Tuesday, September 30, 2008

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த தடை - கண்டனம்!

புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் அரசு.வணங்காமுடி (விடுதலைச் சிறுத்தைகள்), இரா.மங்கையர்செல்வன் (மீனவர் விடுதலை வேங்கைகள்), லோகு.அய்யப்பன் (பெரியார் தி.க), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), தங்க.கலைமாறன் (பகுஜன் சமாஜ் கட்சி), இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), பா.சக்திவேல் (மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்), சி.மூர்த்தி (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), ந.மு.தமிழ்மணி (செந்தமிழர் இயக்கம்), பார்த்திபன் (செம்படுகை நன்னீரகம்), பாவல் (வெள்ளையணுக்கள் இயக்கம்) ஆகியோர் 30-09-2008 அன்று விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவளித்து பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிப்பதின் மூலம் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளும் காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

பெரியார் தி.க. சார்பில் கடந்த 29-09-2008 அன்று சாரம், ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டது. இதில், பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்ற இருந்தனர். ஆனால், இதற்கு திடீரென அனுமதி மறுத்து காவல்துறையினர் கடிதம் அளித்துள்ளனர். காங்கிரஸ் அரசின் இந்தப் போக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரானது.

கடந்த 28-11-2007 அன்று பெரியார் தி.க. சார்பில் அரியாங்குப்பத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற இருந்த பொதுக்கூட்டம் காவல்துறையால் தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில், 28-07-2008 அன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்படக் கூடாது எனக் கூறி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டனர். இதன் பின்னரும் மீண்டும் தற்போது ஆர்பாட்டத்தைத் தடை செய்துள்ளது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.

இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்க சிங்கள அரசுத் திட்டமிட்டு இராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து குண்டு வீசி தமிழர்களை அழித்து வருகிறது. இந்த தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்து வருவதோடு, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பி வெளிப்படையாக உதவுகிறது.

இந்திய அரசின் ஈழத் தமிழர் விரோத நடவடிக்கையை தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. தமிழர்களிடம் இருந்து பெறப்படும் வரிப் பணத்தில் வாங்கப்படும் ஆயுதங்களைத் தமிழர்களை அழிக்கப் பயன்படுத்துவது, தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் எனக் குற்றசாட்டி வருகின்றன.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர் பிரச்சனையில் தன்னுடைய நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் செல்வாக்கு இழந்து வரும் புதுச்சேரி காங்கிரஸ் இது போன்ற தமிழர் விரோத நடவடிக்கையினால் வரும் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசின் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான போக்கைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் சார்பில், வரும் 06-10-2008 திங்களன்று, காலை 10 மணிக்கு, சாரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் - முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

1 comment:

Anonymous said...

உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள். உலகப் போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் இன்று ஈழத்தில் அரசு பயன்படுத்துகின்றது. இறக்கின்ற குழந்தைகள், தாய்மார்கள், ஏனையவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கின்றது. வன்னிச் செய்திகள் உங்களுக்கு வந்து சேர்கின்றதா என்பது தெரியவில்லை.

மல்ரி பரல் 1 நிமிடத்துக்கு 40 தடவைகள் குண்டுகளை வீசுகின்றது. மிக் விமானங்கள் 1000 கிலோ குண்டுகளை வீசுகின்றது. இதுவரை இந்த ஆண்டில் 1000 குண்டுகள் வீசப்பட்டுள்ளன. எழுத பல விடயங்கள் உண்டு.

தயவுசெய்து குரல்கொடுத்து ஆதரவு தாருங்கள்.


ஒரு ஈழத்தமிழன்