Tuesday, November 14, 2006

மரண தண்டனையைக் கண்டித்துப் போராட்டம்

இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முகமது அப்சல் குரு, பாக்தாத் நீதிமன்றத்தால் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்கக் கோரி புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்படும் என மனித உரிமை மக்கள் இயக்க அமைப்பாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

8-11-2006 அன்று புதுச்சேரியில் செய்தியாளர் மன்றத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

மரண தண்டனை ஜனநாயகத்திற்கு எதிரானது. காட்டுமிராண்டித்தனமானது. மரண தண்டனையை ஒழிக்க இந்தியா முழுவதும் குரல் எழும்பி வருகிறது. தொடர்ச்சியானப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட போது தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தினோம். உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சில வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2001-இல் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முகமது அப்சலுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும், இந்த தண்டனை அநீதி என்றும் மிகப் பெரிய இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதேபோல், ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் முறையாக விசாரிக்கப்படவில்லை என உலக நாடுகள் கூறியுள்ளன. இறையாண்மை உள்ள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, ஆக்கிரமித்துக் கொண்டு, பொம்மை நீதிமன்றத்தை வைத்து, சதாம் உசேனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களைக் கொலை செய்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 7-ஆம் நாளன்று அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலையொட்டி புஷ்சுக்கு ஆதரவாக அவசர அவசரமாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க வேண்டுமெனப் போராடிய போது, அதற்கு எதிராக யாரும் போராடவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன்பேரில் நளினியின் மரண தண்டனைக் குறைக்கப்பட்டது.

இன்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும், வகுப்புவாதத்தை உருவாக்கி வாக்குகள் சேகரிக்கும் கட்சியினர், அப்சல் முசுலீம் என்பதால் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். இதன்மூலம் முசுலீம் சமுதாயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுபோன்ற செயல் சமூகத்தைப் பிளவுபடுத்தும்.

நாடாளுமன்றத்தைத் தாக்கியது கடும் குற்றச்சாட்டு. அதை முறையாக விசாரிக்க வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் கூற்றுபடி சதித் திட்டம் தீட்டிய மூன்று பேர் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாக உள்ளனர். யாரையாவது பிடித்து தூக்கிலிட வேண்டும் என்பதற்காக நான்கு பேரைச் சிக்க வைத்தனர். இவர்களுக்கு கீழ்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றம் அப்சலுக்கு மட்டும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. மற்றவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது. உச்சநீதிமன்றமே இந்த வழக்கில் நேரடி சாட்சி இல்லை என்றும், இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் மத்தியில் உணர்ச்சியைத் தூண்டியுள்ளது எனக் கூறி தூக்குத் தண்டனை வழங்கலாம் என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்ற தாக்குதல் மத்திய அரசும், உளவுத் துறையும் சேர்ந்து நடத்திய நாடகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்சல் பழைய தீவிரவாதி. அதிலிருந்து விலகி போலீசிடம் சரணடைந்தவர். போலீசார் அவரைக் கையாளாகப் பயன்படுத்திக் கொண்டனர். அப்சல் போலீசின் கட்டளைப்படி, இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை காஷ்மீரில் இருந்து டில்லிக்கு அழைத்துச் சென்று, அவருக்கு வீடுபிடித்துக் கொடுத்துள்ளார். மேலும், போலீசின் வற்புறுத்தலின் பேரில் அந்த குற்றவாளிக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த கார்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அப்சலின் வழக்கைப் பார்க்க வேண்டும்.

எனவே, அப்சல் குரு, சதாம் உசேன் ஆகியோரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும். இந்திய சிறைகளில் உள்ள அனைவரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும். உலக அளவில் 128 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும் மரண தண்டனையைக் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியிலும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

பேட்டியின் போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் துணைத் தலைவர் இர.அபிமன்னன் ஆகியோர் உடன் இருந்தனர்.

1 comment:

Anonymous said...

உங்கள் பார்வைகளோடு எனக்கு உடன்பாடு உண்டு. இன்னும் விளக்கமாக சில இடங்களில் எழுதியிருக்கலாம் என்று பட்டாலும், நிதானமாகவும் பிரச்சினையை பேசுவதாகவும் உள்ளது. தொடர்ந்து எழுதிவரும் உங்கள் பணிக்கு நன்றி.

//இன்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும், வகுப்புவாதத்தை உருவாக்கி வாக்குகள் சேகரிக்கும் கட்சியினர், அப்சல் முசுலீம் என்பதால் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். இதன்மூலம் முசுலீம் சமுதாயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுபோன்ற செயல் சமூகத்தைப் பிளவுபடுத்தும்.//


இதை இவ்வளவு எளிமையாக சுருக்கமுடியாது என்று நினைக்கிறேன்.ஆனால் பொதுவாக பார்ப்ப‌னிய‌ம் இசுலாமிய‌ ச‌மூக‌த்தின் மீது உமிழும் பர‌வ‌லாக‌ அறிய‌ப்ப‌ட்ட‌தே.

--FD