Thursday, August 16, 2007

"பன்மைத் தன்மைக் கொண்ட சமூகமாக மீண்டெழுகிறோம்" - ஈழக் கலைஞர் சி.ஜெய்சங்கர்

சந்திப்பு : இரா.முருகப்பன்


கூத்தினை எப்படி மீளுருவாக்கம் செய்திருக்கின்றீர்கள்? அதனை எப்படி புதிய சமூக உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப் போகிறீர்கள்?

காலங்காலமாக பாரம்பரியமாக எம்மிடையே இருந்து வந்த பண்பாட்டு அடையாளங்கள் இப்போது கவனிக்கப்படாமல் வெற்று முழக்கங்களாக, பேச்சுக்கு மட்டுமே என அதிகாரத் தளங்களில் நீர்த்துப்போக, மக்கள் தங்கள் வாழ்வியல் அம்சங்களை இயல்பாகவே கடைப்பிடித்து வந்தார்கள். ஏற்கனவே கூறியது போன்று ஒரு அடிமை மனோபாவத்தை கற்றுத்தருகிற கல்வியாலும், ஊடகங்களால் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுவதாலும் இன்றைய நெருக்கடியான சூழலைக் கடந்துப் போகத் தெரியாமல், கடக்க வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் சமூகத்தின் அதிகார நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலமையில் இருந்து எப்படி மீள்வது என்பது குறித்து உரையாடுவதற்கான மக்கள் களங்கள் எதுவும் இல்லை. இதற்கான தேடலின் ஒரு பகுதியாகவும், தொடர்ச்சியாகவும்தான் கூத்து மீளுருவாக்கச் செயல்பாடு நடக்கிறது. மக்கள் மய்யப்பட்ட அபிவிருத்திக்கான மாற்றுக் கல்விமுறையாகச் செயல்படுவதே கூத்து மீளுருவாக்கத்திற்கான அடிப்படையாகும். மக்கள் தங்களுக்குத் தேவையான, பயன்படுகின்ற புதிய கல்வி முறையை, புதிய விவசாய அபிவிருத்தியை, புதிய சமூகத்தை உருவாக்கத் தேவையான அனைத்தையும் கூத்தின் மூலமாக&கூத்தரங்கின் வாயிலாகப் பேசி, உரையாடி, தங்கள் தேவைகளை தாங்களே அறிந்து, நிவர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளை தீர்மானிப்பதுதான் சமூக அபிவிருத்தியாகும். இந்த வேலையைத்தான் 'மூன்றாவது கண்' முன் முயற்சி எடுத்து தற்போது ஆறு கிராமங்களில் செயல்படுத்தி வருகிறது.

உலக மயமாக்கலின் விளைவால் சமூகம் தாராளமயப்படுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக சமுதாயச் சிதைவு ஏற்படுகிறது. இதனை மீட்டெடுத்து ஒருங்கிணைந்த புதிய சமூகமாக மீள எழும்புவதற்கான சிந்தனைகளையும், அவற்றை நடைமுறைபடுத்துவதற்கான வழிமுறைகளையும் நாங்கள் தேடுவது அவசியமாகிறது. சமூகம் பல்வேறு பாரம்பரிய கலைகளால் அடையாளம் காணப்படுகிறது. அதில் சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால்ரீதியான பாகுபாடுகள் என்கிற கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே நாங்கள் இது சார்ந்து இவற்றை கேள்விக்குட்படுத்திக்கொண்டு, இந்தச் சமுதாயச் சிதைவிலிருந்து எங்களை மீட்டெடுத்து, ஒன்றிணைப்பைக்கொண்ட, பன்மைத் தன்மை கொண்ட, வித்தியாசங்களைக் கொண்டாடுகின்ற சமுதாயமாக மீளுருவாக்கம் பெற்று வளர்வது எங்களுடைய தேவையாக உள்ளது.

பாரம்பரியக் கூத்து மரபு என்பதை கொஞ்சம் விரிவாகக் கூற முடியுமா?

பாரம்பரிய அரங்கு மகிழ்வூட்டலுக்கும், அறிவூட்டலுக்கும் மக்கள் ஒன்றாய்க் கூடுவதற்கான களமாக அமைவதுடன், சடங்குடன் சார்ந்து பக்திக்குரியதாகவும் அமைகிறது. கூத்தின் நோக்கம் நாடும், வாழ்வும் சிறக்கவே ஆடப்படுகிறது என்பது தெரிகிறது. எமது மரபு ரீதியான அரங்க அழகியல் இந்து சமயத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அரங்க வளர்ச்சியில் சமயம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதுவும் இந்து சமயம் இந்த அரங்கில் மேலாண்மை செலுத்தி அதன் வடிவத்தை தீர்மானித்திருக்கின்றது. இறைவன் அருளால் துக்கங்கள் நீங்கி சுகம் கிடைக்கும் என்ற சடங்கு கோட்பாடு, தமிழர் சமய வாழ்வில் கலந்துள்ளது. இந்த சடங்குக் கோட்பாட்டின் பின்னணியில் உருவான நாடகங்களில் அவலமுடிவு ஏற்படாது. கழுத்தை வெட்டும் வேளையில் வாள் மாலையிடும். கடவுள் தரிசனம் கிடைக்கும். பக்திபூர்வமாக எல்லாம் நிறைவு பெறும்.

கூத்தின் நடுப்பகுதி சிக்கலில் ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து உச்ச நிலைக்கு வரும். இந்த இடத்தில் தர்க்கபூர்வமாக முடிக்க முடியவில்லையெனில், முனிவர் பாத்திரம் தோன்றி சிக்கலை விடுவிக்கும். நாரதரும் கூட இப்பணிக்குப் பயன்படுத்தப்படுவதுண்டு. மேலும் பறையன் வருதல், பறை அறைதல், திருமணம் நடத்தல், வாழிபாடல் என்பவைகளுடன் மங்கல முடிவு என்பதும் மரபாகும். கூத்து, அதை ஆடும் மக்களின் வாழ்வாகவும், வழிபாடாகவும், வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் காணப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது, கூத்து சமஸ்கிருதமயப்பட்டதாகவும்; கூத்து ஆடப்படுகின்ற சடங்கு விழாக்கள் ''சிறுதெய்வக்'' கோயில் சடங்குகளாக பத்தாசி முறையிலமைந்தவையாகவும் இருப்பதாகும். கூத்து தனிமனிதனையோ அல்லது அவனது சிக்கல்களையோ இல்லாமல் சமூகத்தையே பார்க்கிறது. கூத்தில் தர்மம் முக்கியமுடையதாக இருக்கிறது. தர்மத்தின் பக்கம் மற்றும் எதிர்பக்கம் என்றே பார்க்கப்படுகிறது.

மேலும் கூத்தில் வேடர், பறையர், வண்ணார், வண்ணாத்தி போன்ற பாத்திரங்கள் நகைச்சுவை மிக்கதாக கீழ்நிலையில் படைக்கப்பட்டிருக்கும். அண்ணாவியாருக்கும் பறையருக்குமான உரையாடல் நகை சுவைமிக்கதாகவும்; கூத்தாடும் காலத்திற்கேற்பவும் இருக்கும். இதுவொரு சமூக அங்கதமாகவே இருக்கும். அந்தக் கூத்துக்கும் மேற்படி உரையாடலுக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. அதன் நோக்கம் நேரடியாக எதிர்கொள்ள முடியாத பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதே ஆகும். இந்த வகையில் கூத்தரங்கு நேரடி சமூக விமரிசனத்துடனும் தொடர்புபடுகிறது. கூத்தில் அங்கதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதிய ஒடுக்குமுறையை பாரம்பரியம் என்ற பெயரிலோ, கூத்தரங்கின் பண்பு என்ற பெயரிலோ நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. பெண்களை மெலியராகவும் பாலியல் பண்டங்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் பண்பாடு என்ற பெயரில் பேணவும் முடியாது.

தர்மத்தை நிலைநிறுத்தும் அல்லது மீள நினைவூட்டும் சமூகச் சாதனமாக பாரம்பரிய அரங்கு நிகழ்கிறது என்ற கருத்தாக்கத்தை கண்மூடித்தனமாக ஏற்றுகொண்டுவிடவும் முடியாது. ஏனெனில் இதிகாசங்கள் தர்மத்தை நிலைநிறுத்துவதென்கின்ற கதையாடலின் ஊடாக அதிகாரத்தை நிலைநிறுத்தயிருப்பதையே அவதானிக்க முடிகிறது. சமகால பயங்கரவாதத்திற்கு எதிராக சனநாயகத்தை நிலைநிறுத்தும் சண்டைப் போல!

இந்த வகையில் சமூகத்தை வழிப்படுத்தும் சாதனமாக இயங்கிய கூத்து, சமூகத்தை விளங்கிக்கொள்ளும் சாதனமாகவும் காணப்படுகிறது. இது சமூகத்தையும், அரங்கையும் புதிது செய்வதன் தேவையை உணர்த்துகிறது. இதற்கு எமது எண்ணத்தை காலனித்துவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பது அவசியம். கூத்தின் புத்துருவாக்கம் என்பது உலமயமாதல் மற்றும் நவகாலனித்துவ சிந்தனைகளுக்கு எதிரான சுதேசியச் சிந்தனைப்போக்கின் முன்னெடுப்பே ஆகும். மரபுள் அடங்கிப்போதல் என்ற எமது மரபிலிருந்து எம்மை விடுவிப்பதே இதற்கு அவசியம். புதிய தேடலுக்கு இது எம்மை வழிபடுத்தும். இதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

அதை எவ்வாறு செய்துகொண்டிருக்கிறீர்கள்?


நாங்கள் ஒவ்வோரு கிராமமாக சென்று கூத்தாடும் அண்ணாவிமார்களுடனும், கூத்தர்களுடனும் அறிவையும், திறனையும் உரையாடுகிறோம். அவர்களுடனான உரையாடல்கள் மூலமாக பகிர்ந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் சிறிது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இன்று நம்பிக்கையுடன் நிறையபேர் ஈடுபாடு காட்டுகிறார்கள். கூத்து குறித்து தொடர்ந்து கூத்தர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம். இதுதான் இன்று எம்மக்களுக்கான உரையாடல் களமாக உள்ளது. மேலும் அகத்திருந்தும் புறத்திருந்தும் வரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இயங்கவேண்டியுள்ளது. மேலும் கூத்துகளில் சமகாலக் கதைகளைப் பாடி ஆடுவதை முன்பு குற்றமாகக் கருதினார்கள். ஆனால் இன்று பாரம்பரியக்கூத்துகளில் முடிதரித்து வாளேந்தும் கூத்தரே, ''வீரமைந்தன்'' கூத்தில் சீருடையணிந்து துப்பாக்கி ஏந்தி ஆடுகிறார்கள்.

தமிழரது பாரம்பரியக் கூத்தினுடைய இயக்கம் சமூகக் குழுமம் சார்ந்தது. எனவே கூத்தை ஆடும் சமூகக் குழுமத்தில் ஏற்படும் சிந்தனை மாற்றமே கூத்தினை புதிய பொருள் கொண்டதாய் மாற்றும். சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால், இடத்தின் பெயரால் நடத்தப்படுகிற பாரம்பரிய கூத்துகளை, இவை எல்லாவற்றையும் கடந்த முழுச் சமூகத்திற்கும் உரியதாய் இயங்க வைப்பது பற்றிய சிந்தனையும், செயல்பாடுமே இன்றைய தேவையாய் உள்ளது. பாரம்பரிய கூத்தரங்கினை புத்துருவாக்கம் செய்வது என்பது. அதனை தலைமுறை தலைமுறையாக ஆடிவரும் சமூகக் குழுமத்தின் சிந்தனை மாற்றம் அடையும் போதுதான் முழுமையானதாகும்.

பாரம்பரியச் சிந்தனைப் போக்குடன் போராடுவதும், புதிய நிலைகளைப் புரிந்து கொள்ள முனைவதுடன் உணரவைக்கவும் வேண்டும். நிகழ்கால அனுபவங்களை முழுமையாக வெளிபடுத்த வாய்ப்புள்ளதா என்பது பற்றியும், செயல்முறை அனுபவங்களுக்கு வருவதுமான ஒரு தொடர்ச்சியான நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது.

இதற்காக கூத்தை ஆடும் சமூகக் குழுமத்துடன் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்களுடன் இணைகிறோம். எங்கள் நோக்கங்களை அவர்களுக்கு புரியவைத்து, பகிர்ந்து கொள்ள முயல்கிறோம். அப்போது கிடைக்கிற எதிர்வினைகளை ஆராய்ந்து, இரு தரப்பும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பதுதான் படிநிலை வளர்ச்சி. இதுதான் பாரம்பரியக் கூத்துக் களங்களில் நிகழ்த்தப்பட்டு மெல்ல மெல்ல வெளிநோக்கிக் கொண்டுவருவதாக இருக்கும். இவை நவீன நாடகங்களுக்கும் புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.

இவை எங்களுக்கான கடந்த காலத்தில் வேர்கொண்டு, எதிர்காலத்தை நோக்காக வைத்து சமகால அனுவங்களுடன் தொடர்புகொண்டு சுதேசிய நவீனவாதத்தை விருத்தி செய்ய வழிவகுக்கும். இந்தச் செயல்பாடு அரங்குடன் மட்டும் தொடர்புடையதல்ல; சமகால உலகச் சூழ்நிலையின் பின்னணியில் முழுச் சமூகமும் சார்ந்ததாகும்.

சடங்குகள் தற்போது சமற்கிருதமயமாக, அதாவது ஆகமமயமாகி வருகிறது என்கிறீர்களே எப்படி?


கிழக்கு மாகாணத்தின் மட்டகளப்பு சூழலை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், பாரம்பரியக் கலையாக கூத்து விளங்குவதுபோல், சமுதாய மயப்பட்ட நம்பிக்கையுடன் கூடிய இன்னொரு விழாவாக சடங்குகள் காணப்படுகின்றன. சடங்குகளின் நோக்கம், அதன் சாராம்சம், இந்த உலகத்தில் மனிதர்கள், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வது என்பதாகத்தான் இருக்கிறது. அதே நேரம் இந்த சடங்குகள் சூழல் சார்ந்து எங்களுடைய சாப்பாட்டு பழக்க வழக்கங்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தளத்தில் ஒன்றிணைந்து ஆற்றுப்படுத்தல்களை, வழிபடுதல்களை ஏற்படுத்துகின்ற களங்களாகவும் இது இருந்து வருகின்றது. ஆனால் எங்களின் நவீன அறிவு, நவீன கல்வி முறையானது இந்த விடயங்களை நாகரிகமற்றதாக, காட்டுமிராண்டித்தனமாக அல்லது மூடநம்பிக்கையாக பார்க்கின்ற பார்வையன்று மிக வலிதாகவே காணப்படுகின்றது.

இந்தப் பாரம்பரிய சடங்குகளுடைய சாதகம், பாதகத்தினை நாங்கள் அதனூடாக புரிந்து கொள்வதற்கு மாறாக, நவீன அறிவு எங்களில் ஏற்படுத்தியிருக்கின்ற சிந்தனை மாற்றத்தின் விளைவாக, ஒரு மூட நம்பிக்கையின் தளமாக அல்லது காட்டுமிராண்டித்தனமாக அல்லது பிற்போக்குதனமானதாக, நாகரீகமற்றைவையாக பார்க்கின்ற ஒரு பார்வை காணப்படுகின்றது. இன்றைய உலகமயமாக்கல் ஆக்கிரமிப்பு பண்பாட்டுச் சூழலில் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிந்தனை ரீதியாக அவர்கள் மழுங்கடிக்கப்பட்டு, வெறும் நுகர்வுச் சக்தியாக ஆக்கப்படுகின்ற நிலைமையில், பலர் மூகச் சமூகமாய் தங்களுக்கிடையில் சந்தித்து உரையாடி செயற்படுகின்ற ஒரு சமூகமயப்பட்ட களங்களாக இருக்கிற பாரம்பரிய விழாவான சடங்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த உலகமயமாகல் ஆக்கிரமிப்பு பண்பாட்டு சூழலுக்கு எதிராக, இந்த சடங்குகளை எப்படி பிரயோகிக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதின் வெளிப்பாடாக இந்த சடங்குகளில் காணப்படுகின்ற உலக மையப்பட்ட சிந்தனை, அதாவது உலகத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்வாகவும் வாழ்தலை அது அடிப்படையான நோக்கமாக கொண்டிருக்கிறது. சூழல் சார்ந்த வாழ்க்கைமுறை, உணவு முறை அதனூடான வாழ்வியல் அம்சங்கள் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நாங்கள் மீளவும் ஒரு ஒருங்கிணைந்த சமுதாயமாக செயல்படுவதற்கான ஒரு சாத்தியப்பாடாக நாங்கள் சடங்குகளிலும் வேலை செய்கின்றோம்.

அதே நேரத்தில் கூத்தில் கூறியது போன்று சடங்குகள் சார்ந்தும் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால் ரீதியான பாகுபாடுகள் குறித்தும் மீளுருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பான உரையாடல் இன்று மட்டக்களப்புச் சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்றாவது கண்ணின் முக்கிய நோக்கமாகவும் அது அமைந்திருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் எதிர்கொள்கின்ற சாவால் என்னவென்றால் இந்தப் பாரம்பரிய சடங்கு கோயிலில் இப்போது ஆகம முறைகள் கொண்டுவரப்படுவதுதான். படித்தவர்களுடைய கருத்து நிலைமாற்றம், அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் இந்த் பாரம்பரிய முறைக்கும் ஆகம வழிபாட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்துகொள்ளாத நிலை, அவர்களிடம் செல்வாக்குச் செலுத்துகின்ற நவீன அறிவுசார்ந்த சிந்தனைப்போக்குகள் மிக வேகமாக ஆகம வழிபாட்டுக்குக் கொண்டுசெல்வதாக இருக்கிறது. இதில் அடிப்படையான விடயம் என்வென்றால் எல்லா மக்களும் நெருங்கி, ஒன்றாக இணைந்து செயற்பட்டு வந்த சடங்குமுறைகளில் இருந்து புறந்தள்ளப்படு, அன்னியப்படுத்தப்பட்டு வழிபட்டு செல்பவர்களாக மட்டுமே மாறியுள்ளதுதான்.

இதன் முக்கியமான இன்னொரு அம்சம் என்னவென்றால், மாரியம்மன் என்பது ராஜராஜேஸ்வரியாகவும், பெரியதம்பிரான் என்பது தக்கயாகேஸ்வரராகவும், வல்லியப்பர் வல்லிப்புர ஆழ்வாராகவும் மாற்றப்பட்டு, நேரிடையாக நாங்கள் சம்பந்தப்பட்ட சடங்குகளில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக, எங்களை நாங்களே தீண்டத்தகாதவர்களாக ஆக்கிக் கொள்கின்ற நிலைமை ஏற்படுவதையும் அவதானிக்கலாம்.

எனது சொந்த இடமான யாழ்பாணம் கோன்டாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான வல்லியப்பர் கோயில் வல்லிப்புர ஆழ்வாராக மாற்றப்பட்டபின், அங்கு வந்த குருக்களே அர்ச்சனை தட்டுகளை 'உயர்சாதி' ஆட்களுக்கு கொடுப்பவர்களாக இருக்கின்றனர். முன்பு, வள்ளியப்பராக இருந்தபோது பிறசாதியினர் போகாத கோயில், இப்போது வள்ளிப்புர ஆழ்வாராக ஆனபின்பு பிறசாதியினர் போவதும், அந்தக் கோயிலுக்கு பொறுப்புடையவர்கள் அர்ச்சனை தட்டை எடுத்து பிற சாதியினருக்கு கொடுக்காமல், அந்த பூசாரியே நேரிடையாக கொடுப்பது என்பது, நாங்களாகவே எங்களை ஒரு தீண்டாமைக்கு உட்படுத்திக்கொள்கிற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை என்பது சடங்கு கோயில்கள், ஆகம மரபுக் கோயிலாக மாறுகின்தால்தான் என்பதினை தெளிவாகக் காணலாம்.

கூத்து, சடங்கு, பறை என்கிற இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், ஒரு சமுதாய மயப்பட்டதாகவும், மக்கள் மயப்பட்டதாகவும் சமுதாய விழாவாகவும் இருந்து வருகின்றது. சடங்கின் இயக்கத்தின் அடிநாதமாக பறையினுடைய அடி நாதம் காணப்படுகின்றது. கூத்திலும் பறை என்பது குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருகின்றது. அதே நேரம் சாவு, சடங்கு, சமூகம், விழா சார்ந்த சமூகத்தின் பல்வேறு சமுதாய மையப்படுத்தப்பட்ட விழாக்களையும் ஊடுருவி கொண்டதாக இருக்கிறது. இன்றைய சமூகச் சூழலில் பல சாவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்த விடயங்கள் நிராகரிக்கப்படு, கைவிடப்பட்டு தவிர்க்கப்படவேண்டியவை என்று சொல்லப்படுகின்றது.

இந்த நேரத்தில், நாங்கள் சுயாதீனமான சமூகங்களாக வாழ்வதற்கானச் சாத்தியப்பாடுகளை ஆக்கிக்கொள்வது, சடங்கு வழிமுறைகளை ஒரு செயல்முறையாக அதற்கான சாதனமாக ஆக்கிக்கொள்வது என்ற வகையில், அதுவும் குறிப்பாக இன்றைய இலத்திரணவியல் ஊடகங்களின் ஆக்கிரமிக்குப்பின் காரணமாகவும், புதிய கல்வி முறைமையின் காரணமாகவும், உலமயமாக்கல் ஆக்கிரமிப்புப் பண்பாட்டு சூழல் காரணமாகவும் எங்கள் சமுதாயம் சிதைந்து வருகின்ற ஒரு சூழ்நிலையில், நாங்கள் சமத்துவமான சமூகங்களாக எங்களை மீளவும் உருவாக்கிக்கொள்ள ஒரு சமூக செயற்பாட்டுக் களமாக கூத்து சார்ந்து, சடங்கு சார்ந்து, பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் சார்ந்து செயற்பட்டு வருகிறோம்.

இன்றைய போர்சூழலை மக்கள் எப்படி எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்?

எங்கள் இருப்பும், எங்கள் வாழ்வும் எங்கள் கைகளில் இல்லை. வாழ்தல் என்பது விபத்து போன்றது. எந்த நேரத்திலும் எவரும் கொல்லப்படலாம், கடத்தப்படலாம், காணாமல் போகலாம், இதுதான் யதார்த்தாமாக உள்ளது. யாரால் என்பது பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரியாது. இனங்காணப்படாத குழுக்களால் இவை நடைபெறுகின்றன. காணாமல் போனது குறித்தும், கடத்தப்பட்டது குறித்தும், கொல்லப்பட்டது குறித்தும் ஏராளமான கதைகள், நியாயப்படுத்தல்கள் தொடர்ந்து நடக்கும். எந்த நேரத்திலும், எவருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். நான் வாழ்கிறேன் என்றால் அது விபத்து. அகதியாக அட்டை பதியவும்; நிவாரணம் வாங்கவும் விதிக்கப்பட்டு முகாம்களில் கையேந்தி வரிசையில் நிற்கும் சமூகமாக மாற்றப்பட்டுள்ளோம். பண வசதி படைத்தவர் குழந்தைகளுக்கு on the spot admission ஏனைய குழந்தைகளுக்கு on the spot kidnapping or killing.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி நகராமல் உள்ளதே. முடிவுதான் என்ன?


நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று பல நாடுகள் தலையிடுகின்றன. ஆனால் அந்த நாடுகள் எல்லாம் தங்கள் தேசத்து மக்களை, நாங்கள் எதிர்கொள்கிற பிரச்சனைக்களை விடவும் மிக மோசமாகத்தான் வைத்திருக்கின்றன. நடத்துகின்றன. எங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும், முடிவு செய்யவேண்டும். அதற்காக உரையாடல்களை கூட நாங்களேதான் முன்னெடுக்க வேண்டும். அரசியல் தீர்வு மட்டும் இல்லாமல், சமூக பொருளாதார ரீதியிலான தீர்வும் முக்கியம் என்பதை உணரவேண்டும். இதுகுறித்து சிந்தனை மாற்றம் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வேண்டும். அரசியல், வரலாற்று ரீதியாக மட்டுப்படுத்தி கொள்ளாது சமூக, பொருளாதார ரீதியாக சிந்தித்துச் செயற்படும் போதுதான் இலங்கைச் சூழலில் அரசியல் தீர்விற்கு போகமுடியும்.

-நிறைவு-


முந்தைய நேர்காணலின் பகுதி

நன்றி: தலித் முரசு, ஆகஸ்ட் 2007

Wednesday, August 15, 2007

தினமணியின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் காலமானார் : அஞ்சலி


அரை நூற்றாண்டு காலமாகப் பத்திரிகை துறையில் பணியாற்றிய "தினமணி"யின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் காலமாகிவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெற்குப்பை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர், மேலைச்சிவபுரியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கி, மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.ஏ. படித்தார். பி.ஏ. தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாகவே, தனது 22-ஆம் அகவையில் மதுரையில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய "தமிழ்நாடு" நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, மதுரையிலும் சென்னையிலும் நான்கு ஆண்டுகள் செய்தியாளராகப் பணிபுரிந்தார்.

பின்னர், 1960-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான "இந்தியன் நியூஸ் சர்வீசில்" இணைந்து ஓராண்டு பணியாற்றினார். 1961-இல் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில நாளிதழில் செய்தியாளராகப் பணியில் சேர்ந்தார்.

பின்னர், "தினமணி"யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றினார். தினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார். 2004-இல் தனது 69-ஆம் அகவையில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்றார்.

கல்லூரிக் காலம் தொடங்கிப் பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளராக வாழ்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளி வந்தார். தமிழ்ப் பற்றாளர். அவர் கொண்ட கொள்கைகள் அவ்வப்போது பத்திரிகையில் வெளிப்படுவதுண்டு. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலமை உடையவர்.

இராம.திரு.சம்பந்தம் பற்றி எனக்குப் பல்வேறு தகவல்களைக் கூறி அறிமுகப்படுத்தியவர் தற்போது பி.பி.சி. தமிழோசையின் பொறுப்பாளராக இருக்கும் மணிவண்ணன். இராம.திரு.சம்பந்தம் அவர்களுடனான என் நட்பு மிகவும் நெருக்கமானதோடு, பாசப் பிணைப்புக் கொண்டது.

2000-ஆவது ஆண்டு சந்தன வீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் இராஜ்குமார் மீட்கப்பட்டு, நாங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சில நாட்களில், சென்னையில் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் மகள் அமலாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் நான் கலந்துக் கொண்டேன். அப்போது "இந்தியன் எக்ஸ்பிரஸ்" தலைமைச் செய்தியாளராக இருந்த கோலப்பன் எங்களிடம் வந்து, என்னையும், பேராசிரியர் கல்யாணியையும் (தற்போது கல்விமணி) இராம.திரு.சம்பந்தம் சந்திக்க வேண்டும் என்றுகூறி, அண்ணா சாலையில், "எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ்" வளாகத்திலிருந்த "தினமணி" அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவ்ர் "தினமணி"யின் ஆசிரியர்.

அங்கு ஆசிரியருக்கானத் தனி அறையில் நானும் கல்யாணியும் அவரைச் சந்தித்தோம். நடிகர் இராஜ்குமார் மீட்பு தொடர்பானச் செய்திகளை அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார். அப்போது இரவு 8.30 மணியிருக்கும். "பொதுவாக இந்த நேரத்தில் யாரையும் சந்திக்கமாட்டேன், வேலை பளு அதிகமாக உள்ள நேரமிது, பக்கங்களை முடிக்க வேண்டும், இருந்தாலும் உங்களைச் சந்திக்கிறேன்" என்று கூறினார். அவர் சாப்பிட கொண்டு வந்த உணவை எங்களுக்குப் பகிர்ந்தளித்தார்.

அப்போது கல்யாணி, தான் எழுதிய கிராமப்புற இடஓதுக்கீடு பற்றிய கட்டுரையை "தினமணி"யில் வெளியிட முடியுமா? என்று கேட்டு, கட்டுரையை அவரிடம் கொடுத்தார். அதைப் பார்த்த அவர் "பெரியதாக இருக்கிறது, இப்போது கட்டுரைப் பக்கத்தை இரண்டு பகுதியாகப் பிரித்துவிடோம். சுறுக்க முடியமா? சுகுமாரன் இதை "எடிட்" செய்து தாருங்கள்" என்று கூறினார். அவரது அறைக்குள் அவரது மேசையிலேயே அக்கட்டுரையை "எடிட்" செய்துக் கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு, "சரியாக இருக்கிறது, வெளியிடுகிறேன்" என்றுகூறி இரண்டு நாள் கழித்து வெளியிட்டார்.

பத்திரிகைத் துறையில் "பெரிய ஜாம்பாவனாக" கருதப்படும் இராம.திரு.சம்பந்தம் என்மீது நம்பிக்கை வைத்து, எனக்கு அப்பணியை அளித்தது அப்போது எனக்குப் பெருமையாக இருந்தது.

அதன்பின்னர், பல சந்தர்ப்பங்களில் அவரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளேன். அடிக்கடி தொலைபேசியில் அழைத்துப் பல்வேறு தகவல்கள் கூறியுள்ளேன். பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்றபின், அவரோடு ஒன்றிரண்டு முறைதான் பேச முடிந்தது. நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தபோது அவரைச் சென்று பார்க்க முடியாமல் போய்விட்டது.

14-08-2007 அன்று காலை 10 மணியளவில், "தினமணி"யின் புதுச்சேரி செய்தியாளர், அவர் இறந்துவிட்ட செய்தியைக் கூறினார். அதிர்ச்சியாக இருந்தது. இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்று எண்ணி சென்னைக்குத் தொடர்புகொண்டேன். அவரது இரு கண்களையும் இராஜன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் அகற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். அவர் தன் இரு கண்களையும் தானம் செய்துள்ளார். மேலும், தன் உடலை இராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடையாக அளித்துள்ளார். இறந்த ஆறு மணி நேரத்திற்குள் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைத்துவிட வேண்டும் என்பதால் அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆகையால், அவரது உடலைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

தமிழகத்தின் பல தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது மனைவி கண்ணாத்தாள் அவர்களுக்கும், உறவினர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் கடைசி வரையிலும் பத்திரிகையாளராகவே இருந்தார் என்பதற்குச் சான்று அவரைப் பற்றிய குறிப்பை அவரே, தனக்குப் பிடித்த கறுப்பு மையால் நல்ல ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார்.

தமிழகத்தில் பல செய்தியாளர்களை உருவாக்கிய இராம.திரு.சம்பந்தம், இளைய சமுதாயத்திற்குச் சிறந்த முன்மாதிரி. அவரது கடுமையான உழைப்பு அனைவரும் பின்பற்ற வேண்டியது.

காலம் ஒரு தலை சிறந்த பத்திரிகையாளரைக் கொண்டு சென்றுவிட்டது.

வணிக அவையின் சொத்துகளை அரசே ஏற்று, தேர்தல் நடத்த புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்தல்


புதுச்சேரியில் உள்ள வணிக அவையின் சொத்துகளை அரசே ஏற்று தேர்தலை நடத்தி வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில வணிக சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 14-08-2007 அன்று புதுவை முதல்வர் ந.ரங்கசாமியிடம் நேரில் அளிக்கப்பட்ட மனுவின் விவரம்:

கடந்த 1966 ஜூலை 17-ஆம் நாளன்று வணிக அவைக்கான தேர்தல் அறிவிப்பை புதுச்சேரி ஆளுநர் வெளியிட்டார். மேயர் தலைமையில் தேர்தல் நடந்தது. இதுதான் வணிக அவையில் நடந்த கடைசி தேர்தல்.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிந்த பின்னரும் இதுவரை வணிக அவைக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. வணிக அவைக்குத் தேர்தல் நடத்துவது புதுச்சேரி அரசின் கடமை.

தேர்தலை நடத்தத் தவறியதால் வணிக அவையின் சொத்துகள் முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன. பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவை ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வணிக அவையின் சொத்துகள் இச்சங்கத்தின் சொத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த வணிக அவையை உண்மையான வியாபாரிகளின் அமைப்பாக மாற்றுவதற்கு வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப் பிரச்சி்னையில் தாங்கள் தலையிட்டு வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் வணிக அவையின் சொத்துகளை அரசே ஏற்று தேர்தலை நடத்தி வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

இம் மனு அளிக்கும்போது முதலியார்பேட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.இராஜசேகரன், செயலர் ஆர்.திருவேங்கடம், ஆலோசகர் இரா.அழகிரி, புதுவை மளிகை மொத்த வியாபாரிகள் சங்கச் செயலர் எஸ்.கே.தண்டபாணி, நுகர்பொருள் விநியோகிப்பாளர் சங்கச் செயலர் மொ.தேவகுமார், பெரிய மார்க்கெட் மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எ.சதாசிவம், செயலர் வி.இராமலிங்கம், வணிக அவை உறுப்பினர் ஏ.எஸ்.முகமது நிஜாம், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Wednesday, August 08, 2007

புதுச்சேரி வணிக அவையின் சொத்துக்களை மாற்றம் செய்யக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு


புதுச்சேரியில் பிரெஞ்சு டிகிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்களை உள்ளது உள்ளபடியே (Status Quo) வைத்திருக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் தாக்கல் செய்த மனுமீது தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி. ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 16-ஆம் நாளன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :

புதுச்சேரியிலுள்ள வணிக அவை கடந்த 1849-இல் உருவாக்கப்பட்டது. இதற்கு 1914 மார்ச் 7-இல் சட்டப்படியான அந்தஸ்து வழங்கப்பட்டது. மேலும், வணிகர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு கடந்த 1934 ஜுலை 6-இல் பிரெஞ்சு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு பிரெஞ்சு டிகிரி உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்பட்டு வந்தது.

மேற்சொன்ன பிரெஞ்சு டிகிரியில் வணிக அவைக்கு யார் யார் உறுப்பினராகலாம். தேர்தல் நடத்துவது, தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்வது, பிரச்சினைகள் ஏற்படும்போது தீர்ப்பது குறித்து வரையறை செய்யப்பட்டுள்ளது.

வணிக அவை உருவாக்கப்பட்டபின் அதற்கென சுப்பையா சாலையில் 12 குடோன்கள் வாங்கப்பட்டன. சுய்ப்ரேன் வீதியில் அலுவலகத்திற்கென ஒரு கட்டடம் வாங்கப்பட்டது. இந்த சொத்துக்கள் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பணத்திலிருந்து வாங்கப்பட்டன. இந்த சொத்துக்கள் அனைத்தும் புதுச்சேரி அரசுக்குச் சொந்தமானவை.

கடந்த 17-07-1966-இல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வணிக அவையின் உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் 1968 டிசம்பர் 3-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. தேர்தல் புதுச்சேரி மேயர் தலைமையில் நடந்தது. இதுதான் வணிக அவையில் நடந்த கடைசி தேர்தல். இத்தேர்தலின்படி தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 1975 வரை அதாவது 6 ஆண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தனர். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தற்போது வழக்கின் வாதிகளான நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோரும் எஸ்.பாக்கியம் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் மேற்சொன்ன நா. கோவிந்தசாமி, அ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் தொடர்ந்து உறுப்பினர்களாக நீடித்தனர். மேலும், தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்த முற்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்தபின்னரும் இதுவரையில் வணிக அவைக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. மேற்சொன்ன நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வணிக அவையின் சொத்துக்களை வாடகைக்கு விடுதல், வாடகை வசூலித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 294, 295-படி வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் புதுச்சேரி அரசுக்குச் சொந்தமானவை. அப்போதைய வருவாய்த் துறையால் `பதாந்த்' என்ற வரி வசூல் மூலம் கிடைத்த தொகையில் இருந்து இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டன. மேலும், வணிக அவைக்கு தேர்தல் நடத்தும் கடமை புதுச்சேரி அரசினுடையது. ஆனால், இவ்வழக்கின் வாதிகளான தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறை செயலர், புதுச்சேரி நகராட்சி மேயர் ஆகியோர் தேர்தல் நடத்த தவறியதலால் வணிக அவையின் சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தபடுவதோடு பல்வேறு ஊழலுக்கு வழி வகுத்துள்ளது.

இதன் உச்சகட்டமாக பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவையை மேற்சொன்ன நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஒரு சங்கமாக புதுச்சேரி சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், சங்கங்களின் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவையின் சொத்துக்கள் அனைத்தையும் இச்சங்கத்தின் சொத்துக்களாக மாற்றியுள்ளனர். மேலும், நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்களைச் சங்கங்களின் பதிவுச் சட்டப்படி பதியப்பட்ட வணிக அவையின் ஆயுள்கால உறுப்பினராக அறிவித்துக் கொண்டனர். இவர்களின் இந்த நடவடிக்கை மாபெரும் பகல்கொள்ளையாகும்.

இதுகுறித்து கடந்த 21-10-2005 அன்று புதுச்சேரி அரசுக்கு, வணிக அவையில் ஊழல், முறைகேடுகள் செய்த நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி மனு அனுப்பி இருந்தேன். ஆனால், இதுநாள்வரை அம்மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த நீதிமன்றத்தில் உரிய நிவாரணம் வேண்டி இம்மனுவை தாக்கல் செய்துள்ளேன்.

எனவே, இந்த நீதிமன்றம் கீழ்காணும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுகிறேன்.

1. சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், சங்கங்களின் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ள வணிக அவையின் செயல்பாடுகளுக்கு இவ்வழக்கு முடியும் வரையில் இடைக்கால தடை விதித்து உத்திரவிட வேண்டும்.

2. புதுச்சேரி அரசின் தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறை செயலர், புதுச்சேரி நகராட்சி மேயர் ஆகியோர் வணிக அவையின் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உத்தரவிடவேண்டும்.

3. பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவைக்கு தகுதியானவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து புதுச்சேரி நகராட்சி மேயர் உறுப்பினர் பட்டியல் தயார் செய்ய உத்தரவிட வேண்டும்.

4. இவ்வாறு இறுதி செய்யப்பட்ட உறுப்பினர் பட்டியல் அடிப்படையில் பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவைக்குத் தேர்தல் நடத்த தலைமைச் செயலருக்கு உத்திரவிட வேண்டும்.

5. சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், சங்கங்களின் பதிவுச் சட்டப்படி பதிவு, செய்யப்பட்ட வணிக அவையின் சான்றிதழை செல்லாது என அறிவித்து உத்திரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு மீது கடந்த 27-07-2007 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் கீழ்க்காணும் உத்திரவைப் பிறப்பித்துள்ளது.

வாதிகளான நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், அதற்கு இருவரும் வரும் 16-08-2007 அன்று விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே தீர்வு காணப்படும்.

இந்த இடைப்பட்ட காலத்தில், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில் வணிக அவையின் சொத்துக்களை உள்ளது உள்ளபடியே வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.கீதா, அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் கே.சசிதரன் ஆஜரானார்கள்.

Tuesday, August 07, 2007

“என்கவுன்டர்’’ செய்த போலீஸ் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் - கோ.சுகுமாரன்



போலி மோதல் கொலைகள் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் 21-07-2007 சனியன்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கோ.சுகுமாரன் கலந்துக் கொண்டு பேசியதாவது:

இந்தியா முழுவதும் போலி மோதல் கொலை தொடர்பாகப் போடப்படுகின்ற முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது ஏன் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது தனிப்பட்ட காவலதிகாரிகளோ, காவல்துறை உயரதிகாரியோ தீர்மானிப்பது இல்லை. குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை நோக்கி இந்த மோதல் ஏவப்படுகின்றது. இதன் பின்னனியைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியம் வரும். தொடக்கத்தில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் அவர்களுடைய வீடுகளில் இருந்தோ அல்லது தெருக்களில் இருந்தோ அழைத்துச்சென்று, மோதலில் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லி கொலை செய்வது நடந்தது.

ஆனால், இன்று குஜராத்திலும், மும்பையிலும் போலிமோதலில் இஸ்லாமியர்களைக் குறி வைத்துள்ளார்கள். மும்பையில் தாதாக்களைக் கொல்கிறோம் என்ற பெயரில், ஒரு தாதா குழுவிடம் பணம் பெற்றுக்கொண்டு இன்னொரு தாதா குழுவில் உள்ளவர்களைச் சுட்டுக்கொன்று பெரும் பணக்காரர்களாக, கோடீசுவரர்களாக ஆகியுள்ளனர் பல போலீஸ்காரர்கள் என்ற செய்தியெல்லாம் இப்போது வந்து கொண்டிருக்கிறது. இந்த போலீஸ்காரர்களைப் பத்திரிகைகளும், அரசாங்கமும் ’என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகள்’ என்று சொல்லி, இதற்காவவே இவர்கள் பிறந்து வளர்ந்தவர்கள் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தி, என்கவுண்டருக்கு ஆதரவாக ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

1996-ஆம் ஆண்டு ஆந்திராவில் மிக அதிகமாக என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டபோது, இந்திய அளவிலான உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டபோது, அதில் நானும், இங்குள்ள பேராசியர் சரஸ்வதி அவ்ர்களும் பங்குபெற்று, ஆந்திராவில் நக்சல்பாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள 4 மாவட்டங்களைச் சுற்றிப் பார்த்தோம். அந்த ஆண்டில் மட்டும் 165-க்கும் மேற்பட்டவர்கள் மோதல் என்ற பெயரில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு வேடிக்கை என்னவென்றால், ஒரு போலிமோதல் நடந்த இடத்தை பத்திரிக்கையாளர்கள் சென்று பார்த்தபோது, அங்கு சில இடங்களில் போலீசார் சிலர் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த பள்ளங்கள் எல்லாம் நக்சல்பாரிகள் குண்டு வீசியதால் ஏற்பட்டது என்று பின்பு காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆந்திராவில் பல மாவட்டங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இயக்கத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று வாராங்கல் மாவட்ட ஆட்சியரே எங்களிடம் கூறினார். அப்போது சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்துகொண்டு லேப்டாப்பில் கிராமங்களை இணைப்பதாகக் கூறிகொண்டிருந்த நேரம்.

மக்களுக்காக பள்ளிகளை நடத்துவது, தண்ணீர் மற்றும் சாலை வசதிகள் போன்ற மக்களுக்குத் தேவையானவைகளை செய்துகொண்டிருந்த இயக்கத்தைச் சேராத, அந்த பொதுநலவாதிகளை எல்லாம் ஆந்திர அரசு நக்சலைட் என்ற பெயரில் சுட்டுக்கொன்றது. 1996-1998 காலகட்டத்தில்தான் மிக அதிகமாக என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துப் போராட்டங்களும் நிறைய நடந்தது. அதன் தொடர்ச்சியாகத்தன் தேசிய மனித உரிமைகள் ஆணையம், என்கவுண்டர் நடந்தால் உடனடியாக அதை நிகழ்த்திய காவல்துறை அதிகாரிகள் மீது இ.த.ச பிரிவு 302-இன் படி கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலை அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரரேசங்களுக்கும் பிறப்பித்தது. ஆனால், இதை யாரும் கண்டுகொள்வது இல்லை.

கடந்த மாதம் 26-ஆம் தேதி மும்பையில், போலிமோதல் படுகொலை குறித்து ஒரு இந்திய அளவிலான மாநாடு நடைபெற்றது. ஆந்திரா, குஜராத், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருந்து நிறைய பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து நானும், முத்துலட்சுமிவீரப்பன், அக்னி சுப்ரமணியன் போன்றோர் பங்கேற்றோம். என்கவுண்டரில் கொல்லப்பட்ட பல்வேறு இசுலாமிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பேசினார்கள். அப்போதுதான், இதுவரையில் இந்தியாவில் மோதல் என்ற பெயரில் கொல்லப்பட்டவர்கள் குறித்த முழுப்பட்டியல் நம்மிடம் இல்லை என்பதை உணர்ந்தோம். இதுவரை நடந்த போலிமோதல் கொலைகளைத் தொகுப்பதற்காக, இங்கு வந்துள்ள மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எச்.சுரேஷ் தலைமையில் ஒரு ஆவணப் பதிவகம் தொடங்கப்பட்டது.

இதுபோன்ற மாநாடு மற்றும் கருத்தரங்களை இப்போது நடத்தவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் 1996 முதல் 2007 வரை ஏறத்தாழ 24 பேர் போலிமோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இப்போதுள்ள திமுக அரசு 2006-இல் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அதிமுக ஆட்சியில் போலிமோதலில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவியை, திமுக தேர்தலில் நிற்கவைத்து போலிமோதலுக்கு எதிராக இருப்பதாகக் கூறி வாக்குகளைப்பெற்று இன்று மத்திய அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. ஆனால், இன்று இந்த திமுக ஆட்சியில்தான் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்திய அளவில் நக்சல்பாரிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக போலிமோதல் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதுபோல், தமிழகத்தில் காவல்துறையினர் சாதி அடிப்படையில் போலி மோதலை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தஞ்சைப்பகுதியில் முட்டை ரவி என்பவரை போலீசார் படுகொலை செய்தனர். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திமுகவிற்கும் நெருக்கமானவர். கோபமுற்ற கள்ளர்களைச் சமாதானம் செய்வதற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த மணல்மேடு சங்கரை கொலைசெய்தனர்.

மணல்மேடு சங்கர் நீதிமன்றக்காவலில் இருக்கும்போது, தான் போலீசாரால் என்கவுண்டரில் கொலை செய்யப்படலாம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் வழக்கில், நீதிமன்றத்தில், காவலதிகாரி ஜாபர்சேட் என்கவுண்டர் போன்ற திட்டம் எதுவும் இல்லை, அப்படி எதுவும் செய்யமாட்டோம் என்றும் உரிய பாதுகாப்பு அளிக்கிறோம் என்றும் கூறினார். ஆனால், அடுத்த சிலவாரங்களில் மணல்மேடு சங்கர் போலிமோதலில் படுகொலை செய்யப்பட்டார். இதுமட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக பாமக-விற்கு தொல்லை தரவேண்டும் என்பதற்காக, அக்கட்சிக்கு ஆதரவாக இருந்த பங்க் குமார் என்பரை கொலை செய்தனர்.

காவல்துறை இன்று அரசாங்கத்தின் கைக்கூலியாக இருந்துகொண்டு, அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதை செய்வதற்கு என்கவுண்டரை பயன்படுத்துகிறார்கள். இதுதான் இன்றைய தமிழகத்தின் மோசமான நிலை.

இப்போது விஜயகுமாரை தேனிமாவட்டத்தில் நக்சல்பாரிகளைப் பிடிப்பதற்காக அனுப்பி இருக்கிறார்கள். வீரப்பனைப் பிடிக்க அனுப்பப்பட்ட காவலதிகாரிகள் பலரும் விஜயகுமாருடன் இணைக்கப்பட்டுள்ளார்கள். இன்று சட்டத்தின்படி பார்த்தால் விஜயகுமார் ஒரு கொலைக் குற்றவாளி். இதுவரை 12 பேரை போலிமோதல் என்ற பெயரில் சுட்டுக் கொலை செய்துள்ளார். நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு அழைத்துசெல்லும் வழியில் ராஜாராமனை சுட்டுக்கொன்றார்கள். ஏற்கனவே பிடித்து வைத்திருந்த் சரவணனை, ராஜாராமனை கடத்த முயன்றதாகக் கூறி சுட்டுக்கொன்றார்கள். இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலைகள். இத்துடன் வீரப்பன் படுகொலையும் அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் உள்ளது. சி.பி.ஐ விசாரனை கேட்டு போடப்பட்டுள்ள வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலைமையில் தேனி மாவட்டத்திற்கு விஜயகுமாரை அனுப்பியிருப்பது என்பது, தமிழக அரசு அப்பட்டமாக என்கவுண்டர் செய்வதை ஆதரிக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.

எனவே, அரசு உடனடியாக விஜயகுமாரை அப்பகுதியிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்கவேண்டும். விஜயகுமார் குழுவினரை பெரியகுளம் பகுதிக்கு அனுப்புவதன் மூலம், ஏதோ அந்தப் பகுதியே மிகமோசமான, பதட்டமான பகுதி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். முன்பெல்லாம் என்கவுன்டர் நடப்பது முடிந்த பிறகுதான் நமக்குத் தெரியும், பத்திரி்கைகளில் செய்தி வரும். ஆனால், இப்போதெல்லாம் அடுத்து யாரைக் கொலை செய்யப்போகிறார்கள் என்பதெல்லாம் வெளியிலே தெரிகிற அளவிற்கு மிக மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த அளவிற்கு என்கவுன்டருக்கு ஆதரவான கருத்து உருவாக்கப்படுகிறது. சிலநாட்களுக்கு முன்பு கடலூர் பதிப்பு மாலைமலர் செய்தித்தாளில் , சிதம்பரம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. விசாரித்துப் பார்த்தால், தற்போது கோவை சிறையில் உள்ள வல்லம்படுகை சந்திரன் என்பவரை என்கவுன்டர் செய்வதற்காக திட்டமிட்டுள்ளார்கள் என தெரியவந்தது.

இப்படியாக, அடுத்து யாரை கொல்லப்போகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்ற அளவிற்கு மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல் நடந்துகொண்டிருக்கின்றது.

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வது நீதிமன்றம்தான். அதனால்தான் கைதுசெய்யப்பட்டவரை போலீசாரே வைத்துக்கொள்ளாமல், நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் நீதிமன்றக்காவலில் உள்ளபோதுதான் போலிமோதல் என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இது குறித்து நீதித்துறை கொஞ்சமும் அக்கறை செலுத்துவதில்லை. நீதித்துறையின் இந்த பொறுப்பற்ற செயல்குறித்தும் நாம் பேசவேண்டும்.

இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள் மட்டுமே என்கவுன்டர் என்றபெயரில் கொலை செய்யப்படுவதில்லை. போலீசார் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் என்கவுன்டர் பெயரில் கொலை செய்வார்கள். அது நீங்களாகவும் இருக்கலாம், நானாகவும் இருக்கலாம்.

நம்முடைய உரிமையைக் காப்பதற்காகத்தான் என்கவுன்டர் வேண்டாம் என்கிறோம். அரசியல் சட்டமும் வேண்டாம் என்கிறது. நக்சல்பாரி இயக்கத்தினரும், தமிழ்த் தேசிய அமைப்பினரும் இதை அரசியல் ரீதியானப் பிரச்சினையாக பார்க்கவேண்டும். வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இம்மாநாட்டிற்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமை தங்கினார். மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எச்.சுரேஷ், எழுத்தாளர் பிரபஞ்சன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் வழக்கறிஞர் பாவேந்தன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் பேராசிரியை சரஸ்வதி, தாருல் இசுலாம் அமைப்பு குலாம் முகமது, தமிழக மனித உரிமைக் கழகம் அரங்க. குணசேகரன், தமிழ்த் தேசிய வழக்கறிஞர் நடுவம் வழக்கறிஞர் புகழேந்தி, இந்திய மக்கள் வழக்கறிஞர் சங்கம் வழக்கறிஞர் கபிலன், மனிதம் அக்னி சுப்பிரமனியம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதயம் மனோகரன், பேராசிரியர் சிவகுமார், குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் வெ.பாலு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த், வழக்கறிஞர்-கவிஞர் கனகவேல் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

ஆந்திராவிலிருந்து, ஆந்திர சிவில் உரிமைக் குழு சார்பில் கிராந்தி சைத்தன்யா, கர்நாடகாவிலிரிந்து மக்கள் ஜனநாயக கழகம் சார்பில் பேராசிரியர் இராமசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.

Tuesday, July 17, 2007

“ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை’’ - ஈழக் கலைஞர் சி.ஜெய்சங்கர்

சந்திப்பு : இரா.முருகப்பன்.

சி.ஜெய்சங்கர்:மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ''மூன்றாவது கண்'' என்கிற உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி வருகிறார். 'மூன்றாவது கண்' என தமிழிலும்,'தேர்ட் ஐ' என ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய துணைவியார் வாசுகி ஓவியராக இருப்பதுடன், பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.

1965 டிசம்பரில் யாழ்பாணம் கோண்டாவில் என்கிற கிராமத்தில், அரசு ஆயுர்வேத மருத்துவரான சிவஞானம்&யோகேஸ்வரி தம்பதியருக்கு ஜெய்சங்கர் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். இதில் இருவர் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். தொடக்கக் கல்வியை கிராம பாடசாலையிலும், உயர்கல்வியை யாழ் கல்லூரியிலும் முடித்தார்.

குழந்தை மா.சண்முகலிங்கம் அவர்களை தனது முதன்மைக் ஆசானாக கருதும் இவர், யாழ்பாணத்தில் இருக்கும்போது, நிலாந்தன், செல்வி, சிவரமணி, வைதேகி, மனோகரன், வாசுகி, அருந்ததி, அகிலன், சத்யன், வில்வரத்தினம், கருணாகரன், ராமேஸ்வரன், கோபிதாஸ், கண்ணதாசன் ஆகியோருடன் இணைந்து குழுவாக நாடகம் மற்றும் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.


அவர் ‘தலித்முரசுக்கு’ அளித்த சிறப்பு பேட்டி.

ஈழம் வடக்கு, கிழக்கு என இரு பிரதேசங்களாக உள்ளன. வடகில் யாழ்பாணமும், கிழக்கில் மட்டக்களப்பும் மிக முக்கியமான பகுதிகள். இவை இப்போது எப்படி இருக்கிறது?

உலகில் எல்லா நாடுகளிலும் காணப்படுவது போன்றே இலங்கையில் வாழ்கின்ற சிங்களர், தமிழர் இடையேயும் பிரதேச ரீதியான வேறுபாடுகளும், ஒருமைப்பாடுகளும் காணப்படுகின்றன. இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களுக்கு இடையேயும் ஒத்துபோகக் கூடியதும்; வித்தியாசப்படுவதுமான பண்பாட்டு அம்சங்கள் நிலவுகின்றன. இரண்டுக்குமிடையே மொழிரீதியான ஒரு பொதுத்தன்மை காணப்படுகின்ற அதே நேரம், பிராந்திய மொழிவழக்கில் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கிழக்கில் உள்ள மட்டகளப்பில் படுவான்கரை, எடுவான்கரை என்கிற இரு பகுதிகளுக்கும் இடையே வித்தியாசங்கள் காணமுடியும். அதே போல் யாழ்பாணத்தில் உள்ள வலிகாமம், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளுக்குள்ளும் பண்பாட்டு வித்தியாசங்களை காணமுடியும். வடக்கு, கிழக்கின் பொதுத்தன்மை என்பது வித்தியாசங்களுடன் கூடியது. முக்கியமான அடிப்படையான வித்தியாசமாக இருப்பது சமூகப், பொருளாதார நிலைமைகள்தான்.

ஈழம் பற்றி சிந்திக்கும்போது, கிழக்குப் பகுதியில் குறிப்பாக மட்டகளப்பிலுள்ள படுவான்கரை என்பது முக்கியமான, பாரம்பரியமான, சமூக பண்பாட்டு மையமாக விளங்கி வருகிறது. ஆனால் கெடுவாய்ப்பாக இந்த படுவான்கரை இன்று மக்கள் புலம் பெயர்ந்த பிரதேசமாக இருந்து வருகிறது. அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து எழுவான்கரை என்ற இடத்தில் புலம்பெயர்வு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படுவான்கரை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று சொன்னால் பாரம்பரியமான உள்ளூர் அறிவுத்திறன் களஞ்சியமாக இருந்துகொண்டிருக்கிறது. நாங்கள் பலமான சமூகமாக வாழ்வதற்கான ஆதாரங்கள் பல அங்கே காணப்படுகின்றன. இன்றைய யுத்தமும், அதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற இடம்பெயர்வும், குறிப்பாக தமிழ்மக்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கின்றது. இந்த இடப்பெயர்வு அந்த மக்களை பாரம்பரிய அறிவுசார் முறையிலிருந்து அன்னியப் படுத்தியிருக்கிறது; அப்புறப்படுத்தியிருக்கிறது. உள்ளூர் அறிவுத்திறனை கொண்ட ஒரு சமூக பொருளாதார கட்டமைப்பு நோக்கில் பார்க்கும்போது, இதை ஒரு மிக மோசமான இழப்பாக பார்க்கிறோம்.

அரசியல் மொழியில் சொன்னால் வடதமிழீழம், தென் தமிழீழம் என்பது, சமூக- பண்பாட்டு-பொருளாதார ரீதியாக பொதுத்தன்மைகளும் வித்தியாசங்களும் கொண்டவை. அதே நேரம், எல்லா சமூகங்களுக்கும் உள்ளது போல் அந்தப் பிராந்தியங்களில், பிராந்தியங்களுக்கிடையில் காணப்படுகின்ற ஆதிக்க நிலைமையை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.

ஈழத்தில் முகாம்களிலும், வெளிநாடுகளில் அகதிகளாகவும் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

தொடர்ச்சியான போரும், இடப்பெயர்வும் எம்மக்களின் வாழ்விடங்களை, வாழ்வாதரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு ஒரு அன்னியப்படுத்தப்பட்ட நிலையில் தங்கி வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. இது எங்களை மிக ஆபத்தான ஒரு சமூக, பொருளாதார நிலைக்கு இட்டுச்செல்கிறது. மேலும், தாராளமயம் மிகத்தீவிரமாக நடைமுறைபடுத்தப்படுவதற்கு, உள்ளூர் முரண்பாடும், அதன் காரணமாக எழுந்த போரும் பயன்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இந்த இடப்பெயர்வு என்பது, உற்பத்தி சக்தியாக இருந்த எங்களை தங்கிவாழும் ஒரு சமூகமாக மாற்றி, குறைந்த ஊதியத் தொழிலாளர்களாக மாற்றும் நிலைமைளையும், வெறும் நுகர்வு சக்திகளாக வாழுகின்ற நிலைகளையுமே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

இன்றைய நிலையில் பெண்கள் எத்தைகய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்?

வரலாற்றுக்காலம் முழுக்க, உலகில் போரின் முதல் பலி உண்மை என்று சொல்வார்கள். அதற்கு சமமாக நாங்கள் சொல்ல வேண்டியது. போரில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிக்க உக்கிரமமாக பாதிக்கப்படுவர்கள் பெண்கள்தான். குடும்பச்சுமையைத் தாங்கி வீட்டிற்குள் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்த பெண்கள், யுத்தம் காரணமாக இடப்பெயர்வு நிகழும் நிலையில், அவர்கள் அம்பலத்தில் வெட்டவெளியில் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது ஒன்றே, இந்தப் போரில் பெண்கள் நிலையை புரிந்துகொள்ள பொருத்தமாக இருக்கும். அம்பலத்தில் குடும்பத்தை நடதுதுவது என்பது பெண்களுக்கு எத்தைகயதொரு மோசமான சூழல் என்பது சிந்திக்க தெரிந்த எவருக்கும் விளங்கும். போர் நடைபெறும்போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது ஒரு வெளிப்படையான உரையாடலுக்குரியதாகவும், எதிர்ப்புக்குரியதாகவும் இருப்பது என்பதை காணமுடிகிறது. இதுமட்டுமில்லாமல் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.

போர்சார்ந்த நடவடிக்கையால் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகின்ற அதே நேரம், சமூகத்தில் பெண்கள் அவர்கள் வாழ்கிற குடும்பத்துள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது என்கிற விஷயம் பேசாப்பொருளாக அல்லது மறந்து போகிற விடயமாக ஆகியிருப்பது என்பது கவனத்தில் கொள்ளவேண்டும், அது குறித்து ஒரு உரையாடல் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். இது பற்றிய சிந்தனைகளில் அடிப்படை மாற்றம் தேவை என்பது மிக முக்கியமாகும்.

ஒரு சமூக விடுதலை என்பது அனைத்துவகையான ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடாகவே பார்க்கவேண்டும். ஒவ்வொன்றாக தனிதனியாக அல்லது ஒன்று முந்தியது, மற்றது பிந்தியது என்று பார்ப்பதென்பது பொருந்தாது. ஏனெனில்,இத்தகைய நிலைகள் என்பது சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்ற சூழலில்,சமூகங்களால் புறத்திருந்தும், அகத்திருந்தும் நிகழ்த்தபடுகின்ற வன்முறைகள் பற்றி ஒரே நேரத்தில், ஒரே தளத்தில் நாங்கள் எதிர்கொள்ளவேண்டியது என்பதுதான் யதார்த்தமானதும், இயல்பானதும், பொருத்தமானதும் என்பதை நாங்கள் சிந்தித்து செயல்படவேண்டியுள்ளது.

இந்த வகையில் ஈழத்தில் பெண்கள் அமைப்புகள் போரினால் ஏற்படும் வன்முறைகளை எதிர்கொன்டும்; குடும்ப சமூக வன்முறைகளை எதிர்கொண்டும்; சமூகத்தின் உள்ளிருந்தும், வெளியிருந்தும் தடைகளையும் சவால்களையும் கடந்து செயற்பட்டு வருவது சாதகமானதொரு நிலைமையாகும்.

சிறுவர்கள் அங்கு இயல்பாக இருக்க முடிகிறதா? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

போரின் எதிர்காலத்தை முன்னெடுப்பவர்களாக இந்த சிறுவர்களே எல்லோராலும் முன்னிறுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, ஆக்கப்பூர்வமான சக்திக்காக உள்வாங்கப்பட வேண்டிய சிறுவர்கள், போரின் அழிப்பு செயல்பாட்டு சக்தியாக உள்வாங்கப்பட்டு முன்வைக்கப்படுவதென்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. வளர்ச்சி இல்லை என்பதற்கும் மேலாக அழிவு நடந்து கொண்டிருக்கின்றது என்பதை காண நேரிடுகிறது. இதனால் சிறுவர்களது, இளைஞர்களது உழைப்புச் சக்திகள் வீணடிக்கப்படுகிறது. இது இரட்டிப்பு பாதகமான நிலையாக காணப்படுகின்றது. சிறுவர்கள் காண்கின்ற இயல்பு வாழ்க்கை வன்முறை சார்ந்ததாக உள்ளது. எனவே அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பதும் வன்முறை சார்ந்ததாகவே இருக்கும் என்பதற்கான சாத்தியப்பாடுகள்தான் காண்ப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தான நிலை.

ஏவுகனைத் தாக்குதல்கள், ராணுவ சுற்றிவளைப்புகள் என்ற சூழலில் வாழ்கிற சிறுவர்களுக்கு தங்களை ஒரு போராளிகளாக நினைத்துக்கொள்வதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் அவர்களுக்கு இல்லை என்பதை நாங்கள் மறுக்கமுடியாது. மேலும் இப்போதுள்ள சூழலில் நிலைமை என்னவெனில் வெறுங்கையுடன் சாதாரணமாக அவலமாகச் சாவதா அல்லது போராளியாக போரிட்டுச் சாவதா என்கிற இருவகையான சூழலுக்குள் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால்,தென்னிலங்கையின் அரசியல் நிறுவனங்கள், அதிகார மையங்கள் மத்தியில், சுற்றுலா மையங்களில் நடைபெறும் சிறுவர்களது பாலியல் தொழில் என்பது இணையதளங்களில் பிரசித்தமாயிருக்கின்ற நிலையில் அதிக கவனத்தில் கொள்ளப்படாமல் உள்ளது.

சிறுவர்கள் வடகிழக்கா அல்லது தெற்கா என்பது முக்கியமில்லை. இவர்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்பதுதான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். சிறுவர்கள் படையில் சேர்வதை தவிர்த்தல் என்பதில் நாங்கள் உண்மையில் அக்கறை உடையவர்களாக இருக்கிறோமா என்பதற்கு முதல் நிபந்தனையாக எந்தவித நிபந்தனையும் இன்றி யுத்தத்தை நிறுத்தவேண்டும். இதுதான் அடிப்படையான விடயம். அதைச் செய்வதற்கு நாம் எவருமே தயாரில்லாமல், பாதகமான நிலைமைகள் எல்லாவற்றையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் விடயத்தில் நாம் கவனமாய் இருக்கவேண்டும்.

போர்சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?

போர்ச்சூழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்றுவேண்டுமானால் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. மறைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாகக் கூறினால். ராணுவம் குண்டு வீசப்போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கின்ற கோயில்தான். உயிர்பிழைக்க ஒடி கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படி நிலை வெளிபடும். ஓடி தஞ்சமடையும் போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.

இன்னொன்றையும் சொல்கிறேன். கூத்து குறித்து ஒரு அண்ணாவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பறையறிவிப்போன் குறித்து அந்த பேச்சு நீண்டது. அரசருடைய செய்திகளையும்,உத்திரவுகளையும் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற பணியை செய்கின்றவன் பறையறிவிப்போன். அரசன் வரவை அறிவிக்கும் கௌரவமான கட்டியகாரன் போல அரச செய்தியைச் சொல்லும் பறை அறைவோனும் கௌரமாகவே பணியாற்றுவது யதார்த்தமாக இருக்கும் என்றேன். அதற்கு அந்த அண்ணாவி, பறை அறைவோனை பாரம்பரியக் கூத்தில் உள்ளது போல் குடிகாரனாக, முடவனாக, அறிவில்லாதவனாக, கூடாத வார்த்தைகள் பேசி வருபவனாக அல்லாமல் கௌரவமான பாத்திரமாகக் கொண்டு வருவது பிரச்சினயில்லை. அது நல்லதுதான். ஆனால் அரசர் பிரதானிகளுடன் பறையறைவோன் கொலுவில் வர முடியாது. அதை ஏற்கமாட்டார்கள் என்றார். இப்படி ஒரு புதிய கருத்து எனக்கு அப்போதுதான் புரிந்தது. உரையாடல் களம் இருப்பதால்தான் இப்படி புதிது புதிதாய் புரியவும், உணரவும் முடிகிறது. பிறகு பேசினோம். கட்டாயம் நாம் அடுத்ததொரு கூத்தில் மன்னன் கொலு வரவில் பறையறிவிக்கும் பறையனை கட்டாயம் இடம் பெறச் செய்யும் வகையில் புதிய கூத்து எழுதப்பட வேண்டும். எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இதுவரையில் அத்தகையதான கூத்துப் பற்றிக் கேள்விப்படவில்லை.

விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களின் பங்கு எந்த அளவில் உள்ளது?


எங்களின் விடுதலைப் போராட்டத்தில் கலை வடிவங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எல்லா கலைகளும் ஆக்கப்பூர்வமாக பயன்படுதப்படுகின்றது. குறிப்பாக விடுதலை இயக்கம் சார்ந்த கலைப்படைப்புகள் ஒரு வகையாகவும், விடுதலை இயக்கம் சாராத சமூக, மக்கள் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற கலைஞர்களது ஆக்கங்கள், படைப்புகள் ஒரு வகையாகவும் என இரு தளங்களில் நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றோம். இதில் விடுதலை இயக்கங்களின் கலை படைப்புகள் அரசியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. இது இன்று மேலோங்கியுள்ளது.

கலைகளில் எவை பேசப்பட்டுள்ளன. எவை பேசப்படவில்லை என்பது பற்றி ஒரு மதிப்பீடு செய்கின்றபோது, எங்களுடைய அரசியல் சூழ்நிலையில் கலை வெளிப்பாடு எவ்வாறு நிகழ்ந்திருகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். பிரச்சார நோக்கில் பார்க்கும்போது எல்லா கலைச்சாதனங்களுமே மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கபட்டிருக்கிறது. நாடகம் என்று பார்த்தாலும் சரி, கூத்து என்று பார்த்தாலும் சரி, அரங்கு என்பது பிரச்சார நோக்கில் வீதிநாடகங்களாக, மேடைநாடகங்களாக பரவலாக மேடையேற்றப்பட்டிருக்கிறது. புலிகள் வீதிநாடகங்களை வலுவான கலையாக முன்னெடுத்திருக்கிறார்கள். அதற்கு மேலாக மேடை நாடகம் என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்தக் கலைவடிவங்களில் எங்களுடைய பாரம்பரிய கலையம்சங்கள் பல்வேறு வழிவகைகளில் எடுத்து கையாளப்பட்டிருக்கிறது. அதில் சிற்பம், ஓவியம், கவிதை, ஆடல்கள், வாத்தியங்கள், பாடல்கள், நாடகங்கள் என எல்லா வடிவங்களும் அடங்கியுள்ளன். மக்கள் மத்தியில் தொடர்பு கொள்வதற்கு ஒரு வலுவான வழிமுறையாக இவை இனங்காணப்பட்டுள்ளன.

மூன்றாவது கண் என்கிற உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக்குழுவின் மூலம் எத்தகைய பணிகளை செய்து வருகிறீர்கள்?

எமது சமூகத்தில் மக்கள் தமக்கு வசதியான, வாய்ப்புள்ள இடங்களான கோயில், வீதி, தெருச்சந்திப்பு, வீட்டு முற்றம், மரநிழல்களில் கூடிக்கதைகும் மரபு இருந்தது. இந்தச் சமயங்களில் பல்வேறு செய்திகளையும், சம்பவங்களையும், தலைப்புகளையும் அதன் சாதக பாதகங்களுடன் அலசி, ஆராயும் நிலை இருந்தது. ஆனால் இன்று இனப்பிரச்சனையும், ராணுவ நடவடிக்கைகளும் கூர்மையடைந்துள்ள நிலையில் பொதுமக்களால் கூடிக்கதைக்கும் நிலை இல்லாமல் போனது.

இப்போது வீடுகளில் முடங்கியுள்ள மக்களை தொலைக்காட்சிகள் மூளைச்சலவை செய்வதில் பெரும்பங்காற்றி வருகின்றன. தமிழ்நாட்டு திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் புற்றீசல்போல வீடுகளுக்குள் நுழைந்துவிட்டன. இது மக்களுக்கு இன்றுள்ள யதார்த்தின் குரூரத்தை விளங்கி கொள்ளாவிட்டாலும்; அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழியாகவும் அமைந்து காணப்படுகிறது. இத்தகைய மாய வாழ்கையில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டு, எங்களை நாங்கள் புரிந்துகொண்டு, எங்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கி செயல்படவும், சிந்திப்பதுமே மூன்றாவது கண் நோக்கம்.

இதற்காக அறிவுத்தளதில் நின்று பல்வேறு தளங்களில் விவாதிப்பது முக்கியமாகிறது. குறிப்பாகப் பிரதான ஒட்ட அச்சு மற்றும் இலத்திரணியல் தொடர்பு ஊடகங்கள் இந்த வேலையை செய்வதாக சொல்கிறதே தவிர செய்வதில்லை. தொடர்பு சாதனங்களான ஊடகங்கள் அனைத்தும், ஒன்று அதிகாரத்திற்கு சேவகம் செய்கின்றன. அல்லது வியாபாரத்தை மையமாகக் கொண்டு அதிகாரத்திற்கு கட்டுபட்டு இயங்குகின்றன.

தொடர்புசாதனங்களின் ஆக்கிரமிப்பு வலைபின்னலுக்கு மாற்றாக பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை தூண்டவல்ல அரங்குகளின் தேவை அவசியமாகிறது. அப்பொழுதுதான் செய்திகளுக்குப் பின்னால் உள்ள செய்திகளை விளங்கிக் கொள்ளவும், அது பற்றி விவாதிக்கவும் முடியும். எமக்குப் பொருத்தமான மக்கள் மையப்பட்ட விவாதக் களங்களை அரங்க அறிவுடனும், பாரம்பரிய உரையாடல் களங்களின் அனுபவத்துடனும், அறிவுத்தளத்தில் நிகழ்த்துவது முக்கியம் என்கிற உரத்த சிந்தனையும் செயற்பாடும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளன. இதற்கான அரங்குகளைத்தான் மூன்றாவது கண் முன்னெடுத்து வருகின்றது.

மேலும் இன்றைய கல்விமுறையில் மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியத்தேவையிலும் உள்ளோம். தொழிற்சந்தை நிலவரத்திற்கேற்ப மாணவர்களை உற்பத்தி செய்கின்றோம் என்று கல்விமான்களும், அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் சொல்கிறார்கள். அதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் மாணவர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாராணம் சொல்கிறேன். பல்கலைகழக உயர்கல்விக்கு தெரிவான புதுமுக மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. அப்போது அந்த மாணவர்களிடம், கண்டுபிடிப்புகள்; கண்டுபிடிப்பாளர்களாக வெள்ளையர்கள் பெயர்கள் மட்டுமே பாடப்புத்தகங்களில் காணப்படுகின்றன. ஏன் நம்மவர்கள் காணப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு மாணவர்களிடமிருந்து ; அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், கண்டுபிடிக்கக் கூடியவர்கள், அவர்கள் கண்டுபிடிக்கட்டும். நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்; அவர்களுக்குதான் எல்லா வசதிகளும் உள்ளன எங்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை மேலும் நாங்கள் சோம்பேறிகள் என்கிற பதில்கள் கிடைத்தன. கல்வித்துறையில் கற்பிக்கும் பணியை செய்துவருகின்ற நானே ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், நாங்கள் சோம்பேறிகள், நாங்கள் பயன்படுத்துவோம் என்கிற இந்த பதில்களை கூறத்தான், மாணவர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக நாம் சொல்லித் தந்திருக்கின்றோமா?

காலனித்துவ கல்விமுறையால் இன்றைய யதார்த்தச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தப் பட்டுள்ளோம் இச்சூழலை உணரவைத்து அதிலிருந்து மீள வேண்டும் என்கிற உணர்வை உருவாக்கி கற்பனை, சிந்தனை, படைப்பாற்றல், செயற்றிறனுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கல்விசார்ந்தும் சில செயல்பாடுகளுக்கு மூன்றாவது கண் முன்னெடுத்து வருகின்றது.

மக்களை ஒன்று சேர்க்கவும், தங்களுக்குள் உரையாடிகொள்ளவும் தங்களது தேவைகளை தாங்களே அறிந்துகொள்ளவும், அவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளை தீர்மானித்துக்கொள்ளவும், தங்களது ஆற்றல்களை அடையாளம் காணவும், வெளிபடுத்திக் கொண்டாடவும், தாழ்வுச்சிக்கல்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவும், படைப்பாற்றல்கள் வெளிபடவும் கூடியக் கல்வியை, சமூகத்தை, பண்பாட்டை அறிவுத்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் ‘மூன்றாவது கண்’ணின் நோக்கம்.

(தொடரும்)

நன்றி: தலித் முரசு ஜூலை 2007

Sunday, July 15, 2007

ஜூலை 21: சென்னையில் போலி மோதல் படுகொலைகளை எதிர்த்து கருத்தரங்கம்

போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் வரும் 21-07-2007 சனியன்று, சென்னையில், போலி மோதல் படுகொலைகளை எதிர்த்து கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இதற்கென வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கை:

குஜராத்தில் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் போன்ற அய்.பி.எஸ். அதிகாரிகளே முன்நின்று நடத்திய போலி மோதல் படுகொலைகள் அம்பலப்பட்டுப் போனதை ஒட்டி இன்று இந்தியா முழுவதிலும் காவல்துறையின் இந்தச் சட்ட விரோதக் கொடூரங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சென்ற ஜூன் 26, அன்று மும்பையில் 'மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பின்' சார்பாக போலி மோதல்களை எதிர்த்து மாநாடொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

'மோதல்' என்ற பெயரில் காவல்துறையினர் படுகொலைகளை நிகழ்த்துவதில் முன்னிற்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பயங்கரவாதிகள், நக்சல்பாரிகள், தாதாக்கள் எனக் காரணம் சொல்லி வெளிப்படையாக குடிமக்களைக் கொன்று குவிக்கும் இந்தப் பண்பாடு 1975-77 நெருக்கடி நிலை காலத்தில் அதிகமாகியது. நெருக்கடி நிலையை ஒட்டி மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏற்பட்ட ஆரோக்கியமான விவாதங்கள், ஏற்பட்டிருந்த ஜனநாயக விழிப்புணர்வு ஆகியவற்றால் சற்றே அடக்கம் காட்டிய காவல்துறை, காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் போராட்டங்களைக் காரணம் காட்டி மீண்டும் படுகொலைகளில் இறங்கியது. அரசியல் கட்சிகளின் பூரணமான ஆதரவுடன் இவை அரங்கேறின.

சட்டம் ஒழுங்கு, தேச ஒற்றுமை, உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு என்றெல்லாம் சொல்லாடி இங்கே ஒரு போலிஸ் ஆட்சி, இராணுவ ஆட்சி உருவாக்கப்பட்டது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் குடிமக்கள் அனைவரும் சந்தேகத்திற்குரியவர்களாக அணுகப்பட்டனர். தடா', 'பொடா' முதலான ஆள்தூக்கி அடக்குமுறைச் சட்டங்கள், 'இஸட்' பாதுகாப்பு, கறுப்புப் பூனை என்பதெல்லாம் நிர்வாகத் திறனின் அடையாளமாகவும் பெருமைக்குரிய அரசியல் அந்தஸ்தாகவும் ஆக்கப்பட்டன.

போராட்டப் பகுதிகளின் பாதுகாப்பைக் காரணம் காட்டி குடிமக்கள் யாரையும் எந்த நேரத்திலும் இழுத்துச் செல்லவும், காணாமற் போனவர்களாக அறிவிக்கவும், படுகொலை செய்யவும் அதிகாரம் படைத்ததாக அரசும், காவல்துறையும் ஆயின. நெருக்கடி நிலையில் குடிமக்களுக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை கிடையாது என அரசு கூறியதையும், அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டதையும் நாம் மறந்துவிட இயலாது.

1996ஆம் ஆண்டு மத்திய புலனாய்வுத் துறை (CBI) உச்சநீதி மன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றின்படி 1984-95 காலகட்டத்தில் அமிர்தசரஸ் நகரில் மட்டும் சட்ட விரோதமாக 2097 உடல்கள் எரிக்கப்பட்டன. அங்கு மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலம் முழுவதும் இது நடந்துள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் வெளிக் கொணர்ந்தன. காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில் சுமார் 60 சதம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டார்கள்.

கைது செய்து கொண்டு போனது மட்டுமல்ல, அவர்களது சொத்துக்களையும் போலிசார் சூறையாடியிருந்தனர். என்கவுன்டர் செய்து விடுவோம் என மிரட்டி குடும்பத்தாரிடம் பெருந்தொகைகள் பறிக்கப்பட்டன. இன்று மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அப்சல் குரு முதல் மேலப்பாளையம் முசுலிம்கள் வரை 'என்கவுன்டர்', 'பொடா' மிரட்டல்களுக்குப் பயந்து கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் விற்றழித்து காவல்துறைக்கு காணிக்கையாக்கியவர்கள் ஏராளம்.

மேற்குறிப்பிட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பொறுப்பை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தட்டிக் கழித்தது. இந்திரா ஜெய்சிங், இராம் நாராயண்குமார் போன்ற புகழ்பெற்ற மனித உரிமைப் போராளிகள் சுமார் பத்தாண்டு காலம் போராடியும் குற்றம் செய்த காவல்துறையினர் இன்றுவரை தண்டிக்கப் படவில்லை.

ஆந்திரம், தமிழ்நாடு போன்ற இடங்களில் நக்சல்பாரிகள் எனப்படும் மார்க்சிய-லெனினிய-மாவோயிச இயக்கங்களைச் சேர்ந்தோரை ஒழிப்பதற்கு 'என்கவுன்டர்' முறையை அறிமுகப்படுத்தின மாநில அரசுகள். எண்பதுகளில் தேவாரத்தின் தலைமையில் தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் இருபதுக்கும் மேற்பட்ட நக்சல்பாரி இயக்க இளைஞர்கள் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

இன்று உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தாக நக்சல்பாரிகள் சுட்டிக்காட்டப்படுகின்றனர். நக்சல்பாரிகள் செயல்படும் மாநிலங்கள் அனைத்திலும் அரசாங்கங்களே முன்னின்று சட்ட விரோதமான கொலைப் படைகளை நடத்துகின்றன. சட்டிஸ்கரில் இதற்குப் பெயர் 'சல்வா ஜூடும்', ஆந்திராவில் 'நில்லமல்லா நாகம்', 'நிர்ஸா நாகம்' எனப் பல பெயர்களில் படைகள்.

'பாதுகாப்பு தொடர்பான செலவு' என்கிற பெயரில் அரசாங்க நிதியிலிருந்து இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. 'ஆந்திர மாதிரியைப் பின்பற்றி பிற மாநிலங்களிலும் நக்சலிசத்தை ஒழிப்போம்' எனப் பிரதமரே வெளிப்படையாகப் பேசுகிறார். சட்ட ஒழுங்கை நலைநாட்டுவது என்கிற பெயரில் அரசே சட்ட விரோதக் கொலைகளைச் செய்வதை என்ன சொல்வது? இதில் மத்திய மாநில அரசுகள் எல்லாமே கூட்டுக் களவாணிகள் தான். காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. என்றெல்லாம் வேறுபாடு கிடையாது. குஜராத் அதிகாரி வன்சாரா மேற்கொண்ட ஷெராபுதீன் படுகொலையில் குஜராத், இராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய ­மூன்று மாநிலங்கள் இணைந்து செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொண்ணூறுகளில் ஏற்பட்ட இன்னொரு மாற்றம் குண்டர்கள், தாதாக்கள் மற்றும் கிரிமினல்களை ஒழிப்பதற்கு 'என்கவுன்டர்கள்' பெரிய அளவில் விரிவாக்கப்பட்டது. மும்பை நகரம் இதில் முதலிடம் வகித்தது. இந்தியாவில் 'என்கவுன்டர்கள்' தலைநகரம் என அழைக்கப்பட்டது. அய்ம்பது, நூறு என மோதல் படுகொலை செய்த அதிகாரிகள் போற்றப்பட்டனர். இவர்களைப் பற்றி புத்தகங்கள், சினிமாக்களெல்லாம் வந்தன. பிரதிப் வர்மா என்கிற போலிஸ் அதிகாரிக்கு 'அப்தக் 100' என்று செல்லப்பெயர். அதாவது நூறு என்கவுன்டர் செய்தவன். 'அப்தக் 56' என்கிற இந்தித் திரைப்படம் இவனது வாழ்க்கை வரலாறு. அதில் நாயகனாக நடிக்க நானா படேகருக்கு பிரதிப் வர்மா எப்படி என்கவுன்டர் செய்வது என பயிற்சி கொடுத்தான். பிரதீப்பின் சிஷ்யன் தயாநாயக். இவன் 83 என்கவுண்டர் செய்தவன். பிரதிப்பின் இன்றைய 'ஸ்கோர் 105'.

மேற்குறித்த இருவரும் இன்று தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டுள்ளனர். இரண்டு குழுக்கள் இருந்தால் ஒரு குழுவினரிடம் பணம் வாங்கிக் கொண்டு இன்னொரு குழுவைச் சேர்ந்தவரை 'என்கவுன்டர்' செய்ததாக வழக்கு. எட்டாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் தயா நாயக்கின் இன்றைய சொத்து 100 கோடி ரூபாய்.

அவுட்லுக் (மே.14, 2007) இதழ் 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டு'களின் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த நிவநீத் சிகோரா (50), பிரிஜ்லால் (100), ராஜேஸ்வர் சிங் (23), டெல்லியைச் சேர்ந்த ரஜ்பீர் சிங் (100), ஜம்மு காஷ்மீரின் ஹன்ஸ் ராஜ் பரிஹார் (50), ஆந்திராவின் முரளி (25) ஆகியோர் இதில் அடக்கம்.

நம்மூ­ர் தேவாரம், விஜயகுமார், வெள்ளத்துரை ஆகியோர் ஏனோ இதில் விடுபட்டுள்ளனர். இன்று நக்சலைட்டுகளைப் பிடிப்பதற்கான சிறப்புப்படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜயகுமாரின் அதிகாரத்தில் சுமார் 12 மோதல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சந்தன வீரப்பன் குழுவினர் கொல்லப்பட்டதும் இதில் அடக்கம்.

வீரப்பனைப் பிடிப்பதெனச் சொல்லி நூற்றுக்கணக்கான பழங்குடியினர் சித்திரவதை செய்யப்பட்டதையும், 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையும் நாம் அறிவோம். இதை சதாசிவம் ஆணையம் வெளிபடுத்தியுள்ளது.

இந்த ''வீரதீரச்'' செயல்களைப் பாராட்டி ஜெயலலிதா அரசு கோடிக்கணக்கான ரூபாய்களையும், வீட்டு மனைகளையும் பரிசளித்த கதை வெட்கக் கேடானது. தேவாரத்திற்குக் கொடுக்கப்பட்ட வீட்டுமனை மட்டும் ஒரு கோடி ரூபாய் பெறும் என ஒரு இதழ் குறிப்பிட்டிருந்தது. இவர்கள் செய்யும் மோதலை விட வேதனையானது இந்தக் 'கலைஞர்கள்' வழிபாட்டுக்குரியவர்களாக மாற்றப்படுவது.

பிடித்துக் கொண்டு போய் வைத்து சித்திரவதை செய்துவிட்டுப் பின்பு கொலை செய்து மோதல் நடந்ததாக அறிவிப்பது, காவலில் உள்ளவர்களைக் கொல்வது தவிர சிறையில் இருப்பவர்களையே சொல்லி வைத்து 'என்கவுன்டர்' செய்யும் கலையில் முன் நிற்பது தமிழகம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இராஜராமன், சரவணன் என்கிற இரு தமிழ்த் தேசிய கொள்கை கொண்ட இளைஞர்களைக் காவல் நீடிப்பதற்கென சென்னை மத்திய சிறையிலிருந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, திரும்பிச் செல்லும்போது கொன்றது நினைவிற்குரியது. காவல் நீடிப்பிற்கு வழக்கமாகக் காலையில் தான் கொண்டு வருவார்கள். ஆனால், அன்று மாலையில் கொண்டு வந்தார்கள். சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருந்த அன்றைய மத்திய சிறைக்கு அண்ணாசாலை வழியாகக் கொண்டு செல்வதே வழக்கம். ஆனால், அன்று கோட்டூர்புரம் வழியாகக் கொண்டு வந்து, 'டிராபிக்கை' எல்லாம் நிறுத்திவிட்டு சுட்டுக் கொன்றனர். அரசியல்வாதிகள், போலீஸ், சிவில் நிர்வாகம் எல்லாம் இதில் ஒன்றாக இணைவது கவனிக்கத்தக்கது.

தி.மு.க. அரசும் இதில் சளைத்ததில்லை. இம்முறை ஆட்சிக்கு வந்தவுடன் சரமாரியாக ­மூன்று, நான்கு 'என்கவுன்டர்களை' கலைஞர் அரசு செய்தது. பத்திரிகைகளால் சொல்லப்பட்ட காரணம் என்ன தெரியுமா? ஜெயலலிதா ஆட்சியைக் காட்டிலும் கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறைந்துவிட்டதாக ஓர் உணர்வு ஏற்படக்கூடாதாம். அதற்காக அந்த நால்வர் பலியிடப்பட்டனர்.

சென்ற ஆண்டு போலி மோதலில் கொல்லப்பட்ட மணல்மேடு சங்கரின் கதை ரொம்பப் பரிதாபமானது. முன்பெல்லாம் 'என்கவுன்டர்' முடிந்த பின்புதான், இன்னார் கொல்லப்பட்டார் என படத்துடன் பத்திரிகைகளில் செய்தி வரும். இப்போதோ அடுத்தடுத்த என்கவுன்டர்கள் யாரை நோக்கி இருக்கும் என முன் கூட்டியே படத்துடன் செய்திகள் வருகின்றன. சங்கரை சிறையிலுள்ள போதே 'என்கவுன்டர்' செய்யப்போவதாக போலீஸ் மிரட்டியது. பஞ்சாயத்துத் தலைவரான சங்கரின் அம்மா எல்லோரிடமும் புலம்பினார். மனித உரிமை அமைப்புகள் இச்செய்தியை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றன. நீதிமன்றம் வினவியபோது அப்படியெல்லாம் செய்யப் போவதில்லை என்று சொன்னது அரசு. அடுத்த சில வாரங்களில் சங்கர் கொல்லப்பட்டார். யாரும் கண்டு கொள்ளவில்லை.

எதற்கெல்லாம் எப்படியெல்லாம் மோதல் படுகொலைகள் செய்யப்படுகின்றன என்பதைப் பாருங்கள். பணத்திற்காகக் கொல்வதைப் பார்த்தோம். ஷெராபுதீனைக் கடத்திச் சென்று கொன்று, மனைவி கவுசர் பீவியைப் பாலியல் வன்முறை செய்து கொன்றெரிந்து, எஞ்சிய உடற்பாகங்களைக் கிணற்றில் போட்டு, ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியையும் கொன்ற வன்சாரா கும்பலும் கூட தொழில் போட்டியாளரான ஒரு சலவைக் கல் வியாபாரியாம். பணம் வாங்கிக் கொண்டேகூட இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அரசியல்வாதிகள் தம்மையும் தம் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ளவும் என்கவுன்டர்கள் பயன்படுகின்றன. குஜராத் கொடுங்கோலன் மோடி தன் உயிர் எப்போதும் ஆபத்தில் உள்ளது என்கிற பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக இதுவரை 21 என்கவுன்டர்களை தனது ஆட்சியில் அரங்கேற்றியுள்ளார்.

19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜெஹான் உட்பட லஷ்கர் ஐ தொய்பா, ஜெய்ஷ்இ முஹம்மது, அய்.எஸ்.அய், நக்சலைட் எனக் காரணம் சொன்னால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இஷ்ரத் ஜெஹான் என்ற அந்த மாணவி லஷ்கர் ஐ தொய்பாவின் ஏஜண்ட் என்பதற்கு ஒரே ஆதாரம் அவரது பெயரும் மதமும்தான்.

இப்படி முத்திரை குத்தப்பட்டுக் கொல்லப்படும்போது அவர்களது உடல்கள் மட்டுமின்றி அவற்றோடு பல ஆதாரங்களும் தடயங்களும் அழிக்கப்படுகின்றன. வீரப்பன் கொலையோடு அவருடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், இராஜ்குமார் கடத்தலின்போது கைமாறியதாகச் சொல்லப்பட்ட பணம், தெல்கி, ரஜினி வரை தொடர்புபடுத்திப் பேசப்பட்ட செய்திகள் எல்லாம் அழிக்கப்படவில்லையா?

கையில் எந்த ஆயுதமில்லாது அந்த 19 வயதுப் பெண்ணைச் சுட்டுக் கொல்வதைக் காட்டிலும் கைது செய்து விசாரிப்பதல்லவா பயங்கரவாதத்தை ஒழிக்கப் பயன்படும்?

என்கவுன்டரில் கொல்லப்பட்ட உடல்களை உறவினர்கள் குளிப்பாட்டி புதைக்கக்கூட அனுமதிக்காமல் அவசர அவசரமாகக் காவல்துறையே எரிப்பது ஏன்? 'மோதல்' என்பது எதிர்பாராத நிலையில் எதிரிகளுடன் ஏற்படக்கூடிய எதிர்கொள்ளல். இதில் எதிரி கொல்லப்படத்தான் வேண்டுமென்பதில்லை. எல்லா மோதல்களிலும் எதிரிகள் தப்பிச் செல்வதும் எப்படி?

இப்படி எத்தனையோ 'ஏன்'களையும் 'எப்படி'களையும் உள்ளடக்கியவைதான் என்கவுன்டர் கொலைகள்.

வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் கிரிமினல் நடவடிக்கைகளையும் அரசு கண்டு கொள்ளக்கூடாது என நாம் சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கை நலைநாட்டும் கடமை அரசுக்கு உண்டு என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இந்த நிலைநாட்டலில் உள்ள காவல்துறையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். இத்தகைய நடவடிக்கைகளில் சுய பாதுகாப்பிற்காக கொலையும் செய்ய இ.பி.கோ. 96, 97, 100 பிரிவுகளில் ஏற்பு இருந்த போதும் வன்முறையையும் உயிர்க் கொலையையும் தவிர்ப்பதே குற்ற நடவடிக்கைச் சட்டம் சாராம்சமாக வலியுறுத்தும் செய்தி. குறிப்பாக 46(III) பிரிவு இதை அழுத்தம் கொடுத்து வலியுறுத்துகிறது. சுயபாதுகாப்புக்காகச் சுட்டதாக போலீசே உரிமை கொண்டாடி அத்தோடு பிரச்சினையை ஊற்றி ­மூடிவிட இயலாது.

'என்கவுன்டர்களை' ஒரு குற்றமாகப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வது அவசியம். அவ்வாறு பதிவு செய்யாமையும், விசாரணை மேற்கொள்ளாமையும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

அரசியல் சட்டத்தின் 21ஆம் பிரிவின்படி உயிர் வாழ்தல் குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. 14ஆம் பிரிவின்படி அனைவரும் சட்டத்தின் முன் சமம். போலீஸ் செய்தாலும் மற்றவர்கள் செய்தாலும் கொலை கொலையே.

1994 மார்ச் 30 அன்று ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகம் (APCLC) 1991-93 கால கட்டத்தில் ஆந்திரத்தில் நடைபெற்ற 496 போலி மோதல் கொலைகளைப் பட்டியலிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (NHRC) புகார் மனு ஒன்றை அளித்தது. அது தொடர்பான விசாரணையின் போது 'என்கவுன்டர்' தொடர்பாக ஆணையம் வைத்த பரிந்துரைகளாவன:

(1) கொலை செய்யப்பட்டவரை, என்கவுன்டர் நடந்தபின், குற்றம் சுமத்தப்பட்டவராக அறிவித்து, குற்ற நடைமுறைச் சட்டம் 307ம் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, பின் குற்றவாளி இறந்து போனதால் வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவிப்பது சட்ட விரோதமானது.

(2) மோதல் கொலைகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பொறுப்பிலுள்ள அதிகாரியால் குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 154, 170, 173 மற்றும் 190 ஆகியவற்றின் கீழ் முறையான விசாரணை செய்யப்படுவது அவசியம்.

(3) இந்திய சான்றுச் சட்டம் 105இன் (EVIDENCE ACT) பிரிவின்படி சுயபாதுகாப்பிற்காகக் கொல்லும் உரிமையைப் பயன்படுத்தியதை நீதிமன்றத்தில் நிறுவ வேண்டும்.

(4) ஒவ்வொரு கொலையும், அது தற்காப்பிற்காகச் செய்யப்பட்டிருந்த போதும்கூட, கைது செய்யப்பட வேண்டிய குற்றமே. எனவே, புலன் விசாரணை செய்வது அவசியம். மாநில உளவுத்துறை அல்லது வேறு ஏதேனும் சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பு ஒன்றின் ­மூலம் ஒவ்வொரு என்கவுன்டர் கொலையும் புலன் விசாரணை செய்ய வேண்டுமென மாநில அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

இது தவிர தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எம்.என்.வெங்கடாசலையா முதலமைச்சருக்கு எழுதிய மார்ச் 29, 1997 நாளிட்ட கடிதத்திலும் மேற்குறித்தவை வற்புறுத்தப்பட்டன.

புலன் விசாரணை செய்யும் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்களே என்கவுன்டர் செய்தவர்களாக இருக்கும்பட்சத்தில் வேறு சுதந்திரமான புலன் விசாரணை நிறுவனம் விசாரிக்க வேண்டும் எனவும், இத்தகைய விசாரணையின் அடிப்படையில் காவல் துறையினர் மீது வழக்குத் தொடரப்பட்டால் மோதலில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் கூட வெங்கடாசலையா குறிப்பிட்டிருந்தார்.

டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க அரசு, அசோக் ஜோரி எதிர் உ.பி. அரசு ஆகிய ரிட் வழக்குகளில் நீதியரசர்கள் குல்தீப் சிங், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோரும், பி.யூ.சி.எல். எதிர் இந்திய அரசு வழக்கில் நீதியரசர்கள் ஜீவன்ரெட்டி மற்றும் சுஹால் சென் ஆகியோரும் வழங்கிய தீர்ப்பையும் விசாரணை மேற்கொள்ள வழங்கப்பட்ட ஆணையையும் சுருக்கம் கருதித் தவிர்க்கிறோம்.

மோதலில் கொல்லும் காவல்துறையினரை வீரதீரச் சாகசக்காரர்களாகக் காட்டுவது, அவர்கள் சொல்லும் பொய், புனை சுருக்கங்கள் அனைத்தையும் அப்படியே வெளியிடுவது ஆகியவற்றின் ­மூலம் என்கவுன்டருக்கு ஆதரவான ஒரு மனநிலையை ஊடகங்கள் உருவாக்குவதும் கண்டனத்திற்குரியது.

''விஜயகுமாருக்கும் விஜயகாந்துக்கும் என்ன வித்தியாசம்? முன்னவர் 'என்கவுன்டர்' செய்தார். பின்னவர் 'சின்னக்கவுண்டர்' செய்தார்'' என்பது போன்ற 'ஜோக்'குகளை வெளியிட்டு மத்திய தர வர்க்கத்தினரைப் புல்லரிக்கச் செய்வது என்பதெல்லாம் மனித உரிமை நோக்கில் மிகவும் கவலைக்குரியது.

என்கவுன்டர் கொலைகள் விசாரணையின்றி அனுமதிக்கப்படுவதன் ­மூலம் என்றென்றும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பிரதேமாக நம்முடையது மாற்றப்படுகிறது. சட்டப்பூர்வமற்ற ஒரு நிலையைச் சட்டப்பூர்வமாக்குவதாக பரிசறிவித்தல்கள், புகழ் பாடல்கள் முதலியன அமைகின்றன. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை எந்த மக்கள், 'குடிமக்கள்' என்கிற நிலையிலிருந்து 'குடிமக்கள் அல்லாதவர்கள்' என்கிற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

என்கவுன்டர் கொலைகள், குற்றம் சுமத்தப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கே அழைத்து வராமல் காவல் நீடிக்கும் 'வீடியோ கான்பரன்சிங்', பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள 'உண்மை அறியும் சோதனைகள்' ஆகியவற்றின் ­மூலம் காவல்துறையில் உரிமைகள் அபரிதமாக்கப்படுதல் ஜனநாயகத்திற்கும் கேடு.

குடி உரிமையிலும், மனித கண்ணியங்களிலும் அக்கறையுள்ளோர் ஒன்றிணைவோம்!

போலி மோதல்களை எதிர்ப்போம்!



போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம்


தொடர்புக்கு:

வழக்குரைஞர் பொ.இரத்தினம் 94434 58118,
பேராசிரியர் அ.மார்க்ஸ் 94441 20582,
வழக்குரைஞர் பாவேந்தன் 94433 06110,
கோபால் 98413 24699,
புதுவை கோ.சுகுமாரன் 98940 54640.

Wednesday, July 11, 2007

ஆனந்த விகடனில் கோ.சுகுமாரன் நேர்காணல்

ஆனந்த விகடன் இதழில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் நேர்காணல் வெளிவந்துள்ளது.
நேர்காணல் கண்டவர்: டி.அருள் எழிலன்.
புகைப்படங்கள்: கே.ராஜசேகரன்.

குறிப்பு: தெளிவாக படிக்க படத்தைக் கிளிக் செய்யவும்.








இணையதளத்தில் கோ.சுகுமாரன் நேர்காணல் குறித்த விவாதம்

போலீஸ் தொல்லையால் அரவாணி தற்கொலை : ரூ.5 லட்சம் நட்டஈடு - உயர்நீதிமன்றம் உத்தரவு

போலீசாரின் பாலியல் தொல்லையால் அரவாணி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது சகோதரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நட்டஈடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் காய்கறி கடை வைத்திருக்கும் ஒரு பெண்ணிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். திருட்டு புகார் தொடர்பாக வியாசர்பாடி போலீசார் இவரை கடந்த மே 2006-இல் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் வெளியெ வந்த அவர் தினமும் வியாசர்படி காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்துப் போட்டு வந்தார்.

தினமும் காலை 8 முதல் இரவு 11.30 மணி வரை அவரை காவல் நிலையதிலேயே தங்க வைத்த போலீசார் சின்னபாண்டியன், திருநாவுக்கரசு, குமார், ரவி, சம்பத் ஆகியோர் அரவாணியான பாண்டியனை பாலியல் தொந்தரவு கொடுத்து துன்புறுத்தியுள்ளனர். இந்த கொடுமை தாங்காமல் தன் அக்கா ஜெயலட்சுமியிடமும் போலிசாரிடமும் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

இதன் பின்னரும் போலிசாரின் பாலியல் தொந்தரவு தொடர்ந்ததால் பாண்டியன் போலீஸ் நிலையம் முன்பே உடலில் மண்எண்ணையை ஊற்றி தீயை பற்ற வைத்தார். படுகாயம் அடைந்த அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சைதாப்பேட்டை நீதிபதியிடம் போலிசார் தன்னை துன்புறுத்தியதால் தற்கொலைக்கு முயன்றதாக மரண வாக்குமூலம் அளித்தார். இதனிடையே சிகிச்சைப் பலன் அளிக்காமல் கடந்த 29.6.2006 அன்று மரணமடைந்தார்.

போலீசாரின் பாலியல் கொடுமையால் தனது சகோதரர் மரணம் அடைந்தார் என்றும், எனவே தனக்கு ரூ.10 லட்சம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும், அவருடைய சகோதரி ஜெயலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் விசாரித்தனர். கொடுமை தாங்காமல் அரவாணி பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதால் அவரது சகோதரிக்கு, தமிழக அரசு ரூ.5 லட்சம் நட்டஈடு வழங்க வேண்டுமென்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

மேலும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

“வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இந்நீதிமன்றம் பரிசீலித்தது. போலீஸ் அதிகாரிகள் அத்துமீறி செயல்பட்டுள்ளனர் என்பதற்கு முகாந்திரங்கள் உள்ளன. பாண்டியன் தற்கொலை செய்து கொண்டது 5 போலீசாரின் நடத்தையால் தான் நடந்துள்ளது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

துன்புறுத்தலுக்கு ஆளானதால் பாண்டியன் மரணம் அடைந்துள்ளார். எனவே மனுதாரருக்கு ரூ.5 லட்சத்தை அரசு நட்ட ஈடாக வழங்க வேண்டும். சின்னபாண்டியன் உள்பட 5 போலீசார் மீதும் ஒழுங்கு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். நட்டஈடு தொகையை 5 போலீஸ்காரர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ள தகுந்த நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் முடிவைப் பொறுத்தது.’’

இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டி.கீதா ஆஜராகி இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததின் மூலம் நீதியை நிலைநாட்டியுள்ளார்.

மேதா பட்கர் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் : உச்சநீதிமன்றம்


சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் இயங்கும் நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவருக்கு அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் நர்மதா நதியில் அணை கட்டப்படுவதால் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி வருகிறார் மேதா பட்கர். இதற்காக நர்மதை அணை எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.

இந்த அமைப்பு வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுகிறது என்றும், வெளிநாட்டு சக்திகள் சொல்கிறபடி செயல்பட்டு இந்தியாவில் அரசியல் உறுதியைக் குலைக்கிறது என்றும் குஜராத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் உரிமைக் கவுன்சில் என்ற தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கும் தொடர்ந்தது.நர்மதை அணை எதிர்ப்பு இயக்கச் செயல்பாடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நர்மதை அணை எதிர்ப்பு இயக்கம், தனிப்பட்ட ஆதாயத்திற்காக வேண்டுமென்றே தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சி.கே.தாக்கர், அல்ட்மாஸ் கபீர் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்து தள்ளுபடி செய்தது. நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களுக்காகப் போராடும் இயக்கங்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுபவர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமையும்.