் குறிப்பிட்டுத் திட்டியுள்ளார். அப்போது அவ்வழியே வந்த திருப்பாச்சேத்தி போலீசார் சந்திரகுமாரை காவல்நிலையம் அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்துள்ளனர்.

மறுநாள் 27.05.2018 அன்று, கோயிலில் உச்சகால பூசை முடிந்தவுடன் தேவேந்திரகுல வேளாளர்கள் கூட்டம் போட்டு, சந்திரகுமாரை போலீசார் பிடித்துச் சென்றதால் பெரிய பிரச்சனை வரும் என்று கருதி பழையனூர் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். போலீசாரும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

மறுநாள் 28.05.2018 அன்று இரவு சுமார் 9 மணியளவில், ஏற்கனவே முதல் மரியாதை தரவில்லை என்ற முன்பகையோடு இருந்தவர்கள் கத்தி, அருவாள் போன்ற ஆயுதங்களோடு கச்சநத்தம் தேவேந்திரகுல வேளாளர் பகுதிக்குள் நுழைந்து மேற்சொன்ன சண்முகநாதன் உள்ளிட்டவர்களை வெட்டிச் சாய்த்தனர். இதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகரன் ஆகியோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். போலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படுகொலை சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.

இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த பழையனூர் காவல்நிலையப் போலீசார் 3 பெண்கள் உட்பட 33 பேர் மற்றும் 4 சிறார்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கச்சநத்தம் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் செல்வாக்கு இருந்ததால், பாதிக்கப்பட்ட மக்களை மூத்த தோழர் இரா.நல்லக்கண்ணு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். முற்போக்குச் சிந்தனையுடைய இயக்கங்களைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இவ்வழக்கில் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி பாதிக்கப்பட்டோர் தேர்வின்படி மூத்த வழக்கறிஞர் சின்னராசு அரசு சிறப்பு வழக்கறிஞராக (Special Public Prosecutor) நியமிக்கப்பட்டார். அவருக்குத் துணையாக மனித உரிமை ஆர்வலரும், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அயராது போராடி வருபவருமான தோழர் வழக்கறிஞர் பகத்சிங் உடன் இருந்து பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கப் பாடுபட்டு வருகிறார்.

2019 நவம்பர் மாதம் தொடக்கத்தில் மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வருவது குறித்து கூறினார். விசாரணையின் முதல் நாள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும், நீங்களும் வாருங்கள் என்று கூறினார். நானும் சரியென்று கூறினேன். வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற இருந்தது.

சென்ற 06.11.2019 அன்று வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், சோகோ பாட்சா, அழகுமணி ஆகியோர் மதுரையில் இருந்து வந்தனர். நானும் சிவகங்கை சென்றேன். சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த உடனேயே ஒரு மூத்த வழக்கறிஞர் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்குக் கைக் கொடுத்து “You are a legend sir” என்று கூறிச் சென்றார். அவர் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகும் மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.

வழக்கு விசாரணை நடைபெற இருந்த நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சின்னராசு, வழக்கறிஞர் பகத்சிங்குடன் வந்தார். 24 ஆண்டுகள் கழித்து அந்த மீசையின் கம்பீரம் குறையாத வழக்கறிஞர் சின்னராசு அவர்களைக் கண்டேன். கொடைக்கானல் தொலைக்காட்சி வெடிகுண்டு வழக்கில் தோழர் பொழிலன் உள்ளிட்ட சிலருக்கு வழக்கறிஞர் அவர். 1997-இல் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பு நாளன்று அவரைப் பார்த்த பின்னர், அப்போதுதான் பார்த்தேன்.

வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தோம். சாட்சிகள் நடந்த கொடூரமான மூன்று படுகொலைச் சம்பவங்களை வாக்குமூலமாக அளித்தனர். மதுரையின் அனைத்து மூத்த வழக்கறிஞர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராயினர். நாங்கள் நீதிமன்றத்தில் இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பின்னர், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றப் பொறுப்பு அப்போது மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி ப.உ.செம்மல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இவ்வழக்கின் விசாரணையை நாள்தோறும் நடத்தினார். வழக்கு இறுதிக் கட்ட விசாரணை நிலைக்கு எட்டிய நிலையில் நீதிபதி ப.உ.செம்மல் கடலூர் மாவட்ட நிரந்திர மக்கள் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். வழக்கு விசாரணை அவர் விட்டுச் சென்ற நிலையிலேயே இன்றும் உள்ளது.

உடற்கூறாய்வு அறிக்கையின்படி இறந்துப் போன ஒவ்வொருவர் உடலிலும் 50க்கும் மேற்பட்ட ஆழமான காயங்கள். அவ்வளவுக் கொடூரமான படுகொலைகள்.

இன்று கச்சநத்தம் சாதிய படுகொலையில் உயிரிழந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோரின் நினைவு நாள். இப்பதிவை எழுதும் இந்நேரத்தில்தான் அந்த மூவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

என் நெஞ்சார்ந்த நினைவஞ்சலி..

Wednesday, April 14, 2021

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கு: அதிமுக, திமுகவும் ஒரே நிலைதான் எடுத்தன...

கர்ணன் படச் சர்ச்சைக் குறித்து பலரும் பேசி வருகின்றனர். 1995 என்பதற்குப் பதிலாக 1997 என்று கொடியன்குளம் சம்பவம் நடந்த காலத்தை மாற்றி சொல்லியுள்ளது தவறுதான். 1991 – 1996 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி. 1996 – 2001 வரை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, அதனைத் திருத்திவிடுவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாக செய்தி வந்துள்ளது.

இந்தத் தவறை வைத்துக் கொண்டு ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டும்தான் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நடந்தது போலவும், திமுக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் பலரும் எழுதியுள்ளனர். மனுஷ்யபுத்திரன் தீக்குளித்துவிடுவார் போல. ஆனால், அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறின என்பதுதான் உண்மை.

1996-இல் மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 6 தலித்துகள் அப்பகுதியிலுள்ள ஆதிக்கச் சாதியினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த முருகேசன் தலையை வெட்டி வீசினர் சாதி வெறியர்கள். முருகேசன் திமுகவைச் சேர்ந்தவர்.

இச்சம்பவம் நடந்த நாள் முதலே வழக்கறிஞர் பொ.இரத்தினம், உடன் பல்வேறு வழக்கறிஞர்கள் குழுவாகப் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்கப் பாடுபட்டனர். அம்மக்களுக்குச் சட்ட ரீதியாக உதவிகள் செய்தனர்.

இவ்வழக்கில் 41 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை உயர்நீதின்ற உத்தரவின் அடிப்படையில் சேலத்திற்கு மாற்றப்பட்டு நடந்தது. விசாரணை முடிந்து 27.06.2001 அன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஏ.ஆர்.இராமலிங்கம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மீதமுள்ள 24 பேரையும் விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென அரசு வழக்கறிஞர் (அதிமுக) அரசுக்கு அறிக்கை அளித்தும், அபோதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் அனைவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், என்.பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு 19.04.2006 அன்று தீர்ப்பு வழங்கியது.

அத்தீர்ப்பில் விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மீதமுள்ளவர்களுக்குப் போதிய ஆதாரங்கள் இருந்தும் அரசு மேல்முறையீடு செய்யாத காரணத்தால் தண்டிக்க முடியவில்லை எனத் தீர்ப்பில் நிதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

“52 …. we have concluded that there is enough material to hold against all the accused. But, unfortunately, the State has not preferred appeal against the acquittal of the remaining accused”

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென அப்போதைய திமுக அரசுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பிலும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. முதல்வர் கருணாநிதி தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள், அதில் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறி மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.சிர்புர்க்கர், தீபக் வர்மா ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 22.10.2009 அன்று குற்றவாளிகள் 17 பேரின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. விடுதலை செயப்பட்ட 24 பேருக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யாததால் உச்சநீதிமன்றமும் இவர்களுக்குத் தண்டனை வழங்கவில்லை.

அதிமுக, திமுக என இரண்டு அரசுகளும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டன. இதனால், மீதமுள்ள 24 கொடும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டனர்.

தலித்துகளின் வழக்குகளில் அதிமுக, திமுக இரண்டுமே ஆதிக்கச் சாதிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றை விட்டு ஒன்றை நியாயப்படுத்துவது சரியல்ல.

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதுகுறித்து விரிவாக எழுத வேண்டும்.

Thursday, September 03, 2020

அய்யா வே. ஆனைமுத்து அறிக்கை...

1987, செப்டம்பர் 1 அன்று பொன்பரப்பி சிற்றூரில் தோழர்கள் தமிழரசன், தருமலிங்கம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் ஆகியோரை தமிழகக் காவல்துறையினர் பொதுமக்கள் போர்வையில் அடித்துக் கொன்றனர். காயமடைந்து உயிரோடு இருந்தவர்களையும் சிகிச்சை அளிக்காமல் சாகடித்தனர். இதற்குக் காவல்துறை ரூ. 1 கோடி வரை செலவு செய்ததாக அப்போது கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் பொன்பரப்பி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். வங்கிக் கொள்ளை நடந்த போதும், அதைத் தொடர்ந்த தாக்குதலையும் நேரடியாக பார்த்தவர்களைச் சந்தித்துள்ளார். கிடைத்தத் தகவல்களை ஆங்கிலத்தில் 18 பக்க அறிக்கையாக அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கிற்கு அனுப்பியுள்ளார். அதில் தமிழரசன் மற்றும் தோழர்கள் உயிரைப் பறித்தது தவறு என்று தெளிவாகக் கூறியுள்ளார். அதோடு இதுகுறித்து தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். ஆனால், காவல்துறை இத்தாக்குதலில் ஈடுபட்டது பற்றி எதுவும் கூறவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்க வேண்டும். இருப்பினும், தோழர்கள் கொல்லப்பட்டது குறித்து அவரின் அறிக்கை ஓர் வரலாற்று ஆவணம். 

Wednesday, July 08, 2020

கண்ணகி முருகேசன் – நினைவஞ்சலி!

08.07.2003 : கண்ணகி முருகேசன் இருவருக்கும் பூச்சி மருந்தை வாயில் திணித்து, உயிர் போகும் முன்னே எரித்துக் கொன்றனர் சாதி வெறியர்கள். கண்ணகி வன்னியர் சமூகத்திலும், முருகேசன் தலித்தாகவும் பிறந்ததைத் தவிர வேறொன்றும் இக்கோடூரப் படுகொலைக்குக் காரணமல்ல. 17 ஆண்டுக் காலம் இவ்வழக்கை நடத்திக் குற்றவாளிகளுக்குத் தண்டனைப்
பெற்றுத் தர போராடி வருகிறார் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம். உடன் நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சில நல்லுள்ளம் படைத்த நண்பர்கள் உதவியாக உள்ளனர்.

சம்பவம் பற்றி அறிந்தவுடன் நேரில் சென்று விசாரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணைக் கோரி வழக்குத் தொடர்ந்தார் வழக்கறிஞர் இரத்தினம். 2004-இல் உயர்நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால், சி.பி.ஐ. சட்டப்படியும், சரியாகவும் நடந்து கொள்ளவில்லை. முதலில் விசாரித்த சி.பி.ஐ. காவல் ஆய்வாளர் கே.சுப்பையன், பின்னர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்ட பின் விசாரித்த சி.பி.ஐ. காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.டி.நந்தகுமார் ஆகியோர் வழக்கைக் கெடுக்கச் செய்த குளறுபடிகள் ஏராளம்.

சி.பி.ஐ. முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவின் உடன்பிறந்த தம்பி அய்யாசாமி (இரண்டாவது படத்தில் இருப்பவர்), மற்றொரு உறவினர் குணசேகரன் ஆகியோரை வழக்கில் சேர்த்து குற்றவாளியாக்கியது. கண் முன்னே நடந்த இக்கொடூரத்தின் நினைவுகள் ஒருபுறம், மறுபுறம் எந்தக் குற்றமும் செய்யாமல் இரு தலித்துகள் மிகுந்த மன உளைச்சல், துயரத்துடன் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளைக் குற்றவாளிகளாக்கிப் பின் “அப்ரூவர்” ஆக்கும் சி.பி.ஐ. முயற்சிக்கு வழக்கறிஞர் இரத்தினம் ஒப்புக் கொள்ளவில்லை. இது காலத்திற்கும் தீராப் பழியாகிவிடும் என்பதால் யார்தான் இதை ஏற்றுக் கொள்ள முடியும்.

வழக்கறிஞர் திலகேஸ்வரன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரின் நிலைக் குறித்து விரிவாக எடுத்துக்கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கும் குற்றம்சாட்டப்பட்ட இரு தலித்துகளுக்கும் நிவாரணம் அளிக்கவில்லை. சி.பி.ஐ. செய்தக் குளறுபடிகளைப் பட்டியலிட்டு கூடுதல் விசாரணை (Further Investigation) நடத்தவும், சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கவும் கோரப்பட்டதைத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு ஏற்கவில்லை. மாறாக விசாரணை நீதிமன்றத்தில் தீர்வுக் காணுங்கள் என்று உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில் இரு தலித்துகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற சவால் நிறைந்தப் பணியை வழக்கறிஞர் இரத்தினம் தலைமையிலான வழக்கறிஞர் குழு மேற்கொண்டு வருகிறது. இவர்களுடன் உடன் இருந்து பணியாற்றுவதால் இதன் துயரங்களை நானும் சுமந்து கொண்டிருக்கிறேன்.

கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் குற்றவாளிகளின் மிரட்டலால் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சிகள் ஆயினர். முருகேசனின் உறவினர்கள் சிலரும் பிறழ் சாட்சி ஆயினர். குற்றவாளிகளின் நேரடி மிரட்டலுக்கு அஞ்சி அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற சாட்சி மறுநாள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார். சி.பி.ஐ., தமிழகக் காவல்துறை இந்த உயிரிழப்பு பற்றித் துளியும் கவலைப்படவில்லை. இதில் உயர்நீதிமன்றமும் சேரும்.

கண்ணுற்ற சாட்சிகளாக ஆக்க வேண்டிய இரு தலித்துகளைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்த சி.பி.ஐ., சம்பவத்தைக் கூட்டத்தோடு கூட்டமாக மறைந்திருந்து பார்த்த முருகேசனின் அம்மா சின்னப்பிள்ளையை (சாமிக்கண்ணுவின் இரண்டாவது மனைவி) விசாரித்து கு.ந.ச. 161-இன்படி வாக்குமூலம் பெறவில்லை. அரசுத் சாட்சிகளின் படியலிலும் சேர்க்கவில்லை.

வழக்கு விசாரணையின் போதுதான் சி.பி.ஐ. சின்னப்பிள்ளையிடம் செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் முன் நிறுத்தி கு.ந.ச. 164-இன்படி வாக்குமூலம் பெற்றுள்ளது தெரிய வந்தது. அவ்வாக்குமூலத்தைப் பார்த்தால் சின்னப்பிள்ளை மிகத் தெளிவாக குற்றவாளிகளின் பெயர்கள் அனைத்தையும் கூறியதோடு, சம்பவத்தில் ஈடுபட்டு, வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்படாதப் பலரது பெயரையும் கூறியுள்ளார். இவரது இந்த வாக்குமூலம் ஒன்றே குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்றுத் தரப் போதுமானது. அதனால்தான், சி.பி.ஐ. இவரை விசாரித்து சாட்சியாகச் சேர்க்கவில்லை.

சின்னப்பிள்ளையை நீதிமன்ற சாட்சியாக (Court Witness) விசாரிக்க வழக்கறிஞர் இரத்தினம் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருந்த நிலையில், சி.பி.ஐ. தரப்பு அரசு வழக்கறிஞர் அவசரம் அவசரமாக முந்திக் கொண்டு மனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து சின்னப்பிள்ளை சாட்சியம் அளித்தார். நீதிமன்றத்தில் சின்னப்பிள்ளை சாட்சியம் அளிக்கும்போது குற்றவாளித் தரப்பு வழக்கறிஞர்கள் செய்த ரகளை நிதித்துறையின் மாண்பையே கேலிக்கூத்தாக்கியது.

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 7(2)-இன்படி குற்றவாளிகளின் சொத்துக்களைப் பற்றுகைச் (Property attachment) செய்ய கடலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுப் பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சி.பி.ஐ. சொத்துப் பட்டியலைச் சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இவற்றை எல்லாம் பட்டியலிட்டு, இவ்வழக்கில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விதிகள் 5(1)-இன்படி பாதிக்கப்பட்டோர் தேர்வின்படி மூத்த வழக்கறிஞர் ஒருவரை அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கவும், சாட்சி செல்வராஜ் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும், பிறழ் சாட்சிகளாக மாறிய முருகேசன் உறவினர்களை மீண்டும் விசாரிக்கவும், பணம் கொடுத்து சாட்சிகளைக் களைத்தக் குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கைக் கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பி.கே.இளவரசன், முத்துகுமரன் பெயரில் தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகளிலும் நியாயம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இவ்வழக்குகளை விசாரித்து உத்தரவிட்ட இரு நீதிபதிகள் அமர்வில் மூத்த நீதிபதி மணிக்குமார் ஆவார்.

சம்பவம் நடந்த போது விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்குத் துணைப் போயினர். நக்கீரன் இதழில் செய்தி வந்தபின் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் பெற்று கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன் உட்பட வன்னியர் நால்வர் கண்ணகிக்கு விஷம் கொடுத்து கொன்று எரித்ததாகவும், முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, சித்தப்பா அய்யாசாமி உட்பட தலித்துகள் நால்வர் முருகேசனுக்கு விஷம் கொடுத்து கொன்று எரித்ததாகவும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், எட்டுப் பேரையும் கைது செய்து கடலூர் நடுவண் சிறையிலும் அடைத்தனர். பின்னர் அனைவரும் பிணையில் வெளியே வந்தனர். பின்னர் இந்த வழக்கில் எட்டு பேர் மீதும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இப்பொய் வழக்கில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த விருத்தாசலம் காவல்நிலைய அப்போதைய காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோரையும் சி.பி.ஐ. இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்தது. இதில் செல்லமுத்து காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். தமிழ்மாறன் உளுந்தூர்பேட்டையில் காவல் ஆய்வாளராக இருந்து லஞ்சம் பெற்ற வழக்கில் ஊழல் மற்றும் கண்காணிப்புப் பிரிவுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுப் பிணையில் உள்ளார்.

இந்நிலையில், தலித்துகள் நால்வர் மீது பொய் வழக்குப் போட்ட மேற்சொன்ன இரு காவல் அதிகாரிகள் மீது இ.த.ச. 201-இன்படி மட்டுமே குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி குறைந்தப்பட்ச தண்டனை மட்டுமே கிடைக்கும். ஆனால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி குற்றசாட்டுப் பதிவு செய்யப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக் கிடைக்கும். எனவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 2(1)-இன்படி குற்றச்சாட்டுப் பதிவு செய்ய தற்போது வழக்கை விசாரிக்கும் கடலூர் தனி நீதிமன்றத்தில் (Special Court for SC and ST Cases) மனுத் தாக்கல் செய்து வாதாடினார் வழக்கறிஞர் இரத்தினம். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இரு காவல் அதிகாரிகள் மீதும் மேற்சொன்ன சட்டப் பிரிவின்கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

குற்றவாளிகள் தரப்பில் விடப்படும் கடும் அச்சுறுத்தல்களுக்கு இடையே முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு குடும்பத்தினர் உறுதியாக வழக்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் சாமிக்கண்ணுவின் தம்பி அய்யாசாமி, அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, வேப்பூர் காவல் நிலையத்தில் அய்யாசாமி மீது கொலை வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் பிணையில் வெளியே வந்துள்ளார். அவ்வழக்கின் குற்றப்பத்திரிகையைப் படித்தாலே இக்கொலை வழக்கில் அவர் பொய்யாகச் சேர்க்கப்பட்டது விளங்கும்.

அய்யாசாமியின் மனைவி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். ஊருக்குப் பல நன்மைகள் செய்து வருகிறார். இதனால், தேர்தலில் போடியிட்டுத் தோல்வி அடைந்த தரப்பினர் அய்யாசாமி குடும்பம் மீது கோபத்தில் உள்ளனர். அண்மையில் இதுகுறித்து நடந்த மோதல் ஒன்றில் அய்யாசாமி, அவரது மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈட்டியை கொண்டுக் காவல்துறையினரைக் கொல்ல முயன்றதாவும் விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளர் கொடுத்தப் புகார் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டு அய்யாசாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அய்யாசாமியைக் கைது செய்த விருத்தாசலம் காவல்துறையினர் அவரைத் தாக்கியுள்ளனர். இதனால், அவர் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரைக் காவல் அடைப்பு செய்த விருத்தாசலம் நீதித்துறை நடுவர் ’62 வயதாகும் இவரா ஈட்டிக் கொண்டுக் காவல்துறையினரைக் கொல்ல முயன்றார்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது மேற்சொன்ன பொய் வழக்குகளைப் பட்டியலிட்டு அய்யாசாமி மீது குண்டர் தடுப்புச் சட்டம் ஏவப்பட்டுள்ளது. விருத்தாசலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கண்ணகி முருகேசன் படுகொலை வழக்கில் இரு காவல் அதிகாரிகளுக்குத் தண்டனைக் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து சாமிக்கண்ணு, அய்யாசாமி குடும்பத்தினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடுகின்றனர் விருத்தாசலம் காவல்துறையினர். இதில் கண்ணகி முருகேசன் படுகொலை வழக்குக் குற்றவாளிகளின் தூண்டுதலும் உள்ளது.

அய்யாசாமி நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். மேலும், குருதி அழுத்தம், சிறுநீரகக் கோளாறும் உள்ளது. இதனால், சிறையில் உடல்நிலை மோசமடைந்து தற்போது கடலூர் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இவ்வளவு துயரங்களையும் சுமந்து கொண்டுக் கொலையுண்ட முருகேசனின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

வழக்கு ஆவணங்கள், கண்ணுற்ற சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் எரிந்த உயிர்களின் அலறல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தனியே கதறி அழலாம். ஆறுதல் அடையலாம். ஆனால், நீதிமன்றத்தில் அளிக்கப்படும் சாட்சியங்கள் காதில் விழும்போது விழியோரம் கண்ணீர் கசிவதைத் துடைத்துக் கொள்ளத்தான் முடிகிறது.

கண்ணகி முருகேசன் – இருவருக்கும் என் நினைவஞ்சலி!

கோ.சுகுமாரன்

08.07.2020