Saturday, June 02, 2012

பெரியார் பிறந்த மண்ணில் ஏன் ஒரு தலித் முதல்வராக முடியவில்லை?


“பெரியார் பிறந்த மண்ணில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆக முடியவில்லை. அதேவேளையில் பெரியார் பிறக்காத உத்தரபிரதேசத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 4 முறை முதலமைச்சர் ஆகிறார். இது எப்படி சாத்தியமாயிற்று? கட்சியினர் சிந்திக்க வேண்டும்” என நெய்வேலியில் நேற்றைய தினம் விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.

பெரியார் பிறக்காத உ.பி. முதலான மாநிலங்களில் ஒரு தலித் முதலமைச்சராக வர முடிகிறது. பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் ஏன் வர முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் தோழர் தொல்.திருமாவளவன். நல்ல கேள்வி. நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய கேள்வி.

உ.பி.யில் மாயாவதி வெற்றிப் பெற்றது என்பது மட்டுமல்ல, இன்று தோல்வி அடைந்ததும் எப்படி என்று நாம் இணைத்து சிந்திக்க வேண்டும். உ.பி.யில் ஒட்டுமொத்த தலித்துகளின் மக்கள்தொகை சதவீதம் 22%, பார்ப்பனர்கள் 11%, முஸ்லிம்கள் சுமார் 15%, சத்திரியர்கள் முதலான இதர முற்பட்ட வகுப்பினர் மற்றும் யாதவ் முதலான பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இதர சதம். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. ‘பகுஜன்’ என்கிற அந்த கருத்தாக்கத்தைப் பெரும்பாலான மக்கள் என்கிற பெளத்த சிந்தனையிலிருந்து கான்சிராம் வடித்தெடுத்தார். இந்த பகுஜன் என்கிற கருத்தாக்கத்தில் உட்சாதி வேறுபாடு இல்லாமல் அனைத்து தலித்துகள் மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் முஸ்லீம்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தனர். தமிழகத்திற்கும், உ.பி.க்கும் மிக முக்கியமான வேறுபாடு அங்குள்ள 22% தலித்துகளும் உட்சாதி வேறுபாடின்றி ஒரு திரளாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தனர் எனப்துதான். இந்த மகத்தான சாதனைக்குரியவர் கான்சிராம். ஆனால், இங்கோ 20% தலித்துகள் தனித்தனிப் பிரிவுகளாக மட்டுமல்ல எதிரெதிர் குழுக்களாகவும் இன்று பிரிக்கப்பட்டுள்ளனர். அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது போன்ற நிலைப்பாடுகளை மற்ற பிரிவினர் எடுத்தது இந்தப் பிரிவினையை மேலும் அதிகப்படுத்தியது. இன்னொரு பக்கம் தேவேந்திரகுல வேளாளர்கள் தம்மைத் தலித்துகள் என அடையாளப்படுத்தக் கூடாது என்கின்றனர். ஆகையால், இங்கு தலித் ஒற்றுமைக் கைக்கூடவில்லை.

நம்முடைய தேர்தல் முறையில் 35% வாக்குகளை யார் பெற முடியுமோ அவர்கள் அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும். உ.பி.யில் 22% தலித்துகள் ஒருங்கிணைந்து நிற்பதால், சுமார் 10 அல்லது 12 சத வலிமையுள்ள எந்தப் பிரிவினரும் அவர்களுடன் சேரும் போது ஆட்சியை எளிதாக கைப்பற்ற முடிகிறது. அந்த வகையில் தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு அங்கு பெரிய மரியாதை உண்டு. ஆனால், உட்சாதி ரீதியாக சிதறுண்டு கிடக்கும் தமிழ்நாட்டு சூழலில் எந்த தலித் கட்சியும் உட்சபட்சமாக 6 முதல் 7 சதத்துக்குமேல் வாக்கு வங்கிகளை உடையதாக இல்லாததால் எந்த அரசியல் கட்சிகளும் தலித் அரசியல் கட்சிகளுக்கு பெரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.

சென்ற தேர்தலில் மாயாவதி மகத்தான வெற்றிப் பெற முடிந்தது என்றால், அவருடயை 22% வாக்கு வங்கிகளை குறியாக வைத்து பார்ப்பனர்கள் அவரோடு நின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவு முஸ்லிம் ஆதரவும் இருந்தது. கான்சிராமால் உருவாக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோரும் இணைந்து நின்று பெரும் வெற்றியை ஈட்டினர். இந்தத் தேர்தலிலோ மாயாவதி ஆட்சியின் ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தமை, நிர்வாக சீர்கேடுகள் முதலானவற்றின் விளைவாகவும், மிகுந்த உயர்சாதி சாய்வின் காரணமாகவும், தலித்துகள் உட்பட பலர் புறக்கணிக்கப்பட்டதாலும் மிகப்பெரிய அளவில் ஆதரவை இழக்க நேரிட்டது. இம்முறை முஸ்லிம்கள் யாரும் மாயாவதிக்கு வாக்களிக்கவில்லை. அதைவிட மாயாவதியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் தலித் பிரிவின் பெரும்பான்மை உட்பிரிவான ஜாதவ்கள் அதிருப்தி அடைந்து விலகி நின்றதும்தான். கான்சிராமால் கட்டமைக்கப்பட்ட உட்சாதி தலித் ஒற்றுமைச் சிதைந்தது இம்முறை அங்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம்.

தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதலமைச்சராக வேண்டுமென்ற நம்முடைய ஆசை நிறைவேற வேண்டுமென்றால் முதலில் தலித் மக்கள் மத்தியில் உட்சாதி ஒற்றுமையை உருவாக்க வேண்டும். தொல்.திருமாவளவன் போன்ற அரசியல் தெளிவு மிக்க தலைவர்களே இதைச் செய்ய முடியும். இத்தகைய நிலை உருவாகும் போதுதான் பா.ம.க.வோ அல்லது இதர ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடனோ அல்லது இடதுசாரிகளுடனோ இணைந்து வெற்றியை ஈட்ட முடியும்.

குறிப்பு: 16.04.2012-இல் முகநூலில் வெளியிடப்பட்ட குறிப்பு. 

1 comment:

Anonymous said...

Mr.Sukumaran.. Change your target(sathi, samayamartra...) as your vehemently discussing the caste system including it support.

Asokan