Friday, May 28, 2021

கச்சநத்தம் மூவர் படுகொலை: நினைவஞ்சலி..

28.05.2018 அன்று சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவரை அகமுடையோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.

கச்சநத்தத்தில் உள்ள கறுப்பசாமி கோயில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினருடையது. 25.05.2018 அன்று நடந்த இக்கோயில் திருவிழா ஒட்டி ‘காலாஞ்சி’ அளிப்பது குறித்து அகமுடையோர், தேவேந்திரகுல வேளாளர் சமூகங்களுகிடையே முன்பகை இருந்து வந்துள்ளது. அதாவது கச்சநத்தம் ஊரைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவருக்குக் கோயிலில் இருந்து பூ, தேங்காய், பழம் கொண்டு சென்று அவரது வீட்டிற்கே அளிக்கும் முதல் மரியாதை செய்யவில்லை என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த முதல் மரியாதையைத்தான் ‘காலாஞ்சி’ என்று அழைக்கின்றனர். ‘காலாஞ்சி’ பற்றி திருமூலநாயினார் இயற்றிய “பத்தாம்திருமுறையென்னும் திருமந்திரம் மூவாயிரம்” நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்பகையால், 26.05.2018 அன்று மேற்சொன்ன சந்திரகுமார் அவரது மகன் சுமன் ஆகியோர் தங்களுக்கு முதல் மரியாதை அளிக்காதது குறித்து தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அருவாளை எடுத்துவந்து வெட்ட முயன்றுள்ளனர். அப்போது ஊர்காரர்கள் தடுத்ததால் பிரச்சனை அத்தோடு முடிந்தது.

இதுகுறித்து தேவேந்திரகுல வேளாளர் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அன்று இரவு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சண்முகநாதன், தேவேந்திரன் ஆகியோரிடம் மேற்சொன்ன சந்திரகுமார் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ‘எங்களுக்கு மரியாதை செய்யாமல் கறி விருந்து சாப்பிடுகிறீர்களா’ எனச் சாதியைக் குறிப்பிட்டுத் திட்டியுள்ளார். அப்போது அவ்வழியே வந்த திருப்பாச்சேத்தி போலீசார் சந்திரகுமாரை காவல்நிலையம் அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்துள்ளனர்.

மறுநாள் 27.05.2018 அன்று, கோயிலில் உச்சகால பூசை முடிந்தவுடன் தேவேந்திரகுல வேளாளர்கள் கூட்டம் போட்டு, சந்திரகுமாரை போலீசார் பிடித்துச் சென்றதால் பெரிய பிரச்சனை வரும் என்று கருதி பழையனூர் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். போலீசாரும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

மறுநாள் 28.05.2018 அன்று இரவு சுமார் 9 மணியளவில், ஏற்கனவே முதல் மரியாதை தரவில்லை என்ற முன்பகையோடு இருந்தவர்கள் கத்தி, அருவாள் போன்ற ஆயுதங்களோடு கச்சநத்தம் தேவேந்திரகுல வேளாளர் பகுதிக்குள் நுழைந்து மேற்சொன்ன சண்முகநாதன் உள்ளிட்டவர்களை வெட்டிச் சாய்த்தனர். இதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகரன் ஆகியோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். போலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படுகொலை சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.

இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த பழையனூர் காவல்நிலையப் போலீசார் 3 பெண்கள் உட்பட 33 பேர் மற்றும் 4 சிறார்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கச்சநத்தம் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் செல்வாக்கு இருந்ததால், பாதிக்கப்பட்ட மக்களை மூத்த தோழர் இரா.நல்லக்கண்ணு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். முற்போக்குச் சிந்தனையுடைய இயக்கங்களைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இவ்வழக்கில் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி பாதிக்கப்பட்டோர் தேர்வின்படி மூத்த வழக்கறிஞர் சின்னராசு அரசு சிறப்பு வழக்கறிஞராக (Special Public Prosecutor) நியமிக்கப்பட்டார். அவருக்குத் துணையாக மனித உரிமை ஆர்வலரும், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அயராது போராடி வருபவருமான தோழர் வழக்கறிஞர் பகத்சிங் உடன் இருந்து பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கப் பாடுபட்டு வருகிறார்.

2019 நவம்பர் மாதம் தொடக்கத்தில் மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வருவது குறித்து கூறினார். விசாரணையின் முதல் நாள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும், நீங்களும் வாருங்கள் என்று கூறினார். நானும் சரியென்று கூறினேன். வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற இருந்தது.

சென்ற 06.11.2019 அன்று வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், சோகோ பாட்சா, அழகுமணி ஆகியோர் மதுரையில் இருந்து வந்தனர். நானும் சிவகங்கை சென்றேன். சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த உடனேயே ஒரு மூத்த வழக்கறிஞர் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்குக் கைக் கொடுத்து “You are a legend sir” என்று கூறிச் சென்றார். அவர் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகும் மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.

வழக்கு விசாரணை நடைபெற இருந்த நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சின்னராசு, வழக்கறிஞர் பகத்சிங்குடன் வந்தார். 24 ஆண்டுகள் கழித்து அந்த மீசையின் கம்பீரம் குறையாத வழக்கறிஞர் சின்னராசு அவர்களைக் கண்டேன். கொடைக்கானல் தொலைக்காட்சி வெடிகுண்டு வழக்கில் தோழர் பொழிலன் உள்ளிட்ட சிலருக்கு வழக்கறிஞர் அவர். 1997-இல் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பு நாளன்று அவரைப் பார்த்த பின்னர், அப்போதுதான் பார்த்தேன்.

வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தோம். சாட்சிகள் நடந்த கொடூரமான மூன்று படுகொலைச் சம்பவங்களை வாக்குமூலமாக அளித்தனர். மதுரையின் அனைத்து மூத்த வழக்கறிஞர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராயினர். நாங்கள் நீதிமன்றத்தில் இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பின்னர், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றப் பொறுப்பு அப்போது மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி ப.உ.செம்மல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இவ்வழக்கின் விசாரணையை நாள்தோறும் நடத்தினார். வழக்கு இறுதிக் கட்ட விசாரணை நிலைக்கு எட்டிய நிலையில் நீதிபதி ப.உ.செம்மல் கடலூர் மாவட்ட நிரந்திர மக்கள் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். வழக்கு விசாரணை அவர் விட்டுச் சென்ற நிலையிலேயே இன்றும் உள்ளது.

உடற்கூறாய்வு அறிக்கையின்படி இறந்துப் போன ஒவ்வொருவர் உடலிலும் 50க்கும் மேற்பட்ட ஆழமான காயங்கள். அவ்வளவுக் கொடூரமான படுகொலைகள்.

இன்று கச்சநத்தம் சாதிய படுகொலையில் உயிரிழந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோரின் நினைவு நாள். இப்பதிவை எழுதும் இந்நேரத்தில்தான் அந்த மூவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

என் நெஞ்சார்ந்த நினைவஞ்சலி..

No comments: