Monday, October 15, 2007

புதுச்சேரியில் கொலையை மூடிமறைத்த போலீசார்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

புதுச்சேரி, தேங்காய்த்திட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கை, மத்திய புலனாய்வுத் துறை - சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், 15-10-2007 அன்று, தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி., முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம்-ஒழுங்கு), காவல் கண்காணிப்பாளர் (தெற்கு) ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு பால்நிலைய வீதியைச் சேர்ந்த பாலா (எ) தெய்வசிகாமணி, வயது: 29, த/பெ. கண்ணன் என்ற இளைஞர் கடந்த 26-09-2007 அன்று தேங்காய்த்திட்டில், கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். பின்னர் கொலையாளிகள் அவரது பிணத்தை தேங்காய்த்திட்டு அருகேயுள்ள ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனிடையே, கடந்த 30-09-2007 அன்று அவரது பிணம் தேங்காய்த்திட்டு ஆற்றோரம் கரை ஒதுங்கியுள்ளது. அப்போது கொலை செய்யப்பட்டவரின் வயிற்று பகுதியில் குடல் வெளியே சரிந்து கிடந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன. குறிப்பாக முகத்தில் கத்தியால் குத்தியதால் ஏராளமான காயங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக முதல் தகவல் அறிக்கைப் (குற்ற எண்.308/07. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174.)பதிவு செய்தனர். அதாவது, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174-இன்படி சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், பிரேதத்தை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பின்னர், அனாதை பிணம் என்று கூறி பிரேதத்தை சந்நியாசித் தோப்புச் சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.

இதனிடையே, மேற்சொன்ன பாலா (எ) தெய்வசிகாமணியைக் கொலை செய்த கொலையாளிகளாக கருதப்படும் தேங்காய்த்திடைச் சேர்ந்த (1) ஜான்பால் த/பெ. அருளானந்து, (2) முருகேசன், த/பெ. மாரிமுத்து, (3) சுரேஷ் த/பெ. எட்டியான் ஆகியோர் கடந்த 10-10-2007 அன்று, ஒரு வழக்கறிஞர் மூலம் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைய முயற்சி செய்துள்ளனர்.

அப்போதுதான், முதலியார்பேட்டை போலீசாருக்கு கொலைக் குற்றவாளிகள் உண்மையை வெளியே சொன்னது தெரிய வந்துள்ளது. இனிமேல் தாமதித்தால் தாங்கள் சட்டத்தின்பிடியில் மாட்டிக்கொள்வோம் என்று கருதிய முதலியார்பேட்டை போலீசார் உடனடியாக வழக்கை கடந்த 11-10-2007 அன்று அவசர அவசரமாக கொலை வழக்காக மாற்றியுள்ளனர். ஆனால், இவ்வளவு நடந்த பின்பும் போலீசார் கொலையாளிகள் யாரென்று தெரிந்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவில்லை. தலைமறைவாக இருந்த கொலையாளிகள் கடந்த 12-10-2007 அன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

சாதாரண மனிதன் ஒருவன் பார்த்தாலே கொலை என்று தெரியக் கூடிய ஒரு வழக்கை முதலியார்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என்று கூறி வழக்குப் போட்டுள்ளனர். முதலியார்பேட்டை போலீசார் குற்றவாளியைக் காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர். இது இந்திய தண்டனைச் சட்டப்படி கடும் குற்றமாகும்.

கொலை செய்யப்பட்டவர், கொலையாளிகள் என அனைவரும் தேங்காய்த்திட்டைச் சேர்ந்தவர்களகாக இருந்தும் போலீசார் சரியாக விசாரணை மேற்கொள்ளாமல், அனாதை பிணம் எனக் கூறி பிரேதத்தைப் புதைத்துள்ளானர். போலீசார் பிரேதத்தோடு சேர்த்து உண்மைகளையும் புதைத்துவிட்டனர்.

அனாதை பிணம் என்றாலும் அதனை அடக்கம் செய்வதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதனைக்கூட போலீசார் பின்பற்றவில்லை. குறைந்தபட்சம் பத்திரிகைளில் புகைப்படம்கூட வெளியிடவில்லை. இதனால், மகனை இழந்த குடும்பத்தினர் தங்கள் மகன் உயிரோடு இருப்பதாகவே எண்ணி இருந்துள்ளனர்.

போலீசார் அனாதை பிணம் என்று கூறியதால் அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் முறையாக பிரேத பரிசோதனை செய்திருக்க வாய்ப்பில்லை. மேலும், கொலைக்கான ஆதாரங்களை சரியாக பதிவு செய்திருக்கவும் வாய்ப்பில்லை. இதனால், சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளவார்கள்.

முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள தேங்காய்த்திட்டு நிலைமையே இதுவென்றால், இன்னும் தூரமாக இருக்கும் கிராமங்களில் என்ன நடந்தாலும் போலீசார் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. இது முதலியார்பேட்டை காவல் வட்டத்தில் சட்டமற்ற தன்மை (Lawlessness) நிலவுவதையே உணர்த்துகிறது.

கொலை போன்ற வழக்குகளை காவல் ஆய்வாளர்கள் தான் விசாரிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரையில் முதலியார்பேட்டை ஆய்வாளர் திரு.ரவிக்குமார் சம்பவ இடத்திற்கே செல்லவில்லை. இதன்மூலம் அவர்
சட்டப்படி செய்ய வேண்டிய தன் கடமையிலிருந்து தவறியுள்ளார். மேலும் தன் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் வழக்கை உரிய வகையில் விசாரிக்க தடை போட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், அண்மைக் காலமாக புதுச்சேரியில் கொலைகள் பெருகி வருவது பெரும் சர்ச்சையாகி வருகிறது. இதனால், தங்கள் எல்லைக்குள் கொலை நடந்தால் உயர் அதிகாரிகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதால், முதலியார்பேட்டை போலீசார் இக்கொலையை மூடிமறைத்துள்ளனர் என்பது கூடுதல் காரணம் என்று கருதுகிறோம்.

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் இக்கோரிக்கைளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகிறோம்.


(அ) மேற்சொன்ன பாலா (எ) தெய்வசிகாமணி கொலை வழக்கை உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.

(ஆ) புதைக்கப்பட்ட பிணத்தைத் தோண்டி எடுத்து ஜிப்மர் மருத்துவர்கள் குழு மூலம் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

(இ) கொலையை முறையாக விசாரிக்காமல் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, கொலையை மூடிமறைத்து, கொலையாளிகளைக் காப்பாற்ற முயற்சி செய்த முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ரவிக்குமார் மற்றும் போலீசார் மீது உரிய வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அனைவரையும் காலதாமதமின்றி உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

(ஈ) தங்கள் மகன் கொலை செய்யப்பட்ட தகவல்கூட தெரியாமல், இறுதி சடங்குகள்கூட செய்ய முடியாமல், அனாதையாக புதைக்கப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

(உ) முதலியார்பேட்டை போலீசார் வழக்கு ஆவணங்களை அழிக்கவும், திருத்தவும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இந்த வழக்கு ஆவணங்களை ஐ.ஜி. அவர்கள் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பாதுகாக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

Anonymous said...

இந்த பொலிஸ்காரர்களுக்கு தூக்கு தண்டனை தரணும். அதுக்கும் உங்கள போல "போராளிகள்"தான் மரண தண்டனை வேண்டாமுன்னு சத்தம் போடுவீங்க.

இதெல்லாம் அநியாயம்...

மாசிலா said...

மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. இதை தட்டிக் கேட்கவேண்டியது குடும்பத்தாருடைய அடிப்படை உரிமை.

பாரபட்சமின்றி மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அதிலும் முக்கியமாக எளியவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய காவல்துறையினரே இது போல் நடந்துகொள்வது அவர்கள் செய்யும் தொழிலுக்கே இழுக்கு. பேசாமல் இதுக்கு பதில் வேறு ஏதாவது தொழில் செய்யலாம். நேர்மை, திறமை, தைரியம் உள்ளவர்களுக்கு அந்த இடங்களை விட்டுக்கொடுக்கலாம். மக்களுக்கு இதனால், நன்மைகள் கிடைக்கும்.

அரசியல் சிபாரிசுடன் பதவிக்கு வரும் யாரும் சிபாரிசு செய்தவரின் கொத்தடிமையாகத்தான் இருப்பார்.

புதுவையில் இரவுடிகள் பிரச்சினை காலம்காலமாக இருந்துகொண்டுதான் வருகின்றன. எந்த ஆட்சி வந்தால், யார் போனால் என்ன? எப்போதும் மக்களுக்கு அதே பிரச்சினைகள்தான்.

முதலில் இதுபோன்ற இரவுடிகள் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.