புதுவை கோ.சுகுமாரன்
சாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்
Monday, October 21, 2024
தலித் பெண்ணை சாதியை கூறி ஆபாசமாக பேசிய புகாரில் வழக்குப் பதிவு செய்ய பி.சி.ஆர். பிரிவு போலீஸ் அதிகாரிகள் மறுப்பு: டி.ஜி.பி. தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
Wednesday, October 09, 2024
சிபிஎஸ்இ 127 அரசுப் பள்ளிகளில் 126 பள்ளிகளுக்கு இணைப்பு அங்கீகாரம்: 1 பள்ளியின் நிலை குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.10.2024) விடுத்துள்ள அறிக்கை:
சிபிஎஸ்இ 127 அரசுப் பள்ளிகளில் 126 பள்ளிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் 1 பள்ளியின் நிலை குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 10.09.2024 நாளிட்டு முதலமைச்சர் ரங்கசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், புதுச்சேரியில் உள்ள 127 அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ முறைக்கு மாற்றி இணைப்பு (Affiliation) வழங்க வேண்டுமென முதலமைச்சர் கடந்த 29.12.2022 அன்று கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து சிபிஎஸ்இ உடன் கலந்தாலோசித்து பரிசீலித்ததில் 127 அரசுப் பள்ளிகளுக்கு இணைப்புக் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 127 பள்ளிகளில் 126 பள்ளிகள் பரிசீலிக்கப்பட்டு சிபிஎஸ்இ முறைக்கு மாற்றி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 பள்ளிக்கு முழுமையற்ற விண்ணப்பம் சமர்பித்ததால் சிபிஎஸ்இ இணைப்பு வழங்க முடியவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சிபிஎஸ்இ-க்கு 10, 12ஆம் வகுப்புகளுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு பெற உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தோம். ஆனால், இதுவரையில் மேற்சொன்ன தேர்வுக் கட்டணம் செலுத்தியது குறித்து பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில், சிபிஎஸ்இ இணைப்புப் பெறாத அந்த 1 பள்ளி எது? அப்பள்ளியின் நிலை என்ன? இந்தாண்டு அப்பள்ளியில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியுமா? சிபிஎஸ்இ இணைப்புப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.
கல்வித்துறையில் சிபிஎஸ்இ விவகாரங்களைக் கவனிக்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் போதிய நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தால் இதுபோன்ற அவல நிலை ஏற்படுகிறது. இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசோ செயலற்று இருக்கிறது. இதனால், பாதிக்கப்பட போவது மாணவர்கள்தான் என்பதைப் புதுச்சேரி அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.
Sunday, September 29, 2024
சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து கல்வித்துறை உண்மைக்கு மாறான அறிக்கை: முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.09.2024) வெளியிட்ட அறிக்கை:
சிபிஎஸ்இ 10, 12ஆவது வகுப்புத் தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டுள்ளதால், இதுகுறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
சிபிஎஸ்இ 10, 12ஆவது தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென கடந்த 26.09.2024 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தோம். இது செய்தியாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறியதோடு, செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் சிபிஎஸ்இ 04.10.2024 அன்றைக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று 04.09.2024 நாளிட்ட சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நிதித்துறையின் பட்ஜெட் அதிகாரியால் பட்ஜெட் மதிப்பீடு 26.09.2024 அன்று வழங்கப்பட்டுள்ளது. செலவீனங்கள் ஒப்புதல் பெற பரிசீலனையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
அதாவது 04.09.2024 நாளிட்ட சிபிஎஸ்இ அனுப்பிய சுற்றறிக்கைக் கிடைத்தவுடன் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலதாமதமாக கடைசி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், நிதி ஒதுக்கீடு இன்னமும் செய்யவில்லை பரிசீலனையில்தான் உள்ளது எனவும் கூறியுள்ளார். நிதி ஒதுக்கீடு குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இன்னமும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு கோப்புக்கு ஒப்புதல் பெற்று தேர்வுக் கட்டணம் செலுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
மேலும், அந்த அறிக்கையில் செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் அவலங்களையும் செயலற்ற போக்கையும் செய்தியாக வெளியிட்டால், அதைச் சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகியின் செயலாகும். அதைவிடுத்து உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்காத பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் பத்திரிகைகளை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. மேலும், இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.
எனவே, இது குறித்து முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.Thursday, September 26, 2024
சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை: உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.09.2024) விடுத்துள்ள அறிக்கை:
கல்வித்துறை அலட்சியத்தால் சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் 10ஆவது மற்றும் 12ஆவது வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி அரசு 10ஆவது மற்றும் 12ஆவது மாணவர்கள் தேர்வு விண்ணப்பத் தொகையாக கடந்த பல ஆண்டுகளாக சுமார் ரூ.235 அளவில் தமிழக அரசுக்குச் செலுத்தி வந்தது. தற்போது சி.பி.எஸ்.இ-ல் 5 பாடங்களுக்குத் தேர்வுக் கட்டணம் ரூ,1500, ஒவ்வொரு கூடுதல் பாடத்திற்கும் ரூ.300 கூடுதல் கட்டணம், செய்முறைத் தேர்வுக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150, அக்டோபர் 5ஆம் தேதிக்குப்பின் ஒவ்வொரு மாணவருக்கும் தாமதக் கட்டணம் ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், பட்டியலின வகுப்பினருக்குச் சலுகைக் கட்டணம் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ரூ.1200 என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது புதுச்சேரி அரசு, ஆண்டு வருமானம் ரூ.1,50,000-க்கும் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்தும் என்று தெரிகிறது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ இணைப்பு முழுவதற்கும் பொறுப்பில் உள்ள கல்வித்துறை இணை இயக்குநர் சி.பி.எஸ்.இ-ல் வரும் 2025-இல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழக்கமாக அரசு செலுத்தும் தேர்வுக் கட்டணம் குறித்து எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை. தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி நாள் 04.10.2024 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போதுதான் தப்பும் தவறுமான கோப்புகளுடன் அலைந்து கொண்டிருக்கிறார். இரண்டு கோடி ரூபாய்களுக்கு மேல் சம்பந்தப்பட்ட கோப்பு அரசு செயலர், தலைமைச் செயலர் போன்றவர்கள்தான் முன் வைக்க முடியும். இதை அறியாமல் தனக்கு அதிகாரம் இல்லை என்றுகூட தெரியாமல் கோப்பில் கையெழுத்திட்டு ஒப்புதல் பெற மேலும் காலதாமதத்திற்கு வழி வகுத்துள்ளார்.
சி.பி.எஸ்.இ பிரிவுக்கு போதிய அனுபவமுள்ள பள்ளி முதல்வர்கள் இருந்தும், எந்த அனுபவமும் இல்லாத இரண்டு மூன்று ஆசிரியர்களைத் துறையிலேயே தன் கீழ் வைத்துக் கொண்டு இணை இயக்குநர் செயல்பட்டு வருகிறார். இதனால் இன்று 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விஷயத்தில் பெரும் கவனக் குறைவுடன் நடந்து கொண்டதுடன், புதுச்சேரி அரசையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளார்.
எனவே, துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறை செயலர் ஆகியோர் இதில் தலையிட்டு தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 04.10.2024 என்பதால், போதிய நிதி ஒதுக்கீடு செய்து தேர்வுக் கட்டணம் செலுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் தேர்வு எழுத ஆவன செய்ய வேண்டும்.
இதுகுறித்து புதுச்சேரி அரசு தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். மாணவர்களின் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் அலட்சியமாக இருந்த கல்வித்துறை இணை இயக்குநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Friday, September 20, 2024
காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி தூக்குப் போட்டுத் தற்கொலை: நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.09.2024) விடுத்துள்ள அறிக்கை:
காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி விவேகானந்தன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை சிறைவாசியான விவேகானந்தன் (வயது 56) காலாப்பட்டு மத்திய சிறையில் கடந்த 16.09.2024 அன்று கழிவறையில் துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்றக் காவலில் சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதற்கு அரசும், சிறைத்துறையும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். சிறையில் பணியில் அலட்சியமாக இருந்த சிறைத்துறையினர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 08.06.2024 அன்று காரைக்கால் கிளைச் சிறையில் ஆயுள் தண்டனைச் சிறைவாசி பிரதீஷ் கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் அரசும், சிறைத்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதுச்சேரி சிறைகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என்பதோடு, இவை அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். சிறைச்சாலைகள் சிறைவாசிகளைத் திருத்தும் மையங்களாக (Correctional Centers) இருக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது.
மேலும், சிறைவாசி விவேகானந்தன் தற்கொலை சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
சிறைவாசி விவேகாந்தன் உயிரிழப்பிற்கு அரசும், சிறைத்துறையும் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பி உள்ளோம்.
Saturday, September 07, 2024
தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் 157ஆவது பிறந்த நாள்: தமிழ் அமைப்பினர் நினைவிடத்தில் மலரஞ்சலி!
Thursday, August 29, 2024
முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.08.2024) விடுத்துள்ள அறிக்கை:
மின்துறை முன்தேதியிட்டு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
கடந்த ஜூன் 12 அன்று மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் வீடு, வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால், மின்கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரி அரசு மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியது. இதனால், உயர்த்தப்பட்ட மின் கட்டணம் செயல்பாட்டிற்கு வரவில்லை.
மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் தற்போது மின்துறை ஜூன் 12 அன்று உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை முன்தேதியிட்டு அறிவித்துள்ளது. இது பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
25 ஆயிரம் கோடி சொத்துள்ள அரசு துறையான மின்துறையை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு பொதுமக்கள், மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும், வணிகர்களும் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் இந்த மின்கட்டண உயர்வு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். அரசு உரிய முயற்சி செய்து மின் கட்டண உயர்வைத் தடுக்கத் தவறியது கண்டனத்திற்குரியது.
எனவே, முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
Monday, August 19, 2024
பாப்பாநாடு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்திரவிட வேண்டும்!
மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்!!
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு கிராமத்தில் கடந்த 12.08.2024 அன்று மதியம் 3.00 மணி அளவில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவரை 4 பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். 2 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
12.08.2024 அன்று வங்கிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய 23 வயதுடைய இளம் பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, மக்கள் வசிக்கக் கூடிய குடியிருப்புப் பகுதியில் உள்ள கொட்டகைக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு அப்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கத்திய அப்பெண்ணை பீர் பாட்டலால் தலை, கழுத்தில் தாக்கியுள்ளனர். அடித்து உதைத்துள்ளனர். பாலியல் வன்புணர்வில் 4 பேர் அடுத்தடுத்து ஈடுபட்டுள்ளனர். இதற்கு உடந்தையாக 2 பேர் காவல் இருந்துள்ளனர்.
அன்றைய தினம் சுமார் மாலை 4.20 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் பாப்பாநாடு காவல்நிலையம் சென்று, அங்குப் பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா என்பவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். ஆனால், காவல் உதவி ஆய்வாளர் புகாரை எழுதி முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வதற்குப் பதிலாக, வழக்கறிஞர் மூலம் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று புகார் அளியுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் எனக்கு உடல்நிலை சரியில்லை, புகார் எழுத முடியவில்லை என்று கூறிய பின்னரும் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவில்லை. மேலும், நடந்த சம்பவம் குறித்து மேற்சொன்ன காவல் அதிகாரி ஆண் காவலர்கள் இருவர் முன்னிலையியே விசாரித்துள்ளார்.
பின்னர், பாதிக்கப்பட்ட பெண் அவரது தந்தை மற்றும் உறவினர்களோடு பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று அங்குப் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறி சிகிச்சை அளிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், சிகிச்சை அளிக்க மறுத்ததோடு காவல்நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு வருமாறு கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
அதன்பின்னர், அன்றைய தினமே இரவு சுமார் 1.00 மணியளவில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தைப் புகார் கூறியுள்ளனர். அங்குப் பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி தஞ்சாவூர் இராஜா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெறும்படி கூறியுள்ளார்.
பின்னர், பாதிக்கப்பட்ட பெண், அவரது தந்தை மற்றும் உறவினர்கள் 12.08.2024 – 13.08.2024 இரவு சுமார் 3.00 மணியளவில் தஞ்சாவூர் இராஜா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவனைக்குச் சென்று அங்குப் பணியில் இருந்த மருத்துவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறி சிகிச்சை அளிக்கக் கோரியுள்ளனர். மருத்துவர்கள் உடனே உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
இதன்பின்னர்தான், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று, 13.08.2024 காலை 7.00 மணிக்கு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளனர். (Cr.No.13/2024 u/s 127(2), 118(1), 70(1), 351(3), 308(5), 61(2) Bharatiya Nyaya Sanhita (BNS), 2023). இதன்பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒரத்தநாடு நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றுப் பதிவு செய்துள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் 1) கவி (எ) கவிதாசன், 2) திவாகர், 3) பிரவீன், 4) ஒரு சிறுவன் ஆகிய 4 பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் புகார் வாக்குமூலத்திலும், ஒரத்தநாடு நீதித்துறை நடுவரிடம் அளித்த வாக்குமூலத்திலும் கூறிய 1) வேல்முருகன், 2) ஒரு சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. இவர்கள் இருவரும் பாலியல் வன்புணர்வு சம்பவம் நடக்கும்போது யாராவது வருகிறார்களா எனப் பார்த்துக் கொண்டு காவல் இருந்தவர்கள். குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள்.
தற்போது பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை முடிந்து தனது வீட்டில் பாதுகாப்பு இல்லாததால், வேறு பாதுகாப்பான இடத்தில் தங்கி இருந்து வருகிறார். அவர் தலை, முதுகு போன்ற பகுதிகளில் குற்றவாளிகள் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும், உளவியல் ரீதியான சிகிச்சையும் தேவைப்படுகிறது.
குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண் அணிந்திருந்த 1/2 பவுன் தோடு, 1 கிராம் பவுன் வளையம், செல்போன், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பேன் அட்டை ஆகியவற்றையும் பறித்துள்ளனர். இதில் தங்க நகைகளை பட்டுக்கோட்டையில் விற்றுள்ளனர். இவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றியதாக தெரியவில்லை. மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து ஆதாரங்களைத் திரட்டியதாகவும் தெரியவில்லை.
சம்பவம் நடந்தது முதல் பாப்பாநாடு காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூர்யா சட்டப்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களைச் சட்ட நடவடிக்கையில் இருந்து காப்பாற்றும் நோக்கிலேயே செயல்பட்டுள்ளார். தற்போது அவர் ஒரத்தநாடு காவல்நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஒரத்தநாடு நீதித்துறை நடுவர் அவர்கள் பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை நிர்வாகத்திற்குக் கடமையில் இருந்து தவறியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சம்பவம் நடந்த கொட்டகைதான் கஞ்சா வியாபாரம் நடத்தும் இடமாகவும் இருந்துள்ளது. பாப்பாநாடு பகுதிகளில் காவல்துறை ஆதரவோடு கஞ்சா விற்பனைப் பல காலமாக நடந்து வருகிறது.
இன்று (19.08.2024) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டியும், குற்றமிழைத்த இருவரையும் கைது செய்யவும் வலியுறுத்தி பாப்பாநாடு பொதுமக்கள், வணிகர்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாநோன்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முன்வைக்கப்படும் கோரிக்கைகள்:
1) இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கை ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்காது என்பதால், இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி புலன்விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
2) குற்றமிழைத்த வேல்முருகன் மற்றும் ஒரு சிறுவன் இருவரையும் இவ்வழக்கில் சேர்த்து உடனே கைது செய்ய வேண்டும்.
3) பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்து வழக்குப் பதிவு செய்யாததோடு, மருத்துவமனைக்கு அனுப்பி உரிய சிகிச்சையும், மருத்துவப் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கத் தவறிய பாப்பாநாடு காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூர்யா மீதும், சிகிச்சை அளிக்க மறுத்ததோடு, மருத்துவப் பரிசோதனையை உரிய நேரத்தில் செய்யாமல் வழக்கின் முக்கிய ஆதாரங்கள் திட்டமிட்டே அழிய காரணமான பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீதும் உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) பாப்பாநாடு காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூர்யா, பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
5) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு செலவில் உயர் மருத்துவச் சிகிச்சையும், உளவியல் ரீதியான சிகிச்சையும் உடனே அளிக்க வேண்டும்.
6) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இடைக்கால இழப்பீடாக 5 இலட்சம் ரூபாயும், அவரின் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணியும் உடனே வழங்க வேண்டும்.
7) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
8) பாப்பாநாடு பகுதிகளில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கஞ்சா போன்ற போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாள்: 19.08.2024
இடம்: பாப்பாநாடு
இவண்,
கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ்நாடு – புதுச்சேரி.
சே. கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், காரைக்குடி.
அரச முருகுபாண்டியன், மக்கள் சிவில் உரிமைக் கழகம், காரைக்குடி.
அ.சிம்சன், நீதிக்கான மக்கள் இயக்கம், காரைக்குடி.
ஆ. ரேவதி, மாநிலத் தலைவர், அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் கழகம்.
பழ. ஆசைத்தம்பி, மாநிலச் செயலர் , இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (லிபரேஷன்).
படம்: சம்பவம் நடந்த கொட்டகை.
Friday, May 03, 2024
விழுப்புரம் ராஜா போலீஸ் காவலில் சித்தரவதையால் மரணம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
குற்றமிழைத்த தாலுக்கா காவல்நிலைய போலீசார் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்!
நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! மறு உடற்கூறாய்வு மருத்துவர் குழு மூலம் செய்ய வேண்டும். வீடியோவில் பதிய வேண்டும்!
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்!
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.வி.இரமேஷ், துணைத் தலைவர் கோ.ஆதமூலம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மு.காளிதாஸ், மதிமுக நகரச் செயலாளர் ம.சம்பந்தம், தமிழநாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன், மாவட்ட செயலாளர் ஜரிசியாலம் ராவுத்தர், கைவினை முன்னேற்றக் கட்சி மாவட்ட தலைவர் ச.முருகேசன், மனித உரிமை ஆர்வலர் கு.கலைப்புலி சங்கர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 29.04.2024 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு அளித்தனர். இம்மனு தமிழக முதலமைச்சர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐயா, வணக்கம்.
பொருள்: விழுப்புரம், ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த ராஜா (வயது 43) என்பவர் போலீஸ் காவலில் சித்தரவதையால் மரணம் அடைந்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – காவல் மரணம் என்பதால் நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – மருத்துவர் குழு மூலம் மறு உடற்கூறாய்வு செய்து, முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் – பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம், பாதுகாப்பு வழங்கக் கோருதல் – தொடர்பாக.
பார்வை: குற்ற எண்.232/2024, பிரிவு 174 குவிநச, விழுப்புரம் மேற்குக் காவல்நிலையம், விழுப்புரம்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகளின் சார்பில் இம்மனுவைத் தங்களின் மேலான பார்வைக்கும் உரிய நடவடிக்கைக்கும் சமர்ப்பிக்கின்றோம்.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், ஜி.ஆர்.பி. தெரு, எண்.23/7-ல் குடியிருந்த ராஜா (வயது 43) என்பவர் திருப்பாச்சாவடியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை கேண்டீனில் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்குத் துணையாக அவரது மகன் குபேந்திரன் உடன் வேலைப் பார்த்து வந்தான். அவருக்கு மனைவி அஞ்சு (வயது 36), மகன்கள் குபேந்திரன் (வயது 19), சஞ்சய் காந்தி (வயது 17), மகள் மகாலட்சுமி (வயது 16) ஆகியோர் உள்ளனர்.
கடந்த 09.04.2024 அன்று காலை வீட்டிலிருந்து டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வேலைக்குச் சென்ற ராஜா எப்போதும் போல் இரவு வீடு திரும்பவில்லை. ராஜா தன் மகனிடம் ரூபாய் 450 கொடுத்து, அம்மாவிடம் கொடுக்க சொல்லியதாக மகன் கொடுத்துள்ளார்.
மறுநாள் (10.04.2024) தன் கணவர் வீடு திரும்பவில்லை என்பது அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அஞ்சு விசாரித்த போது விழுப்புரம் தாலுக்கா காவல்நிலைய போலீசார் பிடித்துச் சென்றதாக தெரிய வந்துள்ளது. காலையில் மேற்சொன்ன அஞ்சு, அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி ஆகியோர் தாலுக்கா காவல்நிலையம் சென்று விசாரித்த போது, அங்கிருந்த போலீசார் “உன் கணவர் வீட்டுக்கு வந்துவிடுவார், காவல் நிலையத்தை விட்டு போய்விடுங்கள், இல்லையென்றால் உங்கள் மீது பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளி விடுவேன்” என்று மிரட்டியுள்ளனர். பின்னர் இருவரும் வீடு திரும்பிவிட்டனர்.
பின்னர் கடந்த 10.04.2024 மதியம் சுமார் 12.00 மணியளவில் மேற்சொன்ன ராஜாவை ஒருவர் அழைத்து வந்து, அவரது வீட்டில் விட்டுள்ளார். அப்போது அவரது மனைவி அஞ்சு பார்த்த போது மிகவும் சோர்வடைந்து காணப்பட்டதோடு, அவர் “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னை விசாரிக்க வேண்டுமென்று சொல்லி தாலுக்கா காவல்நிலைய போலீசார் பிடித்துச் சென்று கொடூரமாக தாக்கினார்கள்” என்று கூறியுள்ளார். அவரது உடம்பில் முகம், முதுகு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் வீங்கி ரத்தக் காயம் இருந்துள்ளது. இவ்வாறு கூறிய போதே ராஜா மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை விழுப்புரம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர். அவரைப் பரிசோதித்த பணியில் இருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் (Brought dead) என்று கூறியுள்ளனர்.
பின்னர், விழுப்புரம் மேற்குக் காவல்நிலைய போலீசார் சந்தேக மரணம் (Section 174 Cr.P.C.) எனப் பார்வையில் கண்ட முதல் தகவல் அறிக்கைப் பதிந்துள்ளனர். தனது கணவர் தாலுக்கா காவல்நிலைய போலீசார் அடித்ததால்தான் இறந்துபோனார் என்று மருத்துவர்களிடம் அவரது மனைவி கூறியுள்ளார். உடனே மருத்துவர்கள் தாலுக்கா காவல்நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே மருத்துவமனைக்கு சுமார் 10 போலீசார், இறந்துபோன ராஜாவின் உடலைத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது மாலை சுமார் 4.30 மணி இருக்கும். மேற்சொன்ன மருத்துவமனையில் மருத்துவர்கள் ராஜாவின் உடலை சுமார் 20 நிமிடங்களில் உடற்கூறாய்வு செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.போலீசார் குடும்பத்தினரிடம் உடலை எரித்துவிடுங்கள் என்று பலமுறை அழுத்தம் கொடுத்துள்ளனர்.
கடந்த 11.04.2024 அன்று உடலை விழுப்புரம் அண்ணா நகர் இடுகாட்டில் புதைத்துள்ளனர். அன்றைய தினம் மாலை அவரது வீட்டிற்கு வந்த போலீசார் அவரது மனைவியிடம் “ஏன் உடலைப் புதைத்தீர்கள்” என்று கேட்டுள்ளனர். போலீசார் உடலை எரிக்க வைக்க வேண்டும் என்பதில் குறியாகவே இருந்துள்ளனர். இதன்மூலம், கடந்த 09.04.2024 அன்று இரவே தாலுக்கா காவல்நிலைய போலீசார் மேற்சொன்ன ராஜாவை பிடித்துச் சென்று, காவலில் வைத்து அடித்து உதைத்துத் துன்புறுத்தியுள்ளது தெரிகிறது. ராஜாவின் உடம்பில் முகம், முதுகு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் வீங்கி ரத்தக் காயம் இருந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், போலீசார் ராஜாவை கடந்த 10.04.2024 அன்று காலைதான் பிடித்துச் சென்றதாகக் கூறுகின்றனர். மேலும், மேற்சொன்ன ராஜா மீது தாலுக்கா காவல்நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்து, அவரை காலை சுமார் 11.00 மணிக்கு எல்லாம் பிணையில் விடுவித்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
ஆனால், விழுப்புரம் மேற்குக் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பார்வையில் கண்ட முதல் தகவல் அறிக்கையில் (நகல் இணைக்கப்பட்டுள்ளது) “10.04.2024 அன்று காலை 8.30 மணிக்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், நண்பர்கள் உதவியுடன் விழுப்புரம் மகாராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்து வீடு திரும்பியதாகவும், பின்னர் அவர் நெஞ்சில் வலி இருப்பதாக கூறியதால் விழுப்புரம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாகவும் கூறினர்” என்று ராஜாவின் மனைவி அஞ்சுவிடம் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் புகார் பெற்று வழக்குப் பதிந்துள்ளனர். ஆனால், மேற்சொன்ன புகாரைப் போலீசாரே எழுதி, படித்துக்கூட காண்பிக்காமல் ராஜாவின் மனைவி அஞ்சுவிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
விழுப்புரம் தாலுக்கா காவல்நிலைய போலீசார் கடந்த 10.04.2024 காலை சுமார் 9.30 மணிக்கு பிடித்து வந்து, விசாரித்து வழக்குப் பதிவு செய்து, பிணையில் அனுப்பியதாக கூறுவதற்கு முற்றிலும் முரணாக மேற்குக் காவல்நிலையத்தில் பதியப்பட்ட பார்வையில் கண்ட முதல் தகவல் அறிக்கைத் தகவல்கள் உள்ளன. போலீசார் காவலில் நடந்த சித்திரவதையை மூடி மறைக்கவே ஆரம்பம் முதலே இவ்வாறு செயல்பட்டுள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது. எனவேதான், காவல்நிலைய மரணம் என்று வழக்குப் பதிவு செய்து (Section 176(1(A) Cr.P.C.) நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடாமல், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர் (Section 174 Cr.P.C.).
எனவே, தாங்கள் இதில் தலையிட்டு, கீழக்காணும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
1) விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய காவலில் ராஜா சித்திரவதைச் செய்ததால் நடந்த காவல் மரண வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றமிழைத்த தாலுக்கா காவல்நிலைய போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
2) ராஜா போலீஸ் காவலில் இறந்து போனதால், இச்சம்பவம் குறித்து பதியப்பட்ட பார்வையில் கண்ட முதல் தகவல் அறிக்கையின் சட்டப் பிரிவைக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176(1)(A)-இன்படி மாற்றி, நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
3) ராஜாவின் உடல் கூறாய்வில் சந்தேகம் இருப்பதால், அவரது உடலைத் தோண்டி எடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டல்படி மருத்துவர்கள் குழு (Panel of Doctors) மூலம் மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும். உடற்கூறாய்வு முழுவதையும் விடீயோவில் பதிவு செய்ய வேண்டும். 4) பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
Wednesday, March 13, 2024
சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து படுகொலை: விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.03.2024) விடுத்துள்ள அறிக்கை:
ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள், என்கவுன்டர் செய்யுங்கள், எங்களிடம் ஒப்படையுங்கள் போன்ற கருத்துகள் பேசப்படுகின்றன. ஆனால், இது நிலவுகிற சட்டப்படி செய்ய முடியாதவை.
சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் முதலமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்து முறையிட்டதால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ரூபாய் 20 இலட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. தற்போது முதல்கட்டமாக 7 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கொடூரச் சம்பவத்திற்குக் கஞ்சா முக்கிய காரணமாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைத் தடுப்பதில் அரசு படுதொல்வி அடைந்துள்ளது. பள்ளிகளில் தாராளமாகப் போதைப் பொருள் புழங்குகிறது. இதைத் தடுக்கக் கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருட்களைத் தடுக்கக் காவல்துறை, கல்வித்துறை போன்ற தொடர்புடைய துறைகள் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப் பொருட்கள் தமிழகம் வழியாக புதுச்சேரிக்கு வருவதாகத் தெரிகிறது. இதைத் தடுக்கத் தமிழக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்கவில்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வைத் தடுக்க முடியாது.
போதைப் பொருள் தடுக்க உருவாக்கப்பட்ட காவல்துறைத் தனிப் பிரிவுக்கு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்கும் முடிவு சரியானது. இப்பிரிவின் செயல்பாடுகளை நேரடியாக டி.ஜி.பி., மேற்பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்கிக் கண்காணிக்க வேண்டும்.
இக்கொடிய குற்றத்திற்குப் போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்தாதது, காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காணாமல் போன சிறுமியை நான்கு நாட்களாக கண்டுபிடிக்காதது என அரசின் அலட்சியமே முக்கிய காரணமாகும். இதற்கு அரசே முழுப் பொறுப்பேற்க (Vicariously liable) வேண்டும்.
குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தருவதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக, ஜனநாயக இயக்கங்கள் துணைநிற்பதோடு, கடமையாக கருதிச் செயல்படும்.
எனவே, புதுச்சேரி அரசு இவ்வழக்கில் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவித்தபடி நிவாரணம் முழுவதையும் உடனே வழங்க வேண்டும்.