Tuesday, June 05, 2012

தன் அழகிய பேத்திப் பற்றி அ.மார்க்ஸ் எழுத மறந்தவை

அ.மார்க்ஸ் தன் முகநூலின் முகப்பில் பதிவிட்டுள்ள இப்புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. தன் மூத்த மகள் அமலாவின் ஒரே மகள் ‘சுகி’ என்று அனைவரும் அன்போடு அழைக்கும் மது வர்ஷா தான் அந்த ‘மிக அழகிய பேத்தி.’ சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்புப் படிக்கிறாள். மார்க்சை சந்திக்க சென்னை செல்லும் போது சுகியை நான் பார்ப்பதுண்டு. அவளிடம் எப்படி படிக்கிறாய் என்று சம்பிரதாயத்திற்குக்கூட கேட்க எனக்கு நேரம் இருக்காது. அவள் துரு துருவென்று ஏதாவது செய்துக் கொண்டிருப்பாள். அவள் நன்றாக படிக்கிறாள் என்று மட்டும் தெரியும். சில சந்தர்ப்பங்களில் நானும் மார்க்சும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனிப்பாள். அப்போதெல்லாம் அவளிடம் அப்படியொரு திறமை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

சென்ற மாத இறுதியில் திடீரென்று அமலா செல்லில் அழைத்து என் முகவரியைக் கேட்டார். அப்போது அவர் தன் மகள் சுகியின் நாட்டிய அரங்கேற்றம் (சலங்கைப் பூஜை) வைத்திருப்பதாகவும், அழைப்பு அனுப்புவதாகவும், கட்டாயம் வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதன்படி அழைப்பையும் அனுப்பி வைத்தார். அப்போது அதில் கலந்துக் கொள்ள எனக்கு அதிகம் ஆர்வமில்லை. சென்னைக்கு செல்வது எனக்கு எப்போதும் அலர்ஜியாக இருக்கும். பல சந்தர்ப்பங்களில் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளுக்குக்கூட செல்லாமல் விட்டு விடுவதுண்டு. இதுகுறித்து மார்க்சிடம் கேட்டால் ஒரு நீண்ட பட்டியலே தருவார். இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.

அதன்படி ஏப்ரல் 28 அன்று மதியம் சென்னை சென்று சாஸ்திரி பவனிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் புதுச்சேரியில் நடக்கும் ஊழல் வழக்குகள் குறித்து சி.பி.ஐ. உயரதிகாரி ஒருவருடன் விவாதித்துவிட்டு, மாலையில் மயிலாப்பூரில் நடந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக சென்றேன். அப்போது நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்து. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நம் சுகியா இப்படி எல்லா நுணுக்கங்களுடன் ஆடிக் கொண்டிருப்பது என்று. இதுபோன்ற நாட்டிய நிகழ்ச்சிகளில் அதிகம் ஆர்வமில்லை என்றாலும் முழுவதுமாக நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன். அங்கு பாடி இசைக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் தமிழில் இருந்தது ரசித்ததற்கு மற்றுமொரு காரணமாக இருக்கலாம். சுட்டிப் பெண் சுகியிடம் தேர்ந்த லயம், முக பாவனை, தாளம் மாறாமல் ஆடுதல் என அனைத்தும் கைக்கூடி இருந்ததைக் காண முடிந்தது. நிகழ்ச்சியின் இடையில் குருவிற்கு மரியாதை செலுத்திய போதும், அதனை லயத்துடன் செய்தது நாட்டியத்தின் மீதான அவளின் கவனக் குவிப்பிற்கு உதாரணம். இதற்கு அவளைப் பயிற்றுவித்த நடன குரு ராதா சீனிவாசன் முழுக் காரணம் என்றாலும், அதில் கவனம் செலுத்தி தன்னை வளர்த்துக் கொண்டதற்கு சுகியின் முயற்சியும், அமலாவின் ஊக்கமும் முக்கிய பங்கு என்பதைச் சொல்ல தேவையில்லை. நிகழ்ச்சி முடிந்தவுடன் அவளை மனதாரப் பாராட்டி சிறிய பரிசு ஒன்றை அளித்தேன். மார்க்ஸ், ஜெயா மார்க்ஸ் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அங்கு கூடியிருந்த அனைவருமே அந்த குட்டிப் பெண்ணை வெகுவாகப் பாராட்டினார்கள். அவள் தன் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு வளர வேண்டுமென்று மனதில் எண்ணிக் கொண்டே ஊர் திரும்பினேன்.

1990ல் தஞ்சையில் அமாலயம் சந்தில் குடியிருந்த மார்க்சை நானும் பொழிலனும் முதல் முறையாக சந்திக்க சென்ற போது சுகி போன்று சின்ன பெண்ணாக அமலாவும், பாரதியும் இருந்தனர். இன்று அவர்களின் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்து வருவதும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதும் உள்ளார்ந்து மகிழ்ச்சி அளிக்கிறது. காலம் ஓடிக் கொண்டிருப்பதை உணர வைக்கின்றன இந்தப் பசுமையான நினைவுகள்.

21.05.2012-இல் முகநூலில் எழுதிய குறிப்பு.

No comments: