Saturday, July 03, 2010

நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமார் தற்கொலை: அதிகாரத்துவம் பொறுப்பேற்க வேண்டும் - அ. மார்க்ஸ்

நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமாரின் மரணம் அவரை அறிந்த எல்லொருக்கும் மிக்க மனவருத்தத்தை அளிக்கிறது. மாணவர் போரட்டம் குறித்த உண்மையறியும் குழுவில் பங்கேற்ற வகையில் அவரை இரண்டு முறை பார்த்துள்ளேன். போராடுகிற மாணவர்கள் சிலர் என்னைச் சந்திக்க வந்தபொழுது அவர் இல்லை. அடுத்த நாள் நான் மற்றும் பேராசிரியர்கள் சிவகுமார், திருமாவளவன், கவிஞர் குட்டி ரேவதி, அயன்புரம் ராசேந்திரன், வழகுரைஞர் முருகன், பிரேமா, ரேவதி முதலானோர் கல்லூரி வளாகத்திற்குச் சென்ற போதுதான் அவரை முதலில் பார்த்தேன். அடுத்தநாள் பத்திரிகையாளர் சந்திப்பிற்கும் வந்திருந்தார். இரு சந்தர்ப்பங்களிலும் அவர் கண்களில் ஒரு பதற்றத்தையும் உடலில் ஒரு படபடப்பையும் கண்டது இன்னும் என் நினைவில் நிற்கிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தான் காரணமாகிப் போனோமோ என்கிற குற்ற உணர்வும், உலகச் செம்மொழி மாநாட்டில் 1330 குறள்களையும் சுடுமண் சிற்பங்களாகக் காட்சிப்படுத்தும் தன் லட்சியம் கைகூடாமலேயே போய்விடுமோ என்கிற பரிதவிப்பும் கூடவே அவர் முகத்தில் அப்பட்டமாக வெளளிப்பட்டது.

 ”உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத்தான் திரும்பப் பெற முடியாது என்கிறார்கள். ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை, கவலைப்படாதீர்கள்” என்றேன். “ இதெல்லாம் ரொம்பச் சாதாரணமான வழக்கு. எளிதாகச் சமாளித்து விடலாம். ஒண்ணும் அலட்டிக்காதீங்க.” என்று சுகுமாரனும் ஆறுதல் சொன்னார். சசிகுமாரின் கண்களில் தெரிந்த பதட்டம் கூடியதே தவிர குறையவில்லை.

ஒன்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் பிரச்சினையில் மாணவர்கள் தாங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்கிறார்கள். மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால் கல்லூரி நிர்வாகம், ஒரு ஆசிரியருக்குள்ள எந்தத் தகுதியும் இல்லாத பொறுப்பு முதல்வர் மனோகரன், கலை பண்பாட்டுத் துறைச் செயலாளர் இறையன்பு அய்.ஏ.எஸ் ஆகியோர்தான் தம் தவறுகளை ஏற்க மறுத்தார்கள், மறுக்கிறார்கள். இந்த முரணை எங்கள் அறிக்கையிலும் சுட்டிக்காட்டி இருந்தோம். இத்தனைக்கும் மாணவர்கள் செய்த தவறுகள் பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திலும் நம் பிள்ளைகள் செய்யக் கூடியவைதான். ஆனால் நிர்வாகம் செய்த தவறுகளோ அதிகாரத்துவத்தின் அத்தனை குரூரங்களையும் உள்ளடக்கியவை. பொறுப்பு முதல்வரின் கார் கண்ணாடியை சசிகுமார் உடைக்க நேர்ந்த நிகழ்வுக்கு முந்தைய சம்பவத் தொடர்ச்சியை எங்கள் அறிக்கையில் பாருங்கள். சாதனை புரியும் துடிப்புடன் இருந்த ஒரு இளம் கலைஞன்  எப்படி அந்த நிலைக்குத் தள்ளப்பட்டான் என்பது விளங்கும்.

நான் 37 ஆண்டு காலம் அரசு கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளேன். இதில் கடைசிப் பத்தாண்டுகள் தவிர்த்து ஏனைய காலங்களில் கிராமப்புற கல்லூரிகளில்தான் ஆசிரியராக இருந்தேன். நமது கிராமப்புற கல்லூரிகள் என்பன முழுக்க முழுக்க கிராமங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கும். சாதி, ஊர் என கிராமங்களில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் அங்கிருக்கும். இதைவிடப் பெரிய கலவரங்கள், சண்டைகளை எல்லாம் நான் பார்த்துள்ளேன். இரண்டாம் முறை நான் தஞ்சை சரபோசி கல்லூரியில் பணி செய்தபோது ஒரு மாணவன் முதல்வரை கத்தியால் குத்திவிட்டான். ஆசிரியருடைய ’பைக்கை’ உடைப்பது, கார் கண்ணாடியை உடைப்பது எனப் பல சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். இப்படியாகச் சேதம் விளைவிப்பது, சிறு கலவரங்கள் முதலான நிகழ்வுகளை நாங்கள் எப்படி எதிர் கொள்வோம் என்றால், அந்த மாணவனை ‘சஸ்பெண்ட்’ செய்வோம்; பொதுவாக உள்ள இரண்டு ஆசிரியர்களை வைத்து ஒரு ‘என்கொயரி கமிஷன்’ அமைப்போம்; பெரிய பிரச்ச்சினையாக இருந்து கல்லூரி மூடி இருந்தால் ஒரு வாரத்தில் திறப்போம். ரொம்பப் பெரிய பிரச்சினையாக இருந்தால் படிப்படியாக ஏழெட்டு நாட்களில் திறப்போம். மாணவன் செய்த தவறின் அளவைப் பொறுத்து ஒரு சிறிய அபராதம் விதித்து, தேவையானால் ஒரு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, அல்லது பெற்றோரில் ஒருவரை அழைத்து எச்சரித்து மாணவனை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்வோம். பிரச்சினை முடிந்துவிடும். பெரிய பிரச்சினைகளின் போது கல்லூரி கவுன்சில் அல்லது ஆசிரியர் கூட்டம் போட்டு விவாதிப்போம்.

ஆனால் இங்கு என்ன நடந்தது? உடனடியாக முதல்வரின் கார் கண்ணாடியை உடைத்த சசிகுமார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்ததுடன் சம்பந்தமில்லாத இரு மாணவர்கள்மீதும் (இருவரும் தலித்துகள்) புகார் கொடுக்கப்பட்டது. முதல்வருக்கு அவ்விரு மாணவர்கள்மீது முன் விரோதம் உண்டு. சாதி உணர்வும் இதில் ஒரு பங்கு வகித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த  மாணவர்களில் ஒருவரும் அவரது சகோதரரான இன்னொரு மாணவரும் முதல்வருக்கு வேண்டிய, அவரது சாதிக்காரர் எனச் சொல்லப்படுகிற ஒரு போலீஸ் அதிகாரியால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர். சம்பந்தமில்லாத அவ்விரு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவரின் சகோதரரிடம் எழுதி வாங்கிக்கொள்ளப்பட்டது. சசிகுமார் உட்பட மூன்று மாணவர்களும் பிணை பெற்று வெளியே வர வேண்டியதாயிற்று. இன்னிலையில்தான் சுமார் ஒரு மாதம் கழித்து, சுற்றுலா சென்ற மாணவர்களெல்லாம் திரும்பி வந்தபின் மாணவர்கள் வேலை நிறுத்தம், உள்ளிருப்புப்போராட்டம் முதலியவற்றை தொடங்கினர்.

தமிழகத்திலுள்ள இரு நுண்கலைக் கல்லூரிகளும் மாநில அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் வருகின்றன. இத்துறையின் இயக்குனர் இறையன்பு ஒரு அய்.ஏ.எஸ் அதிகாரியான போதிலும் ஒரு எழுத்தாளர், சமூக அக்கறை உள்ளவர் என்கிற வகையில் மனிதாபிமானத்துடன் இப்பிரச்சினையை அணுகி விரைவாகத் தீர்ப்பார் என்றுதான் நாங்கள் நம்பினோம். எங்கள் அறிக்கை பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் தொட்டு அமைந்தது. ஒரளவு முழுமையாகவும் இருந்தது. நண்பர் எனச் சொல்லத்ததக்க அளவிற்கு நெருக்கமில்லையாயினும் இறையன்புவை அறிவேன். பரஸ்பரம் இருவருக்கும் மற்றவர்மீது மரியாதை உண்டு. எங்கள் அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்ததோடு இது தொடர்பாகக் குறைந்தது நான்கு முறையாவது அவரோடு பேச நேரிட்டது. இரண்டு விஷயங்களை நான் அவரிடம் வற்புறுத்தினேன். சசிகுமார் உள்ளிட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள்; கல்லூரியை விரைவாகத் திறவுங்கள் என்பவைதான் அவை. பொறுப்பு முதல்வர் மனோகரன் மீதான விசாரணை உள்ளிட்ட பிற பரிந்துரைகளை விரிவாக அறிக்கையில் சொல்லியிருந்தோம்.

என்னுடைய இரு வேண்டுகோளுக்கும் சாதகமான பதில் இறையன்புவிடமிருந்து வரவில்லை. வழக்குகளை திரும்பப் பெறுகிற அம்சத்தில், குறிப்பாக சசிகுமார்மீதான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளதால் ஒன்றும் செய்ய இயலாது என்கிற ரீதியில் பதில் இருந்தது. கல்லூரியைத் திறப்பதிலும் அவருக்கு உடன்பாடில்லை. கல்லூரியைத் திறந்தால் மீண்டும் மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் என்கிற அச்சம் அவருக்கிருந்தது. ஆனால் நிலைமை அதுவல்ல. மாணவர்கள் கல்லூரியைத் திறக்கவே விரும்பினார்கள். கல்லூரி மூடிக்கிடப்பதை எந்த மாணவர்களும் விரும்பமாட்டார்கள். அப்படியே வேலை நிறுத்தம் செய்தால்தான் என்ன, கல்லூரியை மறுபடி சிறிது காலம் மூடினால் போச்சு. இப்படியான பிரச்சினைக்கெல்லாம் மூன்று மாத காலமெல்லாம் கல்லூரியை மூடி வைத்திருப்பதெல்லாம் ரொம்ப அநியாயம். என்னுடய ஆசிரிய அனுபவத்தில் இப்படி நான் அறிந்ததில்லை. கல்லூரியைப் பத்து நாளைக்குள் திறந்திருந்தால் ஒன்றும் நடந்திருக்கப் போவதில்லை. நிலைமை சுமுகமாகியிருந்திருக்கும். சசிக்குமாரை இப்படி அநியயமாக இழந்திருக்கமாட்டோம்.

இறையன்பு இதைப் புரிந்துகொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க ஒரு அதிகாரியாக (bureaucrat), அதிகாரத்துவ அணுகல் முறையுடனேயே இப்பிரச்சினையை அணுகினார். கல்லூரி முதல்வர் பொறுப்பில் ஆசிரியரல்லாத ஒருவரை நியமித்தார். (இதுவும் நான் அறிந்திராத ஒன்று.) கல்லூரியை இறுக மூடிவிட்டு ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்துவிட்டு ஒய்ந்தார். போராட்டத்தினூடாக மாணவர்கள் தன்னைப் பற்றிப் பேசிய சில பேச்சுக்களை ரொம்பவும் ‘பர்சனலாக’ எடுத்துக்கொண்டு கோபப்பட்டார். (மாணவர்கள் அவரது சாதி குறித்து தவறாக ஒரு அவதூறை சொன்னது உண்மைதான்.) போராட்டங்களின்போது ஒருமையில் பேசுவது, ஒழியச் சாபமிடுவது. கொடும்பாவி கொளுத்துவது எல்லாம் வழக்கம்தான். முதலமைச்சர், பிரதமர் யாரும் இதற்குத் தப்புவதில்லை. போராட்டம் முடிந்தால் எல்லாம் மறந்துவிடும். ஒழியச் சொன்னவர்களுக்கே சால்வை போர்த்தி நன்றி தெரிவிப்பதும் உண்டு. அரசியல்வாதிகளால் இதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதிகாரி ஒருவரால் இதைப் புரிந்து கொள்ள இயலாமற் போனதில் வியப்பில்லை.

கல்லூரிக்குள் நடக்கிற பிரச்சினைகளை குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினையைப் போல் கையாளவேண்டும். பிள்ளைகள் தவறு செய்யும்போது ஒரு தந்தை எப்படி அணுகுவாரோ அப்படி நிர்வாகம் அணுக வேண்டும். எந்தத் தந்தையாவது கண்ணாடியை உடைத்ததற்காகப் போலீசில் புகார் கொடுப்பாரா? கண்ணாடியின் விலை பத்தாயிரம் ரூபாய் இருக்குமா? ஆனால் இன்று கொடுத்த விலையின் மதிப்பு…..? இரங்கல் கூட்டத்தில் சசிகுமாரின் அன்னை அன்று அழுத காட்சி இன்னும் நெஞ்சைப் பதற வைக்கிறது. அந்தத் தாயின் கண்ணீருக்கு அதிகாரம் என்ன பதிலைச் சொல்லப்போகிறது? நாம்தான் என்ன பதிலைச் சொல்லப்போகிறோம்?

ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். சசிகுமாரின் மரணத்தில் ஏதோ ஒரு வகையில் நமக்கும் ஒரு பங்கிருக்கத்தான் செய்கிறது. அவரின் பதட்டம், கலைஞனுக்கெ உரித்தான அங்கீகார ஏக்கம், அவருக்கிருந்த குற்ற உணர்வு இவற்றை நாம் கவனம் கொண்டிருக்க வேண்டும். செம்மொழி மாநாடு நெருங்க நெருங்க தனது கனவு நனவாகப் போவதில்லை என்கிற உண்மை அவருக்கு உறைக்கத் தொடங்கியது. அந்த நேரத்தில் நாம் அவரைத் தனியே விட்டிருக்கக் கூடாது. போராட்டம் என்பது வெறுமனே போராடுவது மட்டுமல்ல. ’சாலிடாரிட்டி’ அதன் பிரிக்க இயலாத அங்கம். போராட்டத்தினூடாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாம் தனிமைப்படவில்லை என்பதை உணர்கிறார்கள். இந்த வாய்ப்பை ஏதோ ஒரு வகையில் சசிகுமாருக்கு நாம்  அளிக்கத் தவறினோமா?

நுண் கலைக் கல்லூரிகள் இரண்டும் ஆணி வேர் முதல் உச்சங் கொழுந்து வரை அழுகிக் கிடக்கிறது. 150 ஆண்டு காலப் பழமை மிகு இந் நிறுவனம் ஒழுங்கு செய்யப்பட்டுத் இந்திய அளவிலுள்ள இதர நுண்கலைக் கல்வி நிறுவனங்களைப் போல தரம் உயர்த்தப்பட வேண்டும். எங்கள் அறிக்கையில் இந்த நோக்கிலும் சில பரிந்துரைகளைச் செய்துள்ளோம்.

சசிகுமாரின் நினைவாக, அவரது இறுதி லட்சியமாக இருந்த திருக்குறளைச் சுடுமண் சிற்பங்களக வடிக்கும் திட்டத்தை நிறைவேற்ற முனைவோம்.

சென்னை கவின் கலைக் கல்லூரியில் சாதி வெறி: உண்மை அறியும் குழு அறிக்கை!

No comments: