Thursday, January 27, 2011

புதுச்சேரி கெம்பாப் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு: நீதிவிசாரணைக்கு உத்திரவிட கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 27.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

கெம்பாப் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள கெம்பாப் அல்கலீஸ் தொழிற்சாலையில் நேற்றைய தினம் விஷவாயு கசிந்து அருகிலிருந்த கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத் திணறியும், வாந்தி எடுத்தும் ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கெம்பாப் ஆலை மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும். மேலும், அதிக நிலத்தடி நீரை உறிஞ்சியும், கழிவுகளை நிலத்திற்கு கீழே பெரிய குழாய்கள் மூலம் அனுப்புவதாலும் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மாசுப்பட்ட குடிநீரை பல ஆண்டுகளாக குடித்து வருவதால் அவர்களது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு சாஷன் டிரக்ஸ் தொழிற்சாலையில் இதேபோன்று விஷவாயு தாக்கி 5 பேர் பலியானதைத் தொடர்ந்து சாஷன் டிரக்ஸ் மற்றும் கெம்பாப் தொழிற்சாலைகளை மூட வெண்டுமென அப்போது மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடத்தினோம். ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மக்கள் பாதிக்கப்பட்டதற்கு அரசின் அலட்சியம்தான் காரணம்.

அப்போது நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி இந்த இரண்டு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அருகிலிருக்கும் நவோதயா பள்ளி, புதுவைப் பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி மாணாவர்கள் மூச்சுத் தொடர்பான நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

எனவே, புதுச்சேரி அரசு இந்த ஆபத்தான தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

No comments: