Monday, January 12, 2026

சட்டத்துறையில் நியமன விதியை மீறி தகுதி இல்லாத அதிகாரிக்கு துணைச் செயலர் பதவி வழங்கக் கூடாது!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.01.2026) விடுத்துள்ள அறிக்கை:

சட்டத்துறையில் நியமன விதியை மீறி தகுதி இல்லாத அதிகாரிக்கு துணைச் செயலர் பதவி வழங்கக் கூடாது என புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசின் சட்டத்துறையில் சார்புச் செயலராக (Under Secretary) இருப்பவர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபி. இவர் தனக்கு துணைச் செயலர் பதவி (Deputy Secretary) வழங்க வேண்டுமென்று அவராகவே கோப்பு தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளார்.

சட்டத்துறை 1991ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள துணைச் செயலருக்கான நியமன விதிப்படி (Recruitment Rules) 7 ஆண்டுகள் நிரந்தர சார்புச் செயலராக பணியாற்றியவரைத்தான் இப்பதவிக்கு நியமிக்க முடியும். மேலும், இப்பதவியை நிரப்பும் போது மத்திய அரசுப் பணி தேர்வாணையத்தை (Union Public Service Commission) கலந்தாலோசித்து தேர்வு செய்ய வேண்டும்.

ஆனால், மேற்சொன்ன சட்டத்துறைச் சார்புச் செயலர் இரண்டு ஆண்டுகள், அதுவும் தற்காலிக பதவியில் (Adhoc post) பணியாற்றி வருகிறார். இவர் மேற்சொன்ன நியமன விதிப்படி துணைச் செயலர் பதவிக்கு முற்றிலும் தகுதி இல்லாதவர்.

மேலும், இவர் மீது அரசுக்குச் சொத்துக் கணக்குக் காட்டாமல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, சொத்து வாங்கிய பணத்திற்கான ஆதாரத்தை அளிக்காதது குறித்து துணைநிலை ஆளுநருக்கு அளித்த புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

எனவே, சட்டத்துறையில் நியமன விதியை மீறி தகுதி இல்லாத மேற்சொன்ன அதிகாரிக்கு துணைச் செயலர் பதவி வழங்கக் கூடாது என புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து முதல்வர், சட்டத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சட்டத்துறைச் செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம்.

No comments: