Tuesday, February 05, 2008

தமிழ் மொழி உரிமைக்காகப் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறை தாக்குதல் - கண்டனம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மொழி உரிமைக்காக்கப் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறை மேற்கொண்ட அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து அக்கட்சியின் உறுப்பினர் க.பாலகுமரன் காவல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனு:

நான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன். 25-01-2008 அன்று தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப் போர் தியாகிகள் நாள் என்பதால், எங்கள் கட்சி தமிழக அரசு கடைப்பிடிக்கும் ஆங்கிலத் திணிப்புக் கொள்கையையும் தமிழ் புறக்கணிப்புப் போக்கையும் கண்டிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் நடத்தியது. அதில் நானும் கலந்து கொண்டேன்.

25-01-2008 காலை சுமார் 10.00 மணிக்கு சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில், தமிழ் மொழியாக்கம் கூட செய்யப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'எஸ்.இ.டி.சி;' போன்ற எழுத்துக்களை கருப்பு மைபூசி அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். நானும் எங்கள் கட்சித் தோழர்களும் அமைதியான முறையில் பேருந்துகளுக்கு எந்த சேதமும் இல்லாத வகையில் கருப்பு மைபூசி அழித்தோம்.

அப்போது அங்கு வந்த கோயம்பேடு காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், காவலர்களும் எந்த விசாரணையும் செய்யாமல் எங்கள் போராட்டத்தைக் கைவிடும்படி அறிவிக்காமல் திடுதிடுவென அனைவரையும் பலமாக தடியால் திரும்பத் திரும்ப அடித்தனர். நாங்கள் ஆங்கில எழுத்துக்களை அழிப்பதை நிறுத்தி கொண்டோம். அதன் பிறகும் அங்கு கூட்டம் கூடிய மக்களெல்லாம் வேடிக்கை பார்க்கும் நிலையில் எங்களை மீண்டும் மீண்டும் தடியால் அடித்தும் பூட்ஸ் காலால் உதைத்தும் துன்புறுத்தியதுடன் எங்களை பெற்ற தாய்மார்களை இழிவு படுத்தும் வகையில் காமகுரோத வார்த்தைகளால் கேவலமாகப் பேசியும் அவமானப்படுத்தினார்கள்.

கோயம்பேடு காவல் நிலையத்தைச் சேர்ந்த தேன்தமிழ்வளவன் (என்கிற) தேன்தமிழ்வாணன் என்பவரும் அவரோடு சேர்ந்து மேலும் இரண்டு காவலர்களும் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டு தடியால் தொடையிலும், இடது கையிலும், முகத்திலும் மாறி மாறி அடித்தார்கள். தேன்தமிழ்வளவன் தடியால் என் முகத்தில் ஓங்கி அடித்ததால் என் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது. உதடு கிழிந்தும் இரத்தம் வழிந்தது. முகம், கை ஆகிய இடங்கள் வீங்கியது. இடதுகைப் புஜத்தில் காயம் ஏற்பட்டது. அத்துடன் மேற்படி தேன்தமிழ்வளவன் என்னை நோக்கி "தேவடியாமவனே, ரூபாய் நோட்டில் இந்தியும் இங்கிலீசும் இருக்கு அத கிழிச்சி போட்ருவியாடா" என்று கத்திக் கொண்டே மறுபடியும் முதுகில் தடியால் அடித்தார்.

போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைச் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன், போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் பொறியாளர் இரா.பாலசுப்பிரமணியம், கோவை பா.தனசேகர், பா.சங்கரவடிவேலு, சேலம் ச.பிந்துசாரன், கோ.தமிழ்ச்செல்வன், ஓசூர் கோ.மாரிமுத்து, சிவபெருமாள், செந்தில்மாறன், பெண்ணாடம் முருகன்குடி க.முருகன், பழனிவேலு, இராமகிருஷ்ணன், தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் காமாட்சிபுரம் க.காமராசு, நந்தவனப்பட்டி செந்தில், நீ. மாரியப்பன் ஆகிய 16 பேரையும் மேற்படி தேன்தமிழ்வளவனும் காவலர்களும் கடுமையாகத் தடியால் அடித்துத் துன்புறுத்தினர். அதன் பிறகு எங்களைக் கைது செய்திருப்பதாக அறிவித்து ஒரு பேருந்தில் ஏறச் சொன்னார்கள்.

பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தவுடன் தேன்தமிழ்வளவன் என்னை மீண்டும் தடியால் அடித்தார். பேருந்தில் வைத்து கோயம்புத்தூர் பா.தனசேகர் இடது கையில் மேற்படி தேன்தமிழ்வளவன் கடுமையாக தடியால் அடித்தார். இதில் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. பேருந்திலும் அனைவரையும் மீண்டும் மீண்டும் காவல் துறையினர் அடித்தனர். கோயம்பேடு காவல் நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கிச் செல்லும் பொழுதும் எங்களை காவல் துறையினர் தடியால் அடித்தனர். காவல் நிலையத்திற்குள் வைத்தும் எங்களைத் தடியால் அடித்தனர். பூட்ஸ் காலால் உதைத்தனர்.

இச்சம்பவங்கள் அங்கு பேருந்துக்காக காத்திருந்த பூவிருந்தவல்லி திரு. என்.ஆறுமுகம், புதுச்சேரி பொறியாளர் க.அருண், சிதம்பரம் சிவஞானம், குரோம்பேட்டை மா.கௌரி பாலன் ஆகியோருக்குத் தெரியும்.

பிறகு, கோயம்பேடு காவல்நிலையத்திலிருந்து சரக்குகள் ஏற்றும் ஒரு மினிடோர் வண்டியில் எங்களை ஏற்றிச் சென்று சேமத்தம்மன் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்துக் கதவுகளைப் பூட்டி விட்டனர். எங்களைப் பார்க்க வந்த உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

எங்களில், மிகக் கடுமையாகக் காயம் பட்டு பாதிக்கப்பட்ட 1. க.பாலகுமரன், 2. கோவை பா.தனசேகர், 3. கோவை பா.சங்கரவடிவேலு, 4. ஓசூர் கோ.மாரிமுத்து, 5. சேலம் ச.பிந்துசாரன், 6. சேலம் கோ.தமிழ்ச்செல்வன், 7. ஓசூர் செந்தில்மாறன், 8. முருகன்குடி க.முருகன், 9. முருகன்குடி பழனிவேலு ஆகிய 9 பேரையும் கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு நடராசன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் எங்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

எங்களை அன்று (25-01-2008) பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு விடுதலை செய்துவிட்டதாக ஆய்வாளர் அறிவித்தார். அதன்பிறகு தடியடிபட்டு பாதிக்கப்பட்ட எங்களுக்குத் தாங்கமுடியாத வலி இருந்ததால் உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றோம். அவ்வாறு சிகிச்சை பெற்றவர்கள் 1. க.பாலகுமரன், 2. பா.தனசேகர், 3. பா.சங்கரவடிவேலு, 4. ச.பிந்துசாரன், 5. கோ.மாரிமுத்து, 6. கோ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஆவர். இதில் பா.தனசேகருக்கு எக்ஸ்-ரே ஆய்வில் இடது முன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு அதற்குரிய மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சீட்டுகளின் நகல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆங்கில எழுத்துகளை அழிக்கும் போராட்டம் பற்றி முன்கூட்டியே பத்திரிக்கை அறிக்கை வாயிலாகவும், பல்லாயிரக்கணக்கான துண்டறிக்கைகள் மூலமாகவும், சுவரொட்டிகள் ஒட்டியும், சுவரெழுத்துகள் எழுதியும், பதாகைகள் கட்டியும் அறிவித்திருந்தோம். கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளருக்குத் தொலைபேசி வழியிலும் தெரிவித்திருந்தோம். எனவே சனநாயக வழியில் அறிவித்துவிட்டு பகிரங்கமாக நடந்த ஒர் அடையாளப் போராட்டம் தான் இது.

சட்டவிரோதமாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் மேற்கண்ட எங்களைத் தடியால் அடித்துக் காயப்படுத்தி, பூட்ஸ் காலால் மிதித்து, இழிவுபடுத்தி எங்களைப் பெற்ற தாய்மார்களை "தேவடியாள்" என்று கேவலப்படுத்திப் பேசி வன்முறையில் ஈடுபட்ட மேற்கண்ட காவல்துறையினரிடம் இதுகுறித்து விசாரித்து தாங்கள் கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்'

இவ்வாறு அவர் புகார் கூறியுள்ளார்.

இந்தியை தார்பூசி அழித்து வளர்த்த கட்சி நடத்தும் ஆட்சியில் இவ்வாறு மொழி உரிமைக்காகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது அடக்குமுறை ஏவியதை ஏற்றிக் கொள்ள முடியாது. உடனடியாக தமிழக அரசு குற்றமிழைத்த காவ்ல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 comments:

Anonymous said...

//தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில், தமிழ் மொழியாக்கம் கூட செய்யப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'எஸ்.இ.டி.சி;' போன்ற எழுத்துக்களை கருப்பு மைபூசி அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். நானும் எங்கள் கட்சித் தோழர்களும் அமைதியான முறையில் பேருந்துகளுக்கு எந்த சேதமும் இல்லாத வகையில் கருப்பு மைபூசி அழித்தோம்.
//

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க முயற்சித்தது பெரிய தவறு. அதை உரிமையாக வேறு எடுத்துக் கொண்டீர்கள்... அப்புறம் அடிக்காமல் அணைக்கவா செய்வார்கள்?

இவ்வாறு மை பூசி அழிக்க முயல்வதற்கு முன்னால், பேருந்து நிறுவன மேலாளரிடம் மனு கொடுத்திருக்கலாமே... அல்லது பொது நல வழக்கு தொடர்ந்திருக்கலாமே.. அல்லது உங்கள் செலவில் மற்றவருக்குச் சேதமில்லாமல் பிரச்சாரம் செய்திருக்கலாமே..


உங்களுக்குத் தேவை பரபரப்பு.. விளம்பரம்.. அவ்வளவுதா..

தமிழ் வளர்க்க வழியாயில்லை..

விழுந்த அடி நியாயமானதுதான்..

தேன் தமிழ் வளவனுக்கு (அருமையான பெயர்) இல்லாத தமிழ் உணர்வா.. பிந்துசாரனுக்கும் தனசேகரனுக்கும் வந்து விடப் போகிறது..

nayanan said...

மொழி உணர்வு, மனித உரிமை,
வாழ்வியல் அடிப்படைகள் என்ற எல்லாவற்றிலும் தமிழ் நாட்டில்
மந்த உணர்வையும், முட்டாள் தனங்களையும் காண முடிகிறது.

பொது நலனுக்காக வெளியே வந்து
போராடுவது என்பதே கேவலமாக
சித்தரிக்கப் படுகிறது.

தம்மதைத் தவிர மற்றது எல்லாமே
உயர்வு என்ற மனப்போக்கு
மக்களிடையே நிறைந்து வருகிறது.

இந்நிலையில் வெளியே வந்து
போராடியிருக்கும் உங்களுக்கு
வாழ்த்துகள்.

இப்போராட்டங்கள் உடனடி பலனைத்
தராவிட்டாலும் குறைந்தது போராட்ட
உணர்வினையாவது அழியாமல் பாதுகாத்து வைக்கும். அந்த வகையில்
உங்களுக்கும் உங்கள் குழுவினர்க்கும்
பாராட்டுகள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்