Tuesday, October 26, 2010

பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ.சுகுமாரன் அயோத்தி பயணம்!

அ.மார்க்ஸ்
கோ.சுகுமாரன்
அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேராசிரியர் அ. மார்க்ஸ்,மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், ஆகியோர் அயோத்தி பயணம் செல்கின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 60 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் பிரச்சனைக்குரிய இடத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும், பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டிருந்தது.

இத்தீர்ப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. மேலும், கடந்த 16-ம் தேதியன்று லக்னோவில் கூடிய இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அயோத்தி நிலப் பிரச்சனைக் குறித்து நீதிமன்றத்திற்கு செல்லாமல் வெளியே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என இந்து, முஸ்லிம் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து நேரில் சென்று ஆய்வுச் செய்ய மனித உரிமைக்கான மக்கள் கழகத் (Peoples Union for Human Rights - PUHR) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (26.10.2010) அயோத்தி பயணம் செல்கின்றனர். வரும் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் அயோத்தியில் தங்கியிருந்து, இந்து, முஸ்லிம் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், அரசியல் நோக்கர்கள், அறிவுஜீவிகள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துக் கேட்க உள்ளனர். மேலும், பிரச்சனைக்குரிய இடங்களைப் நேரில் பார்வையிடுகின்றனர்.

பின்னர் தமிழகம் திரும்பியவுடன் கண்டறிந்த உண்மைகளை அறிக்கையாக தயாரித்து சென்னையில் பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட உள்ளனர். அயோத்தி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் மனித உரிமை ஆர்வலர்கள் மேற்கொள்ளும் இப்பயணம் முக்கியத்துவம் உடையது.

3 comments:

Anonymous said...

தமிழின விரோதி அ. மார்க்ஸ் -யிடம் எப்படி மனித உரிமை எதிர்பார்ப்பது? நீங்க நல்லவர்-ன்னு நினைத்தேன். இவர்கூட ஏன் சுத்திடு இருக்கீங்க... ராஷபக்ஸ்-கிட்டே மனித உரிமை எதிர்பார்ப்பது போல இருக்கு அ.மார்க்ஸ் மனித உரிமைபற்றி பேசுவது.

--Mani...

Anonymous said...

க்ராம்சிய மொழியில் சிவில் சமூகத்தின் அங்கீகாரத்தை ஆய்வு செய்து வந்து பதில் சொல்லுங்கள்

Anonymous said...

சுகுமாரன் உங்கள் தொண்டுக்கு தலை தாழ்த்தி வணக்கங்கள். நிற்க, சென்ற முறை மதசார்பின்மை கூட்டத்துக்கு, பாபர் மசூதி விவகாரம் தொடர்பான மாநாட்டுக்கு காங்கிரஸ், பிற்போக்கு எயுத்தாலர் சொங்கம் போன்ற கோஷ்டியை கூப்ப்பிட்டாப்பல, மனித உரிமை காக்க அமார்க்ச (தெரிஞ்சு தான் புள்ளி விடப்பட்டிருக்கு!) அழைச்சிட்டு போறது நகைச்சுவைக்குரியது. மனித உரிமைப்போராளி எப்படி இருக்க வேண்டுமென்று அருந்ததி ராயிடம் கற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் உங்கள் அமார்க்சரிடம் ( அந்த பேராசான் மார்க்சின் பெயருக்கு வந்த கொடுமையப் பாருங்க!). ஈழம் அழிந்த போது இங்கிருந்து வியாக்கியானம் பேசிக்கொண்டு, ஏறக்குறைய இந்திய ஏகாதிபத்தியம், பார்ப்பன ஊடகக் கூடாரம், அதிகார வட்டத்தின் குரலை ஒத்த ஒரு குரலை வேறொரு முனையிலிருந்து முனங்கிக் கொண்டிருந்த, சிங்கள ராணுவத்துடன் கூட்டு வைத்துத்திரியும் கழிசடைகளுடன் கைகோர்த்தலைந்த இந்த ஆள் தான் மனித உரிமையைக் காக்க போகிறவரா? நல்லா இருக்குய்யா! நல்லா இருக்கு! வாழ்க!