Wednesday, July 08, 2020

கண்ணகி முருகேசன் – நினைவஞ்சலி!

08.07.2003 : கண்ணகி முருகேசன் இருவருக்கும் பூச்சி மருந்தை வாயில் திணித்து, உயிர் போகும் முன்னே எரித்துக் கொன்றனர் சாதி வெறியர்கள். கண்ணகி வன்னியர் சமூகத்திலும், முருகேசன் தலித்தாகவும் பிறந்ததைத் தவிர வேறொன்றும் இக்கோடூரப் படுகொலைக்குக் காரணமல்ல. 17 ஆண்டுக் காலம் இவ்வழக்கை நடத்திக் குற்றவாளிகளுக்குத் தண்டனைப்
பெற்றுத் தர போராடி வருகிறார் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம். உடன் நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சில நல்லுள்ளம் படைத்த நண்பர்கள் உதவியாக உள்ளனர்.

சம்பவம் பற்றி அறிந்தவுடன் நேரில் சென்று விசாரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணைக் கோரி வழக்குத் தொடர்ந்தார் வழக்கறிஞர் இரத்தினம். 2004-இல் உயர்நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால், சி.பி.ஐ. சட்டப்படியும், சரியாகவும் நடந்து கொள்ளவில்லை. முதலில் விசாரித்த சி.பி.ஐ. காவல் ஆய்வாளர் கே.சுப்பையன், பின்னர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்ட பின் விசாரித்த சி.பி.ஐ. காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.டி.நந்தகுமார் ஆகியோர் வழக்கைக் கெடுக்கச் செய்த குளறுபடிகள் ஏராளம்.

சி.பி.ஐ. முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவின் உடன்பிறந்த தம்பி அய்யாசாமி (இரண்டாவது படத்தில் இருப்பவர்), மற்றொரு உறவினர் குணசேகரன் ஆகியோரை வழக்கில் சேர்த்து குற்றவாளியாக்கியது. கண் முன்னே நடந்த இக்கொடூரத்தின் நினைவுகள் ஒருபுறம், மறுபுறம் எந்தக் குற்றமும் செய்யாமல் இரு தலித்துகள் மிகுந்த மன உளைச்சல், துயரத்துடன் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளைக் குற்றவாளிகளாக்கிப் பின் “அப்ரூவர்” ஆக்கும் சி.பி.ஐ. முயற்சிக்கு வழக்கறிஞர் இரத்தினம் ஒப்புக் கொள்ளவில்லை. இது காலத்திற்கும் தீராப் பழியாகிவிடும் என்பதால் யார்தான் இதை ஏற்றுக் கொள்ள முடியும்.

வழக்கறிஞர் திலகேஸ்வரன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரின் நிலைக் குறித்து விரிவாக எடுத்துக்கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கும் குற்றம்சாட்டப்பட்ட இரு தலித்துகளுக்கும் நிவாரணம் அளிக்கவில்லை. சி.பி.ஐ. செய்தக் குளறுபடிகளைப் பட்டியலிட்டு கூடுதல் விசாரணை (Further Investigation) நடத்தவும், சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கவும் கோரப்பட்டதைத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு ஏற்கவில்லை. மாறாக விசாரணை நீதிமன்றத்தில் தீர்வுக் காணுங்கள் என்று உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில் இரு தலித்துகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற சவால் நிறைந்தப் பணியை வழக்கறிஞர் இரத்தினம் தலைமையிலான வழக்கறிஞர் குழு மேற்கொண்டு வருகிறது. இவர்களுடன் உடன் இருந்து பணியாற்றுவதால் இதன் துயரங்களை நானும் சுமந்து கொண்டிருக்கிறேன்.

கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் குற்றவாளிகளின் மிரட்டலால் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சிகள் ஆயினர். முருகேசனின் உறவினர்கள் சிலரும் பிறழ் சாட்சி ஆயினர். குற்றவாளிகளின் நேரடி மிரட்டலுக்கு அஞ்சி அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற சாட்சி மறுநாள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார். சி.பி.ஐ., தமிழகக் காவல்துறை இந்த உயிரிழப்பு பற்றித் துளியும் கவலைப்படவில்லை. இதில் உயர்நீதிமன்றமும் சேரும்.

கண்ணுற்ற சாட்சிகளாக ஆக்க வேண்டிய இரு தலித்துகளைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்த சி.பி.ஐ., சம்பவத்தைக் கூட்டத்தோடு கூட்டமாக மறைந்திருந்து பார்த்த முருகேசனின் அம்மா சின்னப்பிள்ளையை (சாமிக்கண்ணுவின் இரண்டாவது மனைவி) விசாரித்து கு.ந.ச. 161-இன்படி வாக்குமூலம் பெறவில்லை. அரசுத் சாட்சிகளின் படியலிலும் சேர்க்கவில்லை.

வழக்கு விசாரணையின் போதுதான் சி.பி.ஐ. சின்னப்பிள்ளையிடம் செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் முன் நிறுத்தி கு.ந.ச. 164-இன்படி வாக்குமூலம் பெற்றுள்ளது தெரிய வந்தது. அவ்வாக்குமூலத்தைப் பார்த்தால் சின்னப்பிள்ளை மிகத் தெளிவாக குற்றவாளிகளின் பெயர்கள் அனைத்தையும் கூறியதோடு, சம்பவத்தில் ஈடுபட்டு, வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்படாதப் பலரது பெயரையும் கூறியுள்ளார். இவரது இந்த வாக்குமூலம் ஒன்றே குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்றுத் தரப் போதுமானது. அதனால்தான், சி.பி.ஐ. இவரை விசாரித்து சாட்சியாகச் சேர்க்கவில்லை.

சின்னப்பிள்ளையை நீதிமன்ற சாட்சியாக (Court Witness) விசாரிக்க வழக்கறிஞர் இரத்தினம் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருந்த நிலையில், சி.பி.ஐ. தரப்பு அரசு வழக்கறிஞர் அவசரம் அவசரமாக முந்திக் கொண்டு மனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து சின்னப்பிள்ளை சாட்சியம் அளித்தார். நீதிமன்றத்தில் சின்னப்பிள்ளை சாட்சியம் அளிக்கும்போது குற்றவாளித் தரப்பு வழக்கறிஞர்கள் செய்த ரகளை நிதித்துறையின் மாண்பையே கேலிக்கூத்தாக்கியது.

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 7(2)-இன்படி குற்றவாளிகளின் சொத்துக்களைப் பற்றுகைச் (Property attachment) செய்ய கடலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுப் பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சி.பி.ஐ. சொத்துப் பட்டியலைச் சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இவற்றை எல்லாம் பட்டியலிட்டு, இவ்வழக்கில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விதிகள் 5(1)-இன்படி பாதிக்கப்பட்டோர் தேர்வின்படி மூத்த வழக்கறிஞர் ஒருவரை அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கவும், சாட்சி செல்வராஜ் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும், பிறழ் சாட்சிகளாக மாறிய முருகேசன் உறவினர்களை மீண்டும் விசாரிக்கவும், பணம் கொடுத்து சாட்சிகளைக் களைத்தக் குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கைக் கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பி.கே.இளவரசன், முத்துகுமரன் பெயரில் தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகளிலும் நியாயம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இவ்வழக்குகளை விசாரித்து உத்தரவிட்ட இரு நீதிபதிகள் அமர்வில் மூத்த நீதிபதி மணிக்குமார் ஆவார்.

சம்பவம் நடந்த போது விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்குத் துணைப் போயினர். நக்கீரன் இதழில் செய்தி வந்தபின் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் பெற்று கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன் உட்பட வன்னியர் நால்வர் கண்ணகிக்கு விஷம் கொடுத்து கொன்று எரித்ததாகவும், முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, சித்தப்பா அய்யாசாமி உட்பட தலித்துகள் நால்வர் முருகேசனுக்கு விஷம் கொடுத்து கொன்று எரித்ததாகவும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், எட்டுப் பேரையும் கைது செய்து கடலூர் நடுவண் சிறையிலும் அடைத்தனர். பின்னர் அனைவரும் பிணையில் வெளியே வந்தனர். பின்னர் இந்த வழக்கில் எட்டு பேர் மீதும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இப்பொய் வழக்கில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த விருத்தாசலம் காவல்நிலைய அப்போதைய காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோரையும் சி.பி.ஐ. இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்தது. இதில் செல்லமுத்து காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். தமிழ்மாறன் உளுந்தூர்பேட்டையில் காவல் ஆய்வாளராக இருந்து லஞ்சம் பெற்ற வழக்கில் ஊழல் மற்றும் கண்காணிப்புப் பிரிவுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுப் பிணையில் உள்ளார்.

இந்நிலையில், தலித்துகள் நால்வர் மீது பொய் வழக்குப் போட்ட மேற்சொன்ன இரு காவல் அதிகாரிகள் மீது இ.த.ச. 201-இன்படி மட்டுமே குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி குறைந்தப்பட்ச தண்டனை மட்டுமே கிடைக்கும். ஆனால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி குற்றசாட்டுப் பதிவு செய்யப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக் கிடைக்கும். எனவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 2(1)-இன்படி குற்றச்சாட்டுப் பதிவு செய்ய தற்போது வழக்கை விசாரிக்கும் கடலூர் தனி நீதிமன்றத்தில் (Special Court for SC and ST Cases) மனுத் தாக்கல் செய்து வாதாடினார் வழக்கறிஞர் இரத்தினம். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இரு காவல் அதிகாரிகள் மீதும் மேற்சொன்ன சட்டப் பிரிவின்கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

குற்றவாளிகள் தரப்பில் விடப்படும் கடும் அச்சுறுத்தல்களுக்கு இடையே முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு குடும்பத்தினர் உறுதியாக வழக்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் சாமிக்கண்ணுவின் தம்பி அய்யாசாமி, அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, வேப்பூர் காவல் நிலையத்தில் அய்யாசாமி மீது கொலை வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் பிணையில் வெளியே வந்துள்ளார். அவ்வழக்கின் குற்றப்பத்திரிகையைப் படித்தாலே இக்கொலை வழக்கில் அவர் பொய்யாகச் சேர்க்கப்பட்டது விளங்கும்.

அய்யாசாமியின் மனைவி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். ஊருக்குப் பல நன்மைகள் செய்து வருகிறார். இதனால், தேர்தலில் போடியிட்டுத் தோல்வி அடைந்த தரப்பினர் அய்யாசாமி குடும்பம் மீது கோபத்தில் உள்ளனர். அண்மையில் இதுகுறித்து நடந்த மோதல் ஒன்றில் அய்யாசாமி, அவரது மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈட்டியை கொண்டுக் காவல்துறையினரைக் கொல்ல முயன்றதாவும் விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளர் கொடுத்தப் புகார் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டு அய்யாசாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அய்யாசாமியைக் கைது செய்த விருத்தாசலம் காவல்துறையினர் அவரைத் தாக்கியுள்ளனர். இதனால், அவர் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரைக் காவல் அடைப்பு செய்த விருத்தாசலம் நீதித்துறை நடுவர் ’62 வயதாகும் இவரா ஈட்டிக் கொண்டுக் காவல்துறையினரைக் கொல்ல முயன்றார்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது மேற்சொன்ன பொய் வழக்குகளைப் பட்டியலிட்டு அய்யாசாமி மீது குண்டர் தடுப்புச் சட்டம் ஏவப்பட்டுள்ளது. விருத்தாசலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கண்ணகி முருகேசன் படுகொலை வழக்கில் இரு காவல் அதிகாரிகளுக்குத் தண்டனைக் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து சாமிக்கண்ணு, அய்யாசாமி குடும்பத்தினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடுகின்றனர் விருத்தாசலம் காவல்துறையினர். இதில் கண்ணகி முருகேசன் படுகொலை வழக்குக் குற்றவாளிகளின் தூண்டுதலும் உள்ளது.

அய்யாசாமி நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். மேலும், குருதி அழுத்தம், சிறுநீரகக் கோளாறும் உள்ளது. இதனால், சிறையில் உடல்நிலை மோசமடைந்து தற்போது கடலூர் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இவ்வளவு துயரங்களையும் சுமந்து கொண்டுக் கொலையுண்ட முருகேசனின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

வழக்கு ஆவணங்கள், கண்ணுற்ற சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் எரிந்த உயிர்களின் அலறல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தனியே கதறி அழலாம். ஆறுதல் அடையலாம். ஆனால், நீதிமன்றத்தில் அளிக்கப்படும் சாட்சியங்கள் காதில் விழும்போது விழியோரம் கண்ணீர் கசிவதைத் துடைத்துக் கொள்ளத்தான் முடிகிறது.

கண்ணகி முருகேசன் – இருவருக்கும் என் நினைவஞ்சலி!

கோ.சுகுமாரன்

08.07.2020

Tuesday, December 25, 2018

பிரபஞ்சன் எழுத்தாளர் மட்டுமல்ல, ஒரு செயற்பாட்டாளர்!

எழுத்தாளர் பிரபஞ்சன் 21.12.2018 அன்று காலை 11.30 மணிக்குக் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் வாழ்ந்த புதுச்சேரி, பாரதி வீதி – வ.உ.சி. வீதி சந்திப்பில் உள்ள பூர்வீக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது இறுதி நிகழ்வு 23.12.2018 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு, அதே இடத்தில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் பேசினேன்.  

‘எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுச் செய்தி அறிந்தவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என் 28 ஆண்டுக் கால நண்பர் அவர். அவருடனான நட்புக் குறித்துப் பேசினால் பலநாள் பேச வேண்டியிருக்கும். அவர் எல்லோரும் பேசியது போல சிறந்த எழுத்தாளர், படைப்பாளி, ஆளுமை, எல்லோரையும் சமமாக பாவிப்பவர். அதுமட்டுமல்ல, அவர் ஒரு செயற்பாட்டாளரும்கூட.

மண்டல் குழுப் பரிந்துரைப்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கினார். அப்போது, புதுச்சேரியில் ‘சமூக நீதிப் பேரவை’ சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடுக் கேட்டுப் போராட்டம் நடத்தினோம். அப்போழுது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.விசுவநாதன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவரின் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவோம். அக்கூட்டங்களுக்குத் தவறாமல் வருவார். அதோடு போராட்டத் துண்டறிக்கைகள் எழுதிக் கொடுப்பார். அதைக் கொடுத்துவிட்டு, இதில் என்ன வேண்டுமானாலும் திருத்தம் செய்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார். அப்படிப்பட்ட ஜனநாயகவாதி அவர்.

காலையில் பேசிய அ.மார்க்ஸ் குறிப்பிட்டது போல, 1994-இல் இந்து முன்னணி அமைப்பினர் மிஷன் வீதியிலுள்ள புனித ஜென்மராக்கினி ஆலையம் சிவன் கோயிலை இடித்துவிட்டுக் கட்டியது என்று பிரச்சனையை எழுப்பினர். அதை இடிக்க வேண்டுமென்றும் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது, ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் “மசூதிக்குப் பிறகு மாதா கோயிலா” என்று ஒரு வெளியீடு கொண்டு வந்தோம். அதில் மாதா கோயில் சிவன் கோயிலை இடித்துவிட்டுக் கட்டவில்லை என்பதை ஆதாரங்களோடு நிறுவினோம். அந்த வெளியீட்டை வரலாற்று அடிப்படையிலான ஆதாரங்களைக் கொண்டு பிரபஞ்சன் எழுதினார். அ.மார்க்ஸ் அதற்கொரு முன்னுரை எழுதினார். அதன்பின்னர், இந்துத்துவ சக்திகள் அந்தப் பிரச்சனையைக் கைவிட்டனர். இன்று வரையில் அந்தப் பிரச்சனையை எழுப்பவில்லை.       

பிரபஞ்சன் ‘அப்பாவின் வேஷ்டி’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். அதில் அவரின் அப்பா கட்டிய பட்டுச் சரிகை வேட்டி கதையின் மையப் பொருள். பிரபஞ்சனின் அப்பா சாரங்கபாணி அவர்கள் வீட்டில் விஷேச நாட்களில் அந்தக் கதர்ப் பட்டு வேட்டியை கட்டிக் கொள்வது குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார். அந்த வேட்டி பெரிய அகன்ற அலமாரியில் பத்திரமாக இருக்குமாம். விஷேச நாட்களில் அவருடைய அப்பா அதை எடுத்துக் கட்டும் அழகுக் குறித்து அழகாக எழுதியிருப்பார். சிறுவயதில் அவருக்கு அந்த வேட்டியை கட்டிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்துள்ளது. அப்பா இறந்த பிறகு, வீட்டில் நடந்த ஒரு விஷேசத்தில், அதாவது பூஜையின்போது அந்த வேட்டியைக் கட்டிக் கொண்டு பூஜை செய்ய கீழே அமர்ந்துள்ளார். அந்த வேட்டி பின்பக்கமாக கிழிந்துப் போயுள்ளது. ‘பிறகு அந்த வேட்டியை மாற்றிவிட்டு பாலியஸ்டர் வேட்டியைக் கட்டினேன், அதுதான் நமக்கு சரிப்படும்’ என்றும் எழுதியிருப்பார். அப்பாவின் வேட்டியைக் கட்ட முடியாமல் போனதையும் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருப்பார்.

பிரபஞ்சன் தன் அப்பாவின் வேட்டியைக் கட்ட முடியாமல் போனதுபோலவே அவர் புதுச்சேரி பற்றி நிறைய எழுத வேண்டுமென்று எண்ணம் ஈடேறவில்லை. ஏற்கனவே, புதுச்சேரி பற்றிப் பத்தாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளார். இன்னும் பத்தாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பார். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பிரபஞ்சன் மறைந்த செய்திக் கிடைத்த உடனேயே ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் அவரது உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்ய வேண்டுமென்று புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கை வைத்தேன். அதேபோல, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்வர் நாராயணாசாமி எல்லோருடைய கோரிக்கையையும் ஏற்று பிரபஞ்சனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடத்தப்படும் என அறிவித்து, அதனைச் செயல்படுத்தி உள்ளார். அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தாளர் பிரபஞ்சனின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கியவாதிகள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு என் வீரவணக்கம்.’  

Monday, November 23, 2015

மழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்

கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து வந்தேன். மழைக்கு இதுவரையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். பல இடங்களில் வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல், மண் குவியலுக்குள் வாழ்ந்த குடும்பங்களின் வாழ்க்கைச் சுவடுகள் மூழ்கிப் போயிருந்த துயரத்தைக் காண முடிந்தது. நெய்வேலி அருகேயுள்ள பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 10 பேர் பலியாகி உள்ளனர். நாங்கள் சென்ற போது லட்சுமி என்ற பெண்ணின் உடல் கிடைத்தது. ஓடைக் கரையோரம் வீடுகளில் குடியிருந்ததால் வெள்ளம் மிக எளிதாக இவர்களை அள்ளிச் சென்றுள்ளது. இடிந்த வீட்டின் முன்பு தாய் தன் பிள்ளைகளின் சான்றிதழ்களைக் காய வைத்த காட்சி மனதை வாட்டியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீரை வெளியேற்றியதாலும் கடும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்து மண் மேடாக காட்சியளிக்கின்றன. அந்நிலங்களைத் திருத்தி மீண்டும் விவசாயம் செய்ய நீண்ட காலமாகும். சொந்த நாட்டிலேயே மக்கள் பள்ளிக்கூடங்களில் அகதிகளாக உள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சியினர், சில தொண்டு நிறுவனத்தினர் சற்று ஆறுதல் தரும்படி நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். தமிழக அரசும் இயன்றளவு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இவை அனைத்தும் அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவாது. நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்த முந்திரிக்காட்டு மக்கள் வரிசையாக நின்று, தட்டு ஏந்தி உணவு வாங்கிச் சென்று உண்ட காட்சி துயரத்தின் உச்சம். நாம் மழையை சபிக்க முடியாது. அது இயற்கையின் வரம். ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் ஆளுகின்ற, ஆண்ட அரசுகளை நினைத்தால் கடும் கோபம் வருகிறது. எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமலும், நீர் ஓட வேண்டிய வாய்க்கால், ஓடை, இயற்கைத் நீர்த்தேக்கங்களான குட்டை, குளம், ஏரி ஆகியற்றை இல்லாமல் செய்ததும் என அரசின் திட்டமிட்ட இயற்கை அழிப்பே இந்த பேரிடருக்குக் காரணம். இதை வைத்துக் கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அரங்கேற்றும் அரசியல் ஆபாசத்தின் உச்சம் எனலாம். இந்நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த தாக்குதல் குறித்த அந்நாட்டு கட்சிகள், ஊடகங்களின் அனுகுமுறையை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு நாகரீகமாக அதை எதிர்க் கொண்டார்கள். தமிழகம் இன்னும் சீரழியும் நிலை வருமோ என அஞ்சுகிறேன்.

புகைப்படம்: இயக்குநர் தங்கர்பச்சான்


Monday, January 26, 2015

தங்கர்பச்சான் தாய் இறப்பு: ஒரு கிராமத்தின் சாவு அது!

என் அன்பு நண்பர் இயக்குநர், ஒளிஓவியர் தங்கரபச்சானின் தாயார் இலட்சுமி அம்மாள் இறப்புக்குச் சென்று வந்தோம், நான், ஜெகன்நாதன், பிரேம்ராஜ், கடலூர் பாபு ஆகியோர் சென்றிருந்தோம். கடலூர் மாவட்டம், பண்ரூட்டி அருகே நடுவீரப்பட்டு என்ற ஊருக்குப் பக்கத்து ஊர் பத்திரக்கோட்டை கிராமம். மிகவும் பின்தங்கிய பகுதி, பண்ரூட்டி இராமச்சந்திரன் அமைச்சராக இருந்த போது இப்பகுதிகளுக்குச சாலைப் போட்டு, பேருந்து இயக்கியுள்ளார். 'அழகி' திரைப்படம் வெளியான போது தங்கர்பச்சான் பாராட்டு விழாவிற்குச் சென்ற போது அவரது தாயரை பார்த்தேன். ஒரு நல்ல கிராமத்து அழகிய பாட்டி அவர். அதன்பின் அந்த ஊருக்குச் செல்ல வாய்ப்பில்லாமல் போனது. தற்போது அவரது உயிரற்ற உடலைக் காணச் செல்ல வேண்டியதாகிவிட்டது. உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு வந்து, தங்கர்பச்சான் இருக்கைக்கு அருகில் அமர்ந்தோம். என்னை அவரது அண்ணன்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு நெருக்கமானவர்களிடம் என்னைப் பற்றிக் கூறிய வண்ணம் இருந்தார். அவர் என் மீது வைத்திருக்கும் அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு அது. அவர்களது மிகப்பெரிய பூர்வ வீடு இடிக்கப்பட்டு பக்கத்தில் புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வூரில் இவர்களைப் பெரியவீட்டுக்காரர்கள் என்று அழைப்பார்கள். ஒரு சிறிய கூரை வீட்டில் அவரது தாயார் இறுதிக் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்துள்ளார். 'பூர்வீக வீடு இடிக்கப்பட்டது அம்மாவுக்கு மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கு. எட்டு பிள்ளைகளும் இங்குதான் பிறந்தோம். ஐந்து நாட்களாக அம்மாவுடன் இருந்தேன். அவர் மூச்சுவிடும் வரை இருந்தேன். அவர் இல்லாமல் தனித்து விடப்பட்டது போல் உணர்றேன். என்ன சொல்றதுன்னு தெரியல' என்று தன் தாங்க முடியாத சோகத்தைப் பகிர்ந்துக் கொண்டார். அப்போது தாரை, தப்பட்டை, மேளம் முழங்கிட, பட்டாசு வெடிச்சத்தம், அதிர்வேட்டு கேட்டிட ஆண்களும், பெண்களுமாக ஒரு பெரும் கூட்டம் தலையில் அரிசி சிப்பம், கையில் ஆளுயர பூ மாலைகள், சீர் வரிசைகள் சகிதமாக வந்தது. வந்தவர்கள் உடலுக்கு மாலைகளை அணிவித்து துக்கத்தைப் பகிர்ந்துக் கொண்டனர். வந்த பெண்கள் அங்கிருந்த பெண்களோடு அமர்ந்து கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து அழுது தீர்த்தனர். கிராமத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் காட்சி இது.'அம்மாவின் சொந்த ஊரான சிலம்பநாதன்பேட்டை உறவுக்கார ஜனங்க. இதுபோல 184 ஊரில இருந்து உறவுக்காரக் குடும்பங்கள் வரனும். சாவு எடுக்க சாயந்தரம் 6 மணிக்கு மேலாகும்' என்றார் தங்கர்பச்சான். மக்கள் வரிசை வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினர். தங்கர்பச்சானுக்கு வேண்டிய முக்கிய பிரமுகர்களும் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். ஒருபுறம் பட்டாசு, வேட்டு என கலைக்கட்டியது சாவு. 'இரவு வந்த மச்சான் ஒருத்தன் பட்டாசு வெடிக்காதேன்னு சொன்னதற்கு கோவிச்சுக்கிட்டுப் போயிட்டான், பேசி சமாதானப்படுத்தி கூட்டிக்கிட்டு வர வேண்டியதா போச்சு' என்றார் தங்கர்பச்சான். 91 வயது வரை வாழ்ந்த தாயின் சாவிற்கு செம்மண் படிந்த, தலைக்காய்ந்த சாதாரண மக்கள் முதல் பல தரப்பினரும் வந்து துக்கத்தில் பங்கேற்றது நெகிழ்ச்சியாக இருந்தது. அழுதவர்கள் உண்மையாக அழுதார்கள். கிராமமே திரண்டு சாவு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு உயிரோட்டமான சாவின் இறுதி நிகழ்வைக் காண முடிந்தது. முன்னொரு காலத்தில் முந்திரிக்காட்டு தீவிர அரசியல் அரசையும், காவல்துறையையும் கலங்கடித்தது தனித்த வரலாறு. ஒரு வீரஞ்செரிந்த வரலாற்றுக்குச் சொந்தமான முந்திரிக்காட்டு எளிய மக்களின் வாழ்வைக் கண்டுவந்த திருப்தியோடு ஊர் திரும்பினேன்.

Thursday, September 11, 2014

'உலகத் தற்கொலைத் தடுப்புத் தினம்': ஒரு நினைவுக் குறிப்பு!



திருவாரூரைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டுப் பாதுகாப்புத் தேடி புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வழக்கம் போல் பெண் வீட்டில் எதிர்ப்பு. இருவரையும் கண்டுப்பிடித்து நீதிமன்றத்தை அனுகி அப்பெண்ணைப் பிரித்து ஒரு காப்பகத்தில் தங்க வைத்துவிட்டனர். இப்பிரச்சனையில் தலையிட்டு ஏதாவது செய்யுங்கள் என்று வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் கேட்டார். புதுச்சேரியில் ஏதாவது வேலை நடக்க வேண்டுமென்றால் அவருக்கு என் ஞாபகம் மட்டுமே வரும். அப்போது அவரும் புறப்பட்டு இங்கு வந்துவிட்டார்.

நான் இவ்வழக்கை நடத்திய நீதிபதி என் பள்ளித் தோழர் என்பதால், அவரை நீதிமன்றத்தில், மதிய இடைவேளியின் போது சந்தித்து உண்மை நிலையை எடுத்து விளக்கினேன். அவர் உடனே அப்பெண் யாருடன் செல்ல விரும்புகிறார் என்பதை விசாரித்து, அவருடன் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

நான், சிவ.இராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் அப்பெண் தங்கியிருந்த ரெட்டியார்பாளையத்தில் உள்ள காப்பகத்திற்குச் சென்றோம். காவல்துறையினர் அப்பெண்ணை விசாரித்தனர். அப்போது அப்பெண் தான் தன் கணவருடன் செல்ல விரும்புவதாக உறுதியாக சொன்னார். அதைப் பதிவுச் செய்துக் கையெழுத்து வாங்கிய காவல்துறையினர் அப்பெண்ணை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். அப்போது அங்கிருந்த அப்பெண்ணின் தந்தையார் எங்களை நோக்கி மண்ணை அள்ளி வீசி 'உங்களுக்குக் கேரளா போய் சூனியம் வைக்கிறேன்' என்று ஆவேசமாக கத்தினார். காவல்துறையினர் அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் அந்தப் பையன் ஒருமுறை என்னிடம் செல்லில் பேசினார். தான் நன்றாக இருப்பதாகவும், ஒருமுறை வீட்டிற்கு வந்து உணவு உண்டுவிட்டுச் செல்லுங்கள் என அன்போடு கேட்டுக் கொண்டார். அது ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகை நேரம். அவர் கிறிஸ்துவர் என்பதால் விருந்துக்கு அழைத்தார் என நினைக்கிறேன். என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது. சென்ற ஆண்டு இன்னொரு காதல் ஜோடி பிரச்சனைத் தொடர்பாக சிவ.இராஜேந்திரன் புதுச்சேரிக்கு வந்தார். அப்போது ஊரக எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து அப்பிரச்சனைக்குத் தீர்வுக் கண்டோம். வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் இதுபோன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காதல் திருமணங்களை நடத்தியவர்.  அதுகுறித்து பிறகு எழுதுகிறேன். அப்போது அங்கு அந்தப் பையன் வந்திருந்தார். சற்று சதைப் பிடித்திருந்தது. என்னுடன் ஒரு சில மணிநேரம் இருந்திருப்பார். அப்போதும் என்னை விருந்துக்கு வீட்டிற்கு அழைத்தார். நான் வழக்கம் போல் மெல்லிய சிரிப்புடன் சரி என்றேன். நான் இதுபோன்ற விருந்து, கொண்டாட்ங்களில் இருந்து விலகி இருப்பவன் என்பதை என்னுடன் மிக நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் மட்டுமே அறிவர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் அவர்களிடமிருந்து செல்போனில் அழைப்பு. நான் கொஞ்சம் வேலையாக இருந்ததால், அவரது அழைப்பை ஏற்காமல், பிறகுப் பேசலாம் என்று இருந்தேன். விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தார். அவசரமாக அழைக்கிறார் என்பதை உணர்ந்து செல்போனை எடுத்தேன். ‘சுகு, நம்ம ஜேம்ஸ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டிக் கொண்டு செத்துவிட்டதாக சொல்கிறார்கள். நான் சென்னையிலிருந்து அங்கு வந்துக் கொண்டிருக்கிறேன். எஸ்.ஐ.யிடம் பேசினேன். வீட்டுக் கதவுப் பூட்டி இருப்பதால் நான் வந்தப் பிறகு திறக்கவும் என்று சொல்லிவிட்டேன். நீங்களும் தயாராக இருங்கள்’ என்று கூறி முடித்தார்.

எனக்குப் பழைய நினைவுகள் எல்லாம் ஓடின. அவர் ஒன்றும் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்குக் கோழை அல்ல. என்ன நடந்தது என்ற குழப்பம் ஒருபுறம். மறுபுறம் நம்மை அறியாமலேயே நம்மில் புகுந்திருக்கும் சந்தேகம், விசாரணை என்ற அனுகுமுறை. நானும் எஸ்.ஐ.யிடம் குடும்பத்தினரும், வழக்கறிஞரும் வந்தப் பின்னர் வீட்டின் கதவைத் திறக்கவும் என்று சொன்னேன். அவர் நீங்கள் யாரும் வராமல் எதையும் செய்யமாட்டேன் என்று உறுதிக் கூறினார்.

நான், சிவ.இராஜேந்திரன், இறந்தவரின் குடும்பத்தினர், அவரது மனைவி, அவரது உறவினர்கள் மற்றும் ஊரார் முன்னிலையில் கதவை உடைத்துப் பார்த்தோம். இறந்தவர்களின் குடும்பத்தினர் பெண்ணின் வீட்டார் கொலை செய்துவிட்டனர் என்று குற்றஞ்சாட்டினர். அவ்வீட்டின் முன்னரே இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் அளவுக்கு பிரச்சனை எழுத்தது. அப்பெண்ணின் தந்தையார் மிகவும் பரிதாபமாக செய்வதறியாது நின்றுக் கொண்டிருந்தார். நான் தான் சூனியம் வைக்க வேண்டிய நபர் என்பது அப்போது அவர் நினைவில் இல்லை. நிலைமையை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தூக்கு மாட்டி உடல் தொங்கிக் கொண்டுடிருந்த படுக்கை அறைக்குள் சென்றோம். பிணம் அழுகிய துர்நாற்றம் மெல்லியதாக வீசியது. அந்த அறையின் மின்விளக்கு எரியவில்லை. பெரிய அளவிலான ‘டார்ச் லைட்’ முலம் உடலைப் பார்த்தோம். காவல்துறையினருடன் நாங்களும் புலன் விசாரணை மேற்கொண்டோம். தூக்கு மாட்டிக் கொண்டால் என்னென்ன தடயங்கள் இருக்குமோ அத்தனையும் இருந்தன. கழுத்தில் கயிறு இறுகி லேசாக கழுத்து எலும்பு உடைந்து தலைச் சாய்ந்திருந்தது. நாக்கு வெளியே தள்ளிக் கொண்டு பல் இறுகக் காணப்பட்டது. இரண்டு கை விரல்கள் இறுகி மூடிக் கொண்டிருந்தன. ஆண்குறியில் இருந்து விந்தும், மல வாயில் இருந்து மலமும் வெளியேறி இருந்தது. நானும், சிவ.இராஜேந்திரன் அவர்களும் தற்கொலைதான் என்ற முடிவுக்கு வந்தோம். காவல்துறையினரும் தற்கொலைதான் என முடிவுக்கு வந்து உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். உடல் அரசுப் பொது மருத்துவமனை சவக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது.

காவல்துறையினர் என்னைப் புகார் எழுதச் சொல்லி முழு விசாரணைக்கும் என்னைப் பயன்படுத்திக் கொண்டனர். என்னை வைத்தே எல்லா வேலையும் முடித்துக் கொண்டால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அல்லவா? அங்கு மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்தது. பிணத்தை எந்த ஊரில் அடக்கும் செய்வது என்று இருதரப்பினரிடையே மீண்டும் சிக்கல். இறந்தவரின் மனைவியும், அவரது தந்தையாரும் இங்கேயே அடக்கம் செய்யலாம் என்கின்றனர். இறந்தவரின் குடும்பத்தினர் கிறிஸ்துவ முறைப்படி திருவாரூரில் அடக்கம் செய்ய வேண்டும் என்றனர். மறுநாள் ஒருவழியாக பிரேதப் பரிசோதனை முடித்து உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி அனுப்பி வைத்தேன். இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினேன். இருதரப்பினரும் தங்களுக்குள் நிலவிய பகமை உணர்வை மறந்து அந்த அமரர் ஊர்தியிலேயே திருவாரூர் பயணமாயினர்.

நான் கடமையை செய்யும் அரசு ஊழியர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாதவன். ஆனால், பிணவரையில் நாறிப் போய் அழுகிய பிணங்களைத் தூய்மைச் செய்து, சதைகளை அறுத்து, வயிற்றைப் பிளந்து, மண்டை ஓட்டை உடைத்து, பிரேதப் பரிசோதனை செய்ய தடய அறிவியல் மருத்துவர்களுக்கு உதவிச் செய்யும் ஊழியர்களுக்கு எதாவது பணம் கொடுத்துவிட்டு வருவேன். அவர்கள் மது அருந்தாமல் இத்தொழிலில் ஈடுபட முடியாது. அவர்களது நிலைமைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதால், அவர்களுக்குப் பணம் கொடுக்காமல் வரமாட்டேன். பலர் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்ததும் உண்டு. அன்றைக்கும் இறந்தவரின் உறவினர்களிடம் சொல்லி பணம் வாங்கிக் கொடுத்துவிட்டுதான் வந்தேன். ஊருக்குக் கிளம்பும் முன் இறந்தவரின் தாயார் என்னிடம் தனியாக வந்து ரகசியமாக ‘தங்களுக்குப்  பணம் தருகிறேன், பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார். நான் அப்போதிருந்த மனநிலையில் பதில் ஏதும் கூறாமல் செய்கையிலேயே வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்தேன். நான் என் நேர்மையைப் பறைசாற்றும் நேரம் அதுவல்ல என்பதால் அமைதியாக இருந்தேன்.

கதவை உடைத்துப் பிணத்தை இறக்கிய கனம்முதல் பிரேதப் பரிசோதனை முடித்து உடல் வண்டியில் ஏற்றும் வரையில் அனைத்தையும் ஒருவிதப் பதற்றத்துடன் கவனித்துக் கொண்டிருந்த அப்பெண்ணின் தந்தையார் ஊருக்குக் கிளம்பும் போது ‘நீங்கள் யார் என்று தெரிகிறது. நடந்தது நடந்துப் போச்சு, உங்க உதவியை மறக்கமாட்டேன்’ என்று கண் கலங்கக் கூறினார். அவர் சூனியம் வைக்க விட்ட சாபம் அத்தருணத்தில் நினைவில் நிழலாடியது. அன்று தூற்றிய வாய் இன்று நன்றி சொல்கிறது என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்துப் புறப்பட்டேன். மனித மனம் பற்றிய புரிதல் அறிய கால இடைவேளி தேவைப்படுவதை உணர்ந்தேன்.

காவல்துறையினரும், நாங்களும் தேடிய தற்கொலைக் குறிப்பு எதுவும் அங்குக் கிடைக்கவில்லை. தற்கொலையின் காரணம் முழுமையாக அறிய முடியவில்லை. தன் காதல் மனைவி சண்டைப் போட்டுக் கொண்டு ஊருக்குச் சென்றதுதான் காரணம் எனச் சொன்னார்கள். தற்கொலை செய்துக் கொள்பவர்களின் மனநிலைப் பற்றி நிறைய கற்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு வழக்கு என்ற  அனுகும் மனநிலையும், சக மனிதனின் மரணம் என்ற அவல மனநிலையும் மாறி மாறி உணர்த்தும் நிலை யாருக்கும் வரக் கூடாதது. என்ன செய்வது, நான் தேர்வுச் செய்துக் கொண்ட வாழ்க்கை இதுபோன்ற துயரத்தைச் சுமந்தே வாழப் பழக்கப்படுத்திவிட்டது.

Sunday, April 06, 2014

கச்சத்தீவுப் பயணம் (1): கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோயில் உருவாக்கம்!


சென்ற மார்ச் முதல் வாரத்தில் சென்னையிலிருந்து நண்பர் தேவநேயன் கைப்பேசிக்கு அழைத்தார். ‘நாம் இருவரும் ஒன்றாக வெளியூர் சென்று வெகு நாட்களாகிறது. கச்சத்தீவுக்குச் செல்வோமா? பேராசிரியர் (எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர்) அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். உங்களின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அட்ரஸ் புரூப் மற்றும் போட்டோ ஐ.டி. நகல்கள் அனுப்பி வையுங்கள். நான் விண்ணப்பத்தை மின்னஞ்சலில் அனுப்புகிறேன். அதைப் பூர்த்தி செய்து அனுப்பி வையுங்கள்’ என்று கூறினார். அதன்படியே அனுப்பியும் வைத்தார். நானும் அவர் சொன்னபடி விண்ணப்பத்தையும், ஆவணங்களையும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு கூரியரில் அனுப்பி வைத்தேன். கச்சத்தீவுக்கு முதல் முறையாக செல்வது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

நமக்குச் சொந்தமான கச்சத்தீவு மீட்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை தமிழ்நாட்டில் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. 1974ல் மத்தியில் இந்திரா காந்தி, தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியின் போது, இந்திய அரசுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு முழுவதுமாக தாரை வார்க்கப்பட்டது. இதைக் கண்டித்தும், கச்சத்தீவை மீட்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றும் ஈழப் பிரச்சனைக் குறித்த கூட்டங்களிலும், போராட்டங்களிலும் நான் எழுச்ச்சியுடன் முழங்கியது நினைவுக்கு வந்தது.    

இலங்கையில் சிங்கள அரசு இனவெறியோடு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அக்காலத்தில், அதாவது 1983ம் ஆண்டு முதல் கச்சத்தீவுக்கு மக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. 1983 வரையில், அங்குள்ள புனித அந்தோணியார் கோயிலுக்குத் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை மார்ச் மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்குச் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர் 2001 முதல் ஆண்டிற்கு இருநாட்கள் மட்டுமே திருவிழா நடைபெற்றது. இனப் பிரச்சனை உக்கிரத்தில் இருந்த 1984 முதல் 2001 வரையில் இலங்கை அரசாங்கம் கச்சத்தீவுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. 2002ல் சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்ற போது 2002, 2003, 2004 ஆகிய மூன்று ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று மீண்டும் அந்தோணியார் கோயில் திருவிழாவை நடத்தினர். அதாவது இந்த மூன்று ஆண்டுகளும் இலங்கை அரசு தமிழக மக்கள் உட்பட யாரையும் தீவுக்குள் அனுமதிக்கவில்லை. இதன் மூலம் தமிழக மக்கள் கச்சத்தீவுக்குச் சென்று வழிபடும் உரிமையை சிங்கள அரசு தொடர்ந்து மறுத்தது சிங்கள அரசின் இத்தடையை மீறி இராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் கச்சத்தீவுச் சென்று திருவிழாவை நடத்தினர். இதன் மூலம் தங்களின் உரிமையை நிலைநாட்டியுள்ளனர். இந்த உரிமையைப் பெற்றுத் தந்ததன் பின்னணியில் அப்போதைய பாம்பன் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகள் இருந்துள்ளார் என்பது போராட்ட வரலாறு. அவரின் முயற்சியாலும், ஊக்கத்தாலும்தான் இராமேஸ்வரம் பகுதி மீனவ மக்கள் தடையை மீறி கச்சத்தீவுச் சென்றனர். இப்போராட்ட வரலாறு குறித்துப் பின்னர் விரிவாக எழுதுகிறேன். 2003க்குப் பின்னர் கச்சத்தீவில் திருவிழாவும் நடைபெறவில்லை. அங்கு எவரையும் சிங்கள அரசு அனுமதிக்கவுமில்லை. 

இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்று 2009க்குப் பின் அங்கு நிலைமை சீரானப் பிறகு 2010 முதல் மீண்டும் தொடங்கி கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா நடைபெற்று வருகிறது. இருநாட்டு மக்களும் இயல்பாக பெரும் கெடுபிடிகளின்றி ஆண்டுதோறும் அங்குச் சென்று புனித அந்தோணியாரை வழிபட்டு வருகின்றனர். அனுமதியின்றி கச்சத்தீவு சென்று திருவிழா நடத்திய பிற்பாடு, இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களும், பொதுமக்களும் ஆண்டுதோறும் கச்சத்தீவுக்குச் சென்று வருவதை ஒழுங்குப்படுத்தியது. கச்சத்தீவு செல்வோர் முறைப்படி இராமநாதபுரம் மாவட்டம், வேர்கோடு பங்குத்தந்தை மூலம் தமிழக அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசுப் பயணிகளின் பின்னணிப் பற்றிக் காவல்துறை, மத்திய/மாநில உளவுத்துறை மூலம் ஆய்வுச் செய்து பின்னர் முறைப்படி அனுமதி அளிக்கும். இன்றுவரையில் இம்முறைக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.     

ஓரிரு நாட்கள் கழித்து தேவநேயன் மீண்டும் பேசினார். ‘கச்சத்தீவுக்குச் செல்ல நமக்கு சிறப்பு அனுமதிக் கிடைத்துவிட்டது. நான், நீங்கள், என் அண்ணன் தாமஸ் ஆகியோர் செல்கிறோம். வரும் மார்ச் 15 அன்று  இராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து காலையில் படகு மூலம் செல்கிறோம், மாலையில் அந்தோணியார் திருவிழா தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கோயிலில் கொடியேற்றம். பிறகு சிலுவைப் பாதை ஊர்வலம். இரவு அங்குத் தங்குகிறோம். 16 அன்று காலையில் திருப்பலிப் பூசை, வழிபாடு முடிந்த பின்னர் அங்கிருந்துப் புறப்படுகிறோம். நாம் 13 அன்று இரவுப் புறப்பட்டு 14 காலையில் இராமேஸ்வரம் சென்றடைகிறோம். அன்று பகலில் இராமேஸ்வரம் பகுதிகளைச் சுற்றிப் பார்ப்போம். இரவுத் தங்கிவிட்டு காலையில் கச்சத்தீவுப் புறப்படுகிறோம்’ என்று ஒரு ஆசிரியர் மாணவருக்குச் சொல்வது போல் சொன்னதோடு, பயணத்திற்குத் தேவையானவற்றை பட்டியலிட்டு எடுத்துக் கொள்ள சொன்னார். மேலும், எவை எல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் பட்டியலிட்டார். நானும் சரி என்று சொல்லிவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தேன். கச்சத்தீவுப் பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்தாலும், அங்கு ஏன், யாரால் அந்தோணியார் கோயில் கட்டப்பட்டது. அத்திருவிழாவின் சிறப்புகள் என்ன என்பது குறித்த விவரங்களை அறிந்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலும் கூடியது. அதுகுறித்த தேடுதலும் தொடங்கியது.  

கச்சத்தீவு இராமேஸ்வரம் தீவுலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையிலுள்ள நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைத்துள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம், இலங்கை நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து 45 நிமிடங்கள் பயணம் செய்தால் கச்சத்தீவை சென்றடையலாம். சுமார் இரண்டரை சதுர கி.மீ. சுற்றளவுக் கொண்ட மணற் திட்டாக (Sand Dune) உள்ள அழகிய தீவிது. இருநாட்டு மீனவர்களும் கடலில் இயற்கைச் சீற்றத்தினாலோ அல்லது கடற் கொள்ளையர்களாலோ ஆபத்து ஏற்பட்டால், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இறைவனிடம் வேண்டுவது வழக்கம். மேலும், கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது பெருமளவில் மீன்கள் படுதலுக்காகவும் வேண்டுதல் செய்வது வழக்கம். கடலில் ஆபத்து நேர்வதிலிருந்து தங்களை இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில், சென்ற நூற்றாண்டில் கச்சத்தீவில் ஒரு சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தைச் சீனிக்குப்பன் படையாட்சி என்பவர் நிறுவியுள்ளார். அதுகுறித்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்ப்போம்.

'1913இல் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுப் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பாலை தீவிலும் 1895இல் புனித அந்தோனியர் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் இக்கடற்பரப்பில் மீன் பிடித்தலுக்காகச் சென்ற கரையோர மீனவர்கள் கடலில் அடிக்கடி தாம் சந்திக்கும் ஆபத்துக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும், தொழில் முயற்சிகள் நல்லமுறையில் கைகூட வேண்டுமென்று கருதி “பாதுகாவலராக” புனித அந்தோனியார் சொரூபம் ஒன்றை வைத்து சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டியிருக்க வேண்டும் என சொல்லப்படுகின்றது. ‘இந்தக் கோவிலை நம்புதாளை என்ற சிற்றூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கட்டினார். அவர் சென்ற படகு புயலில் சிக்கியபோது அவர் அந்தோனியாரை வேண்டிக் கொண்டார். அதன் காரணமாக அவர் புயல் அபாயத்திலிருந்து தப்பியதாகவும் அதனால் அவர் அந்தக் கோயிலைக் கட்டினார்” (பி. நாராயணன் 1983) என்றும் கூறப்படுகின்றது. “இராமாயணபுரத்தின் 1972 வர்த்தமானப்படி இத்திருவிழாவின்போது இராமேஸ்வரத்துக்கு அண்மையிலுள்ள தங்கச்சி மடத்திலிருந்து ஒரு கத்தோலிக்கக் குருவானவர் கச்சதீவுக்குப் போய் அங்கு கிருவிருந்து நடத்துவார். இந்தத் தேவாலயம் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவரான சீனிக்குப்பன் படையாட்சியால் கட்டப்பட்டது (ஏ. சூசை ஆனந்தன் 1994)’ என்று ‘கச்சத்தீவு: அன்றும் இன்றும்’ என்ற நூலில் யாழ். பல்கலைக்கழகப் புவியியற்றுறை விரிவுரையாளர் ஏ. சூசை ஆனந்தன் கூறியுள்ளார். 

‘1939-ஆம் ஆண்டில், இராமநாதபுர மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாழையைச் சார்ந்த மீனவர், சீனிக்குப்பன் என்பவர் கச்சத்தீவில் அந்தோணியார் கோவிலை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து இராமேசுவரம் ஓலைகுடா மீனவக் கிராமத்தைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை எனும் மீனவர் அக்கோவிலுக்கு ஓடுகள் வேய்ந்தார் (2:1:1951). புனித அந்தோணியார், ஏசுவின் சீடர்களில் ஒருவர். இவரே, கச்சத்தீவின் காப்புக் கடவுள்; பரவர் குல பாதுகாவலர் எனக் கொண்டனர், வணங்கி வந்தனர். 1972இல் இந்திய அரசு வெளியிட்ட அரசிதழ் ஆணையின்படி, இராமநாதபுரம் அருகிலுள்ள தங்கச்சி மடத்திலுள்ள கத்தோலிக்கப் பாதிரியார் பொடேல் (பிரஞ்சுக்காரர்) அந்தோணியார் திருவிழாக் காலங்களில் கச்சத்தீவுக்குச் செல்வார். வழிபாடு நடத்துவார். அன்று கச்சத்தீவில் அந்தோணியார் விழாவும், பண்ட மாற்று வணிகமும் அரசியல் தலையீடு இல்லாமல் நடந்தது. கோவில் கண்காணிப்பு யாழ்ப்பாண கிறித்தவத் திருச்சபையிடமே இருந்தது’ என்று ‘வரலாற்றில் கச்சத்தீவு’ என்ற நூலில் உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன் கூறியுள்ளார். இதுதான் கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோயில் கட்டப்பட்ட வரலாற்று சுருக்கம்.

கச்சத்தீவுக்குப் பயணத்திற்காக இராமேஸ்வரம் செல்லும் நாளும் வந்தது. மார்ச் 13 அன்று இரவு 11.45 மணிக்கு சரியான நேரத்திற்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்குப் பாண்டியன் விரைவு வண்டி வந்தது. நான் ஏற வேண்டிய பெட்டியின் கதவருகே நின்றுக் கொண்டு என்னை வரவேற்றார் தேவநேயன். அவர் கொண்டு வந்தப் புட்டியிலிருந்த சிறிதளவு தண்ணீரை குடித்து விட்டு எனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் படுத்துக் கொண்டேன். ரயில் தனக்கேயுரிய ‘தடக் தடக் தடக்’ சத்தத்துடன் வேகமாக ஓடியது. என் சிந்தனையும் அதனுடனேயே ஓடிக் கொண்டிருந்தது.   

பயணம் தொடரும்...