Friday, August 31, 2012

சிறைப் பறவை பூமணி!


நான் 1988-ல் மதுரை அரசரடியிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த  போது எனக்கு மிகவும் இளைய வயது. அந்த வயதிற்கே உரிய துடிப்பு இருந்தளவிற்கு போதிய அரசியல் தெளிவு இருந்ததாக சொல்ல முடியாது.  இன்றைக்கு அரவாணிகள், திருநங்கைகள் மதிப்புடன் அழைக்கப்படவும், நடத்தப்படவும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அன்றைக்கு கிடையாது. அலிகள், ஒன்பதுகள், நேப்கள் (பிரெஞ்சு மொழியில் ஒன்பது) என்று கேவலமாக அழைக்கப்பட்ட காலமிது. நானும் இந்த மாதிரியான பார்வையில் இருந்து தப்பவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நான், பொழிலன், தமிழ் முகிலன் மூவரும் நள்ளிரவு சிறையில் அடைக்கப்பட்டோம். விடியற்காலை எழுந்தவுடன் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தவர் பூமணி. அவர் முகத்தில்தான் முழித்தோம்.  சிறிய கூந்தல் வைத்து அதில் கொஞ்சம் பூ வைத்து இருந்தார். அதனால்தான் பூமணி என்ற பெயரோ என்று தெரியவில்லை. எதுவுமில்லாமல் இருந்த எங்களுக்கு பல் துலக்க பற்பொடி கொடுத்து உதவினார். உங்களுடையை இன்னொரு ஆள் அங்கே இருக்கார். லாக் அப் திறந்தவுடன் சந்திக்கலாம் என்று கூறி நம்பிக்கை ஊட்டினார். அதிலிருந்து நாங்கள் சிறையை விட்டு வெளியே வரும் வரையில் அவர் மிகவும் அன்புடனும், நட்புடனும் பழகியது என் வாழ்நாளில் மறக்க முடியாதது.

ஒரு சிறிய வழக்கொன்றில் சிக்கிச் சிறைக்கு வந்த அவருக்கு இந்த சிறைதான் சொந்த வீடானது. அதிலிருந்து வெளியே செல்ல மனமில்லாமல் சிறைக்குள்ளேயே வாழ்ந்தார். தண்டனைக் காலம் முடிந்து விடுதலைச் செய்யப்பட்டாலும், நேரே காவல்நிலையம் சென்று ஏதாவது ஒரு வழக்கில் அவரை சேர்க்க சொல்லி உள்ளே வந்து விடுவார். எங்கோ பிறந்த பூமணிக்கு மதுரை சிறைதான் புகுந்த வீடு.

இளம் வயதுடையவர்களாக நாங்கள் இருந்ததும், சராசரி குற்றம் செய்துவிட்டு வந்தவர்களைக் காட்டிலும், ஒரு தீவிர அரசியல் வழக்கில் சிறை புகுந்ததாலும் பூமணிக்கு எங்கள் மீது அதிகப் பிரியம்.

நாங்கள் நீதிமன்றங்களுக்கு செல்வதற்காக எங்களின் துணிமணிகளைத் துவைத்துக் காய வைப்போம். அவை திடீரென காணாமல் போகும். அந்த உடைகளை எங்களைக் கேட்காமல் எடுத்துச் சென்று, தன் வசமிருக்கும் ஒருசில பீடிகளைக் கூலியாக கொடுத்து, சிறைக்குள் இருக்கும் சலவையகத்தில் தேய்த்து மடிப்பு மாறாமல் கொண்டு வந்து தருவதில் பூமணி அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. அவரின் முகத்தில் அந்த மகிழ்ச்சி வழிந்தோடும். படித்தவர்களாக இருக்கும் நாங்கள் அழுக்காக உடையுடுத்தி அதனால் எங்களுக்கு நீதிமன்றத்திலோ வெளியிலோ அவமரியாதை வந்துவிடக் கூடாது என்ற அவரது நல்லெண்ணத்திற்கு ஈடு ஏதுமில்லை. இப்படி எத்தனையோ நிகழ்ந்த கதைகளைக் கூற முடியும்.

24 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அந்த முகம் இன்றைக்கும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு அற்புதமான மனிதர்கள் மத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதற்குப் பூமணியே சான்று.  

பூமணி இப்போது என்ன ஆனார். உயிரோடு இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த சிறைப் பறை இன்னும் என்னுள் சுழன்றுக் கொண்டுதான் இருக்கிறது. நான் சுழலும் வரை அந்த நினைவு இருக்கும்.

No comments: