Sunday, November 11, 2007

நந்திகிராம மக்கள் அமைதியாக வாழ வழி வகுக்க வேண்டும் - மேதா பட்கர்


நந்திகிராமத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர் என மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி துணிச்சலாக தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

நந்திகிராமத்திற்கு மீண்டும் திரும்பும் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர் என்று கோல்கத்தாவில் 48 மணி நேரம் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மேதா பட்கர், 10-11-2007 சனிக்கிழமை செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது:

"நந்திகிராமம் சூழ்நிலைக் குறித்துப் பல்வேறு தரப்பில் கேட்டறிந்த பிறகுதான் மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி இப்படியொருக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்து எவ்விதத்திலும் உண்மைக்குப் புறம்பானது அல்ல. மேற்கு வங்கத்தில் நிலவும் உண்மை சூழ்நிலையைத் தான் யாருக்கும் அஞ்சாமல் அவர் துணிச்சலாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆளுநரின் இந்த ஆதங்கத்தின் மூலம் பொது மக்களுக்கு எதிராக ஆளுங்கட்சி செயல்படுகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, நந்திகிராம விவகாரத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது.

அங்கு அமைதியை நிலைநாட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் நந்திகிராமத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவரும் தங்களது கட்சித் தொண்டர்களைத் திரும்ப அழைக்க வேண்டும்.

அங்கு மக்கள் அமைதியாக வாழ வழி வகுத்துக் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார் மேதா பட்கர்.

No comments: