Wednesday, February 06, 2008

"சாவு வந்தாதான் சமைப்போம்" - அனாதைப் பிணம் புதைக்கும் தலித் பெண்மணியின் துயரம்..

ப்யூச்சர் இராதா புதுச்சேரியில் வலுவாக உள்ள தலித் அமைப்புத் தலைவர். இவர் தலைமையில் செயல்படும் ‘ப்யூச்சர் தலித் அரசு ஊழியர் அமைப்பும், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையும் தலித் மக்களின் பிரச்சனைகளை மட்டுமல்ல அனைத்து சமூக அவலங்களையும் எதிர்த்துப் போராடும் பண்பு கொண்டவை.

2003-இல் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடைபேற்ற போது, சுடுகாட்டில் பிணம் புதைக்கும் பெண்மணி ஒருவருக்கு நிரந்தர வேலை அளிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தினர் இவ்வமைப்பினர். அன்றைய தினம் நான் ஊரில் இல்லாததால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

ப்யூச்சர் இராதா நடத்தும் எந்த போராட்டமானாலும் அதில் எனக்கு என்று உரிய இடமிருக்கும். அந்த அளவுக்கு அவர் என் மீதும், நான் அவர் மீதும் அளவுகடந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளோம். இன்றுவரை அந்த உறவுத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

ஊர் திரும்பியவுடன் அந்த பெண்மணியைச் சந்தித்து அவரது நிலைப் பற்றி அறிய வேண்டுமென்று முடிவு செய்தேன்.

நானும், புகைப்படக் கலைஞர் புதுவை இளவேனில் அவர்களும் ஒருநாள் பகல் அப்பெண்மணியைச் சந்திக்க சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டிற்குச் சென்றோம். சந்நியாசித்தோப்புச் சுடுகாடு என்பது பலகாலமாக அனாதைப் பிணங்களைப் புதைக்கும் இடம். அந்த இடத்தின் பெயரைச் சொன்னாலே அருவருப்பாக மக்கள் எண்ணுவார்கள்.

அங்கிருந்த அந்தப் பெண்மணியைச் சந்தித்து உரையாடினேன். என் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் பல தரப்பினரைச் சந்தித்துள்ளேன். இன்றைக்கும் மறக்கமுடியாத அவர்களது அவலங்கள் பல நேரத்தில் மன வருத்தத்தைத் தரும். அந்தப் பெண்மணியின் வாழ்க்கை என்னை மிகவும் பாதித்தது.

ஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் வாழ்வதே சிக்கல் நிறைந்ததாக இருக்கும் காலக்கட்டமிது. இச்சூழலில் ஒரு பெண்மணி தன் குடும்பத்தை நடத்துவதற்காக சுடுகாட்டில் பிணம் புதைத்துப் பிழைக்க வேண்டியிருப்பது எவ்வளவு துயரமானது, கொடுமையானது என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதுவும் அந்தப் பணியை நிரந்தரமாக்க வேண்டுமென அப்பெண்மணி போராடுவது இச்சமூகத்திற்கு எதை உணர்த்துகிறது என்ற கேள்வியையும் என்னுள் எழுப்பியது.

அவரது துயரமான வாழ்வை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி அவருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமெனெ முடிவு செய்து, ‘தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் அவர்களைத் தொடர்புக் கொண்டேன். அவர் உடனடியாக அனுப்புங்கள் வெளியிலாம் என்று கூறினார். தலித் முரசு இதழில் விரிவாக அவரது வாக்குமூலம் வெளியானது.

அதைத் தொடர்ந்து தினமணியில் முதல் பக்கத்தில் அப்பெண்மணியின் வண்ணப் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அப்போது தினமணியின் ஆசிரியராக இருந்த இராம.சம்பந்தம் அவர்கள் இதை நம்பாமல் பலமுறை செய்தி அனுப்பிய செய்தியாளரை விசாரித்துள்ளார். அதன்பின், பல்வேறு செய்திதாள்கள், தொலைக்காட்சி ஊடங்கங்கள் என அனைத்திலும் அவரது துயர வாழ்க்கைப் பதிவானது.

‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்போன்ற உலக அளவிலான மனித உரிமை அமைப்புகள் இப்பிரச்சனையை தீர்க்கக் கோரி குரல் எழுப்பின. தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் செயல்பட்ட மனித உரிமை அமைப்புகள் பல அப்பெண்மணிக்காக குரல் கொடுத்தன.

அதேநேரத்தில், அப்பெண்மணியை அந்த பணியைச் செய்யச் சொல்லக் கூடாது என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. கடைசியில், அவருக்கு அந்த சுடுகாட்டை பராமரிக்கும் பணி ஆணையை புதுச்சேரி அரசு வழங்கியது. நாளொன்றுக்கு ரூ. 105 ஊதியமாக வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

நாங்கள் பலமுறை வலியுறுத்திக் கூறியும் அவர் அந்த சுடுகாட்டை விட்டு வரத் தயாராக இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

நான் குறிப்பிட்ட அந்த பெண்மணி கிருஷ்ணவேணி. தற்போது அவரது வயது: 40. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது வாக்குமூலம்:

என் வீட்டுக்காரர் பெயர் அல்பேர். என் வீடு துப்ராயப்பேட்டையிலே லசார் கோயில் தெருவிலே இருக்குது. என் வீட்டுக்காரர் 15 வருசமா இங்க வேலை செஞ்சாரு. அவர் 1998-இல் செத்துப்போன் பிறகு நான் போய் வேலை கேட்டேன். அப்போ பிண வேலை போய்ப்பாரு, ஆறு மாசம் கழிச்சி வேலை போட்டுத் தர்றோம்னு சொன்னாங்க. ஆனால், இது வரைக்கும் எனக்கு வேலை தரலை.

2000 2001 இல் அப்ளிகெஷன் கொடுத்தேன். நான் போய்க் கேட்கும் போதெல்லாம் போஸ்டிங் கிடையாதுன்னு சொன்னாங்க. இங்கேயே ஆள் அதிகமாக இருக்குது, நாங்களே வேலை செய்யற ஆளுங்களை நிறுத்தலாம்னு இருக்கிறோம்னு சொன்னாங்க.

அப்போ வைத்திலிங்ம் கவர்மென்ட். ஒரு பொணதுக்கு 15 ரூபாய் மேனிக்குதான் வேலை செஞ்சேன். இப்போ எங்க ஊட்டுக்காரர் செத்து மூணுமாசம் ஆன பிறகுதான் 100 ருபாயா ஆக்கினாங்க. எங்களுக்கு பாடி எடத்தாதான் சம்பளமே, பாடி இல்லன்னா சம்பளமும் கிடையாது, ஒண்ணுமே கிடையாது.

எனக்கு மூணு புள்ளைங்க இருக்கு. மூணும் ஆண்தான். இரண்டு பேர் படிக்கிறாங்க. ஒருத்தன் என்னோடு வேலை செய்றான். ஏழாவது ஒருத்தன் படிக்கறான். அஞ்சாவது ஒருத்தன் படிக்கறான். முதல் பையன் பேரு சங்கர். இரண்டாவது மதியழகன், மூணாவது வினோத் பிரசாந்த். சங்கர் அஞ்சாவது படிச்சிட்டு நின்னுட்டான். அவன் வேலைக்குப் போனாதான் காசு. எங்களுக்கு என்னக்கிதான் சாவு வருதுன்னு கிடையாது. சாவு வந்தா தான் வருமானமே. சாவு எப்போ வருமோன்னு உட்கார்ந்துன்னு இருப்போம். சாவு வந்தாதான் சமைப்போம்.

சங்கர் என்னோடதான் இந்த வேலையை செய்யாறான். எனக்கு 84-லிலே கல்யாணம் நடந்துச்சி. அவர் குருசுக்குப்பம். அவர் சின்ன வயசிலேயே இந்த ஊருக்கு வந்திருந்து என்னை பஞ்சாயத்து மூலம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அவர் 85-லிருந்தே இங்கே வேலை செய்யறாரு. முனிசிபாலிடிலே இருக்கிற சுப்பையா டாக்டர்தான் வேலை கொடுத்தாரு. நீ வேலை செஞ்சிகினே இரு. மூணு மாசம் கழிச்சி போஸ்டிங் போட்டுத் தர்றேன்னு சொன்னாரு. அவரும் போட்டுத் தரலே. போய் கேக்கற சமயத்துல இதோ...இதோன்னு...சொன்னாரு. அவரும் மாத்திகினு போயிட்டாரு. அவருக்கு சர்வீஸ் முடிஞ்சிபோச்சி இப்போ.

அனாதைப் பொணம், ஒப்பித்தாலே போஸ்ட் மார்டம் பண்ணி அழுகிப் போனது, கடலிலே, ஆத்துல செத்து ஒரு மாசம் 15 நாள் ஆனது, அழுகிப் போய் புழு கொட்டுற மாதிரி இருக்கிற பொணத்தைத்தான் தூக்கிட்டு வருவாங்க. அப்போ ரோட்லே போற வர்றவங்க எல்லாம் திட்டுவாங்க. இதுமாதிரி எடுத்துக்கின்னு போறீங்களே, இது கிடையாதா? நாங்கெல்லாம் ரோட்டுல நடக்குறமே மனுசாலா மாடா. ஒரு தடவை பஞ்சாயத்துக்காரங்க, போற வர்ற ஜனங்க எல்லாம் எங்களை அடிக்க வந்துட்டாங்க.

வீட்டுக்கு ஏட்டு பி.சி.யும் வருவாங்க. தகவல் சொல்லுவாங்க. அந்த வண்டியை எடுத்துகின்னு போய் பாடியைக் கொண்டு வருவோம். இங்கே புதைப்போம். பாடியை புதைச்ச உடனே காசு கொடுக்க மாட்டாங்க. பில் போட்டோம்னா ஒரு மாசம் ஆகும். இந்த மாசம் போட்டமுன்னா அடுத்த மாசம் தருவாங்க. அவருக்கு வேலை கொடுத்ததிலிருந்தே 15 வருஷமா வேலை செஞ்சுகின்னு வந்தார். அப்புறம் 98-லே செத்துட்டாரு. செத்த உடனே நான் போய் முனிசிபாலிடிலே வேலை கேட்ட உடனேயே இந்த வேலை கொடுத்தாங்க.

நான் இல்லாம இங்க ரெண்டு ஆம்பளை வேலை செய்யறாங்க. அவங்களும் எங்களை மாதிரிதான். அவங்களும் நிரந்தரம் கிடையாது. அவங்க இங்கே பாடியை எரிச்சாதான் காசு. பாடியை புதைச்சாதான் எங்களுக்கு காசு. செத்தவங்களை கொளுத்தறது அவங்க. அனாதை பாடியைப் புதைக்கிறது எங்க வேலை. அனாதைப் பொணத்தை எடுக்கிறதனாலே, போலீஸ் ஒரு பாடிக்கு 50 ருபா கொடுப்பாங்க. எந்த நேரத்திலும் போலீஸ்காரங்க வருவாங்க. நைட் எத்தனை மணியாக இருந்தாலும் வந்து கூப்பிடுவாங்க.

பிரச்சனைதான் சார். என்ன பண்றது. இதை நம்பித்தானே சாப்பிட்டுக்கினு இருக்கோம். நைட்லே வந்து கூப்பிடறது தொந்தரவாதான் இருக்குது. போஸ்டிங் போட்டுக் கொடுத்து சம்பளம் போட்டுக் கொடுத்தாங்கன்னா, நாங்க எதையுமே கேக்க மாட்டோம்.

தகவல் வந்த உடனே போவோம். ரோட்லே கிடக்கிறது, கடலிலே விழுந்து செத்துன்னு எல்லாத்தையுமே எடுக்கினு வருவோம். கூட என் பையன் சங்கர் வருவான். நான் வண்டியை புடிச்சிக்குவேன் அவன் பாடியை தூக்கி உள்ளே போடுவான். ரோட்டுலே கிடக்கிற பாடியா இருந்தா இங்கதான் எடுத்துக்கிட்டு வருவோம். ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போக மாட்டோம். தண்ணில விழுந்தது. கடலிலே போனது. கிணத்துல விழுந்து சாவறது. மருந்து குடிச்சி செத்தா ஆஸ்பத்திரிக்குப் பொய் ஒரு வாரம் வரைக்கும் வச்சிருந்து பாப்பாங்க. அப்புறம் பாடி ரொம்ப உப்பிப் போச்சுன்னா போலீஸ் வந்து எங்களைக் கூட்டிக்கிட்டுப் போவாங்க.

கடல்லே எல்லாம் விழுந்துட்டா, நம்மள வந்து போலீஸ்காரங்க கூப்பிடுவாங்க. வண்டியிலே எடுத்து வச்சி ஆஸ்பத்திரிலே வைச்சிட்டு வந்துருவோம். அப்புறம் பேப்பர்லே போட்டா போட்டு அவங்க ஜனங்க வரவரைக்கும் காத்திருப்பாங்க. ஜனங்க வரலைன்னா அதுக்கு மேல்பட்டு நம்மள வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க. அங்க ஆஸ்பத்திரியிலே இருந்து பாடியை வண்டியிலே வைச்சி எடுத்துக்கிட்டு வருவோம். இங்க வெச்சி நாங்களே குழி தோண்டி பள்ளம் எடுப்போம். நாங்களே புதைச்சிடுவோம். எரிக்க மாட்டோம். புதைக்கிறதோட சரி.

இதெல்லாம் பழக்கமாகிப் போச்சு. கரண்ட் கிடையாது இங்கே. ஒரே எருக்கம் செடியெல்லாம் முளையுது. பயமா இருக்குது. மதில் கிடையாது. கேட் கிடையாது. எதுவுமே கிடையாது. எவன் எவனோ வர்றான். இங்கேயே குடிக்கறானுங்க. எல்லா வேலையும் நடக்குதுன்னா பாருங்க. இங்கே முள் செடியிலே தூக்கு மாட்டிக்கிட்டான் ஒருத்தன். அதனாலே பயமா இருக்குது. முனிசிபாலிடிலே|” போய்க கேட்டா இன்னும் ரெண்டு மாசத்துல மதில் போட்டுத்தர்றேன், கேட் போட்டுத் தர்றேன்னு சொல்றாங்க.

சிலபேர் வர்றாங்க. நாங்க புதைச்சு ஒரு மாசம், இரண்டு மாசம் கழிச்சு வந்து கேட்டா, நாங்க குழியைக் காட்டுவோம். அவங்க வந்து கற்பூரம் கொளுத்திப் படைப்பாங்க. இதபோல வெளியூர் ஜனங்க நிறைய பேர் வருவாங்க. படைச்சிட்டுப் போவாங்க. அவங்க எங்களுக்கு காசு கொடுக்க மாட்டாங்க. சிலபேர் இஷ்டப்பட்டு 10 ரூபா, 20 ரூபா கொடுத்துட்டுப் போவாங்க, அதான். அதுக்கு மேலே கிடையாது.

பக்கத்துல இருக்கிற தொழு நோயாளிங்க பொணத்தை இங்க தான் புதைப்போம். அங்க செத்துப் போயிட்டா யாராவது நோயாளியை விட்டு சொல்லி அனுப்புவாங்க. ராத்திரி பகல் எந்த நேரமானாலும் வீட்டுக்கு அனுப்புவாங்க. உடனே நாங்க போய் எடுத்துக்கின்னு வந்து புதைச்சிடுவோம். இங்கேயே பள்ளம் எடுத்து புதைச்சிடுவோம். அவங்க ஒரு பொணத்துக்கு 100 ரூபா கொடுப்பாங்க. இந்தப் பொணத்துக்கு முனிசிபாலிட்டிலேகாசு கொடுக்கமாட்டாங்க. இந்த ஆஸ்பத்திரிகாரங்கத்தான் கொடுப்பாங்க. அனாதைப் பொணத்துக்குத்தான் முனிசிபாலிடிபணம் கொடுப்பாங்க.

அனாதைப் பொணம் வந்துச்சின்னா அப்படியே பள்ளம் எடுத்து புதைச்சிடுவோம். பொணத்தை அப்படியே பள்ளத்திலே இறக்கி வைச்சி புதைச்சிடுவோம். அவ்வளவுதான். அவங்க நாலு நோயாளிங்க வருவாங்க. அவங்க மாலை போட்டு கற்பூரம் கொளுத்திட்டுப் போவாங்க. எயிட்ஸ் நோய், பெரிய வாயு நோய், அவங்க எல்லாம் எங்ககிட்டேதான். எயிட்ஸ் நோயாளி பொணம் நெறைய வந்திருக்கு. ஆறு மாசத்துக்கு முன்னேகூட ஒரு பாடி வந்திச்சி. தாயாரம்மா ஆஸ்பத்திரி. பெரிய ஆஸ்பத்திரி. நல்லாம் கிளினிக் இப்படி எல்லா இடத்திலே இருந்தும் வரும்.

பயமா இருக்காது. எங்களுக்கு அதுக்கு அதுக்கு ஒரு ஊசி போடுவாங்க. டி.டி.ன்னு பேரு அதுக்கு. நாங்க போய்க் கேட்டா இந்த டி.டி.யை தர்றோம் நீ போய்ப் போட்டுக் கோன்னு சொல்றாங்க. அவ்வளவுதான். டாக்டர் சொல்லுவாரு. இது எய்ட்ஸ் நோய், பார்த்து எடுத்துகிட்டுப் போய் புதைங்கன்னு சொல்லுவாரு. உடனே வண்டியிலே எடுத்துக்கிட்டு வருவோம். இந்த வண்டியிலே எடுத்து வெச்சி அப்படியே திரையைப் போட்டு எடுத்துக்கிட்டு வருவோம். பாதுகாப்பு எல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. யாரும் இது பத்தி ஒண்ணும் கேட்கமாட்டாங்க. அப்படியே எடுத்துகிட்டு வந்து பள்ளம் தோண்டி புதைச்சிடுவோம்.

எயிட்ஸ் நோய், பெரிய வாயு நோய், டி.பி.நோய், காச நோய், யானைக்கால் நோய், நாய்க்கடி நோய் எல்லாம் வரும். நாய்க்கடிச்சிடுச்சின்னு வச்சிக்க அந்த பாடியை வீட்டுக்கே கொடுக்க மாட்டோம். அதை வீட்டுக்கு எடுத்துக்கினு போக அனுமதியே கிடையாது. உடனே என்னைக் கூப்பிட்டு அனுப்பி நான் பெற்றுக் கொண்டேன்னு கையெழுத்துப் போட்டு வாங்கிக்கனும். நானே பாடியை வாங்கிக்கின்னு நானே மேரியிலே (நகராட்சி) அடக்க உத்தரவு வாங்கிக்கனும். பார்டிங்க எங்கக்கூட வந்தாகூட அவங்க எட்டதான் நிக்கணும். கிட்டே வரக்கூடாது. நாய்கடி பாடியை பிளீச்சிங் பவுடர் போட்டுப் புதைப்போம். ஈச்சம் பாயைப் பெரிய மார்க்கெட்டில் வாங்கிட்டு வருவோம். இதுக்கு யாரும் காசு கொடுக்க மாட்டாங்க. சொந்தக்காரங்க வந்தா அவங்க வாங்கிக் கொடுப்பாங்க. ஒப்பிதால்லே கீழே போட்டு படுக்கிற பாயை வாங்கிட்டு வந்து போடுவோம்.

என் வீட்டுக்காரர் செத்துட்ட உடனே பாடி எடுக்க ஆள் இல்லேன்னு பேப்பர்ல போட்டுட்டாங்க. பாடி புழு பூத்திருச்சு, எடுக்கிறதுக்கு ஆளே கிடையாதுன்னு போட்டாங்க. அப்போ எங்கெங்கேயோ ஆள் தேடனாங்க. உப்பளத்து கல்லறையில் இருந்து இரண்டு பேரை இட்டுக்கின்னு வந்தாங்க. ஒரு பத்து நாள் அவங்க எடுத்தாங்க. பத்தாவது நாள் அவங்க வண்டியைப் போட்டுட்டு ஓடிட்டாங்க. அதுக்கு அப்புறம் பாடி எடுக்கிறதுக்கு ஆளே கிடையாது. அதுக்கப்புறம் எனக்கு ஆள்விட்டு அனுப்பி கூப்பிட்டாங்க. நான் போனேன். உடனே நீ வேலை செய். ஆறு மாசம் கழிச்சி வேலை போட்டுத் தர்றேன்னு சொன்னாங்க. அப்புறமேட்டு நான் பர்ஸ்ட் பெரிய மார்க்கெட் போலிஸ்காரர் வந்து என்னை எடுக்கச் சொன்னாரு . அப்போ அவர் 50 ருபா கொடுத்தாரு. அதை எடுத்துகினு வந்து புதைச்சோம்.

கஷ்டமாகத்தான் சார் இருந்துச்சி. அது எடுத்தாதான் சாப்பாடு. பழக்கமாயிடுச்சி இப்போ. எங்க வீட்டுக்காரரு செத்துப் போயிட்ட பிறகு ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்களுக்கு யார் உதவியும் கிடையாது. நான் சம்பாதிச்சாதான் மூணு பிள்ளைகளும் சாப்பிடும். எங்க வீட்டுக்காரர் சொன்னார், நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் செத்துட்டா போய்க் கேளு, கவர்மெண்ட் வேலை போட்டுக் கொடுப்பாங்கன்னு சொன்னாரு.

எங்க வீட்டுக்காரார் தண்ணி போட்டுட்டு இந்த வேலையைச் செய்வாரு. நான் அப்படி இல்லேங்க. கஷ்டமாகத்தான் இருக்குது. கவர்மென்ட் வேலைக்காகத்தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை செஞ்சிக்கிட்டு இருக்கேன். முனிசிபாலிடி கமிஷனரே சொல்றாரு. உங்களை விட்டா வேற ஆள் கிடையாது. நீங்கதான் பாடியை எடுக்கனும்னு சொல்றார். அப்புறம் நான் என்ன செய்யறது. வேறவேலை செய்யனும்னு தோணல. இதே பழகிடுச்சு. இதே வேலைதான் செய்வோம். யாரும் செய்யாத வேலையா இருக்குது. அதான் செய்யறோம். மனசிலேயும் திருப்தி.

மார்ச்சுவரியிலே போய்க் கேட்டா ஒண்ணும் தரமாட்டாங்க. அந்த பாடியைக் கூட பிடிச்சு தூக்கி வைக்க மாட்டாங்க. எல்லாமே நம்மளே உள்ளே போய் நம்மளே தூக்கி வரணும். நானும் என் மகனும் தூக்கி வருவோம். கையிலே மாட்டிக்கிறதுக்கும், மூஞ்சியை மூடிக்கிற துணியும் கேட்டா கொடுக்க மாட்டாங்க. பலராமன் டாக்டரைப் பொய்க் கேளுன்னு சொல்வாங்க. முனிசிபாலிடியிலே கொடுக்க மாட்டாங்க. பலராமன் டாக்டர் சில சமயம் கேட்டா கொடுப்பார். சோப், துண்டு எதுவும் கொடுக்க மாட்டாங்க. முனிசிபாலிடியிலே மற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்கும் போது எங்களுக்கு ரெண்டு லைப்பாய் சோப் கொடுப்பாங்க. துண்டு எல்லாம் கொடுக்க மாட்டாங்க. மூணு மாசம் கழித்து ஆறு சோப் இப்பத்தான் கொடுத்தாங்க.

என் வீட்டுக்காரர் இருக்கும போது, பழைய முதலமைச்சர் வைத்தியலிங்கம் வெள்ளத்தைச் சுத்திப் பார்க்க இங்க வந்த போது மனு கொடுத்தோம். அவர் படிச்சிப் பார்த்திட்டு ஆபிசுக்கு வாங்கம்மான்னு சொன்னாரு. ஆபிசுக்குப் போனபோது, அந்த சீட்டிலே கையெழுத்து போட்டுக் கொடுத்தார். எல்.ஏ.டி. (உள்ளாட்சித் துறை) ஆபிசுக்குப் போய்க் கொடுத்த உடனே மேரிக்கு போன் பண்ணி, இது போல அல்பேர் என்கிறவர் வைத்திலிங்கம் சிபாரிசிலே வந்திருக்காருன்னு சொல்லி அனுப்பினார். அப்போ மேரி ஆபிசிலே எங்க வீட்டுக்காரரை செமத்தியா திட்டானங்க சார். நீ எப்படி எங்க உத்தரவு இல்லாமல் எல்.ஏ.டி.க்குப் போகலாம்ன்னு திட்டானாங்க.

பாடி உப்பிடுச்சுன்னு வெச்சுக்கிங்க வண்டியை இழுக்க முடியாது. வண்டி வரும்போது பாடியிலே இருந்து நீர் ஒழுகிக் கிட்டே வரும். சொட்டு சொட்டா ஊத்திக்கிட்டே வரும். ஒரே நாத்தம், பயங்கர நாத்தம் அடிக்கும். ரோட்டுலே போற வர்றவங்க எல்லாம் திட்டுவாங்க. பயங்கரமா திட்டுவாங்க.

பி.எம். பண்ணா பாடியை ஒழுங்கா தைக்க மாட்டாங்க, இப்போ புது பஸ்டாண்ட் எதிரிலே அம்மாவும், புள்ளையும் கொன்னுட்டாங்களே, அதுலே பாடியை தைக்கவே இல்லேங்க. ஒரு வாராமா மார்ச்சுவரிலே வெச்சிருந்தாங்க சார். சரியா தைக்கவே இல்லை. போலீஸ்காரரே பார்த்து பயந்துட்டார். பாடியைக் கட்டும்போது கொடலும் மற்றதும் அப்படியே கொட்டிக்கிச்சி. இதப் போய் கேட்டா, இப்படித்தான் தைப்போம், உனக்கு இடம் இருந்தா தூக்கு, இல்லேன்னா போங்கன்னு சொல்றாங்க. டாக்டர்கிட்டே கம்ப்ளய்ண்ட் செஞ்சா இரண்டு நாளைக்கு ஒழுங்கா செய்யறாங்க.

ரோட்டெல்லாம் ரத்தம் சொட்டு சொட்டா ஊத்திக்கிட்டு வரும். எல்லாரும் திட்டுவாங்க. ரெண்டு மூணுபேர் அடிக்க வருவாங்க. அடியெல்லாம் வாங்கி இருக்கோம். ரோட்டுப் பக்கம் வர ஜனங்க அடிப்பாங்க. கையை ஓங்கிக்கிட்டே வருவாங்க. நாங்க உடனே பாடியை இப்படியே நடுரோட்ல போட்டுட்டு போயிடுவோம்னு சொன்னா கொஞ்சம் பேசாமா இருப்பாங்க. போலீசிலே போய் சொல்லுவோம்னு சொல்லுவோம். போலீஸ்காரங்க பின்னால வர்றாங்கன்னு சொல்லுவோம் சார்.

அனாதை பாடி போஸ்ட்மார்டம் பண்ணாதான் அப்படி செய்யறாங்க. மற்ற பிணம் வந்தா நல்லா செய்யறாங்க. அனாதை பாடி கடலில் விழுந்தது, தண்ணியிலே விழுந்தது, கிணத்துலே விழுந்தது இதெல்லாம் வந்தா இப்படிதான் செய்யறாங்க. எவ்வளவு பெனாயில் ஊத்தினாலும் நாத்தம் வரும் சார். வீட்டுக்குப் போய் சாப்பிடும்போது அதே நாத்தம் அடிக்கிற மாதிரி இருக்குசார். என்ன செய்யறது வயித்துப் பிழைப்பு. பிள்ளைங்க இருக்குது.

அவங்க ஊருக்காரங்க வந்து எதுவுமே என்ன நினைக்கமாட்டாங்க. கஷ்டப்படுது இந்தப் பொண்ணு, ஆம்பளை மாதிரி கஷ்டப்படுது இந்தப் பொண்ணு. இது நல்ல பொண்ணு. நல்ல வேலை செய்யுது. இந்த பொண்ணுக்கு எந்தக் குறையும் வரக்கூடாதுன்னு வேண்டிக்குவாங்க. எங்க ஊரிலே இருக்கறவங்க எல்லாம் என்னை நிரந்தரம் பண்ணிட்டா பாடி ஒழுங்கா எடுக்க மாட்டேன்னு நினைக்கிறாங்க. உன்னை நிரந்தரம் பண்ணிட்டா பாடி எடுக்க மாட்டேன்னு கமிஷனரே சொல்றாரு. அப்போ எப்படி நாங்க செய்யாம விட்டுடுவோம். இந்த வேலையை நம்பித்தானே பிழைச்சிக் கிட்டிருக்கோம்.

ஜுன், 2003-இல் அவர் அளித்த வாக்குமூலம்.

அண்மையில் இரண்டு நாட்களுக்குமுன் கிருஷ்ணவேணி அவர்களை புதுச்சேரி நீதிமன்றம் அருகில் பார்த்தேன். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அரசு நலத் திட்ட உதவிக்காக விண்ணப்பம் வாங்கப் போய்க் கொண்டிருப்பதாக கூறினார். என்னைப் போன்ற பலர் அவருக்கு அறிமுகம் இருந்தும் எங்களைப் பயன்படுத்தி வேலையை முடிக்கக்கூட தெரியாமல், சமூகத்தின் அடித்தட்டில் உழலும் கிருஷ்ணவேணி அவர்களை என்றும் என்னால் மறக்க முடியாது.

நமக்கு தெரிந்து ஒரு கிருஷ்ணவேணியின் நிலையே இதுவென்றால் இன்னும் நம் கண்ணுக்குப் புலப்படாத கிருஷ்ணவேணிகள் எங்கொ ஓர் மூலையில் துயரங்களோடு உழன்றுக் கொண்டிருப்பார்கள்.

கிருஷ்ணவேணியின் வாழ்க்கை சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டோடும், மனதை அறுக்கும் துயரத்தோடும் தொடர்ந்துக் கொண்டிருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது...

14 comments:

பாச மலர் / Paasa Malar said...

கிருஷ்ணவேணிகள் எத்தனை பேரோ..ஒருவர் கதையே மனதை என்னவோ செய்கிறது..

Unknown said...

எப்படித்தான் மக்களுக்காகவென்றே உங்கள் முழு நேரத்தையும் செலவழிக்க முடிகிறதோ.
உங்களைப் போன்றவர்களைப் பார்த்தும் கேட்டும்தான் மனிதம் இன்னும் உயிருடன் இருப்பதாய் உவகை கொள்கிறோம்.
நல்ல பதிவு.

இத்தகைய அடித்தட்டு மக்களை உயர்த்த தனியாரை நாடக்கூடாதா? எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். ஒரு கிருஷ்ணவேணி உயர்ந்தால் அடுத்தவர்களுக்கும் அது உதவியாயிருக்குமே.

Unknown said...
This comment has been removed by the author.
Anonymous said...

ithayam kanakkirathu

வவ்வால் said...

மிக கோரமான உண்மையை அனைவரும் அறிதந்துள்ளீர்கள், பாராட்டுக்கள், இதை எல்லாம் மாற்ற எந்த அரசியல்வாதிக்கும் நேரம் இல்லை, பதவி சண்டைப்போட மட்டும் டெல்லி வரைக்கும் காவடி தூக்குவார்கள்.

பெண்ணுரிமை, பேசும் பெண்கள் அமைப்புகளுக்கு கிருஷ்ணவேணி போன்ற பெண்கள் பெண்களாக தெரியவில்லையா, அவர்கள் இது குறித்தெல்லாம் கவலைப்பட்டதாக நான் அறியவில்லை.

சமூக நீதிப்போராளிகள் என்று மேடைப்போட்டு கூவும் அரசியல்வாதிகள் எல்லாம் எங்கே போய் தொலைந்தார்கள்?

இரா.சுகுமாரன் said...

சுவையான நிகழ்ச்சி ஒன்றை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

ஆனால், சுமையான நிகழ்ச்சி ஒன்றை எழுதி இருக்கிறீர்கள்.

இந்த சமூகத்தின் அவலம் ஒரு மனச் சுமையாகி நிற்கிறது.

துளசி கோபால் said...

என்னங்க இது...இப்படி ஒரு அவலம்.
மனசை அப்படியே பிழியுது(-:

Anonymous said...

"ஈழப் போராட்டத்தின் தாக்கத்தால் பொது வாழ்வுக்கு ஈர்க்கப்பட்டு, ..." என உங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் ஈழப்போரின் பக்கம் இருப்பதே ஈழப்போரின் நியாயத்தை தாங்கிப்பிடிக்க போதுமானது.

ரோட்டில் அழுகிய பிணத்தை கொண்டு செல்லும் போது அடிக்க கை ஓங்கும் மக்களை நினத்து ஆத்திரம் கோள்வதா அவர்களின் அறியாமையை நினைத்து ஆதங்கம் கொள்வதா என நினக்கும் போது ஈழத்தில் குண்டுவீச்சினால் கொல்லப்பட்ட உறவினர்களின் உடல்களைப் புதைக்க கூட முடியாமல் அல்லோல கல்லோலப்பட்டு ஓடும் மக்களையும், அவ்வுடல்களை வீட்டின் பின்புறத்திலோ அன்றி விளையாடித்திரிந்த முற்றத்திலோ அவசர அவசரமாக சிறிய குழியைத் தோண்டிப் புதைத்த மக்களையும் நினைத்தாவது கிருஸ்ணவேணியை அடிக்க வரும் மக்கள் தமது அறியாமையை நீக்க வேண்டும்.
நன்றி திரு.சுகுமாரன் ஐயா.

ஈழத்தமிழன்.

சேதுக்கரசி said...

கொடுமையாக இருக்கிறது. மேலும், அனாதைப்பிணம் என்பதால் சரியாகத் தைக்காமல் விடுகிறார்கள் என்பதுபோன்ற மார்ச்சுவரி மருத்துவர்களின் கடமை தவறுதலும் மாறவேண்டும்.

Anonymous said...

How many of you here are ready to do this job on a voluntary basis atleast 1 or 2 days as a service to humanity or help to the person who does this job in your area???
you, YES you, make these people like this..noone else.....

செல்வநாயகி said...

சுகுமாரன்,

இரண்டு நாட்களாய் இந்த இடுகையை வந்து வந்து படித்துவிட்டுப் போகிறேன். என்ன பின்னூட்டமிடுவதென்று தெரியவில்லை. இன்னொருவருக்கு நேரும் ஒரு கொடுமை, ஒரு துக்கம் கேட்கும் கணத்தில் ஒரு உச்சுக் கொட்டி அடுத்த கணம் அத்துக்கம் படிந்த நிழல்கூட மனதில் தங்கிவிடா வண்ணம் கழுவிப்போகிற அற்பவாழ்வாய் ஆகிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில் இத்தகைய விசயங்கள் கேட்க நேருகையில் மனம் ஒரு குற்றவுணர்வோடு மௌனித்தே இருக்கிறது.

இந்த வேலைக்கு இன்னின்ன சாதிகளே தகுதியுடையவர்கள் என்று நீதிவகுக்கப்பட்ட புண்ணிய பாரதத்தில் அத்தகு நீதியின் துகிலுரிந்து எரிக்கப்படாமல் இதற்கெல்லாம் ஒரு விடிவு வருமா எனவும் தெரியவில்லை. நீங்கள் இங்கு இதை எடுத்துப்போட்டதற்கு நன்றி.
ஒருசிலபேருக்காவது தன்னைத்தாண்டி தன் சமூகம் எந்நிலையில் உள்ளது என உணரத் துணையாகும் இவை.

M.Rishan Shareef said...

மனதைத் தைக்கும் ஒரு உண்மையை பதிவாக இட்டுள்ளீர்கள்.சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

பதிவுக்கு நன்றிகள்.சமூகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

Anonymous said...

மனது கனத்தது. இப்போதாவது அவருக்கு நிரந்தரப் பணி கிடைத்ததா?

//என்னைப் போன்ற பலர் அவருக்கு அறிமுகம் இருந்தும் எங்களைப் பயன்படுத்தி வேலையை முடிக்கக்கூட தெரியாமல், //

அவர் தான் உங்களைப் போன்றோரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா? உங்களைப் போல் அரசு மட்டத்தில் தொடர்புடையவர்கள் நீங்களாக முன்னின்று முயற்சி செய்தால் அவருக்கு பணி வாய்ப்பு பெற்றுத் தர இயலாதா?

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அனானி...
//
அவர் தான் உங்களைப் போன்றோரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா? உங்களைப் போல் அரசு மட்டத்தில் தொடர்புடையவர்கள் நீங்களாக முன்னின்று முயற்சி செய்தால் அவருக்கு பணி வாய்ப்பு பெற்றுத் தர இயலாதா?//

நாங்கள் போராடிதான் இப்போது அவருக்கு அரசு வேலை வாங்கித் தந்துள்ளோம். பிரச்சனை என்னவென்றால் அவர் அந்த சுடுகாட்டைப் பராமரிக்க வேண்டும், ஆனால், அவர் அதை விடுத்து மீண்டும் பிணம் புதைக்கும் வேலையைச் செய்வதுதான். அந்த வேலையை அவர் செய்ய வேண்டுமா என்பதுதான்.

அவர் அந்த சுடுகாட்டை விட்டு வர தயாராக இல்லை. பல முறை எடுத்துச் சொல்லியும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை.

நான் குறிப்பிட்டது, அவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அரசின் நலத்திட்ட உதவி பெறுவதற்காக செல்கிறார். அது குறித்து எங்களுக்குக் தகவல் தெரிவித்திருந்தால் உதவியிருக்கலாம் என்பதுதான்.

அவருக்கு உதவும் வேலைத் தொடர்ந்து நாங்கள் செய்துக் கொண்டு இருக்கிறோம். அதை என் கடமையாக நினைப்பவன்...