Saturday, May 11, 2013
அ. மார்க்ஸ் போன்றவர்கள் மார்க்சிய - லெனினிய இயக்கத்தை ஒழித்தனரா?
அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்களால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் வளர்க்கப்பட்டதாகவும், அதனால் வட மாவட்டங்களில் மார்க்சிய - லெனினிய இயக்கங்கள் இல்லாமல் போனதாகவும் சிலர் எழுதி வருகின்றனர். இணையத்தில் சில பார்ப்பன நண்பர்கள் இக்கருத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர் என்பது தனிக்கதை.
ஒரு இயக்கம் (அது சாதி அடிப்படையில் இருந்தாலும்) உருவாவதற்கு சமூக காரணிகள் அவசியம். புற, அகச் சூழல் தான் ஒரு இயக்கத்தை வளர்க்கும். மார்க்சியம் படித்து இயக்கம் கண்டதாக கூறுபவர்கள் இவ்வாறு எழுதுவது அபத்தமான ஒன்று. ஒரு சிலரால் ஆழ்ந்த தத்துவ பலம் பொருந்திய ஒரு இயக்கத்தை ஒழித்துக்கட்ட முடியுமென்றால் அந்த இயக்கம் இருந்து என்ன பயன் என்று யோசிக்க வேண்டியுள்ளது.
வன்னியர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எந்த கட்சியும், அமைப்பும் முன் வரவில்லை. அந்த சமயத்தில் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கம் கண்டு, 1987-ல் இடஒதுக்கீட்டிற்காக அரசை நிலைகுலைய செய்யும் அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தி, அதன் விளைவாக வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது. அதையும் தாண்டி வன்னியர்கள் ஒரு சக்தி என்பதையும் நிரூபித்து அது அவர்களின் அரசியல் அதிகாரத்திற்கும் வழிவகுத்தது. இடஒதுக்கீடு குறித்து மார்க்சிய – லெனினிய இயக்கங்களின் நிலை அன்றைக்கு பார்ப்பனிய சக்திகளின் நிலைப்பாட்டை ஒத்தே இருந்ததை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
சாதிய, தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்ற தலித்துகளின் நியாயமான வேட்கைக்கு யாரும் சரியான தீர்வைச் சொல்லவில்லை. அதற்காக முழு மூச்சில் களம் காணவில்லை. இந்த அதிருப்தி ஒருபுறமிருந்தாலும், அம்பேத்கர் நூற்றாண்டு ஏற்படுத்திய எழுச்சியும் தலித்துகளை விழிப்படைய செய்தது. இதனால், தமிழகத்தில் திருமாவளவன், கிருஷ்ணாசாமி போன்றவர்கள் தலைமையில் தலித் இயக்கம் எழுச்சி கொண்டது. தலித்துகள் குறிப்பாக அரசியல் தளத்தில் விழிப்படைந்தனர். சகல மட்டங்களும் தங்களுக்கான பங்கைக் கோரினர்.
இந்த இரு சமூகங்களும் எழுச்சி கொண்டதன் பின்னணி குறித்தோ அல்லது அதன் தேவை எழுந்த வரலாற்று காரணிகள் பற்றியோ எந்த மார்க்சிய - லெனினிய இயக்கங்களும் உரிய முக்கியத்துவம் கொடுத்து இதுவரையில் ஆய்வு செய்யவில்லை. ஆனால், இந்த எழுச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.
1984-ல் தோழர் தமிழரசன் மீன்சுருட்டியில் சாதி ஒழிப்பு மாநாடு நடத்தி ஒரு அறிக்கையை முன் வைத்தார். அதில் சாதி ஒழிப்புக்கு முன்னுரிமைக் கொடுத்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். வர்க்கம் – சாதி குறித்து அன்றைய அளவில் ஆழமாக ஆய்வு செய்திருந்தார். அம்பேத்கர் நூல்கள் போதிய அளவில் தமிழில் கிடைக்கப் பெறாத அந்த நாட்களிலேயே அந்த அறிக்கையில் அம்பேத்கர் மேற்கோள்களைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார். இன்று அ.மார்க்ஸ், கல்யாணி மீது பாயும் மார்க்சிய – லெனினிய தோழர்கள் அந்த அறிக்கையை நிராகரித்தோடு, தோழர் தமிழரசன் போன்றவர்களை அப்போது தூற்றினர்.
ரசிய, சீன வீழ்ச்சி, அது உலக அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து மாபெரும் விவாதங்கள் நடந்தன. தமிழகத்திலும் இதுபற்றி நிறைய விவாதங்கள் நடந்தன. குறிப்பாக இன்று எளிதாக குற்றம்சுமத்தப்படும் அ.மார்க்ஸ் நிறைய எழுதினார். அவர் கருத்துக்கள் மீது சூடான விவாதங்கள் நடந்து, அவை எல்லாம் தொகுத்து நூல்களாக வெளியிடப்பட்டன. அரசைக் கைப்பற்றினால் மட்டும் போதாது சிவில் சமூகத்தின் கருத்து மிக மிக அவசியம் என்றெல்லாம் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்களைத் தாண்டி சார்த்தர், கிராம்சி, அல்தூசர் ஆகியோரின் புதிய சிந்தனைப் போக்குகள் வெளிச்சம் பெற்றன. பெரியார் மீதான புதிய வாசிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தச்சூழலில் அடையாள அரசியல் உலகமெங்கும் புத்துயர்ப்பு பெற்றது. அதன் அங்கமாக தமிழகத்திலும் இதுபோன்ற தலித், வன்னியர் அமைப்புகள் முன்னிலைப் பெற்றன.
இதுபற்றி எல்லாம் எந்த தத்துவ விவாதமின்றி மிக எளிதாக ஒரு சிலரைக் குற்றம் சுமத்தி தங்கள் பொறுப்பிலிருந்து கழன்றுக் கொள்ளும் வேலையை மார்க்சிய – லெனினிய தோழர்கள் செய்வது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். எந்த வளர்சிக்கும் பயன் தராது.
உலகைக் குலுக்கிய மார்க்சிய – லெனினியம் – மாவோவியம் இன்று நிறைய சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. இதுகுறித்து மார்க்சிய – லெனினிய தோழர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. அரபு எழுச்சி, வால் ஸ்டிரீட் போராட்டம் ஆகியவை எந்த கட்சி, அமைப்பின் தலைமையிலும், எந்த தத்துவ பின்னணி இன்றியும் நடந்ததை நாம் எப்படி விளங்கிக் கொள்ள போகிறோம். தமிழகத்திலும் மூன்று தமிழர் தூக்குத் தண்டனை, முல்லை - பெரியாறு சிக்கல் துவங்கி இன்றைய மாணவர் எழுச்சி வரை தன்னெழுச்சியாக நடந்ததே? இதன் பின்னணியில் நாங்கள் இருந்தோம் என்று சிலர் சொல்லிக் கொள்ளலாம். அனால், அந்தப் போராட்டங்கள் யார் தலைமை இன்றியும், தத்துவ பின்புலமும் இல்லாமலும்தானே நடந்தது. உலகம் முழுவதும் ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்று இன்று தமிழகத்தில் ஆயுதப் போராட்டம் என்ற குரல்கூட ஒலிக்கவில்லையே ஏன்?
பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மீது எங்களுக்கு விமர்சனம் இல்லாமல் இல்லை. தமிழகத்தில் பாமக சாதி வெறியை கண்டித்து இயங்குவதில் அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பது உங்கள் கண்ணிற்குப்பட வில்லையா? வரலாற்றில் மார்க்சிய – லெனினிய இயக்கங்கள் கோட்டை விட்டதை மிக எளிதாக ஒரு சிலர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்கப் பார்ப்பது ஆரோக்கியமான அரசியல் இல்லை.
நிலைமை இப்படியிருக்க அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்கள் ஒரு இயக்கத்தை வளர்த்தெடுக்க முடியும், ஒரு இயக்கத்தை ஒழித்துக் கட்ட முடியும் என்பது எவ்வளவு பெரிய “ஜோக்”. "கீற்று" போன்ற இணைய தளங்கள் இதுபோன்ற ஜோக்குகளை நம்பியே இருப்பது அதைவிட ஜோக்கானது.
மார்க்சிய – லெனினிய தோழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணமிது.
Thursday, February 14, 2013
வினோதினி: சில நினைவுகள்
பிப்ரவரி 14, உலகம் முழுவதும் ‘காதலர் தினம்’ உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தான் ஒரு ஆணின் வக்கிர புத்திக்குப் பலியான வினோதினி உடல் எரிக்கப்பட்டது. இன்றோடு அவருக்கு அஞ்சலி செலுத்திய அனைவரும் அவரை மறக்கக்கூடும். அவரது குடும்பத்தினர் குறிப்பாக அவரது பெற்றோர் நிலைமையை எண்ணிப் பார்த்தால் மனது பதறுகிறது. காற்றில் கலந்து கரைந்துக் கொண்டிருக்கிறது வினோதினியின் நினைவுகள்.
நவம்பர் 14, வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட நாள். மறுநாள் கரைக்காலை சேர்ந்த பத்திரிகைத் துறை நண்பர் ஒருவர் தகவல் கூறினார். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. முழுத் தகவலும் கிடைக்கவில்லை. உடனடியாக அவர் படித்த காரைக்காலிலுள்ள அரசு பொறியியல் கல்லூரி முதல்வரை தொடர்புக் கொண்டு கேட்டேன். அவர் தகவல் அனைத்தையும் கூறிவிட்டு, ‘நல்லப் பொண்ணு, நல்லா படிச்சு, வேலைக்குப் போச்சு, அதுக்கு இந்த நிலைமை வந்திருக்க கூடாது’ என்று கூறி வருத்தப்பட்டார். பின்னர் இணைய தளம் மூலம் அவரின் குடும்பத்தினரின் தொடர்புக் கிடைத்தது. இன்று வரை அவரது தந்தையிடம் நான் பேசவில்லை. பேசுவதையும் தவிர்த்தேன். தன் மகள் பற்றிய கனவுடன் இருந்த அவரது வாழ்வில் விழுந்த பலத்த அடி இது. அவரின் துயரம் என்னையும் வாட்டுமே என்ற அச்சம் தான் காரணம். அவரின் தாய் மாமன் ரமேஷிடம் தான் பேசுவேன். அவரும் அவ்வப்போது தகவல் கூறிக் கொண்டே இருப்பார்.
ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்த பெண் வினோதினி, வயது 23. அவரது தந்தையார் ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றினார். மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், தங்களுக்கு இருந்த ஒரே சொத்தையும் விற்று வினோதினியை பொறியியல் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்துள்ளனர். அவர் படித்து முடித்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மாதம் ரூ. 12 ஆயிரம் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். படிப்பு முடிந்து மூன்று மாதத்திற்குள்ளேயே வேலை கிடைத்தது அக்குடும்பத்தினருக்கு சற்று சுமை குறையுமே என்ற மகிழ்ச்சி.
அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் சுரேஷ் என்பவர் ஒருதலையாக வினோதினியை காதலித்ததாக தெரிகிறது. அவர் ஒருநாள் வினோதியின் பெற்றொரிடம் பெண் கேட்டுள்ளார். அவர்கள் மறுத்துவிடவே, அதுவும் வினோதினி தனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று சொல்லி விட்ட பின்னர் அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக எண்ணியுள்ளனர் அக்குடும்பத்தினர். ஆனால், இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை.
வினோதினி தீபாவளிக்கு ஊருக்கு சென்றுவிட்டு, சென்னை செல்ல பேருந்து ஏற சென்றபோது அந்த துயரச் சம்பவம் நடந்தது. தனக்கு கிடைக்காத வினோதினி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று எண்ணி, ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் முழுவதும் அடர்த்தியான ஆசிட் கொண்டு வந்து வினோதினி மீது வீசியுள்ளார் சுரேஷ். உடல் முழுவதும் வெந்துப் போய், துடியாய் துடித்துள்ளார் வினோதினி. உடன் சென்ற அவரது தந்தையார் ஜெயபாலன் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் செய்வதறியாது தவித்துள்ளனர். ஆசிட் வீசப்பட்டால் எப்படி முதலுதவி அளிக்க வேண்டுமென்பது பற்றிக்கூட தெரியாத அவர்கள் உடனே காரைக்கால் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து, பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் மாறி மாறி சிகிச்சை அளித்துள்ளனர்.
இத்தாக்குதலில் அவரது இரண்டு கண்களும் முற்றிலும் வெந்துப் போய் அவற்றை மருத்துவர்கள் அகற்றினர். உடல் காயத்திற்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர். பார்வைப் பறிபோய் காயம்பட்ட வலியுடன் சிகிச்சைப் பெற்ற வினோதினி எதிர்க்கொண்ட துயரம் கொடுமையானது. அவரது எதிர்க்காலம் குறித்து அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, வினோதினியின் பால் அக்கறைக் கொண்ட அனைவரும் கவலைப்பட்டனர்.
அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்குப் பணமின்றி தவிக்கின்றனர் என்றவுடன் புதுச்சேரி அரசை அனுகுவது என்று முடிவு செய்தோம். பொது இடத்தில் அதுவும் பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் என்பதாலும், காவல்துறையின் அலட்சியமும் இச்சம்பவத்திற்குக் காரணம் என்பதாலும், இதற்கு அரசாங்கம் பொறுப்பு (Liability) என்பதால் அரசை அனுகுவது சரி என்று கருதினோம். நான், அ.மார்க்ஸ் ஆகியோர் அசாம் செல்ல முடிவு செய்து, அதற்கான பணிகளில் மூழ்கியிருந்த நேரம். வினோதினி மருத்துவச் செலவை அரசு ஏற்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று கோரி அறிக்கை ஒன்றை 10.12.2012 அன்று வெளியிட்டேன். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் சத்தியவதி ஆகியோருக்கு மனு ஒன்றையும் அளித்துவிட்டு அசாம் கிளம்பினேன்.
அசாமில் இருந்து திரும்பியவுடன் முதல்வர் ரங்கசாமி மற்றும் அதிகாரிகளை சந்தித்து வினோதினிக்கு உதவக் கோரினேன். முதல்வர் ரங்கசாமி ‘உதவி செய்ய முடிவு செய்துள்ளோம். குடும்பத்தினரிடம் ஒரு கடிதம் வாங்கித் தாருங்கள்’ என்று கூறினார். இத்தகவலை அவரது மாமா ரமேஷுக்கு தெரிவித்தேன். அவரும் உடனடியாக அனுப்புவதாக தெரிவித்தார். ஆனால், அவர் கடிதம் அனுப்ப காலதாமதம் ஆனவுடன், அவரை சற்று கடிந்துக் கொண்டேன். அவர் நிலைமையும் பரிதாபமானது. இணைய தளத்தில் அவரது செல்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்ததால் இரவு, பகல் என்று பாராமல் அவரை அழைத்துப் பலர் பேசியதும், அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கவனித்துக் கொண்டதும் எவ்வளவு சிரமமானது என்பதை எண்ணிப் பார்த்தேன். பின்னர் மறுமுறை நான், காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் நாஜீம், ராஜ்பவன் பாலா ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தோம். அவரது அறைலிருந்தே ரமேஷை அழைத்துப் பேசி ஒரு கடிதத்தை பேக்ஸ் மூலம் பெற்று முதல்வரிடம் அளித்தோம். அவர் உடனடியாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிதி அளித்தார்.
இந்த சம்பவம் நடந்தவுடன் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீர்ராகவன் என்னைத் தொடர்புக் கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார். அவர் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு தகவல் கூறினார். மத்திய அமைச்சர் நாராயணசாமி தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கினார். பின்னர் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கினார்.
இதுமட்டுமல்லாமல் இணைய தளம் வழியாக உலகம் முழுவதும் பலரும் கணிசமான தொகை அளித்து வினோதினி மருத்துவச் செலவுக்கு உதவினர். அவ்வப்போது அவர் உடல் நிலைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பேன். ஆனால், வினோதினி இறந்துப் போவார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. யாரும் நினைக்கவில்லை.
பத்திரிகை, ஊடகத் துறை நண்பர்கள் செய்தி என்பதைத் தாண்டி வினோதினி உயிர் பிழைக்கப் பல வகையிலும் முயற்சி செய்தனர். தொடர்ந்து செய்தி வெளியிட்டு அவரது மருத்துவச் செலவுக்கு நிதி சேர காரணமாக இருந்தனர். இது ஒரு மனிதாபிமான உதவி என்பதைத் தாண்டி, தங்களின் கடமை என்று எண்ணிச் செய்தனர். எப்போதும் ஏதாவது தகவல் சொன்னால், அதை ஒரு செய்திப் போல கேட்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் வினோதினி இறந்துவிட்டார் என்றதும் மிகவும் வருத்தப்பட்டனர், அதிர்ச்சி அடைந்தனர்.
வினோதினி இறக்கக் கூடாது, அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் விரும்பினோம். அது நடைபெறாமல் போய்விட்டது. இன்று குற்றவாளிக்குக் கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. அவரது குடும்பத்தினர் ‘வினோதினி மீது ஆசிட் வீசி அவளது மரணத்திற்கு காரணமானவனுக்கு மரண தண்டனை வேண்டாம், அவன் மீது ஆசிட் வீசி, அவள் பட்ட துயரத்தை அவன் அனுபவிக்க வேன்டும்’ என்று ஆவேமாகக் கூறியுள்ளனர். விகடன் வெளியிட்டுள்ள வினோதினியின் விடியோ பேட்டியிலும் அவரும் அதையே வலியுறுத்திக் கூறியுள்ளார். இந்த கோபத்தை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால். இதற்கெல்லாம் சட்டத்தில் இடமில்லை. காரைக்கால் காவல்துறை வழக்கைச் சரியாக நடத்தி குற்றமிழைத்தவருக்கு அதிகப்பட்ச தண்டனை வாங்கித்தர வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். இதுபோன்ற சம்பவத்திற்கு நம் சமூகம் காரணம் இல்லையா? பெண்கள் போகப் பொருளாக சித்தரிக்கப்படுவதும், அச்சு மற்றும் காட்சி ஊடகம், திரைப்படம் பெண்களைச் சித்தரிக்கும் போக்கும், பெண்களுக்குப் பாலியல் பற்றிப் போதிய விழிப்புணர்வு இல்லாததும், இன்ன பிற காரணங்களும் வினோதினி போன்ற பெண்களின் பலிக்குக் காரணமில்லையா? குற்றமிழைத்த ஒரு தனி மனிதனைத் தண்டித்துவிட்டால் போதுமா?
வினோதினியின் மரணத் துயரத்தின் ஊடாக இதுபோன்ற விஷயங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் மத்தியில் பெண்களை சமமாக பாவிக்க வேண்டுமென்ற கருத்தாக்கங்களை உருவாக்குவதும், பெண்களுக்குப் பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வி பயிற்றுவிப்பதும் அவசியம். இதுபற்றி விவாதிக்க வேண்டிய தருணமிது.
இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் இருந்தோமானால், மீண்டும் நாம் வேறு பல வினோதினிகள் பலியாவதைச் சந்திக்க நேரிடும்.
Tuesday, February 12, 2013
தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
நாள் : 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் 5.30 மணி வரை
இடம் : மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம்.
66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004.
தொடக்க விழா
காலை 9.30 மணிக்கு
தலைமை:
திரு. வீர. முருகையன்
தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.
வாழ்த்துரை:
திரு. இரா.விசுவநாதன் அவர்கள்
மாநிலச் செயலர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI), புதுச்சேரி.
நோக்க உரை:
திரு. இரா. சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.
முன்னிலை:
பேராசிரியர் நாக. இளங்கோ,
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்.
திரு. ஓவியர் இரா. இராசராசன்
விரிவுரையாளர், பாரதியார் பல்கலைக்கூடம், புதுச்சேரி.
பொறியாளர் இரா. தேவதாசு
துணைத்தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.
முகாமைத் தொடக்கி வைப்பவர்:
மாண்புமிகு திரு. வ. சபாபதி அவர்கள்
சட்டப்பேரவைத் தலைவர், புதுச்சேரி அரசு.
‘தமிழா’ தமிழ் மென்பொருள் குறுந்தட்டு வெளியீடு:
மாண்புமிகு திரு. தி. தியாகராசன் அவர்கள்
மின்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு.
பெறுதல்:
திரு. கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
அமர்வு 1: காலை 10.30 முதல் 11.15 வரை
தமிழில் இயங்குதளம்: விண்டோசு, லினக்சு (Ubuntu), தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு, தமிழில் இணைய உலாவிகள் (Web Browsers),ஒருங்குகுறி, TAM, TAB, TSCII பற்றிய விளக்கம் மற்றும் குறியீடு மாற்றம்
(font conversion)
திரு. இரா.சுகுமாரன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.
பிரசன்னா. வெங்கடேசு, புதுச்சேரி லினக்சு பயன்பாட்டாளர்கள்.
அமர்வு 2: காலை 11.15 முதல் 11.30 வரை
தமிழில் தட்டச்சு மென் பொருட்கள் நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்.
திரு. க. அருணபாரதி , மென்பொருள் வல்லுநர்.
காலை 11.30 முதல் 11.45 வரை
தேநீர் இடைவேளை
அமர்வு 3: காலை 11.45 முதல் 12.30வரை
வலைப்பதிவு செய்தல்: பிளாக், வேர்டு பிரசு, பிற…
முனைவர் தி. பரமேசுவரி
அமர்வு 4: பகல் 12.30முதல் 1.15 வரை
திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி,திரட்டி
கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற…
திரு. ஏ. வெங்கடேசு , நிறுவனர், திரட்டி.
உணவு இடைவேளை
பகல் 1.16 முதல் 2.00 வரை
அமர்வு 5: பிற்பகல் 2.00 முதல் 2.45வரை
திரு. கோ.சுகுமாரன்
தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
சமுக வலைத்தளங்கள்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு
அமர்வு 6:பிற்பகல் 2.46முதல் 3.15 வரை
பேராசிரியர் நாக. இளங்கோ
தமிழில் மின்னூல் உருவாக்குதல்
அமர்வு 7:பிற்பகல் 3.15முதல் 4.00 வரை
கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
த. சீனிவாசன், - கணியம் மின்னிதழ் - ஆசிரியர்.
அமர்வு 8: பிற்பகல் 4.00முதல் 4.15 வரை
தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள், தமிழ் தொடர்பான பிற…
திரு. தமிழநம்பி , விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
தேநீர் இடைவேளை
பிற்பகல் 4.15 முதல் 4.30 வரை
நிறைவு விழா: மாலை 4.30 மணி
தலைமை:
திரு. எல்லை. சிவக்குமார் பொதுச்செயலர்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
சான்றிதழ் வழங்கல்:
பேராசிரியர் பசுபதி
முனைவர் தி. பரமேஸ்வரி
செயலர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
நிறைவுரை:
திரு. அ.கு. சலீம்,
துணைத்தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
தொடர்புக்கு:
இரா. சுகுமாரன்: 94431 05825, எல்லை. சிவக்குமார்:
பேராசிரியர் நாக. இளங்கோ:9943646563, கோ.சுகுமாரன்: 9894054640
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, ellai.sivakumar@gmail.com
இணையம்: www.pudhuvaitamilbloggers.org/ வலைப்பூ:www.puduvaibloggers.blogspot.com/
Tuesday, January 29, 2013
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
நிகழ்ச்சி நாள்: 17-02-2013 ஞாயிறு, காலை 9.30 மணி முதல்... (காலை 9.15 மணிக்கு பதிவு தொடங்கப்படும்).
இடம்: மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம், 66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004.
இந்த நிகழ்ச்சியில் தமிழா நிறுவனத்தின் குறுந்தகடு வெளியிடப்படும், இதனைத் தொடர்ந்து தமிழ்க் கணினி தொடர்பாக கீழ்க்கண்டவைகள் பற்றிய பரத்தீடு (Power point Presentation) விளக்கம் அளிக்கப்படும்.
- தமிழில் இயங்குதளம்: விண்டோசு மற்றும் லினக்சு (Ubuntu),
- தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு,
- கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
- கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற..
- தமிழில் இணைய உலவிகள் ( Web Browsers)
- ஒருங்குகுறி பற்றிய விளக்கம்,
- தமிழில் தட்டச்சு மென் பொருட்கள் நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்,
- தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
- வலைப்பதிவு செய்தல்: பிளாக், மற்றும் வேர்டு பிரசு,
- திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி உள்ளிட்டவைகளில் இணைப்பு அதன் பயன்பாடு,
- சமுக வலைத்தளங்களில் பதிவு செய்தல்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு
- தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள்.
- தமிழ் தொடர்பான பிற செய்திகள்
இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்து பங்கேற்பவர்களுக்கு தமிழ் மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு, மற்றும் குறிபேடு, எழுதுகோல், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். காலை மற்றும் பிற்பகலில் தேநீர், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. எத்தனைபேர் வருவார்கள் திட்டமிட வசதியாக இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய விரும்புகிறவர்கள் இந்த பதிவுப் படிவத்தினை கிளிக் செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக மாணவர்களுக்கு ரூ 50/- பணி செய்பவர்களுக்கு ரூ 100/- செலுத்த வேண்டும். இந்த பயிலரங்கில் பங்கேற்க இந்த படிவத்தின் பதிவு நிபந்தனைக்கு உட்டது.
பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் வருகை தரவேண்டும். 9.15 முதல் 9.30 வரை பதிவு நேரமாகும். பதிவு நேரத்திற்கு பின் வருபவர்களின் இடம் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் இணைய தளம் , புதுச்சேரி வலைப் பதிவர் சிறகத்தின் வலைப் பக்கம், மற்றும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் முகநூலிலும் இது குறித்த செய்திகளை தொடர்ந்து பார்வையிடலாம்.
மேலும் விவரங்களுக்கு : இரா.சுகுமாரன் 9443105825, எல்லை.சிவக்குமார். 9843177943 என்ற தொலை பேசியில் தொடர்பு கொள்க.
Friday, January 25, 2013
கமல்ஹாசனின் விஸ்வரூபம் தடை: சில கருத்துக்கள்
விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. ஒரு மனித உரிமை ஆர்வலன் என்ற முறையில் எந்த கருத்தையும் தடை செய்வதன் மூலம் எதிர்கொள்ள கூடாது என்ற கருத்துடையவன். ஆனால், முஸ்லிம்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்படத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் கூறும் காரணங்களில் முக்கியமானது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என இப்படத்தில் சித்தரிப்பது.
இந்தியாவில் இந்து பாசிசம் தலைத் தூங்கத் துவங்கிய காலத்திலும், அதன் பின்னர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் முஸ்லிம் மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தின. அப்போது இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று போன முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை தேர்வு செய்தனர். இதற்கு சர்வதேச அரசியலும் பின்புலமாக இருந்தது. அப்போதுதான் 'முஸ்லிம் தீவிரவாதம்' என்ற சொல்லாடல் புழகத்திற்கு வந்தது. இவற்றை அரசுகள் எதிர்க்கொண்ட விதமும், அது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.
1997 கோவை கலவரம் நடந்து 19 முஸ்லிம்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் அவ்வளவு வீச்சாக இல்லை. அப்போதுதான் தமுமுக போன்ற அமைப்புகள் முற்றிலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களை அணி திரட்டின. அதேபோல் பல அமைப்புகள் முன்னுக்கு வந்தன. இவை மிக வெளிப்படையாகவே தீவிரவாதத்தைக் கண்டித்தன. அதோடு மட்டுமல்லாது தற்போது இந்த அமைப்புகள் தேர்தல் அரசியலில் நேரடியாகவோ அல்லது ஆதரவு என்ற நிலையிலோ பங்கேற்கின்ற சூழலைக் காண முடிகிறது. தமுமுக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் அரசியலில் வெற்றியின் முதல் படியை எட்டியுள்ளது. இவை எல்லாம் முஸ்லிம் மக்கள் தீவீரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
சென்ற 2010ல் பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பு முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லப்பட்டது என்பதோடு, நடுநிலையாளர்கள், மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டோர் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அது தீர்ப்பே அல்ல கட்டப் பஞ்சாயத்து என்று சொன்னவர்களும் உண்டு. இத்தீர்ப்பை முஸ்லிம் அல்லாத சட்ட மற்றும் வரலாற்று அறிஞர்கள் என அறிவுஜீவிகள் சமூகம் முற்றிலும் நிராகரித்தது. அப்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் இந்திய ஜனநாயகம், நீதித்துறை என அனைத்தின் மீதும் நம்பிக்கை மீண்டும் அற்றுப் போனது. அப்போதும்கூட இந்திய முஸ்லிம்கள் ஒரு சின்ன வன்முறையிலும் ஈடுபடவில்லை. இன்னமும் சொல்லப்போனால், வெளிப்படையாக கருத்துக்கூட கூறாமல், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மெளனத்தின் மூலமே எதிர்க் கொண்டனர்.
இன்றைய அரசியல் சூழலை சற்று உற்று நோக்குவோம். இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஊழல், நிர்வாக சீர்கேடு, பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிபணிதல், வாரிசு அரசியல் என பல்வேறு பிரச்சனைகளில் செல்வாக்கை இழந்து வருகிறது. மாற்றாக எழ வேண்டிய பா.ஜ.க. தன் இந்துத்துவ கொள்கையால் அதன் மீதான வெறுப்பு ஒருபுறம் இருந்தாலும், ஊழல், தலைமைப் போட்டி, மக்கள் பிரச்சனைகளில் கவனம் குவிக்காமை, மோடியின் அச்சுறுத்தல், உட்கட்சி பூசல் என தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியுள்ளது. இச்சூழலில், காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.க. ஆட்சிக்குக் கொண்டு வர சில முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு ஊடக பின்புலமும் உள்ளது. அதனால்தான், காங்கிரஸ் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்றவற்றை அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தான் முஸ்லிம் மக்களுக்கு என்றும் துணை நிற்பதாக காட்டுவதன் மூலம் முஸ்லிம் வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ‘மாலேகான், மெக்கா மசூதி’ உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னணியில் இந்துத்துவ அமைப்புகள் உள்ளதைச் சுட்டிகாட்டி ‘இந்து தீவிரவாதம்’ பற்றிக் கூறிய கருத்துக்கள் நாடெங்கும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோரவில்லை என்றால் பாராளுமன்றத்தையே நடத்த விடமாட்டோம் என பா.ஜ.க. அறிவித்ததோடு, இந்த குற்றச்சாட்டில் தப்பித்துக் கொள்ள வழி தேடிக் கொண்டுள்ளது.
இதுபோன்ற சூழலில்தான் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் சர்ச்சைக்குள் சிக்கித் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, அதன் அடிப்படையில் முஸ்லிம் தலைவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டி, அவர்கள் சொன்ன ஆலோசனைகள் அடிப்படையில் சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. இந்தப் படிப்பினையை கமல்ஹாசன் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இத்தடையை ஆதரிக்கும் யாரும் முன்வைக்காதது ஆச்சரியமளிக்கிறது. இத்தடையை எதிர்க்கும் நடுநிலையாளர்கள் கூட கமல்ஹாசனின் முஸ்லிம் எதிர்ப்பு போக்கை ஆதரிக்காதது சற்று ஆறுதல் அளிக்கிறது.
திரைப்படங்களைத் தணிக்கைச் செய்து சான்றளிக்கும் அதிகாரம் மத்திய அரசுத்தான் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியும், பிரகாஷ் ஜா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழக அரசு இத்திரைப்படத்தைத் தடை செய்ததை மறுபரீசிலனை செய்ய வேண்டுமென தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி கூறியுள்ளார். இன்றைய இந்து நாளிதழில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் தடை தவறு என்பதற்கு வழக்கமான தன் வாதங்களை முன்வைத்தாலும், பெரும்பாலும் நீதிமன்றங்கள் வழங்கிய பல்வேறு தீர்ப்புக்களைச் சுட்டிக்காட்டி வாதிட்டுள்ளது. என்னைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் இந்து போன்ற செய்தித்தாள்களில் வரும் தகவல்களையும் கட்டுரைகளையும் உற்று நோக்குபவர்கள் என்பதும் இங்குக் குறிப்பிட வேண்டும்.
ஆனால், ‘டேம் 999’ தடை குறித்து உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய தீர்ப்பு இவ்வாதங்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டது எனலாம். ‘ஒரு மாநிலத்தின் அச்ச உணர்வுகளைத் தவிர்த்துவிட்டு தனி நபரின் உரிமைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ள முடியாது. மாநிலத்தின் அதிருப்தியைப் பார்க்காமல் நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. இந்த வழக்கு முற்றிலும் சட்டம் சார்ந்தது என்றாலும், மக்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறி தடையை நீக்க மறுத்துள்ளனர். இது ‘விஸ்வரூபம்’ தடைக்கான நியாயத்தை அளிக்கிறது. ஏனெனில், இப்படத்தைப் பார்த்த முஸ்லிம் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக இப்படத்தைத் திரையிட விட மாட்டோம் என்று கூறியுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு முஸ்லிம் தலைவர்கள் அச்சமூகத்தின் ஒட்டுமொத்த குரல் என்பதை யாரும் மறுக்கவியலாது.
சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இப்படம் தடை செய்யப்பட்டதைப் பலரும் விமர்சிக்கின்றனர். இது முற்றிலும் உண்மை என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும், அமெரிக்க திரைப்படத்தை எதிர்த்து சென்னையில் நடந்த முஸ்லிம்களின் போராட்டம் சற்றே அரசை அச்சுறுத்தி உள்ளது. இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதால் சென்னை மாநகர காவல் ஆணையர் திரிபாதி அப்பொறுப்பில் இருந்து உடனடியாக மாற்றப்பட்டதை இங்கு இணைத்துப் பார்க்க வேண்டும். அதோடுமட்டுமல்லாது, இப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்தவுடனேயே தமிழக அரசு நேற்றைய முன்தினம் தமிழகம் எங்கும் காவல்துறையை ‘அலர்ட்’ செய்ததும், கிராம நிர்வாக அதிகாரிகளை அந்தந்த ஊர்களில் இருக்குமாறு பணித்ததும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில், இதுபோன்ற உணர்ச்சிபூர்வமானப் பிரச்சனைகள் எளிதில் போராட்டமாகப் பற்றி எரியும் வாய்ப்புள்ளதையும் புறந்தள்ள முடியாது.
மேலும், முழுவதும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படம் எடுக்க முடியாது என்றாலும், ஒரு சமூகத்திற்கு எதிராக கருத்து கூறுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிப்பது என்பது சட்டப்படி குற்றமென்றாலும், அவ்வாறான சூழலை உருவாக்குவது ஒரு கலைஞனின் நோக்கமாக இருக்கக் கூடாது. இதை சமூக அக்கறையுடைய படைப்பாளிகள் எனக்கூறிக் கொள்பவர்கள் செய்ய துணியமாட்டார்கள்.
அதையும் தாண்டி, ஜெயலலிதாவின் அரசியல் இதில் உற்று நோக்கப்பட வேண்டியது. சென்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் அதிமுகவை ஆதரித்தன. முஸ்லிம் வாக்குகள் பெரும்பான்மையாக அதிமுக கூட்டணிக்கே விழுந்தது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கப் போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளது நுட்பமான தேர்தல் அரசியல் தந்திரம். ஒருபுறம் மோடி பதவியேற்பில் கலந்துக் கொள்வதன் மூலம் இந்துத்துவ முகம், மறுபுறம் முஸ்லிம்கள் பிரச்சனைகளில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் வாயிலாக சிறுபான்மையினர் ஆதரவு எனும் மற்றொரு முகம் என அழகாகக் காய் நகர்த்துகிறார் என்றே சொல்லலாம்.
இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நான் ஏற்கனவே சொன்னது போல், எதற்கும் தடை தீர்வல்ல என்ற போதிலும், கமலஹாசனின் முந்தைய கால இந்துத்துவ அரசியல், குடியரசு தினத்திற்கு முன்நாள் வெளியிடுவதன் மூலம் இந்துத்துவத்துடன் இயைந்த தேசப்பக்தி, முஸ்லிம் மக்களுக்கு எதிராக உள்ள பொதுப்புத்தி அரசியலை அறுவடை செய்தல் என எல்லாவற்றையும் காசாக்கும் யுத்தி இம்முறை தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மிக அடிப்படையான காரணமாக அமைந்துள்ளது.

Labels:
கமல்ஹாசன்,
கோ.சுகுமாரன்,
விஸ்வரூபம்
Thursday, January 24, 2013
சற்றே நிழல் சுகம் பெற ஒரு மரம்!
புதுச்சேரி நகரத்தின் மையப் பகுதியில் உள்ள நேரு வீதியில் வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. அதனுள்ளேயே அனைத்து மகளிர் காவல் நிலையமும், அருகில் போக்குவரத்துக் காவல் நிலையமும் உள்ளன. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி இது.
காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிற்படி அருகே படர்ந்து நிழல் தரும் 'சக்கரை மரம்' ஒன்று நீண்ட காலமாக இருந்தது. துயரங்கள் பல சுமந்து, விடிவு தேடி வரும் மக்களுக்கு இம்மர நிழல் சற்று இளைப்பாற உதவும். எங்களைப் போன்ற இயக்கவாதிகளைச் சொல்லத் தேவையில்லை. கூட்டம் போடவும், போராட்டம் நடத்தவும், பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கவும் பலமுறை இங்குக் கூடுவோம். அப்போது இம்மரத்தின் நிழலையும், காய்த்துக் கிடக்கும் சக்கரைப் பழத்தையும் நாங்கள் சுவைக்கத் தவறுவதில்லை. சென்ற 'தானே' புயலில் இம்மரமும் மரணத்தைத் தழுவியது. பலமுறை அங்கு நின்ற போது மரமற்ற வெறுமையும், வெயிலின் தாக்கத்தையும் உணர முடிந்தது.
அங்கு ஒரு மரம் வைக்க வேண்டுமென நண்பர்கள் அஷ்ரப், பாரதி ஆகியோர் என்னிடம் கூறினர். பாரதி தன்னிடம் மரக்கன்றை பாதுகாக்கும் வலைக் கூண்டு உள்ளதெனவும், மரக்கன்று வாங்கி வந்தால் வைத்து விடலாம் என்றும் கூறினார். சென்ற ஜனவரி 1 அன்று மரக்கன்று வைக்க முடிவு செய்தோம். விடுமுறை என்பதால் எங்கும் மரக்கன்று கிடைக்கவில்லை. ஒரு வழியாக அலைந்து தேடிக் கண்டுபிடித்து அதே சக்கரை மரக்கன்று ஒன்றை வாங்கி வந்தோம்.
மதிய வேளையில் மரம் வைக்க பள்ளத்தைத் தோண்ட துவங்கியவுடன் அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ராமராஜ் அவர்கள் எங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எப்போதும் பிரச்சனைக்காகவே வருபவர்கள் இன்று திடீரென பள்ளம் தோண்டிக் கொண்டிருகிறார்களே என்று. அங்கு மரம் ஒன்று வைக்கப் போகிறோம் என்றவுடன் எங்களைப் பாராட்டினார். அருகிலிருந்த போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் அதிகாரிகளும் அங்கு குழுமினர். காவல் கண்காணிப்பாளர் கையாலேயே மரக்கன்றை நட்டோம். வந்திருந்த அனைவரும் தண்ணீர் ஊற்றினோம். இனிப்பு பொட்டலம் ஒன்றைப் பிரிந்து எல்லோருக்கும் இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார் காவல் கண்காணிப்பாளர். எளிதாக முடிய வேண்டிய வேலை, ஒரு சிறப்பான விழா போன்று நடந்தேறியது. அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இவ்வளவு நாள் நாம் இதை யோசிக்கவில்லையே எனப் பேசியபடியே அனைவரும் கலைந்தார்கள்.
இப்போது அந்த மரம் நன்றாக துளிர் விட்டு தழைத்தோங்க துவங்கியுள்ளது. வாக்களித்தபடி தினமும் காலை, மாலை என கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்களும், மகளிர் காவல்நிலையத்தினரும் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். ஒரு சின்ன விஷயம்தான் இது. ஆனால், மனத்திற்கு எத்தனை மகிழ்ச்சியைத் தருகிறது பாருங்கள். தன் நிழலே தனக்குப் பயன்படாத போது, வெயிலில் காய்ந்து மற்றவர்களுக்கு நிழலும் தரும் மரமென்ற உயிரும் நம் சொந்த பந்தம் தான்.
Saturday, January 19, 2013
மாணவர்களுக்குத் தாராளமாக உதவ வேண்டுகோள்!
அரசுப்
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குப் புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாகவே
செயல்படுத்தி வருகிறது. இருந்தாலும் இவை மாணவர்களுக்கு முழுமையானதாக இல்லை. இதனைக்
கணக்கில் கொண்டு கிராமப்புற மாணவர்களுக்கு உதவ 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் சில முயற்சிகள்
மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில் ஒரு கிராமப்புற பள்ளிக்கு முதலில் நம்மால் முடிந்த
உதவிகளைச் செய்ய முடிவு செய்துள்ளோம். அந்தப் பள்ளிக்குத் தேவைகள் என்ன என்பது
குறித்து ஆய்வு செய்தோம். அவை: 1.) ஒரு எல்.சி.டி. புரொஜெக்டர், 2)
150 மாணவர்களுக்கு
(6, 7, 8ஆம் வகுப்பு) காலணி (சேன்டக்ஸ்) 3) 800 மாணவர்களுக்கு முழுநிளச்
சுவடி.
இதற்கு முகநூல் நண்பர்களின் உதவியை பெரிதும் எதிர்ப் பார்க்கின்றோம். தங்களால் முடிந்த நிதி உதவியினை காலத்தே அளித்து உதவ வேண்டுகிறோம். நிதி அளிப்பவர்களுக்கு முறையே வரவு செலவு கணக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கென தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளோம். 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' எங்கும் நிதியுதவி பெற்று செயல்படும் அமைப்பு அல்ல என்பதும், முழுக்க முழுக்க மக்களின் உதவிகளை மட்டுமே நம்பி செயல்படுகிற அமைப்பு என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.
நிதி உதவி அளிக்க விரும்புவோர் தொடர்புக் கொள்ள:
கோ. சுகுமாரன், செயலாளர்,
மக்கள்
உரிமைக் கூட்டமைப்பு.
பேச: 98940 54640
மின்னஞ்சல்:
sugumaran.ko@gmail.com
Friday, November 09, 2012
புதுச்சேரியின் நீர் ஆதாரத்தைப் பாழாக்கிய செம்மண் கொள்ளை
முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் மற்றும் பலர் கைதாகி வழக்கை எதிர்க்கொண்டது இந்த செம்மண் பூமியால்தான். இது புதுச்சேரியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள தமிழகப் பகுதி. இந்த வளம் நிறைந்த செம்மண் பூமியை அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுரண்டி விற்று லாபமடைந்ததுதான் இவர்கள் மீதான குற்றச்சாட்டு. மேலோட்டமாகப் பார்த்தால் வெறுமனே ஒரு ஊழல் என்றே இதை எண்ணத் தோன்றும். ஆனால், இந்த மண் சுரண்டலால் புதுச்சேரியின் ஒட்டு மொத்த நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது என்பது மிகப் பெரும் சோகம். மேலே சொன்ன செம்மண் பூமி விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், நடுமேடு கிராமம் ஆகும்.
புதுச்சேரிக்கு முழுவதுக்கும் குடிநீர் வழங்கிய பகுதி முத்தரையர்பாளையம். இது இந்த செம்மண் பூமிக்கு மிக அருகிலிருக்கும் சிறிய ஊர். நான் சிறுவனாக இருந்த போது இங்கிருந்து தான் நகரத்திற்கு குடிநீர் வரும். அவ்வளவு இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த நீரைப் பருகியவர்கள் வெளியூர் சென்றாலும் கையில் ஒருபுட்டியில் இந்த நீரை எடுத்துச் சென்று அருந்துவர். புதுச்சேரியில் தண்ணீர் நன்றாக இருக்கும் என்றால் அது முத்தரையர்பாளையம் தண்ணீரைத்தான் குறிக்கும்.
மழை பெய்யும் காலங்களில் உபரி நீர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையில் தேக்கி வைக்கப்படும். இந்த நீர் செஞ்சி ஆற்றில் தேங்கி, சுத்துக்கேணி வாய்க்கால் வழியாக புதுச்சேரியின் நீர் ஆதாரமான உசுட்டேரிக்கு வந்து சேரும். உசுட்டேரி புதுச்சேரியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள 12 சதுர கி.மீ. அளவுள்ள ஏரி. இந்த ஏரியின் வட கிழக்குப் பகுதி தமிழகப் பகுதி. இந்த ஏரியில் தேங்கி நிற்கும் நீர் புதுச்சேரிக்கு மிகப் பெரிய நீர் ஆதாரம். இப்படி தேக்கி வைக்கப்படும் இந்த நீர் நிலத்தடி நீராக வடிந்து இந்த செண்மண் பூமிக்கு அடியில் ஓடி வந்து முத்தரையர்பாளையத்தைச் சேரும். உசுட்டேரி விஜயநகரத்து ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இந்த ஏரியைப் பாதுகாக்க ஒரு ‘உசுட்டேரி பாதுகாப்பு இயக்கம்’ ஒன்றை உருவாக்கி வைத்துள்ளோம். அது தனிக் கதை.
முத்தரையர்பாளையம் புதுச்சேரி நகரத்திற்கே குடி நீர் வழங்கிய மிகப் பழமையான நீர்தேக்க அமைப்பு கொண்ட பகுதி. இப்போதெல்லாம் நீரை உயரமான நீர்தேக்க தொட்டியில் சேமித்து மக்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், முத்தரையர்பாளையத்தில் நீரை நிலத்திற்கு கிழே 50 X 50 அடி அளவுள்ள 12 அடி ஆழமுள்ள பெரிய தொட்டிக் கட்டி அதில் சேமித்து வைப்பார்கள். அங்கிருந்து தொடக்கத்தில் நீராவி என்ஜின், பிறகு டீசல் என்ஜின் மூலமும் நீரை இறைத்து குழாய் வழியாக வழங்கி வந்தார்கள். இப்பகுதி கடல் மட்டத்தைவிட 70 அடி உயரமான பகுதி என்பதால் இயற்கையாகவே நீரோட்டம் புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும். இந்த நீர் பகிர்வுத் திட்டம் 1863ல் செயல்பாட்டிற்கு வந்தது. தற்போது முத்தரையர்பாளையம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டும் இங்கிருந்து குடிநீர் வழங்கி வருகிறார்கள். முத்தரையர்பாளையம் நிலத்தடி நீர் மட்டம் தற்போது 250 அடிக்கு கீழே போய்விட்டது. துவக்கத்தில் 30 - 40 அடி ஆழத்தில் நீர் கிடைத்தது என்பது பழங்கதை. இந்த இயற்கை சார்ந்த அறிவியல்பூர்வமான குடிநீர் வழங்கு முறை பிரெஞ்சுக் காலத்தில் உருவாக்கப்பட்டது.
புதுச்சேரியில் 70களில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக் கட்டி குடிநீர் வழங்கும் முறை வந்தது. மக்கள் தொகை பெருக்கம், அண்டை மாநிலத்திலிருந்து குடியேற்றம் என புதுச்சேரியின் மக்கள் தொகை பல்கிப் பெருகிவிட்டது. இதனால், குடிந்நிர் தேவை அதிகமானதால் இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் முறை வந்தது. முதன் முதலின் நீர்தேக்கத் தொட்டி பட்டாணிக் கடை ஜங்ஷனில் கட்டப்பட்டது. பின்னர் ரயில் நிலையம், முத்தியால்பேட்டை என பல இடங்களில் இந்நீர் தேக்கத் தொட்டிகள் உள்ளன. இன்று நிலத்தடி நீரை மட்டுமே நம்பி குடிநீர் விநியோகம் உள்ளது.
இவ்வாறு புதுச்சேரியின் நீர் ஆதாரமான முத்தரையர்பாளையத்திற்கு நீர் வரத்து தடுக்கப்பட்டதற்கும், நீர் மாசுப்பட்டதற்கும் மேலே சொன்ன செம்மண் கொள்ளை மிகப் பெரும் காரணம். முதல் 3 அடியில் இருக்கும் மணல், அதற்குக் கீழே இருக்கும் செம்மண், அதற்கும் கீழே கூழாங்கற்கள் என அனைத்து வகை இயற்கை வளங்களையும் சுரண்டினார்கள். இந்த கூழாங்கற்களுக்கு கீழேதான் சுவையான, தூய்மையான நீர் ஓடும். செழுமையான செம்மண்ணை வாரிச் சென்று காசாக்கிய இந்த அரசியல்வாதிகள் புதுச்சேரியின் நீர் ஆதாரத்தை கெடுத்தார்கள். நீர் ஆதாரம் எப்படி சீர்குலைந்தது என்பதை மட்டுமே இங்கு எழுதியுள்ளேன். அதனால் ஏற்படும் மற்ற அழிவுகள் ஏராளம். இதனால், சுற்றுச்சூழல் சமத்தன்மை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்பது சோகத்திலும் சோகம்.
இந்தப் புகைப்படத்தில் உள்ளதைப் பார்த்தால் இந்த செம்மண் கொள்ளை எத்தகையது என்பது முழுமையாக புரியாது. நேரில் பார்த்தால்தான் அதன் கொடூரம் புரியும். வாருங்கள் ஒருமுறை…
Labels:
G.Sugumaran,
கோ.சுகுமாரன்,
சுற்றுச்சூழல்,
மணல் கொள்ளை
Tuesday, November 06, 2012
இடிந்தகரை லூர்துசாமி மீது குண்டர் சட்டம்: சில கேள்விகள்..
கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு அங்கமாக நடந்த கடல் வழி அணுவுலை முற்றுகைப் போராட்டம் சென்ற செப்டம்பர் 10 அன்று நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அரசு ஆவணப்படியே 5000 பேர் கலந்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்ட இடிந்தகரையை சேர்ந்த சிலுவை கித்தேரியான் மகன் லூர்துசாமி (வயது 68) என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடல் பாசிகளை சேகரித்து விற்று, அதன் மூலம் வாழ்ந்து வருபவர். சென்ற 02.11.2012 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர் மீது குண்டர் சட்டம் பதிந்து உத்தரவுப் பிறப்பித்துள்ளார் (T.P.D.A. No. 6122 dated 2.11.2012). அந்த உத்தரவினைக் காண நேர்ந்தது.
இந்த உத்தரவு சட்டப்படி செல்லுமா, அந்த உத்தரவிலுள்ள நுணுக்கமான ஓட்டைகள் குறித்து எதையும் நான் எழுத விரும்பவில்லை. ஏனென்றால், அவர் மீது போடப்பட்டுள்ள இந்த குண்டர் சட்டம் ‘போர்டில்’ வைத்து உறுதி செய்யப்பட வேண்டும். நாம் அதை எழுதினால் போலீசார் அவற்றை சரிசெய்ய குறுக்கு வழியில் வேறு ஏதாவது செய்வார்கள்.
அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள சில பகுதிகளைத் தங்களின் பார்வைக்கு அப்படியே தருகிறேன்:
பாரா 3-ல் ஒரு பகுதி: திரு. லூர்துசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களான கம்பு, கல் மற்றும் அருவாள் ஆகியவற்றால் காவலர்களை தாக்கி காயம் ஏற்படுத்தினார்கள். வாதி மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் சிறப்பு நிர்வாகத்துறை நடுவர் ஆகியோரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தார்கள். இதனால் காவல் அதிகாரிகளுக்கும், ஆளிநர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது. பயங்கரமான ஆயுதங்களால் திரு. லூர்துசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மீதும் “இந்த போலீஸ்கார புண்டமகன்களா கொல்லுங்கடா” என்று சொல்லி தொடர்ந்து தாக்கி திட்டமிட்டபடி கொலை செய்ய முயற்சித்தார்கள். இந்த கொலைவெறி தாக்குதல் காரணமாக காவல்துறையை சேர்ந்த பலருக்கு காயங்கள் மற்றும் கொடுங்காயங்கள் ஏற்பட்டன.
பாரா 4-ல் ஒரு பகுதி: திரு. லூர்துசாமி என்பவரின் செய்கை அந்த பகுதி வாழ் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பெரும் அமைதியின்மையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பொதுமக்களின் பொது அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது.
பாரா 6-ல் ஒரு பகுதி: ஆவணங்களை பரீசிலனை செய்ததிலிருந்து திரு. லூர்துசாமி என்பவர் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வருகிற காரணத்தால் அவர் தமிழ்நாடு சட்டம் 14/1982 பிரிவு 2 (எப்)ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு குண்டர் ஆவார் என்பதை நான் மனதார அறிகிறேன்.
இதைக் கவனமாக படித்தால் ஒன்று மட்டும் நமக்குத் தெளிவாகிறது. தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் ‘ரைட்டர்களை’ நாம் பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆவணமே பொய்கள் கலந்த ஒரு நல்ல புனைக் கதைப் போல் விரிகிறது.
68 வயதான ஒருவருக்கு மன பலம் கூட இருக்கலாம். ஆனால், இவர்கள் சொல்வது போல் தாக்குதலில் ஈடுபடும் அளவுக்கு உடல் பலம் இருக்காது. இன்னொன்று இவர்கள் குறிப்பிட்டுள்ள பயங்கர ஆயுதங்கள் எவை தெரியுமா? கம்பு, கல் மற்றும் அருவாள்.
பொதுமக்களின் பொது அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துவிட்டதாக கூறுகிறது இந்த ஆவணம். ஆனால், இவர் மீது எந்த பொதுமக்களும் புகார் அளிக்கவில்லை. அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்துதான் வழக்குப் போடப்பட்டுள்ளது.
இவர்கள் லூர்துசாமி மற்றும் மேலும் ஒருவர் மீது போட்டுள்ள குண்டர் சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது என்பதை அதன் பெயரை அறிந்துக் கொண்டாலே தெளிவாக தெரியும்.
அந்த சட்டத்தின் முழுப் பெயர்: 1982 ஆண்டு கள்ள சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சார தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொளி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 14/1982.
இதைப் படிக்கும் போது இன்று அதிகாரத்தில் இருக்கும் பலரும் இந்தச் சட்டப்படி உள்ளே தள்ள வேண்டியவர்கள் என்று நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
இந்த சட்டப் பெயரில் உள்ள எந்தக் குற்றத்தை செய்துவிட்டு, 68 வயதில் லூர்துசாமி வேலூர் சிறையில் உள்ளார் என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம் என அனைத்து அடக்குமுறை சட்டங்களும் போராட்டம் நடத்தும் மக்கள் மீது ஏவுவதை அரசாங்கங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இந்தச் சட்டங்களை நீக்க வலியுறுத்தி தொடர்ந்துப் போராடுவதே இதுபோன்ற கடும் அடக்குமுறையை முறியடிப்பதாகும்.
Wednesday, October 31, 2012
டிவிட்டரில் விமர்சித்தவர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 30.10.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:
டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தற்காக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
டிவிட்டர் வலைத்தளத்தில் வதேராவைவிட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து குவித்துள்ளதாக பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் அளித்த புகாரின் பேரில் சி.ஐ.டி. போலீசார் குறிஞ்சி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி என்பவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008 பிரிவு 66 ஏ-இன் படி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கார்த்திக் சிதம்பரத்தின் இந்த செயல் கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பொது வாழ்விலுள்ள அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு அவர் உரிய பதிலளிப்பதன் மூலம் எதிர்க்கொண்டு இருந்தால் அதுவே முதிர்ச்சியான நடவடிக்கை ஆகும். அதைவிடுத்து, அவர் போலீசை நாடியிருப்பது கண்டனத்திற்குரியது.
இதுபோன்ற சூழ்நிலையில் போலீசாரும் புகார் கொடுத்தவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மெற்கொண்டது தேவையற்ற (Unwanted), அளவுக்கு அதிகமான (Disproportionate) நடவடிக்கை ஆகும். புதுச்சேரி போலீசாரின் இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
இதுபோன்று வழக்குப் போடுவது சுதந்திரமாக கருத்து கூற வாய்ப்புள்ள டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை கட்டுப்படுத்தும் முயற்சி என்பதோடு, இணையத் தளங்களில் எழுதி வருபவர்களை அச்சுறுத்தும் போக்காகும்.
கருத்துச் சுதந்திரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ‘கருத்து’ என்ற அமைப்பை நடத்தி வந்த கார்த்திக் சிதம்பரம் தொழிலதிபர் மீதான புகாரை திருப்பப் பெற்று கருத்துரிமைக்கு வலுசேர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Labels:
G.Sugumaran,
கோ.சுகுமாரன்,
டுவிட்டார்,
பேஸ்புக்,
மனித உரிமை மீறல்கள்
Subscribe to:
Posts (Atom)