Showing posts with label புதுச்சேரி அரசு. Show all posts
Showing posts with label புதுச்சேரி அரசு. Show all posts

Monday, June 01, 2026

தாய்வழிச் சாதிச் சான்று வழங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு தொடர்ந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.06.2026) விடுத்துள்ள அறிக்கை: 

புதுச்சேரியில் தாய்வழிச் சாதிச் சான்று வழங்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு தொடர்ந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

சென்ற கல்வி ஆண்டின் தொடக்கத்தில் தாய்வழிச் சாதிச் சான்று வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், கல்வி, வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களாகிய பூர்வகுடி மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் என கடும் எதிர்ப்புக் கிளம்பியது. 

இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்ய கோரி புதுச்சேரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகள் கடந்த ஓராண்டுகளாக விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளன. 

மேலும், புதுச்சேரி அரசு தாய்வழிச் சாதிச் சான்று வழங்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கருத்துரைக் கேட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், மத்திய அரசின் உத்தரவுகளையும்  சுட்டிக்காட்டி தாய்வழிச் சாதிச் சான்று வழங்கக் கூடாது என தெளிவுபடுத்தி கருத்துரை வழங்கியது. 

இந்நிலையில், இந்த ஆண்டும் சிலர் உயர்நீதிமன்றத்தை நாடி தாய்வழிச் சாதிச் சான்று வழங்க உத்தரவுப் பெற்றுள்ளனர். இது மண்ணின் மைந்தர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புகள் உள்ளிட்ட உயர்கல்வி பறிபோகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பலரும் தாய்வழிச் சாதிச் சான்று பெற்று மண்ணின் மைந்தர்களின் கல்வி, வேலைவாய்ப்பை கபளீகரம் செய்ய வழிவகுக்கிறது. 

உச்சநீதிமன்றத்தில் ஓராண்டாக வழக்கை நடத்தி முடிக்காத அரசு வழக்கறிஞரை மாற்றி வேறு ஒரு அரசு வழக்கறிஞரை பணியமர்த்தி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவரை (Designated Senior Advocate) நியமித்து தாய்வழிச் சாதிச் சான்று வழக்கை நடத்த வேண்டும். அதுவரையில் தாய்வழிச் சாதிச் சான்று வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து முதலமைச்சர், தலைமைச் செயலர், வருவாய்த்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்ப உள்ளோம்.

Tuesday, August 12, 2025

கொலைக் கூடங்களாக மாறி வருவதால் அனைத்து ரெஸ்டோ பார்களையும் மூட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.08.2025) விடுத்துள்ள அறிக்கை:

கொலைக் கூடங்களாக மாறி வருவதால் அனைத்து ரெஸ்டோ பார்களையும் மூட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த 09.08.2025 அன்று மிஷன் வீதியிலுள்ள ரெஸ்டோ பாரில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் மோஷ்க் சண்முகபிரியன் (வயது 23) அங்கிருந்த பவுன்சர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் ஷார்ஜன் (25) கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ரெஸ்டோ பார்களைக் கலால்துறையும், காவல்துறையும் கண்காணிக்காததாலும், விதிகளை மீறி விடிய விடிய நடத்த அனுமதித்ததாலும் இக்கொலை நடந்துள்ளது. சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் நகரம் முழுவதும் ரெஸ்டோ பார்களுக்கு அளவுக்கு அதிகமாக அனுமதி வழங்கிய முதலமைச்சர் ந.ரங்கசாமி, சுற்றுலா துறை அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் ஆகியோர் இக்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ரெஸ்டோ பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 12 மணிக்கு மேல் செயல்பட்டதால் 11 ரெஸ்டோ பார்களின் உரிமங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது கலால் துறை. இது ஒரு உயிர் போன பின்பு எடுக்கப்பட்ட காலங்கடந்த, கண்துடைப்பு நடவடிக்கை ஆகும்.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 251 ரெஸ்டோ பார்கள் உள்ளன. இதில் புதுச்சேரியில் 212, காரைக்காலில் 31, மாகேயில் 3, ஏனாமில் 5 ரெஸ்டோ பார்கள் உள்ளன. விதிகளை மீறி மக்கள் நெருக்கமாக வசிக்கக் கூடிய இடங்கள், பள்ளிகள், கோயில்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரும் தொகைப் பெற்றுக் கொண்டு ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டும் உள்ளது.

ரெஸ்டோ பார்களில் சட்டத்திற்குப் புறம்பாக பவுன்சர்கள் என்ற பெயரில் அடியாட்களை வைத்துக் கொள்ள கலால்துறை, காவல்துறை அனுமதித்தது ஏன்? இதனால், ரெஸ்டோ பார்கள் கொலைக் கூடங்களாக மாறி வருகின்றன.

எனவே, புதுச்சேரி அரசு ரெஸ்டோ பார்கள் அனைத்தையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.