Wednesday, February 10, 2010

சேலத்தில் பியூஸ் சேத்தியா கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: கொளத்தூர் மணி, அ.மார்க்ஸ் பங்கேற்பு!




சேலத்தில் செயல்பட்டு வருகிற சுற்றுச்சுழல் ஆர்வலரும் பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான பியூஸ் சேத்தியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சேலத்தில் 5.2.2010 காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமைத் தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. வழக்குரைஞர் ப.பா. மோகன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளர் சா.பாலமுருகன், தமிழ்நாடு மனித உரிமை இயக்கத் தலைவர் பூமொழி, டாக்டர் ஜீவானந்தம், நிலவன், மா.செந்தில், கோ.சீனிவாசன், மாயன், பிந்துசாரன், ஆனந்தராஜ், எத்திராஜ, மாதேஸ்வரன், ராமு, குமார் அம்பாயிரம், பார்த்திபன், நெப்போலியன், அசோகன்ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்காகவும் கார்ப்பரேட்டுக்களுக்காகவும் இன்று நாடெங்கும் கனிம வளமும் நீர் வளமும் நிறைந்த நிலைகள் ஏராளமாக வாரி வழங்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி மக்களும் விவசாயிகளும் இந்நிலையை எதிர்த்துப் போராடி வருகின்றனர், இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இன்று மத்திய அரசு ‘பச்சை வேட்டை நடவடிக்கை’ என்கிற பெயரில் சுமார் 1 லட்சம் துணை ராணுவப் படைகளை பழங்குடி மக்களுக்கு எதிராக இறக்கியுள்ளது. இது தவிர தாக்குதல் பயிற்சிப் பெற்ற மாநில போலீசும் அரசே நடத்துகிற ‘சல்வா ஜுடும்’ போன்ற சட்ட விரோத கூலிப்படைகளும் இன்று பழங்குடி மக்களைத் தாக்கிக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 3 லட்சம் பழங்குடி மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் வாழ்கின்றனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

இந்திய அரசு இவ்வாறு தம் சொந்த மக்கள் மீதே ஒரு யுத்தம் தொடங்கியிருப்பதை எதிர்த்து இன்று ஹிமான்சு குமார் போன்ற காந்தியவாதிகளும், ஆனந்த பட்வர்தன் போன்ற கலைஞர்களும் நோம் சோம்ஸ்கி போன்ற உலகப்புகழ் பெற்ற அறிஞர்களும் கண்டித்துள்ளனர். பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ராபி ரே, முன்னாள் மத்திய அமைச்சர் சாந்தி பூக்ஷன் ஆகியோரும் இதைக் கண்டித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இந்த எதிர்ப்புக் போராட்டத்தின் ஒரு அங்கமாக தமிழகத்தில் ‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ என்கிற அமைப்பு மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதங்கள் அனுப்புவது, சைக்கிள் பிரச்சாரம் செய்வது ஆகிய நடவடிக்கைகளைத் திட்டமிட்டது.

சென்ற ஜனவரி 26 அன்று சேலத்தில் குடியரசு தின விழா முடிந்த பின் இது குறித்த துண்டறிக்கை விநியோகிப்பதற்காக சென்றிருந்த பியூஸ் சேத்தியாவை சேலம் மாநகர காவல்துறை கைது செய்து அடித்து இழுத்துச் சென்றது. அவர் மீது இன்று தேசத்துரோக வழக்கு உள்பட பல கடுமையான பிரிவுகளின்படி வழக்குகள் தொடரப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளது.

அமைதியான முறையில் செயல்பட்டு வந்த ஒரு மனித உரிமைப் போராளி இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், நாடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கத்தின் ஓரங்கமாகச் செயல்பட்ட ஒருவர் மீது இத்தகைய கொடும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்திருப்பதையும் அவருக்கு பிணை மறுக்கப்படுவதையும் கண்டித்து இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பியூஸ் சேத்தியா உடனே விடுதலை செய்யப்பட்ட வேண்டும். அவர் மீதுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். அவரை அடித்து வாகனத்தில் ஏற்றிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலான கோரிக்கைகளை வற்புறுத்தியும் தொடர்ந்து மனித உரிமைப் போராளிகள் மீது பொய் வழக்குகளைப் போடும் சேலம் மாநகர காவல்துறையை கண்டித்தும் உரையாற்றியவர்கள் பேசினார்கள்.

‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Saturday, January 30, 2010

சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் கருத்தரங்கம் தொடங்கி நடக்கிறது - படங்கள்!


சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் பன் மாநில கருத்தரங்கம், இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் அமர்வுக்கு கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு) தலைமைத் தாங்கிப் பேசினார். மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேரசிரியர் அ.மார்க்ஸ் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கியும், அனைவரையும் வரவேற்றும் பேசினார்.

பின்னர் தமிழகத்தின் மூத்த மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான எஸ்.வி.இராஜதுரை கருத்தரங்கைத் தொடக்கி வைத்து கருத்துரை ஆற்றினார். இந்திய - தமிழக மனித உரிமை இயக்க வரலாற்றையும், மனித உரிமை இயக்கம் சுயேட்சையாக செயல்படுவது குறித்தும் விரிவாக அவர் பேசினார்.

பின்னர், தில்லிப் பத்திரிகையாளர் சந்தியா சிவராமன், ஐதராபத்திலிருந்து வந்திருந்த மனித உரிமை மன்றத்தின் பொதுச்செயலாளர் வி.எஸ்.கிருஷ்ணா ஆகியோர் கருத்துரை வழங்கினர். பின்னர் உணவு இடைவேளைக்குப் பின்னர் தற்போது கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. மதிய அமர்வில் தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அபூர்வானந்த் உரையாற்றினார். தற்போது மக்கள் ஜனநாயக மன்றத்தின் தலைவர் பேராசிரியர் பாபையா உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

கருத்தரங்கில் பேசிய அனைவரும் மனித உரிமை அமைப்புகள் சுயேட்சையாக செயல்படுவது பற்றியும், எந்த ஒரு கட்சியையோ, அமைப்பினரையோ சார்ந்து இருக்கக் கூடாது என்பதை விளக்கிப் பேசினர். ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர் பற்றி பேசுவது மனித உரிமைக்கு எதிரானது என்றும், சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் எதிர்கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் மதிய அமர்வில் பேச பேராசிரியர் பிரபா கல்விமணி, வழக்கறிஞர்கள் ரஜினி, கே.கேசவன், பா.புகழேந்தி ஆகியோர் காத்திருக்கின்றனர். மாலையில் விவாத அரங்கம் நடக்கிறது.

கருத்தரங்கம் பற்றி இன்னும் விரிவாக பதிவு இடவுள்ளேன்.

Friday, January 29, 2010

சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் - பன் மாநிலக் கருத்தரங்கம்!


Drawing Courtesy: Brydie Cromarty.

மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR) - மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (FPR) ஆகியவை சார்பில் 30.01.2010 சனியன்று காலை 10 முதல் மாலை 6 மணி வரை, சென்னை, எழும்பூர் அருங்காட்சியகம் எதிரிலுள்ள இக்சா மையத்தில் "சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் - பன் மாநிலக் கருத்தரங்கம்" நடைபெற உள்ளது.

முதல் அமர்வு காலை 10 முதல் 2 மணி வரையில் நடக்கிறது. இந்த அமர்வுக்கு கோ. சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு) தலைமைத் தாங்குகிறார். மூத்த மனித உரிமை ஆர்வலர், எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை கருத்தரங்க திறப்புரை ஆற்றுகிறார்.

பல மாநிலங்களில் இருந்து வருகை தரும் மனித உரிமைத் தளாங்களில் பணியாற்றிவரும் ஆர்வலர்கள் கருத்துரை வழங்குகின்றனர். கவிதா ஸ்ரீவத்சவா (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஜஸ்தான்), வி.எஸ்.கிருஷ்ணா (மனித உரிமை மன்றம்), டாக்டர் அபுர்வானந்த் (தில்லிப் பல்கலைக்கழகம், புதுதில்லி), சத்தியா சிவராமன் (பத்திரிகையாளர், புதுதில்லி), பேராசிரியர் நகரி பாபையா (மக்கள் ஜனநாயக மன்றம், பெங்களூரு) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

இரண்டாவது அமர்வு மதியம் 3 முதல் மாலை 4.30 மணி வரையில் நடக்கிறது. வழக்கறிஞ்ர் ரஜினி (மனித உரிமைக்கான மக்கள் கழகம்) தலைமைத் தாங்குகிறார். பேராசிரியர் பிரபா.கல்விமணி தொடக்க உரையாற்றுகிறார். வழக்கறிஞர் கே.கேசவன் (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), ஏ.எஸ்.அப்துல் காதர் (தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு), வழக்கறிஞர் பா.புகழேந்தி (தமிழக மக்கள் உரிமைக் கழகம்) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மூன்றாவது அமர்வு மாலை 4.30 முதல் 6 மணி வரையில் நடக்கிறது. இந்த அமர்வு விவாத அரங்காக நடக்கிறது. விவாதத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர்.

கருத்தரங்கில் கலந்துக் கொள்பவர்களுக்கு தேனீர் மர்றும் உணவு ஏற்படு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள அழைக்கின்றோம்!

தொடர்புக்கு:

அ.மார்க்ஸ் - 9444120582.
மின்னஞ்சல்: professormarx@gmail.com

கோ.சுகுமாரன் - 9894054640.  
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com

Saturday, January 23, 2010

புதுச்சேரியில் - தமிழக் கணினியும் இணையப் பயன்பாடும் - கருத்தரங்கம்!

Tamil Bloggers Meeting

கருத்தரங்கம் குறித்த செய்தியைப் படிக்க படத்தை "அழுத்தவும்"

Sunday, November 08, 2009

டாக்டர் கே. பாலகோபால் எழுதிய "வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்" நூல் வெளியீடு!



மனித உரிமைப் போராளி டாக்டர் கே. பாலகோபால் மறைவையொட்டி மனித உரிமைக்கான மக்கள் கழகம் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் "வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்" என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 30.10.2009 அன்று, புக்பாயிண்டில், மாலை 7 முதல் 9.30 மணிவரை நடந்த பாலகோபால் நினைவஞ்சலி கூட்டத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை பேராசிரியர் அ.மார்க்ஸ் தொகுத்தும், மொழியாக்கமும் செய்துள்ளார்.

பாலகோபால் நேர்காணல் ஒன்றும், அவர் எக்னாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லியில் எழுதிய வன்முறை குறித்த கட்டுரை மொழியாக்கமும் நூலில் இடம்பெற்றுள்ளன.

நூலினை வழக்கம் போல் "புலம்" அமைப்பினர் நேர்த்தியாக தயாரித்துள்ளனர். 48 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ. 18/-

மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால் வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

நூல் கிடைக்குமிடம்:

புலம்,
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
பேசி: 97898 64555.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு,
179-அ, (மாடி), மகாத்மா காந்தி வீதி,
புதுச்சேரி - 605 001.
பேச: 98940 54640.
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com

மனித உரிமைக்கான மக்கள் கழகம்,
3/5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர், அடையாறு,
சென்னை - 600 020.
பேசி: 94441 20582.

Saturday, October 31, 2009

இலங்கையில் முகாமிற்குள் சிறைப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம், 27.10.2009 அன்று மாலை 7 மணியளவில், கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் சூ.சின்னப்பா, சு.சாமிநாதன், பா.மார்கண்டன், கி.கண்ணன், மு.பொன்னுசாமி, ச.கோவிந்தசாமி, சு.காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் முள் வேளி முகாமிற்குள் 3 லட்சம் தமிழர்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைக்கு எதிரான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய - தமிழக அரசுகள் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து சிறைப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை விடுவிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

2) கிராம பஞ்சாயத்துகளுக்கு அண்டை மாநிலங்களில் உள்ளது போல் அனைத்து அதிகாரங்களையும் உடனே வழங்கி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்த ஆவன செய்ய புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

3) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளின் போது 7 ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யபடுகின்றனர். அதே போல், வரும் டிசம்பர் 8, சோனியா காந்தி பிறந்த நாளன்று, புதுச்சேரி சிறைகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால், நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர் புலவர் கலியபெருமாள் மனைவி வாளாம்பாள், தனித் தமிழ்க் கழகத்தின் காப்பாளர் தேசிகன் (எ) திருநாவுக்கரசு ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday, October 22, 2009

மேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

மதுரை, மேலூர் அருகேயுள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து, குற்றாவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம், என்.பால் வசந்தகுமார் ஆகியோர் கடந்த 19.04.2006 அன்று குற்றவாளிகளுக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டதையும் உறுதி செய்தனர்.

குற்றவாளிகள் இத்தீர்ப்பையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இவ்வழக்கில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார். வழக்கு விசாரணை கடந்த 23.09.2009 அன்று முடிவு பெற்று தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் 17 பேருக்கும் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமையில் அக்கறையுடைய அனைவர் மத்தியிலும் இந்த தீர்ப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதி வெறிக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடிக் கொடுத்துள்ளது.

தொடக்கம் முதல் இந்த வழக்கில் சட்ட ரீதியாகவும், தொடர் இயக்கம் மூலம் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்க போராடிய வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களையும், அவரோடு துணை நின்ற அனைவரையும் பாராட்ட வேண்டும். இந்த வழக்கில் அவருக்கு துணையாக இருந்து பங்களித்தமைக்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்.

இவ்வழக்கை வைத்து அரசியல் செய்த தலித் கட்சி, ஒரு கட்டத்தில் இவ்வழக்கு பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் போன நிலையிலும், வழக்கறிஞர் பொ.இரத்தினம் போன்றவர்கள் விடாது போராடி நீதியை நிலை நிறுத்தியதை மனதார பாராட்டுகிறேன்.

Friday, October 09, 2009

மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்!

வாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10.2009), ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு மனைவி (வசந்தாலஷ்மி), ஒரு மகன் (பிரகதா) உள்ளனர். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஈடு செய்ய முடியாத இழப்பு இது. மனித உரிமைத் தளத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டி.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்த பாலகோபால், கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.வாராங்கலிலுள்ள கக்காடியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவர். நக்சல்பாரி அரசியல் மீது ஏற்பட்ட ஈர்ப்புக் காரணமாக அவர் தன் வேலையை உதறிவிட்டு, மனித உரிமைக் களத்தில் இறங்கியவர்.

காவல் மரணங்கள், போலி மோதல், மரண தணடனை ஒழிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்திப் போராடியவர். 'ஆந்திரபிரதேச சிவில் உரிமைக் குழு' என்ற அமைப்பில் பணியாற்றியவர். நக்சலைட் அமைப்புடன் முரண்பாடு ஏற்பட்டு, தனியாக 'மனித உரிமை அமைப்பு' நிறுவி செயல்பட்டவர்.

80-களில் ஆந்திர போலீசார் முன்னின்று நடத்திய 'பிரஜா பந்து' என்று அமைப்பினரால் கடத்தப்பட்டவர். இவரைக் கடத்தி வைத்துக் கொண்டு நக்சலைட் அமைப்பினர் பிடியில் இருந்த இரண்டு போலீசாரை விடுவிக்க 'பிரஜா பந்து' அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். பின்னர் நக்சலைட்கள் இரண்டு போலீசாரையும் விடுவித்த பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

போலி மோதல் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வாதாடி, போலி மோதல் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்கீழ் போலீசார் மீது வழக்குப் பதிய வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றுத் தந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.

தலை சிறந்த எழுத்தாளர். தொடர்ந்து EPW போன்ற இதழ்களில் எழுதி வந்தவர். அவரது எழுத்தில் நேர்மையும், கறாரான பார்வையும் வெளிப்படும். சில ஆண்டுகளுக்கு முன் அவரை நேர்காணல் கண்டது நெகிழ்வான அனுபவம்.

1992 முதல் அவரோடு நான் நெருக்கமான உறவுக் கொண்டவன். 1996-இல் போலீசாரின் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் அந்திராவின் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த நான்கு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, போலி மோதல் குறித்து ஆய்வு மேற்கொண்டது மறக்க முடியாதது. 1998-இல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட போது, அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்.

ஒரிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கிறித்துவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம்பெற்று அவ்ரோடு பணியாற்றினேன். அதுதான் அவரை கடைசியாக பார்த்தது. கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி முஸ்லீம் இடஒதுக்கீடு குறித்து அவரிடம் விரிவாக தொலைபேசியில் உரையாடியதுதான் கடைசி பேச்சு.

அவரது உடல் இன்று (09.10.2009) மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறப்பிற்கு இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். இன்னும் விரிவாக பாலகோபால் பற்றி எழுத உள்ளேன். இந்தப் பதிவையும் கூட அழுகையை அடக்கிக் கொண்டுதான் எழுதினேன்.

பழங்குடி இருளர் தாக்கப்பட்ட வழக்கு: குற்றவாளிகளை விடுவிக்க காரணமாக இருந்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி (கல்யாணி) ஆகியோர் 08.10.2009, காலை 11 மணிக்கு, புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:

பழங்குடி இருளர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியை விடுவிக்க காரணமாக இருந்த மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, ஏம்பலம் எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்களிடம் முன்பணமாக ஒரு தொகை கொடுத்துவிட்டு, செங்கல் சூளைகளில் அவர்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவது வழக்கம். விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் செங்கல் சூளையில் ரூபாய் 36 ஆயிரம் முன் பணம் பெற்றுக் கொண்டு கொத்தடிமையாக வேலைப் பார்த்து வந்தனர். அங்கு மேற்சொன்ன வெங்கடேஷ் இருவரையும் அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால், இருவரும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், மேற்சொன்ன வெங்கடேஷ் இந்த இருவரையும் தேடி அவர்களது சொந்த ஊரான ரெட்டணைக்கு இரண்டு முறை சென்றுள்ளார். அவர்கள் அங்கு இல்லாத காரணத்தால் கடந்த 24.09.2009 அன்று மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூன்று பேர், விக்கிரவாண்டி அருகேயுள்ள தக்காமேடு இருளர் குடியிருப்பில் உள்ள அவர்களது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு ஏழுமலை மற்றும் சகுந்தலா ஆகியோரின் மகள் தனம் (வயது: 25) மற்றும் அவரது கணவர் விஜி (வயது: 28) ஆகியோர் இருந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த தனத்திடம் ‘எங்கே உன் அப்பா, அம்மா’ என்று கேட்டு விசாரித்துள்ளனர். அதற்கு தனம் ‘எங்கள் அப்பா, அம்மா செங்கல் சூளையில் வேலை செய்ய வெளியூர் சென்றுள்ளனர்’ என்று பதில் கூறியுள்ளார். அப்போது மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூவரும் தனத்தின் கணவர் விஜியை கடுமையாக அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக தாங்கள் கொண்டு வந்த காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளனர். அதைத் தடுக்கச் சென்ற தனத்தையும் தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரை கரிக்கலாம்பாக்கத்திலுள்ள ஒரு பழைய வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர், தனம் தன் கணவர் செல் போனிற்குப் பல முறை தொடர்புக் கொண்டு கேட்டதற்கு ‘உன் அப்பா பெற்ற பணத்தைக் கொடுத்துவிட்டு உன் கணவரை அழைத்துச் செல்’ என்று வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, தனம், கடத்தப்பட்ட தன் கணவரை மீட்கக் கோரியும், கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 25.09.2009 அன்று பிற்பகல் தன் உறவினர்களோடு சென்று புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட விக்கிரவாண்டி போலீசார் புகார் மனு ஏற்புச் சான்றிதழ் வழங்கியுள்ளனர். பின்னர் அங்குப் பணியில் இருந்த விக்கிரவாண்டி காவல்நிலைய எஸ்.ஐ. ராஜாராம் கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேசை தொடர்புக் கொண்டுப் பேசியுள்ளார். அதன் பின்னர், அன்றைய தினம் மாலை 7 மணியளவில் மேற்சொன்ன வெங்கடேஷ் கடத்தப்பட்ட விஜியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். பிறகு எஸ்.ஐ. ராஜாராம் புகார் அளித்த தனம் மற்றும் அவரது உறவினர்களை மறுநாள் காலை வந்து முதல் தகவல் அறிக்கை பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

அதன் பின்னர், மறுநாள் (26.09.2009) காலை மேற்சொன்ன தனத்தின் குடியிருப்புக்கு அருகிலுள்ள ரைஸ் மில் உரிமையாளரும், அதிமுக பிரமுகர்களுமான ரமேஷ், சேகர் ஆகியோர் புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டியுள்ளனர். பிறகு தனம் மற்றும் அவர்களது உறவினர்கள் விக்கிரவாண்டி காவல்நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கை கேட்டுள்ளனர். அப்போது, பணியிலிருந்த எஸ்.ஐ. ராஜாராம் ‘உங்கள் புகாரை டி.எஸ்.பி-க்கு அனுப்பி வைத்துவிட்டோம். செங்கல் சூளை உரிமையாளரையும் டி.எஸ்.பி.யிடம் அனுப்பி வைத்துள்ளோம். அங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தன் கணவரை கடத்தியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி. மற்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு மேற்சொன்ன தனம் விரிவான புகார் மனு ஒன்றை கடந்த 26.09.2009 அன்று அனுப்பி வைத்துள்ளார்.

இதனிடையே, விக்கிரவாண்டி போலீசார் மேற்சொன்ன தனம் அளித்த புகார் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். (FIR No. 425/09 U/s 352, 363 IPC r/w 3 (I) (X) SC ST (Prevention of Atrocities) Act). ஆனால், காவல்நிலையத்தில் சரணடைந்த குற்றாவாளி வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாள் ஒருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, குற்றவாளிகளைக் காவல்நிலையத்தில் இருந்து விடுவித்துள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் போட்டால், குற்றவாளிகள் முன் ஜாமீன் பெற முடியாது. இந்த சட்டப் பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விசாரித்ததில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, தி.மு.க. ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் இவ்வழக்கில் தலையிட்டு, மேற்சொன்ன குற்றவாளிகள் சிறைக்கு செல்லாமல் இருக்க போலீசாருக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளது தெரிய வந்தது. இது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த 28.09.2009 அன்று விழுப்புரம் எஸ்.பி.யிடம் நாங்கள் இருவரும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளோம்.

மேலும், பழங்குடியின இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட வழக்கில், அதாவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி பதியப்பட்ட வழக்கில் அரசியல்வாதிகள் தலையிட்டு குற்றவாளைகளை விடுவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும், இச்செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதோடு, பழங்குடியின மக்களின் உரிமையில் தேவையில்லாமல் தலையிட்டு அவர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.

இதற்கு காரணமான மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, ஏம்பலம் எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கடந்த 06.10.2009 அன்று விரிவான மனு அனுப்பியுள்ளோம்.

Wednesday, September 30, 2009

கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் மீது பொய் வழக்கு, கைது, சிறை - கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 29.09.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்குப் போட்டு, கைது செய்து சிறையில் அடைத்துள்ள புதுச்சேரி காவல்துறையை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

கரிக்கலாம்பாக்கத்தில் நேற்றைய தினம் (28.09.2009) இந்தரஜித் என்பவர் கொத்தனார் வேலைப் பார்க்கும் சண்முகம் எனபவரை கடுமையாக தாக்கி அவருக்கு தலையில் பலத்த காயம்பட்டு மூன்று தையல் போடப்பட்டுள்ளன. இச்சம்பவம் நடந்தவுடன் மதியம் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், இரவு 9.30 மணி வரையில் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. குற்றவாளியை கைது செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீசாரின் இந்த மெத்தனப் போக்கால் மாலை 5.30 மணியளவில் மேற்சொன்ன குற்றாவாளி இந்திரஜித் மீண்டும் கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று, அங்கு இருந்தவர்களை தாக்கியுள்ளார். பின்னர், தேவையில்லாமல் பொதுமக்களுக்குத் தொல்லைக் கொடுக்கும் வகையில் சாலை மறியல் நடத்தி பேரூந்துகளின் கண்ணாடிகளை உடைத்துள்ளார். இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவங்களோடு எவ்வகையிலும் தொடர்பு இல்லாத ஜெகந்நாதன் மற்றும் அவரது தம்பி, மகன் உள்ளிட்டோர் மீது போலீசார் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கேட்டு சமரசம் இல்லாமல் போராடி வருவதால் ஆட்சியாளர்கள் தூண்டுதலின் பேரில் அவர்மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கு கரிக்கலாம்பாக்கம் போலீசார் மற்றும் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பைரவசாமி ஆகியோர் தான் காரணம். மதியம் நடந்த சம்பவம் பற்றி இரவு வரை இன்ஸ்பெக்டர் பைரவசாமி தகவல் தெரியாமல் இருந்துள்ளார். போலீசார் உடனடியாக செயல்பட்டு இருந்தால் இந்த சம்பவங்களை தடுத்திருக்க முடியும்.

அரசின் இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளால் சமூக ஆர்வலர்களின் நடவடிக்கைகளை தடுத்துவிட முடியாது என்பதை அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம். உடனடியாக ஜெகன்நாதன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்ப பெற்று, அவரை விடுதலை செய்ய வேண்டும்.

இதுகுறித்து, உரிய விசாரணைக்கு உத்தரவிட கோரி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) மற்றும் சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி. அகியோருக்கு விரிவான மனு அளித்துள்ளோம்.