Friday, April 29, 2011

புதுச்சேரியில் போலீஸ் அத்துமீறல்: கட்சி, இயக்கங்கள் சார்பில் மே 4-ல் ஊர்வலம் - ஐ.ஜி. அலுவலகம் முற்றுகை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 28.04.2011 வியாழனன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி, முதலியார்பேட்டையில் உள்ள உணவுக் களஞ்சியத்தில் பல்வேறு கட்சி, இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

இக்கூட்டத்தில், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம.சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் கோ.செ.சந்திரன், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தேசிய கவுன்சில் உறுப்பினர் இர.அபிமன்னன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் உ.முத்து, கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை செய்தித் தொடர்பாளர் கஸ்பர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ. அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது சலீம், முற்போக்கு ஜனசக்தி இயக்கத் தலைவர் சி.எம்.புரட்சிவேந்தன், மனிதநேய அமைப்புத் தலைவர் கோ.லோகலட்சகன், வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் மு.மதுரை, ஆதிதிராவிடர் உரிமைக் கழகத் தலைவர் ச.பாலசுந்தரம், இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் ஜோசப் விக்டர் ராஜ், மதிகிருஷ்ணாபுரம் கவுன்சிலர் கோ.சத்தியமூர்த்தி, அட்லஸ் அமைப்புத் தலைவர் சா.து.அரிமாவளவன், கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மேம்பாட்டு கழகத் தலைவர் அ.மஞ்சினி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் பா.சரவணன், மக்கள் மன்ற தலைவர் மு.நாராயணசாமி, ஈழத் தமிழர் ஆதரவு கூட்டமைப்பு பொறுப்பாளர் கலைப்புலி சங்கர், சதுப்புநில காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் செல்வ மணிகண்டன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர்கள் சு.காளிதாஸ், பா.மார்கண்டன். கலைவாணான், பா.காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. மேட்டுப்பாளையத்தில் நடந்த ஜெயசங்கர் கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருக்கோவிலூர் டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவரை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை காவல்நிலையங்களில் வைத்து அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். போலீசாரின் இந்த கொடுமைத் தாங்க முடியாமல் தாமோதரன் மரணமடைந்துள்ளார். இந்த வழக்கை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது சந்தேகத்திற்கு இடமின்றி காவல் நிலைய மரணம் என்பதால் இவ்வழக்கை உடனடியாக காவலில் நடந்த கொலை வழக்காக மாற்றி, வழக்கு விசாரணையை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்ற வேண்டும்.

2. இந்த காவல்நிலைய கொலை சம்பவத்தோடு தொடர்புடைய மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவரையும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.

3. இந்த சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சிகளான திருக்கோவிலூரை சேர்ந்த ராஜேந்திரன், சந்தோஷ், பாலு, ராமு, தட்சணாமூர்த்தி ஆகியோர் போலீசாருக்கு எதிராக தாசில்தார் விசாரணையில் சாட்சி சொன்னதால், அவர்களை ஜெயசங்கர் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்ப்போம் என போலீசார் மிரட்டி வருவதாக அறிகிறோம். எனவே, காவல் நிலைய கொலை வழக்கு சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

4. கணவனை இழந்து மூன்று சிறிய குழந்தைகளோடு தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு உடனே வழங்க வேண்டும்.

5. கடந்த 12.04.2011 அன்று அதாவது தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோரை தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை சுற்றி வளைத்து மிரட்டி அச்சுறுத்தி, அவர்களை விடியும் வரை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். அதோடு ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடாது என காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் பொதுமக்கள் பலர் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடுநிலையோடு, சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டிய காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதுகுறித்து, ஜெகன்நாதனின் மனைவி தேர்தல் ஆணையத்திற்கும், புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்து காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் உள்ளிட்ட உரிமைகள் கேட்டு தொடர்ந்து போராடி வரும் ஜெகன்நாதன் மற்றும் அவரது மகன் மீதும் காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ந்து பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு வருகின்றனர். அரசின் இந்த திட்டமிட்ட அடக்குமுறையை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக ஜெகன்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

7. மேற்சொன்ன கோரிக்கைளை வலியுறுத்தி பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பில் வரும் மே 4 புதனன்று காலை 10 மணிக்கு புதுச்சேரி சுதேசி மில் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: