Monday, October 03, 2011

தமிழைப் பழித்து பேசிய பேராசிரியரை காப்பாற்ற முயற்சிக்கும் அதிகாரி மீது நடவடிக்கை: கட்சி, இயக்கங்கள் கோரிக்கை

புதுச்சேரி ஆக. 2: பாரதியார் பல்கலைக்கூடத்தில் தமிழை பழித்துப் பேசிய பேராசிரியரை காப்பாற்ற முயற்சிக்கும் அதிகாரி மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை எடுக்க கட்சி, இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கட்சி, இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை வணிக அவையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் இரா. அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், கோ. செ. சந்திரன், தலைவர், ம. சிங்காரவேலர் முன்னேற்ற கழகம், கோ. அ. ஜெகன்நாதன், முன்னாள் தலைவர், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றம், முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், சி. மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை, உ. முத்து, பொதுச்செயலாளர், அகில இந்திய பார்வட் பிளாக், எம். ஏ. அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மாவட்ட தலைவர், கமால் பாஷா, மாவட்ட பொருளாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இர.அபிமன்னன், தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம், பெ. பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், சீனு.தமிழ்மணி, தலைவர், பூவுலகின் நண்பர்கள், சி. எம். புரட்சிவேந்தன், தலைவர், மக்கள் ஜனசக்தி இயக்கம், புதுவை தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், சூ.சின்னப்பா, தலைவர், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கம், சாது.அரிமாவளவன், பொறுப்பாளர், அட்லஸ் அமைப்பு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.  பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசைத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் பி.வி.போஸ் என்பவர் மகாத்மா காந்தி பாடல்களைப் பாடுவது நேரத்தை வீணாக்குவது என்றும், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு முன்பு பாடல்கள் பாடுபவர்கள் பிச்சைக்காரர்கள் என்றும், பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாக்களில் பாடுவதற்கு தகுதியற்றது என்றும் பல்கலைக்கூடத்தில் இசைத்துறை தலைவர் அறையில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார். மேலும், செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் நடக்கும் தலைவர்களின் விழாக்களுக்குப் பாடல்கள் பாட மாணவர்களை அனுப்ப மறுத்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு தமிழில் பாடம் நடத்தாமலும், தமிழ் மொழியைப் பழித்தும் எதிராகவும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இதுகுறித்து பல்கலைக்கூட மாணவர்கள் போராட்டம் நடத்தி அரசு உயரதிகாரிகளுக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 29.11.2010 அன்று அவர் மீது துறை ரீதியான விசாரணக்கு உத்தரவிடப்பட்டு, அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் கண்ணாஜி தலைமையில் நடந்த விசாரணையில் தமிழறிஞர் மன்னர் மன்னன் உட்பட பல்கலைக்கூட பேராசிரியர்கள் 8 பேர் வாக்குமூலம் அளித்து சாட்சியம் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த 07.02.2010 அன்று செயலர் கண்ணாஜி ‘எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவீர்’ என எழுத்து மூலம் அவருக்கு எச்சரிக்கை மெமோ (Warning Memo) விடுத்துள்ளார். இந்நிலையில், கலைப் பண்பாட்டுத் துறைச் செயலராக பொறுப்பேற்ற மேத்யூ சாமுவேல் தலைவர்களை இழிவுப்படுத்திய போஸ் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மெமோவை ரத்து செய்து கடந்த 06.05.2011 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த போஸ் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சுதந்திரத்திற்காகவும், சமூக விடுதலைக்காகவும், மொழி உரிமைக்காவும் அர்ப்பணிப்போடு பணியாற்றிய தலைவர்களையும், தமிழையும் இழிவுப்படுத்தி பேசிய பேராசிரியர் போஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்ததன் மூலம் செயலர் மேத்யூ சாமுவேல் வெளிப்படையாகவே தவறுக்கு துணைப் போனதோடு, சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டுள்ளார். மேலும், போஸ் தன் சொந்த மாநிலமான கேரளவை சேர்ந்தவர் என்பதால்தான் அவரை காப்பாற்ற மேத்யூ சாமுவேல் முயற்சித்துள்ளார் எனத் தெரிகிறது.
மேத்யூ சாமுவேலின் இந்த போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே, புதுச்சேரி அரசு இதுகுறித்து உடனடியாக தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. குற்றமிழைத்த பேராசிரியர் போஸ் மீதான விசாரணையை தொடர்ந்து நடத்தி அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும், தவறுக்கு துணைப் போன செயலர் மேத்யூ சாமுவேல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.

2. பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசைத்துறையில் பணியாற்றும் பேராசிரியர்  அன்னபூர்னா என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் வகுப்பு எடுக்கும் வீணை பிரிவில் மாணவர்கள் சேராததால், அவர் வேலையே செய்யாமல் சம்பளம் பெற்று வருகிறார். கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் அவருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் தண்டமாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலைக்கூடத்தில் இருந்து பேராசிரியர்களை பாலர் பவனுக்கு இடமாற்றம் செய்யலாம் என்ற ஆட்சிமன்ற குழுவின் முடிவின்படி பேராசிரியர் அன்னபூர்னாவை உடனடியாக பாலர் பவனுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.

3. பாரதியார் பல்கலைக்கூடத்தில் உறுப்பினர் செயலாராக இருக்கும் குப்புசாமி என்பவர் தொடர்ந்து தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்பி பல்கலைக்கூட ஊழியர்களை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து லஞ்சமாக பணத்தைக் கறப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் அரசு உயரதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். அதன் பின்னரும்கூட குப்புசாமி தன் போக்கை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை. இவர் ஏற்கனவே வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றிய போது செய்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு அவர் மீது தற்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக குப்புசாமி மீது துறை விசாரணைக்கு உத்தரவிட்டு அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
4. மேற்சொன்ன கோரிக்கைகளை முன் வைத்து வரும் 10.10.2011 திங்களன்று காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகம் அருகில், அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 comment:

Coupon Blogger Jay said...

i think i ve seen you im also from pondicherry only sir...

wanted to connect with you.Thanks from a Goundamani fan