Sunday, May 09, 2021

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமனம்: வாழ்த்துகள்!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக (Advocate General) மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

1995-இல் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு எதிராக குற்றப் புகார் ஒன்றைத் தயாரித்தற்காக ரவுடிகளால் தாக்கப்பட்டார்.

2002-இல் திமுகவின் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் தமிழக அரசின் அரசு வழக்கறிஞராக (State Public Prosecutor) பணியாற்றி உள்ளார்.

கற்றுத் தேர்ந்த திறமையான வழக்கறிஞர். மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்களின் ஜீனியர். பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி உள்ளார். நீதித்துறை அகாடமியில் (Judicial Academy) புதுதாக பணியில் சேரும் நீதிபதிகளுக்குச் சட்ட வகுப்புகள் எடுக்கும் நிபுணர்களில் ஒருவர். மேலும், அனைத்துலக அளவிலும் பல்வேறு கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றி உள்ளார்.

2000-இல் இவருடன் நேரடியாக பழக்கம் ஏற்பட்டது. சந்தன வீரப்பன் கன்னட நடிகர் இராஜ்குமாரை கடத்தி வைத்திக் கொண்டு வைத்த கோரிக்கைகள் பல. அதில் மைசூர் நடுவண் சிறையில் ஒன்பதரை ஆண்டுகளுக்கும் மேலாக தடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த 12 பெண்கள் உட்பட 124 தமிழர்களின் விடுதலைக் கோரிக்கை முக்கியமானது. வீரப்பனுக்கு உதவியதாக போடப்பட்ட பொய் வழக்கில் விசாரணை இன்றி சிறையில் வாடினர்.

வீரப்பன் கோரிக்கையை ஏற்று 124 தடா சிறைவாசிகளைப் பிணையில் விடுதலை செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து வீரப்பனால் கொல்லப்பட்ட அதிரடிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தடா சிறைவாசிகள் 124 பேர், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த சிறைவாசிகள் 5 பேர் என யாரையும் விடுதலை செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிக்கலான இச்சூழலில் மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்களிடத்தில் அய்யா பழ.நெடுமாறன் உடன் சென்று விவாதித்தோம். வழக்கு விசாரணையை நடத்தி அனைவரையும் விடுதலை செய்ய யாரும் தடை செய்ய முடியாது எனக் கூறினார். அதோடு, தனி நீதிமன்றம் அமைத்து விரைந்து வழக்கை முடிக்கலாம் (Speedy trial) எனக் கூறி உச்சநீதிமன்றத்தின் 8 தீர்ப்புகளை நகலெடுத்துக் கொடுத்தார்.

இந்த முடிவோடு பழ.நெடுமாறன், கல்யாணி, கோ.சுகுமாரன் ஆகிய நாங்கள் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களைக் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். முன்னதாக எத்தனை மாதத்தில் மைசூர் தடா வழக்கை முடிக்கக் கேட்கலாம் என பழ.நெடுமாறன் அய்யா கேட்ட போது ஒரு மாதத்தில் முடிக்கக் கேட்போம் என்று சொன்னேன். அதேபோல், முதலமைச்சரிடம் கேட்டோம். அவர் சரியென ஒப்புக் கொண்டார். ‘நான் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களிடம் பேசுகிறேன். நீங்களும் அவரிடம் சொல்லுங்கள்’ என்றார். அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக முதலமைச்சர். பின்னர், நான் பெங்களூர் சென்று முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களைச் சந்த்திதேன். அவரும் இம்முடிவுக்கு ஒப்புக் கொண்டார்.

இதுபோன்று வீரப்பன் வைத்த கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வுக் கண்டு, அதை இரு மாநில முதலமைச்சர்களிடம் எடுத்துக் கூறி உறுதிமொழிப் பெற்றோம். வீரப்பனிடம் இத்தீர்வுகளை எடுத்துக்கூறி, அவற்றை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று உறுதியளித்தோம். இதனை ஏற்றுதான் வீரப்பன் கன்னட நடிகர் இராஜ்குமாரை விடுவித்தார்.

ஏற்கனவே தடா வழக்குகளைத் தமிழ்நாடு பழங்குடிகள் மக்கள் சங்கம், மக்கள் கண்காணிப்பகம், சோகோ அறக்கட்டளை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர்கள் நடத்தி வந்தனர். எங்களது கோரிக்கையை ஏற்று கர்நாடக அரசு தடா வழக்கை விரைந்து முடிக்க அமர்வு நீதிபதி கிருஷ்ணப்பா (இவருக்கு Conviction Krishnappa என்ற அடைமொழி உண்டு) தலைமையில் தனி நீதிமன்றம் ஒன்றை (Special Court) மைசூரில் அமைத்தது. அதாவது இவர் தண்டனை அளிக்கும் மனநிலையுள்ள நீதிபதி.

மேற்சொன்ன அமைப்புகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் (ஆந்திரா), வேணுகோபால் (மைசூர்), வின்சென்ட் (மதுரை) உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வழக்கை நடத்தினர். பழ.நெடுமாறன் கூடுதலாக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இவ்வழக்கில் ஆஜராகி நடத்தினால் நல்லது என்று முடிவெடுத்தார். அதன் அடிப்படையில், இவ்வழக்கில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார்.

சென்னையில் இருந்து மைசூருக்கு அழைத்துச் சென்று வரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் சென்னையில் அதிகாலை சதாப்தி அதிவிரைவு தொடர் வண்டியில் புறப்படுவோம். சென்னை – மைசூர் 7 மணிநேரம் பயணம். மூத்த வழக்கறிஞர் என்று பாராமல் அவரிடம் வழக்குக் குறித்து கேள்விகள் கேட்பேன். அவர் நிதானமாக எல்லாவற்றுக்கும் பதில் சொல்வார்.

தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இரண்டே மாதத்தில் வழக்கு முடிந்தது. தடா வழக்கில் இருந்து 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 4 பேருக்கு வாழ்நாள் சிறை. மீதமுள்ளவர்களுக்குக் குறைந்த ஆண்டுகள் தண்டனை. அவர்கள் ஒன்பதரை ஆண்டுகள் சிறையில் கழித்ததால் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் இருந்ததும், தடா சிறைவாசிகள் விடுதலையாகி எங்களுக்கு நன்றி சொன்னதும் மறக்க முடியாத தருணம்.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள் மிகுந்த துயரத்துடன் சிறையில் வாடிய அப்பாவி தமிழர்களின் விடுதலைக்கு வித்திட்டது.

இந்நினைவுகளுடன் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

No comments: