Sunday, February 14, 2010

புதுச்சேரி சிறைக் கைதிகளின் உறவினர்கள் மறியல் - போலீஸ் தடியடி: பெண்கள் கைது!

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் தூய்மையான குடிநீர், போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, பார்வையாளர் அறையில் உறவினர்களுடன் நெருங்கிப் பேச வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்க வேண்டும். ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் பரோல் வழங்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டனைக் கைதிகள் கடந்த 8-ந் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் சிலர் மயக்கம் அடைந்ததால் அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென கைதிகள் கோரினர். ஆனால், சிறை நிர்வாகம் அதற்கு மறுப்புத் தெரிவித்தது. இதனிடையே, 13.02.2010 அன்று காலை 'உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக கைதிகளின் உயிரைக் காப்பாற்றவும், உடல்நிலைப் பாதிக்கப்பட்ட கைதிகளை வெளி மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்கவும்' வேண்டி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.), சிறைத்துறை தலைவர் (ஐ.ஜி.) ஆகியோருக்கு 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் தந்தி அனுப்பப்பட்டது.

உடனடியாக ஆயுள் தண்டனைக் கைதிகள் செல்வம், குள்ள ரகுமான், லோகநாதன், சுதாகர், சதீஷ், குமார் ஆகிய 6 பேர் சிகிச்சைக்காக அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஏற்கனவே, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கைதிகளுக்கு ஆதரவாக 12.02.2010 அன்று கைதிகளின் உறவினர்கள் திரளாக கலந்துக் கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) வர்மா, சிறைத் துறை தலைவர் (ஐ.ஜி.) பங்கஜ் குமார் ஜா ஆகியோர் சிறைக்கு வந்து நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தும் வரை உண்ணாவிரதம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து  கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது.

இந்த நிலையில் கைதிகளின் உறவினர்கள் 13.02.2010 அன்று காலை 11.30 மணியளவில் புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உருளையன்பேட்டை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்துச் சென்றனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி 45 பேரை கைது செய்தனர். பின்னர் போக்குவரத்து சீரானது.

போலீசாரின் தடியடியில் போராட்டத்தில் ஈடுபட்ட வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் காயமடைந்தனர். போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவிக்க சென்ற சதீஷ் (எ) சாமிநாதன், மணி ஆகியோரும் காயமடைந்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இப்போராட்டத்தினால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

No comments: