Thursday, February 14, 2013

வினோதினி: சில நினைவுகள்


பிப்ரவரி 14, உலகம் முழுவதும் ‘காதலர் தினம்’ உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தான் ஒரு ஆணின் வக்கிர புத்திக்குப் பலியான வினோதினி உடல் எரிக்கப்பட்டது. இன்றோடு அவருக்கு அஞ்சலி செலுத்திய அனைவரும் அவரை மறக்கக்கூடும். அவரது குடும்பத்தினர் குறிப்பாக அவரது பெற்றோர் நிலைமையை எண்ணிப் பார்த்தால் மனது பதறுகிறது. காற்றில் கலந்து கரைந்துக் கொண்டிருக்கிறது வினோதினியின் நினைவுகள்.

நவம்பர் 14, வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட நாள். மறுநாள் கரைக்காலை சேர்ந்த பத்திரிகைத் துறை நண்பர் ஒருவர் தகவல் கூறினார். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. முழுத் தகவலும் கிடைக்கவில்லை. உடனடியாக அவர் படித்த காரைக்காலிலுள்ள அரசு பொறியியல் கல்லூரி முதல்வரை தொடர்புக் கொண்டு கேட்டேன். அவர் தகவல் அனைத்தையும் கூறிவிட்டு, ‘நல்லப் பொண்ணு, நல்லா படிச்சு, வேலைக்குப் போச்சு, அதுக்கு இந்த நிலைமை வந்திருக்க கூடாது’ என்று கூறி வருத்தப்பட்டார். பின்னர் இணைய தளம் மூலம் அவரின் குடும்பத்தினரின் தொடர்புக் கிடைத்தது. இன்று வரை அவரது தந்தையிடம் நான் பேசவில்லை. பேசுவதையும் தவிர்த்தேன். தன் மகள் பற்றிய கனவுடன் இருந்த அவரது வாழ்வில் விழுந்த பலத்த அடி இது. அவரின் துயரம் என்னையும் வாட்டுமே என்ற அச்சம் தான் காரணம். அவரின் தாய் மாமன் ரமேஷிடம் தான் பேசுவேன். அவரும் அவ்வப்போது தகவல் கூறிக் கொண்டே இருப்பார்.

ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்த பெண் வினோதினி, வயது 23. அவரது தந்தையார் ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றினார். மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், தங்களுக்கு இருந்த ஒரே சொத்தையும் விற்று வினோதினியை பொறியியல் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்துள்ளனர். அவர் படித்து முடித்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மாதம் ரூ. 12 ஆயிரம் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். படிப்பு முடிந்து மூன்று மாதத்திற்குள்ளேயே வேலை கிடைத்தது அக்குடும்பத்தினருக்கு சற்று சுமை குறையுமே என்ற மகிழ்ச்சி.

அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் சுரேஷ் என்பவர் ஒருதலையாக வினோதினியை காதலித்ததாக தெரிகிறது. அவர் ஒருநாள் வினோதியின் பெற்றொரிடம் பெண் கேட்டுள்ளார். அவர்கள் மறுத்துவிடவே, அதுவும் வினோதினி தனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று சொல்லி விட்ட பின்னர் அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக எண்ணியுள்ளனர் அக்குடும்பத்தினர். ஆனால், இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை.

வினோதினி தீபாவளிக்கு ஊருக்கு சென்றுவிட்டு, சென்னை செல்ல பேருந்து ஏற சென்றபோது அந்த துயரச் சம்பவம் நடந்தது. தனக்கு கிடைக்காத வினோதினி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று எண்ணி, ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் முழுவதும் அடர்த்தியான ஆசிட் கொண்டு வந்து வினோதினி மீது வீசியுள்ளார் சுரேஷ். உடல் முழுவதும் வெந்துப் போய், துடியாய் துடித்துள்ளார் வினோதினி. உடன் சென்ற அவரது தந்தையார் ஜெயபாலன் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் செய்வதறியாது தவித்துள்ளனர். ஆசிட் வீசப்பட்டால் எப்படி முதலுதவி அளிக்க வேண்டுமென்பது பற்றிக்கூட தெரியாத அவர்கள் உடனே காரைக்கால் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து, பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் மாறி மாறி சிகிச்சை அளித்துள்ளனர்.

இத்தாக்குதலில் அவரது இரண்டு கண்களும் முற்றிலும் வெந்துப் போய் அவற்றை மருத்துவர்கள் அகற்றினர். உடல் காயத்திற்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர். பார்வைப் பறிபோய் காயம்பட்ட வலியுடன் சிகிச்சைப் பெற்ற வினோதினி எதிர்க்கொண்ட துயரம் கொடுமையானது. அவரது எதிர்க்காலம் குறித்து அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, வினோதினியின் பால் அக்கறைக் கொண்ட அனைவரும் கவலைப்பட்டனர்.

அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்குப் பணமின்றி தவிக்கின்றனர் என்றவுடன் புதுச்சேரி அரசை அனுகுவது என்று முடிவு செய்தோம். பொது இடத்தில் அதுவும் பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் என்பதாலும், காவல்துறையின் அலட்சியமும் இச்சம்பவத்திற்குக் காரணம் என்பதாலும், இதற்கு அரசாங்கம் பொறுப்பு (Liability) என்பதால் அரசை அனுகுவது சரி என்று கருதினோம். நான், அ.மார்க்ஸ் ஆகியோர் அசாம் செல்ல முடிவு செய்து, அதற்கான பணிகளில் மூழ்கியிருந்த நேரம். வினோதினி மருத்துவச் செலவை அரசு ஏற்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று கோரி அறிக்கை ஒன்றை 10.12.2012 அன்று வெளியிட்டேன். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் சத்தியவதி ஆகியோருக்கு மனு ஒன்றையும் அளித்துவிட்டு அசாம் கிளம்பினேன்.

அசாமில் இருந்து திரும்பியவுடன் முதல்வர் ரங்கசாமி மற்றும் அதிகாரிகளை சந்தித்து வினோதினிக்கு உதவக் கோரினேன். முதல்வர் ரங்கசாமி ‘உதவி செய்ய முடிவு செய்துள்ளோம். குடும்பத்தினரிடம் ஒரு கடிதம் வாங்கித் தாருங்கள்’ என்று கூறினார். இத்தகவலை அவரது மாமா ரமேஷுக்கு தெரிவித்தேன். அவரும் உடனடியாக அனுப்புவதாக தெரிவித்தார். ஆனால், அவர் கடிதம் அனுப்ப காலதாமதம் ஆனவுடன், அவரை சற்று கடிந்துக் கொண்டேன். அவர் நிலைமையும் பரிதாபமானது. இணைய தளத்தில் அவரது செல்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்ததால் இரவு, பகல் என்று பாராமல் அவரை அழைத்துப் பலர் பேசியதும், அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கவனித்துக் கொண்டதும் எவ்வளவு சிரமமானது என்பதை எண்ணிப் பார்த்தேன். பின்னர் மறுமுறை நான், காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் நாஜீம், ராஜ்பவன் பாலா ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தோம். அவரது அறைலிருந்தே ரமேஷை அழைத்துப் பேசி ஒரு கடிதத்தை பேக்ஸ் மூலம் பெற்று முதல்வரிடம் அளித்தோம். அவர் உடனடியாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிதி அளித்தார்.

இந்த சம்பவம் நடந்தவுடன் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீர்ராகவன் என்னைத் தொடர்புக் கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார். அவர் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு தகவல் கூறினார். மத்திய அமைச்சர் நாராயணசாமி தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கினார். பின்னர் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கினார்.

இதுமட்டுமல்லாமல் இணைய தளம் வழியாக உலகம் முழுவதும் பலரும் கணிசமான தொகை அளித்து வினோதினி மருத்துவச் செலவுக்கு உதவினர். அவ்வப்போது அவர் உடல் நிலைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பேன். ஆனால், வினோதினி இறந்துப் போவார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. யாரும் நினைக்கவில்லை.

பத்திரிகை, ஊடகத் துறை நண்பர்கள் செய்தி என்பதைத் தாண்டி வினோதினி உயிர் பிழைக்கப் பல வகையிலும் முயற்சி செய்தனர். தொடர்ந்து செய்தி வெளியிட்டு அவரது மருத்துவச் செலவுக்கு நிதி சேர காரணமாக இருந்தனர். இது ஒரு மனிதாபிமான உதவி என்பதைத் தாண்டி, தங்களின் கடமை என்று எண்ணிச் செய்தனர். எப்போதும் ஏதாவது தகவல் சொன்னால், அதை ஒரு செய்திப் போல கேட்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் வினோதினி இறந்துவிட்டார் என்றதும் மிகவும் வருத்தப்பட்டனர், அதிர்ச்சி அடைந்தனர்.

வினோதினி இறக்கக் கூடாது, அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் விரும்பினோம். அது நடைபெறாமல் போய்விட்டது. இன்று குற்றவாளிக்குக் கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. அவரது குடும்பத்தினர் ‘வினோதினி மீது ஆசிட் வீசி அவளது மரணத்திற்கு காரணமானவனுக்கு மரண தண்டனை வேண்டாம், அவன் மீது ஆசிட் வீசி, அவள் பட்ட துயரத்தை அவன் அனுபவிக்க வேன்டும்’ என்று ஆவேமாகக் கூறியுள்ளனர். விகடன் வெளியிட்டுள்ள வினோதினியின் விடியோ பேட்டியிலும் அவரும் அதையே வலியுறுத்திக் கூறியுள்ளார். இந்த கோபத்தை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால். இதற்கெல்லாம் சட்டத்தில் இடமில்லை. காரைக்கால் காவல்துறை வழக்கைச் சரியாக நடத்தி குற்றமிழைத்தவருக்கு அதிகப்பட்ச தண்டனை வாங்கித்தர வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். இதுபோன்ற சம்பவத்திற்கு நம் சமூகம் காரணம் இல்லையா? பெண்கள் போகப் பொருளாக சித்தரிக்கப்படுவதும், அச்சு மற்றும் காட்சி ஊடகம், திரைப்படம் பெண்களைச் சித்தரிக்கும் போக்கும், பெண்களுக்குப் பாலியல் பற்றிப் போதிய விழிப்புணர்வு இல்லாததும், இன்ன பிற காரணங்களும் வினோதினி போன்ற பெண்களின் பலிக்குக் காரணமில்லையா? குற்றமிழைத்த ஒரு தனி மனிதனைத் தண்டித்துவிட்டால் போதுமா?

வினோதினியின் மரணத் துயரத்தின் ஊடாக இதுபோன்ற விஷயங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் மத்தியில் பெண்களை சமமாக பாவிக்க வேண்டுமென்ற கருத்தாக்கங்களை உருவாக்குவதும், பெண்களுக்குப் பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வி பயிற்றுவிப்பதும் அவசியம். இதுபற்றி விவாதிக்க வேண்டிய தருணமிது.

இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் இருந்தோமானால், மீண்டும் நாம் வேறு பல வினோதினிகள் பலியாவதைச் சந்திக்க நேரிடும்.

No comments: