Monday, October 20, 2008

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மூலம் அமைதி : புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்!

புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் – சமுதாய இயக்கத் தலைவர்கள் கடந்த 17-10-2008 அன்று, புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அவர்களைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

மேலும், புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் ‘இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட இராணுவ உதவிகள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்நிலையில், இன்று (20-10-2008) கூடிய புதுச்சேரி சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டமன்றத்தில் தி.மு.க., பா.ம.க., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து தனிநபர் தீர்மானங்கள் கொடுத்திருந்தன. இதன்மீது விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தின.

இதனை ஏற்றுக் கொண்ட புதுச்சேரி முதல்வர் வி.வைத்தியலிங்கம், அரசு சார்பில் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது:

"இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிகைகளால் இலங்கை வாழ் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவது வருத்தத்தையும், கவலையையும் அளிக்கிறது. அங்குள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு மூலம் அமைதியை ஏற்படுத்தவும், அங்கு பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் அளிக்கவும் வகை செய்ய வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையினரால் தமிழகம் மற்றும் புதுவையைச் சார்ந்த மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த சட்டப் பேரவை கேட்டுக் கொள்கிறது."

இந்த தீர்மானம் ஒருமந்தாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென தி.மு.க., பா.ம.க., சி.பி.ஐ., புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை எழுப்பின. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் மனு!

1 comment:

Anonymous said...

Dear Sugumaran,

Its nice to hear that Puducherry Assembly has resolved for the Eelam cause.

Tamils must unite and extend their solidarity to Eelam people.

Jasmin, London.