Wednesday, November 19, 2008

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க கூடாது!



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 19-11-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் தற்போது மாநில அளவில் செயல்படுத்தப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும் என்பதால், மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவக் கல்லூரியை தங்களுக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக காங்கிரஸ் அரசு மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு புதுச்சேரியின் அனைத்து அரசியல் கட்சியினர், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 13 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் 27 சதவித இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த இடஒதுக்கீடு தற்போது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. மேலும், மத்திய அரசில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி இடஒதுக்கீடு கிடையாது.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும். இது மக்கள் தொகையில் 70 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

தற்போது புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 4 கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியுள்ளன. இதனால், புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் கொஞ்சம் கொஞ்மாக குறைந்து தற்போது புதுச்சேரி மாணவர்களுக்கு இடமில்லை என்றாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரிடம் மாணவர்களுக்கு இடம் கேட்டு புதுச்சேரி அரசு கெஞ்சும் நிலைதான் உள்ளது.

கல்வி வணிகமாகிவிட்டதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடையாக குறைந்தது 25 லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வி கிடைக்கும் சூழல் உள்ளது. ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி என்றால் புதுச்சேரிக்கு 150 இடங்கள் கிடைக்கும். இதனால், புதுச்சேரியைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் குறைந்த கட்டணம் செலுத்தி மருத்துவம் பயில முடியும்.

எனவே, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று, வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்களைச் சேர்த்து கல்லூரியை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், புதுச்சேரி மாணவர்களையும், பொதுமக்களையும் திரட்டி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என அரசை எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

5 comments:

Anonymous said...

மத்திய அரசின் ஈ.எஸ்.ஐ எடுத்துக்கொள்வதால் ஜிப்மர் போல் தரமான மருத்துவ கல்லூரியாக மாற்றம் பெறும்.மேலும் நிதி ஒதுக்கீடும் கூடும், கல்லூரியில் இடங்கள் கூடும்.மத்திய அரசின்
இட ஒதுக்கீடு கொள்கைதான் இங்கும்
நடமுறைக்கு வரும்.ஆகையால் எதிர்ப்பு அவசியமற்றது.

Anonymous said...

மத்திய அரசின் ஈ.எஸ்.ஐ எடுத்துக்கொள்வதால் ஜிப்மர் போல் தரமான மருத்துவ கல்லூரியாக மாற்றம் பெறும்.மேலும் நிதி ஒதுக்கீடும் கூடும், கல்லூரியில் இடங்கள் கூடும்.மத்திய அரசின்
இட ஒதுக்கீடு கொள்கைதான் இங்கும்
நடமுறைக்கு வரும்.ஆகையால் எதிர்ப்பு அவசியமற்றது.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அனானிக்கு,

அறிக்கையை முழுவதுமாக படிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.

//மத்திய அரசின்
இட ஒதுக்கீடு கொள்கைதான் இங்கும்
நடமுறைக்கு வரும்.//

இதற்கு என் அறிக்கையிலேயே பதிலிருக்கிறது. அதை மீண்டும் குறிப்பிடுகிறேன்.

//புதுச்சேரியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 13 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் 27 சதவித இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த இடஒதுக்கீடு தற்போது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. மேலும், மத்திய அரசில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி இடஒதுக்கீடு கிடையாது.//

இந்த விளக்கம் போதுமென நினைக்கிறேன்.

//மத்திய அரசின் ஈ.எஸ்.ஐ எடுத்துக்கொள்வதால் ஜிப்மர் போல் தரமான மருத்துவ கல்லூரியாக மாற்றம் பெறும்.//

இந்த கருத்து விவாதிக்கப்பட வேண்டியது.

Anonymous said...

மத்திய அரசின் இடஒதுக்கீடு 15.5% தலித்,7% பழங்குடியினர்,27% OBC
தலித்,பழங்குடியினருக்கு புதுவை அரசில் இடஒதுக்கீடு குறைவாக இருக்கலாம்.புதுவையில் இடஒதுக்கீடு பழங்குடியினருக்கு இல்லை.மத்திய
அரசின் கீழ் வரும் போது தலித்,
பழங்குடி சமூகத்தினர் மருத்துவராவது அதிகரிக்கும்.அது சரிதானே.நிதி ஒதுக்கீடு, நல்ல உள் கட்டமைப்பு போன்றவையும் தேவையில்லையா?
மாநில அரசை விட மத்திய அரசின்
அமைப்புகள் வசம் கல்லூரி இருந்தால்
விரிவு,வளர்ச்சி ஏற்படும்.புதிய படிப்புகள் வர வாய்ப்பு அதிகம். திறமையான மருத்துவர்/ஆசிரியர் மத்திய அரசு நிறுவனம் என்பதால் வேலைக்கு வருவர்.ஈ.எஸ்.ஐ அகில இந்திய அமைப்பு.மருத்துவமனை நிர்வாகத்தில் அதிக அனுபவம் உள்ள அமைப்பும் கூட. அந்த நோக்கில் பார்த்தால் இதனால் நன்மை அதிகம்.
சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதற்கு தீர்வு காண முடியும்.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அனானி...

//மத்திய அரசின் இடஒதுக்கீடு 15.5% தலித்,7% பழங்குடியினர்,27% OBC
தலித்,பழங்குடியினருக்கு புதுவை அரசில் இடஒதுக்கீடு குறைவாக இருக்கலாம்.புதுவையில் இடஒதுக்கீடு பழங்குடியினருக்கு இல்லை.மத்திய
அரசின் கீழ் வரும் போது தலித்,
பழங்குடி சமூகத்தினர் மருத்துவராவது அதிகரிக்கும்.//

தங்கள் கருத்து தவறானது. மத்தியில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இருந்தாலும், புதுச்சேரியில் பழங்குடியினர் உள்ளனர் என்று மத்திய அரசு அமைச்சரவையில் முடிவு செய்து, அதனை குடியரசுத் தலைவர் 'அறிவிக்கையாக' வெளியிட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் இடஒதுக்கீடு அம்மக்களுக்கு வழங்கப்படும். அதோடு, புதுச்சேரி அரசும் பழங்குடியினருக்கு 1% இடஒதுக்கீடு வ்ழங்க ஒதுக்கியுள்ளது. மேற்சொன்ன 'அறிவிக்கை' வந்தால்தான் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்.

//நிதி ஒதுக்கீடு, நல்ல உள் கட்டமைப்பு போன்றவையும் தேவையில்லையா?
மாநில அரசை விட மத்திய அரசின்
அமைப்புகள் வசம் கல்லூரி இருந்தால்
விரிவு,வளர்ச்சி ஏற்படும்.புதிய படிப்புகள் வர வாய்ப்பு அதிகம். திறமையான மருத்துவர்/ஆசிரியர் மத்திய அரசு நிறுவனம் என்பதால் வேலைக்கு வருவர்.ஈ.எஸ்.ஐ அகில இந்திய அமைப்பு.மருத்துவமனை நிர்வாகத்தில் அதிக அனுபவம் உள்ள அமைப்பும் கூட. அந்த நோக்கில் பார்த்தால் இதனால் நன்மை அதிகம்.//

தங்கள் கருத்து முரணானது. ஏனெனில், புதுச்சேரி அரசு கீழ் இருந்தால், விரிவு, வளர்ச்சி இருக்காது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவமனை இன்று தரமானதாக இல்லையா?

நிதி பொறுத்தவரையில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நிதி பெறுவதில் சிக்கல் இருக்காது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமில்லையா?