Tuesday, January 15, 2008

புகழ் பெற்ற ஓவியர் கே.எம். ஆதிமூலம் காலமானார்.


தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் கே.எம்.ஆதிமூலம் (வயது:70), 15-01-2008 செவ்வாய் இரவு 7.00 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு 16-01-2008 அன்று மாலை 4.00 மணியளவில் பெசண்ட் நகர் சுடுகாட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1938-ஆம் ஆண்டு திருச்சி, துறையூர் அருகேயுள்ள கீராம்பூர் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் பருவம் முதற் கொண்டே ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். இவர் பாடத்தை விட படத்திலேயே அதிக கவனம் செலுத்தினார்.

1959-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த உடனேயே சிற்பி தனபால் தொடர்பு ஏற்பட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் சேர்ந்தார். 1961-66 வரை அக்கல்லூரியில் பயின்று 'டிப்ளமா' பெற்றார்.

சென்னையில் இருந்த காலகட்டத்தில் தான் ஓவியர் ஆதிமூலத்திற்கு தமிழின் நவீன இலக்கியவாதிகள் பலரோடு தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுபத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றில் அவரது ஓவியங்கள் இடம்பெற்றன.

1966-இல் காந்தியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தியாரின் பல்வேறு பரிமாணங்களைக் வெளிப்படுத்தும் வகையில் 100 ஓவியங்களை வரைந்தார். அவர் அன்றைக்கு வரைந்த காந்தியாரின் ஓவியங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. அதன்பின்னர், தமிழ்ச் சூழலில் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஓவியங்கள் வலம் வந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

லலித் கலா அகடாமியின் தேசிய விருது, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய மாநிலங்களின் ஓவிய சங்கங்களின் உயர் விருதுகள் உள்ளிட்டு ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஓவியத் துறை சார்ந்த பல்வேறு பதவிகள் வகித்தவர்.

இவரது ஓவியங்கள் பல உலகப் புகழ் பெற்றவை. இவர் துருக்கி, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியக் கலையைப் பரப்பியவர்.

இவரது ஓவியங்கள் தேசிய ஓவியக் கூடம், சென்னை அருங்காட்சியம் உட்பட பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவர் ஏராளமான ஓவிய முகாம்கள், பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு தன் ஆற்றலை வெளி உலகிற்குக் காட்டியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் வெகுமக்கள் இதழ்களான 'ஜீனியர் விகடன்,''ஆனந்த விகடன்' போன்ற இதழ்களிலும் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இது போன்ற இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளிவந்தது இவரை மேலும் பிரபலப்படுத்தியது.

வண்ண ஓவியங்களிலும், வரைகலையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஓவியர் ஆதிமூலம். 'நான் துரத்தும் நிலம்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது தைல வண்ண ஓவியங்கள் வண்ணத்திற்கு வண்ணம் தீட்டுயவை. அவரது கோட்டு ஓவியங்கள் மிகப் பரபலமானவை.

'நான் நேரிடையான எனது படைப்புச் சக்தியை மட்டுமே சார்ந்திருக்கிறேன். இந்த அழகின் காட்சிப்படுத்துதலை அடிப்படையாக வைத்துதான் நான் பிறரது படைப்புகளைப் புரிந்துக் கொள்ளவும், எனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன்' என்று அவர் படைப்பாக்கம் பற்றி கூறியது அவரது அறிவடக்கத்தைக் காட்டுகிறது.

புள்ளிகளில் தொடங்கி கோடுகளில் உருவம் பெற்ற ஓவியர் ஆதிமூலத்தின் படைப்புலகம் கவனம் பெற்றவை. அவரின் கோட்டோவியங்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாதது.

இதுபற்றி, 'அந்திமழை' இணைய இதழில் வெளிவந்த அவரது நேர்காணலில், "A Line immediately breaks the space’ ஒரு வெள்ளைப் பேப்பர்ல ஒரு dot வைச்சா அது ‘A planet in the space’ன்ற மாதிரியாயிடுதுல்ல. அந்தக் கோட்டை Horizontal ஆ left to right நீட்டினா தானாகவே மேலேயிருக்கிறது ‘Space’ கீழேயிருக்கிறது ‘land’ னு ஆயிடுது. ஒரு பேப்பர்ல புள்ளி வைச்சவுடனேயே அதோட flat surface போயிடுது. ஆதி மனிதன் அவனை கோடுகளில்தான் வெளிப்படுத்தினான். குகை ஓவியங்கள். அவன் வரைந்த விலங்குகள் வேட்டைக் கருவிகள் எல்லாமே கோடுகள்தான். கோடு, கோடுகளுக்கப்புறம்தான் எழுத்து, மொழி, இலக்கியம் எல்லாம். ஓவிய வெளிப்பாடுதான் மனித நாகரிகத்தின் முதல்படி, எறும்புகள் எப்படி வரிசையா போகுதோ அது மாதிரிதான் புள்ளிகளெல்லாம் ஒன்றாகி கோடாகுது. பல வருஷங்களா communicate பண்ணுது" என்று கூறியுள்ளது புள்ளியும், கோடும் அவரை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஓவியர் ஆதிமூலம் அவர்களின் இழப்பு என்பது ஓவிய சமூகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் வெகுமக்களுக்கும் தான்.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

17 comments:

இளங்கோ-டிசே said...

வருத்தம் தரும் செய்தி.

-/பெயரிலி. said...

வெற்றிடமாக்கிய இழப்பான செய்தி.

வவ்வால் said...

ஆதீமூலம்,
அவர்களது படங்களை , ஆவி, ஜூவி வழியாகத்தான் முதலில்ப்பார்த்தேன், அந்த அளவுக்கு தான் எனது ஓவிய அறிவு!(சா.கந்தசாமி, கிரா,படைப்புகளுக்கு படம் போட்டார் என நினைக்கிறேன் )

அவர் பேட்டிகளைப்படிக்கும் போது அவரது ஓவிய அனுபவங்கள் வெளிப்பட்டது. அவரது மறைவு தமிழக கலையுலகிற்கு மிகப்பெரும் இழப்பே! எனது ஆழ்ந்த வருத்தங்கள்!

குலவுசனப்பிரியன் said...

//அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

அவருடைய ஓவியங்கள் மூலம் என்றும் வாழ்வார். மிகுந்த வருத்ததுடன் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

அஞ்சலி.

தகவலுக்கு நன்றி.

துளசி கோபால் said...

அடடா................(-:

அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.

கானா பிரபா said...

அதிர்ச்சி தரும் செய்தி, ஆழ்ந்த அனுதாபங்கள்

மு. சுந்தரமூர்த்தி said...

கே. எம். ஆதிமூலம் அவர்களின் மறைவு தமிழ் கலை, இலக்கியத்திற்கு பேரிழப்பு :-(

Unknown said...

ஓவியர் கே.எம்.ஆதிமூலம்

உடலால் மறைந்தாலும்
தனது ஒவியங்களால்
என்றும் நினைவு கொள்ளப்பட்டு
வாழ்ந்துகொண்டிருப்பார்..

அவருடைய இழப்புக்கு
அங்சலியும் அவர் குடும்பத்திற்கு
எனது ஆழ்நத இரங்கலையும்
தெரிவித்துக் கொள்கிறேன்..

தோழமையுடன்,
க.அருணபாரதி

ஜமாலன் said...

தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த ஓவியர்களில் ஒருவரான அவரது இழப்பு வருத்தமளிக்கும் ஒன்றுதான். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Anonymous said...

ஆதிமூலம் இழப்பு மிகுந்த வருத்ததை அளிக்கிறது.

அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்...

arulselvan said...

சொற்களாலான தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளில் காட்சிப் புலத்தின் நுணிக்கங்களைச் சென்று சேர்த்தவர். இன்று வரை தமிழில் 'கனமான ' எழுத்துகளுக்குப் போடப்படும் படங்களும், புத்தக அட்டைகளும் , எழுத்து வடிவங்களும் அவர் பாணியிலேயே அமைந்துள்ளன. மிகவும் வருத்தமடையச் செய்த செய்தி.
அருள்

manjoorraja said...

அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தமிழ்நாட்டின் ஏன் இந்தியாவின் ஒரு மிக முக்கியமான ஓவியரை கலைஞரை நாம் இன்று இழந்துள்ளோம். சமீபகாலத்தில் உலக அளவில் பேசப்பட்ட பிரபலமான ஓவியரான இவரால் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை.

அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.


பதிவின் முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவு முத்தமிழ்க் குழுமத்தில் மீள்பதிவு செய்யப்படுகிறது.
http://groups.google.com/group/muththamiz

இலக்கியம் said...

ஓவியர் ஆதிமுலத்தின் இழப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஓவியங்கள் என்றும் நம்மிடையே வாழும்.

Anonymous said...

ஒரு கலைஞன் கையாகைலா ஓடறப்போ மரணிப்பது அவனுக்கு பெரிய பாக்கியம்யா.
கொடை. என்ன இழவுக்கு நீங்க சலிச்சுக்கிறீங்கன்னேன்? அதையே அவரும் நிச்சயம்
விரும்பியிருப்பார். அவருக்கு ஆனந்தம் என்றால்…….. எமக்கும் ஆனந்தம் ஆனந்தமே!

காருண்யன் கொன்பூசியஸ்

Anonymous said...

ஒரு கலைஞன் கையாகைலா ஓடறப்போ மரணிப்பது அவனுக்கு பெரிய பாக்கியம்யா.
கொடை. என்ன இழவுக்கு நீங்க சலிச்சுக்கிறீங்கன்னேன்? அதையே அவரும் நிச்சயம்
விரும்பியிருப்பார். அவருக்கு ஆனந்தம் என்றால்…….. எமக்கும் ஆனந்தம் ஆனந்தமே!

காருண்யன் கொன்பூசியஸ்

வெற்றி said...

அன்னாருக்கு என் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.