Tuesday, June 05, 2007

அது ஒரு பொடா காலம்! (7) சுப.வீரபாண்டியன்

நான் நந்தன் இதழின் சிறப்பாசிரியராக இருந்தபோது, தாயப்பன் எனக்கு அறிமுகமானார்.

அப்போது அவர், சென்னை பல் மருத்துவக் கல்லூரி மாணவர். துடிப்பான இளைஞர். தமிழில் சிறந்த சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர். எனவே, அவரைப் பொது மேடைகளில் அறிமுகப்படுத்துவதில், நானும் நண்பர் சாகுல் அமீதும் மிக விருப்பமாக இருந்தோம். அதன் விளைவாகவே, சிக்கலுக்குக் காரணமாக இருந்த சென்னைக் கூட்டத்துக்கும் அழைத்திருந்தோம்.

ஆனாலும், அன்றைய நிலைமைகள் குழப்பமாக இருந்த காரணத்தால், நான் அவரை வரவேற்புரை மட்டும் நிகழ்த்துமாறு சொன்னேன். பொடாவில் கைது செய்வதற்கு வரவேற்புரை மட்டுமேகூடப் போதுமானது என அன்றைய அரசு கருதிவிட்டது.

துன்பத்திற்கிடையில், தாயப்பனை எப்போது இங்கு அழைத்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், இரவு வரை தாயப்பன் வரவில்லை. மறுநாள் காலைச் செய்தித்தாள்களைப் பார்த்தபோதுதான், அவரை சேலம் சிறையில் அடைத்துவிட்டார்கள் என்பது தெரிந்தது.

அருகில் உள்ள சிறையில் அடைப்பதன் மூலம் நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ‘நல்ல எண்ண’த்தில் தொலைதூரச் சிறைகளில் கொண்டுபோய் அடைக்கும் பழக்கம் அன்றிருந்தது. சென்னையில் கைது செய்யப்பட்ட தாயப்பனை சேலத்திலும், மானாமதுரையில் கைது செய்யப்பட்ட பரந்தாமனை சென்னையிலும், புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட பாவாணனை கோவையிலும், ஈரோட்டில் கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தியை மதுரையிலும் சிறைகளில் அடைத்து மகிழ்ந்தது ஜெயலலிதா அரசு. என்னைப் போன்ற ஒரு சிலருக்கு விதிவிலக்கு என்றே கூற வேண்டும். சென்னையில் கைது செய்து, சென்னையிலேயே சிறை வைத்ததால், ‘மனு பார்க்க’ வருவோரின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும். அதற்கும், இடையில் தடை விதிக்கப்பட்டது. வாரத்துக்கு மூன்று நாட்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் மனு பார்க்கலாம் என்று கூறிவிட்டனர்.

அக்டோபர் 16-ம் நாள், மனுவுக்கு அழைப்பு வந்தபோது, மனம் மகிழும் வாய்ப்பு ஒன்றும் வந்தது.

வழக்கம் போல் காலை 11 மணியளவில், கூடுதல் கண்காணிப்பாளர் அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்ட போது, யாரெல்லாம் என்னைப் பார்க்க வந்துள்ளனர் என்று தெரியாது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கு கொண்டுசெல்லப்பட்ட பின் சிறிது நேரத்தில், எங்களைப் பார்க்க வருவோர் வலைக்கம்பிகள், தடுப்புகளுக்கு அந்தப் பக்கத்தில் உள்ளே அனுப்பப்படுவர். அப்போது தான் யார் யார் வந்துள்ளனர் என்பதை நாங்கள் அறியமுடியும்.

ஆனால் அன்றோ, எனக்கு முன்பே அவர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். அதுமட்டுமல்லாமல், சிறைக்கு உள்ளே, கூடுதல் கண்காணிப்பாளர் அறையின் உள்ளேயே அவர்கள் அமர்த்திவைக்கப்பட்டு இருந்தனர்.

என் மூத்த அண்ணன் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், என் மனைவி, என் மகள் மூவரும் அமர்ந்திருக்க, மகளின் மடியில் புத்தம் புது மலராக ஒரு குழந்தை. வியப்பிலிருந்தும் மகிழ்விலிருந்தும் மீள முடியாமல் அந்தக் குழந்தையை நான் உற்றுப் பார்க்க, ‘‘நம்ம பேரன்தாங்க’’ என்று என் மனைவி சொன்னதும், மகிழ்ச்சி, அப்படியரு மகிழ்ச்சி!

அவர்கள் அருகில் அமர, அன்று சிறை என்னை அனுமதித்தது. கண்காணிப்பாளர் ஒப்புதலுடன் இப்படிச் சில சிறப்புச் சலுகைகளைச் சிறையில் வழங்குவார்கள். அன்று காலை என் அண்ணன், கண்காணிப்பாளருடன் தொலைபேசியில் பேசியதன் விளைவாக, அவர்கள் உள்ளே அனுமதிகப்பட்டுள்ளனர் என்று அறிந்துகொண்டேன்.

இரண்டு மாதங்கள்கூட நிரம்பாத அந்தப் பிஞ்சுக் குழந்தையை என் மடியில் வைத்துவிட்டு, என் தோளில் சாய்ந்து மகள் இந்து அழுத அழுகை இப்போதும் என் நினைவில் உள்ளது.

அண்ணன் அதட்டினார்... ‘‘அழக் கூடாது! பெரியப்பா என்ன சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தேன், மறந்துட்டியா?’’ என்றார்.

என் மனமும் இளகத் தொடங்கியது. ஆனாலும், அது கண்ணீராய்க் கரைந்துவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

குழந்தையை என் முகத்தருகில் தூக்கி, அதன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தேன். ‘‘அப்பா, நாங்க அமெரிக்கா போறதுக்குள்ள வந்துடுவீங்களா?’’ என்று இந்து கேட்க, ‘‘ஜாமீன் கேட்டு போட்ட மனுவில் இன்னிக்குத் தீர்ப்பாம். சாயங்காலம் தீர்ப்புச் சொல்லிட்டா, நாளைக்கே அப்பா வந்துடப் போறான். எதுக்கு அழுவுற?’’ என்று அண்ணன் ஆறுதல் சொன்னார்.

10, 15 நிமிடங்கள் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். சட்ட விதிப்படி, இரண்டு காவலர்கள் இரண்டு பக்கமும் நின்று, எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். வழக்கு பற்றிய ரகசியங்களைப் பேசிக்கொள்கிறோமா, மறைமுக மாகக் கடிதங்கள், பொருள்களைப் பரிமாறிக்கொள்கிறோமா என்றெல்லாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கடமை.

பார்வையாளர்கள் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைக் காவலர்கள் உணர்த்தினர். புறப்படுவதற்கு முன், அண்ணன் ஒரு பழைய செய்தியை நினைவு கூர்ந்தார். ‘‘உன் பேரனை மட்டுமில்லப்பா... நீ குழந்தையா இருந்தப்போ, உன்னையும் நான் சிறைக்குத் தூக்கிட்டுப் போயிருக்கேன்’’ என்று அவர் சொல்ல, மனைவியும், மகளும் விழித்தனர்.

எங்கள் அப்பா காரைக்குடி இராம.சுப்பையா, கல்லக்குடிப் போராட்டத்தில் ஈடுபட்டு, 1953-ம் வருடம், கைதாகி திருச்சி சிறையில் இருந்தார். கல்லக்குடிப் போராட்டத்தில் முதல் அணிக்குக் கலைஞரும், இரண்டாவது அணிக்கு அப்பாவும், மூன்றாவது அணிக்குக் கவிஞர் கண்ணதாசனும் தலைமை ஏற்றிருந்தனர்.

அப்போது கலைஞரின் நெருக்கமான தொண்டராக, அவர் கூடவே அப்பா சிறையில் இருந்தார். அந்த வேளையில், ஒரு வயதுக் குழந்தையான என்னைப் பார்க்க அவர் ஆசைப்பட, அம்மாவும், அண்ணன் முத்துராமனும் என்னைச் சிறைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அன்று, இந்த அளவுச் சலுகைகூட வழங்கப்படாமல், கம்பி வலைகளின் வழியாக விரலைவிட்டு, என்னைத் தொட்டு அவர் முத்தம் கொடுத்துள்ளார்.

அந்தக் காட்சியைத்தான் அண்ணன் இப்போது நினைவுபடுத்தினார். 50 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, அதே காட்சி மீண்டும் எங்கள் குடும்பத்தில் அரங்கேறியது. இரண்டு காட்சிகளிலும் அண்ணனுக்கு இடம் இருந்தது.

பேரனின் பிஞ்சு விரல்களில் நான் மீண்டும் ஒரு முறை முத்தமிட, ‘பிரிவென்னும் ஒரு பாவி’ இடையில் வந்தான்.

மாலை வழக்குரைஞர்கள் வந்தனர். சற்று நேரம் மௌனமாக இருந்தனர். அவர்களின் மௌனம் எனக்குச் சத்தமாகச் செய்தி சொல்லியது.

‘‘என்ன, பிணை கிடைக்க வில்லையா?’’

‘‘ஜாமீன் குடுக்க முடியாதுன்னு நீதிமன்றம் சொல்லிடுச்சு. மறுபடியும் ஜாமீன் கேட்டு மனுப் போடக் கொஞ்ச நாளாகும்!’’

(தொடரும்)

நன்றி:
ஆனந்த விகடன்.
www.subavee.blogspot.com

3 comments:

Anonymous said...

Dear Sukumaran,

It's interesting to read Subavee's article. Thanks for you. One doubt for me. Whether Subavee was disassociated with Pazha.Nedumaran? Is it true means what's the reason?

Thanks.

Thamizhisai.

Anonymous said...

விகடன் நேரடியாக கிடைக்கப் பெறாதவர்களூக்கு உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சுப.வீ மற்றும் அவரது தோழர்கள் சிறையில் பட்ட துன்பம் மிகக் கொடியது. அவர்களது கனவுகளை நிறைவேற்றுவோம்.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

விகடன் நேரடியாக கிடைக்கப் பெறாதவர்களூக்கு உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சுப.வீ மற்றும் அவரது தோழர்கள் சிறையில் பட்ட துன்பம் மிகக் கொடியது. அவர்களது கனவுகளை நிறைவேற்றுவோம்.

ஒரு ஈழத் தமிழன்