Monday, August 22, 2011

ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 21.08.2011 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி ரெவே சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம. சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் கோ.செ.சந்திரன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகம்மது சலீம், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, மக்கள் சிவில் உரிமைக் கழக இணைச் செயலாளர் ஜா.பாஸ்கரன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பெ.பராங்குசம், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அபுபக்கர், பூவுலகின் நண்பர்கள் தலைவர் சீனு. தமிழ்மணி, மக்கள் ஜன்சக்தி இயக்கத் தலைவர் புரட்சிவேந்தன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவை தமிழ்நெஞ்சன், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சூ.சின்னப்பா, கிராமப்புற கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மேபாட்டுக் கழகத் தலைவர் மு.மஞ்சினி, தமிழர் களம் பொறுப்பாளர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்துவிட்ட நிலையில் தூக்குத் தண்டனயை எதிர்நொக்கி உள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தண்டனைப் பெற்று சிறையிலுள்ள அப்சல் குரு உள்ளிட்ட அனைவரின் மரண தண்டனையையும் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை இன்னமும் முற்றுப் பெறாத நிலையில் அவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிடுவது இயற்கை நீதிக்கு எதிரானது என்பதோடு, ஒருவேளை இவ்விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் தூக்கிலிடப்பட்டவர்களின் உயிர்கள் திரும்பவும் வராது என்பதாலும் மரண தண்டனையை ரத்து செய்வது அவசியம் என்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து விட்ட பின்னரும் கூட 1957-ல் கேரளத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் சி.ஏ. பாலன், தமிழகத்தில் 1974-ல் நக்சலைட் தலைவர் புலவர் கலியபெருமாள் ஆகியோரது மரண தண்டனை கேரள மற்றும் தமிழக அரசுகளின் முயற்சியால் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, இவற்றை முன்னுதாரணமாக கொண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக அது நிறைவேற்றப்படாததால் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஜியான்சிங் எதிர் பஞ்சாப், டி.வி. வேதீஸ்வரன் எதிர் தமிழ்நாடு, தாயாசிங் எதிர் இந்திய அரசு போன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழிந்தும் அது நிறைவேற்றப்படாததால் அத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டோர் 20 ஆண்டு காலம் சிறையில் உள்ளதாலும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதில் சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்பதை இக்கூட்டம் சுட்டிக்கட்டுகிறது.

சர்வ தேச மனித உரிமை அமைப்பான “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்” கணக்குப்படி உலக அளவில் 139 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் மரண தண்டனையை நடைமுறையில் வைத்துள்ளன. எனவே, இந்திய அரசு மனித உரிமைக்கு எதிரான மரண தண்டனையை சட்ட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27.08.2011 சனிக்கிழமை காலை 10 மணியளவில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

No comments: