Wednesday, November 14, 2007

தென்காசி இன்னொரு கோவை அகக்கூடாது...உண்மை அறியும் குழு அறிக்கை!

தொகுப்பு: பேராசிரியர் அ. மார்க்ஸ்

தென்காசியில் சமீபகாலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், கொலைகள் சார்பாக ஆய்வு செய்ய மனித உரிமை இயக்கங்கள் பலவும் இணைந்த உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. புதுவை கோ.சுகுமாரன் தவிர இளம் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த் (சென்னை), சீனி சுல்தான் (சென்னை), மனோகரன் (சென்னை), தமயந்தி (சேலம்), செங்கொடி (சென்னை), பொற்கொடி (மதுரை) ஆகியோர் தவிர, கோவை வெடிகுண்டு வழக்கில் வாதிட அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அப்துர் ரஹ்மான் அகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.

சென்ற செப்டம்பர் 7ஆம் தேதியன்று தென்காசி சென்றிருந்த இக்குழு இருதரப்பிலும் பலரையும் சந்தித்துப் பேசியது. கொலையுண்ட நாகூர் மீரானின் மனைவி பிர்தவ்ஸ் (18), பஷீரின் மனைவி மும்தாஜ் (19), கொலையுண்ட குமார் பாண்டியன், செந்தில் முதலானோரின் சகோதரர்கள் சீனிவாசன், மகாதேவன் ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேசினோம். தென்காசி நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களையும் சந்தித்தோம். முன்னதாக வழக்கறிஞர் தமயந்தியும் அவரது உதவியாளர்களும் சேலம் சிறையில் நீதிமன்றக் காவல் உள்ளவர்களைச் சந்தித்துத் தகவல்களை சேகரித்திருந்தனர்.

தென்காசி முழுவதும் போலீஸ் கெடுபிடி இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. கூடியவரை ஒவ்வொரு தெருவிலும் இரு காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. காவல்துறை ஒரளவு முன்எச்சரிக்கையுடன் இருப்பது தெரிந்தது.

1982-ல் நடைபெற்ற மதமாற்றத்தின் மூலம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மீனாட்சிபுரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் தென்காசி. அன்று முதல் இந்துத்துவ சக்திகளின் கவனம் பெற்ற ஊராகவும் இது உள்ளது. இந்த அறிக்கையை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட எல்.கே.அத்வானி திருநெல்வேலிக்கு வருகை புரிந்துள்ளார்.

பொதிகை மலை அடிவாரத்தில் குற்றால அருவிக்குச் சில கல் தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இவ்வூரில் நெடுங்காலமாக இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மக்கள் தொகையில் சுமார் 40 சதம் பேர் முஸ்லீம்கள். இங்குள்ள 13 ஜும்மா மசூதிகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 3,000 பேர் என கொண்டாலும் தென்காசியிலுள்ள மொத்த முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 40,000 இருக்கலாம். பெரும்பாலும் சிறு, நடுத்தர வியாபாரிகளாக உள்ளனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரே பெரு வணிகர்களாகவும், சிறு தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

1967-ல் நடைபெற்ற மொகரம் ஊர்வலம் ஒன்றின்போது முதன்முதலில் சிறு கலவரம் ஒன்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதிலிருந்து தென்காசியில் அந்த ஊர்வலம் நடப்பதில்லை.1974-ல் நகர் நடுவில் கடைத்தெருவில் கோயிலருகில் உள்ள பொதுத் திடல் ஒன்றில் திடீரென ஒரு பிள்ளையார் சிலை நிறுவப்பட்டுள்ளது. சில நாட்களில் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த கீற்றுப் பந்தல் ஒன்று கொளுத்தப்பட்டிருக்கிறது. சிலையை வைத்தவர்களே அதைக் கொளுத்தியதாகவும் ஒரு தரப்பினர் கூறினர். இந்தச் சந்தர்ப்பத்திலும் கலவரம் மூண்டுள்ளது. பின்னர் சிலை அகற்றப்பட்டுள்ளது. தற்போது கொலையுண்ட இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவருக்கு இச்சம்பவம் ஒன்றில் தொடர்பு இருந்துள்ளது. ஊர்வலத்தில் வந்தவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டைத் தாக்க முயன்றதாகவும், தமது தந்தை அதைத் தடுக்க முனைந்தபோது கலவரம் மூண்டதாகவும் சொர்ணத் தேவரின் பிள்ளைகள் குறிப்பிட்டனர். அனால் அவரே ஊர்வலத்தைத் தடுத்து கலவரம் புரிந்ததாக மற்றவர்கள் கூறினர்.

இதுதவிர கடைத்தெருவில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிராக அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்று தொடர்பாகவும் பிரச்சினை ஒன்று இருந்து வந்துள்ளது. காசி விசுவநாதர் ஆலயத்திலிருந்து சுமார் 200 அடிகள் தள்ளி அமைந்துள்ள இந்த "பஜார் பள்ளிக்கும் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடைகளுக்கு மத்தியில் உள்ளடங்கிய கூரையும், ஒடும் வேய்ந்த அந்தச் சிறு கட்டடம் சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கடைத்தெருவில் வணிகம் புரியும் முஸ்லீம்கள் மற்றும் அருகிலுள்ள ஊர்களிருந்து பொருட்கள் வாங்க வருவோர் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை செய்வதற்கான ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. மினாராக்கள், அலங்காரங்கள் ஏதுவுமின்றி சிறிய அளவில் இப்பள்ளியைச் சீர்திருத்த சில அண்டுகள் முன்பு முஸ்லீம்கள் முனைந்துள்ள போது இந்து முன்னணி சார்பில் குமார் பாண்டியன் அதை எதிர்த்துள்ளார். கூரையை மாற்றி கான்க்ரீட் தளம் அமைக்க மட்டுமே முனைந்த முஸ்லீம்கள் மாவட்ட அட்சியர் நிரஞ்சன் மார்டினிடம் அதற்கான அனுமதியைப் பெற்றிருந்த போதிலும் இந்து முன்னணியின் ஆட்சேபனையால் இன்றுவரை அப்பணி நடைபெறவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் (1992) இந்தியாவெங்கிலும் முஸ்லீம்கள் டிசம்பர் 6-ஐ துக்க தினமாக நினைவு கூர்வதை நாம் அறிவோம். இங்கும் அந்த வழக்கம் இருந்துள்ளது. சென்ற ஆண்டில் இதுதொடர்பாக முஸ்லீம்கள் தட்டிகள் வைத்தபோது அப்போதிருந்த காவல்துறை அய்வாளர் சக்ரவர்த்தி அதை நீக்குமாறும் தட்டிகளுக்கு ஏதும் அபத்து வந்தால் தான் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளார். அடுத்தநாள் தட்டிகள் எரிக்கப்பட்டுள்ளன. தவிரவும் குமார் பாண்டியனும் இந்து முன்னணியினரும் டிசம்பர் 6 அன்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர். முஸ்லீம்களுக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டு ஆத்திரம் மூட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்ற டிசம்பர் 17, 2006-ல் குமார் பாண்டியன் கொல்லப்- படுகிறார். இதுதொடர்பாக அனீபா, முருகேசன் (எ) அப்துல்லா, சுலைமான் என்கிற சிறுவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். அரசு துரித நடவடிக்கைகள் எடுத்தபோதும் கலவரமும் இருந்தது. ஒரளவு அமைதி திரும்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான் மீது கொலைவெறித் தாக்குதல் ஒன்று மார்ச் 2-ம் தேதி (2007) நடைபெற்றது. கடும் தாக்குதலின் போதும் அவர் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். செந்தில், சுரேந்திரன், கபிலன் என மூவர் கைது செய்யப்பட்டனர். இருதரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் சிறுவர் சுலைமான் தவிர மற்றவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போடப்பட்டு பின் நீதிமன்றத்தில் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பிணையில் வந்தனர்.

அனீபா, அப்துல்லா இருவரும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினமும் மும்முறை கையெழுத்திட வேண்டும். கபிலன், சுரேந்திரன், செந்தில் மூவரும் அருகிலுள்ள உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பின் விளைவுகளைத் தடுக்க தொலைத் தூரங்களில் தங்கிக் கையெழுத்திடச் சொல்வதே வழக்கம். ஆனால் இங்கோ ஒரே ஊரில் அருகருகே கையெழுத்திடச் செய்ததோடன்றி இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து நிபந்தனையை மாற்றிக்கொள்ள ஆணை பெற்றும் தென்காசி குற்றவியல் நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை.

கையெழுத்திட வரும் இருதரப்பினரும் பாதுகாப்பு கருதி ஆயுதங்களுடன் வருவது என்கிற நிலையில் செந்தில் முதலானோருக்கு நிபந்தனை ஜாமீன் ரத்தாகிறது. சென்ற அகஸ்டு 13 அன்று கையெழுத்திட வந்த முஸ்லீம்களைச் சோதனை செய்து, வீடியோ படம் எடுத்து இனி துணை ஆட்கள் வரக் கூடாது , ஆயுதங்கள் எதுவும் கொண்டு வரக் கூடாது எனக் காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த நாள் அவர்கள் கையெழுத்திட வரும்போது வேண்டுமென்றே அவர்கள் தாமதிக்கப்பட்டு, பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக பரவலாக முஸ்லீம்கள் தரப்பில் குற்றம்- சாட்டப்பட்டது. அனீபாவும் மற்றவர்களும் திரும்பி வரும்போது அம்பாசிடர் கார் ஒன்றில் வந்த குமார் பாண்டியனின் சகோதரர்கள் நாட்டு வெடிகுண்டு உட்பட பயங்கர அயுதங்களால் தாக்கியுள்ளனர். அனீபா தரப்பினரும் திருப்பித் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திலும், சிகிச்சைக்குக் கொண்டு செல்லும்போதும், மருத்துவமனையில் மொத்தம் அறு பேர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொலையுண்டவர்களில் சேகர், சுரேஷ், செந்தில் அகிய மூவரும் குமார் பாண்டியனின் சகோதரர்கள். ஆக ஒரே குடும்பத்தில் நால்வர் கொல்லப்- பட்டுள்ளது பரிதாபமானது. கொல்லப்பட்ட இதரர்கள்: பஷீர், அசன் கனி, நாகூர் மீரான்.

உடனடியாக காவல்துறையினர் விரைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இம்முறை கலவரம் ஏதும் நடக்கவில்லை. இதற்கு முன் நடைபெற்ற கலவரங்கள் அனைத்திலும் முஸ்லீம்கள் தரப்பில் கடும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. அவர்களது கடைகளும் சூறையாடப்பட்டுள்ளன. கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையும், வெளியிட்ட அறிக்கையையும் நடுநிலையாளர்கள் பாராட்டுகின்றனர். "தாக்க வந்தவர்களே தாக்கப்பட்டார்கள்'' எனவும், இது குமார் பாண்டியன் குடும்பத்திற்கும் அனீபாவிற்குமுள்ள தனிப்பட்ட தகராறு, மதப் பிரச்சினை அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆம். இந்து முஸ்லீம் என்கிற பிரச்சினை நீண்ட நாட்களாக குமைந்து கொண்டிருந்த போதும், அதற்குப் பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்த போதும் குமார் பாண்டியன் கொலைக்கும் இவைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. குமார் பாண்டியனும் அவரைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனீபாவும் மிக நெருங்கிய நண்பர்களாகவும், ஒன்றாக கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஏ.டி.ஜி.பி. சொன்னது போல, எதோ தனிப்பட்ட பகையே இதற்குக் காரணம் என்பதை எங்களால் அனுமானிக்க முடிந்தது. இருந்தபோதிலும் இது ஏதோ பள்ளிவாசல் தொடர்பான தகராறு என்பது போலப் பிற காவல்துறை அதிகாரிகளால் சொல்லப்பட்டதும், ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டதும் தவறானது. இந்து முன்னணியின் நோக்கத்திற்கே இது பயன்படக் கூடியது.

அதேபோல முன் குறிப்பிட்ட காவல் துறை ஆய்வாளர் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இரு தரப்பைச் சேர்ந்தவர்களுமே இதைக் குறிப்பிட்டனர். குமார் பாண்டியன் கொலையை ஒட்டி உடனடியாக அவர் மாற்றப்- பட்டுள்ளார். எனவே காவல்துறைக்கே அவரது செயற்பாடுகளில் பிரச்சினை இருந்தது விளங்குகிறது. கையெழுத்திட வரும்போதுள்ள ஆபத்தான சூழலைப் பற்றி முஸ்லீம் தரப்பில் எழுத்து மூலமாகவே புகார் அளிக்கப்பட்டும் தற்போதுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததும், நிபந்தனையை மாற்றுவதற்கு இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்காததும் ஆறு பேர் கொலையுண்டதற்கு காரணமாக இருந்துள்ளது. நடவடிக்கை எடுக்காததோடு புகார் கொடுத்தவர்களையே அதிகாரிகள் திட்டியுள்ளனர். கொலை நடந்த நாளன்று காவல் நிலையத்தில் அனீபாவும் மற்றவர்களும் வேண்டுமென்றே காக்க வைத்து அனுப்பப்பட்டதாக முஸ்லீம்கள் தரப்பில் பரவலாக கருதப்படுகிறது. காவல்துறை இந்த ஐயத்தைப் போக்க உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் குழு கருதுகிறது.

தற்போதுள்ள துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஓர் இளைஞர். பொதுவாக இளம் அதிகாரிகள் ஊழலற்றவர்களாகவும், நடுநிலையாளர்- களாகவும் இருப்பது வழக்கம். நாங்கள் அவருடன் பேசியபோது எங்களுக்கும் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. எனினும் தேவையில்லாமல் அப்பாவி முஸ்லீம்கள் பலர் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதும், குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்படுவதும் நிகழ்கிறது. நாங்கள் சென்றிருந்த அன்று கூட ஊனமுற்ற ஒருவர் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருந்தார். ஆறு பேர் கொலை வழக்கில் முஸ்லீம்கள் மீது மட்டும் சதி செய்ததாக (120பி) குற்றம்சாட்டப்பட்டுள்ளதே இது எப்படி என எங்கள் குழுவிலிருந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் வினவியபோது, "இதுவே இறுதி அல்ல, விசாரணையின் போது மற்றவர்கள் மீதும் புதிய பிரிவுகள் தேவை எனில் சேர்க்கப்படலாம்'' என்றார் துணைக் கண்காணிப்பாளர்.

இந்த பதில் எங்களுக்குத் திருப்திகரமாகவோ, ஏற்கக் கூடியதாகவோ இல்லை. அப்பாவிகள் வழக்கில் சிக்க வைக்கப்படுவது பற்றிக் கேட்டபோது, "இது சாதாரணப் பிரச்சினையல்ல. இதெல்லாம் தவிர்க்க இயலாது. நீதிமன்றம் இருக்கிறது தானே. அதில் தங்கள் குற்றமின்மையை நிறுவி அவர்கள் வெளியே வந்து கொள்ளட்டும்'' என அவர் கூறியதையும் எங்களால் ஏற்க இயலவில்லை.

ஒன்பதரை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானி இன்று குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஒன்பதாண்டு காலம் அவரும் அவரது குடும்பமும் சந்தித்த துயர்களை யார் ஈடுகட்ட இயலும்?

"பயங்கரவாதம்' எனச் சொல்லி குடிமக்களின் வாழ்வுரிமைகளைப் பறிப்பதை எப்படி அனுமதிப்பது? அதிகாரிகள் மத்தியக் குடிமக்களின் சட்ட உரிமைகள் குறித்த உணர்வூட்டப்படுதல் அவசியம்.

முஸ்லீம்களுக்கெதிரான இப்படியான ஒரு அணுகு முறை ஒரு காலத்தில் கோட்டைமேட்டில் கடைப்பிடிக்கப்பட்டதன் விளைவை அடுத்த சில ஆண்டுகளில் கோவையில் சந்திக்கவில்லையா? தென்காசியும் கோவை அக வேண்டுமா? அரசும் காவல்துறையும் மிகவும் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.

சிறப்புக் காவல்படையை தென்காசியில் நிறுத்துவதற்கு ஒரு முயற்சி இருந்ததாகவும் சிலர் கூறினர். இது தேவையில்லை. அத்துமீறல்களுக்கே இது வழிவகுக்கும். சிறப்புப் படை இல்லாமலேயே அங்கு அமைதியை நிலைநாட்ட இயலும்.

இரு தரப்பிலும் தவறுகள் இருந்த போதிலும், இதை ஒரு மதப் பிரச்சினையாக மாற்ற முயல்வதும், மதவெறியைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவதும் இந்து முன்னணித் தரப்பிலிருந்துதான். முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் தற்காப்பு நிலையிலேயே உள்ளனர். முஸ்லீம் அமைப்புகள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதில்லை.

மதவெறியைத் தூண்டும் பேச்சுக்கள் தடை செய்யப்படுவதோடு இருதரப்பு சார்ந்த மத ஊர்வலங்களும் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசும் காவல்துறையும் தவிர அரசியல் கட்சிகளும் கவனம் எடுத்து மக்கள் பிளவுறுதலைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும். முஸ்லீம்களின் பஜார் பள்ளி வாசல் திருத்தப்படுதல் என்பது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கை. அரசும் அரசியல் கட்சிகளும் முயற்சித்து இரு தரப்பினரையும் கூட்டிப் பேசி பள்ளிக் கட்டிடத்தை கான்கிரீட்டாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். வெட்டுக் காயங்களுடன் சிறையில் இருப்போருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தென்காசி சரக காவல் நிலையங்களிலும், ரெவின்யூ அலுவலகங்களிலும் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கினர் எல்லா மட்டங்களிலும் முஸ்லீம்களாக அமைதல் வேண்டும். முஸ்லீம்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இதை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து நின்ற பாஜக இத்தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாகத் தெரிகிறது. நாகர்கோயிலுக்கு அடுத்தபடியாக தென்காசியை இந்துத்துவக் கோட்டையாக மாற்றும் நோக்கில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. இன்று கொலையுண்டுள்ள இரு தரப்பினரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் - இளைஞர்கள். இவர்களில் சிலரின் மனைவியர் 20 வயதுக்கும் குறைந்தவர்கள். சிலர் கர்ப்பிணிகள்.

தென்காசி இன்னொரு கோவை ஆகக் கூடாது.

நன்றி: மக்கள் உரிமை

7 comments:

thiru said...

//இரு தரப்பிலும் தவறுகள் இருந்த போதிலும், இதை ஒரு மதப் பிரச்சினையாக மாற்ற முயல்வதும், மதவெறியைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவதும் இந்து முன்னணித் தரப்பிலிருந்துதான்.//

//நாகர்கோயிலுக்கு அடுத்தபடியாக தென்காசியை இந்துத்துவக் கோட்டையாக மாற்றும் நோக்கில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது.//

மக்களிடையெ பிளவையும், பிரிவினையையும் தூண்ட மதவெறியை பரப்பும் இப்படிப்பட்ட அமைப்புகளை அரசு தடைசெய்ய வேண்டும். இந்துமாநாடு என்ற பெயரில் மதவெறி பேச்சின் மூலம் இராமகோபாலன் போன்றவர்கள் மண்டைக்காடு கலவரத்திற்கு அடித்தளம் அமைத்தனர். அன்று அவர்களுக்கு கிடைத்த ஏவல்படை தாணுலிங்க நாடார் தலைமையும், இந்துநாடார்களும். சகோதர்களாக இயல்பாக வாழும் மக்களிடையே பிரிவையும், பிணக்கையும் ஏற்படுத்தும் மதவாத கும்பல்களை இனம்கண்டு முறியடிப்பது நமது கடமை.

பதிவிற்கு நன்றி!

Anonymous said...

எல்லாவற்றிற்கும் மேலாக தென்காசி சரக காவல் நிலையங்களிலும், ரெவின்யூ அலுவலகங்களிலும் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கினர் எல்லா மட்டங்களிலும் முஸ்லீம்களாக அமைதல் வேண்டும். முஸ்லீம்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இதை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

The pro muslim bias is evident in the article.Human rights is not rights for muslims only. A.Marx will go any extent to please muslims.

அசுரன் said...

பதிவுக்கு நன்றி

அடி முட்டாள் அல்லக்கை அனானி pro muslim என்ற் வார்த்தைக்கு அர்த்தம் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

கட்டுரையை முழுசா படிக்கிறதில்ல. எதையாவது தமது அரிப்புக்கு ஏற்றாற்ப் போல வாசித்து விட்டு அவதூறு பேசி வெறியேற்றும் மிருகங்கள் இவையெல்லாம்.


மனிதன் என்பவன் அல்லக்கை அனானியின் அர்த்தத்தில் பார்ப்பான் என்று தெரிகிறது. அதனால்தான் பார்ப்பன இந்து முன்னணீக்காக பலி கொடுக்கப்பட்ட சூத்திரன் பாண்டியன் மற்றும் இஸ்லாமிய சமூக உழைக்கும் மக்களின் சாவு இவரிடம் ஒரு விளைவையும் ஏற்ப்படுத்தவில்லை. மாறாக இதனை ஆய்வு செய்து வந்தடைந்த முடிவில் உள்ள ஒதூக்கீடு குறித்த கருத்து பார்ப்ப்னியத்தின் பங்கை குறைப்பதால் ஆத்திரம்.

அசுரன்

Anonymous said...

This article is very much biased and it threatens that Thenkasi will be made as another Coimbatore. If any one give his opinion he is branded as Pappan! What non sense is this? First we must learn how to act for criticism.

Anonymous said...

சமீபத்திய தென்காசி நிகழ்வுகள் வருங்காலங்களில் இன்னும் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற கவலையை அமைதியையும் ஒற்றுமையான சுமூகமான வாழ்க்கை சூழலையும் விரும்புகிற ஒவ்வொருவரின் மனதில் எழும் நியாயமான பயமே. புகைவரும் போதே வேகமாக நடவடிக்கைகள் எடுத்து தீப்பற்றி எரியவிடாமல் தடுக்க வேண்டும் என்பது எப்படி தவறான எண்ணமாக இருக்க முடியும் அனானி? நீர் சங்பரிவார கும்பலாக இருந்தால் குழப்பத்தில் குளிர் காய்வது உங்கள் பரம்பரை வியாதியின் வெளிபாடு. குஸராத்தில் கூட தாழ்த்தபட்ட மக்களை ஏவி தானே முஸ்லிம்களை கருவருக்க செய்தீர்கள்.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியன் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பி இருப்பினும் இறைவனுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் (உண்மைக்கே சாட்சி கூறுங்கள்) ஏனெனில் இறைவன் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மனோயிச்சையை பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றி கூறினாலும் அல்லது புறக்கணித்தாலும், நிச்சயமாக இறைவன் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அத்தியாயம் 4: வசனம் 135)"

Anonymous said...

தென்காசி இன்னொரு கோவை ஆகக் கூடாது.

It will not if these 'human rights activists' stop from fishing in trobuled waters and desist from fanning minority communalism.In Coimbatore the role played by
Al-Umma cannot be ignored. In Nagercoil and elsewhere minority communalism of Christains was a
factor in creating an atmosphere conducive to communal riots. There is no point in blaming VHP/RSS alone for this. Instead of opposing communalisms of all sorts
Thirus, Marxs, Sukumarans support
minority communlaism against majority communalism.

Anonymous said...

ஐயா! அனானி அல்-உம்மாவின் கெடுஞ்செயலுக்காக அது தடைசெய்யபட்டுவிட்டதோடு, கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் சம்பந்தபட்ட இன்னும் சம்பந்தபடாத முஸ்லிம்கள் 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார்கள். குற்றம் நிரூபிக்கபட்டவர்கள் இன்னும் சிறையில் தண்டனை பெறுகிறார்கள். ஆனால் குஜராத் கொடுஞ் செயல்கள் அந்தபாதகர்களின் வாயாலேயே வெளியிடபட்ட பின்னும் இது வரை VHP/RSS பஜ்ரங்தள் இன்னும் பாஜக ஆகிய கட்சிகள் இதுவரை தடை செய்யபடவில்லை. இன்னும் இதனை செய்த மனித குல விரோதிகள் மகிழ்ச்சியாக உலா வருகிறார்கள். பார்த்தீரா உலகில் நியாயம் எப்படி தழைத்தோங்கி நிற்கிறது!
சங்பரிவாரத்தை குற்றம் சொல்ல முடியாது என்று நீர் சொல்வதை அதிகாரவர்க்கமும், அரசியல் கட்சிகளும் அமைதி காத்து ஆமோதிக்கின்றன் நடுநிலையாளர்களான பொதுமக்கள் தான் விழிப்பிதுங்கி நிற்கிறோம்.
ஆனால் இது என்றும் தொடர்ந்து கொண்டே இருக்க போவதில்லை.