Thursday, February 22, 2007

சட்டமன்ற உறுப்பினர் முற்றுகை: மக்கள் ஆவேசம்

புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்குத் தேங்காய்திட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகின்றனர். இதனிடையே தேங்காய்திட்டு உள்ளடக்கிய முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் என்னைச் சந்தித்து விளக்கம் கேட்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், 21-02-2007 அன்று, தேங்காய்திட்டு மக்கள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியனின் அலுவலகத்திற்குச் சென்று முற்றுகையிட்டனர். அப்போது அவர் விளக்கம் கொடுக்க முயன்ற போது காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. உடன் அங்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் மக்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் 19-02-2007 அன்று விடுத்த அறிக்கை:

துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் தேங்காய்திட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். அவரது மக்கள் விரோத செயல் குறித்து, திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்களுக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் தேங்காய்திட்டு மட்டுமல்ல ஒட்டுமொத்த புதுச்சேரியே பாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக கப்பல் போக்குவரத்துக்காக 90 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு கடல் மண் எடுத்து, கடலை ஆழப்படுத்த உள்ளனர். இதனால், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதோடு, புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடரின் போது கடற்கரை மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச் சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், துறைமுக கரையை செயற்கையாக அமைப்பதற்கு 10 மில்லியன் சதுர மீட்டர் அளவு கடல் மண் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அரியாங்குப்பம் ஆற்றில் துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டதால் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய திட்டத்தினால் வடக்கே மகாபலிபுரம் வரை தெற்கே சிதம்பரம் வரை கடற்கரை பாதிக்கப்பட உள்ளது. மீனவர்கள் கடல் பகுதியை விட்டு வெளியேறி சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ வேண்டிய ஆபத்துள்ளது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் இத்திட்டத்தை எதிர்ப்பில்லாமல் செயல்படுத்த ஆட்சியாளர்களுக்கும், கட்சியினருக்கும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் பாதிப்பு இல்லை எனக் கூறியுள்ளது பல்வேறு சந்தேங்களுக்கு வழிவகுக்கிறது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அரசுக்குத் தாக்கல் செய்துள்ள சுற்றுச் சூழல் அறிக்கையில் முற்றிலுமாகப் பாதிப்பு இல்லை எனக் கூறவில்லை. துறைமுகம் கட்டும்போதும், கப்பல் போக்குவரத்தின் போதும் இரைச்சலும், அதிர்வுகளும் இருக்கும். 14 மீட்டர் அளவுக்கு கடல் தூர்வாரப்படுவதால் உப்புநீர் புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கும், கடலில் எண்ணை கசிவும், கட்டுமானப் பணியின் போது கடலில் கனமான உலோக பொருட்களும், நீரகமும், காரியகமும் கலக்கும் என தெரிவித்துள்ளது.

உண்மைநிலை இப்படியிருக்க சட்டமன்ற உறுப்பினர்
எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ஆதரிப்பது ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த தேங்காய்திட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும். மேலும், போராடும் மக்களை சந்தித்து விளக்கம் அளிக்காமல் சந்தேகமிருந்தால் தன்னை சந்தித்துக் கேட்கலாம் எனக் கூறுவது மக்களை அலட்சியப் படுத்துவதாகும்.

புதுச்சேரியின் அனைத்துதரப்பு மக்களையும் பாதிக்கும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும். இதனை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு துணை நிற்கும்.

No comments: