Monday, February 04, 2008

போராடிய மக்கள் மீது போலீஸ் அடக்குமுறையும், என் மீது பொய் வழக்கும்..

மனித உரிமை ஆர்வலர்கள் சந்திக்கும் அடக்குமுறைகள் ஏராளம். பல நேரங்களில் அவர்களுக்கு அதிகார அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல் வருவதுண்டு. ஆந்திர சூழலில் பல மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்கத்தில், புதுச்சேரியில் அந்தளவுக்கு சூழல் மோசமில்லை என்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள் மீது பல்வேறு பொய் வழக்குப் போடுவது என்பது சாதாரணமாகிவிட்டன.

திண்டிவனத்தில் இருக்கும் பேராசிரியர் கல்யாணி மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட்த்தில் பொய் வழக்குப் போட்ட உதாரணமும் உண்டு. இத்தனைக்கும் அவர் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் அமைத்து போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல நிறைய கூற முடியும்.

புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்ட்த்தை எதிர்த்துப் போடாடியதற்காக நான் உட்பட பலர் மீது காவல் ஆய்வளரைக் கொல்ல முயன்றதாக இ.பி.கோ. பிரிவு 307 பொய் வழக்கு உள்ளது.

இந்நிலையில், கடந்த 31-01-2008 அன்று வில்லியனூரில், அத்தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நிட் நாராயணசாமி, அரசு ஒதுக்கிய நிதியினை செலவு செய்யவில்லை என்பதை எதிர்த்து போராட்டம் நடத்திய உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் மீது போலீஸ் காட்டுமிராணடிதனமாக தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்காக உதவிட போன இடத்தில் நடந்த சம்பவத்தில் என் மீது மற்றுமொரு பொய் வழக்கு போட்டுள்ளது புதுச்சேரி போலீஸ்.

நடந்த சம்பவம் குறித்து நான் போலீசிடம் அளித்த புகார் விவரம்:

“31-01-2008 அன்று காலை சுமார் 11.30 மணியளவில், வில்லியனூர் உளவாய்க்கால் ஊரைச் சேர்ந்த என்னுடைய நண்பர் சந்திரசேகர் தொலைபெசியில் என்னிடம் “வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் நாராயணசாமியை எதிர்த்துப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது வில்லியனூர் காவல் ஆய்வாளர் வெங்கடசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் தடியடி நடத்தி தாக்கியதால், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் காயமடைந்து சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு வந்திருப்பதாக” கூறினார். மேலும் அவர், போலீசார் தாக்கியதால் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ள மக்களுக்கு உதவி செய்திட உடனடியாக என்னை மருத்துவமனைக்கு வருமாறு கூறினார்.

நான் உடனடியாக என்னுடைய நெருங்கிய நண்பர்களான லோகு.அய்யப்பன், சாமிஆரோக்கியசாமி மற்றும் சிலரோடு மேற்சொன்ன மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் இருந்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவர் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு முன்னாள் இருந்த இருக்கையில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் அமர்ந்துக் கொண்டிருந்தார்.

அப்போது நான் அங்கிருந்த மேற்சொன்ன சந்திரசேகரிடம் என்ன நடந்தது என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் காயம்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்த மக்களிடம் கடுமையான முறையில் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் தலையிட்டு, “காயம்பட்டு மயக்க நிலையில் பொதுமக்கள் உள்ளனர், நீங்கள் உங்கள் விசாரணையை சிகிச்சை முடிந்த பின்னர் மேற்கொள்ளுங்கள்” என்று அவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டேன். உடனடியாக அவர் கோபத்துடன் என்னை நோக்கி தகாத வார்த்தைகளைக் கூறி திட்டி, மிரட்டினார். வழக்குப் போட்டு சிறையில் தள்ளிவிடுவேன் என்று அச்சுறுத்தினார். மேலும், அவர் என்னை நோக்கித் தாக்க வந்தார். அப்போது, அவருடன் இருந்த போலீசார் என்னை அங்கிருந்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தனர். என்னுடன் வந்தவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்காமல் என்னிடம் கடுமையாக நடந்துக் கொண்டார். இத்தனைக்கும் மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் எனக்கு நன்கு அறிமுகமானவர்.

கடந்த 1989 முதல் மனித உரிமைக்ககாகப் பாடுபட்டுவரும் என்னிடம் மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் இவ்வாறு நடந்துக் கொண்டது எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. நான் உடனடியாக மதியம் சுமார் 1.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து, பெரியக்கடை காவல்நிலையப் பொறுப்பு அதிகாரிக்கு தந்தி மூலம் நடந்தவற்றை தெரிவித்தேன்.

மேற்சொன்ன வில்லியனூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நேர்ந்ததால் உடனடியாக நான் காவல்நிலையம் வந்து புகார் அளிக்க முடியவில்லை. எனவே, நான் தற்போது தங்களிடம் இப்புகார் மனுவை அளிக்கின்றேன். தாங்கள் இப்புகாரை விசாரித்து வழக்குப் பதிவு செய்து, சட்டத்திற்குப் புறம்பாக என்னை தகாத வார்த்தைகள் கூறி மிரட்டி, அச்சுறுத்தி, தாக்க வந்த மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.”

இதுதான் நான் அளித்த புகார் மனு. இதனைப் பெற்றுக் கொண்ட பெரியக்கடை போலீசார், நான் புகார் கொடுத்த ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக புகார் கொடுத்த்து போல், என்னை தாக்க வந்த உதவி ஆய்வாளரிடம் ஒரு புகாரை எழுதி வாங்கி என் மீது வழக்குப் பொட்டுள்ளனர்.

அதாவது இ.த.ச. 353 (அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் அச்சுறுத்தித் தடுத்தல்), 506(1) (குற்ற எண்ணத்தோடு மிரட்டுதல்) மற்றும் பல பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளனர். நான் கொடுத்த புகார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், போலீசார் என்னை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற நிலை உள்ளது.

இந்திய அளவில் பல மனித உரிமை ஆர்வலர்கள் மக்கள் உரிமைக்காகப் போராடி உயிர் நீத்துள்ளனர். அவர்களை எல்லாம் ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிதில்லை என்றாலும், நம் பணியை முடக்க அரசும், போலீசும் செய்யும் ஒரு தந்திரமே இது.

2 comments:

இரா.சுகுமாரன் said...

பல்வேறு தளங்களில் தொடர்புடைய உங்களை போன்றவர்களுக்கே இந்த நிலை எனும் போது சாதாரண மக்களுக்கான நிலையை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

காவல் துறை எப்போதும் தன் தவறை சுட்டிக்காட்டுபவர்களை மிரட்டி பணிய வைக்கும். அந்த நிலை தான் தற்போது உங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இன்று இல்லையேனும், புதுச்சேரி காவல் துறை இதற்காக பிற்காலத்தில் வருந்தும் என்பது மட்டும் உறுதி.

புதுச்சேரியில் நடந்த பல்வேறு திருட்டுப் பொருட்களை காவல் துறை மக்களிடம் ஒப்படைக்காமல் தாங்களே வைத்துக் கொண்டு ஏமாற்றியது உண்மை. ரவிக்குமார் இன்பெக்டர் 98 பவுன் நகையையும், கந்தநாதன் 15 பவுன் பொதுமக்கள் நகையையும் திருடி மக்களுக்கு கொடுக்கவில்லை என்பதாக "முப்படைத் தளபதி" என்ற பத்திரிக்கை எழுதி இருந்தது. ஆனால், சாதாரண மக்கள் இதையெல்லாம் தட்டிக் கேட்க முடியவில்லை.

ஆனால், தவறு செய்த காவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நீங்கள் செய்த போராட்டம் புதுச்சேரி காவல் துறையை மிகவும் எரிச்சலூட்டியுள்ளது, இதனால் புதுச்சேரி காவல் துறை பழிதீர்த்துக் கொள்ளத் துடிக்கிறது என்பது தான் உண்மை.

இந்த பொய் வழக்கில் அவர்கள் விரைவில் அம்பலப்படுவார்கள்.

காலம் இவர்களுக்கு பதில் சொல்லும்.

கோவி.கண்ணன் said...

வெறும் பேச்சின்றி செயல்பாடாகவே மாறிய உங்கள் பணி போற்றத்தக்கது.
நல்ல உள்ளங்கள் வாழ்த்து உங்களுக்கு வெற்றியை தேடித்தரும்.