Wednesday, November 12, 2008

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 5 ஆயிரம் மாணவர்கள் பேரணி - இரத்தக் கைரேகையிட்டு ஆளுநரிடம் மனு!






ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி, கடந்த 04-11-2008 அன்று, புதுச்சேரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று இரத்தக் கைரேகையிட்ட மனுவை ஆளுநரிடம் அளித்தனர். புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒழுங்குச் செய்யப்பட்ட இப்பேரணியில் 5 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்துக் கொண்டனர்.

ஈழத் தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு இராணுவ உதவி உள்ளிட்ட எந்த உதவிகளையும் இந்தியா வழங்கக் கூடாது, பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்களைச் சிங்கள கடற்படை சுட்டுக் கொல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

இதன் பின்னர் ஒவ்வொரு கல்லூரி, பள்ளிக்குச் சென்று மாணவர்களை ஒன்று திரட்டிய புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பினர் பிரமாண்ட பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி வந்தனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சதீஷ் (எ) சாமிநாதன் பேரணிக்குத் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், பெரியார் தி.க. அமைப்பாளர் தந்தைபிரியன், அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் முத்து, செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், கிருத்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, சமுதாய கல்லூரி, மதகடிப்பட்டு காமராஜர் அரசுக் கல்லூரி, தவளக்குப்பம் தாகூர் இணைப்பு கல்லூரி, பாரதியார் பல்கலைக் கூடம் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேநிலைப் பள்ளி, ஜீவானந்தம் அரசு மேநிலைப் பள்ளி, வ.உ.சி அரசு மேநிலைப் பள்ளி, கலவைக் கல்லூரி, வில்லியனூர் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட புதுச்சேரியின் அனைத்து அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு பேரணியில் பங்கேற்றனர்.

பேரணி காலை 10 மணிக்கு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலிருந்து புறப்பட்டு அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, செஞ்சி சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். மாணவர்களைத் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க 10 மாணவ, மாணவியரை ராஜ்நிவாசுக்குப் போலீசார் அழைத்துச் சென்றனர். மனுவில் மாணவ, மாணவியர் இரத்த கைரேகையிட்டு ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜாரிடம் அளித்தனர்.

மனுவில் ஈழத் தமிழர்கள் பிரச்னையில் இந்தியா தலையிட்டு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும், மருந்துகள், உணவு பொருட்களைப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவி செய்ய கூடாது, தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பேரணியில் புதுச்சேரியின் கிராம பகுதிகளிலிருந்து டெம்போ, மினி வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் பிரமாண்ட பேரணியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதராவாக உணர்ச்சிபூர்வமாக மாணவர்கள் நடத்திய பேரணியால் புதுச்சேரி குலுங்கியது.

4 comments:

Anonymous said...

நன்றிகள் உறவுகளே

Sundararajan P said...

அலை பரவட்டும்.

Venkatesh said...

மிகவும் பாராட்டத்தக்க நிகழ்வு

வெங்கடேஷ்

Anonymous said...

Dear Sugumaran,

The Students struggle is excellent. The Student community has power to change the Society.

Surely the Students Rally will help the Eelam People.

Jasmin, London.