Thursday, March 29, 2007

துறைமுகத்தை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டம்


புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை இனியும் அரசு கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று தேங்காய்திட்டு வீடு, மனை மற்றும் நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இது குறித்து குழுவின் அமைப்பாளர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் 27-03-2007 அன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் ஆழ்கடல் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடக் கோரி சட்டப்பேரவை முற்றுகை போராட்டம், ரேசன் அட்டை நகல் எரிப்புப் போராட்டம் ஆகியவை வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களோடு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இனியும் காலம் தாழத்தாமல் புதுச்சேரி அரசு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட்டு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

சில அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் இந்த திட்டத்தைக் கைவிட்டு விடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். அதனை ஏற்று பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே போராட்டத்துக்கு அணி திரட்டினோம். இனியும் துறைமுக விரிவாக்கத் திட்டம் கைவிடப்படாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி பிரமாண்ட போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றனர்.

No comments: