Saturday, April 10, 2010

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.04.2010) புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

(1)    துறைமுக விரிவாக்கத் திட்டம்:

புதுச்சேரி அரசு தனியார் பங்கேற்புடன் ரூ. 2600 கோடி மதிப்பிலான துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசுக்குச் சொந்தமான் 153 ஏக்கர் நிலத்தினை புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. மேலும், தேங்காய்த்திட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தினைக் கையகப்படுத்த முடிவு செய்தது. இத்திட்டம் கொண்டு வந்தால் ஒட்டுமொத்த புதுச்சேரிக்கே ஆபத்து ஏற்படும் என பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் மக்கள் ஆதரவுடன் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு முக்கிய பங்கு வகித்தது. இதனையொட்டி அப்போதைய அரசு துறைமுக விரிவாக்கத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்குகளில் இத்திட்டத்தை தொடரலாம் என தீர்ப்புகள் வந்தன. இந்நிலையில், தற்போதைய அரசு துறைமுக விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கிய மேற்சொன்ன தீர்ப்பை எதிர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை திரும்பப் பெறவும் அல்லது திருத்தம் செய்யவும் கோரியுள்ளது. இவ்வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மனுவில் புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்தோடு செய்துக் கொண்ட ஒப்பந்தத்தில் சட்ட விதி மீறல் நடந்துள்ளதையும், பெரும் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள துறைமுகப் பகுதியிலுள்ள அரசுக்குச் சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை  மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது என்பது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், அரசு நிலத்திற்கு வாடகை நிர்ணயம் செய்துள்ளது குறைவானதாக உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு நிலத்திற்கு வாடகையாக குறைந்தபட்சம் நிலத்தின் மதிப்பில் 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் புதுச்சேரி அரசுக்கு வாடகையாக ஆண்டுக்கு 14.5 கோடி ரூபாய் வருவாய் வர வேண்டும். ஆனால், ஆண்டுக்கு வெறும் ரூபாய் 3.06 லட்சம் வாடகை நிர்ணயம் செய்துள்ளதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் கூறியுள்ளது.

அதோடு மட்டுமல்லாது, துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக தனியார் நிறுவனத்தோடு செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் பின்னணியில் நடந்த ஊழல், முறைகேடுகள் குறித்து ‘மத்திய கண்காணிப்பு ஆணையம்’ விசாரணை மேற்கொண்டு வருவதையும் எடுத்துக் கூறியுள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற வழக்கில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அனுமதித்து வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யவும், மாற்றவும் கோரியுள்ளது. 

இந்நிலையில், துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக தனியார் நிறுவனத்தோடு செய்துக் கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்த அரசுக்குச் சொந்தமான் 153 ஏக்கர் நிலத்தினை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, தாங்கள் இதில் தலையிட்டு உடனடியாக துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக தனியார் நிறுவனத்தோடு செய்துக் கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்த அரசுக்குச் சொந்தமான் 153 ஏக்கர் நிலத்தினை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.


(2) காரைக்கால் துறைமுகத் திட்டம்:

கரைக்காலில் தனியார் பங்கேற்புடன் துறைமுகத் திட்டம் ஒன்றை தொடங்க புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்தோடு கடந்த 2006-ல் ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இதன்படி

அரசுக்குச் சொந்தமான் 597 ஏக்கர் நிலத்தினை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்தது. இதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், புதுச்சேரி அரசு இந்த ஒப்புதலைப் பெறாமலேயே நிலத்தினை ஒப்படைத்துள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் துறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்தும் தனியார் நிறுவனம் அரசுக்கு அளிக்கும் வருவாயை உயர்த்திக் கொடுக்கும்படி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் உள்துறை அமைச்சகத்திற்கு இதுவரையில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

எனவே, தாங்கள் இதில் தலையிட்டு காரைக்கால் துறைமுகத் திட்டத்தை மேலும் விரிவாக புதுச்சேரி அரசு அனுமதி அளிக்க கூடாது என உத்தரவிட வேண்டும். மேலும், இத்திட்டத்தை ரத்து செய்வதோடு, அரசுக்குச் சொந்தமான 597 ஏக்கர் நிலத்தினைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(3) சிறப்புப் பொருளாதார மண்டலம்:

புதுச்சேரி அரசு தனியார் பங்கேற்புடன் சேதராப்பட்டு – கரசூர் பகுதியில் 1000 ஏக்கர் நிலத்தில் சிறப்புப் பொறுளாதார மண்டலம் அமைக்க ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இதன்படி விவசாய நிலங்கள் 800 ஏக்கர் ரூ. 70 கோடி செலவுச் செய்து கையகப்படுத்தியது. அரசுக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்தினைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சட்டப்படி பெற வேண்டிய அனுமதியும் பெறவில்லை. மேலும், அரசு கையகப்படுத்தியுள்ள நிலம் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க ஏதுவானதாக இல்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே, தாங்கள் இதில் தலையிட்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க கையகப்படுத்தியுள்ள விவசாய நிலங்களைத் திரும்ப விவசாயிகளிடம் ஒப்படைத்து அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(4) முஸ்லீம் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீடு:

புதுச்சேரி அரசு முஸ்லீம் மக்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளித்திட அறிவிப்பு வெளியிட்டது. முஸ்லீமகளுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீட்டை 1 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்தும், 1.5 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்தும் எடுத்து வழங்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு முஸ்லீம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருவதால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படுவது போல் முஸ்லீம்களுக்குப் பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்தே இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தொடர் போராட்டம் நடைபெற்றது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பரவலான இந்தப் போராட்டத்தினால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கான இடஒதுக்கீட்டில் இருந்தே வழங்க வேண்டும் என தனது முந்தைய பரிந்துரையை மறுபரிசீலனை செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

புதுச்சேரியிலுள்ள பழங்குடியின மக்கள் அங்கீகாரம் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கேட்டு கடந்த 25 அண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பழங்குடியின மக்களுக்கு ‘பிற்படுத்தபட்ட பழங்குடியினர்’ என வரையறை செய்து 1 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது.

எனவே, தாங்கள் இதில் தலையிட்டு முஸ்லீம்களுக்கு 2.5 சதவீதம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கிட உடனடியாக அரசாணை வெளியிட புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டுகிறோம்.

No comments: