Saturday, November 17, 2007

ஒரு கைதியின் கடிதம் - (2)

ஒரு கைதியின் கடிதம் - முதல் பகுதி

2

ஒரு ஆயுள் தண்டனை சிறைவாசிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சட்டம் வகுத்த பரோல் விடுப்பு தான். அதையும் கண்காணிப்பாளர் திரு. ஜெயகாந்தன் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட விசயங்களுக்காக அதிகாரி என்ற ஆயுதம் கொண்டு தடுக்க நினைக்கிறார். இது எந்த வகையில் நியாயம்?

திரு. ஜெயகாந்தன் என்னை பழிவாங்க துடிப்பதின் நோக்கங்கள் பல. அதில் முக்கியமானவை கீழே எழுதுகிறேன்.

(1) 3-5-2005 அன்று விசாரணை சிறைவாசிகள் மூன்று நபர்கள் விஷம் கலந்த மதுவை அருந்தி மரணமடைந்தார்கள். அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதில் நான் முக்கிய சாட்சியாக நீதிபதி ஐயா முன்பு சாட்சி சொன்னேன். அதில், இறந்து போன மூன்று நபரில் ஜெகன் என்ற சிறைவாசி சில நாட்கள் தண்டனை பெற்று தண்டனை பிரிவில் இருந்தான். அப்போது சிறையைப் பார்வையிட வரும் உய்ர் அதிகாரிகளிடம் குறைகளையும் மற்றும் சிறையில் நடக்கும் அநியாயங்களையும் அவர்களிடம் கூறுவான். ஒரு நாள் சிறையில் விசிட் செய்த நீதிபதியிடம் சிறையில் உள்ள அடிப்படை வசதிகளையும், திரு. ஜெயகாந்தன் அவர்களைப் பற்றியும் கூறினான். அது நாளிலிருந்து ஜெகனை கண்டாலே அவருக்குப் பிடிக்காது. பிறகு அவன் தண்டனை முடிந்து வேறு வழக்கிற்காக விசாரணை பிரிவிற்கு சென்றுவிட்டான்.

சம்பவத்தன்று ஜெகன் தான் முதலில் விஷ மதுவை அருந்தி தலைமைக் காவலர் இருக்கும் இடமான டவருக்கு தூக்கி வரப்பட்டான். அப்போது மணி 4.35. அதன் பிறகு செய்தி அறிந்து அங்கு வந்த கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன், ஜெகனைப் பார்த்துவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றுவிட்டார். ஜெகனை தனது விருப்பு வெறுப்பு காரணமாக கொஞ்ச நேரமாவது அவன் வெதனையில் துடிக்க வேண்டும் என்றே தாமதப்படுத்தி 5.25 மணி அளவில் அவனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவன் இறப்பதற்கு முழு காரணம் இவரின் பழிவாங்கும் நோக்கமே என்று நான் நீதி விசாரணையில் சொன்னேன். இதற்காக என்னை சமயம் பார்த்து பழிதீர்க்க பரோல் விடுப்பை ஆயுதமாக கையாள்கிறார்.

(2) மேலும், இராமமூர்த்தி என்ற தண்டனை சிறைவாசி தற்கொலை செய்து கொண்டான் என்று செய்தித்தாள்களில் செய்தி வந்தது. அனால், உண்மையில் அவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தற்கொலை செய்து கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டது என்பதுதான் உண்மை. அவன் ஒரு மனநோயாளி என்று தெரிந்தும் அவனை தனி அறையிலோ அல்லது மருத்துவமனையிலோ பாதுகாப்போடு வைக்க வேண்டியவனை இரண்டு மாடி கொண்ட இடத்தில் வைத்தது தவறு. அத்தவறை செய்தவர் திரு. ஜெயகாந்தன் அவர்கள். இதற்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஐயா திரு. சின்னபாண்டி அவர்கள் சிறைக்கு விசிட் செய்தார். அப்போது இறந்துபோன இராமமூர்த்தி அவரிடம் ஐயா, என்னை தனியாக ஒரு அறையில் போட சொல்லுங்கள். என் மனநிலை ஒரே மாதிரியாக இல்லை. அதனால், தனி அறையில் போட உத்தரவு செய்யுங்கள் என்று கூறினான். இதை நான் உட்பட அனைவரும் நேரில் பார்த்தோம். அடுத்த இரண்டு நாளில் அவன் இறந்துவிட்டான். இதில் வேதனையான விஷயம் அவன் விடுதலை ஆவதற்கு 10 நாட்கள்தான் இருந்தது.

கண்காணிப்பாளரின் அலட்சியப் போக்கால் இறந்த உயிர்களின் எண்ணிக்கை அன்றோடு நான்காக உயர்ந்தது. இதையும் ஆர்.டி.ஓ. விசாரணையில் நடந்த விவரங்களை துணை கலெக்டரிடம் கூறினேன். மேலும் மேலும் அவரின் பார்வைக்கு நான் கோழிக் குஞ்சாக மாறினேன். இதுவரை ஏராளமான நபர்கள் தற்கொலை முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், கண்காணிப்பாளரின் கண்காணிப்பு சரியில்லை என்றே கூறுவேன். வெறும் 250 கைதிகளை கொண்ட இந்த சிறையிலே இப்படி நடந்தால், மற்ற மாநிலங்களில் உள்ள சிறைக்கூடங்களில் எந்த நிலை உள்ளது என்று திரு. ஜெயகாந்தன் அவர்கள் சென்று பார்ப்பாரா? திகார் சிறையில் அதிகாரியாக இருந்த கிரண்பேடி அவர்கள் பற்றி இவர் கேள்வியாவதுப்பட்டு இருப்பாரா?

தொடரும்...

No comments: