Thursday, August 14, 2008

புதுச்சேரியில் தீ விபத்து - 40 குடிசைகள் எரிந்து சாம்பலாயின - வீடியோ காட்சிகள் - உதவிட வேண்டுகோள்!புதுச்சேரியின் நகரத்திற்கு அருகேயுள்ள மீனவர் கிராமமான வைத்திக்குப்பத்தில் இன்று (14-08-08) இரவு 9.00 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 40 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. தற்போதைய நிலவரப்படி உயிரிழப்பு ஏற்பட்டதற்கான தகவல் ஏதுமில்லை. உடைமைகள் முற்றிலும் எரிந்து மக்கள் கட்டிய துணியுடன் நின்றது துயரமான காட்சி.

அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. லட்சுமிநாராயணன், அப்பகுதி கவுன்சிலர் திருமதி பிரேமலதா, தேங்காய்த்திட்டு கவுன்சிலர் திரு.எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் தீ விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

புதுச்சேரி அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

மீனவர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். பலகாலமாக மின்சாரம் இல்லாத அப்பகுதிக்கு தற்போதுதான் அரசிடம் போராடி மின் இணைப்பு வாங்கித் தந்ததாக புதுவை மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்புத் தலைவர் திரு. இராம்குமார் கூறினார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, கிருத்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் தீ விபத்து நடந்த உடனேயே அப்பகுதிக்குச் சென்று தீயை அணைக்க உதவினர்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பிய அவலக் குரல் அனைவரையும் கலங்கச் செய்தன.

நிர்கதியாக நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுட முன்வர அனைவரையும் வேண்டுகிறோம்.

உதிவி செய்திட முன்வருவோர் தொடர்புக் கொள்ள:

திருமதி பிரேமலதா,
நகராட்சி கவுன்சிலர், குருசுக்குப்பம்.

கைபேசி எண்: 9789545437.

2 comments:

Anonymous said...

தோழர்,

தாங்கள் இட்ட பதிவு அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் முடிந்தளவு உதவுகிறோம்.

சோழன், நெல்லை.

Anonymous said...

கடற்கரை ஓரங்களில் கல் வீடுகள் கட்டி வாழவேண்டிய முதலுரிமை உடையவர்களான இவர்கள் குடிசைகளிலும், எங்கிருந்தோ வந்த வடநாட்டு ஆசிரமத்தார்கள் மற்றும் வேறு பல பணக்கார அந்நிய மாநிலத்தவர்களும் இங்குள்ள அனைத்து மனைகள் வீடுகள் எல்லாவற்றையும் வாங்கி வசப்படுத்தி சொகுசு பங்களாக்கள், உயர்தர தங்கும் விடுதிகள் என கட்டி மண்ணின் மைந்தர்களை புறந்தள்ளி நாறடித்து இன்று இவர்களுக்கு உள்ளதையும் பறிபோகும் அளவிற்கு கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். இதற்கு அரசாங்கமும் பதில் கூறவேண்டும். மத்திய அரசாங்கத்தின் நேரடி் செல்லப் பார்வையில் இயங்கிவரும் புதுச்சேரி மாநிலம்(?) தில்லியில் உள்ள அரசியல் புள்ளிகளின் ஆசியுடன் கடந்த சில பத்தாண்டுகளாகவே வடநாடுக்காரர்களின் முற்றுகை தளமாகிவிட்டது.

இப்போது இவர்ககளின் குடிசைகள் எரிந்து சாம்பலாகிவிட்டதால், அவர்களை அங்கிருந்து கிளப்பி ஏதாவது ஒரு சில்லரை அடுக்கு மாடிகளில் குடிவைத்துவிட்டு, அந்த இடத்தை வேறு ஏதாவது ஒரு பணப்புலிக்கு இரையாக கொடுத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருவேளை, இதுவே இந்த தீ விபத்தின் காரணமாக கூட இருக்கலாம் ...

முதலமைச்சர், மந்திரி பதவிக்கு குழாய்ச்சண்டை போட்டுக்கொண்டிருக்கும் பூஜ்ஜியங்களுக்கு இதெல்லாம் ஒன்றும் பெரிய விபத்தல்ல. மாறாக இதை வைத்த அரசியல் செய்து குளிர்காயும் சாமர்த்திசாலிகள்தான் அவர்கள்.

இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் அதுவும் புதுவையில் மேலும் புகழ்மிக்க அழகிய கடற்கரை ஓரத்தில் கடினமான உழைக்கும் வர்க்கமான மீனவர்கள் இதுநாள்வரை பாதுகாப்பற்ற சாதாரண குடிசைகளிலும், அருகிலேயே சொகுசு மிக்க வசதியான பங்களாக்கள், அரன்மனைகளை போன்ற வீடுகள், நட்சத்தர தங்கும் விடுதிகள் ... ஆஹா, புதுவையே! பாவேந்தர் பாரதிதாசன் மறுபிறவி எடுத்து வந்தால், புதுவையின் மகிமையை, அதன் அரசின் நிர்வாக திறமையை பாராட்டி புகழ்ந்து தள்ளியிருப்பார்.

பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்திருக்கும் என மன வருத்ததை அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மனம் தளராமல் மிகவும் தைரியத்துடன் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவர் என நம்புகிறேன்.

நன்றி.