Sunday, December 14, 2025

மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்!


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள பூசிவாக்கம் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் நடத்தும், டீ மற்றும் பேக்கரி கடைக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி பார்வதி ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு விற்கப்பட்ட உணவுப் பொருட்கள் தரம் இல்லாமல் இருந்தது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவகுமாரும் அவரது மருமகனும், காவலருமான லோகேஸ்வரன் ரவி (32) இருவரும் சேர்ந்து முருகனை தாக்கி, மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து முருகனின் மனைவி பார்வதி சென்ற 25.07.2025 அன்று, தனது கணவரைத் தாக்கிய மேற்படி சிவகுமார், காவலர் லோகேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி பார்வதி ஆகியோர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

புகார் கொடுத்த 27 நாட்களுக்குப் பிறகு 20.08.2025 அன்று எஸ்.சி/எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

08.09.2025 அன்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் (வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்) இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் ஆஜராகியுள்ளார். அவர் இந்த வழக்கில், எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி சரியாக நடவடிக்கை எடுக்காததை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் சுட்டிக்காட்டியுள்ளார்.

• பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் தாமதமாக வழக்கு பதிவு செய்தது, குற்றஞ்சாட்டப்பவர்களைக் கைது செய்யாதது, பாதிக்கப்பட்டோருக்கு நகல் வழங்காதது உள்ளிட்டவைகள் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 18-A(B) மற்றும் 10(2) ஆகியவைபடி சட்ட மீறலாகும். இப்பிரிவுகளை டி.எஸ்.பி சங்கர்கணேஷ் முறையாக செயல்படுத்த தவறியுள்ளார்.

• இச்சட்டப் பிரிவு 4-இல் உள்ளபடி டி.எஸ்.பி செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செய்யாமல், கடமையில் இருந்து தவறியுள்ளார். இது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 4(2)(G) கீழ் தண்டனைக்கு உரியது.

இதனடிப்படையில் டி.எஸ்.பியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ப.உ.செம்மல் அவர்கள் உத்தரவிட்டார்.

உடனடியாக ஒட்டுமொத்தக் காவல்துறை மற்றும் தமிழக அரசின் உதவியுடன் உயர்நீதிமன்றத்தில் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் வழக்குத் தொடுத்தார். இவவழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அவர்கள், நீதிபதி ப.உ.செம்மல் பிறப்பித்த கைது உத்திரவை ரத்துசெய்து, டி.எஸ்.பியை விடுவித்து உத்திரவிட்டார். மேலும், நீதிபதி ப.உ.செம்மல் மீது உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்திரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் மீண்டும் ஒரு உத்திரவுப் பிறப்பித்தார். அதில் நீதிபதி ப.உ.செம்மல் இடமாற்றம் செய்யப்பட வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருந்து அரியலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவராக நியமித்து இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர் இரண்டு உத்திரவுகளைப் பிறப்பித்தபோது நீதிபதி ப.உ.செம்மல் இடம் விளக்கம் கேட்கவில்லை. உச்சநீதிமன்றம் K, A Judicial Officer In re (2001) என்ற தீர்ப்பில் மாவட்ட நீதிபதிகள் குறித்த வழக்குகளில் அந்நீதிபதிகளிடம் கருத்துக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது, அவர்கள் பெயர்களைக்கூட வெளியிட கூடாது என்பது கடைபிடிக்கவில்லை.

மேலும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 15A(3), 15A(5) படியும், உச்சநீதிமன்றம் Hariram Bhambhi vs Satyanarayan and Anr என்ற தீர்ப்பின்படியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கப்படவில்லை.

மேலும், விஜிலன்ஸ் பிரிவு விசாரணையின் போதும் நீதிபதி ப.உ.செம்மல் இடம் விளக்கம் கேட்கப்படவில்லை. அதாவது குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நீதிபதிக்கு உரிய விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல், பழிவாங்கும் நோக்கோடு ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளனர். இது இயற்கை நீதிக்கு (Natural Justice) எதிரானது.

அதோடு மட்டுமல்லாமல் நீதிபதி ப.உ.செம்மல் அவர்களிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய கடிதத்திற்கு விளக்கம் அளிக்க போதிய அவகாசம் கேட்டும் வழங்கப்படவில்லை. மேலும், விஜிலன்ஸ் அறிக்கை மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கேட்டும் வழங்கப்படவில்லை. நேர்மையாக செயல்படுவதால் நீதிபதி ப.உ.செம்மல் பழிவாங்கப்படுகிறார்.

நீதிபதி ப.உ.செம்மல் அவர்கள் போக்சோ மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் சிறப்பு நீதிபதியாக செயல்பட்டவர். மேலும், பணியாற்றிய அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியினை சட்டத்தின் அடிப்படையில் வழங்கியவர். பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நீதியின் பக்கம் நின்று, சட்டத்தின்படி நீதியினைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல தீர்ப்புகளை வழங்கியவர்.

காவல்துறை மட்டுமல்லாமல் தவறு செய்த அனைத்துத் துறை அதிகாரிகளையும் கண்டிக்கத் தயங்காதவர். அதிகாரிகளை சட்டத்தின்படி செயல்பட வைத்தவர். இதனால், நீதிபதி செம்மல் பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

2015ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் சுப்பிரமணியன் என்ற பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவரை நெய்வேலி நகரிய காவல்நிலையத்தில் போலீசார் அடித்துக் கொன்ற வழக்கில், நீதிபதி ப.உ.செம்மல் சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியாக இருந்தபோது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை) ஆகியவற்றில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து உத்திரவிட்டார். இதுதொடர்பாக நடந்த மேல்முறையீட்டில், இதனை சென்ற 10.12.2025 அன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்று மனித உரிமைகள் சார்ந்து பல்வேறு தீர்ப்புகள் வழங்கி எஸ்.சி/எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அடித்தள மக்களின் உரிமைகளைக் காத்தவர்.

நீதிபதி செம்மல் அவர்களுக்கு இப்போது நாம் ஆதரவு அளிப்பது என்பது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு அளிக்கின்ற ஆதரவாகும். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை தமிழக அரசு சரியாக அமுல்படுத்தவில்லை என்று பரவலாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், அச்சட்டத்தினை நடைமுறைபடுத்தும் நீதிபதியின் மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்பது, இச்சட்டட்தின் அமுலாக்கத்திற்காக செயல்படுவோருக்கான அச்சுறுத்தலாகும்.

இந்தச் சூழலில் நீதிபதி செம்மல் அவர்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவு, தொடர்ந்து சாதிய வன்கொடுமை மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுவோருக்கும், அவர்களுக்கு ஆதரவான சட்ட நடவடிக்கைகளுக்கான உறுதியான ஆதரவாகும்.

எனவே, நேர்மையான, திறமையான நீதிபதியான ப.உ.செம்மல் அவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் பணியிடை நீக்க உத்திரவைத் திரும்பப் வேண்டும்.

தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவர் சார்பில் வலியுறுத்துகிறோம்.

எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை, மனித உரிமை செயற்பாட்டாளர்.

வழக்கறிஞர் ஹென்றி டிபேன், மக்கள் கண்காணிப்பகம், மதுரை.

வழக்கறிஞர் சுதா இராமலிங்கம், சென்னை.

வழக்கறிஞர் ப.பா.மோகன், ஈரோடு.

எழுத்தாளர் வ.கீதா, சென்னை

வழக்கறிஞர் பி.எஸ்.அஜீதா, சென்னை.

வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை.

பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

பேராசிரியர் பிரபா கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.

பேராசிரியர் வீ.அரசு, சென்னை.

சி.துரைக்கண்ணு, அம்பேத்கர் சமூக மையம்.

டாக்டர் வே.அ.இரமேசுநாதன், முன்னாள் தேசிய அமைப்பாளர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை வலுப்படுத்துவதற்கான தேசியக் கூட்டமைப்பு.

புனிதப் பாண்டியன், ஆசிரியர், ‘தலித் முரசு’

எழுத்தாளர் கவின்மலர், சென்னை.

கா.வேணி, சமூக செயல்பாட்டாளர், சென்னை.

வாசுகி பாஸ்கர், ஆசிரியர், நீலம் பதிப்பகம், சென்னை.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

பா.அசோக், இணைத் தலைவர், பார்கவுன்சில் தமிழ்நாடு & புதுச்சேரி.

வழக்கறிஞர், எழுத்தாளர் ச.பாலமுருகன், ஈரோடு.

வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், மதுரை.

வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன், மக்கள் உரிமைக் கூட்டணி, சென்னை.

வழக்கறிஞர் கி.நடராஜன், சென்னை.

வழக்கறிஞர் கோ.பாவேந்தன், சென்னை.

வழக்கறிஞர் இல.திருமேணி, கடலூர்.

வழக்கறிஞர் பி.புருஷோத்தமன், கடலூர்.

வழக்கறிஞர் கா.கணேசன், மனித உரிமை செயற்பாட்டாளர் மதுரை.

பேராசிரியர் அரச முருகுபாண்டியன், பி.யூ.சி.எல், சிவகங்கை மாவட்டம்.

கண.குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை.

அ.சிம்சன், ஒருங்கிணைப்பாளர், நீதிக்கான மக்கள் இயக்கம், காரைக்குடி.

பழ.ஆசைத்தம்பி, மாநிலச் செயலாளர், சி.பி.ஐ (எம்.எல்), தமிழ்நாடு.

பேராசிரியர் சங்கரலிங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், சென்னை.

காஞ்சி அமுதன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்.

பேராசிரியர் சே.கோச்சடை, எழுத்தாளர், கல்வியாளர், காரைக்குடி,

உறவு கா.சே.பாலசுப்பிரமணியம், மக்கள் கல்வி இயக்கம், காரைக்குடி.

அ.தேவநேயன், குழந்தை உரிமை செயற்பாட்டாளர், சென்னை.

ஆ.இரவி கார்த்திகேயன், மருதம், விழுப்புரம்.

கவிஞர் இசாக், சென்னை.

கவிஞர் பால்கி, த.மு.எ.க.ச, கடலூர்.

கவிஞர் ஜோசப் ராஜா, சென்னை.

ஆசிரியர் த.பாலு, விழுப்புரம்.

பி.வி.இரமேஷ், தலைவர், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்.

பழனிச்சாமி கருப்பன், மனித் உரிமை செயல்பாட்டாளர், ஈரோடு.

இரா.பாபு, மனித உரிமை செயல்பாட்டாளர், கடலூர்.

பா.ஜோதிநரசிம்மன், ஊடகவியலாளர், விழுப்புரம்.

எழுத்தாளர் முருகப்பன் ராமசாமி, திண்டிவனம்.

மேலும், தங்கள் பெயரை இணைத்து ஆதரவளிப்பவர்கள்:

முனைவர் ரத்தின புகழேந்தி, கானல்வரி கலை இலக்கிய இயக்கம், விருத்தாசலம்.

எழுத்தாளர் அன்பாதவன், விழுப்புரம்.

டி.என்.கோபாலன், ஊடகவியலாளர்,

மனிதி செல்வி, சென்னை.

எவிடன்ஸ் கதிர், மதுரை.

யா.அருள், எழுத்தாளர், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, சென்னை.

வாலாசா வல்லவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி.

வேடியப்பன், சமூக செயற்பாட்டாளர், அரூர்.

எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநிலக் குழு உறுப்பினர், சி.பி.ஐ.(எம்), சிதம்பரம்.

இராம்குமார்.BA.LLB, தமிழ்நாடு புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்.

வழக்கறிஞர் அ.ஸ்டீபன், சென்னை.

எழுத்தாளர் க.பஞ்சாங்கம், புதுச்சேரி.

கவிஞர் ஜா. வினாயகமூர்த்தி, விழுபுரம்.

ஜெ.மு.இமயவரம்பன். வழக்கறிஞர். சேலம்.

தலைவர், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம்.

வ.கௌதமன், பொதுச்செயலாளர், தமிழ்ப் பேரரசு கட்சி.

சூரிய.நாகப்பன், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், நியூஜெர்சி.

குருசாமி மயில்வாகனன், எழுத்தாளர், செயற்பாட்டாளர், சிவகங்கை.

வ. ரமணி, தலைவர், சாதி ஒழிப்பு முன்னணி, செதலைவர்,

முனைவர் ஆ.ஆனந்தன், தலைவர், புதுச்சேரி தமிழர் மரபு வரலாற்று ஆய்வு நடுவம், புதுச்சேரி.

பேரா. செ. அமலநாதன், ஒருங்கிணைப்பாளர், பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, காரைக்குடி.

பேரா. மாமள்ளன், தமிழ், தமிழர் பாதுகாப்பு இயக்கம், தமிழர் நாடு.

டாக்டர் ப.கிருஷ்ணன், மனித உரிமை செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு :

கோ.சுகுமாரன் – 9894054640, முருகப்பன் – 9894207407

Saturday, October 11, 2025

பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்: உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.10.2025) விடுத்துள்ள அறிக்கை:

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கைக் கோரி போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசிரியர்கள் இருவர் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் குற்றமிழைத்தப் பேராசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்ற 09.10.2025 அன்று பல்கலைக்கழக மாணவ மாணவியர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்கலைக்கழக மானிய குழு விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு அமைக்க வேண்டுமென நள்ளிரவு வரை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

அப்போது காலாப்பட்டு போலீசாரும் கமாண்டோ படையினரும் போராடிய மாணவ மாணவியர் மீது தடியடி நடத்தி உள்ளனர். ஒரு போலீஸ்காரர் மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த விடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேலும், 6 மாணவிகள், 18 மாணவர்கள் என மொத்தம் 24 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். பின்னர், அனைவரையும் பிணையில் வெளியே விட்டுள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களைப் பாதுகாத்து வருகிறது. இதனால், மாணவ மாணவியர் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

மாணவ மாணவியர் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் குறித்து ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்குப் புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும். மாணவ மாணவியர் மீது போடப்பட்டுள்ள குற்ற வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.

இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்பி உள்ளோம்.

Tuesday, August 12, 2025

கொலைக் கூடங்களாக மாறி வருவதால் அனைத்து ரெஸ்டோ பார்களையும் மூட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.08.2025) விடுத்துள்ள அறிக்கை:

கொலைக் கூடங்களாக மாறி வருவதால் அனைத்து ரெஸ்டோ பார்களையும் மூட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த 09.08.2025 அன்று மிஷன் வீதியிலுள்ள ரெஸ்டோ பாரில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் மோஷ்க் சண்முகபிரியன் (வயது 23) அங்கிருந்த பவுன்சர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் ஷார்ஜன் (25) கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ரெஸ்டோ பார்களைக் கலால்துறையும், காவல்துறையும் கண்காணிக்காததாலும், விதிகளை மீறி விடிய விடிய நடத்த அனுமதித்ததாலும் இக்கொலை நடந்துள்ளது. சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் நகரம் முழுவதும் ரெஸ்டோ பார்களுக்கு அளவுக்கு அதிகமாக அனுமதி வழங்கிய முதலமைச்சர் ந.ரங்கசாமி, சுற்றுலா துறை அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் ஆகியோர் இக்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ரெஸ்டோ பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 12 மணிக்கு மேல் செயல்பட்டதால் 11 ரெஸ்டோ பார்களின் உரிமங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது கலால் துறை. இது ஒரு உயிர் போன பின்பு எடுக்கப்பட்ட காலங்கடந்த, கண்துடைப்பு நடவடிக்கை ஆகும்.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 251 ரெஸ்டோ பார்கள் உள்ளன. இதில் புதுச்சேரியில் 212, காரைக்காலில் 31, மாகேயில் 3, ஏனாமில் 5 ரெஸ்டோ பார்கள் உள்ளன. விதிகளை மீறி மக்கள் நெருக்கமாக வசிக்கக் கூடிய இடங்கள், பள்ளிகள், கோயில்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரும் தொகைப் பெற்றுக் கொண்டு ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டும் உள்ளது.

ரெஸ்டோ பார்களில் சட்டத்திற்குப் புறம்பாக பவுன்சர்கள் என்ற பெயரில் அடியாட்களை வைத்துக் கொள்ள கலால்துறை, காவல்துறை அனுமதித்தது ஏன்? இதனால், ரெஸ்டோ பார்கள் கொலைக் கூடங்களாக மாறி வருகின்றன.

எனவே, புதுச்சேரி அரசு ரெஸ்டோ பார்கள் அனைத்தையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Wednesday, July 23, 2025

மடப்புரம் அஜித்குமார் போலீஸ் காவலில் கொலை: உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை!

 




சிவகங்கை
21.07.2025

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 28) த/பெ. பாலகுரு (மறைவு) என்பவரைத் திருப்புவனம் காவல்நிலையக் குற்றப்பிரிவுத் தனிப்படைப் போலீசார் (Special Team) போலீஸ் காவலில் அடித்துக் கொலை செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில் கீழ்க்காணும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

குழு உறுப்பினர்கள்:

1) திரு. கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ்நாடு – புதுச்சேரி.
2) பேராசிரியர் சே.கோச்சடை, மக்கள் கல்வி இயக்கம், தமிழ்நாடு – புதுச்சேரி.
3) பேராசிரியர் செ.அமலநாதன், புரட்சிகர இளைஞர் முன்னணி, காரைக்குடி.
4) திரு. அ.சிம்சன், நீதிக்கான மக்கள் இயக்கம், காரைக்குடி.
5) பேராசிரியர் முனைவர் அரச முருகுபாண்டியன், செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), சிவகங்கை மாவட்டம்.

இக்குழு 18.07.2025 அன்று சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு. செந்தில்நாதன், பி.எஸ்சி.பி.எல்., 19.07.2025 அன்று கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயார் மாலதி, அவரது தம்பி காளீஸ்வரன், அவரது தங்கை சாந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு. அய்யம்பாண்டி, மதுரை மருத்துவக் கல்லூரித் துணை முதல்வர் மருத்துவர் சி.மல்லிகா, தடய அறிவியல் துறை உதவிப் பேராசிரியரும், அஜித்குமார் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவர் குழுவைச் சேர்ந்தவருமான மருத்துவர் எஸ்.ஏஞ்சல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கப் பாடுபட்டு வரும் வழக்கறிஞர் ஹென்றி திபேன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து, சட்ட உதவிகள் செய்து வரும் வழக்கறிஞர் கணேஷ் குமார் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசியது.

அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்விடமான மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்குப் பின்புறமுள்ள மாட்டுக் கொட்டகையை இக்குழு பார்வையிட்டது.

அஜித்குமார் கொலை வழக்கின் புலன் விசாரணையில் சிபிஐ போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருவதால் அவர்களை சந்திக்க இயலவில்லை.

சம்பவத்தின் சுருக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரம் என்ற ஊரில் புகழ்பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழே உள்ளது. அஜித்குமார் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக (Security) கடந்த இரண்டு மாத காலமாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.

27.06.2025 அன்று திண்டுக்கல் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் நிகிதாவும், அவருடைய தாயார் சிவகாமியும் மேற்கண்ட கோயிலுக்கு வந்துள்ளனர். காரை நிகிதா ஓட்டி வந்துள்ளார். நடக்கமுடியாத நிலையிலிருந்த தனது தாயாரைக் கோயிலுக்குள் கூட்டிப் போய் வர சக்கர நாற்காலியை கொண்டு வருமாறு அஜித்குமாரிடம் நிகிதா கேட்டுள்ளார். அவரது தாயாரைக் கோயிலுக்குச் சக்கர நாற்காலியில் அஜித்குமார் தள்ளிக் கொண்டு போய் வருவதற்குப் பணம் கேட்ட வகையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் நிகிதா தனது காரை வாகனம் நிறுத்துமிடத்தில் விட்டு விட்டு வருமாறு கூறி, அதன் திறவுகோலை அஜித்குமாரிடம் கொடுத்திருக்கிறார். அஜீத்குமார் தனக்குக் கார் ஓட்ட தெரியாது என்று நிகிதாவிடம் சொல்லியுள்ளார். அதற்கு நிகிதா வேறு யாரையாவது வைத்துக் காரை நிறுத்தும்படி வற்புறுத்தியுள்ளார். அதன்பின்பு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநரான அருண்குமாரிடம் திறவுகோலைக் கொடுத்து, காரை வாகனம் நிறுத்துமிடத்தில் விட்டு விட்டு வருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். காரை நிறுத்திவிட்டு, காரின் திறவுகோலை நிகிதாவிடம் கொடுத்துள்ளார். நிகிதாவும், அவரது தாயாரும் கோவிலுக்குச் சென்று வழிபாட்டை முடித்துவிட்டுக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.

பின்னர் நிகிதா திருப்புவனம் காவல் நிலையத்திற்குச் சென்று தனது காரில் ஒரு கைப்பையில் வைத்திருந்த 9.5 பவுன் தங்க நகையும், ரூபாய் 2500 ரொக்கமும் திருடு போய்விட்டதாகப் பணியிலிருந்த காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் என்பவரிடம் மதியம் 3.00 மணி அளவில் வாய்மொழியாக புகார் தெரிவித்திருக்கிறார். காவல் நிலையத்திலேயே ஊடகவியலாளர்களை அழைத்து நகைத் திருட்டு தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார். அப்புறம் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். பின்னர் திருப்புவனம் போலீசார் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலரிடம் நகைத் திருட்டு தொடர்பாக அஜித்குமாரை விசாரிக்கக் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளனர். கோயில் செயல் அலுவலர் அஜித்குமாருடன் பிளம்பர் கண்ணனையும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். நகை, பணம் திருட்டு தொடர்பாகக் காவல் நிலையத்தில் விசாரித்த போலீசார் அஜித்குமாரை பின்னர் மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவருடன் வந்த பிளம்பர் கண்ணனைத் திருப்பி அனுப்பிவிட்டனர். தனிப்படை போலீசார் அஜித்குமார், அவரது தம்பி நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் ஆகியோரை ஒரு டெம்போ டிராவலர் வண்டியில் ஏற்றிக்கொண்டு திருப்புவனம் நெடுஞ்சாலையைத் தாண்டி டி.புதூரில் உள்ள கால்நடை மருத்துவமனை, சீச்சாகளம், மடப்புரம் விலக்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, அயோத்தி தோப்பு, மடப்புரம் பேருந்து நிலையம், வண்டிகோட்டை கண்மாய் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்து விசாரித்துள்ளனர். கடைசியாக மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலின் அறநிலையத் துறை அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அஜித்குமாரை அங்கு வைத்துத் தனிப்படை போலீசார் பிளாஸ்டிக் லத்தி, மரத்தடி, இரும்புக் கம்பி, இரும்புக் குழாய் போன்றவற்றால் கடுமையாக அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர். அஜித்குமார் வலி தாங்க முடியாமல் தாகம் ஏற்பட்டு, குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது தனிப்படை போலீசார் மிளகாய்ப் பொடியை ஒருவர் மூலம் வாங்கிக் கொண்டுவந்து அவரது முகம் மற்றும் பிறப்புறுப்பு ஆகியவற்றில் தடவியுள்ளனர். அஜித்குமாரை உள்ளங்கால், தலை, முகம், மார்பு, முதுகு, கைகள், கால்கள், தொடை ஆகியவற்றில் போலீசார் கடுமையாகத் தாக்கிக் காயங்கள் ஏற்படுத்தி உள்ளனர். அஜித்குமார் உடலின் மேல் ஏறி நின்று லத்தியால் விலாவில் குத்தியுள்ளனர். இப்படியான மூன்றாம் தரச் (Third Degree Methods) சித்திரவதையால் அஜித்குமார் 28.06.2025 அன்று மாலை 5.30 மணியளவில் மாட்டுக் கொட்டகையிலேயே இறந்து போயுள்ளார். மாட்டுக் கொட்டகையில் அஜித்குமாருக்குத் தண்ணீர் கொடுத்தவர் அஜித்குமாருக்கு மலசலம் போவதைப் பார்த்து, அவரைச் சோதித்துவிட்டு அஜித்குமார் இறந்துபோனதாகக் கூறியுள்ளார்.

அஜித்குமாரை கோயில் மாட்டுக் கொட்டகையில் அடித்துத் துன்புறுத்தியதைக் கோயில் ஊழியர்கள் சிலரும், பிற இடங்களில் அடித்ததைப் பொதுமக்களும் கடை வணிகர்களும் பார்த்துள்ளனர். அஜித்குமாரை அடித்ததை அவருடைய தம்பி நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் ஆகியோரும் பார்த்துள்ளனர். மேலும், நவீன்குமார் ஊரில் இல்லாத போதும் அழைத்துப் போலீசார் அடித்துத் துன்புறுத்தி உள்ளனர்.

அஜித்குமாரை திருப்புவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அருகே உள்ள மருத்துவர் பாஸ்கரன் கிளினிக்கிற்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர் சிகிச்சை அளிக்க மறுத்ததால் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குப் பணியில் இருந்த மருத்துவர்கள் அஜித்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர் (brought dead). அஜித்குமார் உடலை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்குள்ள பிணவறையில் வைத்துள்ளனர்.

28.06.2025 இரவு 8.00 மணி முதல் 12.00 மணி வரை அஜித்குமாரின் தாயார் மாலதி மற்றும் அவரது உறவினர்கள், வழக்கறிஞர் கார்த்திக் ராஜா ஆகியோர் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்துள்ளனர். அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடமும் காவலர்களிடமும் ‘நீங்கள் கூட்டிச் சென்ற அஜித்குமார் எங்கே?’ என்று கேட்டுள்ளனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஷீஷ் ராவத் அஜித்குமாரின் தாயார், தம்பி மற்றும் உறவினர்களிடம் அஜித்குமார் இறந்து விட்டதாகவும், அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

29.06.2025 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக எழுத்து வடிவிலான புகார் ஒன்றை அங்கிருந்த காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாரிடம் அஜித்குமாரின் தாயார் மாலதி மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா ஆகியோர் கொடுத்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு (CSR) இதுவரை அளிக்கப்படவில்லை. அஜித்குமார் போலீஸ் பிடியில் சிக்கி 24 மணி நேரத்திற்கு மேலாகியும், அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து போலீசார் அவரது குடும்பத்திற்கு எதையும் தெரிவிக்கவில்லை. மறுநாள் 29.06.2025 காலை திருப்புவனம் காவல் நிலையம் அருகே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் ஏராளமானவர்கள் கூடியுள்ளனர். அப்போது அஜித்குமாரின் வீட்டுக்கு அருகே உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சண்முகசுந்தரம் மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவரும், திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான சேங்கைமாறன், நாடார் சங்கத் தலைவர் அயோத்தி உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் தருவதாகவும், நவீன்குமாருக்கு அரசு பணி வழங்குவதாகவும் சமரசப் பேச்சு நடத்தி உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இதை ஏற்கவில்லை என்றாலும், அஜித்குமாரின் உடற்கூறாய்வுக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளனர். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் ஏற்றிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு. செந்தில்நாதன் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி மதுரைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.

29.6.2025 அன்று நள்ளிரவு 1.00 மணிக்குக் கொடுத்த புகாரைப் பதிவு செய்து, ஒப்புகைச் சீட்டு வழங்காமல் பழையனூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் கண்ணன் என்பவரிடம் 29.06.2025 அதிகாலை 2.00 மணிக்குப் புகார் பெற்று அஜித்குமார் மரணம் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் (முதல் தகவல் அறிக்கை (FIR), குற்ற எண் 303/2025, பிரிவு 196(2)(a) பி.என்.என்.எஸ், 2023). பின்னர், வழக்கை விசாரிக்க திருப்புவனம் நீதித்துறை நடுவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரணைக்கு வருவதை அறிந்தவுடன் தனிப்படைக் காவலர்கள் சித்திரவதை நடத்தியதை மெய்ப்பிக்கும் சான்றுப் பொருட்களை மறைக்கும் நோக்கத்தோடு காவல் சித்திரவதை நடந்த கோயில் மாட்டுக் கொட்டகையில் கிடந்த பிளாஸ்டிக் தடி மற்றும் இரும்புத் தடி, குழாய் ஆகியவற்றை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன் ஒரு சாக்குப் பையில் அள்ளிச் சென்றுள்ளார். வழக்கறிஞர் ஹென்றி திபேன் கூறியதைப் போல இது குப்பை பொறுக்குபவனின் செயலை ஒத்தது.

மேற்சொன்ன காவல் மரண வழக்கின் அடிப்படையில் திருப்புவனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு. ஆர்.வெங்கடேஷ் பிரசாந்த் விசாரணை மேற்கொண்டார். மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீதித்துறை நடுவர் முன்னிலையில் உடற்கூறாய்வு தடய அறிவியல் துறைப் பேராசிரியர்கள் மருத்துவர் எஸ்.சதாசிவம், மருத்துவர் எஸ்.ஏஞ்சல் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழுவினரால் செய்யப்பட்டது. உடற்கூறாய்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. உடற்கூறாய்வு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிக்குள் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இச்சட்ட விதிகளுக்கு மாறாக 29.06.2025 அன்று மாலை 5.49 மணி முதல் இரவு 9.20 மணி வரை உடற்கூறாய்வு நடந்துள்ளது. உடற்கூராய்வு அறிக்கையில் அஜித்குமார் தலை, முகம், மார்பு, முதுகு, கைகள், கால்கள்,தொடை, வயிறு, பாதங்கள் என உடல் முழுவதும் 44 காயங்கள் இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உடற்கூறாய்வு செய்த மருத்துவர் எஸ்.ஏஞ்சல் ‘இறப்புக்கான காரணம் காயங்களும், அதனால் ஏற்பட்ட இரத்தப் போக்கு மற்றும் அதிர்ச்சியே. ஸ்வாப் டெஸ்ட் எடுக்க தேவையில்லை. சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர், மதுரை வழக்கின் தீர்ப்பு உள்ளது’ என்று இக்குழுவிடம் கூறினார்.

காவல் மரணங்களில் உடற்கூறாய்வு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பற்றி சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர், மதுரை என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைத் தீர்ப்பு முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. உடற்கூறாய்வு நடந்து முடிந்த போது, வழக்கறிஞர்கள் மேற்சொன்ன தீர்ப்பின்படி உடற்கூறாய்வு அறிக்கை நகல், வீடியோ பதிவு கேட்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கப்படவில்லை. மேலும், மறு உடற்கூறாய்வுத் தேவைப்படுமாயின் அதற்காகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, காவலில் இறந்தவர் உடலை 48 மணி நேரம் பிணவறையில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி வழக்கறிஞர் பேசிய போதும் அவ்வாறு செயல்படுத்தப்படவில்லை. வழக்கறிஞர் நீதித்துறை நடுவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தெரியாமல் அஜித்குமாரின் தாயார் மாலதி, அவருடைய இளைய மகன் நவீன்குமார் மற்றும் உறவினர்களை அவசர அவசரமாகக் காவல்துறை வாகனத்தில் ஏற்றி இறந்தவர் உடலை எடுத்துக் கொண்டு கூட்டிச் சென்றுள்ளனர்.

மேற்சொன்ன தீர்ப்பின்படி உடற்கூறாய்வின் போது முழு உடலையும் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்க வேண்டும். இதுகுறித்து மதுரை மருத்துவக் கல்லூரித் துணை முதல்வரிடம் விசாரித்தபோது தடய அறிவியல் துறையில் கைப்பேசியில் கேட்டு எக்ஸ்ரே மட்டும் எடுக்கப்பட்டதாகக் கூறினார். இவ்வழக்கில் உடற்கூறாய்வு அறிக்கை ஓர் உயிர்நாடியான (Vital) சான்று ஆவணம் என்றாலும்கூட, சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர், மதுரை என்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் சில பின்பற்றப்படவில்லை. போலீசார் மற்றும் ஆளுங்கட்சி ஆட்களின் வற்புறுத்தலால் அஜித்குமார் உடல் அவசர அவசரமாக எரிக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் காவல் மரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் நீதித்துறை நடுவர் திரு. ஆர்.வெங்கடேஷ் பிரசாந்த் காவல்துறையின் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்ற போதும்கூட சீருடையில் போலீசார் சூழ்ந்துகொண்டு மறைமுக அச்சுறுத்தல் கொடுத்துள்ளனர். இதனால் சாட்சியம் அளித்தவர்கள் அஜித்குமாரை அடித்துக் கொன்ற தனிப்படை போலீசாரின் பெயர்களைக்கூடச் சொல்ல அச்சப்பட்டு பெயரைச் சொல்லாமலேயே வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டபோது அன்றைக்கு நீதித்துறை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பெடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அஜித்குமாரை அடித்துக் கொன்ற கொலைக் குற்றவாளிகளான தனிப்படை போலீசாரை காப்பாற்ற காவல்துறையும் அரசும் முழுவீச்சில் செயல்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் தலையீடு!

அஜித்குமார் காவல் மரணத்தைக் கண்டித்தும் அதைக் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டுமென்றும் அஇஅதிமுக, இ.பொ.க. (மார்க்சிஸ்ட்), இ.பொ.க., இ.பொ.க. (மா-லெ), பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். மடப்புரத்திலும் திருப்புவனத்திலும் மேற்படி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம், சுவரொட்டி இயக்கம் நடைபெற்றன. சென்னையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

அனைத்திந்திய அளவில் செயல்பட்டு வரும் மக்கள் சிவில் உரிமைக் கழக மதுரை மாவட்டக் கிளை விசாரித்து அறிக்கை வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் ஹென்றி திபேன் தலைமையிலான காவல்துறைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் இப்படுகொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிடப்பட்டது. காவல்துறை வன்முறைக்கு எதிரான மக்கள் கூட்டியக்கம் சார்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டு, தமிழக முதல்வருக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.

ஊடகங்களின் பங்கு!

காவல் மரண வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தொடர்ந்து உரிய முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளை வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது. மேலும், சமூக ஊடகங்களிலும் காவல் மரணம் குறித்துப் பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதுவே அரசுக்கும் காவல்துறை தலைமைக்கும் இக்காவல் மரண வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றத்தின் தலையீடு!

அஇஅதிமுக வழக்கறிஞர் எம்.மாரிஸ் குமார், வழக்கறிஞர் கார்த்திக் ராஜா, டி.பாண்டித்துரை, பி.பாண்டி, தீரன் திருமுருகன், வி.மகாராசன் ஆகியோர் தனித்தனி ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் அனைத்திலும் அஜித்குமாரைக் கொன்ற 6 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், வழக்குப் புலன்விசாரணயை சிபிஐ அல்லது சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உடனேயே அஜித்குமார் காவல் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளரின் தனிப்படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு (தலைமைக் காவலர்கள்), ராஜா, ஆனந்து, சங்கர மணிகண்டன் (காவலர்கள்) ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் வேன் ஓட்டுநர் இன்னமும் சிக்கவில்லை.

சென்ற 01.07.2025 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் திரு. எஸ்.எம்.சுப்பிரமணியம், திருமதி. ஏ.டி.மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஹென்றி திபேன் சம்பவம் முழுவதையும் எடுத்துக்கூறி, வழக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக வாதிட்டுள்ளார். மேலும், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் மாட்டுக் கொட்டையில் அஜித்குமாரை தனிப்படை போலீசார் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு ஒன்றையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, நீதிபதிகளைப் பார்க்க வைத்துள்ளார். நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த, வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் என்பவரை நீதிபதிகள் கூறியபடி அவர்கள் முன்னே நிறுத்தி உள்ளார். திருப்புவனம் நீதித்துறை நடுவர் அன்றைக்குப் பிற்பகல் 3.00 மணிக்கு இடைக்கால அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென ஆணையிடப்பட்டது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், கண்ணுற்ற சாட்சியும், கோவிலில் நடந்த சித்திரவதையை வீடியோவில் பதிவு செய்தவருமான சத்தீஷ்வரனை பிற்பகல் 3.00 மணிக்கு நீதிமன்றத்தில் முன் நிறுத்துமாறு நீதிபதிகள் ஆணையிட்டனர். மேலும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை பிற்பகல் 3.00 மணிக்கு உடற்கூறாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டனர்.

பிற்பகல் 3.00 மணிக்கு விசாரணை தொடங்கியபோது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் (Additional Advocate General) வழக்கறிஞர் அஜ்மல் கான் முதல் தகவல் அறிக்கையில் பிரிவு 103 பி.என்.எஸ் (கொலை) சேர்க்கப்பட்டு தனிப்படைக் காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் புலன்விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வழக்கின் குறைபாடுகளுக்கும், கவனக் குறைவுக்கும் காரணமான போலீஸ் உயரதிகாரிகள் மீதும் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் அரசின் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை; உயரதிகாரிகள் சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்கின்றனர்; 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது கண்துடைப்பானது; காவல் மரணத்தை மூடி மறைக்க முயல்கின்றனர்; அதனால் பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை என வாதிட்டனர். மேலும், மாவட்ட காவல்துறை சம்பவத்தை மூடி மறைக்கவும், காவல் மரணத்தை ‘புதைக்கவும்’ முயற்சிப்பதால் நீதிமன்றம் தலையிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வாதிட்டனர். நீதிமன்றத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் உடற்கூறாய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

திருப்புவனம் நீதித்துறை நடுவர் தனது அறிக்கையையும் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் பதற்றமான சூழல் நிலவுவதால் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும், விசாரணை செய்யவும் முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் சிசிடிவி காட்சிகள் அடங்கிய DVR, Hard Disk போன்றவற்றை ராமச்சந்திரன் என்ற காவல் உதவி ஆய்வாளர் கைப்பற்றி வைத்துள்ளதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் மதுரை நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதியான திரு. எஸ்.ஜான் சுந்தர்லால் சுரேஷ் இச்சம்பவம் குறித்து விசாரித்து 08.07.2025-க்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய ஆணையிட்டனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறியபடி காவல் மரணத்திற்குப் பொறுப்பேற்று விளக்கம், காரணம் கூற வேண்டிய நிலையில் உள்ள காவல் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, அதனை 08.07.2025-க்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.

காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், புலன்விசாரணை அதிகாரி ஆகியோர் வழக்கின் ஆவணங்கள், காவல் தனிப்படை உறுப்பினர்கள், உயரதிகாரிகள் ஆகியோர் யார் யாரோடு பேசினார்கள் என்ற விவரங்கள் (Call Details Record), சிசிடிவி வீடியோ காட்சிகள் அனைத்தையும் மதுரை நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதியிடம் அளிக்குமாறு நீதிபதிகள் ஆணையிட்டனர். நீதிபதி இந்த ஆதாரங்கள் அனைத்தையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வைத்திருக்க வேண்டும் எனவும் ஆணையிட்டனர். இவ்வழக்கின் கண்ணுற்ற சாட்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

08.07.2025-இல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதி தனது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர் நிலைத் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலன்விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அஜித்குமாரின் தாயாருக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது, அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், நீதிபதிகள் நிகிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட திருட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஆணையிடப்பட வேண்டுமெனவும் ஆணையிட்டனர் .மேலும், இக்காவல் மரண வழக்கில் வரும் 20.08.2025-க்குள் குற்ற அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் சிபிஐக்கு ஆணையிட்டனர்.

இப்போது சிபிஐ போலீசார் தீவிரமாக புலன்விசாரணையை செய்து வருகின்றனர். இதனிடையே சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் (ஆனால், இப்போது மீண்டும் அவர் வேறு பணியில் சேர்ந்துள்ளார்). மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இக்காவல் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் திரு. எஸ்.எம்.சுப்பிரமணியம், திருமதி. ஏ.டி.மரியா கிளாட் ஆகியோரின் தலையிடும், ஆணைகளும் மனித உரிமைகளைக் காக்கும் வகையிலும் அமைந்துள்ளன. குற்றமிழைத்த போலீசார் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கக் கூடாது என்ற உயரிய நோக்கில் அமைந்துள்ளன. இதனை இக்குழு மனதாரப் பாராட்டுகிறது.

நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும் நீதிமன்றத்தின் முன்பு உண்மைகளைத் தொகுத்து அளித்து திறம்பட வாதிட்டு, இந்த ஆணைகள் பெற காரணமான வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் இக்குழு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

பார்வைகள்:

1) நிகிதா 9.5 பவுன் தங்க நகை, பணம் காணாமல் போனதாக வாய்மொழியாகக் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதியாமலேயே அஜித்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் ஆகியோரைப் பிடித்து வந்து, தனிப்படைக் காவலர்களை வைத்து அடித்துத் துன்புறுத்தியது முழுதும் சட்டத்துக்குப் புறம்பானது. அஜித்குமார் கொல்லப்பட்டதைப் பற்றி அஜித்குமாரின் தாயார் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா 29.06.2025 அன்று நள்ளிரவு 1.00 மணிக்குப் புகார் கொடுத்த பிறகுதான் ஒரு வழக்கறிஞரிடம் இருந்து புகார் பெற்று நிகிதாவின் நகைத் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது (குற்ற எண் 302/2025).

2) திருப்புவனம் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நிகிதா தமிழக அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஓர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரி காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் அளித்துள்ளார். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் அறிவுறுத்திய பின்னர், தன் கட்டுப்பாட்டில் உள்ள தனிப்படை போலீசாரிடம் அஜித்குமாரை நன்றாக கவனித்து விசாரிக்குமாறு ஆணையிடப்பட்டதாகப் பரவலாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையிலேயே தனிப்படை போலீசார் அஜித்குமார் உள்ளிட்டோரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தி அஜித்குமாரைச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

3) தனிப்படை போலீசார் பிளாஸ்டிக் தடி, இரும்புத் தடி, இரும்புக் குழாய், ஆகியவற்றால் அடித்தும், மிளகாய்ப் பொடியை முகத்திலும், மர்ம உறுப்பிலும் தடவியும் கடுமையாகச் சித்திரவதை செய்ததால்தான் அஜித்குமார் இறந்துள்ளார். இது அப்பட்டமான காவல் கொலை என்பது உறுதியாகிறது. உயர்நீதிமன்றத் தலையீட்டால் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வேன் ஓட்டுநர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

4) திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டபோது போலீசாரின் தலையீடும், மாவட்டக் காவல்துறையின் தலையீடும் இருந்துள்ளன. பதட்டமான சூழல் இருந்ததால் அவரால் விசாரணையை முழுமையாகச் செய்ய முடியவில்லை என்று நீதித்துறை நடுவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது அறிக்கையில் கூறியுள்ளார். காவல்துறை அழுத்தத்தின் காரணமாகவே நீதித்துறை நடுவர் விசாரணையின்போது உடன் இல்லாமல் நீதித்துறை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்துள்ளனர். நீதித்துறை நடுவர் விசாரணைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இது சட்டத்திற்குப் புறம்பானது என்பதோடு, அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு எதிரானது; காவல்துறையும் நீதிமன்ற ஊழியர்களும் கடமையிலிருந்து தவறிய குற்றமாகும்.

5) காவல் மரண வழக்குப் பதிவு செய்த பின்னர் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொள்வதில் காவல்துறைக்கு எவ்வித பங்குமில்லை. காவல்துறை விசாரணைக்கு எவ்வித இடையூறும் வராமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மட்டுமே அவர்களது பணியாகும். திருப்புவனம் போலீசாரும், சிவகங்கை மாவட்ட காவல்துறையும் ஆளும் கட்சி பிரமுகரை துணைக்கு வைத்துக்கொண்டு நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு இடையூறாகவும், பாதிக்கப்பட்ட குடும்பம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமலும் நெருக்கடிகள் கொடுத்துள்ளனர்.

6) பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டின் அருகே உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், ஆளுங்கட்சி பிரமுகரும் திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான சேங்கைமாறன், சாதிச் சங்கத் தலைவர் அயோத்தி உள்ளிட்டோர் ரூபாய் 50 இலட்சம் தருவதாக சமரசம் பேசியுள்ளனர். இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். இச்சமரச கூட்டத்தைப் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். இச்சமரச முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த வீடியோ எடுத்த மக்களைப் போலீசார் தாக்கிய வீடியோ காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அந்த நேரத்தில் அங்கே சென்ற சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் திரு. செந்தில்நாதன் மண்டபத்தில் நடந்த சமரசப் பேச்சு வார்த்தையை நேரில் பார்த்ததாக இக்குழுவினரிடம் கூறினார்.

7) காவல் மரண வழக்குகளில் இறந்தவர்களின் உடற்கூறாய்வின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர், மதுரை (2020) வழக்குத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி ஸ்வாப் டெஸ்ட் (Swap Test), ஸ்கேன் (Scan) எடுப்பது போன்ற ஒரு சில அம்சங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குச் சட்ட ரீதியான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.

8) ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய 11 கட்டளைகள் (டி.கே.பாசு எதிர் மேற்குவங்க அரசு என்ற வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு) எதையுமே திருப்புவனம் காவல் நிலையப் போலீசார் பின்பற்றவில்லை. அதைப்போலவே சித்திரவதையைத் தடை செய்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டபோதும் அது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

9) தனிப்படை போலீசார் அஜித்குமாரைப் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். சட்டத்தை மீறி எந்தவித அச்சமும் இல்லாமல் போலீசார் இக்கொலையைச் செய்திருப்பது சட்டப்படி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் போலீசாரிடம் துளியும் இல்லை என்பதையே காட்டுகிறது. இது காவல்துறையின் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் சீர்குலைப்பதுடன் பொதுமக்கள் காவல்துறையின் அடக்குமுறைக்குப் பலியாவதைத் தடுக்க முடியாது என்பதையே காட்டுகிறது. இது ஆபத்தான போக்கு என்பதுடன், சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது.
10) அஜித்குமார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் திருப்புவனம் காவல் நிலையம் தொடங்கி மாவட்ட காவல்துறை வரையில் இக்காவல் கொலையை மூடி மறைக்க முயன்றதை நீதிமன்ற ஆணையில் குறிப்பிட்டுள்ளனர். தமிழக அரசும் காவல்துறைத் தலைமையும் எதிர்காலத்தில் இது போல நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11) தமிழகத்தில் தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு 31 காவல் மரணங்கள் நடந்துள்ளன. இது அளவுக்கு மீறியதாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. இச்சம்பவங்களில் 2 வழக்குகளில் மட்டுமே குற்ற அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டும், அவற்றில்கூட இன்னமும் வழக்கு விசாரணை முடியவில்லை. பிறவற்றில் நீதித்துறை நடுவர் விசாரணை முடியாமல் உள்ளது என்பதும், காவல்துறை புலன் விசாரணையை முடித்து, குற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை. காவல் மரணங்களில் தமிழக அரசும் காவல்துறை தலைமையும் இவ்வளவு பொறுப்பற்று நடந்து கொள்வது காவல் மரணங்கள் தொடர்வதற்கு வழிவகுக்கின்றன.

12) இந்திய அளவில் 2017 – 2022 வரை நடந்த காவல் மரணங்கள் குறித்து 345 நீதித்துறை நடுவர்/நீதி விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. 123 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 79 வழக்குகளில் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு போலீஸ்காரர்கூட தண்டிக்கப்படவில்லை. அதேபோல், இந்திய அளவில் 2017 – 2022 வரையில் சட்டவிரோதக் காவல், காவலில் சித்தரவதைகள், காயங்கள் ஏற்படுத்துதல் மொத்தம் 74 வழக்குகள் பதிவாகி உள்ளன. 41 போலீசார் மீது குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 3 போலீசார் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 2016 – 2017 மற்றும் 2021 – 2022 ஆண்டுகளில் மொத்தம் 490 காவல் மரணங்கள், காவலில் காயமுற்றதும் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டில் 31.12.2022 கணக்குப்படி போலீஸ் காவலில் வைக்கப்பட்டவர்கள் மொத்தம் 2129 ஆகும். இதில் 38.5 விழுக்காடு தலித்துகள் என்பது கவலைக்குரியது (தகவல்: The Hindu 03.07.2025).

பரிந்துரைகள்:

1) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையின் பேரில் சிபிஐ போலீசார் வழக்கை விரைந்து புலன்விசாரணை செய்து, வரும் 20.08.2025-க்குள் நீதிமன்றத்தில் குற்ற அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

2) நகை, பணம் திருடு போனதாக கூறப்பட்ட பொய்ப் புகாரில் அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். அதற்குக் காரணம் நிகிதா என்பதால், அவரை இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராகச் சேர்த்துக் கைது செய்ய வேண்டும்.
3) நிகிதா கேட்டுக்கொண்டபடி சிவகங்கை மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் யார் என்று கண்டறிந்து, அவர்கள் மீதும் சிபிஐ போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அதிகாரிகள் யார் என்று மக்களுக்குத் தமிழக அரசு தெரியப்படுத்த வேண்டும்.

4) பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூபாய் 7.5 இலட்சம் போதுமானது இல்லை. இது ரூபாய் 50 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

5) பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப்பட்டா இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, யாரும் வசிக்காத, சுடுகாட்டிற்கு அருகில் உள்ளது. இது ஏற்புடையதன்று. ஏற்கனவே குற்றமிழைத்த போலீசாரால் அச்சுறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த இடத்தில் குடியேறுவது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பாதுகாப்பானது இல்லை. எனவே, மக்கள் குடியிருக்கும் பகுதியில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.

6) அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் பால் நிறுவனத்தில் வழங்கப்பட்ட வேலையை ரத்து செய்து, அவருக்கு நேரடி அரசு வேலை வழங்க வேண்டும்.

7) பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், சாட்சிகள் அனைவருக்கும் ‘சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் (Witness Protection Scheme) உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
8) அஜித்குமார் கொலைக்குக் காரணமான சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷீஷ் ராவத், மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

9) நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு முன்னர் சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை அழித்த மானாமதுரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுக் கைது செய்யப்பட வேண்டும்.

10) காவல் மரண வழக்குகளில் உடற்கூறாய்வு செய்யும்போது சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர், மதுரை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்த தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தொடர்புடைய துறைகளுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை விட வேண்டும்.

11) தமிழகத்தில் இப்போதைய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரையில் 31 காவல் மரணங்கள் நடந்துள்ளன. இதில் 2 வழக்குகளில் மட்டுமே குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளன. பிற வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன. காவல் மரண வழக்குகளில் விரைந்து புலன்விசாரணை முடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணை முடிந்து, போலீசாருக்கு தண்டனைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தொடர் நடவடிக்கை எடுத்து, வழக்குகளை கண்காணித்து விரைந்து முடிப்பதற்காக நேர்மையும் திறமையும் உள்ள ஐ.ஜி., தகுதியிலுள்ள காவல் அதிகாரி ஒருவர் தலைமையில் ஓர் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

12) காவல் மரண வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க ஏதுவாக தேவைப்படும் மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.

13) டி.கே.பாசு வழக்குத் தீர்ப்பில் சட்ட ஆணையப் பரிந்துரையைக் குறிப்பிட்டு, “போலீஸ் காவலில் ஒரு நபருக்குக் காயங்கள் ஏற்படும் போது, போலீஸ் அதிகாரிகளே அதற்குக் காரணம் என்று நீதிமன்றம் கருதிடலாம் (Presumption). இதற்கு நீதிமன்றம் அந்த நபர் காவலில் இருந்த நேரம், பாதிக்கப்பட்டோர் வாக்குமூலங்கள், மருத்துவச் சான்று, நீதித்துறை நடுவர் அறிக்கை போன்றவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்” என்று இந்திய சாட்சிய சட்டத்தில் ஒரு பிரிவைச் (Section 114(b) Indian Evidence Act) சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது. நடுவண் அரசு இதற்கான ஒர் சட்ட முன்வரவைத் தாக்கல் செய்துள்ளது. ஆனால், இது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. நடுவண் அரசு உடனடியாக இச்சட்ட முன்வரைவைப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து, விவாதத்திற்கு உட்படுத்தி நிறைவேற்ற வேண்டும். இது காவல் மரண வழக்குகளில் போலீசாருக்குத் தண்டனை கிடைத்து, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கப் பெருமளவில் உதவும்.

Sunday, July 06, 2025

விஜிலன்ஸ் துறையின் ஓய்வுபெற்ற சார்புச் செயலர் கண்ணனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.07.2025) விடுத்துள்ள அறிக்கை: 

விஜிலன்ஸ் துறையின் ஓய்வுபெற்ற சார்புச் செயலர் கண்ணனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். 

புதுச்சேரி அரசின் விஜிலன்ஸ் துறையின் சார்புச் செயலராக இருந்தவர் கண்ணன். இவர் சென்ற மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருக்குப் பணி நீட்டிப்பு வழங்குவதற்கான பணி நடந்து வருகிறது. 

விஜிலன்ஸ் துறையின் ஓய்வுபெற்ற சார்புச் செயலர் கண்ணன் பணியில் இருந்தபோது ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களைச் சட்டத்திற்குப் புறம்பாக காப்பாற்றி உள்ளார். 

குறிப்பாக சட்டத்துறைச் சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபி என்பவர் ரயில் நிலையத்திற்கு எதிரே ரூ.5 கோடி மதிப்பிலான இடத்தில் சொகுசு தங்கும் விடுதி, பல வீட்டு மனைகள் ஆகிய சொத்துக் கணக்குகளைக் காட்டாமல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளார் என பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையர் (Central Vigilance Commissioner) உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்பினோம். இப்புகார்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க தலைமைக் கண்காணிப்பு அதிகாரியான (Chief Vigilance Commissioner) தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புக் காவல்துறை (Vigilance and Anti-Corruption Police Unit) ஆய்வாளர் என்னிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றார். மூன்று முறை சம்மன் அனுப்பியும் மேற்சொன்ன ஜான்சி (எ) ஜனாஸ் ராபி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதோடு காவல்துறை அதிகாரிகளையே மிரட்டினார். 

இந்நிலையில், சார்புச் செயலர் கண்ணன் இக்கோப்பைக் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் இருந்து திரும்பப் பெற்று, சட்டத்துறைச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அக்கோப்பை முடித்து வைத்துள்ளார். பிரதமர் அலுவலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட புகாரை முடித்து வைக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக இருந்தவர் சார்புச் செயலர் கண்ணன். இது குற்றமிழைத்த சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபியை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் செயலாகும். 

எனவே, பணியிலிருந்த போது சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட விஜிலன்ஸ் துறையின் சார்புச் செயலர் கண்ணுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். 

மேலும், அரசு காலம் தாழ்த்தாமல் விஜிலன்ஸ் துறையின் சார்புச் செயலர் பதவிக்கு திறமையான, நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும். 

இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையர் உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.

Saturday, July 05, 2025

'மக்கள் உரிமைப் போராளி' கோ.நேரு (எ) குப்புசாமி..


புதுச்சேரி உருளையன்பேட்டை சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு (எ) குப்புசாமி அவர்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத் தகுதிக்கான போராட்டத்தில் நெருங்கிப் பழகி வருகிறேன். அரசியல் சூழ்ச்சி, கரவு இல்லாத மிகவும் வெளிப்படையான மனிதர். அவரை குறை கூற வேண்டும், விமர்சிக்க வேண்டுமென்று சில அரைவேக்காடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அவை மக்களிடையே எடுபடவில்லை. 

சென்ற 27.06.2025 அன்று, தில்லி ஜந்தர் மந்தரில் மாநிலத் தகுதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். ஏறக்குறை 250 பேரை ஒன்று திரட்டி, தில்லிக்கு அழைத்துச் சென்று, எவ்வித விமர்சனமும் இல்லாமல் இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பெருமை அவரை மட்டுமே சாரும். 

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் ரயில் கட்டணம், சிறப்பான தங்குமிடம், உணவு என அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்தவர். பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் வந்த தோழர்களையும் தாயுள்ளத்தோடு கவனித்த கொண்டது என்றும் மறக்கவியலாது. 

தில்லி மாநிலத் தகுதிப் போராட்டம் மக்களிடையே பெருமளவில் சென்றடைந்துள்ளது. ஊடகங்கள் மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் போராட்ட செய்திகள் நிரம்பி வழிந்தன. தில்லியிலிருந்து திரும்பியவுடன் இன்றைக்கும் பலரும் பார்க்கும் இடமெல்லாம் கைக் குலுக்கிப் பாராட்டி வருகின்றனர். 

புதுச்சேரி பிரெஞ்சுக் காலத்தில் மாநிலமாக இருந்தது. 1.11.1954-இல் பிரெஞ்சு அரசிடமிருந்து விடுதலைப் பெற்றது (De Facto Merger).16.08.1962-இல் இந்திய ஒன்றிய அரசோடு இணைந்தது (De Jure Transfer Day). அப்போது ஏற்படுத்தப்பட்ட பிரெஞ்சிந்திய ஒப்பந்தம் செயல்பாட்டிலேயே இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. பிரதமர் நேரு அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. பின்னர் யூனியன் பிரதேச சட்டம் 1963 மூலம் யூனியன் பிரதேசமாக சுருக்கப்பட்டது. இன்றைக்குப் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் ஏதுமின்றி, துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர் மூலம் மத்திய அரசின் நேரடி ஆட்சி நடக்கிறது. 

இதை எதிர்த்துப் போராடும் அரசியல் வலிமையின்றி முதலைமைச்சர் ந.ரங்கசாமி உள்ளார். சட்டமன்றத்தில் மாநிலத் தகுதி வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 16ஆவது தீர்மானம் இன்னமும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மாநிலத் தகுதிக்காக 1 இலட்சம் கையெழுத்து வாங்கப்பட்டது. இதில் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தவிர்த்து பாஜகவினரும், காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் நாஜீம் தவிர்த்து திமுகவினரும் கையெழுத்திடவில்லை. பாஜகவும், திமுகவும் ஓரணியில் இருப்பது ஆச்சரியமில்லை. 

கோ.நேரு அவர்கள் என் பால் மிகுந்த அன்பும், அக்கறையும் உடையவர். தில்லி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் வெள்ளைச் சட்டை அணியும்படி எடுக்கப்பட்ட முடிவு பற்றி அறியாமல் நான் வண்ணச் சட்டை அணிந்திருந்ததைப் பார்த்துவிட்டு,  வெள்ளைச் சட்டை ஒன்றை அளித்து அணியச் செய்தது நெகிழ்வான தருணம். 

சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு (எ) குப்புசாமி மாநிலத் தகுதிக்காக மட்டுமல்ல, மக்கள் பிரச்சனைகளுக்காகவும் சமரசமின்றி போராடி வருபவர். அவரின் அர்ப்பணிப்பான மக்கள் தொண்டிற்கு எந்தக் கொம்பனாலும், கொம்பியாலும் கலங்கம் கற்பித்துவிட முடியாது. 

Friday, June 06, 2025

உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் காலமானார்: முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடத்த வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.06.2025) விடுத்துள்ள அறிக்கை:

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் காலமானார். அவரது இறுதி நிகழ்வு முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென தமிழக அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம். 

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் இன்று அதிகாலை செஞ்சியில் உள்ள அவரது மகள் வீட்டில் காலமானார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், நத்தமேடு என்ற ஊரில் பெரும் நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரோடு நெருக்கமாக இருந்தவர். பெரியாரின் கொள்கை வழிநின்று சமூக நீதிக்குப் பங்களித்தவர். கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகிய தமிழக முதலமைச்சர்களோடு நெருக்கமாக இருந்தவர். 

உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து பல முக்கிய தீர்ப்புக்களை வழங்கியவர். குறிப்பாக மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றங்களின் செயல்பாடு, அதிகாரம் குறித்து அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 

தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக தொடர்ச்சியாக மூன்று முறை இருந்தவர். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க இவர் அரசுக்கு அளித்த அறிக்கை முக்கியமானது. இவரது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஆழமான அறிக்கை மூலம் முஸ்லிம், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான அறிக்கையை தயாரித்தவர். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்து அப்போதைய முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோருக்குச் சமூக நீதி சார்ந்த பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர். 

உயர்நீதிமன்ற நீதிபதிகளால் கற்றுத் தேர்ந்த, நேர்மையான, எளிமையான நீதிபதி என்ற பாராட்டைப் பெற்றவர். நான் அவரோடு பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. மனித உரிமைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியவர். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. 

எனவே, சாதனைகள் பல புரிந்து, புகழோடு வாழ்ந்து மறைந்த நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் இறுதி நிகழ்வை முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

Thursday, May 29, 2025

தனியார் ஓட்டல் பெண் ஊழியர்கள் மீது தாக்குதல், மன உளைச்சலில் பெண் ஊழியரின் கணவர் மரணம்: போலீசார் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.05.2025) விடுத்துள்ள அறிக்கை:

தனியார் சொகுசு ஓட்டலில் நகை திருடு போன புகாரில் தவளக்குப்பம் காவல்நிலையத்தில் பெண் ஊழியர்கள் 4 பேர் மீது தாக்குதல், மன உளைச்சலில் பெண் ஊழியரின் கணவர் மரணமடைந்த சம்பவத்திற்குக் காரணமான பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் நகை திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 11.05.2025 அன்று தவளக்குப்பம் காவல்நிலையப் போலீசார் அங்கு பணிபுரியும் பூர்ணாங்குப்பத்தைச் சேர்ந்த கலையரசி உட்பட 4 பெண் ஊழியர்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 4 பேரையும் கடுமையாக தாக்கி அவமானப்படுத்தி உள்ளனர். மனைவி தாக்கப்பட்டது பற்றி அறிந்த கலையரசியின் கணவர் அர்ஜூனன் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துபோனார்.

இச்சம்பவத்திற்குத் தவளக்குப்பம் பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார்தான் காரணம். அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியதால் தற்போது காவல் உதவி ஆய்வாளர் சண்முக சத்யா, காவலர்கள் சுரேஷ், வசந்த ராஜா, பெண் காவலர் பிருந்தா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் பெண்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கக் கூடாது, அவர்கள் வசிக்கும் இடத்திற்கோ அல்லது அவர்கள் தேர்வு செய்யும் இடத்திற்கோ சென்று விசாரிக்க வேண்டுமென்று பி.என்.என்.எஸ். சட்டப் பிரிவு 179(1) கூறுகிறது. ஆனால், தவளக்குப்பம் போலீசார் காவல்நிலையத்தில் 4 பெண் ஊழியர்களையும் நள்ளிரவு 1 மணிவரை விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தியது சட்ட விரோதமானது.

காவல்துறை தற்போது பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசாரை பணியிட மாற்றம் செய்துள்ளது போதுமான நடவடிக்கை அல்ல. அனைவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பெண் ஊழியர்களை சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது, இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி பெண் ஊழியர் கலையரசியின் கணவர் அர்ஜூனன் இறந்து போனதற்கு மேற்சொன்ன பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார்தான் முழு பொறுப்பு.

எனவே, சட்டத்திற்குப் புறம்பாக பெண் ஊழியர்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்து, அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்திய தவளக்குப்பம் காவல்நிலையப் பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார் பேர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

பி.என்.என்.எஸ். சட்டப் பிரிவு 179(1)-ன்படி பெண்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கக் கூடாது என்பது குறித்து அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.

Sunday, May 25, 2025

ஏழு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனே புதுப்பிக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.05.2025) விடுத்துள்ள அறிக்கை: 

கடந்த ஏழு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனே புதுப்பித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆணையம் புதுப்பிக்கப்பட்டு வந்தது. ஆறாவதாக அமைக்கப்பட்ட புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் காலம் 2018ஆம் ஆண்டு மே மாதத்தோடு முடிவடைந்தது. அதன் பிறகு, நன்றாக செயல்பட்டு வந்த பிற்படுத்தப்படோர் ஆணையம் ஏழு ஆண்டுகளாகியும் புதுப்பிக்கப்படவில்லை.

கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசாங்கங்கள்  அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்வதில் தாமதம் செய்து வந்ததால் புதுப்பிக்கப்படவில்லை. ஏழு ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால், பல பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அதிகாரிகள் கோப்புகளைக் காலத்தோடு அனுப்பியும், தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், முதலமைச்சர் அலுவலகத்தில் நான்கு ஆண்டுகளாக இக்கோப்பு தூங்கிக் கொண்டிருக்கின்றது. 

மேலும், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு காலத்தோடு சம்பளம் வழங்காததால் சிரமப்பட்டு வருகின்றனர். 

அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், சாதிச் சங்கங்கள்  பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் புதுப்பிக்கப்பட்டால்தான், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியும்.

பிற்படுத்தப்பட்ட பிரிவில் சாதிகளைச் சேர்த்தல், பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள விடுபட்ட சாதிகளை மத்திய அரசுப் பட்டியலில் சேர்த்தல், பிற்படுத்தப்பட்ட பழங்குடியின பிரிவிற்கு வெட்டறு தேதி (Cut off date) நிர்ணயம் செய்தல், சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுத்து மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC), மிக மிக பிற்படுத்தப்பட்ட மீனவர் (EBC), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM), பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் (BT) சமூகங்களுக்கு இடஒதுக்கீடு அளவினை மாற்றியமைத்தல் போன்ற முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

எனவே, புதுச்சேரி அரசு உடனே தலைவர், அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைப் புதுப்பித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், துறை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்ப உள்ளோம்.

Thursday, May 01, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வரவேற்பு!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.05.2025) விடுத்துள்ள அறிக்கை: 

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வரவேற்கிறோம். 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை அரசியல் கட்சிகளாலும், சமூக அமைப்புகளாலும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டது.

மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சமூக ரீதியான இடஒதுக்கீடு மொத்தம் 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என கூறியுள்ளது. 

சாதிவாரி கணகெடுப்பு நடத்தினால் மேற்சொன்ன உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சமூக ரீதியான இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என்பதை மாற்றி கூடுதல் சதவீத இஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும். 

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள் முன் வைத்த விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படை காரணியாக அமையும். 

மத்திய அரசின் இந்த முடிவு சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான முன்னெடுப்பு ஆகும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றத்திற்கு பெருமளவில் உதவும். 

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறிய சமூக ரீதியான இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என்பதை மாற்றி கூடுதலாக இடஒதுக்கீடு வழங்கவும், தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் மனதார வரவேற்கிறோம். அரசியல் கட்சிகள் வலியுறுத்தியபடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காலக்கெடு (Time line) விதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

Tuesday, April 15, 2025

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடிவிட்டு உலகத் தமிழ் மாநாடு நடத்துவது ஏமாற்று வேலை!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.04.2025) விடுத்துள்ள அறிக்கை: 

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடிவிட்டு உலகத் தமிழ் மாநாடு நடத்துவது ஏமாற்று வேலை என்பதால் புதுச்சேரி அரசின் போக்கை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் கண்டிக்கிறோம். 

1986ஆம் ஆண்டு முதல் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. கலை, பண்பாட்டுத் துறை இந்நிறுவனத்திற்கு இயக்குநர், பேராசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பாமலும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமலும் அந்நிறுவனத்தை மூடும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனத்தில் புதுச்சேரி மாணவர்கள் பலர் தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்து எம்.பில்., பி.எச்.டி., பட்டம் பெற்று உயர் பதவிகளில் உள்ளனர். 

மேலும், லாஸ்பேட்டையில் இந்நிறுவனம் இயங்கி வந்த கட்டிடத்தை வேறு துறைக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளனர். இதனைக் கலை, பண்பாட்டுத் துறைச் செயலர் நெடுஞ்செழியன் ஐ.ஏ.எஸ்., தன்னிசையாக முடிவெடுத்து செய்து வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்னர் கலை, பண்பாட்டுத் துறை சீர்கெட்டுள்ளது. 

தமிழ் அமைப்பினர் முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதைக் கைவிட்டு, அதனைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென கோரியுள்ளனர். ஒருபுறம் உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, மறுபுறம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வித்திட்ட இந்நிறுவனத்தை மூடுவது கடும் கண்டனத்திற்குரியது. புதுச்சேரி அரசின் இந்த ஏமாற்று வேலையை தமிழாய்ந்த தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள். 

எனவே, புதுச்சேரி அரசு மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இயக்குநர், பேராசிரியர்களை உடனே நியமித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Sunday, March 23, 2025

1ஆம் வகுப்பு மாணவி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.03.2025) விடுத்துள்ள அறிக்கை:

தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 1ஆம் வகுப்பு மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த பிப்ரவரி 15 அன்று உடல்நலக் குறைவால் மருத்துவரிடம் சென்ற தனியார் பள்ளி 1ஆம் வகுப்பு மாணவி ஆசிரியரால் தொடர்ந்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய மறுத்த தவளக்குப்பம் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள், ஊர்மக்கள் 7 மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்திய பின்னர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். குற்றமிழைத்த ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 கடந்த 13.03.2025 அன்று முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், இதுவரையில் நிவாரணம் வழங்கப்படவில்லை.

மாணவிக்குத் தொடர் பாலியல் வன்கொடுமை நடந்ததைத் தடுக்கத் தவறியதோடு, உடந்தையாக இருந்த பள்ளி தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் இன்னமும் வழக்கில் சேர்த்து கைது செய்யப்படவில்லை. பள்ளி தாளாளர் ஆளும் கட்சிப் பிரமுகர் என்பதால் அரசும், காவல்துறையும் குற்றமிழைத்த இருவரையும் காப்பாற்றி வருகிறது.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஆனால், இதுவரையில் எந்த சட்டமன்ற உறுப்பினரும் இப்பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிக் கிடைக்கக் குரல் கொடுக்கவில்லை.

 கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளை முறையாக கண்காணிக்க தவறியதால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு அரசுதான் முழுப் பொறுப்பு (Vicariously liable) ஆகும்.

எனவே, அரசு இனியும் காலங்கடத்தாமல் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணம் உடனே வழங்க வேண்டும். இல்லையேல், கட்சி, அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம்.


Sunday, March 16, 2025

சட்டமன்றத்தில் அறிவித்தபடி மாநிலத் தகுதி கோரி டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தாதது ஏன்? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.03.2025) விடுத்துள்ள அறிக்கை:

சட்டமன்றத்தில் அறிவித்தபடி புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கக் கோரி டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தாதது ஏன்? என்பது பற்றி முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 14.08.2024 அன்று புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்கள் 'சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர் என அனைவரையும் டில்லி அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநிலத் தகுதி வழங்க வலியுறுத்துவோம்' என அறிவித்தார். ஆனால், இதுவரையில் சட்டமன்றத்தில் அறிவித்தபடி செய்யவில்லை.

ஆனால், தற்போது முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்கள் 'துணைநிலை ஆளுநர் வரும் 15ஆம் நாளன்று குஜராத் செல்கிறார். அப்போது பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மாநிலத் தகுதி, நிதிக்குழுவில் சேர்ப்பது குறித்துப் பேசுவார். மாநிலத் தகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று சட்டமன்றத்தில் பேசியுள்ளார். இது கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போன்றதாகும்.

சட்டமன்றத்தில் மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இதுவரையில் 15 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசு புதுச்சேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சார்பில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க வலியுறுத்த முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, March 13, 2025

1ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை: பள்ளி தாளாளர், முதல்வரை போக்சோ வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்!

 


முதலமைச்சரிடம் பொதுநல அமைப்புகள் மனு!!

புதுச்சேரி பொதுநல அமைப்புகள் சார்பில் நேற்று (13.03.2025) மாலையில் முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஜெ.சம்சுதீன், புரட்சியாளர்  அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், புதுவை எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், சுற்றுச்சூழல் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத் தலைவர் இரா.சுகுமாரன், மக்கள் மன்றத் தலைவர் மு.நாராயணசாமி, பி போல்ட் தலைவர் பஷீர் அகமது ஆகியோர் மனு அளித்தனர். 

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவி (வயது 7) ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைச் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவ்வழக்கில் அப்பள்ளியின் ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ சட்டப் பிரிவு 6-ன்கீழ் வழக்குப் பதிந்து,  கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்ற போதுதான் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தெரிய வந்துள்ளது. மேலும், நான்கு மாதங்களாக பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கூறியுள்ளனர்.

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பள்ளி தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் ஆகியோர் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளனர். இதன்மூலம், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது போக்சோ சட்டப்படி குற்றமாகும். தமிழகத்தில் இதுபோன்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் மீது போக்சோ வழக்குப் பதிந்து, கைது செய்யப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன. 

எனவே, பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் அப்பள்ளியின் தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் ஆகியோரை மேற்சொன்ன போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்த்து கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், மேற்சொன்ன வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்குப் பிணை கிடைக்காமல் நடவடிக்கை எடுத்து, அவரை சிறையில் வைத்தே புலன்விசாரணை முடித்து, குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, வழக்கை நடத்தி தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமியான மாணவிக்கு உரிய உயர் சிகிச்சை அளிக்கவும், உளவியல் கவுன்சிலிங் வழங்கவும், ரூபாய் 25 இலட்சம் நிவாரணம் வழங்கவும் வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இம்மனு உள்துறை அமைச்சர், தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர், டிஜிபி, டி.ஐ.ஜி., சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி., தெற்குப் பகுதி எஸ்.பி. உள்ளிட்டோருக்கும் அளிக்கப்பட்டது.

Saturday, February 15, 2025

1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர் பாலியல் துன்புறுத்தல்: கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.02.2025) விடுத்துள்ள அறிக்கை:

1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் மாணவ, மாணவியருக்குப் பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணமான பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

தனியார் பள்ளி 1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அச்சிறுமியின் குடும்பத்தினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் 7 மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்திய பின்னர்தான் ஆசிரியர் மணிகண்டன் மீது தவளக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர், பள்ளிக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்படும், புகார் கூறிய மாணவியின் தந்தை உள்ளிட்ட உறவினர்களைத் தாக்கிய போலீசார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், குற்றமிழைத்த ஆசிரியருக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தரப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. அ.குலோத்துங்கன் உறுதியளித்த பின்னர் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆசிரியர் மணிகண்டன் மாணவிக்கு 4 மாதங்களாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர். பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் மீதும் போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து குற்றமிழைத்த ஆசிரியருக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும்.

மூலக்குளம் தனியார் பள்ளியில் மாணவர் சக மாணவரைக் கத்தியால் குத்தினார், அம்மாணவரிடமிருந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி +2 மாணவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு, மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். புதுக்குப்பம் தொடக்கப் பள்ளியில் பழைய நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து 5ம் வகுப்பு மாணவி ஒருவர், 4ம் வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பல சம்பவங்களை மூடி மறைத்துள்ளனர். இதனால் குற்றமிழைத்த ஆசிரியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைக் கண்காணிப்பதே இல்லை. இதனால் மாணவ, மாணவியர் பாதிக்கும் நிலைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மாணவ, மாணவியருக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர் இதில் தலையிட்டுப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் (Director), இணை இயக்குநர் (Joint Director), முதன்மைக் கல்வி அதிகாரி (Chief Educational Officer) ஆகியோரை உடனே இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இல்லையேல், பொதுநல அமைப்புகள் சார்பில் கல்வித்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என புதுச்சேரி அரசை எச்சரிக்கிறோம்.

Thursday, January 23, 2025

தனியார் பள்ளியில் +1 மாணவருக்குக் கத்திக்குத்து, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.01.2025) விடுத்துள்ள அறிக்கை: 

புதுச்சேரி தனியார் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக +1 மாணவருக்குக் கத்திக்குத்து, ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதற்குப் பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம் என்பதால் 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பேஸ்புக் செய்தி தொடர்பாக மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் நேற்றைய தினம் +1 மாணவரை சக மாணவர் கத்தியால் குத்தியுள்ளார். மேலும், அம்மாணவரிடம் இருந்துப் போலீசார் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளைப்  பறிமுதல் செய்துள்ளனர்.  

மாணவர்களிடையே வன்முறைக் கலாச்சாரம் பரவுவதற்குப் பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் தவறியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக சலுகைகள் அளித்து அதன்மூலம் லாபமடைந்து வருகின்றனர். 

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகள் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பித்து அவர்களைச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க வேண்டும். அதைவிடுத்து மாணவர்களைக் குற்றம் செய்பவர்களாக ஆக்குவது இளம் தலைமுறையைப் பாதிக்கும்.  

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கும் வகுப்புகள் (Moral classes) தற்போது நடத்தப்படுவதில்லை. பள்ளி மாணவர்கள் மத்தியில் விளையாட்டு, கலை, இலக்கிய ஆர்வம் வளர்தெடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த கவுன்சிலிங் அளிக்க வேண்டும். பள்ளி மாணவர்களை வெறும் பாடத்தை மட்டுமே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக உருவாக்கக் கூடாது. 

பள்ளிக் கல்வித்துறை ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது. மாணவர்களின் நலனே முதன்மையானது என செயல்பட வேண்டும்.

இச்சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் காலம்தாழ்த்தி வருகின்றனர். எனவே, காவல்துறை உயரதிகாரிகள் தலையிட்டு உடனே வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மாணவர் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயார் செய்ததாகவும், அரியாங்குப்பத்தில் பட்டாசு வாங்கி அதிலிருந்து வெடிமருந்துகளைப் பிரித்து வெடிகுண்டு தயாரித்ததாகவும் தெரிகிறது. மாணவனுக்குப் பட்டாசு விற்றவர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிய வேண்டும். பட்டாசு விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.