Monday, March 05, 2007

இலங்கை மீது பொருளாதாரத் தடை: தமிழ் எம்.பி. வலியுறுத்தல்


இலங்கை அரசு மீது இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பொதுச்செயலருமான மாவை.எஸ்.சேனாதிராசா வலியுறுத்தினார்.

புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் 4-3-2007 ஞாயிறன்று சந்தித்த இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சேனாதிராசா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

அண்மையில் பொறுப்பேற்ற ராஜபக்சே அரசு இலங்கையில் இராணுவ அடிப்படையில் தீர்வு காண நினைக்கிறது. தமிழ் மக்களுக்கு எதிராகவே அவர்களது நடவடிக்கைகள் உள்ளன.
அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒன்றரை லட்சம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக இருக்கின்றனர்.

2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கேவுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ராஜபக்சே அரசு மீறிவிட்டது. இதனால், தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் இடத்திலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் தங்கள் பகுதிக்கு மீண்டும் திரும்புவது குறித்து இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் இடத்தில் குடியேறலாம். ஆனால், இராணுவத்தின் நிபந்தனைகளுக்கு உள்பட வேண்டும் என்பது போல் தீர்ப்பு வந்துள்ளது. இதனை நாங்கள் ஏற்க தயாராக இல்லை.

யாழ்ப்பாணத்தின் கிழக்கு மாகாணத்திற்குச் செல்லும் ஏ-9 பாதையை இலங்கை அரசு மூடியுள்ளது. இதனால், பொது மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடல் வழியாக சில பொருள்கள் வருகின்றன. ஆனால், அவற்றை வாங்கும் சக்தியற்ற நிலையில் வறுமைக் கோட்டுக்குகீழ் தமிழ் மக்கள் உள்ளனர். இதனால், குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து சரி வர கிடைக்காத நிலை உள்ளது. 1500 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை.

தென் இலங்கைப் பகுதிகளிலும் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் கடத்தப்படுகின்றனர். அவர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. பணம் கொடுக்காதவர்கள் கொல்லப் படுகின்றனர். இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்குப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ரவீந்திரநாத் காணாமல் போயுள்ளார். அவரது நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்திய இலங்கை ஒப்பந்தப்படி வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். இங்கு ஒரு அரசு மற்றும் அமைச்சரவை நிறுவப்பட வேண்டும். ஆனால், ஒப்பந்தத்திற்கு மாறாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இலங்கை அரசுப் பிரித்துள்ளது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால், இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்தியாவும், சர்வதேச நாடுகளும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமையை இலங்கையில் நிலைநாட்ட இந்திய அரசு உதவ வேண்டும். இது தொடர்பாக புதுவை மற்றும் தமிழக அரசுகள் எங்கள் கருத்தை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றார் சேனாதிராசா.

No comments: