Friday, March 09, 2007

துறைமுகத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: பழ.நெடுமாறன்

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இத் திட்டம் நிறைவேற்றப்படும் பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு அவர் 08-03-2007 அன்று சென்னையில் வெளியிட்ட அறிக்கை:

ரூ.2700 கோடி மதிப்பிலான புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டம் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் வளர்ச்சி பெறுவதைக் காட்டிலும் பேரழிவைச் சந்திக்கும் நிலை உள்ளது.

மேலும் இத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் ஆதாயத்துக்காக புதுச்சேரி மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இத் திட்டத்தின் காரணமாக தேங்காய்த்திட்டு என்ற கிராமம் முற்றிலும் அழியும். அங்கு பரம்பரையாக வாழ்ந்து வரும் சுமார் 3 ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை பாதிக்கும்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் விளைவாக மாதம் 30 முதல் 50 சரக்குக் கப்பல்கள் வரும் என்றும் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுவது வெற்று வாக்குறுதிகளே.

இதனால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாவார்கள். துறைமுகப் பகுதிக்குள் அவர்கள் நுழைவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். தேங்காய்த்திட்டு பகுதியில் வாழும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு புதியதாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுப்போம் என்று கூறுவது மோசடியாகும்.

இத் துறைமுக திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது என்று நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இத் திட்டத்தை நிறைவேற்ற முயலுவது மக்கள் விரோதப் போக்காகும். எனவே இதை உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும் சிறிய நிலப்பகுதியான புதுச்சேரியில் துணை நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம் சுமார் 1000 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. புதுச்சேரியைச் சுற்றியுள்ள எல்லா நிலத்தையும் இப்படி தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டால் புதுச்சேரி மக்கள் எங்கு போவார்கள்? தனியார் நலன்களுக்காக பொதுமக்களின் நலன்களைப் பாதிக்கும் இத் திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட வேண்டும் என்று கூறியுள்ளார் பழ.நெடுமாறன்.

No comments: