Tuesday, February 20, 2007

புதுவை அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் : ஆர்ப்பாட்டம்

உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயம் போன்ற மக்கள் விரோதக் கொள்கையினால் புதுச்சேரியின் மண்ணின் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆக்கப்படுகின்றனர்.

புதுச்சேரியிலுள்ள தேங்காய்திட்டு துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினால், சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரும் கேடு ஏற்படவுள்ளது. தேங்காய்திட்டு மக்களும், கடலோர மீனவ மக்களும் ஊரைவிட்டே அப்புறப்படுத்தப்பட உள்ளனர். கடல் நீர் உப்பு நீராகும், சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் நேரும் போது புதுச்சேரி மற்றும் தமிழக மீனவ கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் ஆபத்துள்ளது. எனவே, துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

துணை நகரம் அமைக்க 700 ஏக்கர் விளைநிலத்தினைக் கையகப்படுத்தி, அரசே ரியல் எஸ்டேட் தொழில் செய்வதையும், பசுமையான விளைநிலங்கள் அழிக்கப்படுவதையும் நிறுத்த வேண்டும்.

சுண்ணாம்பாற்றுக் கரையிலுள்ள அலுத்தவேலியில் 5 நட்சத்திர விடுதி கட்டவும், பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கவும் 100 ஏக்கர் பசுமையான நிலம் அழிக்கப்பட்டு, அப்பகுதி பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தென்னந் தோப்புகளாக உள்ள விளைநிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுலா என்ற பெயரில் விடுதிகள் கட்டுவதற்கு 40% மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

வீராம்பட்டினத்தில் கடலோரக் காவல் படையின் தலைமையகம் அமைக்கப்படவுள்ளது. இதற்குக் கடற்கரைப் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. வீராம்பட்டினம் மீனவ மக்களின் வாழ்விடத்தைப் பறிக்கும் கடலோரக் காவல் படையின் தலைமையகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

வளர்ச்சி என்ற பெயரில் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமைக்கு எதிராக புதுச்சேரி அரசு செயல்படுவதைக் கண்டித்தும், மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் 19-02-2007 அன்று, பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் இரா.வீராசாமி வரவேற்றார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், வீராம்பட்டினம் கவுன்சிலர் பா.சக்திவேல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், இராசுட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, தனித் தமிழ்க் கழகத் தலைவர் சீனு. அரிமாப்பாண்டியன், தமிழினத் தொண்டியக்கத் தலைவர் குணத்தொகையன், சமூக நீதிப் போராட்டக் குழு, பாகூர் பொறுப்பாளர் அ.மஞ்சினி, பூவுலகின் நண்பர்கள் சீனு.தமிழ்மணி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், விடுதலை வீரர் சீனுவாசனார் இயக்கப் பொறுப்பாளர் புதுவை தமிழ்நெஞ்சன் ஆகியோர் கலந்துக் கொண்டு கண்டனவுரை ஆற்றினர்.

தேங்காய்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுத் தலைவர் காளியப்பன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் கலந்துக் கொண்டு, தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

சுற்றுச் சூழலைக் காக்கவும், வாழ்விடங்கள் பறிபோவதைத் தடுக்கவும் அனைவரும் முழக்கமிட்டு உறுதியை வெளிப்படுத்தினர்.

1 comment:

மாசிலா said...

இது இப்படி என்றால், மறு பக்கம் ஆசிரமம் வைத்து நடத்தும் வடநாட்டவர்கள் மிக அதிக விலை கொடுத்து மண்ணையும் வீடுகளையும் வாங்கி 'ஒயிட் சிட்டி' மற்றும் கடலோர பகுதிகளில் உள்ளூர்காரர்கள் எதையும் நெருங்க முடியாத அளவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களது தொல்லையும் தாங்க முடியாததுதான்.